திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

பதவுரை

வான்–ஆகாசமும்
தீ–அக்நியும்
உலவு வளி–உலாவுகின்ற வாயுவும்
மா கடல்–பெரிய கடலும்
மா பொருப்பு–பெரிய குலபர்வதங்களும்
உலவு–திரிகின்ற
வெம் கதிர்தானும்–உஷ்ணகிரணனான ஸூர்யனும்
தண்மதியும்–குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு–மேலே நிலாவுகின்ற
கொண்டல்–மேகங்களும்
பெயரும்–சேதநவர்க்கமும்
திசை எட்டும்–எட்டுத் திசைகளும்
சூழ்ச்சியும்–ஆவரணங்களும்
அண்டம்–ஆகிய இவையெல்லாவற்றோடுங் கூடின அண்டமும்
திருமால்–ஸர்வேச்வரனுடைய
அகைப்பு–ஸங்கல்பத்தினாலாயது.

பஞ்ச பூதங்களும் -சந்த்ர ஸூ ர்யர்களும் -மேக மண்டலங்களும் -ஜீவ ராசியும் -எண் திசையும்
-ஆவரணங்களும் -அண்டம் எல்லாம் -எம்பெருமானுடைய விபூதிகள் -என்கிறார்
கொண்டல் பெயரும் -மேகங்களும் -சேதன வர்க்கமும் -/ மேகம் என்று பெயர் பெற்றவையும் -என்றுமாம்
அகைப்பு -எழுச்சி -முயற்சி -திரு உள்ளத்தில் சங்கல்பம் என்றபடி –

——————————————————————-

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

பதவுரை

அகைப்பு இல் மனிசரை–உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்–(நீ சங்களான) ஆறு மதங்களில்
புகைத்தான்–புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்–அலையெறிகின்ற கடல் நீர்போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேச்வரன்
உகைக்கும் ஏல்–உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது–அப்போதே
எத் தேவர் வாலாட்டும்–எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்–எவ்விதமான (யஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு–(தேவதைகளின்) ஆஹ்வாகமும்
ஒழியும்–ஒழிந்து போய்விடும்

அகைப்பில் மனிசரை -உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை

உகைக்குமேல் -உதாசீனாய் இருந்து விடும் பக்ஷத்தில் -உபேக்ஷித்தல் -தேவதாந்த்ரங்கள் இடத்தில் ஆவேசியாத பக்ஷத்தில்
அஹங்காரப்படுகிறவர்களை லோக வழக்கில் வாலாட்டும் என்பார்களே

எத்தேவர் வாலட்டும் – பிரமன் உலகங்களைப் படைத்தானென்றும், சிவன் திரிபுரடிமரித்தானென்றும்,
இந்திரன் வ்ருத்ராஸுரவதம் பண்ணினானென்றும் இப்படி பல தெய்வங்களைக் குறித்துப் பேசுவமெல்லாம் தெரியுமே,
எம்பெருமான் அநுப்ர வேசித்திராவிடில் ஒரு தெய்வமாவது ஒரு காரியமாவது செய்திருக்கமுடியுமோ? என்றவாறு.
‘வாலாட்டும்‘ என்றது உலக வழுக்கச்சொல்லின் அநுகாரம் அஹங்காரப்படுகிறவனே ‘வாலாட்டுகிறான்‘ என்பது வழக்கம்.

எவ்வாறு செய்கையும் – அந்தணர்கள் யஜ்ஞயாகங்களை அநுஷ்டித்து ஹவிஸ்ஸை யளிப்பதெல்லாம் அந்தர்யாமித்வேந
எம்பெருமானை உத்தேசித்தேயன்றோ, அந்த இந்திரன் முதலிய தெய்வங்களில் எம்பெருமான் உள்ளுறைகின்றிலனாயின்
அத்தெய்வங்களை நோக்கி ‘ஸ்வாஹா ஸ்வாஹா‘ என்று சொல்லி செய்வது ஒன்றுமில்லையாகும் என்கை.
அழைப்பு -தேவதைகளின் ஆஹ்வாநமும்

அவரவர் தமது தமது அறிவகை வகை அவரவர் இறையவர் என வடி யடையவர்கள் -அவரவர் இறையவர் குறைவலர்
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-திருவாயமொழி -பாசுரத்தில் அன்வய முகத்தால் -சொல்வதையே
வியதிரேக முகத்தில் சொல்லிஎம்பெருமான் ஆவேசியா விட்டால் ஒரு தெய்வமும் ஒரு பலனும்
அளிக்க வல்லதாக மாட்டாது
-என்கிறார் –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் உலகில்லை என்றே –4 -10 -6 –

அப்பாசுரத்தின் கருத்தாவது – பலவகைப் பயன்களை விரும்புகின்ற உலகத்தவர்கள் தங்கள் தங்கள் ருசிக்குத் தக்கபடி
பிரமன் சிவன் இந்திரன் என்றுள்ள பலபல தெய்வங்களை ஆச்ரயிக்கின்றனர், அத்தெய்வங்கள் இவர்கள் விரும்பிய
பலன்களைக் கொடுக்கக் குறையில்லை, ஏனென்றால், ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணன் அத்தெய்வங்களுக்கு
அந்தர்யாமியாயிருப்பதனாலே அந்த மாஹத்மியத்தினால் அத்தெய்வங்கள் பலன்கொடுக்கும் சக்தியுடையனவாக ஆய்விடுகின்றன. என்கை.
ஆகவே எம்பெருமானுடைய ஆவேசத்தினால் தான் ஸாமாந்ய தெய்வங்களெல்லாம் தங்களைப் பற்றின அபேக்ஷகர்களுக்கு
அந்தந்த ப்ரயோஜனங்களை யளிக்கின்றன வென்றதாயிற்று.

ஒரு அர்த்தத்தை அந்வயமுகத்தால் சொல்லுவதென்றும் வ்யதிரேகமுகத்தால் சொல்லுவதென்றும் இரண்டு படிகளுண்டு.
‘அரசன் கொடுத்தால் நாம் உண்ணலாம்‘ என்றாற்போலே சொல்லுவது அந்வய முகத்தால் சொல்லுவதாம்,
‘அரசன் கொடாவிடில் நாம் உண்ணமுடியாது‘ என்றாற்போலே சொல்லுவது வயதிரேக முகத்தாற் சொல்லுவதாம்.
கீழெடுத்துக்காட்டிய திருவாய்மொழிப் பாசுரத்திற் சொன்ன கட்டளை அந்வயமுகமாகும்.
இப்பாட்டிற் சொல்லுகிற கட்டளை வ்யதிரேகமுகமாகும்.
எம்பெருமானுடைய ஆவேசத்தினால்தான் தேவதாந்தரங்கள் பலனளிக்கின்றன. என்று திருவாய்மொழிப் பாசுரத்திற்சொல்லிற்று,
எம்பெருமான் ஆவேசியாவிடில் ஒரு தெய்வமும் ஒரு பலனையும் அளிக்கவல்லதாகமாட்டாது என்கிறது இப்பாட்டில்.

ஆறுசமயங்களாவன – சாக்யர் உலூக்யர் அக்ஷபாதர் க்ஷபணர் கபிலர் பதஞ்ஜலி என்னும் அறுவரால் பிரவர்த்திப்பிக்கப்பட்ட மதங்கள்.
இவை அவைதிகங்க ளெனப்படும். உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை இந்த பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் புகுவித்தானாம் எம்பெருமான்.

———————————————————————–

உலகோர் எக்கேடு பெற்றாலும் பெறட்டும் -என்னுடைய பொழுது போக்கு நல்லதாக இருக்கப் பெற்றேன் –
திருவேங்கடமுடையானை சேவிக்க வேணும் என்றும் திரு வேங்கடத்திலே நித்யவாஸம்

பண்ண வேணும் என்றும் ஆசைப்படா நின்றேன் -என்கிறார்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

பதவுரை

திருவேங்கடத்தானை–திருவேங்கடமுடையானை
காண–கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்–வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன்
வரண்டி வந்து இழிய–திரட்டிக்கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்நிஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை–யானைகளானவை
வெருவி–பயப்பட்டு நிற்கவும்
அரவு–மலைப் பாம்புகளானவை
மழை–மழை போல் சொரிகின்ற
பேர் அருவி–பெரிய அருவிகளானவை
மணி–அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்–(அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு–திருமலையை
கூட–சென்று கூடவேணுமென்று
திருக்கூடல் இழைப்பன்–கூடலிழைக்கின்றேன்

இழைப்பன் திருக்கூடல் – கூடலிழைத்தலாவது – வட்டமாகக் கோடுகீறி அதற்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து
இரண்டிரண்டு சுழியாகக் கூட்டிப் பார்க்கும்போது இரட்டைக்கணக்காக முடிவுபெற்றால் கூடுகை,
ஒற்றைக்கணக்காக முடிவுபெற்றால் கூடாமை என்று ஒரு ஸங்கேதம் ஏற்படுத்திக்கொண்டு குறிபார்க்கையாம்.
சகுனம் பார்க்கும் வகையில் இஃது ஒருவகை, இது கூடல், கூடலிழைத்தல், கூடல்வளைத்தல், கூடற்குறி இத்யாதி
நாமங்களால் வழங்கப்பெறுமென்ப. நாச்சியார் திருமொழியில் நான்காந்திருமொழியில் (தெள்ளியார் பலர்) ஆண்டாளனுட்டித்ததாமிது.
பகவத் ஸம்ச்லேஷத்திலே ஆவலுள்ளபடியைக்கூறும் முறைகளிலே இதுவொருமுறை என்னுமிவ்வளவே உணரத்தக்கது.

கூடலிழைத்தல் பெண்டிர்க்கே உரியதென்றும், இங்கு “இழைப்பன் திருக்கூடல்“ என்று ஆழ்வாரருளிச்செய்தது
நாயகீ ஸமாதியில் என்றும் அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்வர்.

வரண்டி வந்திழிய–திரட்டிக்  கொண்டு வந்து இழிய-வரண்டி–பாட பேதம்

மணிகளை கண்டு இவை கொள்ளி வட்டம் என்று அஸ்தானே பய சங்கை பண்ணுமா யானைகளும் -மலைப் பாம்புகளும்
-யானைகள் ஓடி மலைப் பாம்புகளின் வாயிலே விழும் படி என்றுமாம் –
யானை வெருவவும் அரவு ஒடுக்குகவும் -என்றும் யானை வருவி அரவின் வாயிலே ஒடுங்கவும் என்றுமாம் –

பின்னடிகட்கு இரண்டுவகையாகக் கருத்துரைக்கலாம்,
மலையருவிகளில் மணிகள் பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு உடன் விழுகின்றவனவாம்,
அவற்றை யானைகள் கண்டு ‘இவை கொள்ளிவட்டம்‘ என்று ப்ரமித்து அஞ்சிச்சிதறுகின்றனவாம்.
பாம்புகளோவென்னில், அந்த ரத்னங்களை மின்னலாக ப்ரமித்து அஞ்சிப் புற்றிலேசென்று ஒடுங்குகின்றனவாம்,
ஆக இப்படி அஸ்தாநே பயசங்கை பண்ணுதற்கு இடமான திருமலையைக்கூடக் கூடலிழைப்பன் என்கை.
அன்றியே,
அருவிகளில் விழுந்த ரத்னங்களைக்கண்ட யானைகள் “இவை கொள்ளிவட்டம்“ என்று ப்ரமித்து ஒடப்புக்கவாறே
மலைப்பாம்பின் வாயிலே விழும்படியாயின என்னவுமாம்.

சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிப் போய்விடுமென்றும்,
பல மலைப்பாம்புகள் யானையை அணுகி விழுங்கிவிடுமென்றும் தமிழ்நூல்களால் தெரிகின்றது.
“திரையன்பாட்டு“ என்ற ஓர் பழையநூலில் –
“கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ணமென்றஞ்சிப்,
படங்கொள் பாம்பும் விடாகம்புகூஉம், தடங்கொள் உச்சித்தாழ்வரை யடுக்கத்து“
மலைப்பாம்பு யானையைக்கண்டு அஞ்சி யொளிக்குமென்பது தெரிகின்றது.

“ஞால்வாய்க்களிறு பாந்தட்பட்டெனத், துஞ்சாத்துயரத்தஞ்சுபிடிப்பூசல்,
நெடுவரை விடரகத்தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே“ என்று சங்க நூல்களுள் ஒன்றான நற்றிணையிலும்,
“பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே“ என்று தேவாரத்திலும்,
“இடிகொள் வேழத்தை எயிற்றொடு மெடுத்துடன் விழுங்கும், கடியமாசுணங் கற்றறிந்தவரென வடங்கிச்
சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித்தேற்ப,- படிகடாமெனத்தாழ்வரை கிடப்பனபாராய்“ என்று கம்பராமாயணத்திலும்
உள்ள பாட்டுக்களால் மலைப்பாம்பு யானையை விழுங்குமென்பது தெரிகின்றது.
அஞ்சியோசித்தல் சிறுபான்மையும், விழுங்குதல் பெரும்பான்மையுமோ யிருக்குமென்ப.
யானை வெருவவும், அரவு ஒடுங்கவும் பெற்ற மலை, என்பது முதல் யோஜனை பதவுரை,
யானையானது வெருவி அரவின் யிலே ஒடுங்கப்பெற்ற மலை என்ப்து இரண்டாவது யோஜனையின் பதவுரை.

—————————————————————————-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

வெற்பென்று வேங்கடம் பாடினேன் – ‘மலை‘ என்று வருகிற பெயர்களையெல்லாம் அடுக்காகச் சொல்லுவோமென்று
விநோதமாக முயற்சிசெய்து ‘பசுமலை, அடைவிலே பறங்கிமலை‘ என்று பலவற்றையும் சொல்லிவருகிற அடைவிலே
என்னையுமறியாமல் ‘திருவேங்கடமலை‘ என்று என்வாயில் வந்துவிட்டது,
இவ்வளவையே கொண்டு எம்பெருமான் என்னைத் திருவேங்கடம் பாடினவனாகக் கணக்குசெய்து கொண்டானென்பது இதன் கருத்து.

வீடாக்கி நிற்கின்றேன் – யாத்ருச்சிகமான இந்த உத்திமாத்திரத்தில் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றதுகையதுவே“ என்னும்படியாகப்
பரமபதமும் ஸித்தமென்னப் பேறுபெற்றயனாயினேன் என்கை.

நின்று நினைக்கிறேன் – நாம் புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும் சொல்லாதிருக்கவும் எம்பெருமான்றாளே ம
டிமாங்காயிட்டு திருவுள்ளம் பற்றுகிறவிது என்ன ஆச்சரியம்! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபடா நின்றேனென்கை.

கற்கின்ற நூல்வலையிற்பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையிற் பட்டிருந்தேன் – எம்பெருமான் ஸகலசாஸ்த்ரங்களாலும்
பிரதிபாதிக்கப்படுபவனாதலால் அவனுக்கு ‘நூலாளன்‘ என்று பெயர் இப்பெயர்க்குப் பெண்பால் ‘நூலாட்டி‘ என்பதாம்.
(பெரிய பிராட்டியாரே! வேதங்களும் வேதாங்கங்களும் எல்லாங்கூடி உமது திருக்கல்யாண குணங்களையே
பிரதிபாதிப்பனவாகப் பெரியோர் கூறுவர்) என்று பட்டர் அருளிச்செய்தபடியே எல்லா நூல்களையும் தனக்குப்
பிரதிபாதகமாகவுடையவள் என்ற காரணத்தினாலும் ‘நூலாட்டி‘ என்று பெயர் பெறுவள் பிராட்டி,
அவளுடைய கேள்வனார் – எம்பெருமான், அவன் எப்படிப்பட்டவனென்றால் கற்கின்ற நூல்வலையிற் பட்டிருந்தவன்,
(அதாவது) பரம்பரையாக அஸ்மதாதிகளால் ஓதப்பட்டுவருகின்ற சாஸ்த்ரங்களாகிற வலையிலே பாஹ்யகுத்ருஷ்டிகளால்
அசைக்க வொண்ணாதபடி அகப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளாகிய வலையிலே நான் சிக்கிக் கொண்டிருக்கின்றேன் என்கை.

மூன்றாமடியில் சாஸ்த்ரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்,
ஈற்றடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச்செய்தார்,
எம்பெருமானை சாஸ்த்ரங்களில் நின்றும் எப்படி பிரிக்கமுடியாதோ அப்படியே
என்னை அப்பெருமான் திருவடிகளில் நின்றும் பிரிக்கமுடியாது என்றவாறு, எம்பெருமான் ஒருவலையிலே அகப்பட்டான்,
நானொருவலையிலே அகப்பட்டேன் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி.

நான் அஹ்ருதயமாகச் சொன்ன சொல்லையும் அவன் ஸஹ்ருதயமாகக் கொண்டு மடிமாங்காயிட்டு என்னை
விஷயீகரித்தருளாகிறானாகையாலே நான் அவனுடைய திருவடிகட்கே அற்றுத் தீர்ந்தே னென்றாராயிற்று.

வேதைக சமய-மிதுனமே -நூலாளன்-நூலாட்டி -அசமதாதிகளால் பரம்பரையாக ஓதப்படும் நூல்களாலே
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரமாக உள்ள எம்பெருமான் திருவடிகளில் அகப்பட்டேன்
அவனை சாஸ்திரங்களில் நின்றும் பிரிக்க ஒண்ணாதா போலே அடியேனையும் அவன் திருவடிகளில் நின்றும் பிரிக்க முடியாதே
நான் அஸஹ்ருதயமாக சொன்ன சொல்லையும் சஹ்ருதயமாகக் கொண்டு மாடி மாங்காயிட்டு விஷயீ கரித்து
அருளியதால் அவன் திருவடிகளுக்கே அற்றுத் தீர்ந்தேன் –

—————————————————————————————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

பதவுரை

கல் அருவி–ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக
முத்து உதிர–முத்துக்கள் உதிரப் பெற்றதாய்,
ஒணம் விழவில்–திருவோணத்திருநாளில்
ஒலி அதிர–(திருப்பல்லாண்டு பாடுகை வேத்பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு–(பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா–திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்–நீ என் நெஞ்சிலே புகுந்துவிட்டாய் (நீ திருமலையைவிட்டு என்னுள்ளத்திலே வந்துவிட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்–நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.

நீ திருவேங்கடமலையை விட்டு என் உள்ளத்தே வந்தாயாயேயாயினும் -நீ வருவதற்கு சாதனமான அந்த திரு மலையை
சேவிக்க காதல் கொண்டுள்ளேன் -நீ உகந்து வாழ்ந்த இடம் என்றே எனக்கும் உத்தேச்யம் -திருவோண திரு உத்சவத்தில்
மங்களா சாசன ஒலியும்-பேரொலி செய்து மாணிக்கங்களை உதிரும் அருவி ஒலியும் நிறைந்த திரு வேங்கடம் –
நான் உன்னை திருவேங்கடத்தில் சேவிக்க விரும்ப நீயோ அங்கு நின்றும் என் உள்ளத்தே வந்து உறைகின்றாயே -என்றுமாம் –

எம்பெருமானே!, நீ திருவேங்கடமலையைவிட்டு என்னுள்ளத்தே குடி கொண்டாயாயினும்,
நீ இங்குவந்து சேர்வதற்கு ஸாதநமாயிருந்த அந்தத் திருலை தன்னையும் சென்று ஸேவிக்க வேணுமென்று
நான் காதல் கொண்டிருக்கின்றே னென்கிறார்.

“கல்லருவி முத்துதிர“ என்பதும் “ஓணவிழவி லொலியதிர“ கடத்தில் விசேஷணமாக அந்வயிக்கக்கடவன.
‘உதிர‘ ‘அதிர‘ என்பவை வினையைச் சங்களாயினும் பெயரிலே அந்வயிருக்குமென்க,
எப்போதும் பேரொலி செய்துகொண்டு வீழ்கின்ற அருவிகளிலே முத்துக்கள் உதிரப்பெற்றதும்
(திருவேங்கட முடையானுடைய திருவ்வதார நக்ஷத்திரமான) திருவோணத் திருவிழவில்
மங்களா சாஸந த்வநிகள் மிகப்பெற்றதுமான திருவேங்கடம் என்கை. “பேணி வரு“ என்பதும் திருவேங்கடத்திற்கு விசேஷணம்,
பல திசைகளில் நின்றும் பலர் விரும்பி வந்து பணியப்பெற்ற தென்கை. இப்படிப்பட்ட திருமலையிலெழுந்தருளி யிருக்கும் பிரானே!
நீ அத்திருமலையை விட்டு என்னுள்ளம் புகுந்தாய், இனி நீ திருமலையில் இல்லையாயினும்
‘நீ உகந்து வாழ்ந்தவிடம்‘ என்கிற காரணத்தினால் அத்திருமலை தன்னைச் சென்று காணவே நான் விரும்புகின்றேனென்றவாறு.

நானோ திருமலையில் வந்து உன்னைக் காண விரும்பியிருக்கின்றேன்.
நீயோ அங்கு நின்றும் என்னுள்ளத்தே வந்து உறைகின்றாய், இனி நான் என்செய்வேன்! என்கிறாராகவுமாம்.

————————————————————————————-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42–

பதவுரை

சேண் உயர் வேங்கடத்தை–மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்–சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது)
நீர்மையால்–தன் ஸ்வபாவத்தினால்
நின்று வினைகெடுக்கும்–பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு–அத்திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்–பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்–முக்கண்ணனான சிவபிரானும்
என்றும்–எக்காலத்தும்
அடி–(எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்–தாமரைப் புஷ்பங்களை
இட்டு–ஸமர்ப்பித்து
ஏத்தும்–துதித்துக்கொண்டிருப்பார்கள்.

சென்னியோங்கு தண் திருவேங்கடத்தை சென்று வணங்குமின் என்று உபதேசிக்கிறார் –சேண் உயர் –மீமிசைச் சொல்
நீர்மையால் -பாபங்களை போக்குவதே அன்றோ ஸ்வபாவம் திரு வேங்கடத்துக்கு
வெம் கொடும் பாவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் மங்கலம் பொருந்தும் சீர் வேங்கடமலை யான தொன்று -புராணச் செய்யுள் –

——————————————————————————

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

பதவுரை

மங்குல் தோய் சென்னி–மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை–வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்–திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்–சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்
தாமரை மேலானும்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்–ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு–திருமுத்துக் குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
கங்குல்–ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்–திருமலைக்குச் செல்லுவர்கள்

அந்தி தோறும் வந்து திருவந்திக் காப்பிடுவார்கள் -கங்குல் இரவுக்கு வாசகமாயினும் இங்கு அந்திப் பொழுதை குறிக்கும் –
நளிர் மதிச் சடையன் -சந்த்ர மௌலி -திங்கள் சடை ஏற வைத்தான் -என்கிறார்
குடை -சத்ர சமராதி உபகரணங்களும் உப லக்ஷணம்
புகுந்தார்கள் -புகுந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றவாறு
அணிவான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் –

————————————————————————————-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டிவிட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசைகொண்டு செல்லுங்கோள்

கிளர் ஒளி இளமை கெடாமல் இருக்கப் பெற்ற குமரர்களே-தண்டு காலா வூன்றி வூன்றி தள்ளி நடக்கும் முதுமையில்
திருமலையை நினைக்கவும் முடியாதலால் -இப்பொழுதே திருமலைக்கே போவீர் -என்கிறார்

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க -தாமே யறிகிற்போம் நல் நெஞ்சே -பூ மேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை பாதமத்தாலே எண்ணினான் பண்பு –பொய்கையார் -45 –
ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண் —பேயார் -77
புராணங்களில் இல்லாமல் ஆழ்வார்கள் மட்டுமே சாஷாத்கரித்த விருத்தாந்தம் —

இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத்கதை முதல் திருவந்தாதியில், “ஆமேயமரக்கறிய“ என்ற நாற்பத்தைந்தாம் பாட்டிலும்,
முன்றாந்திருவந்தாதியில் “ஆய்ந்தவருமறையோன்“ என்ற எழுபத்தேழாயம் பாட்டிலும்
பொய்கையாழ்வாராலும் பேயாழ்வாராலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.
முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ்சென்று வரம் வேண்டிக் கொள்ளுமளவில்
எம்பெருமான் ஒரு சிறு குழந்தைவடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து
“இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன் காண், ஸ்வஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து
வரம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான். இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்“ என்று தெரிவிப்பவன் போன்று
தன் திருவடியால் அவ்விராவண்ணுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக் காட்டினன் – என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது.

இக்கதை இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை;
பெரியாழ்வார் திருமொழியில் “சீமாலிகனவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச்
சக்கரத்தால் தலை கொண்டாய்“ (2-7-8) என்றும்,
“எல்லியம் போதினி திருத்தலிருந்த தோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மேரடையாளம்“ (3-10-2) என்றும்
அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல்
ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை யென்று நம் பூருவாசாரியர்கள்
நிர்வஹித் திருப்பது போலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட தென்று பெரியோர் கூறுவர்.
இனி இதற்கு இதிஹாஸ புராணங்களில் ஆகா முண்டேல் கண்டு கொள்க விரிவும் வல்லார் வாய்க் கேட்டுணர்க.

இப்படிப்பட்ட எம்பெருமான் நின்றருளும் திருவேங்கடமலைக்கே விரும்பிச் சென்று சேருங்கள் என்றாராயிற்று.
வயது முதிர்ந்த பின்பு * தண்டுகாலா யூன்றித் தள்ளிநடக்கும் முதுமையில் திருமலையை நெஞ்சால் நினைக்கவும்
முடியாதாதலால் கிளரொளியிளமை கெடுவதன் முன்ன திருமலைக்குப் போகவேணுமென்கிறார் ‘குமர்ருள்ளீர்!‘ என்ற விளியால்.

——————————————————————————————-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

பதவுரை

புண்டரீகம் பாதம்–திருவடித் தாமரைகளில்
புரிந்து–அன்பு பூண்டு
மலர் இட்டு–புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து–மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப–வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக
எங்கும்–ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து–விளங்கி
தான் ஓங்கி நிற்கின்றான்–குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும் பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே–குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்–நிலத் தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு–நிதியாயிருக்கும்.

ஆதாரத்துடன் திருவடித் தாமரைகளில் புஷ்பங்களைப் பணிமாறி ‘ பல்லாண்டு பல்லாண்டு‘ என்றும்
‘ஜிதம்தே புண்டரீகாக்ஷ!‘ என்றும் மங்களாசலாஸநம் பண்ணி, கால்பெயர்ந்து வெளியில் போக மாட்டாமல்
அவ்விடத்திலேயே அன்பர் குடிகொண்டிருக்கும்படியாகக் கடாக்ஷித்தருள்கின்ற ஸ்ரீநிவாஸன் நித்யவாஸம் பண்ணுமிடமாய்,
குளிர்ந்த அருவிகள் பாய்ந்து போக்யமான திருவேங்கடங்மலை நித்யஸூகனோடு ஸம்ஸாரிகளோடு வாசியற
அனைவர்க்கும் புகலிடமாயிருக்கின்றது என்றதாயிற்கு.

பரிந்து – பரிவாவது பயசங்கை பண்ணுதற்கு இடமல்லாதவிடத்தில் பயசங்கை பண்ணி
அன்பு பாராட்டுதல் காப்பிடுதலைச் சொன்னபடி.

படுகாடுநிற்ப – படுகாடுபோல் நிற்கும்படியாக என்றபடி, உவமவுருபு தொக்கிக்கிடக்கிறது,
வெட்டித்தள்ளப்பட்ட மரங்களைப் படுகாடு என்கிறது. அதுபோல் நிற்கும்படியாக வென்றது. – அம்மரங்கள் ஆடாது அசையாது
அவ்விடத்திலேயே கிடப்பதுபோல் கிடக்கும்படியாக என்றவாறு
வைப்பு – நிதி பூமிக்குள் புதைத்து வைக்கப்படுவது காரணக்குறி நிதிபோல் விரும்பத்தகுமென்கை.

———————————————————————————-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

பதவுரை

மா மதியை–‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ–மங்கள தீபமாக
வைப்பன் என்று–(திருமுன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்–உயரத் தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற
யானையை–ஒருயானையை (பிடிப்பதற்காக)
எப்பாடும்–நாற்புறமும்
வேடு வளைக்க–வேடர் சூழ்ந்து கொள்ள
குறவர்–(அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்–(அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக்கொண்டு போகுமிடமான
வேங்கடமே–திருமலையையே
நாடு–நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து–பிரதக்ஷிணம் பண்ணி
ஆடுதும் ஏல்–(மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம் பண்ணப் பெற்றால்
நன்று–நல்லது

திருமலையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை வருணிக்கின்றாரிதில். ஆகாயத்திலே அழகிய விளக்குப்போல் தோன்றும்
சந்திரனைக் கண்ட ஒரு யானையானது ‘இதனை நமது துதிக்கையினால் பிடித் தெடுத்து ஸ்ரீநிவாஸன் ஸந்நிதியில்
நந்தாவிளக்காக வைத்திட்டால் நன்றாயிருக்கும்‘ என்று கருதி அச்சநதிரனைப் பிடிப்பதற்காக
நீட்டின கை நீட்டினபடியே யிருக்கையில் அவ்யானையின் நோக்கமெல்லாம் சந்திரனைப் பிடிப்பதாகிற
அக்காரிய மென்றிலேயே ஊன்றியிருந்ததனால் அந்த அந்யபரத்வத்தையே பற்றாசாகக் கொண்டு வேடர்கள் மெல்ல
அருகில் வந்து வளைத்துக்கொள்ள குறவர் அம்பு தொடுக்கின்றனராம்,
ஆக இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையை நாமெல்லாரும் வலம் வந்து மகிழ்ந்து கூத்தாடுவோமாயின்
இதுவே நமக்கு ஸ்வருபம் என்றாராயிற்று.

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கின்றதென்று அதன் ஒக்கம் வெளியிடப்பட்டதாமிதனால்,
மலைகளில் சந்திரனை மிக்க ஸமீபத்திலிருப்பதாகக் காணும் மலைப்பிராணிகள்
அவனைக் கைக்கொள்ள விரும்பிப் பல முயற்சிகள் செய்வது இயல்பு,
1.“நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர்மாமதியைச் செஞ்சுடர் நாவளைக்குந் திருமாலிருஞ்சோலையதே“ என்றதுங்காண்க.

மாமதியை மாலுக்கு மணிவிளக்கா வைப்பன் என்று கை நீட்டும் யானையை என்கிறாரே ஆழ்வார்,
யானை சந்திரனைப்பிடிக்க முயற்சிசெய்வது வெளிக்குத் தெரியுமேயன்றி
இன்ன காரியத்திற்காக அதனைப் பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே,
திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப் பிடிக்க முயல்கின்றதென்று ஆழ்வார் எங்ஙனே அறிந்தார்? என்று சிலர் கேட்கக் கூடும்
திருமலையில் பிறக்கப்பெற்ற பெருமையினால் அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும் என்று திருவுள்ளம் பற்றினரென்க.
அன்றியும், 2. “வாயுந்திரையுகளும்“ என்கிற திருவாய்மொழியிற்படியே பிறர் செய்யும் காரியங்களையெல்லாம்
தாம் செய்யுங் காரியங்கள்போல் பகவத் விஷய ப்ராவண்யத்தால் செய்வனவாகவே கொள்வதும் மெய்யன்பர்களின் வழக்கமாகும்.

ஆழ்வார் சந்திரனைப் பார்க்கும்போது “இவன் திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தரும்“ என்று தோற்றவே,
இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும் இருந்த்தாகக் கொண்டு கூறுதல் பொருந்தியதே

ஈற்றடியில் “ஆடுதுமேல்“ “ஆடுதிரேல்“ என்பன பாட பேதங்கள்.

—————————————————————————————–

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

பதவுரை

ஆளியும்–யாளிகளும்
கோள் அரியும்–வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்–பொன்களும்
மணியும்–மாணிக்கங்களும்
முத்தமும்–முத்துக்களும்
பூ மரமும்–பூத்த மரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்–பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்–குரங்குகளும்
வேடும்–வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை–உடையதான
வேங்கடம்–திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்–நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்

அவனைப் போலே இங்கு உள்ள அனைத்தும் உத்தேச்யம் -யாளிகள் – சிங்கங்கள் -நவ ரத்தினங்கள் -புஷ்ப்ப வ்ருக்ஷங்கள்
-நவ மணிகள் கொழித்து கொண்டு வரும் அருவிகள் -காடுகள் -குரங்குகள் -வேடர்கள்
-இவை எல்லாம் யுடைத்தான திரு மலை மணி வண்ணனுடைய திருப்பதி –

—————————————————————————————–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48-

பதவுரை

விண்ணோர்–நித்யஸூரிகளால்
மெய்ம்மையால்–உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்—ஆச்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே–திருமலையே
வினை–பாவங்களையும்
மெய் நோய்–உடம்பைப் பற்றின நோய்களையும்
தீர்ப்பதுவும்–போக்கடிக்க வல்லதும்
வேங்கடமே–திருமலையே
தானவர் வீழ–அசுரர்கள் மாளும்படி
தன் ஆழிபடை தொட்டு–தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை–தேவர்களை
காப்பான்–காத்தருளுமெம் பெருமானுடைய
மலை–திருமலை
வேங்கடமே–திருவேங்கடமேயாம்

அசுர ஜாதியால் வரும் துன்பங்களை தேவர்களுக்கு போக்கி அருளியது போலே ஆஸ்ரிதர் துன்பங்களை
தொலைத்து அருள எழுந்து அருளி இருப்பவன் திருவேங்கடத்தான் என்றவாறு –
விண்ணோர் மெய்மையால் -நித்ய ஸூரிகள் உண்மையான பக்தியால் –
ஸுலப்யம் கண்டு அனுபவிக்க ஆஸ்ரயிப்பதும் இவனே –

நித்யஸூரிகள் பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவீக்கப்பெற்றாலும் அங்கே பரத்வத்திற்கு உரிய
மேன்மைக் குணங்களை அநுபவிகலாயிருக்குமேயன்றி ஸௌலப்ய ஸௌசீலயங்களுக் குப்பாங்கான எளிமைக் குணங்களை
இந் நிலத்திலே வந்து அநுபவிக்க வேண்டியிருப்பதால் அந்த சீலாதி குணங்களை யநுபவிப்பதற்காகத்
திருமலையில் வந்து தொழும்படியைக் கூறுவது முதலடி.

‘வேங்கடம்‘ என்ற திருநாமத்தின் அவயவார்த்தத்தைத் திருவுள்ளம்பற்றி இரண்டாமடி அருளிச் செய்யப்பட்டது.
வேங்கட பதத்திற்கு ஸம்ஸ்க்ருத ரீதியில் பொருள் விவரிக்குமிடத்து,
வேம்பாவம், கடம் – எரித்தல், பாவங்களை எரிப்பதனால் வேங்கடமென்று பெயர் பெற்றது என்று நிருக்தியுள்ளது.
“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடமலை யாதென்று“
என்னும் புராணச் செய்யுளுமுணர்க.

திருமலையின் மேற்கிலுள்ள நந்தநபுரமென்னும் ஊரில் புரந்தரனென்னும் ப்ராஹ்மணோத்தமனது குமாரனாகிய
மாதவனென்பவன் தன் மனைவியாகிய சந்தர்ரேகையென்பவளோடு பூஞ்சோலையிற் சென்று விளையாடிக் கொண்டிருக்கையில்
மாலிநியென்பாளொரு சண்டாள கன்னிகையின் கட்டழகைக்கண்டு காமுற்று அவளைக்கூடி மனையாளைத் துறந்து
அப்புலைமங்கையுடனே சென்று புலால் நுகர்ந்தும் கட்குடித்தும் கைப்பொருள் முழுவதையும் இழந்து
பின்பு வழிபறித்தல் உயிர்கொலை முதலிய கொடுந்தொழில்புரிந்து பொருள்சேர்த்து அவளுக்குக் கொடுத்துவந்து
முடிவில் தரித்ரனாகிப் பலநோய்களை யுமடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பல பாவமுந்தொடரப் பித்தன்போல
அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்தமாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்பலாகப்பெற்று
முன்னைய ப்ரஹ்மதேஜஸ்ஸைப் பொருந்தி நல்லறிவுகொண்டு திருமாலைச் சேவித்து வழிபட்டுப் பரமபதமடைந்ததனால்
இதற்கு ‘வேங்கடாசலம்‘ என்னும் பெயர் நிகழ்ந்ததென்று வடமொழியில்
ப்ரஹ்மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்தர புராணத்திலும் கூறப்படுதல் காண்க.
இங்ஙனே பல இதிஹாஸங்களுண்டு. திருமலை நோய் தீர்க்கும் விஷயம் இப்போதும் பிரத்யக்ஷமாக அனைவருங் காணத்தக்கதாம்.

தேவஜாதிக்கு அஸுரஜாதியால் நேருந் துன்பங்களைத் திருவாழியால் தொலைத்துக் காத்தருளுமெம்பெருமான்
அப்படியே நம்போன்ற ஆச்ரிதர்களினுடையவும் துன்பங்களைத் தொலைத்தருள எழுந்தருளியிருக்குமிடம் திருமலை என்பன பின்னடிகள்.

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: