திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -13-24–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

பதவுரை

வீடு ஆக்கும் பெற்றி அறியாது–மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்–சரீரத்தை
வருத்தி–(உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
கூடு ஆக்கி–எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
நின்று–இப்படி நெடுங்காலம் தவம் புரிந்தும்
உண்டு கொண்டு–(தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும்
உழல்வீர்–திரிகின்றவர்களே!
வீடு ஆக்கும்–மோக்ஷத்தைத் தரக்கூடிய
மெய் பொருள்தான்–மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள் தான்–வேதங்களினால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
நல் பொருள் தான்–போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்–ஸ்ரீமந்நாராயணனே யாவன்.

கூடாக்கி நின்று-எலும்பே மிக்கு இருந்த கூடாக்கி -கூடு கொம்பு சுள்ளிகள் போலே -அஸாரமாக்கி நெடும் காலம் -த்வம் புரிந்து
உண்டு கொண்டு உழல்வீர் -தேகம் தரிக்க வேண்டும் அளவு மட்டும் –ஸ்வல்பம் புஜித்தும் திரிகின்றவர்களே

பிராமணர்கள் யாகஞ்செய்தும் தானஞ் செய்தும் தவம் புரிந்தும் பட்டினி கிடந்தும் பேறுபெறப் பார்க்கிறார்கள் – என்று ஓதப்பட்டுள்ளது)
சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யவேண்டியவையாயும், அப்படி செய்தாலும் “அது தப்பிற்று, இது தப்பிற்று“ என்று
சொல்லிப் பெரும்பாலும் பலனை இழக்க வேண்டியவையாயுமுள்ள அக்கருமங்களில் கைவைத்து அநர்த்தப்பட்டுப் போவதிற்காட்டிலும்,
ஸ்ரீமந்நாராயணனையே ஸாகஷாத்தாக எளிதில் வழிபட்டு வாழ்ந்துபோகலாமே என்னுங் கருத்துடன் அருளிச்செய்யும் பாசுரம் இது.

அருந்தவம் புரிந்து கஷ்டப்படுகின்றவர்களை விளிக்கிறார் முன்னடிகளால். அந்தோ! மோக்ஷமடையவேண்டிய வழி
எளிதாயிருக்கச் செய்தேயும் அந்த மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அபாயங்கள் மிக்க கொடுவழியில் செல்லுகின்றீர்களே!
என்கிற இரக்கந்தோன்ற “வீடாக்கும் பெற்றி அறியாது“ என்கிறார்.

பெற்றி-உபாயம். கூடு ஆக்கி-பறவைகளின் கூடு கொம்புகளாலும் கள்ளிகளாலுமே அடர்ந்திருப்பதுபோல,
உடம்பை எலும்பு தவிர வேறொன்றுமில்லையாம்படி உலர்த்தி என்றவாறு. உண்டு-

காயோடு நீடு கனி யுண்டு வீடு கடுங்கால் நுகர்ந்து -பெரிய திரு -3-2-2-என்றும்
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவை நுகர்ந்து உடலம் தாம் வருந்தி -பெரிய திரு மடல் –
அந்தோ மோக்ஷம் அடைய எளிய வழி இருக்கச் செய் தேயும் அபாயங்கள் மிக்க கொடு வழியிலே செல்லு கின்றீர்களே
ஸ்ரீ மன் நாராயண சரனவ் சரணம் பிரபத்யே –என்று இருங்கள் என்றவாறு –

காயிலை தின்றும் கானில் உறைந்தும் -கதி தேடித் தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்
தாயிலும் அன்பன் பூ மகள் நண்பன் தட நாகப் பயன் முகுந்தன் கோயில் அரங்கம் பணிவீரே –திரு வரங்க கலம்பகம் –

—————————————————————————————

தேவதாந்தர பக்தர்களும் உபாயாந்தர நிஷ்டர்களுமே மலிந்து உள்ளார்களே என்று வயிறு எரிந்து பேசுகிறார் –

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

பதவுரை

நாராயணன்–நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி–(விசேஷித்து) அடியேனை ஆட் கொள்பவனும்
நரகத்து சேராமல் காக்கும்–(அடியார்களை) நாகம்போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்–திருமாலினது
பேர் ஆன–திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத–ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம்–ஜீவச் சவமென்னலாம் படியுள்ள பாஹ்ய குத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச–(அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு-அவற்றைக் கேட்டு
பலர்–பல பேர்கள்
ஆசைப் பட்டு–தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்–அகோ கதியை யடைந்தொழிவர்

பிணச் சமையர் பேசக் -ஜீவ சவம் என்னலாம் படியான பாஹ்ய குத்ருஷ்டிகள் அபார்த்தங்களைப் பிதற்ற –
கேட்டு– ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்—அவற்றைக் கேட்டு பலரும் -தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாக
ஒழிய விரும்பி அதோ கதியை அடைந்து ஒழிவர்

இவ்வுலகில் தேவதாந்தா பக்தர்களும் உபாயாந்தர நிஷ்டர்களுமே மலிந்து கிடக்கிறார்களே! என்று வயிறெரிந்து பேசுகிறார்.
கைல லோகஸம்ரக்ஷகனாய் நரகநாசனான ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணி வாழலாமாயிருக்க,
அப்படி வாழ்வதற்குப் பாக்கியமற்றவர்களாய் “ஜீவச்சவங்கள்“ என்று இகழ்வதற்குத் தகுந்தவர்களாயுள்ள மதாந்தரஸ்தர்கள்
தேவதாந்தரங்களுக்குச் சிறப்பாகவும் உபாயாந்தரங்களுக்கு புகழ்ச்சியாகவும் எதையாவது வாய்வந்தபடி பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்,
பல பாவிகள் அப்பிதற்றல்களைக் கேட்டு “நாமும் இவர்களைப்போலவே தேவதாந்தர பக்தர்களாயும் உபாயாந்தர நிஷ்டர்களாயும் இருக்கலாமே“ என்று
அவர்களுடைய நிலைமையிலே ஆசைகொண்டு இவ்வழியாலே அதோகதியை அடைந்தொழிகின்றதே இவ்வுலகம்!,
நல்ல பேச்சுப் பேசினால் செவிமடுத்துக் கேட்டுகப்பார் ஆரூமில்லையே, ஆத்மநாசத்தை விளைக்கவல்லை பேச்சுக்களே
பொலிவு பெறுகின்றனவே! என்று பரிதபித்துப் பேசினாராயிற்று.

———————————————————————————————–

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பதவுரை

பல தேவர்–பல தேவர்கள்
ஏத்த–துதிக்கும்படியாக
படி–பூமியை
கடந்தான்–அளந்தவனான ஸர்வேச்வரனுடைய
பாதம்–திருவடிகளிலே
மலர்–புஷ்பங்களை
ஏற இட்டு–ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்–மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீர் கண்டன் கண்ட நிலை–நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே–மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே
வரும் கண்டீர்–ஸித்திக்குங்கிடீர்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்–ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி -பூமியை அளந்த திரு உலகு அளந்து
அருளியவனுடைய திருப்பாதங்களில்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்-மங்களா சாசனம் பண்ண வல்லவர்கள் ஆனால்
நீர்க்கண்டன் கண்ட நிலை-ருத்ரன் இடம் காணாத தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்-மார்க்கண்டேயன் பிரத்யக்ஷமாக கண்ட விதமாக சித்திக்கும் கிடீர்
மிருகண்டு மகரிஷி புத்ரன் மார்க்கண்டேயர் –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்கண்டேயனவனை நக்க பிரான் அன்று உய்யக் கொண்டது
மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக இருக்க விரும்பி -அத்தை நீல கண்டன் -ஸ்ரீ மன் நாராயணன் இடம் சென்று பெற்றுக் கொடுத்தார் என்றபடி
நீலார் கண்டத்து அம்மானை -விஷ ஜலத்தை கழுத்தில் கொண்டவன் -என்றபடி –

ம்ருகண்டு மஹர்ஷியன் புத்திரனான மார்க்கண்டேயன் குமாரப்பருவத்தில் வீதியில் விளையாட நிற்கையில்
அவ்விளையாட்டைக் கண்டுகொண்டு மாதா பிதாக்களும் மகிழ்ந்திருக்கும் போது “இப்பிள்ளைக்கு மரணகாலம் குறுகிவிட்டது“ என்று
அசரீரி வாக்கியம் ஒன்று திடீரென்று செவியில் விழப்பெற்ற அத்தாய்தந்தையர் மிகவும் பரிதாபங்கொண்டு நிற்க,
அதைக்கண்ட மார்க்கண்டேயன் “நீங்கள் சிறிதும் வருந்த வேண்டா, ம்ருத்யுவை நானே பரிஹரித்துக் கொள்ளக்கடவேன்“ என்று சொல்லி
அன்று முதலாகப் பரமசிவனை யடிபணிந்து வருகையில், சிவபிரான் “இவனோ நம்மை ரக்ஷகனாக நினைத்து நம்மைத் தொழுது கொண்டு
நம் கை பார்த்திருக்கின்றான், ஸ்ரீமந்நாராயணனே ஸரர்வரக்ஷகன் என்கிற பரமார்த்தம் இவனுக்குத் தெரியவில்லை போலும்,
அதனை இவனுக்கு நாம் தெரிவிப்பது நன்று, தெரிவியா தொழிந்தோமாகில் அநியாயமாய் இவன் மோசம் போய்விடுவான்,
மருத்யுவைத் தப்பவேணுமென்று நம்மை வழிபடுகின்ற இவனுக்கு நாமே ஒரு புகலிடம் காட்டிக் கொடுத்தோமாக வேணும்“ என்றெண்ணி
“மார்க்கண்டேயா! என்னை நீ ரக்ஷகனாக நினைத்துத் தொழுகின்றாய், நானும் நீயும் ஷமந்நாராயணனுடைய ரகஷ்யவர்க்கத்தில்
சேர்ந்தவர்களேயன்றி உனக்கு நான் ரக்ஷகனாக ப்ராப்தனல்லேன், ஸர்வரக்ஷகன் அந்த ஸ்ரீமந்நாராயணனொருவனே,
ஆனபின்பு அவனையே அழ பணிந்து நீ அபிமதம் பெறக்கடவாய்“ என்று சொல்லி அவனை எம்பெருமான் திருவடிகளிலே கொண்டு நிறுத்தி
“இவனை அநுக்ரஹித்தருளவேணும்“ என்று பிரார்த்தித்து, பகவத்கிருபையாலே நீண்ட ஆயுளைப்பெறுவித்தான் பரமசிவன் –
என்பது மார்க்கண்டேயனுடைய வரலாற்றின் சுருக்கம்.

1. “புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை, என்றும்
2. “மார்க்கண்டேயனும் கரியே“ என்றும்,
3. “கண்டுந்தெளிந்துங் கற்றார் கண்ணற்களான்றி யாவரோ, வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்,
இண்டைச்சடைமுடி யீசனுடன் கொண்டு உசாச்செல்லக், கொண்டங்குத் தன்னொடுங் கொண்டுடன்
சென்றதுணர்ந்துமே“ என்றும் திருவாய்மொழியில் நம்மாழ்வாரும்,
4. “மன்னு நான் மறை மாமுனி பெற்றமைந்தனை மதியாத வெங்கூற்றந் தன்னையஞசி, நின்சரணெனச் சரணாய்த்
தகவில் காலைனையுக முனிந்தொழியாப், பின்னையென்றும் நின் திருவடி பிரியாவண்ண மெண்ணிய பொருள்“ என்று
பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தவை காண்க.

சில புராணங்களில் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்த்தாகக் காணப்படினும்
மஹாபாரத்தில் ஆரண்யபர்வத்தில் நூற்றுத் தொண்ணூற்றிரண்டா மத்யாயத்தில் மார்க்கண்டேயன் தானே தருமபுத்திரரை நோக்கிச்
சொல்லுமளவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்து
இவன் ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும்.
ஸ்ரீபாகவதத்திலும் பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்யாயத்தில் – காண்க.

மார்க்கண்டேயனுடைய வரலாறு இப்படிப்பட்டதென்று தெரிந்தபின் இனி இப்பாசுரத்தின் கருத்தை ஆராய்மின் –
“உலகளந்த பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களைப் பணிமாறிப் பல்லாண்டு பாட வல்லரானால்
நீற்கண்டன் கண்டநிலை மாற்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்“ என்றால் இதற்குக் கருத்து யாதெனில், கேண்மின்.
மார்க்கண்டேயன் பரமசிவனிடத்தில் (ஸ்ரீவைகுண்ட ப்ராப்தியாகிற) மோக்ஷத்தை விரும்பிப் பணிந்தானல்லன்,
வாழ்நாளையே விரும்பிப்பணிந்தான், அந்தப் பலனையும் அளிக்க யோக்யதையற்றவனாய் அந்த ருத்ரன் ஸ்ரீமந்நாராயணன்
பக்கலில் அவனை ஆச்ரயிப்பது அப்பெருமான் மூலமாக ரக்ஷணம் செய்வித்தான்,
ஆகவே, “தேவதாந்தரங்கள் பரம்பரயாக ஒருகால் ரக்ஷகங்களாகுமேயன்றி ஸாக்ஷத்தாக ரக்ஷகங்களாக மாட்டா,
ஸ்ரீமந்நாராயணனொருவனே ஸாகஷாத் ரக்ஷகனாவான்“ என்று மார்க்கண்டேயன் கைகண்டறிந்த பரமார்த்தம் தேறினதாகும் என்கை.
நேராக எம்பெருமானையே நீங்கள் ஆராதிக்கும் பக்ஷத்தில் மார்கண்டேயன் ச்ரம்பட்டுத் தெரிந்துவிட்டதாகத் தேறும் என்றவாறு
நீண்டகண்டனாகிய சிவனிடத்துக் காணக் கூடிய நிலைமை (அதாவது-இவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று
தெரிந்துகொள்ளக்கூடிய ஸ்திதி), அதை மார்க்கண்டேயன் பண்டு தெரிந்துகொண்டான்,
நீங்களும் அதை இப்போது தெரிந்து கொண்டீர்களென்னலாம் – ஸாகஷாத்தாக் நீங்கள் எம்பெருமானையே ஆராதிப்பீர்களாகில், என விரிக்க.

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “மார்க்கண்டேயன் மஹாதேவனை மோகஷார்த்தமாகச் சென்று ஆச்ரயிக்க,
மோக்ஷப்ரதன் ஈச்வரனேயென்று காட்டுமிதுவே உள்ளதென்று ருத்ரன் காட்டக்கண்டு இதுவே இவனுக்குள்ள தென்று
மார்க்கண்டேயன் கண்டவகையே ஸித்திக்கும், அவ்யவ ஹிதமாக ஸர்வேச்வரன் திருவடிகளை ஆச்ரயிக்க வல்லராகில்
மார்க்கண்டேயன் கண்டவகையே ஸித்திக்கும்,“ என்றிருக்கும் ஸ்ரீஸூக்திகளில் உள்ள மோக்ஷ சப்தம்
பரமபதாநாநுபரூபமான மோக்ஷத்தைக் குறிப்பதன்று–ஒரு தேசவிசேஷத்தைக் குறிக்கொண்டு கீதையிற் சொன்ன கட்டளையிலே,
இந்த தேசத்திலேயே ம்ருத்யு இல்லாமையாகிற மோக்ஷத்தைச் சொல்லுகிறதென்று கொள்க.
மார்க்கண்டேயன் தான் சிரஞ்ஜீவியா யிருக்கவேணுமென்று உபாஸித்தவனாக இதிஹாஸபுராணங்களிற் வுறப்படுகிறானேயன்றி,
புரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தை விரும்பின்னாகக் வுறப்பட்டிலன்.
பெரிய திருமொழியில் (5-8-6) “மன்னு நான் மறை மாமுனி பெற்ற மைந்தனை….. பின்னையென்றும்
நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பொருள்“ என்றவிடத்து வியாக்கியானத்திலும் இது ஸ்பஷ்டம்.
அந்த வியாக்கியானமருளிய பெரியவாச்சான் பிள்ளை தாமே இவ்விடத்தில்
“மார்க்கண்டேயன் மஹாதேவனை மோக்ஷார்த்தமாகச் சென்று ஆச்ரியிக்க“ என்றது ருத்ரனைப் பற்றின பரிஹாஸோக்தியாக விடுக்கும்.
“ இவன் ஒரு மஹா தேவனாம், இவனிடத்தில் ஒரு பெரிய மோக்ஷத்தை விரும்பி ஒருவன் வந்து பணிந்தானாம், அப்பப்ப!
இந்த மோக்ஷம் நம்மாலாகாது என்று வேற்றுவாசல் காட்டினானாம்“ என்று பரிஹஸித்துச் சொன்னவாறு.

நீற்கண்டன் – “நீலம்“ என்ற வடசொல் “நீல்“ என்று சிதைந்து நீற்கண்டனென்றாயிற்று.
“நீலார் கண்டத்தம்மான்“ என்ற திருவாய்மொழி காண்க. அன்றியே,
“நீர்க்கண்டன்“ என இடையின ரகரப்படாங்கொள்ளில், விஷஜலத்தைக் கழுத்திலே கொண்டவனென்றதாகும்.
மார்க்கண்டன் – “மார்க்கண்டேயன்“ என்ற வடசொற்சிதைவு.

இப்பாட்டின் பின்னடிகட்கு மற்றும் பலவகையாகக் கருத்துக்கூற இடமுண்டு. வல்லார் வாய்க் கேட்டுணர்க.

——————————————————————————-

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

பதவுரை

அந்நான்று–பாரத யுத்தம் நடந்த அக்காலத்து
தேவர் தலை மன்னர் தாமே–தேவாதி தேவனான தானே
மாற்று ஆக–எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர்–பல அரசர்கள்
போர்–யுத்தக்களத்தில்
மாள–மடிந்து
வெம் கதிரோன்–ஸூர்யன்
மாய–(அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய–பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே
என் நெஞ்சம்–எனது (சஞ்சமான) மனமானது
நிலை மன்னும்–சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.

அலைபாய்ந்து கொண்டிருந்த என் மனமானது எம்பெருமான் ஆச்ரிதர்க்காக உழைக்குந் தன்மைகளைக் கேட்டறிந்தவாறே
“இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு அடிமைப் பட்டவர்களாக நாம் அமைந்துவிட்டோமான பின்பு இனி நமக்கு யாது கவலை?
என்று தேறி நிலைபெற்று விட்டதென்கிறார்.
“அந்நான்று…தேராழியால் மறைத்தாரால் என்னெஞ்சம் நிலைமன்னும்“ என்று அந்வயம்.

“தேவர் தலைமன்னர்“ என்றது எம்பெருமானை, “***“ என்றும்
“அயர்வறும்மரர்களதிபதி“ என்றும் சொல்லுகிறபடியே.

தாமே மாற்றாக – துர்யோதநாதிகளை எம்பெருமான் பாண்டவர்களின் சத்துருக்களென்று நினைத்திலன்,
தன்னுடைய சத்துருக்களென்றே நினைத்தான், இது எங்ஙனே தெரிகின்றதென்னில்,
தூ து எழுந்தருளினபோது விதுரர் திருமாளிகையிலே அமுது செய்துபோக, அஃதறிந்த துர்யோதனன்
(பிஷ்மாசார்யரையும் த்ரோணாசார்யரையும் என்னையும் விட்டுப் பள்ளிச்சோற்றை ஏன் உண்டாய்?) என்று கண்ணபிரானைக் கேட்க,
அதற்கு உத்தரமருளிச் செய்வது காண்மின் –
(சத்ருவின் சோற்றையும் உண்ணலாகாது, சத்ருவுக்குச் சோறும் இடலாகாது, எனது உயிர்நிலையாகிய பாண்டவர்களை
“நீ த்வேஷிப்பதனால் எனக்கு சத்துருவே, ஆனதுபற்றியே உன்னிடம் நான் உண்ணவரவில்லை) என்றான்.
ஆகவே, ஆச்ரிதர்களுடைய பகைவர்களைத் தன்னுடைய பகைவர்களாகவே கொள்ளும் எம்பெருனுடைய அபிஸந்தியை அறிந்து
இங்கு “தாமே மாற்றாக“ என்றருளிச் செய்தாரென்க.
* மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றம் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்ததன்
சிலைவளையத் திண்டோமேல் முன்னின்றதுபற்றிப் “பலமன்னர் போர்மாள“ என்றருளிச் செய்யப்பட்டது.

வெங்கதிரோன்மாயப் பொழில்மறையத் தேராழியால் மறைத்த வரலாறு வருமாறு –
அர்ஜுநன் பதின்மூன்றாநாட் போரில் தன் மகனான அபிமந்யுவைக் கொன்ற ஜயத்ரதனை மறுநாள் ஸூர்யன்
அஸ்தமிப்பதற்கு முன்னே கொல்வதாகப் பல பிரதிஜ்ஞைகள் செய்ய, அது நிறைவேறக் கூடாதென்று
அந்த ஜயத்ரதனை எதிரிகளால் உட்புக முடியாதபடியாக வ்யூஹத்திலே நிறுத்திக் காப்பாற்றிக் கொண்டிருந்த ராஜாக்கள் முன்னே,
ஸ்ரீகிருஷ்ணன் பகல் நாழிகை முப்பதும் சென்றதாகத் தோன்றும்படி, நினைவறிந்து காரியஞ்செய்யும் தனது சக்கராயுதத்தைக் கொண்டு
ஸூர்யனை மறைக்க, “ஆதித்யன் அஸ்தமித்தான், இனிநமக்குப் பிராணபயமில்லை, அர்ஜுநன் பிரதிஜ்ஞை செய்திருக்கிறபடியே
அக்நி ப்ரவேசம் செய்யப்போவதைக் கண்டு களிப்போம்“ என்றெண்ணி ஜயத்ரதன் வெளிப்பட்டு நின்றவளவிலே
கண்ணபிரான் ஸுதர்ச நாழ்வானை மீட்டுக்கொள்ள, ஸூர்யன் இன்னும் அஸ்தமிக்கவில்லை யென்று உணர்ந்து கொண்ட
அர்ஜுநன் உடனே தனது அம்பைக் கொண்டு அந்த ஜயத்ரதனைத் தலையறுத்துவிட்டனன் என்பதாம்.

கோடிஸூர்ய ப்ரகாசான திருவாழியைக் கொண்டு ஸூர்யனை மறைத்தல் எங்ஙனம் கூடுமெனின்,
ஸூர்யனுடைய ஒளி கண்ணாலே காணலாம்படி அளவுபட்டிருத்தலால் இருட்டைப் போக்கும், அப்படியல்லாமல்
திருச் சக்கரத்தினொளி நேராகக் கண்கொண்டு பார்க்கமுடியாதபடி அளவுபடாத மிக்க பேரொளியைக் கொண்டுள்ளதனால்
பளபளத்துக் கண்களை இருளப் பண்ணுமெனச் சமாதானங் கூறுவர் பெரியார், மற்றுஞ் சில வகையான ஸமாதானங்களும் கூறுவாருளர்.

13 நாள் போரில் தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜெயத்ரனை ஆழி  கொண்டு ஸூர்யனை மறைத்து அர்ஜுனன் கொன்றானே
கண்ணாலே காண முடியாத பேர் ஒளி கொண்டு பளபளத்து கண்களை இருள பண்ணினான் என்றவாறு-

———————————————————————————-

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

பதவுரை

மெய் தவத்தோன்–மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை–உலகளந்தவனும்
ஆழிக் கிடந்தானை–க்ஷீராப்திசாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை–ஆலிலே மேல் கண் வளர்ந்தவனை
தான் வணங்கும் ஆறு–தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை–நல் வழியை
மேலை யுகத்து–முன் யுகத்திலே
ஆல நிழல்கீழ்–ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு–நான்கு மஹர்ஷிகளுக்கு
உரைத்தான் உபதேசித்தான்.

எம்பெருமானுடைய பரத்துவம் இன்று நான் சொல்ல வேணுமா? ஸர்வஜ்னான சிவபிரான் தானே ஸ்வ சிஷ்யர்களுக்கு
உபதேசித்த விஷயமன்றோ விது என்கிறார். சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற
நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக்கொண்டு ஒரு ஆலமரத்தின் அடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம்
செய்தானென்று நூல்கள் கூறும்.
“ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த ஆலம்மர் கண்டத்தரன்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரமுங் காண்க.

தாமஸ ப்ரக்ருதியாய் அஹங்காரிகளில் தலைவனான ருத்ரன் எம்பெருமானுடைய உண்மை நிலையைத் தான் எங்ஙனே அறிதான்?
அறிந்தாலும் பிறர்க்கு அதை உபதேசிக்கும்படியான ஹ்ருதய பரிபாகத்தை எங்ஙனே பெற்றான்? என்று கேள்வி கேட்பார்க்கு ஸமாதாநமாகும்படி
“மெய்த்தவத்தோன்“ என்ற பெயரால் ருத்ரனைக் குறிப்பிடுகின்றார். எம்பெருமானைப் பற்றின தத்துவ்வுணர்ச்சி தனக்கு
ஸித்திக்கவேணுமென்று மெய்யே தவம்புரிந்து அத்தவப்பயனாக பகவத் தத்வஜ்ஞாநம் பெற்றவன் என்றபடி.
அவன் நால்வர்க்கு உரைத்த அர்த்தம் யாதெனில், (தான் வணங்குமாறு.)
“நானும் தலைசாய்க்கப் பெற்ற திருவடித் தாமரைகளையுடையவன் காண்மின் ஸ்ரீமந்நாராயணன்,
அவன் உலகங்களையெல்லாம் தன் திருவடிக்கீழ் அகப்படுத்திக் கொண்டவன், திருப்பாற்கடலிலே உறங்குவான்போல்
யோகு செய்து கொண்டிருந்து ஆர்த்தரக்ஷணம் செய்தருள்பவன், பிரளய வெள்ளத்திலே நானுமுட்பட ஸகல பதார்த்தங்களும்
அழிந்து போவதா யிருக்கையில் எல்லாவற்றையும் வாரிவிழுங்கி ஆலந்தளிரிலே திருக்கண்வளர்ந்த அற்புத சக்திவாய்ந்த்வன்“ என்று
உபதேசிப்பனாம் என்பது பின்னடிகளில் தேறுங்கருத்து.

மெய்த்தவத்தோன் –ப்ரஹ்ம ஞானம் பெற மெய்யே த்வம் புரிந்து அதன் பயனாக தத்வ ஞானம் பெற்றவன் –
மேலை யுகத்து -முந்திய யுகத்தில் –

—————————————————————————————————–

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

பதவுரை

மாறு ஆய–எதிரிட்டு நின்ற
தானவனை–ஹிரண்யாஸுரனுடைய
மார்வு–மார்வை
வள் உகிரால்–கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய–இரு பிளவாகப் பிளந்த
கோள் அரியை–பெரு மிடுக்கனான நரசிங்க மூர்த்தியை
வேறு ஆக–விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை–துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே–அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்.

பாகவத சேஷத்வ நிஷ்டை சிறந்தது என்பதை அருளிச் செய்கிறார் -பந்த மோக்ஷம் இரண்டுக்கும் இல்லாமல்
மோக்ஷ ஏக ஹேதுவாகவே இருக்குமே –
சங்கை இல்லாமல் மார்பிலே கை வைத்து உறங்கலாம் –
ஏத்தி இருப்பாரை -அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுதுமே-என்று
மங்களா சாசனம் பண்ணி இருக்கும் பகவத் பக்தர்களை –
மற்று அவரைச்-சாத்தி இருப்பார் தவம் வெல்லும் -பாகவத பக்தர் நிஷ்டை வெல்லும் –
ததீயரை புருஷகாரமாக மாத்திரமே இல்லாமல் அவர்களையே உத்தேசியராக பற்றுதல் சிறந்தது என்றவாறு –

எம்பெருமானிடத்தில் நிஷ்டை யுடையராயிருப்பதற்காட்டிலும் பாகவதர்கள் பக்கலில் நிஷ்டை யுடையராயிருப்பதே சிறந்தது
என்று ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருள் ஒன்றுண்டு, அதனை வெளியிடும் பாசுரம் இது.
கருமங்களுக்கிணங்க ஸம்ஸாரியாக்கவும் அருளுக்கிணங்க ஸம்ஸார நிவ்ருத்தியைப் பண்ணித்
திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவுமு வல்ல ஸ்வதந்த்ரனான ஈச்வரனைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கும் மோக்ஷப்ராதிக்கும் பொதுவாயிருக்கும்.
அங்ஙனன்றியே பாகவதரைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கு ஒருகாலும் ஹேதுவாகாதே மோக்ஷப்ராப்திக்கே உறுப்பா யிருக்குமென்பது
(எம்பெருமானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமுண்டு, பாகவதர்களைப் பற்றினவர்கள் ஸந்தேஹப் படாமல்
மார்வில் கைவைத்து உறங்கலாம்) இத்யாதி ப்ரமாண ஸித்தம்.
சத்ருக்நாழ்வான், ஸ்ரீமதுரகவிகள், வடுகநம்பி போல்வார் இவ்வர்த்தத்திற்கு உதாஹரண பூதர்கள்.

“மாறாயதானவனை“ என்று தொடங்கி “ஏத்தியிருப்பாரை“ என்கிறவரையில் பகவத் பக்தர்களைச் சொன்னபடி.
தனக்கு உயிர்நிலையான ப்ரஹ்லாதாழ்வானுக்குப் பகைவனான இரணியனைத் தன் பகைவனாகப் பாவித்து அவனது மார்பைக்
கூர்மையான நகங்களாலே இருபிளவாகப் பிளந்த நரசிங்கமூர்த்தியை
“அந்தியம்போதி லரியுருவாகி யரியை யழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும்“ என்றுகொண்டு
வாழ்த்தியிருக்கும் பகவத் பக்தர்களை, –
மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் வெல்லும் – பகவத் பக்தர்களின் நிஷ்டையை பாகவத பக்தர்களின் நிஷ்டை தோற்கடித்துவிடும்.
எனவே, பகவத் பக்தியிற் காட்டிலும் பாகவத பக்தியே சிறந்தது என்றதாயிற்று. இங்கு விரித்துரைக்க வேண்டுமவற்றை யெல்லாம்
ஸ்ரீவசநபூஷணஸாரத்தில் சரமப்ரகரணத்திற் பரக்கச் சொன்னோம். அங்கே கண்டு கொள்க.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.

————————————————————————————–

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

பதவுரை

தவம் செய்து–தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்–பிரமனிடத்து
பெற்ற–(ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை–வரங்களை
அவம் செய்த–பழுதாக்கின
ஆழியாய்–திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை–அடியோங்களை
உவந்து–திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே–காத்தருள்பவன் நீயே யன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே–காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீ யன்றோ,
எவ் உயிர்க்கும்–(உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்–பரம பதத்தை
ஈப்பாயும்–அளிப்பவனும்
நீ அன்றே–நீ யன்றோ.

ஹிரண்யாதிகளுக்கு பிரமன் கொடுத்த வரங்களினால் கொடுமை செய்யும் அஸூர பிரக்ருதிகளை -களைந்து ஒழித்து
வரம் கொடுத்த இவர்கள் குடி இருப்பையும் அளித்து ரக்ஷித்து அருள்பவன் ஸ்ரீ மன் நாராயணனே –
இதற்கு ஸாமக்ரி திரு வாழி ஆழ்வான் -என்கிறார்
திரு உள்ளம் உகந்து ரஷிப்பவன்- -ரக்ஷிக்க சங்கல்பம் யுடையவனும் நீயே –
ஆஸ்ரயித்த சகல ஆத்மாக்களுக்கு பரமபதத்தை அளிப்பவனும் நீயே அன்றோ –

இரணியன் முதலிய ஆஸுரப்க்ருதிகள் பிரமன் முதலிய தேவர்களைக் குறித்து ஸ்வல்பம் ஸ்தோத்ரம் பண்ணிவிட்டால்
தலைகால் தெரியாமல் உவந்து எல்லையில்லாதபடி வரங்களை அளித்துவிட்டுப் பிறகு தங்களுக்கே நேரும் அநர்த்தங்களைப்
பரிஹரித்துக் கொள்ளமாட்டாமல் கண்ணீர் விழவிட்டுக் கையைப் பிசைந்துக்கொண்டு நிற்பர்கள் அந்த ப்ரஹ்மாதி தேவர்கள்.
அன்னவர்களது ஆபத்தை அகற்றியருள்வான் எம்பெரான் – என்பதை முன்னடிகளில் அருளிச்செய்து,
இப்படிப்பட்ட நீயே எனக்கு எல்லாவபேக்ஷிதங்களையும் தலைக்காட்டித் தந்தருளவேணுமென்கிறார் பின்னடிகளில்.

“தவஞ்செய்து நான்முகனால் பெற்றவரத்தை“ என்றவிடத்து “இன்னார் பெற்ற வரம்“ என்பது சொல்லப் படவில்லையாயினும்,
இரணியன் முதலானோர் பெற்ற வரம் எனக்கொள்க.
அவர்கள் பெற்ற வரத்தை அவம் செய்கையாவது – நல்ல உபாயங்களினால் அவ்வஸுரர்களைக் களைந்தொழித்தல்.
வரங்கொடுத்த தாங்களே குடியிருப்பை யிழந்து வருந்தின வளவிலே வரம்பெற்றவர்களையுங் கொன்று
வரமளித்தவர்களையும் காத்தருள்பவனிறே ஸ்ரீமந்நாராயணன். இதற்கு ஸாமக்ரி திருவாழியாழ்வானென்க.

——————————————————————————-

சகலமும் எம்பெருமானாகவே இருக்கும் படியை அருளிச் செய்கிறார் —

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தேவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

பதவுரை

உலகு எல்லாம் நீயே–உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்–உலகங்கள் ஸத்தை பெற்று நிற்பதும்
நின் அருளே–உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே–தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்–ஜவுலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து–ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை–ஆகிய இவை யெல்லாம்
நீயே–நீயே காண்.

ஸகலமும் எம்பெருமானாகவே யிருக்கும்படியை யருளிச் செய்கிறாரிதில்.
“உலகெல்லாம் நீயே“ என்றது – உலகமெல்லாம் உன்னுடைய ஆளுகையில் அடங்கியுள்ளது என்றபடி.
நிற்பனவும் நின்னருளே – அவ்வப்பொருள்கள் அழியாதே ஸத்தை பெற்றிருப்பதும் நித்யமாயிருப்பதும் உன்னருளாலே.
தவத் தேவ தேவனும் நீயே – எவ்வளவோ தவங்கள் செய்து ப்ரஜாபதி யென்றும் பசுபதியென்றும் பேர்பெற்றிருக்கும் தேவர்கட்கும் தேவன் நீ;
யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ என்றவாறு.

———————————————————————————

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

பதவுரை

திறந்து–விரிந்து
எரி கான்ற–நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்–பாழி போன்ற பெரியவாய்
இவையா–இதுவோ!
எரி வட்டம்–கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்–திருக் கண்கள்
இவையா–இவையோ!
எரி–அக்நி போலே
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன்
அரி–நரசிங்க மூர்த்தியாய்
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–காட்டின
அழகு-அழகு
இவையா–என்ன விஷயம்!

திறந்து எரி கான்ற–பிலவாய் -இவையா -அளவுகடந்த சீற்றத்தால் திருவாய் விரிந்து அழலை உமிழ்ந்ததை பேசுகிறார் –காலுதல் -வீசுதல் –
எரிவட்டக் கண்கள் -இவையா–தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -என்பது
ஆஸ்ரித அன்பர்களைக் காணும் பொழுது -ஆஸ்ரித விரோதிகளை கண்டால் கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்குமே -‘
இன்றைக்கும் சீற்றம் மாறாமல் இருக்கிறானே என்கிறார் –
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்-அக்னி போல் கிளர்ந்து தோன்றின திருமேனியை யுடையனாய்
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆன சர்வேஸ்வரன்
இமையோர்க்கும் விசேஷணம் ஆக்கவுமாம்-அப்பொழுது ஹோம ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ள வரும் இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் என்றவாறு –
அரி பொங்கிக் காட்டும் அழகு-சத்ருக்களுக்கு தான் பயங்கரம் –ஆஸ்ரித அன்பர்களுக்கு பரம போக்யம் -என்றவாறு –

நரஸிம்ஹாவதாரம் என்றைக்கோ நடந்த்தாயினும் பாவநாப்ரகர்ஷத்தாலே அது ப்ரத்யக்ஷம்போல் தோற்றுமே ஆழ்வார்க்கு,
அப்படியே தோற்ற, ஆச்ரிதர்களுக்கு விரோதம் செய்பவர்மேல் எம்பெருமானுக்கு உண்டாகும் சீற்றம் என்ன அற்புதமானது! என்று அநுஸந்தித்து,
“எம்பெருமானுடைய தெளிவைக் காட்டிலும் சீற்றமே பக்தர்கட்குச் சரணம்“ என்னுமர்த்தம் விளங்கும்படியாகப் பேசுகிற பாசுரம் இது.

திறந்து எரிகான்ற பிலவாய் இவையா! – தூணில் நின்றும் தோன்றினவாறே இரணியன் மேலுண்டான அளவுகடந்த சீற்றத்தினால்
திருவாயானது விரிந்து அழலை உமிழ்ந்ததே, அதனைப் பேசுகிறார், நெருப்பைக் கக்கீன திருவாய் இதுதானோ என்கிறார்.
“கான்ற“ என்ற பெயரெச்சத்தில், கால் – வினைப்பகுதி. காலுதல் வீசுதல்.

எரிவட்டக்கண்கள் இவையா – 1. “தூயாய் சுடர் மாமதி போல் உயிர்க்கெல்லாம், தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணா!“
என்னும் படி திருக்கண்கள் குளிர்ந்திருப்பது அன்பர்களைக் காணும்போது, அன்பர்க்குத் துன்பம் செய்யுமவர்களைக் காணும்போது
கொள்ளிவட்டம்போல் உருண்டு சிவந்து ஜ்வலிக்குமே, அப்படி ஜ்வலித்த திருக்கண்களோ இவை!,
இத்திருக்கண்களில் இன்றைக்கும் சீற்றம் மாறவில்லையே யென்கிறார்போலும்.

ஆக முன்னடிகளால், திருவாயும் திருக்கண்களாமாகிற அவயவங்களுக்கு உண்டான விக்ருதியைப் பேசினார்.
இனி பின்னடிகளால், அவயவியான நரஸிம்ஹமூர்த்தியின் கிளர்ச்சியைப் பேசுகிறார்.
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான் – “எரிபொங்கிக்காட்டும்“ என்பதை பெருமானுக்கு விசேஷணமாக்கிப் பதவுரை வரையப்பட்டது.
அன்றியே, இமையோர்க்கு விசேஷண மாக்கியும் உரைக்கலாம். ஹோமகாலத்திலே வைதிகர் கொடுத்த ஹவிஸ்ஸை அக்நியானது
ஸ்வீகரித்துக்கொண்டு பெரிய கிளர்த்தியோடே போய் ஸமர்ப்பிக்கும்படி யிருக்கிற
இந்திரன் முதலிய தேவர்களுக்கு நிர்வாஹகன் என்று பொருளாகும்.
(எரி – அக்நி தேவதையானது, பொங்கி – கிளர்ந்து, காட்டும் – ஹவிஸ்ஸைக் கொண்டு கொடுக்கப் பெறுகின்ற, இமையோர் என்கை.)

நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி
அன்பர்கட்குப் பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க.

——————————————————————————————

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

பதவுரை

தான் ஏழ் உலகுக்கும் வித்து–தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்–ஆச்ரயபூதனாய்
குழவி ஆய்–(பிரளய காலத்தில்) சிறு குழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்–(பின்பொருகால்) மத்ஸ்ய ரூபியாய்க் கொண்டும்
உயிர் அளிக்கும்–ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே–எம்பெருமான் தானே
தன்மைக்கும்–(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்–நரசிங்கவுருக் கொண்டவன்
தானே அழகியான்–அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்–புராண புருஷனாகிய அப்பெருமானுடைய
தாளே–திருவடிகளையே
பணிமின்–ஆச்ரயியுங்கோள்

தானே காரணமாய் -எல்லா அவஸ்தைகளிலும் அநாதி காலமாக ரக்ஷித்து —
ஸ்ருஷ்டி -அவாந்தர பிரளயத்தில் திரு வயிற்றில்
வைத்து ரக்ஷித்து – ஆலிலை துயின்று -மன்வந்த்ர பிரளயத்தில் மத்ஸ்ய ரூபியாய் தோன்றி ரக்ஷித்து
சிறுக்கனை ரக்ஷிக்க அவன் வீயத் தோன்றி -அருளும் சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்க பரோபதேசம்  பண்ணுகிறார்
அவன் திரு அழகை மீண்டும் வாய் வெருவுகிறார்“அழகியான் தானே அரியுருவன் தானே“ என்று.

நம்முடைய புத்திக்கு எட்டாத அநாதிகாலந் தொடங்கிப் பலவகைகளால் ரக்ஷணம் செய்துகொண்டு வருதல் பற்றி
எம் பெருமானுக்குப் “பழகியான்“ என்று திருநாமமிட்டனர்.

ஒரு த்ரவ்யத்தைப் பற்றியிருக்கும் குணத்திற்குத் “தன்மை“ என்று பெயர்,
அக்குணத்திற்கு ஆச்ரயமான குணிக்குத் தன்மையன் என்று பெயர். புஷ்பம் என்கிற த்ரவ்யத்திற்கு மணம் குணமாயிருக்கின்றது.
அந்த மணத்திற்குப் புஷ்பம் ஆச்ரயமாகையாலே புஷ்பம் குணியெனப்படும். இப்படியே எங்குங் கண்டுகொள்க.
இங்கு “தன்மைக்கு தன்மையன்“ என்றது – நிலம் நீர் தீ கால் முதலிய பூதங்களின் குணங்களாகீய மணம் சுவை
முதலியவற்றுக்கெல்லாம் தானே ஆச்ரயமாயிருப்பவனென்கை.
1. “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்“ என்கிறபடியே பஞ்சபூதாதிகளும் தானேயாயிருப்பவன் என்றவாறு.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “தன் பக்கலிலே வைக்கும்“ என்று ஒரு வாக்கியம் காண்கிறது.
அதனால் “தன் வைக்குந்தன்மையனே“ என்றும் பாடமிருந்ததாகத் தெரிகின்றது.

ஏழு உலகுக்கும் தான் வித்தாய் -அவ் உலகங்களை தன்னுள்ளே -வைக்கும் தன்மையனாய் –
பிரளயத்தில் அழியாத படி அடக்கி வைக்கும் குணம் யுடையவன் -என்றபடி

——————————————————————————————

நாம் அறிந்த நிலையிலும் -அறியாத நிலையிலும் எம்பெருமான் தானே நம் உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணுமவனுமாய் இருக்க
நாமும் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ -என்கிறார்

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பதவுரை

விடை அடர்த்த–(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும்
பத்தி உழவன்–(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து–(ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ–(ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்)
மொய்த்து எழுந்த–திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன–காளமேகம் போன்ற
கரு மால்–கரிய திருமாலினது
திரு மேனி–திருமேனியை
நீர் வானம்–நீர்கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து–எதிரே நின்று
காட்டும்–காண்பிக்கும்
(போலி கண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.)

நாம் அறிந்த நிலைமையிலும் அறியாத நிலைமையிலும் எம்பெருமான் தானே நம்முடைய உஜ்ஜீவநத்திற்கு
க்ருஷிபண்ணு மவனாயிருக்க, நாமும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமா, வேண்டா என்கிறார்.

ஸ்ரீவைகுண்டத்திலே எம்பெருமான் நித்யர்களோடும் முக்தர்களோடுங் கூடிப் பரிபூர்ணாநுபவம் பெறாநிற்கச் செய்தேயும்
அதனால் அப்பெருமான் சிறிதும் மகிழாது, பல பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பானார், தனது ஒருமகன் மாத்திரம்
தேசாந்தரத்திலிருக்க மற்ற எல்லாப் புத்திரர்களோடுங் கூடி வாழா நின்றாலும் அதனால் மகிழ்ச்சியடையாமல்
தேசந்தரத்திலுள்ள புத்திரனது பிரிவையே நினைத்துப் பரிதபிக்குமாபோலே எம்பெருமானும் ஸம்ஸாரிகளான
அஸ்மதாதிகளின் பிரிவையே நினைத்துப் பரிதாபமுற்று நம்மோடே கலந்து பரிமாறுவதறகாகக் கரண களே பரங்களை
நமக்குத் தந்தருளி அவற்றைக்கொண்டு நாம் காரியஞ் செய்யும்படியான சக்தி விசேஷங்களையும் நமக்குக் கொடுத்து,
மிகவும் அஹங்காரிகளான நம்மெதிரில் தான் ப்ரத்யக்ஷமாகவந்து நின்றால் நாம் பொறாமைகொண்டு ஆணையிட்டாகிலும்
தன்னைத் துரத்திவிடுவோமென்றெண்ணி ஒருவர் கண்ணுக்குந் தோற்றாதபடி, உறங்குகிற குழந்தையைத் தாயானவள் முதுகிலே
அணைத்துக்கொண்டு கிடக்குமாபோலே எம்பெருமான்றானும் தானறிந்த ஸம்பந்தமே காரணமாக நம்மை விடமாட்டாமல்
அந்தர்யாமியாயிருந்து தொடர்ந்துகொண்டு நம்பை பொருகாலும் கைவிடாமல் ஸத்தையை நோக்கிக் கொண்டு
நமக்குத் துணையாய்ப் போருமளவில், நாம் கெட்ட காரியங்களிலே கை வைத்தோமாகில் நம்மைத்திருப்ப மாட்டாமல்
அநுமதிபண்ணி உதாஸீநரைப்போலேயிருந்து திருப்புகைக்கு இடம் பார்த்துக்கொண்டேயிருந்து,

நாம் செய்கிற தீமைகளில் ஏதேனுமொரு தீமையாவது – விஷயப்ரணனாய் வேசிகளைப் பின்தொடர்ந்து அடிக்கடி
கோவில்களிலே நுழைந்து புறப்படுகை, வயலில் பட்டிமேய்ந்த பசுவை அடிப்பதாகத் துரத்திக்கொண்டு போம்போது
அது ஒரு கோவிலைப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு ஓடுகிறவளவிலே அதைவிடமாட்டாத ஆக்ரஹத்தாலே தானும் அக்கோவிலை வலஞ்செய்க; (
சிசுபாலாதிகளைப்போலே) நிந்தை செய்வதற்காகத் திருநாமங்களைச் சொல்லுகை முதலியன. –
நன்மையென்று பேரிடக்கூடியதா யிருக்குமோவென்று பார்த்துவந்து அப்படிப்பட்ட தீமைகளைக் கண்டுபிடித்து
“என் ஊரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய், என்னடியாரை ரக்ஷித்தாய், அவர்கள் விடையைத் தீர்த்தாய்,
அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்“ என்றப்படி சில ஸுக்ருதங்களை ஏறிட்டு மடிமாங்காயிட்டு
யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்கிற ஸுக்ருத விசேஷங்களைத் தானே கல்வித்தும்
அப்படி கல்வித்தவற்றை ஒன்றை அனேகமாக்கியும் நடத்திக்கொண்டு பொருவன் – என்பது சாஸ்த்ரமுகத்தால் நாம் கண்டறிந்த விஷயம்.

யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்னப்படுகிற ஸுக்ருதங்கள் எவையென்னில்,
அவ்வூர் இவ்வூர் என்று நாம் பல ஊர்களையும் வம்புக்காகச் சொல்லுமாளவிலே
“குருவிமலே, பரங்கிமலை, திருவேங்கடமலை“ என்று வாயில் வந்துவிட்டால்
இவ்வளவே பற்றாசாக “என் ஊரைச் சொன்னான்“ என்று எம்பெருமான் எழுதிக்கொள்வன்,

அவன் இவன் என்று பல பேர்களையும் சொல்லிக்கொண்டு வருமடைவிலே சில பகவந் நாமங்களும் கலந்து வந்துவிட்டால்
“என் பேரைச் சொன்னான்“ என்று கணக்கிடுவன், சில பாகவதர்கள் காட்டிலே வழிபோகா நிற்கையில் அவர்களை
ஹிம்ஸித்துக் கொள்ளையடிக்க வேணுமென்று சில கள்ளர் முயன்றிருக்குமளவிலே, ஏதோ தன் காரியமாக வழிபோகிற ஒரு சேவகன்
அவர்கள் பின்னே தென்பட, அவனை அந்த பாகவதர்களின் ரக்ஷணத்திற்காக வந்தவனாக நினைத்து அக்கள்ளர் அஞ்சி
அப்பால் போய்விட அதுவே பற்றாசாக அந்த சேவனை “என்னடி யாரை நோக்கினவன் இவன்“ என்று எழுதிக்கொள்வன்,
ஒருவன் வேனிற் காலத்திலே தன் வயல் தீய்ந்து போகாநிற்கையில் நீருள்ள விடத்தில் நின்றும் வயலிலே பாய
நெடுந்தூரத்திலே ஏற்றமிட்டு இறையாநிற்க, பாலை நிலத்தில் நடந்து விடாய்த்து இளைத்துவருகிற சில பாகவதர்கள்
அவனறியாமல் அந்த நீரிலே இளைப்பாறிப் போனால் அது காரணமாக “என்னடியாருடைய விடாயைத் தீர்த்தானிவன்“ என்று கணக்கிடுவன்.
ஒருவன் தனக்குச் சூது சதுரங்கமாடுவதற்கும் காறு வேண்டினபோது வந்து உலாவுகைக்கும் புறந்திண்ணை கட்டிவைக்க,
மழையிலோ வெய்யிலிலோ வருந்தின சில பாகவதர்கள் அத்திண்ணையிலே வந்து ஒதுங்கியிருந்து போக,
அதுகொண்டு “என்னடியார்க்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தான்“ என்று கணக்கிடுவன்,
இப்படியாக நாமறியாமல் எம்பெருமானே ஏறிடும் ஸுக்ருதங்களே யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் எனப்படும்.

இப்படி அஜ்ஞாத ஸுக்ருதங்களையாகிலும் ஹேதுவாகக் கொண்டு எம்பெருமான் கடாக்ஷிப்பனாகில்
அந்த கடாக்ஷம் ஸஹேதுகமாகாதோவென்னில், ஆகாது, இந்த யாத்ருச்சிகம் முதலிய ஸுக்ருதங்களுமுட்பட நமக்குண்டாம்படி
ஆதியிலே கரணகளே பாங்களைக் கொடுத்து ஸ்ருஷ்டித்தவன் எம்பெருமானாகையாலே, கடாக்ஷஹேதுவாகச் சொன்ன
அஜ்ஞா தஸுக்ருதங்களும் அவனுடைய க்ருஷிபலமேயாம்.

(ஸ்ருஷ்டிப்பது சேதநருடைய கருமங்களுக்குத் தகுதியாகவன்றோவென்னில், ஸ்ருஷ்டிப்பது கருமத்தைக் கடாக்ஷதித்தேயாகிலும்
அவரவர்களுடைய கருமபரிபாகத்துக்குத் தகுந்தபடி வெவ்வேறு காலங்களிலே ஸ்ருஷ்டிக்கவேண்டியிருக்க,
ஏக காலத்திலே ஸ்ருஷ்டித்தது அநுக்ரஹ காரியமென்பர்.)

அசித்தோடு வாசியற்றுக் கிடக்கிற நிலைமையிலே உஜ்ஜீவநத் துக்கு கருவியான கரணகளேபரங்களைப் பேரருளாலே
அவன் தந்தபடியே அநுஸந்தித்தால், நம் உஜ்ஜீவனத்தில் அவன் செய்தபடி பார்த்துக்கொண்டிருப்பது தவிர நாம்
ஒரு முயற்சியும் பண்ணவேண்டாதபடியா யிருக்கும். புதிசாகத் தரிசு திருத்தின தல்லாமல் பழையதாக உழுவது நடுவது
விளைவதாய்க்கொண்டு போருகிற ஒரு கேஷத்ரத்திலே உழவனானவன் அதுக்கென்று ஒரு க்ருஷியும் பண்ணாதிருந்தாலும்
உதிர்ந்த்தானியமே முளைத்து விளைந்து தலைக்கட்டுமா போலே, அஜ்ஞாத ஸுக்ருதங்கள் நம்மிடத்திலே தன்னடையே
விளையும்படியாகவன்றோ பத்தியுழவனென்று சொல்லப்படுகிற ஈச்வரன் அநாதிஸம்ஸாரத்தை ஸ்ருஷ்டித்துத் திருத்தி நட்த்திப் போருவது.

இப்படிப்பட பத்தியுழவன் பழம்புனத்தில் நாமும் வித்து இடவேண்டுமோ? நாமும் உபாயாநுஷ்டாநம் பண்ணவேணுமோ?
எம்பெருமானுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான நம்முடைய ப்ரவ்ருத்தியை நாம் நிறுத்திக் கொள்வதன்றோ நமக்கு நன்மை என்றவாறு.

விடையடர்த்த வரலாறு – கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்த்தனால்
நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை
கந்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான்
ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டான்.

ஆழ்வார் எம்பெருமானுக்குப் பத்தியுழவன் என்று திருநாமமிட்ட அழகை என்சொல்வோம்!.
தன் விஷயத்தில் நமக்கு பக்தி யுண்டாவதற்குத் தானே க்ருஷி பண்ணுகிறானாம் எம்பெருமான்.
அந்த க்ருஷியாவது ஸ்ருஷ்டியவதாராதிகள் என்க.

இனி முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி (சேர்த்தி) யாதென்னில், –
பத்தியுழவன் பழம்புனத்தில் நாம் வித்து இட வேண்டாவாகில் அப்படியே ஆகுக, எம்பெருமானே க்ருஷி பண்ணட்டும்,
அந்த க்ருஷி பலித்து நாம் பரமபதஞ்சென்று நித்யாநு பவம் பண்ணுவதென்பது விரைவில் நடைபெறக் கூடியதன்றே,
சிறிது காலவிளம்பமாகுமே, அதுவரையில் நமக்குப் போது போக்கு யாதென்ன,
1. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றுங் காண்டோறும் – பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும்,
அவ்வவையெல்லாம் பிரானுருவேயென்று“ என்றும்
2. “மேகங்களோ வுரையீர், திருமால் திருமேனியொக்கும் யோகங்கள் உங்களுக்கெவ்வாறு பெற்றீர்?“ என்றும்,
3. “ஒக்கு மம்மானுருவமென்று உள்ளங்குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந்தோறும்“ என்றும்
சொல்லுகிறபடியே போலிகண்டு போதுபோக்க ஸாமக்ரி உண்டு என்கிறார்.

“ருசி பிறந்தபின்பு ப்ராப்தியளவும் நாம் தரிக்கைக்கு அவன் திருமேனிக்குப் போலியுண்டென்கை“ என்ற
வியாக்கியான ஸ்ரீ ஸூக்தியும் நோக்கத்தக்கது.

இப்பாட்டின் முதலடியின் மூன்று சீர்களாகிய “வித்துமிட வேண்டுங்கொல்லோ“ என்றவளவு திருக்குறளில் எடுத்தாளப்பட்டுள்ளது,
விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் “வித்துமிட வேண்டுங்கொல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசையான் புனம்“ என்ற குறள் காண்க.

———————————————————————————

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

பதவுரை

பால் பொன் பசுப்பு கார் நான்கு வண்ணமும்–வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும் உடையனாய்க் கொண்டு
நிகழ்ந்தாய்–(நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய்
இருவரையும்–மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள்
வீய–தொலையும்படி
இகழ்ந்தாய்–வெறுத்தாய்
சேனாபதி ஆய்–அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
மனம்–த்ரௌபதியின் கூந்தலை முடிப்பிக்க வேணுமென்று) மநோரதங் கொண்டிருந்த படியே
போர்–பாரதயுத்தம்
முடிக்கும் வகை–தலைக்கட்டும்படி
சினம் போர் சுவேதனை–சீறிக்கொண்டு யுத்தத்தில் இழியும் ஆண்புலியான அர்ஜுன்னை
புகழ்ந்தாய்–கொண்டாடினாய்

கிருத யுகம் -சத்வ குணம் மிக்கோர் -வெளுத்த பால் நிறம் /
த்ரேதா யுகம் -சிவந்த / த்வாபர -பசுமை / கலி யுகம் -கறுத்த -இயற்கையான நீல நிறம் என்றவாறே
கிருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காக
எம்பெருமான் பால்போன்ற நிறத்தைக் கொள்வன், த்ரேதா யுகத்திலே சிவந்த திருநிறத்தைக் கொள்வன்,
த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வன்,
கலியுத்தில் எந்த நிறத்தைக் கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன் என்க
பாலிநீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை -பொற்புடைத் தடுத்து வண்டு விண்டுலாம் நீல நீர்மை என்றி

இருவரையும் வீய இகழ்ந்தாய்–மது கைடவர் -இருவர் -அன்றிக்கே -கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த வெந்தாய்-திருவாய் -3-2-3-என்றபடி இரு வகுப்பில் உள்ள சேனைகள் –
பாரத சமரத்தில் துர்வர்க்கம் அடைய திரண்டது இ றே இரண்டு சேனையிலும் -இங்கே நாலு ஐந்து பேரும் அங்கே
ஓன்று இரண்டு பேரும் ஒழிய முடித்து பொகட்டான் ஆயிற்று –பஞ்ச பாண்டவர் -அஸ்வத்தாமா -க்ருபாச்சார்ய -க்ருத வர்மாக்களையும்
தவிர மற்றவர்களையும் ஒழித்து மண்ணின் பாரம் நீக்கினான் –

உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாள பெற்றாலும் வேண்டேன் பெரும் செல்வம் -என்று சொல்லி போர் ஒழிந்த அர்ஜுனனுக்கு
ஸ்ரீ கீதை அருளி போர் செய்ய உடன்படுத்தி-புகழ்ந்தாய்-சினப் போர் சுவேதனைச் —ஸ்வேத வாஹனன் -வெள்ளைக் குதிரைப் பூண்ட தேர் –
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று -பெரியாழ்வார் திருமொழி –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: