இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

பிரகிருதி வஸ்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒரு வகை தப்பாது –
-ஆன பின்பு அவன் திருவடிகளை வணங்கப் பாருங்கோள் என்கிறார்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான பல வகைப் பட்ட சாஸ்த்ரங்களாலும் யதாவாக அறுதியிடப் பட்டு இருக்குமவனாய்
-கறுத்த கடலாலே சூழப் பட்டு இருக்கிற இந்த பூமியை எல்லாம் அளந்து கொண்ட ஸுலப்யத்தை யுடையவனுடைய
சிவந்த திருவடிகளை சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு பொறுக்க ஒண்ணாத நரகங்களில் சென்று கிட்டாத படி யாக
-பாப பலமான நரகம் வரில் செய்வது என் -என்று அஞ்சி அறிவு கலங்குகிற நீங்கள் பின்னைச் செய்கிறோம் என்று
ஆறி இராமல் ஒரு க்ஷணம் ஆகிலும் முற்பட ஆஸ்ரயிக்க உத்ஸாஹிய்யுங்கோள்-

————————————————————————————————

அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்-

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்று என் போல்வார் பிரார்த்திக்குக் கிடக்குமதாய்-நிரதிசய ஸூ குமாரமான திருவடிகளாலே
அவன் நினைத்த வஞ்சனம் அவனோடேயாம்படி ஏற்கவே கம்சனை உதைத்து முடித்து அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று
ப்ரஹ்மாதி தேவர்கள் -தேவராலே எங்கள் குடியிருப்புப் பெற்றோம் -என்று வாய் விட்டுப் புகழும் படியான ஸ்வ பாவத்தை யுடையனாய்
-ரக்ஷணத்துக்கு கட்டின கொடி மேல் -கருடத்வஜன் என்னும் படி எடுக்கப் பட்ட பெரிய திருவடியை யுடையனாய்
-தன் பக்கல் ஓரடி வர நின்றவர்களை நெடுக நினைத்து நினைத்து கொண்டு இருக்கும் ஸ் வ பாவனுடைய திரு நாமங்களையே சொல்லி
வாய் விட்டுப் புகழுங்கோள் -இப்படி புகழ்ந்தால் தம் தாமுக்கு அபேக்ஷிதமான ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்கள் ஆகிற
சகல புருஷார்த்தங்களையும் எத்தின வாய் மூடுவதுக்கு முன்னே சீக்கிரமாக கைப்படும் படி காட்டித் தரும் –

—————————————————————————————————–

குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே -நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

குரூரமான நரகம் முதலிலே கண் கொண்டு காண ஒண்ணாத படி சால வெவ்விதாக இருக்கும் -பின்னும் கர்ம அனுகுணமாக
-சேவதக்குவார் போலே புகுந்து -என்கிறபடியே -யமபடர் பண்ணைக் கடவ நெளிவுகள் மிகவும் துஸ்ஸஹமாய் இருக்கும் -என்று
அவற்றை அனுசந்தித்து நரக தரிசனமும் -அவர்கள் பண்ணும் நலிவும் வந்து கிட்டு வதுக்கு முன்னே எதிரிகளை முடிக்கும்
கூரிய த்வனியை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய் கேசியினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டவனாய்
பூதனையினுடைய முலையில் நச்சுப்பாலை யுண்டு அவளை முடித்துப் பொகட்டவனை -மேல் எழ அன்றிக்கே
ச மனசமாக உறைத்து நின்று ஸ்தோத்ரம் பண்ணுங்கோள் / வடி சங்கம் -அழகிய சங்கம் -என்றுமாம் –

——————————————————————————————–

என்னுடைய நெஞ்சு கண்டீர்களே ஏத்துகிற படி -அப்படியே நீங்களும் ஜகத் ரக்ஷண ஸ்வபாவனாய்
-நிரதிசய போக்யனானவனை ஏத்துங்கோள் -என்கிறார் –

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பூமியாதிகளான சகல லோகங்களையும் ஒன்றும் பிரி கதிர் படாத படி திரு வயிற்றிலே வைத்து நோக்கும் ஸ்வ பாவனாய்
-அத்தாலே வந்த ஹர்ஷம் நிழலிட்டுத் தோற்றும் படி இருக்கிற வர்ஷூகவலாஹகம் போன்ற வடிவை யுடையவனாய்
-பிடித்த பிடியே பிணமாம் படி பிடித்துத் தன்னுடன் பொருந்தாத ஹிரண்யனுடைய மார்பை இரண்டு கூறாகப் பிளந்து பொகட்டு
-பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்காக நிரதிசய போக்யமான திருப் பாடகத்திலே சிறுக்கனுக்கு உதவினபடியை
எல்லாரும் காண வேணும் என்று எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரனை என்னுடைய நெஞ்சானது
இவ்வோ ஸ்வ பாவங்களைச் சொல்லி புகழா நிற்கும் -இப்படியே நீங்களும் உங்கள் யோக்யதை நினைத்து பிற்காலியாதே
கிட்டி நின்று பஃன அபிமானராய்த் திருவடிகளிலே விழுந்து அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் –

—————————————————————————————————

ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி –
என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் –

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

சதேவ சோமியேதம் அக்ர ஆஸீத் –என்கிறபடியே ஸ்ருஷ்டே பூர்வ காலத்தில் அழிந்த ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகக் கால
உபலஷிதமான ஸூ ஷ்ம சித் அசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு நின்றவனாய் இப்படி ஸ்ருஷ்டித்த அளவிலே
தன்னை வழி படாதே இவை அதி பிரவ்ருத்தமானவாறே கால சேஷமாம் படி இவற்றை சம்ஹரித்தவனாய்
ஸ்ருஷ்டமான ஜகத்தை ரஷிக்கைக்காக -லோகத்தில் உள்ளவர்கள் இருந்ததே குடியாக ஏத்தி ஆஸ்ரயிக்கும் படி –
-திருப் பாற் கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளினவனாய் -அங்கு நின்றும்
-நரசிம்ஹ ரூபியாய் வந்து அவதரித்து -ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய -தன் உக்ரமான வடிவைக் கண்டும் இள காத படி
-கடினமான ஹிருதயத்தைக் கிழித்துப் பொகட்டவனாய் -கிறுக்கன் விரோதி போகப் பெறுகையாலே -நீல மணி போலே இருந்து
குளிர்ந்த வடிவை யுடையனாய் -அக்காலத்தின் பிற்பாடாரையும் ரஷிகைக்காகத் திருவத்தி யூரிலே வந்து நின்று அருளின
நீர்மையில் ஏற்றத்தை யுடையவன் –இடவகைகள் இகழ்ந்திட்டு என்கிறபடியே இந்தத் திருப் பாற் கடல் திரு வத்தியூர் ஆகிற இடங்களை
உபேக்ஷித்து -ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
-நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
-தலை மேல் தாளிணைகள் என்னும் படி என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
-ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

——————————————————————————————————

உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர் என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பெரிய திருவடியை -மேற்கொண்டு -நடத்துமவனாய் -அணிய பட்ட மாணிக்கங்களும்-அழகிய பொறிகளும் சேர்ந்து இருக்கிற
திரு வனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -மோக்ஷ ப்ரதிபாதங்களான வேதாந்த பாகங்களாலே
பிரதி பாதிக்கப் படுமவனாய் -பெரிய கடலில் பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை
ஈஸ்வரனாக அபிமானித்து இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரனான எம்பருமான் இப்படி உபய விபூதி உக்தனாய்
வேதாந்த வேத்யனான தன் பெருமை பாராதே எங்களுக்கு உபகாரம் பண்ணுமவனாய்க் கொண்டு திருவத்தியூரிலே வந்து அருளினான் –
ஸூ ரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
-சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று -என்கை
முத்தீ மறையாவான் -என்ற பாடமான போது த்ரேதாக்னியைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே
ஸமாராத்யத்தயா ப்ரதிபாதிக்கப் படுமவன் என்று பொருளாகக் கடவது –

———————————————————————————————–

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திரு குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடியான பெரிய பிராட்டியாரை த் திரு மார்பிலே யுடையவனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அவர்களுக்கு போக்யமான சிவந்த திருக் கண்களை யுடைய சர்வாதிகனான சர்வேஸ்வரனாய்
-ஆஸ்திரிதரான எங்களுக்கு ஸ்வாமி யான நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
-திரு மேனி ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களையும்-திரு மூக்கையும் யுடையவனாய் அனுபவ ஜெனித ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு
ஏத்துகைக்கு ஆயிரம் வாயையும் யுடையனுமான திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டு அருளினாய் –

——————————————————————————————————-

தம்மை விஷயீ கரித்த சர்வேஸ்வரனுடைய அக்கடிதக்கடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை
முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் –

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

இடையனாய் வந்து பிறந்து அருளி -ஜாதி உசிதமாக ஐஸ்வர்ய செருக்காலே குடம் எடுத்துக் கூத்தாடி -அந்தக் குடக் கூத்தாடின
சுவடோடே இடைவெளி அறப் பொருந்திக் கொண்டு என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமியான
சர்வேஸ்வரன் -சிலர் எடுத்துக் கொண்டு சீராட்டி வளர்க்க வேண்டி இருக்கிற முக்த சிஸூவான வடிவை யுடையனாய்க் கொண்டு
தான் வளர்ந்து -அத்தசையிலே திரு வயிற்றுக்கு உள்ளே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்தது சகல லோகங்களையும் –
கொண்ட வடிவின் சிறுமையையும் -உண்ட லோகத்தின் பெருமையையும் -அது தான் திரு வயிற்றிலே
ஒரு புடையில் அடங்கின படியையும் -இது ஒரு ஆச்சர்யம் இருக்கும் படியே என்று விஸ்மிதராய் அனுபவிக்கிறார் –

——————————————————————————————-

பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் –

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

ஈஸ்வரோஹம் என்று காளமூதித் திரிகிற துர்மானிகளான ப்ரஹ்மாதி தேவர்கள் தாங்கள் துர்மானத்தையும் -ஊதின காளத்தையும் பொகட்டு –
எங்களுக்கு வகுத்த ஸ்வாமி யான ஸர்வேஸ்வரனே -எங்கள் பக்கல் கிருபை பண்ணி அருள வேணும் -என்று அர்த்தித்துக் கொண்டு
-அவன் சேஷியாயும் தங்கள் சேஷபூதருமான முறையிலே நின்று -அழகிய புஷ்ப்பங்களை அக்ரமமாகப் பணி மாறிக் கொண்டு ஆஸ்ரயிக்க
-த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தான சிவந்த திருவடிகளை யுடையனாய் -ஐஸ்வர்ய ஸூ சகமான
சிவந்த திருக் கண்களை யுடையனான சர்வாதிகனான சர்வேஸ்வரன் -அந்த தேவர்கள் விஷயத்தை மதகு திறந்து பாய்கிற
வியாமோஹத்தை யுடையனாய்க் கொண்டு -ஸ்ரீ வாமன ரூபியாய் வந்து திரு அவதரித்து அருளி லோகம் அடங்க
விழுங்கும் படி முசிவற வளர்ந்த வடிவை யுடையனாய்க் கொண்டு பூமியை அளந்து கொண்டான் –முறை நின்று -பர்யாயமாய் நின்று என்றுமாம் –

———————————————————————————–

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

ஸ்வரூப ரூப குணங்களால் வந்த பெருமையை உடையனாய் விபூதி யோகத்தால் வந்த வைபவத்தை யுடையனாய் –
ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகனாய் -பரமபத வாசிகளான நித்ய ஸூ ரிகளுக்கு அவ்வருகு பட்ட இருக்குமவனாய் –
அவர்கள் உகக்கும்படி அத்யாச்சர்யமான திருத் துழாய் மாலையாலே அழகு பெற ஒப்பித்துக் கொண்டு இருக்குமவனாய் –
இப்படி இருந்து வைத்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அஸூரா விஷ்டமாய் நின்ற விளாவின் காயை அஸூரமயமான கன்றாலே விழ விட்டவனே
உன் பக்கல் நான் உடையேனான ப்ரேமம் ஆச்சர்ய பூதனான என்னளவில் அடங்கி நிற்பது ஓன்று அன்று
தர்மி அழியாத படி அத்தை அகஞ்சுரிப் படுத்தித் தந்து அருள வேணும் -அதவா
ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் -அந்த வியாமோஹம் ப்ரேரிக்க
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யாநாய இருக்குமவனாய்
இந்நிலையில் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் -ஐஸ்வர்ய ஸூ சகமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
விளாவாய் நின்ற அசுரனை கன்றாய் நின்ற அசுரானாலே யறிந்து விழ விட்ட -இரண்டையும் முறித்துப் பொகட்டால் போலே
என் விரோதியைப் போக்கினவனே -எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று -இத்தை அமைத்து அருள வேணும் -என்கிறாராகவுமாம் –

——————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: