ஸ்ரீ திரு விருத்தம் -பாசுரங்கள்–21-30–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

தாமான தன்மையில் கிருஷ்ண அனுபவம் என்றே நம்பிள்ளை போல்வார் வியாக்யானித்து அருளுகிறார்கள்
ஸ்நாநாசனம் அலங்காராஸனம் நித்ய விபூதியில்
போஜ்யா ஸாஸனம் சயனா ஆஸனம் இங்கு
தர்மி ஐக்யம் உண்டே

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

பதவுரை

அங்கு–பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள்–நித்யஸூரிகள்
நல் நீர் ஆட்டி–நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க–அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க,
(அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால்–(உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து–(இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள்தோறும் கடைந்து) சேர்ந்த
வெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி–பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்க
அழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு–வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்ற
மகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில்-முசுப்பையுடைய
ஏறு–(ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை–வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை–கூத்தாடி யருளினாய்.

முன்னிரண்டு அடிகளால் பரத்வத்தையும் -பின்னிரண்டு அடிகளால் ஸுலப்யத்தையும் அருளிச் செய்கிறார் –
புகை நிழலில் ஒளித்து வருவாரைப் போலே அங்கு நின்று இங்கு வந்தமை தோற்ற –
அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் போந்த -என்கிறார்
ஸ்நாநாசனம் அலங்காராசனம் அங்கே நடக்க -போஜ்யாசனமும் சயனாசனமும் இங்கே –
அவனுக்கு இரண்டும் வேறுபாடு இன்றி நிகராக உரியவை –

ஓர் மாயையினால் -பகவானுடைய சங்கல்ப ஞானம் –
ஸம்பவாமி ஆத்ம மாயயா போல்
மாய வகையினால் என்றுமாம்

ஈட்டிய வெண்ணெய்-திருவாய்ப்பாடியில் மனைகள் தோறும் திரட்டி வைத்த வெண்ணெய் –
அடலாயர் -பிரபலமான இடையர் என்றபடி

பூர்வர்கள் இது தானான தன்மை பாசுரம் என்றே சொல்வர்

சிலர் அகத்துறை -ஏறு கோள் கூறி வரைவு கடாதல்-முல்லை நிலத்து தலைமகள்
எருதுகளின் வலியை அடக்குமாறு சொல்லி விவாஹம் செய்து கொள்ளச் சொல்லுதல்

————————————————————————–

காந்தர்வ விவாஹ முறையினால் நாயகியைப் புணர்ந்து பிரிந்த நாயகன் பின்பு
தோழியின் மூலமாக நாயகியைச் சேர விரும்பி அத்தோழியைத் தனியே கண்டு தான் கருத்தை
வெளிப்படையாகக் கூறி வேண்டிக் கொள்ளாமல் குறிப்பாக கூறக் கருதி புனம் காக்கும் இடத்தில்
தழையும் கண்ணியுமாக கையுறைகளை ஏந்திக் கொண்டு சென்று அவர்களை நோக்கி வேட்டை யாடுபவன் போல்
எனது அம்போடு ஒரு மத யானை இவ்விடத்து வரக் கண்டது உண்டோ என்று வினவ
அவனைப் பரிஹஸித்து தோழி நாயகியிடம் கூறும் பாசுரம்

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவதையர் ,புள் ளூரும் கள்வர்
தம்பாரகத் தென்று மாடாதன தம் மிற்கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-

பதவுரை

ஐயர்–இப்பெயரிவருடைய
கை–கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை–மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம்–(இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்) தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு–(இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை–வேட்டையாம்;
வினவுவது–(இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு–(எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்;
(இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதனை–கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினது
உரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென–தமக்குள் ஒன்றொடொன்று பொருத்தமில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ–புதுமைமிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை–நம்மை
இவ் வான் புனத்தே வைத்தது–இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைதத்து?

இவர் மெய்யே வேட்டைக்கு வந்தவராகில் கையில் வில் இராதோ –
நாணியைக் கையாலே தெறித்து ஒலி எழுப்ப மாட்டாரோ -அஃது ஒன்றுமே இல்லையே
கையில் தழைக்கும் வேட்டைக்கும் என்ன சம்பந்தம் –
வம்பு வினாக்களுக்கு விடை கூறவோ எங்களை புனம் காக்க வைத்தது

குறிஞ்சி நிலத்து நாயகி –தழையையும் கண்ணியையும் கை உறையாகக் கொண்டு கொடுத்து காணுதல் குல முறை
தழை போலே தானும் பிரிவால் வாடி இருப்பதைக் காட்டுமே –
தோழி இத்தன்மையை கருத்தூன்றி இவர் கைப் பட்டதால்
தழை வாடி உள்ளதே ஒழிய உமக்கு இத்தன்மை இல்லையே என்கிறார் –

இத்தழை இவர் கை பட்டதனால் தளிர்ச்சி பெற்றது –
நாயகிக்கு இத்தன்மை நிகழ்கிறது இல்லையே என்று இரங்கின படி

கொம்பார் தழை கை-என்று சிறு நாண் எறிவிலம்-
இப்போது காண்கிலாம் மட்டும் அன்றி தழும்பையும் காண்கின்றிலோம்

வேட்டை கொண்டாட்டு –
வேட்டை வியாஜ்யமே -நாயகி பக்கல் வேட்க்கையே விஞ்சி உள்ளது

அம்பார் களிறு வினவுவது –
பண்ணுற்ற தேன் மொழிப்பாவை நல்லீர் ஓர் பகழி மூழ்கப்
புண்ணுற்ற மா ஓன்று போந்தது யுண்டோ நும் புனத்தயலே -இறையினார் அகப்பொருளுரையில்
மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடிக்கணை தோய் புண் பட்ட மேனியுமாய் வந்ததோ
ஒரு போர் களிறே –தஞ்சை வாணன் கோவையில்

இவள் கண்ணுக்கு இலக்காய் நான் படுகிற பாடு அம்பு தைத்து ஊடுருவும் களிற்றின் நிலைமை போன்றது காண்
அம்பு யானையில் பட்டுப் போயிற்று போன்ற பல புனைந்துரைகளை வேட்க்கை மிக்கு
நாணம் இன்றி கூறினவன்
ஐயர் -ஏளனமாக சொல்கிறாள் –

புள் ளூரும் கள்வர்-தம்பாரகத் தென்று மாடாதன –
உயிர்கள் அறியாமல் தாமே உரிமை கொள்பவர் -கள்ளர்
சேராச் சேர்த்தி இங்கு கண்டோம் இல்லோம் -விண்ணுலகத்தில் இருக்கலாம் –

வம்பார் வினா-
வீண் கேள்விகள்
இதுவரையில் கேட்டார் அறியாத கேள்விகள் –

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே-
நாங்கள் பெரியோருக்கு பரதந்த்ரப் பட்டவர்கள்
ஆதலால் அப்பெரியோரை அடுத்துப் பலரும் அறிய விவாகம் செய்து கொள்ளுதல்
முறைமை என்று ஸூ சகப்படுத்திய படி

ஸ்வாபதேசம் —
ஆழ்வாரை சில கேள்விகள் கேட்ப்போம் என்று வந்த சிலர் -கற்று செருக்கி உள்ளார் இடம் –
இவர்களது சொற்களும் செயல்களும் பரஸ்பர விருத்தங்கள் என்று சொல்வதாகும்

கொம்பார் தழை கை –
ஐம்புலன் ஆசை ஆகிய தளிர்களை விடாமல் உள்ளோர்

சிறு நாண் எறிவிலம் –
பிரணவ மஹா மந்த்ரம் -வில்லின் -உச்சாரணமும் நாண் ஒலியும் இல்லாதவர்கள்

வேட்டை கொண்டாட்டு –
சம்சார காட்டில் உள்ள கொடிய விலங்குகளை
காம க்ரோதங்களை தொலைக்கத் தொடங்கி விட்டோம் என்ற கொண்டாட்டம் மட்டும் –

அம்பார் களிறு வினவு-
இந்திரியம் ஆகிய யானை சப் தாதி விஷயங்களில் போக பின் தொடர்வதே இவர்கள் செயல் –

ஐயர் -இவர்கள் செருக்கை இகழ்ந்த படி

புள் ளூரும் கள்வர் தம்பாரகத் தென்று மாடாதனதம் மிற்கூடாதன-வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே
இவர்கள் வீண் கேள்விகளுக்கு உத்தரம் சொல்வதற்கோ இவர்களை எம்பெருமான் இங்கே வைத்தது
வேதமாகிய பிரபல பிரமாணம் எங்கும் பரவச் செய்து –
யாவரும் அறியாமல் மறைந்து நின்று ரஷிக்கும் எம்பெருமான்
தத்வ ஞானமும் பிரபத்தி மார்க்கத்தில் இல்லாத போலி யான செருக்கு கொண்ட இவர்களை
திருத்துவதற்கே இங்கனம் கூறியவாறு –

————————————————————————–

கொல்லையைக் காத்துக் கொண்டு இருக்கும் நாயகியையும் தோழியையும் கண்டு நாயகன்
தனது குறை வேண்டுதலைக் கூறும் துறை இது
தம் மனம் இவர்களுக்கு வசப்பட்டத்தைக் குறிப்பால் கூறியவாறு
நீங்கள் புனத்தை விட்டுப் போகாமல் இருப்பது போல் என் மனத்தை விட்டு நீங்குகிறது இல்லை
புனம் போல் என் மனமும் உங்கள் பாதுகாப்புக்கு உட்பட்டுக் கிடக்கிறது
உங்கள் பெரியோர் இங்கே வைத்தது புனத்தைக் காக்கவோ என் மனத்தைக் காக்கவோ
புனக்காவலோடே நில்லாமல் என் மனம் காப்பது உங்களுக்குத் தகுதி அன்று –
அவர்கள் அழகைத் தான் காணும் பொருட்டும்
தன் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டும்
இவர்கள் அருகில் தடுமாறி திரிந்தமை தோற்ற புனத்தயலே வழி போகும் அரு வினையேன் என்கிறார்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23–

பதவுரை

மகளிர்–பெண்களே!
நும் காவல்–உங்கள் காவலுக்கு உரிய பொருள்
புனமோ–இந்தத் தினைப் புனமோ? (அல்லது)
புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ–இப் புனத்தினருகிலே வழிச் செல்லுகிற பரவியேனான என்னுடைய நெஞ்சமோ?
சொல்லீர்–சொல்லுங்கள்;
புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான்–செந்தாமரை மலரின் அழகிய ஒளியையுடைய காட்டை
ஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய
கண்ணன்–கண்ணபிரானது
வான் காடு–பரமபதத்திலே
அமரும்–வாஸம் பண்ணுகிற
தெய்வத்து இனம்–நித்யஸூரி வர்க்கத்தினர்
ஓர் அனையீர்கள் ஆய்–ஒருபுடை ஒத்தவர்களாய்
நும் இயல்புகள்–நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள்
இவையோ–அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ?

புனம் போலே தம் மனமும் இவர்கள் ரஷிக்க வேண்டியதை நாயகன் சொல்கிறான் –
தம் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டு

இவர்கள் இருக்கும் இடத்தின் சமீபத்தில் தடுமாறித் திரிந்தமை தோற்ற –
புனத் தயலே வழி போகும் அரு வினையேன்-என்கிறான்

பாகவதர் ஆழ்வார் பக்கல் தமது நெஞ்சு துவக்குண்ட படியைச் சொல்லுதல் உள்ளுறை பொருள்
விண்ணுளாரிலும் சீரியர் –
அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் தகுதி அல்லவே
உபாயாந்தரராய் வேறு வழியில் செல்வாரையும் திருத்த வல்லவர் அன்றோ நீர்

தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,-
ஆழ்வார் ஒருவர் எழுந்து அருளி இருக்கும் இருப்பு
நித்ய ஸூரிகள் திரள இருந்தால் போல் இருக்கிறதே என்றவாறு –

————————————————————————–

பிரிவாற்றாத தலை மகள் நிலையை செவிலித் தாய் சொல்வது –
எனது மகள் கண் கலக்கமுற்றாள்
நெஞ்சம் அழியப் பெற்றாள்
இவ்வளவுக்கும் மேலே இது ஏதாய் முடியுமோ என அஞ்சி உரைக்கின்றாள் –

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம் கொல் எம் கோல வளைக்கே-24–

பதவுரை

இயல்பு ஆயின–இயற்கையானதும்
வஞ்சம்–பிறரறியாதபடியுள்ளதுமான
நோய்–காதல் நோயை
கொண்டு–உடையவையாய்
உலாவும்-(ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும்–ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்
கயல் மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய்–(முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால்–கோவர்தன மலையினால்
இனம் நிரை காத்த–பசுக் கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி–கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய்–தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல்–பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு–மனத்தோடும்
எம் கோல் வளைக்கு–அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல் – (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் எம் கோல வளைக்கே-
உடம்பு மெலிதலால் கை வளை கழலும் படியான நிலை –

இயல்வாயின வஞ்சநோய் –
வாயில் பல்லும் எழுந்திலே -மயிரும் முடி கூடிற்றிலே –மாயன் மா மணி வண்ணன் மேல்-
இவள் மால் உறுகின்றாளே-பெரியாழ்வார் -3-7-2-
இளைமை தொடங்கி கண்ணபிரான் இடம் காதல் கொண்டமை –

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ வரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – திருவிருத்தம் -60- –

வஞ்ச நோய் –
நாயகன் பிரிந்து சென்று வாராமல் வஞ்சித்த நோய் என்றுமாம் –
பிறரை பார்வையால் அகப்படுத்திக் கொள்ளுதல் என்றுமாம் –

பருத்து நீண்ட வடிவத்துக்கு
கயல் உவமை –

கயல் பெருநீர் பாய்வு அன கண்கள்-என்று அன்வயித்து-
கயல் மீன் மிக்க நீர் பெருக்கில் பாய்தல் போலே கண்ணீர் வெள்ளத்தில் புரளும் கண்கள் –

இவளது கண்களோ ஆற்றாமை மிக்கு பரந்து கயல் மீன் போல் பிறழ்வனவாய்
மிக்க நீர்ப்பெருக்கை யுடையவனாய் இருக்கின்றன
இவளது மனமோ குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்த -கருடவாஹனான கண்ணபிரானுடைய
தேன் பெருகும் திருத்துழாயின் மேல் ஆசைப் பட்டுச் சென்றது
இனி மேலும் என்ன நிலை நேருமோ என்று கவலைப்படுகிறாள் –

கொயல்வார் மலர் –
கொய்தல் வாய்ந்த மலர் -கொய்யப்பட்ட மலர்

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் தன்மை கண்ட ஞானிகள் பாசுரம் –
இயல்வாயினை –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாய்த்து அடியேனை வைத்தாயேல் -திருவாய் -2–3–3–

வஞ்சம் –
தன்னால் அல்லது பிறரால் அறியப் படாததுமான

நோய் –
ஆற்றாமை விளைக்கும் பக்தி மிகுதியை கொண்டு -உடையவையாய்

உலாவும் –
ஒரு நிலை இல்லாமல் தடுமாறும்

ஒரோ குடங்கைக்-கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,
அகம் கைகளால் மொண்டு எடுத்து அனுபவிக்கும் படி அழகிய நிமைமை யுடையையாய்
ஆற்றாமை யாகிய கண்ண நீர் வெள்ளத்தில் அலை படும் ஞான வகைகளோடும் கண்களோடும் –

குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்-கொயல்வார் மலர் மேல் மனத்தொடு –
சரணாகத ரக்ஷணத்தின் பொருட்டு அரும் தொழில் செய்பவனும் –
பசு பிரப்யமான பிராணிகளை பாது காப்பவனும்
மிக்க விரைவுடைய எம்பெருமான் இனிய திருத் துழாய் மாலை அழகை அனுபவிப்பதில் ஆழ்ந்த மனத்தோடும் கூடிய

எம் கோல வளைக்கே–
எமக்கு மிக இஷ்டமான இவர்க்கு

என் ஆம் கொலோ –
இன்னம் யாது நிலைமை நேர்ந்திடுமோ –

————————————————————————–

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

பதவுரை

திறல் சேர்–வலிமை பொருந்திய
அமரர் தம்–தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய–தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்–தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன்–பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்–(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்–விரும்பித் தரித்துள்ள
துழாய்–திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ–எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்–அப்பெருமானது உபய விபூதியையும்
பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி–இங்ஙனமான பின்பு,
நானிலத்து–இவ்வுலகத்தில்
என் செய்யாது–(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

இவளை ரக்ஷிக்கா விடில் அவன் செங்கோலுக்கும் குறை ஆகாதோ –
தலை மகள் வார்த்தை யாகவும் தாய் வார்த்தையாகவும்

அவனே வாராமல் இருந்து தன் செங்கோலுக்கு வளைவை உண்டாக்கின பின்பு
திருத் துழாய் என்ன செய்ய மாட்டாது
என் வளை நிமித்தமாக இவனே அழிக்கத் தொடங்கினால் வேறே ரஷிப்பார் உண்டோ

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த
தண்ணம் துழாய் யுடை அம்மான் -நம் கோன் உகக்கும் துழாய் –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் போக்யதையில் ஈடுபட்ட ஆழ்வார்
அந்த போக்யதா பிரகர்ஷம் ஆற்றாமை மிகுத்து வருத்துவத்தைக் கூறிற்றாம் –

————————————————————————–

நகர் காட்டல் இப்பாட்டுக்கு அகத்துறை
நடை இளைப்புத் துன்பம் தீர அதோ தெரிகிறதே அதுவே நம்முடைய நகர் என்று
ஸாமீப்யம் தோன்றக் காட்டிச் சொல்வது
தைவா தீனமாக பாலை நிலம் கடந்தோம்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26–

பதவுரை

நால்நிலம்–(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு–(தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அறமென்று–ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட–அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன்–வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ்–உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை–பாலை நிலத்தை
கடந்த-தாண்டி வந்த
பொன்னே–பொன் போன்றவளே!.
விண்ணோர்–மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும்–(நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படி
இங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா–கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது–அடுத்துள்ளது.
அம் பூ தேன்–அழகிய பூவையும் தேனையுமுடைய
இள–இளமை மாறாத
சோலை–சோலையானது
அப்பாலது–அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது–(எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.

அதோ தெரிகின்றது அப்பெரிய நகர் நம் நகர் என்று புணர்ந்து உடன் போன தலைவன் –
இளைத்த தலைவியைக் குறித்து
இடம் தலைப் பெய்தமை -நகர் காட்டும் துறை -நீர் அற்ற பாலை நிலம் கடந்தோமே –

நிலம் தான் நாலு என்பாரும் அஞ்சு என்பாருமாய் இருக்கும் –
ஐந்து என்கிறவர்கள் -பாலை நிலத்தையும் தன்னிலே தன்னிலே ஒன்றாக்கிச் சொல்லுவார்கள் –
நாலு என்றவர்கள் இப்பாலை நிலம் தான் மாற்றி நாலிலும் உண்டு என்கிறார்கள் –
அதாவது நீரும் நிழலும் இல்லாத இடம் பாலையும் அத்தனை இறே -நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்

பாலை கடந்த பொன்னே என்று
நாயகன் உடன் சேர்ந்து இருப்பதால் பாலை வானம் நடந்து கடந்தாலும்
அவனுடன் இருப்பதே பேர் இன்பமாகக் கருதி ஒளி தேஜஸ்ஸு இருந்தபடி
திருமகள் போன்றவளே என்றுமாம்

நல் நீர் அறம் என்று –
ஸூர்ய கிரணங்களால் நீரைக் கவர்கின்றான் என்பதே -நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று
நால் வகை நிலத்துள்ளும் பாலை நிலம் அசாரம் -இன்பத்துக்கு உரியது இல்லாமை –
கோது கொண்ட -மென்று சுவைத்து உமிழ் –

வேனிலம் செல்வன் –
இள வேனில் முது வேனில் நடுப்பகல் -தெய்வம் சூர்யன்

திரு வெக்கா வில் -சொன்ன வண்ணம் பெருமாள் -யதோத்தகாரி –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்பதால் கண்ணன் -என்கிறார் –
வேகா சேது -வெஃகணை-வெக்கா —

நம்மாழ்வார் திருவிருத்தத்தில் திருவரங்கம் திருவேங்கடம் திருவெஃகா மூன்றையுமே மங்களா சாசனம்
கோயில் திருமலை பெருமாள் கோயில் -என்று சிறப்பித்து கூறுவார்

எல்லா பாலை நிலங்களால் வந்த வெம்மையையும் போக்கி நமக்கு ரக்ஷகமான தேசம் திரு வெக்கா காண் அது

இந்தப் பாலை நிலம் அன்றிக்கே
இன்னம் சில பாலை வனங்களும் கடக்கலாம் இந்நிலம் உண்டாக -என்பர் நம்பிள்ளை

அம் பூம் இளஞ்சோலை அப்பாலது -திருத் தண்கா -விளக்கொளி பெருமாள்
ஸ்ரீ விசுவாமித்திரர் உபதேசித்த பலை அபலை மந்த்ர வித்யைகள் போலே
தலைவிக்கு தாபம் தணிக்கும் திருத் தண்கா –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் சம்சாரம் தவிர்ந்தமையையும் –
உகந்து அருளினை நிலங்களின் போக்யதையும்-சொல்வது
கோது –
சம்சாரம் -பாலை வானம் போலே –
நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் போக்யதை -ஷேமங்கரமான புகலிடம்-

———————————————————————-

சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-

பதவுரை

செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்
வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நிஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மைமொழியின் படியே,
அ வாடை–அந்தக் காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய குளிர்ந்த
திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோவந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.

திருத் துழாய் மாலையை தரித்து -முன்பு நலிந்த வாடை இப்பொழுது தணிந்ததே –
தலைவன் உடன் கலந்த அனுபவம் என்றுமாம்

சேமம் செங்கோன் அருளே விசுவாசம் பிறக்கவே பகைவரும் நண்பர் ஆவார்
அவன் குண விசேஷங்களில் ஆழ்ந்து உலக பொருள்கள் துன்பம் தவிர்ந்தமை சொல்கிறது –

பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் பூண் அகில் சிற்றில் தூதை முதலாவன
குண த்ரய விசித்ர கர்ம ஸூ த்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க
விழுந்து எழுந்தும் சுழன்றும் உழன்றும் பறி பட்டும் அற்ப சாரமாமாவையுமாய்
மதீயம் என்னில் விட்டகலவும்
ததீயம் என்னில் இகழ்வறவும்
முனிவதும் இக்காலம் ஈதோ என்னப்படும் பொங்கைம் புலனில் போக்யாதி ஸமூஹம் –ஆச்சார்ய ஹிருதயம் –
இரண்டாம் பிரகாரணம் இறுதி சூர்ணிகை – -149 –
இதில் ஈதோ-இந்த பாசுரச் சொல் –

————————————————————————–

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன –28-

பதவுரை

வள்வாய் அலகால்–கூர்மையான வாயின் நுனியினால்
புள்–பறவைகள்
நந்து உழாமே– (தன்னிடத்துள்ள) சங்கைக்கோர்த்தாதபடி
பொரு–அலைமோதுகிற
வளை கொள்வது–(எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம்–(உன்பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம்–வளையை இழக்கிறோம்; (இப்படியிருக்க)
ஓர் வாடை–(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே–இடையே பிரவேசித்து
நீர்–காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா–ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும்–(எமது) நாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக்கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய்–(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.
எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ-முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?

கூர்மையான வாயின் நுனியால் தன்னிடம் உள்ள சங்குகளை பறவைகள் கொத்தாத படி அலை மோதும் காவேரி –
நாரமே தன்னை அண்டினாரை ரஷிக்க நாராயணன் நீ கை விடலாமா

கீழே தோற்றின சம்ஸ்லேஷம் -விஸ்லேஷத்துடன் -முடிய திருத் துழாயும் வாடையும் சேர்ந்து நலிய

ஓர் வாடை –
துணை இல்லாமல் தானே நலிய வல்ல அத்விதீயமான வாடை –

அவனைச் சேராத நிலையிலும்
அவன் சம்பந்தம் கொண்டவை உடைய இனிமையும்
பிராகிருத பதார்த்தங்களின் தண்மையையும்-சொல்லுவது உள்ளுறை பொருள்

தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்-
அநந்யார்ஹ சேஷத்வத்தை கவர்ந்து கொள்ளட்டும்
அதனை இந்த போக்யதைக்கு நாம் இழப்போமாக –

அது வன்றி -நடுவே-வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும்-
உன் கட்டளையை அனுசரித்து நடக்கக் கடவதான
லௌகிக பதார்த்தம் எம் உருவத்தை மாற்றலுற்றது

வாள்வாய அலகால்-புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா —
வஞ்சனை உள்ள பிரகிருதி ஆத்மாவை
ஊழ் வினை மூலம் வருத்தாத படி தடுத்து ரஷிக்கும் ஸ்ரீ ரெங்கா

அருளாய் –
அது போலே என்னிடத்துக்கும் அருள் புரியாய்

எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன —
மனத்தால் ஆராயும் இடத்து -துன்புற்ற நிலையில்
இப்படி இரங்காத இடங்கள் முன்பு இல்லையே –
பாவியேனுக்கே இங்கனம் ஆயிற்றே –

————————————————————————–

நாயகி அன்னப் பறவையை வெறுத்து உரைக்கும் பாசுரம் -அன்னமோடு அழிதல் துறை

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச சீர்மையில் அன்னங்களே –29-

பதவுரை

குடிசீர்மை இல்–உயர்குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வண்ணப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய்வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்தகதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன–மின்னல்போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?

இன்னன்ன தூது –
எம்பெருமான் இடத்திலே அன்றோ –
ஸ்வயம் புருஷார்த்தமாக போக வேண்டிய இடம் அன்றோ
பெண்மையையும் ஆள் அற்ற நிலையையும் பார்த்து இரங்காமல் தூது போகாமல் –
பேடை உடன் உலாவுவதே

அனுமன் தூது
கண்ணன் தூது
நளன் தூது –
ஆண் பிள்ளைகள் பொருட்டாகவே தூதுகள் உள்ளனவே

குடிச் சீர்மை இல்லாத -என்று
குலத்தையும் உட்படப் பழிக்கின்றாள்

நீலம் உண்ட-மின்னன்ன மேனி பெருமான்-
மின் உண்ட நீலம் அன்ன மேனி –
சத்வ குண பரிபூர்ணனாய்
சார அசாரங்கள் விவேகித்து அறிய சக்தன்
ஆச்சார்யன் விவஷிதம் –

————————————————————————–

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

பதவுரை

அன்னம் செல்வீரும்–(வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப்பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்–(அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன்–யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்
(என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ–உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு–கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால்–(முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி–(அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ–அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ–இது தகுதியோ?
என்று இசைமின்கள்–என்று சொல்லுங்கள்

நீர் இருக்க மட மங்கை மீர் கிளிகள் தாம் இருக்க மதுகரம் எலாம் நிறைந்து இருக்க மடவன்னமும் உன்ன நிரையாய் இருக்க யுரையாமல் யான்
ஆர் இருக்கிலும் என் நெஞ்சம் அல்லதொரு வஞ்சமற்ற துணை இல்லை என்று ஆதரத்தினோடு தூது விட்ட பிழை யார் இடத்து உரை செய்து ஆறுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேட அரிய திரு வரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பில் பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –

என் நெஞ்சினார் ஸ்ரீ வைகுண்ட நாதனையோ பிரசாதத்தையோ பெற சென்றார் –
அங்கே சென்று சீரிய சிங்காசனத்தில் அமர்ந்து
அங்குள்ளார் பராக் ஸ்வாமி பராக் அருளப்பாடு நம்மாழ்வார் நெஞ்சினார் என்று
திரி பரிவட்டம் சாத்தப் பெற்று மேநாணிப்புடன்
எம்பெருமான் அந்தரங்க சன்னிதானத்தில் வீற்று இருப்பர் –
அந்தரங்கம் என்று உம்மை தூது அனுப்பினதுக்கு இதுவோ தக்கது –

தொழுது இரந்தேன்–
காயிக வாசிக —
மாநஸமும் உப லக்ஷணம் –

மறவேல்மினோ-
இவள் பிரக்ருதியை அறியும் நாயகன் மறந்தான் –
அவன் கைப்பின்னே போன நெஞ்சும் மறந்து –
இனி யார் தான் மறவாதார் -என்பது நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்

உங்களுக்கு மறப்பு இயற்க்கை இல்லா விடிலும்
அங்கு சென்றதும் மறக்கப் பண்ணுபவன் அன்றோ அவன்

கண்ணன் வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் —
ஸுலப்யத்தை முன்னம் காட்டி என் மனசைக் கவர்ந்து கொண்டு
பரத்வத்தால் என்னை இன்று அளவும் வந்து கலவாது நிற்பவன் இடம் என் மனம் வீணே சென்று சேர்ந்து அலைகிறதே –
அவனைக் கண்டாலும் காணலாம் –
அந்தரங்க பரிவாரங்களில் ஒன்றாக கலந்த நெஞ்சைக் காண்பது அரிதே

வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் என்கிறார்

என்னைச் சொல்லி —
நெஞ்சுக்கு உடையவள் நான்-
என் உடைமை அது –
எனக்கு இன்றியமையாதது –
யான் தனித்து உள்ளேன்
இவற்றை எல்லாம் மறந்து இருக்குமே –
புருஷோத்தமன் சிறந்த நாயகன் உடன் கூடிய மேன்மை பற்றி -நெஞ்சினார் –

அவர் இடை நீர்-இன்னும் செல்லீரோ-
நெஞ்சினாரே நீர் வரும் பொழுதே ஆற்றாமை மிக்கு -அவருக்கு அந்தகாரணமான நீர்
அவர் ஆற்றாமை அறிந்து வைத்தும் நாயகன் பொருட்டே அன்றி
உம் பொருட்டும் தூது விடும் படி இன்னமும் போகாது இருக்கலாமோ –

செல்வீர்கள்- மறவேல்மினோ,-இசைமின்களே-
பன்மையில் –
இன்னது முன் போகும் தெரியாதே
ஆற்றாமை மிக்கு அவனை மறந்து இருப்பதே நன்று என்று வெறுத்து நெஞ்சை கூப்பிடுகிறாள்

அன்னம் வந்து என்று ஆச்சார்யர் களைச் சொன்னவாறு
செல்வீர் என்று ஆச்சார்யர்கள் திவ்ய தேச யாத்திரைக்கு பிரயாணப் பட்டமை காட்டிற்று

எம்பெருமானை இடைவிடாது நினைத்து இருக்கையிலும்
அவனைச் சேர்ந்து அனுபவித்து ஆனந்திக்கப் பெறாமையால் உண்டான ஆற்றாமைத் துயரினும்
அவனை மறந்து இருப்பதே நன்று என்று அன்பு மிகுதியால் வெறுப்புக் கொண்டு
நெஞ்சை மீட்கப் பார்க்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: