இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -71-80- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து
நித்ய ஸூ ரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் –

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பரிவின் கனத்தாலே ப்ரிதி கூலர் மேலே விஷத்தை உமிழா நின்றுள்ள பயங்கரமான வாயை யுடைய திரு வனந்த ஆழ்வான்
மேலே சாய்ந்து அருளக் கடவ ஸுகுமார்யத்தில் பிரதானனானவன் -காடுமோடையுமான திக்குகளோடு கூடின பூமியை
அளக்கைக்காகப் புஷப ஹாஸ ஸூ குமாரமான திருவடிகளை வளர்த்து அருளின காலத்தில் இடது திருக் கையிலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதை போது பிறந்த விஜயத்தை அனுசந்தித்த ஹர்ஷத்திலே பிரதி கூலர் மண்ணுன்னவும்-
அனுகூலர் கொந்தளிக்கவும் ஒருபடிப் பட்டு நின்று முழங்க -திரு வாழி யானது அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் அற்று
நெருப்பை உமிழா நின்று கொண்டு சத்ருக்களான நமுசி பிரபிருதிகளை வாய் வாய் என்று முடங்கப் பண்ணிற்று –

————————————————————————————

அளவுடையரான நித்ய ஸூ ரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து -திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூ லபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

குரங்குகளானவை -ரிஷிகள் ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே உணருமா போலே காலம் அறிந்து உணர்ந்து போய்ப் பரப்பு மாறாப்
பூத்த சுனைகளிலே -ரிஷிகள் அகமர்ஷணம் பண்ணுமா போலே சென்று புக்கு அவ்விடத்தில் கழிய அலருதல் கடு மொட்டாதல்
அன்றிக்கே -அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு ஜாதி உசிதமாக ஏதேனும் ஒன்றைச் சொல்லி
ஸ்துதிக்குக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் -மனஸ்ஸே நீயும் பிற்காலியாதே போது -போந்த அநந்தரம் திரு வேங்கடமுடையானுடைய
சீலாதி குணங்களுக்கு வாசகமான-திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு -நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனான
திரு வேங்கடமுடையானுடைய பூப் போலே அது ஸூ குமாரமான திருவடிகளுக்கே சென்று கிட்டும் படி
செவ்விப் பூக்களை அழகு பெறச் சாத்தி ஆஸ்ரயிக்கப் பார்–
அன்றிக்கே சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய் -வேங்கடவன் மலர் அடிக்கே செல்லப் போதும் அணி என்றுமாம் –

————————————————————————————————

சர்வ ஸமாச்ரயணீயன் ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம்
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யாவசித்த படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பிறையோடு ஒத்து இருந்துள்ள கொம்புகளையும்-அழகிய கண்களையும் யுடைத்தான -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை –
-தறையில் ஒரு பூ விழாத படி முதலை வாயிலே நின்றும் மெள்ள விடுவித்து அருளின சர்வேஸ்வரனான என் நாயகனானுக்கு
அடிமை செய்கையிலே அத்யவசித்த நான் முதலும் -நடுவும் -அந்தியுமான -சர்வ காலங்களிலும் ஏதேனுமாகக் கிட்டின பூக்களை
அடைவு கெடப் பணிமாறி இன்ன திரு நாமம் என்ற ஒரு நியதி அற குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமத்தையும் அனுசந்தித்துக் கொண்டு சொல்லி நிற்பன் –
அன்றிக்கே சேர்ந்த பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும்-சிவந்த கண்களையும் யுடைத்தான குவலயா பீடத்தை
நிரசித்த படியாகவுமாம் -அப்போது நம் விரோதியை நிரசித்த படிக்கு த்ருஷ்டாந்தம்
-மற்றப்போது மற்றுள்ள ஆஸ்ரித விஷயத்தில் வத்சலனாய் -அவர்கள் ஆபத்தை நீக்கும் படிக்கு த்ருஷ்டாந்தம் –

————————————————————————————————-

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு
சத்ருசமாகக் கவி படும்படியான ஸூ ஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

இவ்வாத்மாவை ஸ்வரூப அனுரூபமாகத் திருவடிகளிலே அடிமை கொள்ளுகைக்கு உரிய என்னுடைய நிருபாதிக சேஷி யானவனே –
சகல ஜென்மங்களிலும் -அது தன்னில் -எல்லா அவஸ்தைகளிலும் உன் திருவடிகளிலே வாசிக கைங்கர்யம் பண்ணுகை யாகிற
இப் பேற்றுக்கு அடியான தபஸ்ஸைப் பண்ணினேன் நானே –
பண்ணின அந்த தபஸ்ஸாலே பலிக்கும் பலத்தைப் பெற்றுடையேனும் நானே –அந்த தபஸ் பலமாக வந்த லக்ஷண லஷ்யங்களில்
குறைவற்று இருக்கும் பெருமையை யுடையதாய் -சர்வாதிகாரமாய் -அத்யந்த வி லக்ஷணமான திராவிட சந்தர்ப்பங்களை
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் நானே –
திராவிட சாஸ்திரத்தில் என் தன்னை அவகாஹித்தார் இல்லை என்னும் படி அதில் தேசிகனாய் இருப்பான் ஒருத்தன் –
அவ்வளவு இன்றிக்கே -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாங்கான நிலத்திலே இருந்து பாடியாடி அடிமை செய்யக் கடவ
நித்ய முக்தரைப் போலே அன்றிக்கே இங்கே இருந்து கவி பாடப் பெறுகையாலே அவர்களிலும் மிகவும் நல்லனாய் இருப்பான் ஒருவன் –

———————————————————————————————–

பெருகு நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம்
ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் –

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

திருமலையிலே திரு அருவிகள் பெருக்கு எடுக்குமா போல மேன்மேல் எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனையானது
எல்லா அளவிலும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வல்ல சிலாக்யமான பிடிக்கு -நான் இங்குத்தைக்குச் செய்யக் கடவ
பணிவிடைகளைக் கற்பிக்க லாகாதோ -என்று விநயம் தோற்ற முன்னே வந்து நின்று இரண்டு கண்ணேறி அதுக்குத் தக்க
முற்றனவும் இன்றிக்கே இளையதாய் இருக்கிற மூங்கில் குருத்தைச் செவ்வி குன்றாத படி -சாவதானமாக வாங்கி அருகில்
மலை முழைஞ்சுகளில் கூட்டிலே நிறைந்து இருக்கிற தேனில் மூங்கில் குறுத்தும் தேனும் தன்னிலே ஒன்றி ஒரு நீராம்படி தோய்த்து
-உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்று அது அநாதரித்து நிற்க -இத்தனையும் அங்கீ கரிக்க வேணும் என்று
சாதாரமாகக் கொடுக்கும் சிறப்பை யுடைத்தான திருவேங்கடம் -கிடீர் –
-மேகத்தோடு சத்ருசமாகச் சேர்ந்த வடிவை யுடையவன் வர்த்திக்கிற மலை –

——————————————————————————————————

இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு
வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் –

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

நல்ல ஆகரத்தில் உண்டான சந்தனக் குழம்பும் அங்குத்தைக்கு சத்ருசமாம் படி அடைவே எடுத்து பெரு விலையனான
ஆபரணங்களும் திரு வரைக்குத் தகுதியான நல்ல பரிவட்டங்களும் -பரிமளம் மிக்கு இருப்பதாய் -கண்ணுக்கு ஆகர்ஷகமான
வெளுத்த நிறத்தை உடைத்தான மல்லிகையும் ஆகிற இவற்றை தர்ச நீயமாம் படி நிரைய அடைவே எடுத்துக் கொண்டு
-இவை அழிந்து கிடக்கிற ஆதி காலத்திலே காரணமாய்க் கொண்டு நின்றவனாய் -தன் பக்கல் இவன் பண்ணின
அல்ப ஆனுகூல்யத்தை சர்வ காலமும் நினைத்து இருக்கும் சர்வஞ்ஞனானவனுடைய
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே வாயார ஸ்தோத்ரம் பண்ணி தலையார வணங்குவது இவ்வாத்மாவுக்கு மிகவும் சீரியது-

—————————————————————————————–

இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார்

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

எனக்கு முன்னே பதறி விழுகிற நல்ல நெஞ்சே -நாம் விமுகரான திசையிலும் நம்மை நோக்கி இப்போது தன்னது பேறாக
அடிமை கொள்ளக் கடவ புருஷோத்தமனுடைய யோக்யர் அயோக்யர் என்று தரம் வையாதே எல்லாருக்கும் பற்றலாம் படியான
நன்மையை யுடைய திருவடிகள் சாலச் சீரியது ஓன்று கிடாய் -வாயாலே ஸ்துதித்து தலையாலே வணங்கி
அவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களையும் சர்வ காலத்திலும் எங்கும் பிரசித்தமாம் படி
சொல்லுகை யாகிற தபஸ் ஸூ -ஸூ ஸூ கம் கர்த்தும்-என்னும் படி அத்யந்தம் சரசமாய் இருப்பது ஓன்று ஆகையால் மிகவும் சீரியது கிடாய் –
திரு நாமம் சொல்லுகையைத் தவம் என்கிறது ஈஸ்வரன் கருத்தாலே-

———————————————————————————————-

இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற
லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்யமான திருவடிகளை -க்ருஹீத்வா தர்மபா நீயம்–என்கிறபடியே
பகவத் பக்தியாலே உருகி விழுந்த தர்ம மயமான கங்கா ஜலத்தைப் பணி மாறி -அவனுடைய எல்லாத் திரு நாமங்களையும்
வாய் படைத்த பிரயோஜனம் பெறச் சொல்லித் தன்னுடைய சிவந்த அழகிய கைகள் அடங்கலும் உத்பத்தி பிரயோஜனம் பெற்றுப்
பூர்ணமாம் படி யாக விளக்கினான் -திருவடிகளை விளக்கப் பெற்ற பின்பு பகவன் நாம சங்கீர்த்தம் ஆகிற இனிய
தபஸ்ஸைக் குறைவற அனுஷ்ட்டித்துச் சதுர்முகன் ஒருவனுமே அது பலத்தோடே வியாப்தமாகப் பெற்றான் –
இவன் இனியது செய்ய அவன் தவம் என்று இருக்கும் -வணக்குடைத் தவ நெறி -என்னக் கடவது இ றே –

———————————————————————————————-

ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க
மறுத்துக் காடு ஏறப் போன சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் என்கிறார் –

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

தாயாரான ஸ்ரீ கௌசல்யையார் பின் தொடர்ந்து நின்று -ஏக புத்ரையான நான் உன்னைப் பிறந்தால் -தரித்து இருக்க வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று அர்த்திக்க-அத்தைக் கேளானுமாய் -அதுக்கு மேலே நீண்டு சுற்றுடைத்தான தோளை யுடையாளாய் –
அழகிய பூவை இருப்பிடமாக யுடையாள் ஆகையால் நிரதிசய ஸூ குமாரையான பிராட்டியானவள் தான்
அக்ரதஸ் தே கமிஷ்யாமி -என்கிறபடியே முற்பட்டு நின்று -கரு முகை மாலையைச் செவ்வி பெறுத்த வென்று
நெருப்பிலே இடுமா போலே இந்த அதி ஸூ குமாரமான திரு மேனி கொண்டு காடு ஏறப் போகிற இன்று
உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் -உமக்கு முன்னே போகக் கடவேன் -என்று பிரார்த்தியா நிற்க
-அத்தையும் கேளாதானாய் -தானோ என்றால் -ஸ்ரீ ராமாயணம் என்கிற பிரபந்தத்துக்கு நேரே பிரதிபாத்யனாய்க் கொண்டு நின்று
தோளை யுடையனாய் -ஸுகுமார்யத்தில் வந்தால் தன்னை எண்ணினால் -பின்னை இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாத படி
-பிரதானனுமாய் இருக்க -இவை இத்தனையும் பாராமல் -காட்டில் மிறுக்கையும் கடைக் கணியாமல்-காடு ஏறப் போன
சக்கரவர்த்தி திருமகனுடைய அந்த ஸ்வ பாவம் எல்லா வற்றுக்கும் ஸ்ரீ மானனானவன்-
தான் அளந்து கொண்ட பரப்பை யுடையதான பூமி ஒப்பாகப் போரும் –
அதாவது மாத்ரு வசனத்தை மறுத்துப் பிராட்டி இரப்பைத் திரஸ்கரித்து -தன் ஸுகுமார்யத்தை புரிந்து பாராமல்-
-போகிற காட்டில் மிறுக்கைக் கடைக் கணியாமல் -பித்ரு வசன பரிபாலனத்தையே புரஸ்கரித்து –
-மன்னும் வளநாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்கரவர்த்தி திரு மகன் செயல்களுக்கு இடங்கை வலம் புரி நின்றார்ப்ப -இத்யாதிப் படியே
அனுகூல அக்ரேசரரான ஸூ ரிகள் வயிற்று எரிச்சலையும் தன் திருவடிகள் ஸுகுமார்யத்தையும் -காடுமோடையுமான அளக்கிற
பூமியினுடைய கொடுமையையும் -ஆஸூர ப்ரக்ருதிகளான நமுசி ப்ரப்ருதிகள் அலைச்சலையும் பாராமல் ஆஸ்ரிதரான இந்திரன்
பிரார்த்தனனையைத் தலைக் கட்டுகைக்காகக் கல்லும் கரடுமான வான்மா வையத்தை அளந்து கொண்ட
ஸ்ரீ வாமனனுடைய செயலானது சத்ருசமாம் அத்தனை -என்கை –

————————————————————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆனபடியைக் கண்டால்
பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் –

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

தேவர் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாகப் பண்ணக் கடவ கைங்கர்யத்தில் அத்யாவசாய புரஸ்சரமாக நேர் பட்டேன் –
அந்தக் கைங்கர்யத்துக்கு பிரதிசம்பந்தி யாய் -அழகிய தாமரைப் பூ போலே நிரதிசய போக்யமாய் இருக்கிற
அந்த திருவடிகளை மனஸ்ஸாலே அனுசந்தித்தேன் -நினைத்த மாத்திரத்திலே பெருகி வருகிற ப்ரேமத்தை யுடையேனாய்
வகுத்த சேஷியான தேவருடைய சிவந்த திருவடிகளின் மேலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தினேன் –
பூர்ணமான திருவடிகளின் அழகைக் கண்டு அனுபவித்தவர்களுக்கு -இதுக்கும் அடியான வடிவு அழகை ஓன்று ஒழியாத படி
முழு நோக்குச் செய்து அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ-என் பட்டார்களோ -என்கை –
அன்றிக்கே -ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர் ஆகிறார் சேஷ பூதரான தாமாய் -நான் திருவடிகளின் அழகைக் கண்டு ஈடுபட்டபடி கண்டால்
-முன்பு இவ் வடிவு அழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றார்கள் என் பட்டார்களோ -என்றுமாம் –
ஆர்ந்த வடிக் கோலம் -இத்யாதி -திரு உலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு
ஸ்வாபாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ என்றுமாம் –
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன் என்னவுமாம் –

———————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: