திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -1-12–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

திருமழிசைப் பிரான் திருவாய் மலர்ந்து அருளிய நான்முகன் திருவந்தாதி –
-மூன்றாவது ஆயிரம் இயற்பாவில் நான்காவது பிரபந்தம்
நாலாம் நான்காம் திருவந்தாதி என்னாமல் நான்முகன் திருவந்தாதி -என்றது
-அமலனாதி பிரான் கண்ணி நுண் சிறுத் தாம்பு போலே —முதல் குறிப்பு இலக்கண வகை –

எம்பெருமானுடைய அனுக்ரஹ விசேஷத்தாலே -மயர்வற மதி நலம் அருள பெற்று -திவ்யாத்மா ஸ்வரூபத்தையும் –
திருக் கல்யாண குணங்களையும் -திவ்ய மங்கள விக்ரஹத்தையும்-இவற்றை இடைவிடாமல் அனுபவிக்கும் பிராட்டிமார்களையும்
-இவர்கள் சேர்த்தியில் கிஞ்சித்க்கரிக்கும் ஸூ ரிகளையும் -இவற்றுக்கு ஏகாந்தமான பரமபதத்தையும் -லீலா விபூதி யோகத்தையும்
உள்ளபடியே சாஷாத்கரித்து அனுபவித்து மார்க்கண்டேயாதிகளைப் போலே நெடும் காலம் சம்சார மண்டலத்தில்
காலம் சென்றது அறியாதே எழுந்து அருளி இருந்து சேதனர் பலரும் ரஜஸ் தமஸ் குணங்களுக்கு வசப்பட்டு
-வசன ஆபாசங்களைக் கொண்டும் தேவதாந்த்ர வழிபாட்டால் வைதிக மார்க்கத்தில் நின்றும் விலகி குத்ருஷ்ட்டி மார்க்கம்
பேணி சம்சாரத்தையே வளர்த்திக் கொண்டு அநர்த்தப் படுகிற படியைக் கண்டு
பொறுக்க மாட்டாத பரம கிருபையினால் தேவதாந்த்ர பரத்வத்தை நிராகரித்து -ஸ்ரீ மன் நாராயண பாராம்யத்தை ஸ்தாபித்து
அனைவரும் பகவத் பிரவணராம் படி திருத்தி அருளுகிறார் இப்பிரபந்தத்தால் –

—————————————–

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –

—————————————

ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை அழுத்தமாக அருளிச் செய்கிறார் -இப்பிரபந்தம் தலைக் கட்டும் இடத்தும்
-இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -என்று தலைக் கட்டி
நடுவில் பல பாசுரங்களால் தேவதாந்த அபூர்த்தியையும் ஸ்ரீ மன் நாராயணனின் பூர்த்தியையும் அருளிச் செய்வதால்
பரத்வ ஸ்தாபனத்தில் நோக்காய் இருக்கும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

பதவுரை

நாராயணன்–பரமபுருஷனானவன்
நான்முகனை–பிரமனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்–அந்தப் பரமனும்
தான்–தானே
முகம் ஆய்–முக்கியனாயிருந்து
சங்கரனை–சிவனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
ஆழ் பொருளை–(ஆகவே, முழு முதற் கடவுள் ஸ்ரீமந் நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்–அடியேன்
முகம் ஆய்–முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு–இத்திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்–உங்கட்கு அறிவிக்கத் தொடங்குகின்றேன்
நீர்–நீங்கள்
தேர்ந்து–ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்–(இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.

தான்முகமாய் -தானே முக்கியமாய் இருந்து –
ஆழ்பொருளை-(ஆகவே, முழுமுதற் கடவுள் ஸ்ரீமந்நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை

இவ்வாழ்வாருடைய காலத்தில் தேவதாந்தர பரத்துவம் கொள்ளும் மாதாந்தரஸ்தர்கள் மலிந்திருந்ததனால்
அவர்களைத் திருத்தி வழிப்படுத்த வேண்டுவது அவசியமாயமைந்தது,
ஆகவே, தொடங்கும்போதே ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை அழுத்தமாகப் பேசுகின்றார்,
இப்பிரபந்தம் தலைக்கட்டுமிடத்தும் “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்குந் தெய்வம், இனியறிந்தேனெம் பெருமானுன்னை” என்று
தலைக்கட்டுவராதலாலும், இடையிலும் பலபல பாசுரங்களினால் தேவதாந்தரங்களின் அபூர்த்தியையும் பரமபுருஷனுடைய பூர்த்தியையுமே
பேசுவராதலாலும் இப்பிரபந்தம் பெரும்பாலும் பரதத்வஸ்தாபநத்தில் நோக்குடைத்தாயிருக்கும்.

நான்முகனை நாராயணன் படைத்தான்-
நாம ரூப அர்ஹம் இன்றி காரிய பொருள்கள் யாவும் தன்னிடமே லயம் அடைந்து -சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -என்று இருக்க
தன் சங்கல்பத்தாலே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -சமஷ்டி பதார்த்தங்களை ஸ்ருஷ்டித்து -நான்முகனைக் கொண்டு வ்யஷ்டி பதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்க வேண்டி-
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை -என்கிறபடி திரு நாபீ கமலத்தில் நான்முகனை படைத்து அருளினான் –
பிரமன் வேதங்கள் கொண்டே ஸ்ருஷ்டி செய்ய வேண்டி இருப்பதாலும் -அந்த வேதங்கள் நான்கு வகைப் பட்டு இருப்பதாலும்
அவற்றை உச்சரிக்க நான்கு முகங்கள் கொண்டவன் என்பதாலும் நான்முகனை –என்கிறார் -பிரமனை -என்னாதே –
நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்

தானே தலைவனாய் நின்று சம்ஹாரக் கடவுள் சங்கரனைப் படைத்தான் –
புத்ரன் விநயம் அற்று வழி கெட நடந்தால் தந்தை அவனை விலங்கிட்டு வைப்பது போலே உலகோர் வழி கெட நடந்து
அநர்த்தம் விளைவித்துக் கொண்டால் கரண களேபரங்களை விநாசம் செய்து தீர வேண்டுவதால் சங்கரனைப் படைத்தான் –
சங்கரன் என்றசொல் (‘***.’ என்னும் ஸம்ஸ்க்ருத வ்யுத்பத்தியால்) நன்மை செய்பவன் எனப் பொருள்படும்,
மேன்மேலும் கேடுகளை விளைத்துக்கொள்ள வொண்ணாதபடி கரணகளே பரங்களை ஒடித்துவைப்பதாகிற
ஸம்ஹாரம் நன்மையேயாதலால் இதுதோன்ற இங்கு ‘உருத்திரனை’ என்னாது ‘சங்கரனை’ என்றார்.
யான்முகமாய்-அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்-சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து-சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனே உத்பாதகன்
-இவனைத்தவிர பிறிது ஒன்றும் பர தெய்வமாக கொண்டாட வழி இல்லை என்ற ஆழ்ந்த பொருளை
கல் வெட்டும் செப்பு வெட்டுமா போலே பிரபந்ததீ கரித்து அறிவிக்கிறேன்
சம்சாரத்தின் பொல்லாங்கையும் நான் சொல்லுகிற அர்த்தத்தை அருமை பெருமைகளையும் ஆராய்ந்து
நெஞ்சில் நின்றும் நழுவி மங்கிப் போகாத படி உள்ளத்தே தேக்கிக் கொள்ளுங்கோள்-என்று துடை தட்டி உணர்த்துகிறார்
தொடங்கும் பொழுதே அறிவித்தேன் -என்று இறந்த காலத்தில் அருளிச் செய்தது –எம்பெருமான் -ஸத்ய சங்கல்பனாகையாலும் தன்னுடைய உறுதியாலும்
இப்பிரபந்தம் தலைக் கட்டி விட்டதாக நினைத்து அருளிச் செய்கிறார் -கால வழுவமைதி -என்பர் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே-தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் —
அவர்கள் சம்சாரத்தை வளர்ச்சி செய்து வைக்க நான் அன்றோ வேர் அறும் படியாக ஆழ் பொருளை அறிவிக்க முற்படுகிறேன் -காண்மின் -என்கிறார் –

————————————————————————————

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–

பதவுரை

தேருங்கால்–“ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று–பரதெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந்நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை–அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்–ஒருவரும் அறியமாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே–(வேத வேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
எத் தவம் செய்தார்க்கும் –(எப்படிப்பட்ட ஸாதநாநுஷ்டா நாங்களைப் பண்ணினவர்கட்கும்
முடிவது–முடிவில் பலனையளிப்பது
ஆழியான் பால் அருள்–எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.

தேருங்கால் தேவன் ஒருவனே என்று -ஆராயும் இடத்து பர தெய்வமாக உள்ளவன் ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே என்று
உரைப்பர்–வியாஸாதி மஹரிஷிகள் சொல்லுவார்
தத்வம் ஜிஜ்ஞாஸமாநாநாம் ஹேதுபிஸ் ஸ்ர்வதோமுகை – தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயணஸ் ஸ்ம்ருத“ என்ற
பிரமாணத்தைத் திருவுள்ளம் பற்றித் “தேருங்கால் வேனொருவனே யென்றுரைப்பர்“ என்கிறார்.
ஒரும்-பொருள் முடிவும் இத்தனையே –வேத வேதாந்தங்களில் ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம் –
எத்தவம் செய்தார்க்கும்-எப்படிப்பட்ட சாதன அனுஷ்டானங்களை பண்ணினவர்க்கும்
முடிவது ஆழியான் பால் அருள் –முடிவில் பலனை அளிப்பது எம்பெருமான் இடத்து உண்டாகும் கிருபையேயாம் –

மற்றவர்கள் அவனுக்கு அங்க பூதங்களே–அவனது பரத்வம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -இவற்றால்
அவன் பெருமையை அளவிட வல்லார் யாரும் இல்லை-தாமும் தம் பெருமை அறியார் -பெரிய திரு -5-2-1–என்பர் கலியனும்-
அவனே பெருமையில் சிறந்த பராத் பரன் -அவனது நிர்ஹேதுக கிருபையினாலேயே அவன் ப்ராப்யன் -என்றதாயிற்று –

இப்படிப்பட்ட எம்பெருமானை யடைவதற்கு, கருமம் ஞானம் பக்தி முதலிய உபாயங்கள் சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருந்தாலும்
அப்பெருமானுடைய திருவருளின்றி எந்த ஸாதநாநுஷ்டானமும் கார்யகா மல்லாமையாலே
அவனது நிர்ஹேதுக க்ருபைக் கொண்டே அவன் பெறத்தகுந்தவன் என்கிற ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருளைப் பின்னடிகளில் வெளியிடுகிறார்.
பகவானைப் பெறுகைக்கு உபாயமாக எப்படிப்பட்ட தபஸ்ஸை அநுஷ்டித்தாலும் அது ஸாகஷாத்தாகப் பலன் பெறுவிக்க மாட்டாது,
அப்பகவானுடைய திருவருளே பலனளிக்கவல்லது என்றவாறு.
எந்த சாஸ்த்ரத்தை அவிழ்த்துப் பார்த்தாலும் ஸாரார்த்தம் இதுவே விளங்குமென்கிறார் ஓரும் பொருள்முடிவு மித்தனையே என்பதனால்,
கூரத்தாழ்வா னருளிய வரதராஜஸ்வத்தில் – இவ்வர்த்தம் வெளியிடப்பட்டதென்க.

ஆக இப்பாட்டால் – ஸ்ரீமந்நாராயணனே பெருமையிற்சிறந்த பரதேவதை, அவனுடைய நிர்யேதுக க்ருபையினாலேயே
அவன் ப்ராப்யன் என்கிற இரண்டு அர்த்த விசேஷங்கள் வெளியிடப்பட்டன வாயின.

—————————————————————————————-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

பதவுரை

(எம்பெருமான்)
பாலில்–திருப்பாற்கடலில்
கிடந்ததுவும்–சயனித்தருளு மழகையும்
அரங்கம்–திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்–பொருந்தி வாழ்வதையும்
பண்டு–முன்பொருகால்
ஆலில்–ஆலந்தளிரில்
துயின்றதுவும்–பள்ளி கொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்–யார் அறிய வல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை–இப் பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
வானவர் தம் மெய் பொருளை–நித்ய ஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை– (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள்
கண் வளரும் அரும்பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
யான் அறிந்த ஆறு–அடியேன் அறிந்த விதம் என்ன!

ஞாலத்-தொரு பொருளை -பூமியில் திருவவதரித்த விலக்ஷண புருஷன் –துணையற்ற காரண வஸ்து -என்றுமாம்
வானவர் தம் மெய்ப் பொருளை-நித்ய ஸூ ரிகளுக்கு பிரத்யக்ஷமாக அனுபவிக்காத தகுந்த வஸ்து வாயும்
அப்பில்-அரு பொருளை -சகலத்துக்கும் காரணமான முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜல தத்துவத்தில்
கண் வளரும் அறும் பொருளாய் இருக்கும் எம்பெருமானை -நன்மைப் புனல் பண்ணி-திருவாய் -7-5-4-

கீழே ஆரும் அறியார் அவன் பெருமை என்றார் –
தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இல்லாத பல பரப்பி திருப் பாற் கடலிலே சயனித்து இருக்கும் அழகிலே
நான் ஈடுபட்டு இருக்கும் வண்ணம் யார் ஈடுபடுவார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்கிறபடி அக்கிடை அழகில்
வியாமோஹித்து இருப்பவன் நான் ஒருவனே –
திருவரங்கம் பெரிய கோயிலிலே உபய காவேரீ மத்யத்திலே என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிற படி
பரம போக்யமாயும் அத்யந்த ஸூலபமாயும் சந்நிதி பன்னி சேவை சாதிக்கும் அருளின் போக்யத்தையும் ஸுலப்யத்தையும் நான் ஒருவனே வாய் வெருவுவேன்
ஆலிலைத் தளிரில் அக்கடிகடனா சாமர்த்தியத்தை மெச்சுகிறவன் நான் ஒருவனே அன்றி வேறு ஒருவர் உண்டோ
நான் அறிந்த வாறு — விதம் ஆச்சர்யம் —ஆர் அறிவார் -என்று கீழோடே சேர்த்து ஏக வாக்யமாகவுமாம் –

——————————————————————————-

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

பதவுரை

ஆறு–கங்கா நதியை
சடை–தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்–மறையச் செய்து தாங்கிக் கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கோன் தன்னோடும்–தேவாதி தேவனான ஸர்வேச்வரனோடு
கூறு உடையன் என்பதுவும்–ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே–அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை–வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறு பெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை–எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸாவ சப்த வாச்யனாய்) உள்ளவனுமான
எம்மானை–எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்–சுருங்கப் பேசினேனித்தனை.

“ருத்ரனும் ஸ்ரீமந்நாராயணனைப் போலவே பரதேவதை“ என்று சிலர் மயங்கிக்கிடக்கிறார்களே,
இப்படியும் ஒரு ப்ரமம் இருக்குமோ? தேவாதி தேவனான எம்பெருமான் எங்கே?
அவனுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை சிரஸாவஹித்துத் தூய்மை பெற்ற சிவன் எங்கே?
இவ்விருவரையும் ஸமமாகச் சில அவிவேகிகள் சொன்னால் இதனை அறிவுடையார் அங்கீகரிக்கக் கூடுமோ வென்கிறார் முன்னடிகளில்.

கங்கை சிவனுடைய சடையில் மறைந்திருப்பதுபற்றி அவனுக்கு ஆறுசடைக் கரந்தான் என்று பெயரிடப்பட்டது.
கரத்தல் – மறைத்தல். சிவனுக்குப் பல பெயர்களிருக்க இங்கு இந்தப் பெயரையிட்டுச் சொன்னது – கருத்துடன் கூடியது,
எந்த ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீபாததீர்த்தத்தை ருத்ரன் சிரஸாவஹித்துப் புனிதனாயின்னோ,
அந்த ருத்ரனை ஸமனாகச் சொல்வது பொருந்தாதென்பதைக் காட்டினபடி “

கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே–சாம்யம் உடையவன் என்று பாமரர் என்றும் சொல்லும் சொல் அங்கீகரிக்கத் தக்கதோ -அல்லவே –
ஸ்ரீ மானுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தை ருத்ரன் சிரஸா வஹித்து புனிதனாயினவனை சமமாகச் சொல்வதோ –
அண்டர்கோன் -தேவர்க்கும் இடையாருக்கும் தலைவன் -தேவாதி தேவன் கோபால கிருஷ்ணன் என்றுமாம்
அஹம் க்ருத்ஸ் நஸ்ய -ஜகதா பிரபவ ப்ரளயஸ் ததா –மத்த பரதரம் நான்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –ஸ்ரீ கீதை -7-7-
அபாயவச நவ்ருத்தி -சர்வ சப்தங்களுக்கு -சர்வ அந்தர்யாமி -சர்வ சரீரி -பரமாத்மா வரையில் பர்யவசிக்குமே –

எப்பொருட்கும் சொல்லுவதொன்றுண்டு, அதாவது – உலகத்தில் பிரயோகிக்கப்படும் ஸகல சப்தங்களும்
ஸர்வாந்தர்யாமித்வேந ஸர்வசரீரியாயிருக்கின்ற பரமாத்மாவரையில் வாசகங்களாகும் என்பது,
அந்த சக்தியாலே எப்பொருமாளுக்கு வாசகமான சொல்லும் எம்பெருமானைத் தொட்டுத் தீருமாதலால்
‘எப்பொருட்கும் சொல்லானை‘ என்கிறார்.

———————————————————————————

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

பதவுரை

தொகுத்த வரத்தன் ஆய்–(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்–ஒருவரிடத்திலும் தோல்வி யடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்–மார்பை
வகிர்த்த–இரு பிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்–வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்–திருக் கைகளை யுடைய
மாலே-ஸர்வேச்வரனே!,
நீ–நீ,
உகத்தில்–பிரளய காலத்தில்
உள் வாங்கி–(உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளே யிட்டு வைத்து
ஒரு நான்று–(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில்
உயர்த்தி–(அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச்செய்து
நீயே–இப்படிப்பட்ட நீயே
நான்கும்–(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்–அந்தராத்மாவானாய்
அறி–இதனை அறிவாயாக.

வேறொருவர்-இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்-சொல்லானைச்-என்றத்தை விவரிக்கிறது -இப்பாட்டு –
அனைத்து உலகும் அனைத்து உயிரும் அமைத்து அளித்துத் துடைப்பது -நீ நினைத்த விளையாட்டு –
கருத்தரிய உயரிக்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் தனி நாயகன் நீ
வர பலம் -ஸுராஸுரர் நரர் கையில் -பாரில் சுடர் வானில் -பகல் இரவில் -உள் புறம்பில் -பெரு படையில் தான் சாகா இரணியன் தன்னை
பிரகலாதன் தர்க்கித்து உண்டு என்ற தூணில் நரஹரியாய் பொழுது புகு நேரம் தன்னில் நாடி உதித்து -உயர் வாசல் படி மீதேறி
-இரணியனைத் தொடை மிசைவைத் துகிரினாலே இரு பிளவாக்கினை யரியே எம்பிரானே-
யுகத்தில் -உகந்த காலத்திலே –
உயர்த்தி -என்பதனால் -ஸ்ருஷ்டி கர்த்ருத்வமும் –
உள் வாங்கி -சம்ஹார கர்த்ருத்வமும் –
நான்கும் அருவானாய் -ஸ்திதி கர்த்ருத்வமும் -கூறப்பட்டன –அரூபி -வடசொல் அரு –வானது
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளேயே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் -என்கிறபடியே
தேவாதி நான்கிலும் அந்தர்யாமியாய் இருந்து நிர்வாஹகானாய் இருக்கிறார் என்கிறதாயிற்று –

கீழ்ப்பாட்டில் “வேறொருவரில்லாமை நின்றானை“ என்றும் “எப்பொருட்கும் சொல்லானை“ என்றும் சொன்னதை விவரிக்கிறது இப்பாட்டு.
அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்தளித்துத் துடைப்பது நீ நினைத்த விளையாட்டு, கருதரிய வுயிர்க் குயிராய்க்
கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயகம் நீ, ஆகவே உனக்குச் சொல்லும் ஏற்றமெல்லாம் பொருந்தும் பிரானே! என்றாராயிற்று.

தொகுத்தவரத்தனாய்த் தோலாதான் –
தேவன் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும்
அஸ்த்ர சாஸ்த்ரங்களொன்றினாலும் ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் தனக்கு மரண முண்டாகாதபடி
இரணியன் பல வரங்கள் பெற்று ஆங்காங்கு வெற்றியே பெற்றுவந்தானென்க.
ப்ரஹ்ம ஸ்ருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடி அவன் பெற்ற வரம் பழுது படாமைக்காக நரங்கலந்த சிங்கமாய்
ப்ரஹ்ம ஸ்ருஷ்டியினுட்படாமல் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு தோன்றின்னென்பதும் –
அஸ்தர சஸ்த்ரங்களொன்றினாலும் சாகாதபடியும் பெற்றவரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றன்னென்பதும்,
பகலிலும் இரவிலும் சாகாதபடி. பெற்ற வரம் பொய்படாதபடி அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,
பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம். மெய்யாம்படி தன் மடிமீது வைத்துக் கொன்றன னென்பதும்,
வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக் கொண்டு கொன்றன னென்பதும்
இவை போல்வன பல விசேஷங்களாம்.
“சுரரசுரர் முனிவர் நரர் கையில் பாரில் சுடர்வானில் பகலிரவில் உள்புறம்பில்,
பெருபடையில் தான் சாகா விரண்யன்றன்னைப் பிரகலாதன் தர்க்கித்துண்டென்ற தூணில்,
நர ஹரியாய்ப் பொழுதுபுகுநேரந்தன்னில் நாடியுதித்துயர் வாசற்படி மீதேறி,
இரணியனைத் தொடைமிசைவைத் துகிரினாலே இருபிளவாக்கினை யரியே எம்பிரானே!“ என்றார் பின்னோரும்.

உகத்தில் – யுகர்ந்த காலத்தில் என்றபடி. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு நீயே கடவனாயிருக்கின்றாய் என்பது
பின்னடி களிற் சொல்லப்படுகின்றது. “உயர்த்தி“ என்பதனால் ஸ்ருஷ்டி கர்த்ருத்வமும்,
“உள்வாங்கி“ என்பதனால் ஸம்ஹார கர்த்ருத்வமும்
“நான்கும் அரு ஆனாய்“ என்பதனால் ஸ்திதிகர்த்ருத்வமும் வுறப்பட்டனவாயின.
“அரூபி“ என்னும் வடசொல் “அரு“ என்று கிடக்கிறது.
இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும்“ என்கிறபடியே,
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும் பதிந்திருந்து
அவற்றின் ஸத்தைக்கு நிர்வாஹகளாயிருக்கின்றாய் என்றவாறு.

——————————————————————————————-

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்-என்கிறபடியே
மாதாந்தஸ்தரர்கள் பாழாக போனார்கள் என்று திரு உள்ளம் நொந்து வயிறு எரிந்து பேசும் பாசுரம் இது –

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6–

பதவுரை

சமணர்–ஜைநர்கள்
அறியார்–உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர்–பௌத்தர்கள்
அயர்த்தார்–பிரமித்தார்கள்
சிவப்பட்டார்–சைவ மதஸ்தர்கள்
சிறியார்–மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்–இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய–பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை–ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை–திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
ஏத்தாதார்–(இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்–ஆகையினாலே
இன்று–இப்போது
ஈனவரே–(இவர்கள்) நீசர்களே யாவர்.

சப்த பங்கியை அங்கீ கரித்து -சத் -அஸத் -ஏகம் -அநேகம் -அநேகாந்தம் -ஒன்றுக்கு ஓன்று பொருந்தாமல்
தோற்றினத்தையே சொல்லும் ஜைனர் -அவிவிகேகிகளாய் ஒழிய
ஞாதா ஜேயம்-எல்லாம் க்ஷணிகம் -ஸ்திரனாய் இருப்பான் ஆத்மா இல்லை என்றும் -க்ஷணிக ஞான சந்ததியே ஆத்மா
-என்று பேய்க்கத்து-கத்தும் புத்தர்கள் பிராமண கதியை மறந்து ஒழிந்தனர்
படைக்கப்படும் பொருளில் ஒன்றான -அநீஸ்வரனான ருத்ரனை பர தெய்வம் உபபாதிக்கும் சைவ மத நிஷ்டர்கள் நீசர்கள்
ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -பெரிய திருமொழி-11-7-9-
-விமுகராய் ஒழிந்தவர்கள் எல்லாம் மண்ணின் பாரமே
வெறியாய் -சர்வ கந்த -பரிமளம் வடிவெடுத்தவன் –

இப்படி தனித்தனியே பிரித்துச் சொல்லுவானேன்? இவர்களெல்லாரும் திருமாலை ஏத்தமாட்டாத பாவிகளாதலால்
அனைவருமே நீசர் என்று கொள்ளவேணு மென்கிறார் பின்னடிகளில்.

———————————————————————————————–

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

பதவுரை

நாரணனே–நாராயணனே!,
இன்று ஆக–இன்றைக்காகவுமாம்
நாளையே ஆக–நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக–இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்–உன்னுடைய கிருபை
என் பாலதே–என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக–நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்–நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ–நீயும்
என்னை அன்றி இலை–என்னை யொழிய வேறொரு ரஷ்யனை உடையை யல்லை காண்.

ஆழ்வீர்! மதாந்தரஸ்தர்களை யெல்லாம் ஈனவரேயென்று இழித்துச் சொன்னீர், உமக்குண்டான ஏற்றம் யாது? என்று
எம்பெருமான் கேட்க, என்னுடைய ஏற்றம் உனக்குத் தெரியாதோ பிரானே! “உன்னை யொழிய எனக்குச் செல்லாது,
என்னை யொழிய உனக்குச் செல்லாது“ என்னும்படியான உறவை யுணர்ந்து ஸர்வ காலமும் உன்னுடைய திருவருளுக்குப்
பரிபூர்ண பாத்ரமாயிருக்கப்பெற்ற வென்னுடைய ஏற்றம் அறியாயோ? என்கிறார் போலும்.

பெருமானே! உன்னுடைய திருவருள் என்மேல் ஏறிப்பாய வேண்டியதேயன்றி வேறொருவயும் விஷயமாக வுடையதன்று,
உன்னுடைய அருளுக்கு நானே இலக்கு, என்னுடைய வேண்டுகோளுக்கு உன்னருளே இலக்கு. இன்றைக்கோ நாளைக்கோ,
அன்றி இன்னமும் சிலகாலம் கடந்தபின்போ என்றைக்கானாலும் உன்னருள் என்மேல் ஏறிப்பாய்ந்தே தீரக்கடவது
என்கிற அத்யவஸாயன் எனக்குத் திடமாகவுள்ளது.

இங்ஙனே நான் சொல்லுவதற்கு யாதுகாரணமென்கிறாயோ? சொல்லுகேன் கேளாய், நான் உன்னை யன்றியிலேன் நீ யென்னை யன்றியிலே –
“நம்முடைய அருளை யாரிடத்து உபயோகிக்கலாம்!“ என்று நீ தயநீயரைத் தேடியிராநின்றாய்,
“நமக்கு எம்பெருமான் அருள்புரிவானோ? என்று நான் உன் தயையைத் தேடியிரா நின்றேன்,
உன்னையொழிய எனக்குப் புகலில்லை, என்னையொழிய உனக்குப் புகலிலே. ஆகவே, நின்னருள் என்பாலதே

நன்றாக–நிச்சயமாக – அத்யாவசாயம் திடமாக உள்ளதே –சம்பந்தம் உணர்ந்து -நானும் உனக்கு பழ வடியேன்-
உனது திரு அருளுக்கு பரிபூர்ண பாத்ரனான பின்பு -என்னுடைய ஏற்றம் அறியாயோ
உன் அருளுக்கு நானே இலக்கு -என் பிரார்த்தனைக்கு நீயே இலக்கு -நீ தயநீயரைத் தேடி இரா நின்றாய்
-உன் தயையைத் தேடி நான் இரா நின்றேன் –
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும்
அஃதே புகல் -அமுதனார் -இத்தை ஒட்டியே அருளுகிறார்

பின்னடிகட்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்;
நாராயணனே! உன்னை நிரூபிக்கவேண்டில் என்னையிட்டு நிரூபிக்கவேண்டும், என்னை நிருபிக்க வேண்டும், எ
ன்னை நிரூபிக்கவேண்டில் உன்னையிட்டு நிரூபிக்கவேண்டும், (அதாவது) “நாராயணன்“ என்றால் நாரங்களுக்கு அயநம் என்றபடி,
நாரபதார்த்தங்களில் தாம் சேர்ந்தவராகையாலே தம்மையிட்டு நாராயணனை நிரூபிக்க வேண்டியதாகிறது.
தம்மை நிரூபிக்கவேண்டுமானால் பகவச் சேஷத்வத்தையிட்டே அடியானென்று நிரூபிக்கவேண்டியிருப்பதால்
நாராயணனையிட்டுத் தம்மை நிரூபிக்க வேண்டியதாகிறது. சேஷசேஷிகளுடைய நிரூபணம் பரஸ்பர ஸாபேக்ஷமாகவே யிருக்குமன்றோ.
ஆகவே, சேஷியான உன்னையொழிய எனக்கு ஸத்தையில்லை,
சேஷபூதனான என்னையொழிய உனக்கு ஸத்தையில்லை என்றதாயிற்று என்று கொள்ளலாம்.

————————————————————————————————-

விரோதி நிரசனமே ஸ்வாபாவிகமாக உள்ள எம்பெருமானை தவிர்த்து மற்று யாரும் துணை இல்லை என்று
திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை--8-

பதவுரை

என் நெஞ்சே-எனது மனமே!
ஈசனை வென்ற–ருத்ரனை ஜயித்த
சிலை கொண்ட–வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா–பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்–கொத்துப் போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை–லங்காபுரியை
ஈடு அழித்த–சீர் கெடுத்த
கூர் அம்பன் அல்லால்–கூர்மை தாங்கிய அம்புகளை யுடையவனான இராம பிரானைத் தவிர்த்து
குறை–விரும்பத் தகுந்த
மற்ற துணை–வேறொரு துணைவன்
இலை–நமக்கு இல்லை.

விரோதி நிரஸநமே இயற்கையாகவுள்ள எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரும்
துணையாக வல்லாரில்லை யென்று தம் திரு வுள்ளத்துக்கு உபதேசிக்கிறாரிதில்.

ஈசனைவென்ற சிலைகொண்ட செங்கண்மால் –
ஒரு ஸமயத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ருத்ரனை ஒரு சிலையால் வென்றான், அந்த வில் பரசுராமனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது;
அதனை ஸ்ரீராமவதாரத்தில் மிதிலையில் நின்று மீண்டெழுந்தருளும்போது அப்பரசுராமனிடத்திற் கொண்டான்,
(இவ்வரலாற்றை விரித்துரைப்போம்) முன்னொரு காலத்தில் தேவசில்பியான விச்வகர்மாவினால் நிருமிக்கப்பட்ட
சிறந்த இரண்டு விற்களும் ஒன்றைச் சிவபிரானும் மற்றொன்றைத் திருமாலும் எடுத்துக் கொண்டார்கள்.
பின்பு ஒரு காலத்தில் அவ்விற்களுள் சிறந்தது இன்னதென்பதை அறிய விரும்பிய தேவர்களின் வேண்டுகோளால்
பிரமன் அரனுக்கும் அரிக்கும் போரை மூட்டிவிட, அங்ஙனமே அவர்கள் அவ்விற்களைக்கொண்டு போர்புரிகையில்
சிவபிரானது வில் சிறிது முறிபட்டது, அவ்வாறு இற்றவில்லைச் சிவபிரான் ஜநககுலத்துத் தேவராதனென்னும் அரசனிடம் கொடுத்திட,
அது வம்ச பரம்பரையாம் ஜநகமஹாராஜனளவும் வந்தது, இது நிற்க, இறாத வலிய வில்லை விஷ்ணு ரிசீகமுனிவனிடம் கொடுத்துச்செல்ல,
அது அவன் குமாரனான ஜமதக்நியினிடத்தும் அவன் குமாரனான பரசுராமனிடத்தும் பரம்பரையாய் வந்தது.
முற்கூறிய சிவதநுஸ்ஸை ஸீதைக்குக் கந்யாசுல்கமாக ஜநகன் வைத்திருந்தான், இராமபிரான் அந்த வில்லை முறித்துத்
தன் பேராற்றலை விளங்கச்செய்து பிராட்டியை மணந்துகொண்டு மிதிலாபுரியினின்றும் புறப்பட்டு அயோத்திக்கு வரும்போது
வழியிடையே செருக்கிவந்த பரசுராமனது கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை வாங்கி எளிதில் வளைத்து நாணேற்றிக் கணைதொடுத்து
“இவ்வம்புக்கு இலக்குஎன்?“ என்று வினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனத்து தபோபலம் முழுவதையுங் கொடுக்க,
அவன் க்ஷத்ரியை வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி
அவனைக் கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளினன் என்ற வரலாறுகள் இதிஹாஸப்ரஸித்தம்.
ஆகவே, இப்பாட்டில் “ஈசனை வென்ற சிலை“ என்றது பரசுராமன் கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை. அதனைக் கொண்ட செங்கண்மால் – ஸ்ரீராமபிரான்.
அப்படிப்பட்ட தன்னை யடிபணிந்து வாழமாட்டாத இராவணனைக் குடும்பத்தோடு கொன்றொழித்த எம்பெருமானைத் தவிர்த்து
நமக்குத் துணையாகவல்லார் ஆருமில்லை என்றாராயிற்று.

ஈசனை வென்ற செங்கண் மால் -பாணாசுரன் -விருத்தாந்தம் -என்று விசேஷணம் சிலைக்கு கொள்ளாமல்
செங்கண் மாலுக்கு
என்னவுமாம் –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பேற்றுக்கு அவன் கையையே பார்த்து இருப்பார்கள் -சாதன அனுஷ்டானங்களை அல்ல –
இப்பாட்டில் “கூரம்பனல்லால்“ என்றவிடத்துப் பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் –
“எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அசேதநமான க்ரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வஸித்திருப்பர்கள்,
இவர்கள் சக்ரவர்த்தித் திரு மகன் அம்பின் கூர்மையைத் தஞ்சமாக நினைத்திருப்பர்கள்“ என்று அச்சுப் பிரதிகளிற் காணப்படும் வாக்கியம் பிழை.
ஓலை ஸ்ரீ கொசங்களை ஆராய்ந்ததில் “எம்பெருமானார் ஸ்ரீபாத்ததை ஆச்ரயித்தவர்கள் அசேதநமான
க்ரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வஸித்திரர்கள், சக்ரவர்த்தித் திருமகன் அம்பின் கூர்மையே
யாயிற்றுத் தஞ்சமாக நினைத்திருப்பது.“ என்று காண்கிறது. இதுவே பொருத்தமுடைத்து.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பெற்றுக்கு எம்பெருமான் கைபார்த்திருக்கு மத்தனையொழிய
மூக்கைப்பிடித்தல் முதலிய ஸாதநாநுஷ்டாநங்களினால் பேறுபெற நினையார்களென்கை.

———————————————————————————————

ப்ரஹ்மாதிகளும் தாங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீ மன் நாராயணனை ஆஸ்ரயித்து அபிமதம் பெறுவார்கள் –
துணையாகும் தெய்வம் இன்னது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாமே -என்கிறார் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

பதவுரை

பிரமதேவன்
குறை கொண்டு–நைச்யாநுஸந்தானம் செய்து கொண்டு
குண்டிகை நீர்–கமண்டல தீர்த்தத்தை
பெய்து–வார்த்து
மறை கொண்ட–வேதங்களிலுள்ள
மந்திரத்தால்–புருஷ ஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி–மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு–(எம்பெருமான் உலகளந்தருளின) அக் காலத்தில்
அண்டத்தான் சே அடியை–அந்த ஸர்வேச்வானுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற–விஷ கண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்–விளக்கினான்.

குறை கொண்டு –-நைச்ய அனுஸந்தானம் பண்ணிக் கொண்டு
மறை கொண்ட மந்திரத்தால் -புருஷ ஸூ க்தாதிகளால்
வாழ்த்தி -மங்களா சாசனம் பண்ணி

கீழ்ப்பாட்டில் “இலங்கையையீடழித்த கூரம்பனல்லால் – இலை துணைமற்று“ என்றார். அப்படி சொல்லலாமோ?
பிரமன் சிவன் முதலானவர்களையும் துணையாகப் பற்றுகிறவர்கள் இவ்வுலகில் பலருண்டே! என்ன,
அவர்களும் தங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீமந்த நாராயணனையே ஆச்ரயித்து அபிமதம் பெற்றார்கள் காண்மின்
என்று சொல்லவேண்டி, உலகளந்த காலத்துத் திருவடிவிளக்கின இதிஹாலத்தை யெடுத்துரைக்கிறார் இப்பாட்டில்.

உலகளந்த பெருமானுடைய திருவடியைப் பிரமன் தனது கைக்கமண்டல தீர்த்தத்தினால் விளக்கினான்,
அது கங்கையாகப் பெருக அதனை சிரஸாவஹித்துப் பரிசுத்தியடைந்தது காரணமாகச் சிவனென்று பேர்பெற்றானொருவன்,
இனி, துணையாகுந்தெய்வம் இன்னதென்பதை நீங்களே அறிந்து கொள்மின் என்றவாறு.

குறைகொண்டு – “நீசனேன் நிறையொன்றுமிலேன்“ என்னுமாபோலே தன்னுடைய குறையை – நைச்சியத்தை அநுஸந்தித்துக்கொண்டு என்றபடி.
குண்டிகை – வடசொல் விகாரம். அமரர்க்கு அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்து அக்கடலினின்று தோன்றின காலகூட விஷத்தைச்
சிவபிரான் உட்கொண்டு கழுத்தளவிலே அடக்கிக் கொண்டது பற்றிக் கறை கொண்ட கண்டத்தான் என்று பெயர் பெற்றனன்.

————————————————————————————-

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

பதவுரை

ஆங்கு–பரமபதத்திலே
ஆரவாரம் அது கேட்டு–(நித்ய முக்தர்களுடைய) ஸாம கான கோஷத்தைக் கேட்டு
(அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து)
அழல் உமிழும்–விஷாக்நியைக் கக்குகின்ற
காண–ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே–ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
(நாம் ஸமர்த்தரேயாவோம்)
மா மலரான்–சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்–அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி–அழகிய திருமேனியை
யாம்–அநந்ய பக்தரான நாம்
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடைய ருத்ரனும்
வாழ்த்து–(எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே–அஸமர்த்தர்களே.

ஆங்கு–இரண்டு நிர்வாகங்கள்
1-பரமபதத்தில் -ஏதத் சாம கானம் -என்று அறியாமல் ப்ரேமம் அடியாக கலங்கி –
அஸ்தானே பயசங்கை-
அங்கும் நம்மால் சேவிக்க முடியாதோ -என்று
அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம்பெற்ற நமக்கு அப்பரமனுடைய திருமேனி ஸேவை எளிதேயாம்;
பின்னையார்க்கு அரிதென்னில்; இறுமாப்புக் கொண்டிருக்கின்ற தேவதாந்தரங்கட்கே அஃது அரிது.

அன்றிக்கே —
2–கீழ் பாட்டில் உலகு அளந்த வ்ருத்தாந்தம் அருளிச் செய்ததால் –அவ்வவதார சமயத்திலே
திசை வாழி எழ -மங்களா சாசன கோலாஹலத்தை சொல்லி அஸ்தானே பயசங்கை என்னவுமாம் –
திசைகள்தோறு முண்டான மங்களாசாஸந கோலா ஹலத்தைக் கேட்டுத் திருவனந்தாழ்வான் தானும் தன்னாலான
ரகைஷ யிட வேண்டி அழலை உமழ்ந்தபடியைச் சொல்லிற்றாகவும் நிர்வஹிப்பதுண்டு.
ஆகவே முதலடியில் மாத்திரம் இரண்டு வகையான யோஜநாபேதம்.

—————————————————————————————

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11–

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்–திருத்துழாய் மாலை
மன்னு–பொருந்தி யிருக்கப் பெற்ற
நீள் முடி–நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை
வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
வண் கை கூப்பி மதித்து–அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மகுடம் தாழ்த்தி–தலையை வணக்கி
தண் மலரால்–குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
வணங்கு மின்கள்–ஆச்ரயியுங்கள்,
வாய்–(உங்களுடைய) வாய்
வாழ்த்துக–(அவனைத்) துதிக்கட்டும்,
கண்–கண்கள்
காண்க–(அவனையே) ஸேவிக்கட்டும்
செவி–காதுகள்
கேட்க–(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.

வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்

செவி வாய் கண் முதலிய உறுப்புகள்யாவும் பகவத் விஷயத்தில் உபயோகப்படுவதற்கென்றே படைக்கப்பட்டன வாதலால்
அவற்றை அவ்விஷயத்திலேயே உபயோகப்படுத்துங்கோள் என்று பரோபதேசம் பண்ணும் பாசுரம் இது.
உங்களுடைய வாயை அவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் ஊன்ற வையுங்கள்,
கண்களை அவனுடைய திவ்யமங்க விக்ரஹஸேவையில் ஊன்றவையுங்கள்,
செவிகளை அவனுடைய புண்ய கீர்த்திகளைக் கேட்பதில் ஊன்றவையுங்கள்,
தலையை அவனது திருவடிகளில் வணக்குங்கள்,
கைகளை அஞ்ஜலி செய்வதிலும் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு ஸமர்ப்பிப்பதிலும் உபயோகப்படுத்துங்கள்,

அவன் எப்படிப்பட்டவனென்றால், “எல்லாரையும் ரகஷிக்கக் கடவேன்“ என்று முடி கவித்துத் தனிமாலை யிட்டிருக்குமவன்,
என் போல்வாரிடத்தில் நெடுங்காலமாகவே வியாமோஹம் வைத்து ஆட்படுத்திக் கொள்ள அவஸரம் பார்த்திருக்குமவன்.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே உங்களுடைய ஸகல கரணங்களையும் உபயோகப்படுத்தி உய்வு பெறுங்கோள் – என்றாராயிற்று.

மகுடம் – தலைக்கும் கிரீடத்திற்கும் பெயர்.

—————————————————————————————-

ஆழ்வார்கள் போது போக்கு பலவகை –பரோபதேசமாகவும் -தம் திரு உள்ளத்துக்கும் -எம்பெருமானையே நோக்கி
அருளிச் செய்யும் பாசுரங்களாய் இருக்குமே -இது அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

பதவுரை

மதியார்–உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்–நால்வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ–சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்,
மதி–சந்திரனுடைய
கோள்–துன்பத்தை
விடுத்தாய்–போக்கி யருளினாய்
மடு–ஒரு மடுவிலே
கிடந்த–(சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை–பெரிய முதலையினாலுண்டான
கோள்–(கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்–நீக்குவதற்காக
ஆழி–திருவாழியை
விடற்கு–(அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்–நினைத்தருளினாய்
இரண்டும்–முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்–ஒன்றையொன்று விட்டுப்போய்
இரண்டின்–அவ்விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு-சாப மோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்.

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ–
மதியார்–நான்கின்–போய் – போய் வீழ-மதித்தாய் -உன்னைச் சிந்தியாதவர்கள் -வீடு பெறாமல் –தேவாதி நான்கு
யோனிகளிலே சென்று பல காலும் விழும்படியாக சங்கல்பித்தாய்
அன்றிக்கே —
நான்கின் மதியார் போய் வீழ–மதித்தாய்
-என்று கொண்டு –நான்கு வேதங்களைக் கொண்டு
உன்னைச் சிந்தியாதார் ஆஸூர யோனிகளில் விழும்படியாக சங்கல்பித்தாய் -என்றுமாம்

இரண்டும் போய் இரண்டின் வீடு -மதித்தாய் –ஒன்றை விட்டு ஓன்று போய்-முதலைக்கு சாப மோக்ஷமும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு மோக்ஷ சாம்ராஜ்யமும் -சங்கல்பித்தாய்
இந்த்ரத்யுத்மன்-அரசன் விஷ்ணு பூஜையில் ஆழ்ந்து அகஸ்தியர் வருவதை லக்ஷணம் பண்ணாமல் சாபம் பெற்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்
ஹூ ஹூ கந்தர்வன் தேவலாம் என்னும் முனிவர் நீரில் இருக்க காலைப் பற்றி இழுத்த சாபத்தால் முதலை ஆனான் –

இரண்டும்போய் இரண்டின் வீடு மதித்தாய் – முதலையும் சாபங்கொண்டிருந்தது, கஜேந்திரனும் சாபங்கொண்டிருந்தான்,
எங்ஙனேயென்னில், மஹாவிஷ்ணுபக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் ஏகாக்ரசித்தனாய்
விஷ்ணு பூஜை செய்துகொண்டிருந்தபோது அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள,
அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தி யிருந்த்தனால்
அம்முனிவனது வருகையை அறியாதவனாய் அவனுக்கு உபசாரமொன்றும் செய்யாதிருக்க,
அம்முனிவன் இப்பழ நம்மை அரசன் அலகஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து
“நீயானை போலச் செருக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை“ என்ற சபித்தான்.
(அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றின்னாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால்
அப்பொழுதும் விடாமல் நாடோறும் ஆயிரந்தாமலை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்து வருகையில்
ஒரு நாள் பெரியதொரு தாமரைத் தடாகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப் போய் இறங்கி முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டது.)

முன்பொருகால், தேவலன் என்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்தபோது
ஹூஹூ என்னுங் கந்தர்வன் அம்முனிவனது காலைப்பற்றி யிழுத்தான், அதனால் கோபங்கொண்ட அம்முனிவன்
“நீ ஜலஜந்துபோல் மறைந்து வந்து அபசாரப்பட்டதானல் முதலையாகக் கடவை“ என்று சவித்தான்.
முதலைக்கு சாபமோக்ஷம் உண்டாயிற்று, கஜேந்திரனுக்கு சாபமோக்ஷமும் ஸாகஷாந்மோக்ஷமும் உண்டாயின.

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: