இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -51-60– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் -நெஞ்சே நீ முந்துற முன்னம்
என்னைப்போல் கலங்கி தளராதே அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்-

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51–

நெஞ்சே நீல மணி போலே இருந்து குளிர்ந்த வடிவை யுடையவன் திருவடிகளை புத்தி பண்ணு கிடாய் –
அதுக்கு மேலே அந்த சர்வேஸ்வரனுடைய அவ்வடிவழகுக்கு வாசகமான திரு நாமங்களை புத்தி பண்ணு கிடாய் –
தன் படுக்கையான பெரிய திருப் பாற் கடலில் நின்றும் பெயர்ந்து எழுந்து இருந்து நின்று -பிரயோஜனாந்தர பரருக்கு
அபேக்ஷித சம்விதானம் பண்ணுகைக்காக அந்தக் கடலைக் கடைந்தவனாய் -அப்போது ஒரு வெண் கடலைக்
கருங்கடல் கடைந்தால் போலே ஆகர்ஷகமாய் தோற்றுகிற நிறைந்த நீரை யுடைய கடல் போன்ற வடிவை யுடையவன்
திரு நிறத்தை தேவர்களை போலே உப்புச் சாற்றை நச்சாதே புத்தி பண்ணி அனுபவிக்கப் பார் கிடாய் –

——————————————————————————————————–

திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய வடிவு அழகையும்
பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து இது இருவருக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார்

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

ஆஸ்ரிதருடைய சகல தாபங்களும் போம் படி ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடையவனாய் –
அந்நிறத்துக்கு பரபாகமான -சிவந்த நிறத்தை யுடையவளாய் -பெரிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையவனாய் -அவளோட்டைத் தோயல்வாசியாலே ஆன்ரு சம்சயம் மிக்கு இருப்பவனாய்
-திருவினைப் பிரிக்கை யாகிற குரூரமான செயலைச் செய்த சாயுதனான ராவணனோடு ஒத்து இருந்துள்ள மஹா பலியை
அழியச் செய்யாமல் அவனுடைய உதார குணமே பற்றாசாக -ராஜ்ய ஸ்ரத்தை பண்ணினவன் இழக்கிறது என் என்று
தன்னுடைய ஆன்ரு சம்சயத்தாலே தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்திரனுடைய ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமாய் இருக்கும்
பாதாள லோகத்தில் -அவனைப் போலே பரி கொடுத்து கண் பிசைய வேண்டாத படி -நெடும் காலம் இருக்கைக்குப் பண்ணிக் கொடுத்த
-சர்வேஸ்வரனுடைய அந்த கிருபா பிரகாரத்தை -ஆர் தான் அறிவார் -ஒருவராலும் அறியப் போகாது -என்று கருத்து –

———————————————————————————————————–

இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி
வந்து நித்ய வாசம் பண்ணுகிற திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைக்கும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

திருமலை ஆழ்வார் உத்தேச்யமாக அனுசந்தித்து -மற்று ஓன்று அறியாதே -வழி பட நெடும் காலம் ஆஸ்ரயிக்கிறவர்களுடைய
குழல் கற்றையிலே முன்னே முளைத்துப் பின்னளவும் வர வளர்ந்து -தாழ விழுந்து -மூச்சு விடுதல் உடம்பு அசைத்தல் செய்யாதே
இருக்கிற இருப்பைக் கொண்டு -சில சேதனர் என்று அறியாதே சிறு மலைகளாய் இருக்கும் என்று புத்தி பண்ணி
-அவ்விடத்தை விட்டு நீங்காதே -கண்ட இடம் எங்கும் பரந்து பூத்த கொடிகளானவை -நித்ய வாசம் பண்ணும் ஸ்தலமாய்
-தன்னில் தான் திரை பொரா நின்றுள்ள ஜல ஸம்ருத்தியை யுடைத்தாய் அதி பிரசித்தமான
திருமலையே நாங்கள் பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-

—————————————————————————————————–

இப்படி தாம் அவன் உகந்து வர்த்திக்கும் திருமலை அளவும் விரும்புகையாலே இவனும் தான் உகந்து வர்த்திக்கிற இரண்டு
திருமலைகளில் பண்ணும் விருப்பத்தைத் தம் திரு உள்ளத்தில் ஒன்றிலும் பண்ணிக் கொண்டு மேலே விழுகிற படியை அருளிச் செய்கிறார் –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

திருமால் இருஞ்சோலை மலை என்றும் திரு வேங்கடம் என்றும் திரு நாமத்தை யுடைத்தான பெரிய திருமலை என்றும்
சொல்லப் படுகிற இரண்டு ஸ்தானமும் நாம் உகந்து வர்த்திக்கிற வாசஸ் ஸ்தானம் என்று நீ புத்தி பண்ணும் ஆதரிக்கும்
ஸ்வ பாவம் போலே -என்னுடைய ஹ்ருதயம் என்கிற வாசஸ் ஸ்தானமும் நீ உகந்து நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் என்று
புத்தி பண்ணி என்னுடைய ஹிருதயத்தில் பண்ணுகிற அபிநிவேச அதிசயம் இருந்த படியால் அவ்வவ திருமலைகளில்
நிலை நிற்கும் படியும் -என் ஹிருதயம் திருந்தும் அளவும் வாசஸ் ஸ்தானமாக கர்ப்பித்ததான திருப் பாற் கடலாகிற
பாலாலயத்தையும் விடாத தேடுகிறாயோ என்று நினைத்து -என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின அவ்விடத்தை
க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-உன் உகப்பைப் பற்றவும் -பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

—————————————————————————————–

இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன்
-தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பிரபல பிரதிபந்தகங்களை அநாயாசேன போக்குகையாலே –
வரும் வெற்றி பெற்று யுடையனாய் யுத்த உன்முகனான திரு வாழியை -விரோதி நிரசன தவரையால்
எப்போதும் கையிலே கொண்டு இருக்குமவனாய் -அஞ்ஞான அசக்தியாதிகளுக்கு கொள்கலமான என்னால் உன்னைப் பெற
ஒண்ணாது -ஞான சக்தி யாதிகளாலே குறைவற்ற உன்னாலே
உன்னைப் பெற வேணும் என்னும் இடத்தை பத்தும் பத்தாக அறிந்து இருக்கும் சர்வஞ்ஞனே–இப்படி இருக்கிற நீ எல்லா ஜென்மங்களிலும்
எல்லா அவஸ்தைகளிலும் எதிர் சூழல் புக்கு இவன் நம்மை மறவாமல் பெற்றிடுவானுக்கு -என்று நினைக்கும் நினைவு ஒருநாளும் மாறாதே
போருகிற ஸ்வ பாவத்தால் சர்வ காலத்திலும் தேவரீரை மறந்து அறியேன் –இப்படி பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீ
ஞான பலமாக ஒரு தேச விசேஷத்திலே போந்து பரி பூர்ணமாக உன்னை அனுபவித்து விளையக் கடவ அபரிச்சின்னமான
ஆனந்த சமுத்திரத்தை தந்து அருள வேணும் காண் –கடல் என்றும் ஆழி என்றும் மீ மிசைச் சொல்லாய் மிகவும் நிரதிசய ஆனந்தத்தைச் சொன்னபடி –

—————————————————————————————————————-

இப்படி பேறு அவனாலே என்று நிச்சயித்த பின்பு அருள் என்று கொண்டு வடிம்பிட்டு நிர்பந்திக்கக் கடவதோ என்ன
ப்ரேமம் அடியாக வந்த இருட்சி உடையாருக்கு பற்றாசும் அங்கே உண்டாய் இருக்க ஆறி இருக்கப் போமோ -என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

காணக் காண பழைய நிலை கழிந்து மேன்மேல் என வளர்ந்து வருகிற ப்ரேமமானது என்னால் அமைக்க ஒண்ணாதபடி
கை கழிந்து விட்டால் -அவனே வந்து மேல் விழும் அளவும் நாம் பதறுகை ஸ்வரூப ஹானி என்று லஜ்ஜித்து
ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்க வேணும் என்று விசாரித்தால் –
அப்படி முறை பார்த்து -தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று ஆறி இருக்கப் போமோ -அதுக்கு மேலே ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை
யுடைய சர்வாதிகனாய் ஸ்ரீயபதியானவனை-அத்யுஜ்ஜ்வலமாய் -ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதுக்கு முன்னே
-நமக்கு ஸ்வாமி நியான பெரிய பிராட்டியார் -ஆதரித்துக் கொண்டு வந்து காட்டும் -நகச்சின் நபராத்யதி -என்று
மேல் விழுந்து சேர்க்கும் பிரபல புருஷ காரம் உண்டான பின்பு -முறைக்குச் சேராது பதறுகை -என்று லஜ்ஜித்து
ஆறி இருக்கப் போமோ -என்கிறபடி -கண்டு அல்லது கழியாத காதல் -என்னவுமாம் –

————————————————————————————————–

இப்படி பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாச்ரயணீயன் -என்கிறது –

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

ஸ்வ சம்பந்தத்தாலே அவனுக்கு சர்வ உத்கர்ஷத்தையும் யுண்டாக்க வல்ல ஸ்வ பாவத்தை யுடையளாய்
-போக யோக்கியமான பருவத்தையும் யுடையளான -பெரிய பிராட்டியார் -இறையும் அகலகில்லேன் என்று
இடைவிடாமல் உறையும்படி இருக்கிற சர்வாதிகனானவனை -நாவால் ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற கார்யத்திலே
ஒருப்படுங்கோள் கிடிகோள் -முறை அறிந்த மாத்திரம் ஒழிய அவ்விஷயத்தைப் பற்றுகைக்கு ஈடான நன்மைகள்
ஒன்றும் அற்ற அயோக்யரான நாம் -பணைத்து வளர்ந்த திருத் தோள்களை யுடைய என் ஸ்வாமி யானவனுடைய திருவடிகளை
நமக்கு வகுத்த சேஷி யன்றோ -என்கிற பிராப்தியாலே அவன் திரு நாமங்களைக் கொண்டு ஏத்தினோம் –
இவ்வர்த்தத்தை நாலு வகைப்பட்ட திக்கில் உள்ளார் எல்லாரும் கேட்டீர்களே –
கடைப்பிடிமின் கண்டீர் -இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே புத்தி பண்ணுங்கோள் கிடி கோள் -என்னவுமாம் –

———————————————————————————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து -சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் –

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

வேம்பாகிற பதார்த்தத்தினுடைய ஸ்வ பாவம் போலே -இவ்விஷயத்தை ஏத்துகை யாகிற இது அத்யந்த விரசமாய் இருந்ததே யாகிலும்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியும் கையுமான சேர்த்தி அழகை ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடு -என்று சரஸ்வதி யானவள் –
நமக்கு இருந்து திருத்துகைக்கு நல்ல ஸ்தலமாய் இருந்தது என்று ஆதரிக்கும் படி வி லக்ஷணமான நெஞ்சிலே முகம் கருக நியமியாமல்
நம் நினைவிலே தன்னை அமைத்து ராஜ புத்திரர்களை பள்ளி ஓதுவிப்பாரைப் போலே அனுவர்த்தித்துக் கொண்டு இருந்து
நம்மை சந்தையிட்டு ஓதுவித்து நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வ பாவமாக யுடையனான சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக சர்வ ஸ்வதானம் பண்ணின பிரசாதம் அடியாக வந்ததாய் இருக்கும் –

——————————————————————————————————–

இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் –

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

அருளி அல்லது நிற்க ஒண்ணாத படி அருளிலே நோக்கான தேவருடைய திரு உள்ளத்தை -அருளுகைக்கு அடியான
சேஷத்வ ப்ராப்தியை யுடையரான -எங்கள் மேலே பரிபூர்ணமாக வைத்து -எங்களை ஒரு வஸ்து பூதராக நிரூபித்து
கடாக்ஷித்து அருளுகிற அந்த க்ஷணத்தில் அஞ்ஞானம் ஆகிற இருள் அடங்க லும் போன வழி தெரியாத படி சிதறிப் போய்
-தேவர் சேஷீ நாம் சேஷம் -என்று இவருடைய ஸ்வரூபத்தையும் தெளியக் கண்டேன் -இப்படி இரண்டு தலையையும்ய
தாவாக தரிசித்து -தேவருடைய அழகிய தாமரை போலே நிரதிசய போக்யமான அந்தத் திருவடிகளையே பரம பிராப்யமாக அனுசந்தித்தேன்
-என்னோடு எனக்கு உரிமை இல்லாதபடி தேவர்க்கே அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற படியை உள்ளூற நிரூபித்து
-ஸ்வ ரக்ஷணத்தில் இறங்குகை அநர்ஹனான என்னையும் தன்னைப் பெறுகைக்குத் தானே உபாயமான
அந்தத் திருவடிகளிலே நிஷேபித்தேன் -உபாயமும் தேவரீர் திருவடிகளே என்று அத்யவசித்தேன் என்றபடி
-இத்தால் கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி -பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –
அருளிலே நோக்கான திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து -அத்தாலே நாங்கள் பதார்த்த விவேகம் பண்ணி தர்சிக்கிற போது என்னவுமாம் –

——————————————————————————————-

இப்படி சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே –
நிராங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

உன் படி பார்த்தால் என்றும் ஒருபடிப்பட ஸ்வ தந்திரமாய் இருப்பதொரு ஸ்வரூபத்தை யுடையை அல்ல –
பக்தாநாம் தவம் பிரகாசாசே-என்கிறபடி உன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி -அத்தாலே புகர் பெற்று
உஜ்ஜவலமாய் இருக்கிற ஸ்வரூபம் உனக்கு நிலை நின்ற ஸ்வரூபம் –
இப்படி இருக்கிற உன்னை இந்த ஆஸ்ரித பாரதந்தர்யத்தின் ஏற்றம் அறியாத மஹா பிரத்வியில் உள்ள வாய்கரையர் ஆனவர்கள்
-நிராங்குச ஸ்வாதந்திரம் ஆகிற பெரிய ஸ்வரூபத்தை யுடையவன் -என்று இத்தை பெரிய ஏற்றமாகச் சொல்லா நின்றார்கள் –
ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே -என்னும் படி ஆஸ்ரித பதந்த்ரம் ஆகிற ஒருபடிப்பட்ட ஸ்வரூபமே சர்வ சத்தா ஹேதுவாய்க் கொண்டு
ஆஸ்ரிதற்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருக்கும் பிரகாரத்தை உள்ளபடி அறிந்து இருக்கும் மஹாத்மாக்களான அவர்கள் கிடீர்
-ஈஸ்வரன் அரியன் -என்று ஜகத்தை வழியடித்து உக்கிர வாய்கரையரைப் போலே அன்றிக்கே அவன் நீர்மையின் ஏற்றத்தைச் சொல்லி
-எல்லாரையும் பகவத் பிரவணராம் படி திருத்துகிற நியாயத்தாலே உருவ நின்று ஜகத்தை தளிரும் முறியுமாம் படி ரக்ஷிக்கிறவர்கள் —
அன்றிக்கே பஹுதா விஜாயதே -என்கிறபடி ஆச்ரிதார்த்தமாக அவதரித்த தசையில் அநேகம் திரு மேனியை யுடையை யாகையாலே
-ஒரு படிப்பட்ட விக்ரஹத்தை உடையை யல்லை-
ச உ ஸ்ரேயான் பவதி ஜயமான – இப்படி பல வடிவு எடுத்துக் கொண்டு பிறந்த இடத்திலும் ஸூ த்த சத்வ மயமாகக் கொண்டு
நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திரு மேனி –
இப்படி அசாதாரண விக்ரஹமும் -அவதார விக்ரஹமும் ஆகிற இரண்டு விக்ரஹத்தையும் யுடையையாய் இருப்புதி-என்று
உன்னை நாட்டில் அறிவுடையார் சொல்லா நின்றார்கள் -இதர சஜாதீயமாய் அவதரித்த அந்த அவதார விக்ரஹம் ஒன்றுமே
-கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி ராபிசாப்யய -என்கிறபடியே
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் ஜகத்தை எப்போதும் ரக்ஷிக்குமவர்கள் -என்றுமாம் –

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: