இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -41-50– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

கீழ் பிறருக்குத் தாம் உபதேசித்த உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே -தம் வைஸ்யத்துக்கு உடலாய்த்
தம் திரு உள்ளத்தைக் குறித்து ஸ்ரமஹரமான சர்வேஸ்வரன் திருவடிகளை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார் –

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

சாஸ்திர சித்தம் ஆகையால் மோக்ஷத்தோ பாதி இதுவும் ஒரு புருஷார்த்தம் அன்றோ என்று புத்தி பண்ணி
ப்ரஹ்மாதி லோகங்களில் புக்கு அனுபவிக்க வேணும் என்று அதுக்கு ஈடாக யத்னிக்கலாகாது-
அதுக்கு அடி நிரவதிக கிருபாவான சர்வேஸ்வரன் தர்ம பலமான ஸ்வர்க்காதிகளைத் தந்து அருளுமவன் அன்றோ –
ஆனபின்பு சம்சார போகங்களில் விரக்தராய்த் தன்னைப் பெற்று அனுபவிக்க வேணும் என்று இருக்கும் ஸூக வாம தேவாதிகளான
பரம வைதிகருக்கு -ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்னும்படி தன்னுடைய கிருபையால் மோக்ஷத்தை கொடுத்து அருளினவனாய்
-அவர்களுக்கு அனுபாவ்யமாய் -நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடைய சர்வேஸ்வரனுடைய -திருவடிகளையே
அறிவுக்கு பிறப்பிடமான நெஞ்சே நீ மறவாதே கொள்-எப்போதும் நினைத்த படியே இரு –
அறம் என்று லக்ஷணையாலே தத் பலத்தை நினைக்கிறது -அன்றிக்கே அர்த்தத்தை சாதனமாக்கிக் கொண்டு
நித்ய ஸூரிகள் நிரந்தர அனுபவம் பண்ணி வாழுகிற பரம பதத்திலே போய்ப் புக ஒண்ணாது –
-ஸ்வர்க்க அபவர்க்கங்கள் இரண்டும் தன் கிருபையால் கொடுக்கும் சர்வேஸ்வரனை மறவாதே கொள் -என்றுமாம் –
இப்போது இவ்வுடம்போடே அவனை மறவாதே அனுபவிக்கப் பெறில் பரமபதம் அநபேஷிதம் -என்று கருத்து –
அன்றிக்கே மா மறையோர்க்கு -என்று ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளையாய் -அவர்களுக்கு –
-தத்ரூ ஸூ ர் விஸ்மிதா காரா –என்னும்படி தன் விக்ரஹத்தை அனுபவிப்பித்தவன் -என்றுமாம் –
மா மறையோற்கு-என்று றகர ஒற்றான போது மார்கண்டேயனுக்கு நித்யத்வம் கொடுத்த படியைச் சொல்லுகிறது –

———————————————————————–

புறம்புள்ள சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்கள் இ றே ஜென்மங்களில் பிரவேசியாதார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

இவ்வாத்மாவுக்கு பிரிய ஹிதங்கள் தானும் அவனுமாய்க் கொண்டு நடத்திக் கொண்டு போரும் பெரிய பிராட்டியாரோடு
கூடிக் கொண்டு இருக்கும் சர்வேஸ்வரனை – அவளோட்டைக் கலவியாலே -அளவிறந்த போக்யதையை யுடைத்தான
திருத் தோள்களைக் கண்டு அனுபவிக்கைக்காக நினையா நின்றேன் –
இப்படி நினைக்குமவர்கள் -இவ்வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-
அந்த அழகிய தோளைத் தொழுவார்கள் ஒரோ மனையிடத்துப் பிறந்தவர்கள் பிறந்து பிராபிக்கும் நிரவாதிக ஸூ கம்
எல்லா வற்றையும் பரித்யஜித்த வர்களானவர்கள் கிடீர் -தோள் அழகு தானே மற்றுள்ள இன்பங்களைத் துறக்கும் படி பண்ணும் என்கை
–பேர் இன்பம் எல்லாம் துறந்தவர்கள் இ றே -அது தோள்கள் தொழுவார் ஆகிறார் என்னவுமாம் –
அன்றிக்கே -ஒரு ஸ்ம்ருதி மாத்திரமே பற்றாசாக அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டுமது ஒழிய ஆர் தான்
இவற்றைத் துறந்து அது தோள்களை தொழுவார் என்றுமாம் –
பிறப்பென்றும் நேரார்-என்ற பாடமான போது -எல்லாக் காலத்திலும் ஜன்மத்தைக் கிட்டார்கள் -என்று பொருளாகக் கடவது –

———————————————————————————–

எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவார் தொழ அமையும் –
அத் தோள் தொழுவார் தாளைத் தொழும் அத்தனை நாம் -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

பிராட்டியைத் தனிச் சிறை வைத்து நலிந்த ராவணனுடைய இருப்பது தோள்களும் -அறுக்க அறுக்க முளைக்கையாலே
-ஒரு சங்க்யையில் அடங்காத தலைகளும் -இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான கால்கள் இரண்டும் அறுப்புண்ணும் படிக்கு
ஈடாகத் திருச் சரங்களை ப்ரேரித்து நடத்தின பெரு வீரரான சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
-அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய பரம உத்தேச்யமாக
பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ -அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள் களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

———————————————————————————

இப்படி அசல் காக்கும் படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் -என்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

ஞானீ த்வாதமைவ மே மதம் –என்று தான் உகக்கும் படி தன் திரு உள்ளத்துக்கு அனுரூபமாக ஆஸ்ரயித்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
சம்சார சம்பந்தத்தை அறுத்து ஞான விகாச உடையவராய் உஜ்ஜீவிக்கைக்குப் போம் அர்ச்சிராதி மார்க்கத்துக்கு ஆதி வாஹிகர் முன்னே
நயாமி -என்கிறபடியே துணையாமவனாய் -அவர்கள் விஷயத்தில் வாத்சல்யத்தால் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடைய
வியாமுக்தனாவனுடைய வாத்சல்யாதி குணங்களுக்கு வாசகமான திரு நாமத்தை விஸ்மரித்து இருக்குமவர்களை சாஸ்திர வஸ்யமான மனுஷ்ய ஜென்மத்தில்
பிறந்தவர்களாய் என் மனசில் நினைத்து இரேன் -ஆன்ரு சம்சயம் ஆகிற பரம தர்மத்தை தரியா நிற்கும் ஸ்ரீ யபதியானவனே -என்று
ஆதரிக்கும் புத்தியை உண்டாக்கிக் கொண்டு அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியானவனுக்கு வாசக நாமமான த்வயத்தை நாவால் சொல்லுகையிலே மனசே அநுஸந்தி –
மனஸை அத்யாஹாரித்துக் கொள்வது -கீழே பாகவதர்களை விரும்பினார் -இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

————————————————————————————————————————

இப்படி பகவத் பஜநம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களினுடைய லாப அலாபங்களால் வரும்
ஹர்ஷ சோகங்களை உடையர் அல்லர் கிடீர் -என்கிறார் –

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

ஆர்க்கும் அளவிட ஒண்ணாத படி அபரிச்சின்னமான வேதங்களாலே பரம தனமாக பிரதி பாதிக்கப் படுமவனாய் –
இப்படி ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து
சந்நிஹிதனான ஸுலப்யத்தை யுடையனாய் பரத்வ அனுபவத்தில் பழுத்து இருக்கும் பரமபத ஸ்தானரான நித்ய ஸூ ரிகள்
-அவன் நீர்மைக்குத் தோற்றுத் தாங்கள் திரு முடியைத் திருவடிகளிலே திருவடிகளை யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை
இடைவிடாமல் செறிந்து வைத்து ஜென்ம தரித்ரனாய்-திரியச் செய்தே–நடுவே வந்த திரண்ட தனத்தைக் கண்டு இது நமக்கு
உண்டாகப் பெற்றது-என்று பிறர்க்கு சஞ்சரிக்க ஒண்ணாதபடி கார்வோத்தரராய் இரார்கள்-
சில நாள் குறைவற ஜீவித்த பின்பு வெறுவியரான அன்று -அங்கனே நமக்கு இது உண்டாய்த்து-
இன்று இங்கனே இல்லையாய்த்து –என்று சோகித்து தறைப் படுகை யாகிற அதன் அருகும் கூட கிட்டார்கள் –

————————————————————————————————————

இப்படி தன்னை ஆஸ்ரயித்தவர்கள் இதர போகங்களின் லாப அலாபங்களால் வரும் விகாரம் அற்றுத் தன்னைச் செறிந்து
அனுபவிக்கை யாகிற இந்நினைவு இவர்களுக்கு உண்டாம் படி பல திருப்பதிகளிலும்
அவன் வருந்தி கிருஷி பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

நீல மணி போலே ஸ்ரமஹரமாய் ஒளி விடுகிற வடிவையும் -அவ்வடிவை சம்சாரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுகிற
சுற்றுடைத்தான திருக் கைகளையும் உடையனான சர்வேஸ்வரன் அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நித்ய வாசம் பண்ணி அருளிற்று கோயில் திருக் கோட்டி யாகிற திருப்பதிகளில் -சிர காலம் செறிந்து வர்த்தித்ததுவும் திரு மலையிலே
-இப்படியே சிர காலம் நெருங்கி வர்த்தித்ததுவும் அழகு விளங்கா நின்றுள்ள சோலைகளை யுடைத்தாய்
-சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே -இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் -என்கை –

—————————————————————————————————————-

அவன் இப்படி உங்களைப் பெறுகைக்காகப் பல திருப்பதிகளிலும் புகுந்து செறிந்து கிருஷி பண்ணும்
ஸ்வபாவனான பின்பு எல்லாரும் க்ருதஞ்ஞராய் அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பூமிப் பரப்பு அடங்க லும் அநாயாசேன அளந்து அழிந்த தசையில் இடந்து எடுத்து -அழிவதற்கு முன்னே திரு வயிற்றிலே வைத்து நோக்கி
பின்பு வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்து -இப்படி ஜகத்தை பஹு முகமாக ரஷித்தவனாய் -இவ்வோ செயல்களால்
தானே சர்வ ஸ்வாமி என்று தோற்ற இருக்கிறவனை -இப்படிப் பொதுவாகப் பண்ணும் வியாபாரங்கள் ஒழிய
மற்றும் ஆஸ்ரித விஷயமாகச் செய்தவையாய் -அவர்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உளுக்கும் படி
ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற குண சேஷ்டித்த பிரகாரங்களோடு கூட அறிந்து அனுசந்தித்துக் கொண்டு ஆஸ்ரிதனுக்காக
தன்னை அழிய மாறிக் கொண்ட நரசிம்ஹ வேஷத்தை உடையனானவனுடைய திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –

————————————————————————————–

உளம் கிடந்த வாற்றால் -என்று ஆஸ்ரிதற்கு மறக்க ஒண்ணாத படியாக நான் செய்த செயல் தான்
ஏது என்ன -அதுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பிரளய தசையில் சங்கோசித்து ஸம்ஸ்கார ரூபேண கிடந்த நாலு வேதங்களையும் -ஸூப்த ப்ரப்த்தா நியாயத்தால்
பத வர்ண அநு பூர்வி தப்பாதபடி உணர்ந்து அருளிச் செய்தாய் -அந்த வேதார்த்தங்களை சம்சய விபர்மயம் அற நயிப்பித்து
விஸதீ கரிக்கக் கடவ ஸ்ம்ருத்யாதி உப ப்ரும்ஹணங்களை மன்வாதிகளான முனிவர்களை யுண்டாக்கி நின்று அருளிச் செய்தாய்
அந்த வேதங்களுக்கும் உப ப்ரும்ஹணங்களுக்கும் பிரதான ப்ரதிபாதயையாய் -தாமரைப் பூவை இருப்பிடமாக உடையவளான
பெரிய பிராட்டியாருடைய திருத் தோளோடு -ஸ் ரியா ஸார்த்தம் ஆஸ்தே -என்னும் படி ஒரு தேச விசேஷத்திலே
நித்ய சம்ச்லேஷம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தாய் -அவள் பக்கலிலே பெரும் பிச்சானவனே
-ஓலைப் புறத்திலே கேட்டுப் போம் படி எட்டாத நிலத்திலே அவளோடு கலந்து வர்த்திக்கிற அளவன்றிக்கே
-சம்சாரிகளோடே கலந்து பரிமாறும் படி -மூங்கில்கள் நிறைந்த பர்யந்தங்களை யுடைத்தாய் -விஸ்மய நீயமாய்
பரப்பை யுடைத்தான பூமியில் உள்ளவர்களால் சூழ்ந்து ஆஸ்ரயிக்கப் படுமதாய் -உயர்ந்து பரந்த
சோலைகளை யுடைத்தான திருமலையை உகப்புடனே போய்க் கலந்தாய் –

————————————————————————————————

நெஞ்சே அவன் இப்படி திருமலையிலே சந்நிஹிதன் ஆனபின்பு -நமக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டு என்று
அஞ்சாதே ஜகத்து அடங்க லும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு என்கிறார் –

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பூமிக்கு ஆதாரங்களான சப்த குல பர்வதங்களும் -பரப்பை யுடைத்தான சப்த த்வீபங்களும் -கரையாலே சூழப்பட்டு
அத்தை அதிக்ரமியாதே அதுக்குள்ளே கிடந்தது கோஷிக்கிற சப்த சமுத்ரங்களும் அதிரும்படி
முலையிலே எங்கும் வியாபித்த விஷத்தால் உண்டான மிடுக்கை யுடைய பேய்ப்பெண்ணை க்ருதஜ்ஜதை தோற்ற
நடுநடுவே சில முக்த ஜலப்பிதங்களை சொல்லிக் கொண்டு முலை யுண்டு முடித்த நாவை யுடையவன் என்று
-எனக்கு விதேயமான நெஞ்சே பிரதிபந்தகத்தை நினைத்து அஞ்சாதே வாய் விட்டுக் கூப்பிடு –

——————————————————————————————————-

இப்படி நெஞ்சைக் கூப்பிடச் சொல்லி நியமித்தவர்-அநந்தரம் திரு வாய்ப்பாடியில் பெண்கள் அவன் திரு நாமங்களை-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

ஆர்க்கும் ஸ்வ யத்னத்தால் நினைக்க அரியனாய் பெண்பிறந்தாரை புண் படுத்தும் இடையனானவனே –
என்றும் யது குலத்திலே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனாய் பிறந்தவனே -என்றும் –
குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனானவனே என்றும் -புத்தி பண்ணிக் கொண்டு நஞ்சுரத்து பெண்ணை நவின்றுண்ட நாவன்-என்று
ப்ரஸ்துதமான அந்த திரு வாய்ப்பாடியில் உள்ள இடைப் பெண்களானவர்கள் சொன்னதாய்
உள்ளீடான குண சேஷ்டித்த சாரஸ்யத்தையாலே அனுசந்திப்பார்க்கு பிழைக்க ஒண்ணாதா படியாய் இருப்பதாய்
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லி -உகப்பாரோடு உகவாதாரோடு வாசியற எல்லார் முன்பும் ஸ்ரீ யபதியான
அந்த சர்வேஸ்வரனை -அவர்களுக்கு இரங்கினால் போலே நம் பக்கலிலும் இரங்கக் கூடும் என்று கூப்பிடா நின்றேன் –

—————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: