திரு விருத்தம் -தனியன் -பாசுரங்கள்–1-10–திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

திரு விருத்தம் -ஆழ்வார் தம் அன்பு மிக்க செய்திகளை திருமாலுக்கு விண்ணப்பம் செய்து அருளும் திவ்ய பிரபந்தம்
சம்சார சம்பந்த நிவ்ருத்தியையும் நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யத்தை அபேக்ஷித்தும் அருளிச் செய்கிறார்
கட்டளைக் கலித்துறை –
ஆழ்வார் தம்முடைய வ்ருத்தத்தை-நாயகி பாவனையே ஸ்வரூபம் -திரு மகளின் நிகழ்ச்சிகளையே அருளிச் செய்கிறார் என்றுமாம் –
முதலும் இறுதி பாசுரங்கள் தவிர மற்றவை -அகப் பொருள் இலக்கணத் துறையில் -என்பதால் –
அந்யாபதேசம் -வெளிப்படைப் பொருளும் -ஸ்வாபதேசம் -உள்ளுறைப் பொருள் இரண்டும் உண்டு
மருந்தை வெல்லக் கட்டி பூசி உண்பிப்பாரைப் போலே-சிற்றின்பம் கூறும் வகையாலே நிரதிசய பேரின்பம் காட்டி அருளுகிறார் –
பக்தி ரசம் சிருங்கார ரசமாகப் பரிணமிக்கிறது -தாய் மகள் தோழி -தாமான -நான்கு வகைகளும் உண்டே —
நல்லார் நவில் குருகூர் நகரான –மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் -ஆறு பல வாய்க்காலாகப் பெருகுவது போலே
பொய் நின்ற ஞானம் தொடங்கி–வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே -என்று
பிரகிருதி சம்பந்த நிவ்ருத்தியே பலமாக அருளிச் செய்து தலைக் காட்டுகிறார் –
எனவே இப்பிரபந்தம் முமுஷுத்வத்தையும் முக்திவத்தையும் உண்டாக்குவதற்கு ஏற்ற திவ்ய பிரபந்தம் –

———————————————————

கருவிருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே —

-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் -சிலர் சீராமப் பிள்ளை -என்பர் -சிலர் ஆளவந்தார் என்பர் –

உயிரின் பொருள்கட்கு-ஒருவிருத்தம் புகுதாமல்-கற்று -என்றோ —புகுதாமல் குருகையர் கோன் உரைத்த-என்றோ அந்வயம்
கருவிருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து-ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர்-கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வன
ஜரா மரண நரகங்கள் -ஏழு அவஸ்தைகளையும் குறித்தவாறு
முதல் அடியில் விருத்தம்உருண்டை வடிவையும் -வட்டமான குழி -தகாத குழி என்றும்
இரண்டாம் அடியில் கிழத்தன்மையையும் -வெறுக்கத்த தக்க பொல்லா ஒழுக்கம் என்றும்
-மூன்றாம் அடியில் ஸ்வரூபத்துக்கு தகாதது -தீங்காகிய செயல் என்பதையும் – பொருளாக கொள்ள வேண்டும்

————————————————————————–

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.

ஆழ்வார் தம்முடைய ஞானக் கண்ணுக்கு இலக்கண எம்பெருமானை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்
இனி யாம் உறாமை -பன்மையிலும் –அடியேன் -ஒருமையில் -பர அநர்த்தம் நெஞ்சில் படுகையாலே நாட்டுக்காகத் தாம் மன்றாடுகிறார் –
பொய் நின்ற ஞானம் –தத்வ ஞானத்துக்கு –புண்ய பாபங்கள் உண்டு -ஈஸ்வரன் உண்டு -பரமபதம் உண்டு -என்பதற்கு
எதிர்த்தடையான இவை இல்லை என்னும் விபரீத ஞானம் –
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளான ஆம் மாணாப் பிறப்பு -என்றும்
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு -என்றும்
ஐயத்தின் நீக்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியதுடைத்து -என்றும் திருக்குறள்
பொய்யில் நின்றபொய்யாய் நின்ற ஞானம் என்றபடி -தத்வ ஞானத்துக்கு விபரீத ஞானமே சம்சாரத்துக்கு
நிமித்த காரணம் என்பதால் முதலில் அருளிச் செய்கிறார் –
பொல்லா ஒழுக்கு-யானே நீ என்னுடைமையும் நீயே -என்பதற்கு எதிராக அகங்கார மமகாரங்கள் கொண்டு நடப்பவை –
விபரீத ஞானத்துக்கும் பொல்லா ஒழுக்கத்துக்கு காரணம் தேஹ சம்பந்தம் –காரியங்களை முன் சொல்லி காரணத்தை பின் அருளிச் செய்கிறார்
இந்நின்ற நீர்மை -ஏஹீ பஸ்ய சரீராணி -இது இரு வெட்டு இது ஒரு குத்து என்று ராக்ஷசர் தின்ற உடம்பைக் காட்டினால் போலே
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி அருளுகிறார் -என்பர் ஆளவந்தார்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை– கேட்டு அருளாய்
-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை-அடியேன் செய்யும் விண்ணப்பம் -கேட்டு அருளாய் -என்று அந்வயம்
என்நின்ற யோனியில் பிறந்தாய் -என்னாமல் யோனியுமாய் பிறந்தாய் -என்றது அதன் அதன் தன்மையாகவே திருவதரித்ததும்
உயிர் அளிப்பான் -பரித்ராணாயா சாதூனாம் –சிஷ்ட ஜன சம்ரக்ஷணமே பிரதான காரணம்
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியின் பால் வாராய் மண்ணும் விண்ணும் மகிழவே –
சாயல் சாமத் திரு மேனி —-ஒரு நாள் காண வாராயே
இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி -கண் இமையாத தேவர்கள் -ஞானக் கண் இமையாத நித்ய ஸூ ரிகள் -இருவரையும் குறிக்கும்
ஸ்ரீ காஞ்சி தேவாதி ராஜனுக்கு முதல் பாசுரம் இங்கும் திரு வாய் மொழியிலும் என்பர்
மெய் நின்று கேட்டருளாய் -மெய் விண்ணப்பம் என்றும் -திரு மேனியைக் காட்டி உண்மையாக நேர் நின்று –
நின்று கேட்டு அருளாய் -வேறே எண்ணம் இல்லாமை திவ்ய பிரபந்தத்தில் நிலை பெற்ற திரு உள்ளம் கொண்டு
-செவி தாழ்த்து கேட்டு அருளினாலே தம் கார்யம் தலைக் காட்டுமே -கார்ய சித்தி தன்னடையே ஆகுமே
கேட்க்கை யாகிற அருள் -அமுது செய்து அருள்– வந்து அருள் போலே- கேட்டு அருளாய் என்கிறார் –

ஸ்ரீ தேசிகன் தம் உபகார சங்க க்ரஹம் என்னும் ரகஸ்யத்தில் நிர்ணய அதிகாரத்தில்
இந்த முதல் பாசுர வியாக்யானம் அருளிச் செய்து அருளுகிறார்

————————————————————————–

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

பதவுரை

முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–(யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)

தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் –
நீல மேக ஸ்யாமளான -நாயகனைப் பிரிந்த வருத்தத்தினால் கண்கள் நீர் ததும்ப நிற்கும் நிலையைக் கண்டால் –
-கடல் போன்ற தடாகத்தில் பரப்பு எல்லாம் விம்மும் படி கயல் இடம் வலம் கொண்டு தடாகம் குழம்பும் படி
-கண்களுக்கு கயலும் -கண்ணநீருக்கு தடாகமும் –
பகவத் விஷயத்தில் இப்படி இருப்பது பரம போக்யமே என்பதால் வாழியரோ என்கிறார்கள்
வண் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே
வாழி -விரக வருத்தம் நீங்கி வாழ வேணும் என்றுமாம்
விண்ணாட்டவர் மூதுவராம் -நித்ய ஸூரிகளை குறிக்கும் -தொழுநீர் -நித்ய ஸூரிகளால் தொழப் படுவதை ஸ்வ பாவமாக யுடையவன்
அன்பு வைத்த -என்னாமல் அன்பு சூட்டிய -ஆழ்வார் அன்பு திருவடிகளுக்கு அலங்காரம் –ஆர்வம் என்பதோர் பூ
இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே-என்பதால் எம்பெருமான் திருவடிகள் ஆழ்வார் திரு முடிக்கு அலங்காரம்
-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
சூழ் குழல் -சூழ்ந்த குழலை யுடையவள்

அன்பர் வெளியிடும் பாசுரமாக ஆழ்வார் தம் பிரிவாற்றாமையை வெளியிட்டு அருளுகிறார் –

——————————————————————

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த–பள்ளின் பின்போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

கருடாரூடனாக சேவை சாதிக்க -பெரிய திருவடி செய்த போக்யமே போக்யம்–சதா திருமாலை ஏந்திச் செல்கிறான் என்று
ஆழ்வார் திரு உள்ளம் பெரிய திருவடி பின்னே பரம பதம் வரை சென்று -பிராட்டிமார் உடன் சேர்த்தி அழகைக் கண்டு
மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பதைக் கண்ட பின் —தொடருவதால் அவனது குளிர்ச்சிக்கு காரணம் என்பதாலும் நிழல்
தம்மில் ஒருவர்க்கு ஒருவர் நிழல் என்றுமாம் -அடியார்க்கு நிழல் போல்வனர் என்றுமாம் –மீள வில்லை என்று தோழிக்கு அறிவிக்கிறாள் பராங்குச நாயகி
இப்பிராட்டிமார் அவனை விட்டு நீங்காது இருப்பது போலே தமக்கும் கிட்டுமோ -என்கிறார்

ராமம் மே அநுகதா த்ருஷ்டிர் அத்யாபி ந நிவர்த்ததே -ந த்வயாமி பஸ்யதே
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—வேத ஸ்வரூபி -வேதத்தை திரு உள்ளம் அனுசந்திக்கிறது –
தழற் போல் சினத்த அப்புள்ளின்--வேத பிரமாணம் புற மத நிரசன சமர்த்தியம்
சக்கரத் தண்ணல் —கடவும் புள் -அப் பிரமாணம் சர்வேஸ்வர அதீனம்
விண்ணோர் தொழக் கடவும் புள் -அந்த பிராமண பலத்தால் தேவர்கள் யாவரும் அவனுக்கு அடிமைப் பட்டவர்கள்
குழற் கோவலர் மடப்பாவை-குழல் நப்பின்னை புல்லாங்குழல்
தண்ணம் துழாய்–அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் –திருத் துழாயும் திரு வாழி யும் – திருத் துழாய் அழல் போலே
பிரிவில் -மேவு தண் மதியம் வெம் மதியம் மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாலோ -போலே -விரஹத்தில்
தனி நெஞ்சமே -ஆழ்வார் வேதங்களில் அவகாஹித்து திருமாலை அனுபவிக்கத்  தொடங்கி
இந்நிலை விடாமல் இருக்க வேண்டுமே என்கிறார் ஆகவுமாம்

————————————————————————–

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சம் -பிராமண பூர்வகமாக எம்பெருமான்  பின் சென்று தளர்ந்து இருக்கும் பொழுது-
தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது-என்று அத்தையே ஸ்திரப்படுத்தி அருளி
குளிர்ந்த காற்றும் அவன் திருத் துழாய் -சம்பந்தம் கொண்டு நலியும் படியை சொல்லி -பாக்ய பதார்த்தங்கள் இனி தம்மை ஹிம்சிப்பதை வெளியிட்டு அருளுகிறார்
திருத் துழாய் பசக்கு பசக்கு என்று மனசைக்   கவருவது போலே பிரகிருதி -என்பதால் -அது இனி தம்மை ஆக்கிரமிக்க வல்லது இல்லை என்கிறார்
அன்றிக்கே பிரிவில் அவன் சம்பந்தம் உள்ள திருத் துழாய் தடவி வந்த தண் காற்றும் தமக்கு அஸஹ்யம் என்று அருளிச் செய்கிறார் என்னவுமாம்
முடி சூடு துழாய்ப்-பனி நஞ்ச மாருதமே –வஞ்சகப் பேய் போல்வாரை முடிக்கும் ஸ்வ பாவம் அவனுக்கு -இப்பொழுது அன்பு பூண்ட அடியேனை முடிக்க முயல்வதே
எம்மதாவி –நெஞ்சு போனால் போலே ஆவியும் அவன் இடம் போய் ஒழியக் கூடாதோ -அவ்வளவு துணிவு இல்லாத பாழும் உயிர் என்கிறாள்
பனிப்பியல்வே -அனைவர் தாபத்தை தீர்க்கும் நீ இப்பொழுது நெஞ்சு இழந்த என்னை வாட்டுவதே
முன்னவர் புள் –என்றும் சுவைத்தான் -என்றும் பன்மையிலும் ஒருமையிலும் –பிரிந்து போன கோபத்தால் அவர் -என்றும்
பூதனா நிரசனத்தால் தமக்கு செய்து அருளிய உபகாரம் அனுசந்தித்தவாறே இயல்பாக சுவைத்தான் -ஒருமை –

————————————————————————–

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-

பதவுரை

பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இ காலம்–இப்போது மாத்திரம்
இ ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் நுழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்

மந்த மாருதம் பராங்குச நாயகிக்கு தாபத்தை உண்டாக்கக் கடவது -என்றே சங்கல்பித்தான் போலும் -என்று தோழி இரங்குகிறாள்-
பெரிய திருவடியைக் கொண்டு நெஞ்சம் கவர்ந்த அனந்தரம் வாடையை அனுப்பி மேனி நிறத்தை கவர –மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன்-வடிவும் ஸ்வபாவமும் மேகம் போல் இருக்க இப்படி விருத்த சங்கல்பம் பண்ணுவதே
–வாடையை மட்டும் மாற்ற சங்கல்பம் கொள்ளாமல் தன் ஸ்வ பாவத்தையும் மாற்றிக் கொண்டானே
நெடும் கடல் நிற்பதும் –கால் ஒடுங்கி நடப்பதும் —அரங்கேசர் தம் திருவாணையினே –திருவரங்கத்து மாலை -15-
செங்கோல் ஒருநான்று தடாவியதே -இவளை அழிக்க அன்றோ இவ் வொரு பொழுது நிலை குலைந்தது
ஸ்ரீ மதுரகவி போல்வார் ஆழ்வார் நிலையை அருளிச் செய்கிறார்கள் -தோழி தாய் பாசுரம் என்பர்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை–இரண்டு விசேஷணங்கள்–தொழில் பண்பும் குணப் பண்பும் –
இக்காலம் இவ் ஊர்--முன்பு இப்படி இல்லை -விஸ்லேஷத்திலே –ஆழ்வார் நிலை கண்டு ஊரெல்லாம் இப்பாடு படுவதால் இவ்வூர் –

————————————————————————–

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே—6-

பதவுரை

இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவையுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்

ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவல்ல இவருக்கு வசப்படாமல் தப்பித் பிழையுங்கோள்-என்று
பாகவதர்கள் ஆழ்வார் பிரபாவம் சொல்கிறார்கள் –
அனைவரும் ஸ்வதந்தர்களாக இல்லாமல் அநந்யார்ஹர் ஆவார்கள்
பிரசித்த மன்மதன் மிருத்யுவைத் தப்பினாலும் -இப்படி மிருதுவாய் தோன்றினாலும் இவருக்கு தப்ப முடியாதே
மாயப்பிரான் அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –
தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு-கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும்-ஆழ்வார் எம்பெருமானை பற்றி அல்லது தரியார் -வல்லி
உபயோகம் அற்ற மன்மதன் அம்பு சிலைகள் பிராகிருத உபாயந்தரங்கள் -போலே அன்றே ஆழ்வாருடைய நிலை நின்ற ஞான பக்திகள்-
அசுரர் மங்கக்கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்-புற மதஸ்தர்கள் நிலை கெடும்படி வேத ஸ்தாபன ப்ரவர்த்தகாச்சார்யார்
ஞானம்கண் -குறி தவறாமல் எய்யும் அம்பு உவமை -எம்பெருமானை தவறாமல் பற்றும் தன்மையது என்பதால் –
வில்அம்பை விட சாதனம் -ஞானம் வளர -ஞான சாதனங்கள் -நிலை பெற்ற ஆழ்வார் திருவடியே சாதனம் –
கடாயின கொண்டு –ஆழ்வாரை சேவிக்கவே சம்சாரம் அடி அற்றுப் போம் -என்பதையே -கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே-என்கிறார்
எம்பெருமான் அவதரித்து திருந்தாத சம்சாரிகளும் திருந்தி -கலியும் கெடும் கண்டு கொண்மின் -பொலிக பொலிக -என்பார் –
ப்ரத்யும்னன் மகன் மன்மதன் -பறவையின் பாகன் மதனன் –

————————————————————————–

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பதவுரை

ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.

கால மயக்கு -பொய்மையும் வாய்மையிடத்தே புரை தீர்ந்தே நன்மை பயக்கும் எனின் –
பிரிவாற்றாமையால் வருந்தும் பராங்குச நாயகிக்கு சங்கையாக
தண் பூம்காலம் கொலோ வறியேன்-மெய்யே இது கார் காலம் தானோ அறியேன் என்கிறாள்
நீல வல்லேறு பொரா நின்ற வானமா -இல்லை –தண் பூம்காலமா -என்று ஆராய்வதில் இழிந்து பொழுது கழித்து
பிரிவாற்றாமையால் ஆழ்ந்து அழிவதை மாற்றலாமே-
திருமால்-கோலம் சுமந்து-விளங்குகின்ற மின்னல் கறுத்த நிறம் –பிரிந்தார் கொடுமை குழறு-மேகம் கர்ஜிப்பது
-தனிக்கிடை கிடக்கும் தலைவர் கொடியவர் –தண் பூம் காலம் -கலவிக்கு உரியது -தண் பூம்-காலம் கொலோ -எம்பெருமானுக்கும் பிரிவில் ஆறி இருக்க ஒட்டாமல் வந்து சம்ச்லேஷிக்கத் தூண்டும் காலம் அன்றோ
வினையாட்டியேன்–அவன் கொடுமையோ -உன் ஆற்றாமையோ காலமோ காரணம் இல்லை -மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்
-வினையாட்டியேன்-வினையை ஆள்பவள் –
வினையை யுடையவள்-பிரகரணத்தால் இங்கு தீ வினையையே குறிக்கும்
ஞாலம் பனிப்பச் செறித்து -உலகோர் கண்டு நடுங்கி பரஸ்பரம் நெருங்கி –
நீர் -வியர்வை நீரும் மூத்திர நீரும் / வானம் இது -பூமியில் இடம் இல்லாமல் வானத்தில்
பொரும் எருதுகள் -இப்படியும் சம்பவிக்குமோ என்று ஆராய்வாளே –
அவி விவேக கநாந்த திங்முகே பஹுதா சந்தித்த துக்க வர்ஷிணி–பகவன் பவ துர்த்திநே –சம்சாரம் -கார்காலம்-ஆளவந்தார்
அஞ்ஞானம் இருள் மூடி நல்வழி தீவழி தெரிய பெறாமல் இருக்குமே –சம்சாரம் மேலிட்டு நலியும் பொழுது வந்து ரஷிப்பேன்
என்று வாயோலை அருளிச் செய்து வாராமல் உள்ளான் –

————————————————————————–

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

பொருள் நிமித்தமான பிரிவு -ஸ்வயார்ஜிதமான பொருள் கொண்டே தேவ பித்ரு கார்யம் செய்ய வேணும்
பிரிவதற்கு முன்பு பிரியேன் -பிரிந்தால் தரியேன்-போன்றன சொல்லி அணைத்து
கை கால் பிடித்து முத்தம் தந்து -விலக்ஷணமான செயல்களை செய்து
அரிய மலைக்குச் சென்று -பொருள் திரட்ட இந்நாள் -முன்பு இப்படி வரம்பு கடந்த செயல்கள் செய்யாமை
பயில்கின்றன-இன்று மீண்டும் மீண்டும் செய்தமை
பாணர்-குடுகுடிப் பாண்டி வேஷம் கட்டி பாடி ஆடுவது போலே -உண்மையான அன்பு தூண்டிய செயல்கள் அல்லவே
பாண் குன்றம் -வண்டுகள் இசை பாடும் மலை
குன்ற நாடார்-திருவத்தி மலை -திருவேங்கட மலை -திருமாலிருஞ்சோலை மலை திரு மெய்யமலை –
கல் நெஞ்சர் என்று குன்ற நாடார் என்கிறார்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர்-ரக்ஷணத்துக்கு -மலையை எடுத்தும் மலை மேல் நின்றும்
சமயோசிதமாக செய்து அருள்பவன் அன்றோ
குன்றமேந்தி -திரு நாமம் -/ மாண் குன்றமேந்தி -வாமனனே கிருஷ்ணன் என்றுமாம் –
வையம் அளந்த மாயன் என்னப்பன் -என்று குரவை ஆய்ச்சியாரோடு  கோத்ததும்     -6–4-கிருஷ்ணாவதாரம் சொல்லும்
திருவாய் மொழியில் வாமனன் பற்றி அருளிச் செய்தமையும் காணலாம்
உம்பர் நம்பும்–வேங்கடத்து-சேண் குன்றம்–நம்பும் -நசை -ஸுசீல்யாதி குணம் அனுபவிக்க
மலை ஏறி எலி பிடிக்க வேண்டி என்னைப் பிரியக் கருதுகிறீரோ -நையாண்டி வசனம் போலே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆழ்வாரைப் பிரிந்து திருவேங்கட யாத்திரை செல்வதற்கு முன்னம் சொல்கிறார்கள் என்னவுமாம் –
குன்ற நாடார் -வேங்கடத்தை பதியாக வாழ்பவர்
குன்றமேந்தி குளிர் மழை காத்தவனே சென்று சேர் திருவேங்கட மலையே நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்புவர்
பாகவத ஸஹவாசமே அடியார்களுக்கு வேண்டும் -விட்டு எம்பெருமானை சேவிக்கப் போவதும் கூடாது –
பாகவதர்கள் இருப்பிடமே திவ்ய தேசம் -கருடன் -சாண்டிலி -விருத்தாந்தம்

————————————————————————–

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே—9-

பதவுரை

திண்–வலிய
பூ–அழகிய
சுடர்–ஒளியுள்ள
நுதி–கூர்மையை யுடைத்தான
நேமி–திருவாழியை யுடைய
அம் செல்வர்–அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய–பரமபதத்தை யொத்த
வண் மணி பூ–அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை
யாரே பிரிபவர் தாம் எவர்தாம் பிரிய வல்லவர்? (எவரும் பிரிய வல்லரல்லர்;)
(ஏனெனில்;)
இவையோ கண்–இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம்–தாமரை மலர்களாய்
வண் பூ குவளை–அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ்–பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி–கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி–(நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற–மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.

கையும் திருவாழியுமான சேர்த்தியால் உண்டான அழகுடன் ஸ்ரீ வைகுண்டம் போலே சேர்ந்தவர்
மீள ஒண்ணாத எல்லை இல்லா ஆனந்தம் கொடுக்கும் பராங்குச நாயகி
திண் பூஞ்சுடர் நுதி-ஆஸ்ரிதற்கு பூ போலேயும் பிரதிகூல நிரசனத்தில் திண்மையும் உண்டே
வண் பூ மணி வல்லி--ஆழ்வார் திரு நாமம் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்றே
மா இதழே –திரு அதரத்தை வியந்ததாகவும் சம்போதகமாகவும்
-வல்லி -பாரதந்த்ரமே வடிவாக உள்ள ஆழ்வாரை விட்டுப் பிரிய முடியாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் பேச்சு –
இவையோ கண் -பரம விலஷணமான ஞானம் அன்றோ
பூங்கமலம் கருஞ்சுடராடி-ஆழ்வார் ஞானம் செந்தாமரை நிறத்தவளான பெரிய பிராட்டியாரையும் அஞ்சன வண்ணனுமான
எம்பெருமானையும் லக்ஷியமாக கொண்டது அன்றோ -தன்மயமாயே இருக்கும்
-வெண் முத்தரும்பி-சுத்த சத்வம் குணமயம் -எம்பெருமானை அனுபவித்து ஆனந்த கண்ணீர் பொழியுமே-முத்து போன்ற கண்ணீர் சொரியுமே-
மான் விழிக்கின்ற-மான் போலே விழிக்கும் -உவமைத்தகை

————————————————————————–

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பதவுரை

மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)

தோழியை சில வார்த்தைகள் சொல்லி உடன்பட வைக்கின்றான் -மதி யை உடம்படுத்தல் -துறை
ஆயோ -கிளி போன்ற பறவைகள் தானாக கதிர்களை கவராத படிக்கு ஆயோ என்று சொல்லும் வார்த்தை
புனம் காத்தல் -நாயகிக்கு ஜீவத் தொழில் இல்லை -விளையாட்டு செயல்களில் ஓன்று
நாயகனை குறியிடத்தில் தனித்துக் கூட வேண்டி செய்யும் செயல் என்றுமாம்
வல்லி கொடி காள் -வல்லி என்றாலும் கொடி என்றாலும் ஒன்றே -வல்லி – உவமைச் சொல் –
கொடி -பெயர் மாத்ரமாய் பெண்டிரைக் குறிக்கும்
தோழிகளை கொடி என்பது நாயகி நாயகனை கூட உதவும் தன்மை கொண்டவர்கள் என்பதால்
பிரிந்து நோவு படுபவன் நான் அன்றோ -நீங்களோ -ஏன் நோயைப் பரிஹரிக்க வேண்டா காது கொடுத்து கேட்டால் போதுமே கேட்கின்றிலீர்
கேளாதவர்களை -உரையீர் -சொல்லீர் -என்பது ஆசையின் மிகுதி இருந்தபடி அன்றோ –புனம் காப்போர் பறவைகளை விரட்ட -ஆயல் இடும் வாய் அழகு குரல் அழகில் ஈடுபட்டு -கிளியும் எள்கும்-ஆயோகிளியும் வெள்கும்
இவர்கள் இனிய பேச்சை கேட்டு நாணும்-வல்வினையேனும் கிளியும் எள்கும்--கிளி மட்டுமா
நானும் கூட – காதல் நோயில் அகப்பட்டு வல்வினையேன் -இன்ன காரணத்தால் நோவு தான் அறிந்தான் யாகிலும்
இவர்கள் வாயால் அத்தைக்கு கேட்க ஆசை கொண்டு வார்த்தை –உரையீர் -என்கிறான் நுமது ஆயோ –நுமது தொண்டையோ-அறையோ -இவர்கள் வார்த்தை கேட்க்கும் விருப்பத்தால் முறையிட்ட சொல் –
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்-அவன் நீர்மையை நாடி பாரதந்த்ரமே ஸ்வரூபமாக உடைய ஆழ்வீர்-பஹு வசனம் கௌரவம் தோற்ற
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர்–உம் இடம் ஈடுபட்டு நாங்கள் படும்பாட்டை விண்ணப்பம் செய்தாலும் பக்தி பரவசத்தால் கேட்கின்றிலீர்
நுமது-வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்-ஆயோ ஆடும் தொண்டையோ -உமது திரு முக மண்டலமும்
திருவாய் மொழியும் -திருவாய் இதழ்களும் -தனித்தனியே வருத்தம் செய்பவன-இன்னது என்று
பகுத்து அறிய கொள்ளோம் நீரே அருளிச் செய்ய வேணும் -என்கிறார்கள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: