இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று பழங்கிணறு வாருகிறது என் –
இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

இது நெடுங்காலம் பகல் விரவாத சம்சார காள ராத்திரியிலே கண் கெட்டு முன்னடி தோற்றாதே திரிந்த நான் –
இப்போது -ஸூ ப்ரபாதா ச மே நிசா –என்னும்படி -இரவு விரவாத பகலாய்ச் செல்லும் படியான தொரு நல் விடிவைக் கண்டேன் –
பகவத் ஆஜ்ஜைக்கு பயப்பட்டு முப்பத்து வட்டத்தில் போவது வருவதாய்த் திரிகிற ப்ராதேசிகனான ஆதித்யன் அன்றிக்கே –
ஒரு காலத்திலும் போக்கு வரத்து அன்றிக்கே -சாஸ்தா ஜனா நாம் -என்னும் படி சர்வத்தையும் நியமித்துக் கொண்டு
உபய விபூதி உக்தன் ஆகையால் சார்வத்ரிகனான நாராயணன் ஆகிற ஆதித்யனைக் கண்டேன் –
இந்திரியங்கள் துணை செய்யக் காண்கிற காட்சி அன்றிக்கே -ஸ்வப்னதீகம்யம் -என்னும் படி நேர் கோடு நேரே நெஞ்சாலே
காணப்படும் ஸ்வப்ன அவஸ்தையிலும் காட்டிலும் விசதமாய்-ப்ரத்யக்ஷ சாமானகாரமான மானஸ ஞானத்தால்
இந்திரியங்கள் கலக்க ஒண்ணாத படி அழகிதாக மீண்டு அவனைக் கண்டேன் –
வடிவு அழகு விளங்கா நின்றுள்ள திரு வாழி யையும் புகர் விளங்கா நின்றுள்ள சிவந்த திருவடிகளையும் யுடைய சர்வேஸ்வரனுடைய
பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள தேஜஸ்ஸை யுடைத்தான
வடிவு அழகை ப்ரத்யபி ஜ்ஞார்ஹமாம் படி அழகிதாகக் கண்டேன்
வான் திகழும் -என்றது மேகத்தோடு ஓக்க விளங்கா நின்றுள்ள திரு மேனி என்னவுமாம் –
ஊன் திகழும் என்றது சர்வேஸ்வரன் திரு மேனியில் விளங்கா நின்றுள்ள திரு வாழி என்னவுமாம் –சத்ரு சரீரத்தில் விளங்கும் என்னுதல் –

—————————————————————————————-

வெறும் நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

நாட்டில் அழகு அடங்க லும் கோதாம்படி-அழகு படைத்த அவன் அழகு ஆகிற கோது கலவாத வடித்த அழகையும் –
வடிவிலே வடிவாய் ஒளி பெற்று போக்தாக்கு அளவிட ஒண்ணாத மிக்க யோக்யதையை யுடைத்தான திருக் கண்களையும் யுடையளாய்
-ஸ்லாக்யமான தாமரைப் பூவைப் பிறப்பிடமாக யுடையளாகை யாலே -ஸுகந்த்ய ஸுகுமார்யங்களைக் குறைவற உடையளுமான
பெரிய பிராட்டியாரும் -அரும்பினை அலரை-என்கிறபடியே செவ்விய ஸ்வபாவமான அவன் வடிவு அழகைக் கண்டு
அனுபவித்துக் கண்ணை மாற வைத்தல் கால் வாங்குதல் செய்ய மாட்டாதே -அவ் வழகு வெள்ளத்திலே ஆழம் கால் பட்டு
-இறையும் அகலகில்லேன் -என்னும் படி கால தத்வம் உள்ளதனையும் -க்ஷண காலமும் விஸ்லேஷிக்க க்ஷமை அன்றிக்கே இரா நின்றாள்-
-ஷமையே வடிவான ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் -தலை நீர்ப் பாட்டிலே அனுபவிக்க இட்டுப் பிறந்த பேர் அளவு யுடையளான
அவள் ஆழம் கால் பட்டு அழுந்து கிறபடியைக் கண்டு இருக்கச் செய்தேயும் அவளும் அவனுமான சேர்த்தியைக் கண் அழிவு அற
அனுபவிக்கைக்கு அநு குணமாக -இலை அகலப் படுத்துப் பாரித்து ஆசையைப் பண்ணிக் கொண்டு செல்லுகிற இது ஏதாய் இருக்கிறதோ
-இதுக்கு அடி -இருவருக்கும் பாத்தம் போராமல் சீறு பாறு என்ன வேண்டும் படி போக்யதை அளவு பட்டு இருக்கிற ஷூத்ர விஷயங்கள்
போல் அன்றிக்கே திரள் திரளாக இழிந்தாலும் குமிழ் நீர் உண்ணும் படி அழகால் குறை வற்று இருக்கை இ றே –

——————————————————————————————-

பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே முன்பு செருக்கி வார்த்தை சொன்னவர் –
இப்போது நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி -நாம் இவ்விஷயத்தையோ
கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

அவன் படிகளை உள்ளபடி தறை கண்டு பேச ஒருப்பட்ட வேதங்களானவை -அது என்று சொல்லும் அத்தனை போக்கி
-இதம் இத்தம் என்று பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பெருமையை யுடைய சர்வேஸ்வரனை அபரி பூர்ணானமாம் படியாக
ப்ரேமம் வழிந்த -செவிக்கு இனிய செஞ்சொல் அன்றிக்கே -கேட்டார் செவி வெடிக்கும் படி இருக்கிற வெட்டிய சொற்களால் சொன்னேன் –
இப்படிச் சொல்லி விஷய வைபவத்தைப் பார்த்ததும் அனுதபிக்க வேண்டி இருக்க -அது செய்யாத அளவன்றிக்கே-
-ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையனானவன் இடத்தில் நின்றும் உண்டாய் வரக் கடவதான பிரசாதமானது
பண்டு கவி பாடினவர்களுக்கு அவன் கொடுத்துப் போரும் படியை நினைத்து -நான் பாடின கவிக்கு பரிசிலாக ஏதேனும்
சிறிதாகிலும் தாராதோ -என்று அநேக நாள் எல்லாம் பிரதியுபகாரமாக நிரீக்ஷித்துக் கொண்டே இருந்தேன் –
விஷய கௌரவத்தையும் சொல்லின் பொல்லாங்கையும் பச்சையை நச்ச இருந்த படியையும் நினைத்து என்ன மூர்க்கனோ -என்று அனுதாபிக்கிறார் –
பின்னை இவர் ஒரு பிரயோஜனத்துக்குக் கவி பாடினவரோ -என்னில் -இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக்
கடாஷிக்குமாகில் -அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு என்று இருப்பார் ஒருத்தர் இ றே -அத்தாலே குறை இல்லை –
சென்ற வரம் -அவன் பக்கல் சென்று பிறக்கக் கடவ வார்த்தை – அவன் இறை யேனும் ஈயும் கொல்-என்று இருந்தேன் -என்றுமாம் –
மறை யாங்கு என உரைத்த மாலை—வாக் விக்ருதாஸ ச வேதா -என்கிறபடியே சொல்லுகிற
வார்த்தை எல்லாம் மறை என்னும் படி சொல்லுமவன் என்னவுமாம்
இத்தால் அகச் செறிவில் பொல்லாங்கு அறியான் ஒருவனைச் சொல்லப் பெற்றதோ -சர்வஜ்ஞனை இ றே நான் மருட்டிச் சொல்லிற்று என்கை –

——————————————————————————–

விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய
ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

தேவர்கள் பக்கல் பெற்ற வரத்தைத் தனக்கு உறுதியாக நினைத்து -அந்த தேவர்களுக்கும் அடியான பெருமையுடையனான தன்னை
ந நமேயம் என்னும் படி வணங்காதே போந்தவனாய் -அந்த தேவர்கள் வரத்தால் வந்த மிடுக்கையும் -தன் தோளாலே எறிந்து கொண்ட
மிடுக்கையும் தனக்கு உபகரணமாக உண்டு என்று கருதி –
அத்தால் வந்த மேனாணிப்பை யுடையனான ஹிரண்யனை -சேராச் சேர்த்தியான நரத்வ ஸிமஹத்வங்களோடே கூடின வடிவை
யுடையனாய்க் கொண்டு கிழித்துப் பொகட்டவனாய் -பரஸ்பர விருத்தமான இரண்டு வடிவை எடுத்துக் கொண்ட அளவில் பொல்லாதாய்
இருக்கை அன்றிக்கே -சேர் பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போலே அத்யந்த ரசாவஹமான அழகை யுடையவனுடைய
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளே -அழகிய இடமுடைத்தான மஹா பிருத்வியிலே அநந்ய பிரயோஜனர்க்கு புஜிக்கலாம் படி
நிரதிசய போக்யமான அம்ருதம் -மூர்க்கத்தவனை என்ற பாடமான போது -மூர்க்கனான ஹிரண்யனை -என்றபடி –

——————————————————————————————-

அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுத்தன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

நித்ய போக்யமான அம்ருதம் என்றும் -சர்வ ரஸ சமவாயமான தேன் என்றும் -நிரதிசய போக்யமான திரு வாழியை யுடையவன் என்றும் –
அஸூர பய வீதராய் தேவர்கள் சரணம் புக்க வன்று -கடலில் சாரமான அம்ருதத்தை அந்தக் கடலைக் கடைந்து வாங்கிக் கொண்டு கொடுத்து
இதுக்காக வாகிலும் நம்மை வந்து அர்த்திக்கப் பெற்றோமே என்றும் ப்ரீதனானான் என்றும் -ரஸோ வை ச -என்றும் -சர்வ ரஸ -என்றும்
மத்வ உத்ஸ -என்றும் -த்ருத சங்க சக்ர -என்றும் -சொல்லும் ஸ்ருதி சாஸ்த்ரங்களாலே சொல்லப் பட்ட வி லஷணனான சர்வேஸ்வரனை
ஆதாரதிசயம் தோற்றப் புகழ்ந்து சொல்லி -எல்லா போக்யத்தையும் -தன் போக்யத்தையிலே பொதிந்து இருக்கையாலே
அமுது என்று சொல்லப்படுகிற அவனையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய்
இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன் –

——————————————————————————————

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ -சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

அவன் திரு நாமங்களை ஆதாரம் தோற்றப் பல காலும் சொல்லிக் கொண்டு -சப்தார்த்த சம்பந்தம் அறிந்து கவி பாட வல்ல
பிரயோஜனாந்தர பரரான கவிகள் -செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு அந்த சர்வேஸ்வரன் இடத்தில் நெருங்கி ஆஸ்ரயிக்க
அத்தால் பெற்ற பிரயோஜனம் ஏதோ -இப்படி நெருங்கி சாதன அனுஷ்டானம் பண்ணினாருடைய சரீரத்தை ஒறுத்துப் பண்ணின
தபஸ்ஸாலே காண அரியனாய் -மேகம் போலேயும் -நீல மணி போலேயும் ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமான சர்வேஸ்வரனை
அதி ஸூத்ரனான நான் இன்று எந்தத் தபஸ்ஸாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே என்று கருத்து –

—————————————————————————————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட
அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

ஒரு சாதனத்தை அறிந்து அனுஷ்டிக்கைக்கு யோக்கியதையும் கூட இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்துக்கு உள்ளே கிடந்து
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே சந்நிஹிதனாய் -கர்ப்ப ஸ்தானான என்னுடைய தய நீய தசையைக் கண்டு
நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த என் ஸ்வாமி யுடைய குண சேஷ்டிதாதிகள் ஆகிற பிரகாரத்தைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்
-அனுபவத்துக்கு போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அந்வயிக்கப் பெற்றேன்
-ஆனபின்பு பரப்பை யுடைத்தான பூமியை ஒருவர் இரக்க அன்றிக்கே -அங்கே தானே சென்று
அளந்து கொண்ட திருவடியை இன்றாக அறிகிறேன் அல்லேன்-

——————————————————————————————–

அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை –வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் –

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

திருத் தேர்த் தட்டிலே அர்ஜுனன் ஒருவனுக்கும் -ஒரு கால் மாமேகம் -என்று சொன்ன தம்முடைய நிரபேஷ உபாயத்தை
சர்வ காலத்திலும் சர்வர்க்கும் கிரயம் செலுத்திக் கொண்டு
அழகிய கோயிலிலே அர்ச்சாவதார ஸூ லபனாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளுகிற என் ஸ்வாமி யான பெரிய பெருமாளுடைய
மற்று ஒன்றால் -சலிப்பிக்க ஒண்ணாத நிரபேஷ உபாய பாவம் ஆகிற மஹா மார்க்கத்தைப் பற்றி நடக்கும் அவர்களுக்கு ஒழிய
அனுபவத்தாலும் தொலைக்க ஒண்ணாத படியான அவிஸால்யமாய் -அடித்தலை கண்டு அறுக்க ஒண்ணாத படி
தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரம் ஆகிற நரகத்தைத் தாங்கள் சாதன அனுஷ்டானத்தாலே போக்கித் தாங்கள் சென்று
கிட்டுவதுக்கு முன்னே நித்ய ஸூ ரிகள் நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற ஸ்தலமாய்-ஸ்வ யத்னம் சாத்தியம் அல்லாத
அரணை யுடைத்தான கலங்காய் பெரு நகரின் வாசலில் கதவு தப்பிற்று -இப்போது இத்தை நிரூபித்து அறிந்தேன்
-கடி என்று பரிமளமாய்-போக்யதை விஞ்சின நகரம் என்றுமாம் –
இத்தால் பகவத் ப்ரீதி சாத்தியம் பரம பதம் -ஸ்வ யத்ன சாதனம் அன்று யந்திர படி –

—————————————————————————————————-

நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மை பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன -விரோதியைப் போக்கியும்
விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் –

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

மிக்க சீற்றத்தை யுடையனான கம்சனைச் சீறி அவன் ஸந்நிதியில் தன் கொலை தானே காணும்படி முடித்து
-தப்பிப் பிழைக்க இடம் அறும் படி அடர்த்து யுத்த உன்முகமான குவலயா பீடத்தை அநாயாசேன முறித்து விழ விட்டு
இப்படி மிடுக்குக் கொண்டு வியாபாரிக்க ஒண்ணாத படி உதாரம் என்பதொரு குண லேசம் கிடக்கையாலே நீர்மையை
யுடைமையாய்க் கொண்டு கொடுத்து வளர்ந்த கையாலே உதக ஜலத்தை ஏற்று வாங்கி முன்பு ஒரு காலத்தில் கொடுக்கையில்
தீஷித்து இருந்த மஹா பலியை இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்மச்சாரியாய்க் கொண்டு பூமியை அவன் பக்கலில்
நின்றும் வாங்கிக் கொண்டிலையோ -உன்னை ஆஸ்ரயித்த வா ஸூ தேவர் -தேவகியார் -இந்திரன் இவர்களுக்கு விரோதியைப் போக்கிக்
கார்யம் செய்து கொடுத்திலையோ -என்றபாடு -கதவுகை -சீறுகை / அதவுகை – நெருக்குகை –
கதவிக் கதஞ்சிறந்து -என்ற பாடமான போது -கோபத்தால் சிறந்து அழகியனாய் -என்ற பொருளாகக் கடவது
-பதவி என்றது -பதவி என்று வழியாய் கம்சனைக் கொன்றால் போலே மூலை அடியே யன்றிக்கே வழி கொடு வழி என்னவுமாம் –

———————————————————————————————–

நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் -உமக்குப்பெற வேண்டுவது
சொல்லீர் என்ன -உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார்

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

ஸ்ரீ யபதியாய் -வாத்சல்ய அம்ருத வர்ஷியான சிவந்த திருக் கண்களையும் யுடையனாய் -ருணம் ப்ரவ்ருத்தம் -என்னும் படி
ஆஸ்ரித விஷயத்தில் -எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று உருகி நெஞ்சு பதண் பதண் என்று
இருக்குமவனாய் எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டி -அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
பூமி யுப லஷிதையான லீலா விபூதியை நான் இட்ட வழக்காக நிர்வஹியேனோ -நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான
பெருமையை உடையனாய்க் கொண்டு பரம பதத்தில் கால தத்வம் உள்ளதனையும் ஸூ கோத்தரனாய் பொருந்தி இரேனோ-
உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

—————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: