ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -25-36–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

அவன் செய்து அருளும் கார்யங்கள் எல்லாம் ஆஸ்ரிதற்காகவே -ஸ்வயம் பிரயோஜனத்துக்கு அன்று -என்கிறார்

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

பதவுரை

மதியாது–உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்–நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்–(மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டாய்
மற்றும்-அதற்கு மேலும்,
வயிரம்–வயிரமாகிற ரத்னத்தை
வகையால்–ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து–இளகச் செய்து
உண்ணும்–உண்பவனும்
தான் என்னும்–தனக்கு மேற்பட்ட பலிஷ்டா ஆருமில்லையென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி–மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு–சத்ருத்வமுறையை
ஒழித்தாய்–போக்கினாய்
வகையால்–இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே–உனக்கு ஸித்திப்பதொருபலன் உண்டோ? (எல்லாம் ஆச்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.

எம்பெருமான் செய்தருளுங் காரியங்களெல்லாம் அடியார்களுடைய பிரயோஜனத்திற்காகவே யன்றி
ஸ்வப்ரயோஜநத்திற்காக ஒரு காரியமும் செய்வதில்லை யென்பதை வெளியிடும் பாசுரம்.

மதியாது வகையால் மண்கொண்டாய் – “உபய விபூதிநாதனாயிருக்கிற நாம் யாசகனாகப் போகலாமோ“ என்று
தன் மேன்மையைச் சிறிதும் பாராமல் “ஆச்ரிதனான இந்திரனுக்குக் காரியம் தலைக்கட்டுமளவே வேண்டியது“ என்று
அதனையே பார்த்து யாசகனாயச் செல்லுகையாகிற உபாயத்தினால் பூமியையெல்லாம் ஸ்வாதீநப்படுத்திக் கொண்டாய்.

இரண்டாமடியை முடிவில் அந்வயித்துக் கொள்க.

(வகையால் வயிரங்குழைத்துண்ணும் இத்யாதி) நவரத்னங்களுள் ஒன்றான வஜ்ர்தை இளகுவித்து உண்பர்களாம் உடல் புஷ்டியடைவதற்காக,
மாவலியும் அப்படியே உண்ட ஊன்மல்கிமோடு பருத்திருந்தானும், அப்படிப்பட்ட அவனுடைய அஹங்கார ப்ரயுக்தமான
வயிரவழக்கைப் போக்கினாய். ஈற்றடியிலுள்ள “வயிரம்“ என்ற சொல் “***“ என்ற வடசொல் விகாரம்.

மற்றும் வகையால் வருவதோன்றுண்டே? இவற்றால் உனக்கு வரும் ப்ரயோஜனம் ஏதேனுமுண்டோ?
ஒன்றுமில்லை, பரார்த்தமாகச் செய்தாயித்தனை.

எல்லாம் ஆஸ்ரிதனான இந்திரனுக்காக் செய்தது அன்றோ -அனைத்தும் பரார்த்தமே –

————————————————————————-

அநந்ய பக்த்த்ய நிஷ்டையை அருளிச் செய்து -அடியேனுக்கு இந்நிலைமை நீடித்து இருக்கும் படி
கிருபை பண்ணி அருளிச் செய்ய வேணும் என்கிறார்

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்குமாறு–26-

பதவுரை

கடல் வண்ணா-கடல் போன்ற திருநிறமுடைய பெருமானை!
யான் தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை–அடியேனால் ஆச்ரயிக்கப்படும் தெய்வம் (நீதவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்–சேர்த்துக் கட்டின ஜடையை யுடையனான ருத்ரன்
கரி கண்டாய்–ஸாக்ஷிகாண்
யான்–இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை–உன்னை
எற்றைக்கும்–எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு–ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டு கொள்–கடாக்ஷித்தருள வேணும்.

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா வூழி வூழி த்வம் செய்தார் என்கிறபடியே
-சாதன அனுஷ்டான நிஷ்டன் – ஜடாதரனே சாக்ஷி –அவனே சடை புனைந்து உன்னை உபாசியா நிற்க
-நான் உன்னை ஒழிய ஒரு ஷூத்ர தேவதையைப் பணிவேனோ என்கை
–ஊசியின் பின் நூல் வரும் படி செய்ய -ஐதிக்யம் -வலது திருவடி பெரு விரலில் கண்ணில் -பெரும் ஊழி கனல் —
பக்தி சாரார் -என்றானே ருத்ரன் –இவையெல்லாம் திரு உள்ளம் பற்றி ருத்ரனே சாக்ஷி என்கிறார் –
சாக்கியம் கற்றோம் சமண் கற்றோம் சங்கரன் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் —விட்டு ஒழிந்து-
அநந்ய பிரயோஜன ஸ்ரீ வைஷ்ணவ நிஷ்டை பெற்று -அத்தை நிலையாக கொள்ள கடாக்ஷித்து அருள பிரார்த்திக்கிறார் –

இவ்வாழ்வார் திருமழிசையில் யோகநிலையில் நின்று திருமகள் கொழுநனை த்யானித்துக் கொண்டிருக்கையில்,
ஒருநாள் ஆகாச மார்க்கத்தில் எருதின்மீது ஏறிக்கொண்டு பார்வதீ பரமேச்வரர் செல்லுகையில்,
பார்வதியானவள் இவரது தவவொழுக்கத்தைக் கண்டு கொண்டாடித் தன் கணவனை நோக்கி “இவன் ஆரோ?“ என வினவ,
“இம்மஹாநுபாவன் நம்மைவிட்டு நாராயணனுக்கு அடிமைப்பட்டவன்“ என்று ருத்ரன் சொன்னவளவிலே அம்பிகை,
“இப்பெரியவனுக்கு நாமும் தரிசனம் தந்து ஏதேனும் வரமளித்துப்போவோம்“ என்றுகூற,
அவளது விருப்பத்தின்படிசெய்ய ஸம்மதித்துச் சிவபிரான் இவரெதிரேவந்து தோன்றினன்,

இவர் அச்சிவனைப் பார்த்தும் பாராதவர்போல உபேக்ஷித்து ஒரு கந்தைத் துணியைத் தைத்துக்கொண்டு கார்யாந்தர பர்ராய் விமுகராயிருக்க,
அதுகண்ட சங்கரன் “உனக்கு அருள்செய்ய வந்த நம்மை நீ அநாதரஞ்செய்தல் தகுதியா?“ என்ன,
ஆழ்வார் “உன்னால் ஆக வேண்டிய எனக்கு ஒன்றுமில்லை, ஆதலின் நான் உதாஸீநனாயிருந்தேன்“
உனக்கு அபீஷ்டமான வரம்வேண்டிப் பெற்றுப்போவாய்“ என்று நிர்ப்பந்திக்க,
அநந்தரம் ஆழ்வார் “பரமபதம் அருளவல்லீராயின் அருள்வீர்“ என வேண்டினார்.
அதற்கு அக்கடவுள் “அது நம்மால் தரத்தக்கதன்று, அது தருதற்கு உரியதேவன் ஸ்ரீமந்நாராயணனே,
ஆதலின் வேறுவரம் வேண்டுதி“ என்ன ஆழ்வார் புன்முறுவல் செய்து “அம்முக்தியைப் பெறும் பொருட்டுப் பலகாலம்
இவ்வுலகில் உயிர்த்திருந்து பெருந்தவம் புரிதற்கு உபயோகமாக நீண்ட ஆயுளையேனும் அடியேற்கு அளித்தருள்“ என்று பிரார்த்தித்தார்.

அதுகேட்டுக் கைலாஸபதி “அது கருமா நுஸாரமாக நடப்பதேயன்றி வளர்த்தத்தக்கதன்று, வேறு வேண்டுவதை விளம்புவாய்“ எனலும்,
திருமழிசைப்பிரான் குறுமறுவலோடு இகழ்ச்சியாய் “இவ்வூசியின் பின்னே நூல் வரும்படி வரம் தந்தருளீர்“ என்று விநோதமாகச் சொல்ல,
அப்பரிஹாஸ வார்த்தை செவிப்பட்டவுடனே கடுஞ்சினங்கொண்ட நெற்றிக்கண்ணன் “இச்செருக்குடையானை இப்பொழுதே
அநங்களைப் போலாக்கிடுவிடுகிறேன்“ என்று தனது நெற்றியிலுள்ள நெருப்புக் கண்ணைத்திறந்து விட்டார்,
அதில் நின்றும் புகையும் பொறியுமாகக் கிளர்ந்தெழுந்த காலக்நியைக்கண்டு திருமழிசைப் பிரான் சிறிதும் கலங்காமல்
“இந்திரன்போல உடம்பு முழுதும் கண்காட்டினாலும் அஞ்சுவேனல்லேன்“ என்று சொல்லித் தம்மு வலத்திருவடியின் பெருவிரலிலுள்ளதொரு
கண்ணைத்திறந்துவிட, அதில் நின்றும் ஒரு பெருந்தீ எழுந்து ஊழித்தீயினும் பன்மடங்கு மேலிட்டு அவ்வனலை அடக்கத்தொடங்கிற்று.
அவ்வளவில் அரன் அக்கடுநெருப்பை அவிக்கும்படி தனது சடையிலுள்ள பல மேகங்களை ஏவிவிட,
அவையும் அங்ஙனமே கல்பரந்த காலத்திற்போலச் சோனைமழை பொழிந்து பெருவெள்ளங்கோக்கவும் ஆழ்வார் சிறிதும் சலியாமல்
பகவத் பத்தியிலே ஊன்றியிருந்தார், அதுகண்டு முக்கணமூர்த்தி மிக வியந்து இவர்க்கு “பக்திஸாரர்“ என்று திருநாமஞ்சாத்தி
இவரது வைபவத்தைக் கொண்டாடித் தன்னிடத்திற்குத் திரும்பிப்போயினன் என்ற வரலாறு
இவ்விடத்தில் ஸ்மரிக்கத்தக்கது இவ்வளவையும் திருவுள்ளம் பற்றியே ஆழ்வார் இங்கு
“கற்றைச்சடையான் கரிக்கண்டாய்“ என்கிறார் என்று கொள்ளலாம். கரி – ஸாக்ஷி, நேரில் கண்ணால் பார்த்தவன் என்கை.

இவ்வாழ்வார் “சாக்கியங்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூ லாராய்ந்தோம்“ என்றபடியே பல மதங்களினுள்ளும் புகுந்து
அந்தந்த மதஸ்தராகவே இருந்தவராதலால், இப்படி பல மதங்களிலும் புகுந்து அவையெல்லாம் அஸாரமென்று விட்டொழிந்து
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு வந்து சேர்ந்ததுபோல், இந்த ஸத்ஸம்ப்ரதாயத்தையும் விட்டு வேறொரு தீயமதத்தில் போய்ச்
சேரும்படியான தௌர்ப்பாக்கியம் இவ்விருள் தருமாஞாலத்தின் காரியமாக நமக்கு நேர்ந்துவிடுமோ என்னவோ! அஞ்சி,
இந்த நிஷ்டையே நிலைத்திருக்குமாறு கடாக்ஷித்தருள வேணுமென்று பின்னடிகளால் எம்பெருமான் தன்னையே பிரார்த்தித்தாராயிற்று.

————————————————————————

தம்முடைய அத்யாவச்யத்தையும் -அதுக்கு அடியையும் அருளிச் செய்கிறார் –

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

பதவுரை

பேதை காள்–மூடர்களை!,
மால்–எம்பெருமான்
தான் புகுந்த–தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்–(எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்–வேறொன்றை
பேறு ஆக–புருஷார்த்தமாக
கொள்வனோ–நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்–நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத–ஸேவிக்க முடியாததும்
தார்–புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும்
அகலம்–போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை–திருவடியை
யான் காண வல்லேற்கு–ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது–இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.

தம்முடைய அத்யவாஸாயத்தையும் அதன் அடியையும் அருளிச் செய்கிறார்.
உலகத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றைப் புருஷார்த்தமாகப் பேணுவர்,
ஐச்வர்யத்தை நச்சுவர் சிலர், ஸ்வரைக்கலோக போகங்களை அபேக்ஷிப்பர் சிலர், கைவல்யத்தைக் காதலிப்பர் சிலர்.
இப்படி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பேறாக இருக்கும், எனக்கோவென்னில், இவையொன்றும் விருப்பமல்ல.
எம்பெருமான்றானே “இவ்வாழ்வாருடைய நெஞ்சகம் நமக்கு இருப்பிடமாகக் கிடைக்குமா!“ என்று காதலித்துத் தன்பேறாக வந்து
சேரப்பெற்ற எனது நெஞ்சில் அப்பெருமானுடைய நித்ய வாஸமொன்று தவிர மற்றெதுவும் புருஷார்த்தமாகக் கருதப்பட மாட்டாது,
என்று தமது அத்யவாஸாயம் தமக்கு உண்டானபடியைப் பேசுகிறார் பின்னடிகளில்,

நீறாடிதான் இத்யாதியால். 1. “பெண்ணுலாஞ்சடையினாலும் பிரமனு முன்னைக்காண்பான்,
எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப“ என்கிறபடியே சடையன் தானும் நெடுங்காலம் தவம்புரிந்தும்
எந்தத் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றிலனோ அந்தத் திருவடிகள் என்க்கு ஸ்வயமாகவே வந்து ஸேவை ஸாதிக்கப் பெற்றதனால்
“இத்திருவடி தவிர வேறொன்றும் நமக்கு ப்ராப்யமல்ல“ என்கிற இந்த அத்யவஸாயம் உண்டாயிற்று என்றவாறு.

“காணவல்ல எனக்கு“ எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து “யான் காண வல்லேற்கு“ எனப் பிரயோகிக்கப்பட்டது.

——————————————————————————–

இராமபிரானுடைய வீரச் செயல்களை அனுபவிக்கிறார் -உகப்பு -லீலையான வியாபாரம் –

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

பதவுரை

இலங்கை–லங்காபுரியானது
ஈடு அழிய–சீர்குலையும் படியாக
கட்டிய–(வானர சேனையைத் துணை கொண்டு) கட்டின
சேது–திருவணை
இது–இது காண்மின்,
விலங்கு–திர்யக் யோநியிற் பிறந்தவனான
வாலியை–வாலியை
வீழ்த்தது–முடித்தது
எய்தான்–அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய
இது–இப்போது நடந்த செயல் காண்மின்,
இலங்கை தான்–லங்காபுரியானது
ஒடுங்க–அழியும்படியாகவும்
வில் நுடங்க–சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க–(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலையணிந்து கொண்டிருந்த
இராவணனுடைய உடல் ஒழியும்படியாகவும்
உகப்பு–விலையான வியாபாரம்
இது–இது காண்மின்

ஆழ்வார் அகக் கண்களுக்கு ஸ்பஷ்டமாக தோற்றி விளங்குவதால் –கட்டிய சேது இது -என்று
கண் முன்னால் கண்டது போலே பேசுகிறார் –
அதே போலே ஸூ க்ரீவன் இடம் பஷபத்தித்துச் செய்து அருளின காரியமும் இப்போதே செய்து அருளியது போலே ஆழ்வாருக்குத் தோன்றுகிறது
வீழ்த்ததுவும் -பாட பேதம் -வெண் தளை பிறழும்
திரு சேது அணை காட்டியதும் வாலியை வதைத்ததும் இராவணனைக் கொன்றதுவும் அவலீலையாயச் செய்தவை என்கிறார் –

இராமபிரானுடைய சில வீரச்செயல்களைப் பேசியநுபவிக்கிறார்.

இலங்கை ஈடழியக்கட்டிய சேது இது-விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உயந்தபின் பெருமாளைப் பார்த்து
“ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்ல வேண்டுமாதலால்
அதற்காகக் கடலாசனை நீர் சரணம்புகவேணும்“ என்ன,
இராமபிரான் “கடலைக் கடக்க உபாயம் சொல்லவேண்டும்“ என்று கடலரசனாகிய வருணைனைப் பிரார்த்தித்துத் த
ர்ப்பசயனத்தில் படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல்
உபேகைஷயாயிருந்து விடவே ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு “அனைவரும் நடந்தே செல்லும்படி கடலை வற்றசெய்வேன்“ என்று
ஆக்நேயாஸ்த்ரத்தைத் தொடுக்கத்தொடங்கிய வளவிலே வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து
கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு, நளன் கையினால் நீரில்போட்ட கற்களும் மிதக்குமென்று
அவனுக்கு அவன் தகப்பனால் வரமளித்திருக்கிறாரார்,
ஆகையால் அவனைக் கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்,
இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக்கொண்டு வந்து நளன் கையில் கொடுக்கச் செய்து
நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகவிடுத்து ஸேதுகட்டுவித்தான் – என்பது திருவணைகட்டின வரலாறு.
இது என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலதோற்றி விளங்குதலால் “கட்டிய சேது இது“ என்று கண் முன்னே கண்டது போலப் பேசுகிறார்.

இது விலங்கு வாலியை வீழ்த்தது – ஸுக்ரீவன் இராமபிரானோடு ஸ்நேஹஞ்செய்துகொண்டு அவனது நியமனத்தினால்
கிஷ்கிந்தைக்குச் சென்று வீரநாதஞ்செய்ய, அதைகேட்டு வாலி பொறுக்க மாட்டாதவனாய் வெளிக் கிளம்பிவந்து
ஸுக்ரீவனோடு யுத்தஞசெய்யத்தொடங்க, அப்போது இராமன் அவ்விருவரில் இன்னான் ஸுக்ரீவன் இன்னான் வாலியென்று வாசி
கண்டறியாமையால் அம்பு எய்யாதொழியவே, ஸுக்ரீவன் வாலியிடத்துப் பராஜயப்பட்டு வேதனை பொறுக்கமாட்டாமல்
ரிச்யமூகபர்வத்ததுக்கே மீண்டு ஓடிவந்து சேர, இராமன் அம்பு எய்யாத காரணங்கூறி “இப்போது உனக்கு ஒர் அடையாளம் இடுகிறேன்,
மறுபடியும் வாலியை யுத்தத்துக்கு அழை“ என்று சொல்லி அவன் கழுத்தில் ஒரு பூமாலையைச் சுற்றிக் கிஷ்கிந்தைக்குப் போகவிட,
ஸுக்ரீவன் சென்று முன்போலவே வீரநாதஞ்செய்ய, அதைக்கேட்டு வாலி போருக்குப்புறப்பட,
அப்போது அவன் மனைவியாகிய தாரை “ஓ பிராணநாதா! சற்று முன்பு அடிபட்டு ஓடினவன் திரும்பி இப்போதே
சண்டைக்கு அழைக்கின்றமையால் இது வெறுமனன்று, ஏதோ ஒரு பெருத்த ஸஹாயத்தை அண்டைகொண்டு வந்திருக்கவேணும்,
நீ இப்போது திடீரென்று போர்க்குப் புறப்படுவது தகுதியன்று“ என்று சொல்லித் தடுத்தவளவிலும் அவள் வார்த்தையைச் செவியிலும்
கொள்ளாமல் சடக்கெனப் புறப்பட்டுந்து ஸுக்ரீவனுடன் பிணங்கினான், அந்த வாலி ஸுக்ரீவரிருவரும் ஒருவர்க்கொருவர்
கீழே தள்ளுவது மேலே பாய்வது கட்டிக்கொண்டு நெருக்குவது கடிப்பது குத்துவது அடிப்பதாய் வலிதான யுத்தஞ் செய்யுங்காலத்தில்
இராகவன் ஒரு மரத்தடியில் மறைந்திருந்து வாலியைப் பாணத்தினாலடித்தார்,
அந்த பாணத்தினால் வாலி மார்பு பிளந்து கீழே விழுந்துவிட்டான், இதைத் தாரை கேள்விப்பட்டு அங்கதனென்னும் புத்திரனுடன் கூட
ஓடிவந்து வாலியைத் தழுவிக்கொண்டு பலவாறு புலம்பி, பிறகு எதிரில் நின்ற இராமனைப் பார்த்து,
அவருடைய மஹா புருஷலக்ஷணங்களைக் கண்டு இவர் ஸாக்ஷாத் பரமாத்மாவென்று நிச்சயித்துத் துகித்தனள்.
இராமனும் வாலியோடு வாதாடிப் பல ஸமாதானங்கள் சொல்லக் கேட்டு நன்மதிபெற்றுக் கைகூப்பி இராகவனைத் தொழுது
“ஸுக்ரீவனைப்போல் அங்கதனையும் நோக்கிக் கொள்ளவேணும்“ என்று பிரார்த்தித்துவிட்டு ப்ராணனையும் விட்டான் – என்ற வரலாறு அறிக.
ஆச்ரிதனான ஸுக்ரீவனிடத்தில் பக்ஷபாதத்தால் எம்பெருமான் செய்தருளின காரியம் இப்போதுதான் நடந்ததுபோல் ஆழ்வார்க்குத் தோற்றிற்றென்க.

“வீழ்த்ததுவும்“ என்று சிலர்க்குப் பாடமாம், அப்பாடத்தில் வெண்டளை பிறழும்.

திருவணை கட்டினதும் வாலியை வதைத்ததும் இராவணனைக் கொன்றதும் எம்பிரான்
அவலீலையாகச் செய்த செயல்கள் என்றதாயிற்று இப்பாட்டால்.

———————————————————————-

உகப்புருவம் தானே யொளியுருவம் தானே
மகப்புருவம் தானே மதிக்கில் –மிகப்புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

பதவுரை

மிக–மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்–ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன்
வீழ–ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு–சீறிக் கொண்டு
ஒரு கணையால்–ஒரு பாணத்தினால்
எய்தானவன்–அடித்து முடித்தவனான இராமபிரானை
மதிக்கில்–சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே–மநோஹரமான திருமேனியை யுடையவன் அவனே
ஒளி உருவன் தானே–தேஜோ மயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே–மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே.

எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பேசி அநுபவிக்கிறார்.
உகப்புருவன்தானே கண்டவர்கள் எல்லாரும் உகக்கும்படியான திருவுருவத்தை உடையவன் என்கை.
“தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற்கமலமன்ன
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரு மஃதே“ (கம்பராமாயணம்.) என்றது காண்க.
அன்றியே, நம்மைப்போல் கருமங்காரமாக சரீரங்களைப் பரிக்ரஹிக்கையன்றியே
தானே திருவுற்றமுகந்து பரிக்ரஹித்துக் கொள்ளப்பட்ட வடிவையுடையவன் என்றுமாம்.

ஒளியுருவன் தானே – “குழுமித்தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்கிற படியே
தேஜஸ்புஞஜமே வடிவெடுத்த தென்னலாம்படியான உருவையுடையவன்.

மகப்புருவன் –(மஹாத்புதம்) என்ற வடசொல் “மகப்பு“ எனச் சிதைந்தது, மிகவும் அற்புதமான உருவத்தை யுடையவன் என்றபடி.
இப்படிப்பட்டவன் யாவனென்னில், இராமபிரானென்கிறது பின்னடிகளால்.
கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு காதவழி யுள்ளதுபற்றி “புருவ மொன்றுக்கொண்றோசனையான்“ என்று
அவனுக்குப் பெயரிடப்பட்டது. “யோஜநா“ என்னும் வடசொல் ஓசனை எனத் திரிந்தது.

——————————————————————————————————

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

பதவுரை

என்னை ஆளி–என்னை ஆட்கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்–ஸ்ரீரங்கநாதன்
என்னை–என்னை
அரங்கில்–ஸம்ஸாரமாகிற நாடகசாலையில்
எய்தாமல்–பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்–காத்தருள்வன்,
அவன்–அப்பெருமான்
என்னது–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
நின்றான் இருந்தான்–நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
(ஆன பின்பு இனி)
அவன்–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவு–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவு அணையின் மேல்–சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே–பொருந்துவனோ? (பொருந்தமாட்டான்.)

அவன் என்னை எய்தாமல் காப்பான்–சம்சாரம் ஆகிற நாடக சாலையில் பிரவேசிக்க ஒட்டாமல் காத்து அருள்வான் –
திருப் பாற் கடல் போன்ற உகந்து அருளின ஸ்தலங்களை விட்டு என் நெஞ்சில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் ஆகா நின்றான்
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி துயில் கொள்ளும் அழகைக் காட்டி
என்னை ஆட்படுத்திக் கொண்ட எம்பெருமான் இங்கனம் செய்து அருளி வேறு எங்கும் பொருந்தப்படி இருக்கிறான்
நாடக சாலையில் பல வேஷம் பூண்டு கொண்டு வருவது போலே அநேக சரீரங்களை ஆத்மா பரிஹரித்து வருவதால்
சம்சாரத்தை அரங்கு என்கிறார் -பிறவி மா மாயக் கூத்து -திருவாய் மொழி -8-4-1-

——————————————————————————–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

பதவுரை

மேல்–முன்பொருகால்
நான்முகன்–பிரமன்
அரனை–ருத்ரனைக் குறித்து
இட்ட–கொடுத்த
விடு சாபம்–சாபத்தை
தாரகையுள்–இந் நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன் தான்–எம்பெருமானே
ஒழித்தான்–போக்கி யருளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை–நித்ய ஸூரி நாதனான ஸ்ரீமந்நாராயணனை
ஏத்தாத–வாய் கொண்டு வாழ்த்த மாட்டாத
பேய்காள்–அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு–பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக்கூடிய)
மாயம்–ஆச்சரியமான துக்கங்களை
பேசில்–சொல்லப் புகுந்தால்
கதை–ஒரு மஹாபாரதம் போலே பரந்திருக்கும்.

எம்பெருமானுடைய பெருமை நாடு நகரமும் நன்கு அறிந்ததாயிருந்தும் அவனை ஏத்தமாட்டாத பாவிகள்
எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்க வுரியவர்கள் என்கிறார்.

ஒரு காலத்தில் பரமசிவன் தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு
இடமாயிருக்கின்றதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளி யொடுத்துவிட, அக் கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக் கொள்ளுதலும்,
அவன் “இதற்கு என் செய்வது?“ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும்
“இப்பாவந் தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்“ என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையாது நீங்காதாக பின்பு
ஒருநாள் பதரிகாச்ரம்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது
அப்பெருமான் “அக்ஷயம்“ என்று பிகைஷயிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது – என்பதே
நான் முகனரனையிட்ட விடு சாபம் நாரணணொழித்த வரலாறு.
குரு பாதகத்தைப் போக்கிச் சிவனையும் உய்யக்கொள்ளவல்ல பரதேவதை ஸ்ரீமந்நாராயணன் என்பதை
அறிகின்றிலவே இப்பேய்கள் என்று வருந்துகிறார்.

பிறக்குங் கருமாயம் பேசில் கதை – எம்பெருமானுடைய பெருமையறிந்து அவனை ஏத்தினீர்களாகில் உஜ்ஜீவித்துப் போவீர்கள்,
இல்லையேல், மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து கர்ப்பப்பைகளில் நீங்கள் படநேரும் துன்பங்கள் மஹாபாரதம்போலே
பெரிய கதைப்புத்தகமாக எழுதிவைக்கத் தக்கதாகும் என்றவாறு.

முதலடியில், விடுசாபம் என்றது முழுச்சொல், “விடு“ என்பதற்குத் தனியே பொருளில்லை,
அதை ஒரு உபஸர்க்கம் பொலுக் கொள்க. சாபம் – அநுபவித்தே தீரவேண்டிய பாவம்.

தாரகையுள்–இந்நிலை உலகில் உள்ளார் எல்லாரும் அறிய –
எம்பெருமான் பெருமை நாடு நாற்றமும் நன்கு அறிந்ததாய் இருந்தும் –
அவனை ஏத்த மாட்டாத பாவிகள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்க உரியவர்கள் -என்கிறார்
அவன் பெருமை அறிந்து ஏத்தினால் உஜ்ஜீவனம்-இல்லையேல் மாறி மாறி பல பிறப்பும் அடைந்து கர்ப்பப் பைகளில்
அடையும் துன்பங்களை பேசப் புக்கால் மஹா பாரதம் ஆகுமே
தாராணியும் -பாட பேதம் –
விடு சாபம் -விடு -உபசர்க்கம் -சாபத்தை -என்றவாறு –

———————————————————————————-

எம்பெருமானுடைய பெருமை நாடு நகரமும் நன்கு அறிந்ததாயிருந்தும் அவனை ஏத்தமாட்டாத பாவிகள்
எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்க வுரியவர்கள் என்கிறார்.

தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தினால் ஸகல பதார்த்தங்களுக்கும் ஸத்தையை விளைக்கின்ற எம்பெருமானுடைய
குணங்களில் ஈடுபட மாட்டாதவர்கள் அஸத்துக்களாவர்,
அங்ஙனாகாமே நீங்கள் அக்குணநிதியின் திருவடிகளைச் சார்ந்து வாழ்மின் என்று சிலரை நோக்கி உபதேசிக்கும் பாசுரம் இது.

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

பதவுரை

கதை பொருள்தான்–(உலகத்தில்) உயவஹரிக்கப்டுகின்ற பொருள்கள் யாவும்
உதைப்பு அளவு போது போக்கு இன்றி–ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்–எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள–ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
(அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)
வாய்ந்த குணத்து–திருக்கல்யாண குணங்களில்
படாதது–ஈடுபடாத வஸ்து
வதை பொருள் தான்–அபதார்த்தமே யாகும்,
(ஆகையாலே)
ஆய்ந்த குணத்தான்–சிறந்த திருக் குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி–திருவடிகளை
அடைமின்–ஆச்ரயியுங்கோள்

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள-நம்மால் வியவஹிக்கப்படுகின்ற
பதார்த்தங்கள் எல்லாம் அவன் சங்கல்ப அதீனம்
திரு வயிற்றின் உள்ள-சங்கல்பத்தில் சத்தை பெற்று இருக்கின்றன
உதைப்பளவு போது போக்கின்றி-ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் -எப்போதும் -கண் அமைப்பதும் கை நொடிப்பதும் உதைத்து என்றபடி
அடைமினோ -ஒரு நிமிஷ காலமும் தாமதியாமல் விரைந்தோடி சேர்மினோ என்றபடி
வதைப் பொருள்-தானே – அபார்த்தம் ஆகும்
சங்கல்ப மாத்திரத்தாலே சத்தையை விளைக்கும் எம்பருமான் குணங்களில் ஈடுபடாதவர்கள் அசத்துக்கள் ஆவார்
-குணத்துப் படாதவர் என்னாமல் படாதது -என்றது வெறுப்பினால் குட்டிச் சுவர் என்னுமா போலே
நீயும் அசத்தாகாமல் ஆய்ந்த குணத்தான் -சிறந்த திருக் கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் -திருவடிகளை
ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

—————————————————————————————–

எம்பெருமானுக்கு ஏற்கனவே ஈச்வரத்வம் இருந்தாலும் அவதரித்துப் பண்ணின சில ஆனைத் தொழில்களால்
அந்த ஈச்வரத்வம் நன்னர் நிலைநிறுத்திக் கொள்ளப்பட்டதென்று சில சேஷ்டிதங்களைப் பேசியநுபவிக்கிறார்.

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

பதவுரை

(எம்பெருமான்)
குறிப்பு–(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்
அடி–திருவடியாலே
சகடம்–சகடாஸுரனை
சாடி–ஒழித்தும்
அரவு-காளிய நாகத்தை
ஆட்டி–வாலைப் பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை–குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து–பற்றிக்கொண்டு
பின்னைக்கா–நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு–கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து–முசுப்பை
ஒசித்து–கொம்பை முறித்தொழித்தும்
பேய்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை–முலையில் தடவியிருந்த
நஞ்சு–விஷத்தை
உண்டு–அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி–அழகிய பவளம் போன்ற வாயையும் தோளையும் வுடையளான
இறுத்து–முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்–தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலைநிறுத்திக் கொண்டான்.

அடிச்சகடம்சாடி – நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீ கிருஷ்ணசிசுவை ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டு
கண் வளர்த்திய சோதை யமுனை நீராடப் போயிருந்த காலத்து, கம்ஷனாலேவப்பட்ட அஸுரனொருவன் அச்சகடத்தில் வந்து
ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதையறிந்த திருவடிகளை மேலே தூக்கி யுதைத்து
அச்சகடத்தைச் சிந்நபிந்த மாக்கினனென்க.

அரவாட்டி – ஒருநாள் கிருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சரியாத வழியே போகத் தொடங்க,
மற்றுள்ள இடைப்பிள்ளைகள் அழைத்து “க்ருஷ்ணா! அவ்வழி நோக்க வேண்டா, அவ்வழியிற் சென்றால் யமுநாநதியில்
ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு
அநர்ஹமாம்படி செய்த காளியனென்னுங் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்துகொண்டு
அணுகினவர்களனைவரையும் பிணமாக்கி விடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்“ என்ன,
அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிய நாகத்தைத் தண்டிக்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு
அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின்மேலேறித் துவைத்து நர்த்தனஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில்,
மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கி பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி
அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்க.

அரவு ஆட்டி எனப் பதம் பிரித்ததுபோல “அர வாட்டி“ எனவும் பிரிக்கலாம்,
“குறியதன்கீழ் ஆக்குறுகலும் அதனோடு, உகரமேற்றலும் இயல்வுமாம் தூக்கின்“ என்ற நன்னூற் சூத்திரமுணர்க.)
அர-காளியநாகத்தை, வாட்டி – வலியடக்கி, என்கை.

யானை பிடித்தொசித்து – வில்விழவுக்கென்று கம்ஸனால் அழைக்கப்பட்டு மதுரைக்கு எழுந்தருளின கண்ணபிரான்
கம்ஸன் அரண்மனையை நோக்கிச் செல்லுகையில் அவ்வரண்மனை வாயில் வழியில் தன்னைக் கொல்லும்படி
அவனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீடமென்னும் மதயானை சீறிவர, கண்ணபிரான் அதனை யெதிர்த்து
அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு
அடித்து அவ்யானையையும் யானைப்பாகனையும் உயிர் தொலைத்திட்டன்னென்க.

பேய்முலை நஞசுண்டு – பூதனை யென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் நல்ல “பெண்ணுருவத்தோடு இரவிலே
திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையை
உண்ணக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப்
பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின்
கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தன்னென்க.

வல்லேற்றெருத்திறுத்து – நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி
யார்க்கும் அடங்காத அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று
வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டன்னென்க.

ஆக இப்படிப்பட்ட விரோதி நிரஸநத் தொழில்கள் செய்து தன்னுடைய ஈச்வரத்வத்தை
ஸ்திரப்படுத்திக்கொண்டா னெம் பெருமான் என்றாராயிற்று.

கோப்பின்னும் ஆனான்-பின்னும் கோ வானான் -தன்னுடைய சேஷித்வத்தை நிலை நிறுத்திக் கொண்டான் –
குறிப்பு-–அடியாரைக் காத்து அருள வேணும் என்கிற திரு உள்ளத்தினால் –
ஈஸ்வரன் பண்ணி அருளிய ஆனைத் தொழில்கள் எல்லாம் தன்னுடைய சேஷித்வம் நிலை பெறவே -என்கிறார்
அரவு ஆட்டி -அரவாட்டி -காளியனை கடலில் விட்டு வாழும் படி -என்றும் வாட்டி -வலி அடக்கி என்றுமாம்

——————————————————————————————-

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

பதவுரை

கோட்டியூர் மேயானை–திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை–திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த–துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு ஆசை
நன்மை பயக்க–(எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு குதூஹலம்,
மெய் வினை–சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்–வியாதிகளும்
எய்தாமல்–வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான்–தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வெறுப்பனோ–மறந்திருப்பனோ.

ஏத்த-குறிப்பு எனக்கு -ஸ்திதிக்க எனக்கு ஆசை / நன்மை பயக்க -குறிப்பு எனக்கு -இடைவிடாமல்
நித்ய அனுபவம் செய்வதால் உண்டாகும் பெருமை உண்டாக்கிக் கொள்ள எனக்கு குதூஹலம்
உகந்து அருளின ஸ்தலங்களில் வந்து எழுத்து அருளி என்ன அடிமைக் கொள்ள ஸூ லபனாய் இருக்கும்
எம்பருமான் திருவடிகளை மறந்திருக்க என்னால் முடியுமோ
உகந்து அருளின தேசங்களில் சென்று மங்களா சாசனம் பண்ணி இடைவிடாமல் அனுபவித்து ஆத்மாவுக்கு
நன்மை விளைவித்துக் கொள்ள ஆசை கொண்டு இருக்கிறேன்
எவ்வித கருமங்களும் துக்கங்களும் அணுகாத படி ரக்ஷித்து அருளும் எம்பெருமானுடைய திருவடிகளை
எவ்வாறு உபேக்ஷித்து இருக்கும் இருக்க முடியும் என்கிறார்
வெவ்வினை நோய் –பாட பேதம் –

———————————————————————————————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும்டையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய்திறந்து ஒன்று மருளிச்செய்வதில்லை
(இப்படியிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

அர்ச்சாவதாரத்தில் ஒருபடிப்பட -நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் -செய்து ஒரு நாளும் சோதி வாய் திறந்து பேசாமல்
இருப்பான் என்று அறிந்து வைத்தும் -பிரேமத்தின் கனத்தால் -அர்ச்சாவதார சமாதியையும்
குலைத்து பரிமாறப் பாரிப்பார்களே ஆழ்வார்கள் –
கொடியார் மடக் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியால் அல்லல் தவிர்த்த அசைவோ -அன்றேல் இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே–திருவாய் -8-3-5-என்றும்
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசையத் தொடர்ந்து குற்றேவல் செய்து
தொல்லடிமை வழி வரும் தொண்டர்க்கு அருளித் தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே–9 -2-3-
இவரே -நடந்த கால்கள் நொந்தவோ –காவிரிக் கரைக் குடைந்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசி வாழி கேசனே-என்கிறார்
அசைவு -அசவு -அயர்வு -பர்யாயம் /-

திருவல்லிகேணி யென்பது, தொண்டைமான் சக்ரவர்த்தியின் பிரார்த்தனையின்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத்
தனது குடும்பத்தோடு ஸேவைஸாதித்த தலம். இத்தலத்துப் புஷ்கரிணி அல்லிப்பூக்கள் நிறையப் பெற்றதனால்
கைரவிணியென்று வடமொழியிலும் திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும்.
இந்தப் புண்ணிய தீர்த்தத்தின் பெயரை இத்தலத்திற்குப் பெயராயிற்றென்றுணர்க.
இது மயிலையை அடுத்திருக்கிறபடியால் “மாமயிலை மாவல்லிக்கேணி“ எனப்பட்டது.
மா மயிலை மா வல்லிக்கேணியான் -என்றே ஆழ்வார்கள் ஈடுபடுவார்கள்

————————————————————————————

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

பதவுரை

நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை–திருக்குடந்தையிலும்
வெஃகா–திருவெஃகாவிலும்
திரு எவ்வுள்–திருவெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை–சேஷசயனத்தின் மீது
பால் கடல்–திருப்பாற்கடலிலும்
ஆதி நெடுமால்–ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரன்
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
அரங்கம்–திருவரங்கத்திலும்
பேர்–திருப்பேர் நகரிலும்
அன்பில்–அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்–பள்ளி கொண்டிருக்கின்றான்
(எதுக்காக வென்னில்)
அணைப்பார் கருத்தன் ஆவான்–அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.

கீழ்பாட்டில் “ஐந்தலைவாய் நாகத்தணை – கிடந்தருளும்“ என்று சேஷசயநம் ப்ரஸ்துதமாகையாலே
இங்ஙனே திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு ஸேவைஸாதிக்கப் பெற்ற திருப்பதிகளுள் சிலவற்றைப் பேசியநுபவிக்கிறார்.
அன்பருடைய அந்தரங்கத்திலே புகுவதற்கு ஸமயம் எதிர்பார்த்துக் கொண்டு
திவ்யதேசங்களிலே தங்கியிருக்கிறானென்பதும் இதில் அநுஸந்திக்கப்படுகிறது.

திருக்குடந்தைத் திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில்
நாகத்தணையிலே கிடந்தருள்வது அன்பருடைய ஹ்ருதயத்திலே புகுருகைக்கு அவஸர ப்ரதீக்ஷையாலே யென்கை.

வெஃகா – கச்சித்திருப்பதியில் ஸ்ரீயதோக்தகாரிஸந்நிதி.
திரு எவ்வுள் – எம்பெருமான் சாலிஹோத்ர மாமுனிவனுக்குப் பிரத்ய க்ஷமாகி ‘வஸிப்பதற்கு உரிய உள் எவ்வுள்?‘ என
வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளூர் என்று திருநாம்மாயிற்றென்பர்.
“கிம்க்ருஹம்“ என்பது ஸம்ஸ்க்ருதவ்யவஹாரம்.
பேர் – அப்பக்குடத்தான் ஸந்நிதி.
அடிதோறும் ‘நாகத்தணை‘ என்றது போக்யதாசிசயம் தோற்ற.

அணைப்பார் கருத்தனாவான் – நித்ய யுக்த கீதையிற் சொல்லுகிறபடியே எப்போதும் எம்பெருமானோடு
அணைந்தே யிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்பார்‘ என்ப்படுவர்,
அவர்களுடைய, கருத்தன் – கருத்திலே (திருவுள்ளத்தில) பொருந்தினவானாக, ஆவான் – ஆவதற்காக என்றபடி.

எம்பெருமானுக்கு, பரமபதம் திருப்பாற்கடல் கோயில் திருமலை பெருமாள்கோயில் முதலான உகந்தருளின விடங்களில்
இருப்பத்திற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும்,
ஆகவே திவ்யதேசங்களில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில்வாஸமே புருஷார்த்னுக்கு திவ்யதேசவாஸத்தில்
ஆதரம் மட்டமாய்விடு மென்றும் ஸ்ரீவசநபூசணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச் செய்ததெல்லாம்
இப்பாசுரத்தையும் மூலமாகக் கொண்டதாகும்.
“கல்லுங்கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்! –
வெல்ல, நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்“ என்று நம்மாழ்வார்
பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்த பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தகும்.

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: