இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -21-30- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

எம்பெருமானை பஜிக்கைக்கு ஈடான கரண சம்பத்தில் குறைவற்று இருக்கச் செய்தேயும் -சம்சாரிகள் விலக்கடி
தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி எங்கனே என்று விஸ்மாயப் படுகிறார் –

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21-

ஆஸ்ரயண உபகரணமான கரண களேபர விசிஷ்டரான தாங்கள் முந்துற முன்னம் உளராய் இருந்தார்கள் –
அனுசந்தான பரிகரமான தம்தாமுடைய மனஸ் ஸூ புறம்பே தேட வேண்டாத படி உண்டாய் இருந்ததே –
-திருவடிகளிலே பணிமாறுகைக்கு உறுப்பான கைக்கு எட்டின தாமரைப் பூ உண்டாய் இருந்ததே –
-வாய் விட்டுப் புகழுகைக்கு ஈடான காலம் உண்டாய் இருந்ததே -தன் உடமை பெறுகைக்குத் தன்னை இரப்பாளனாக்கும்
நீர்மையை யுடையனான சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்ய ப்ரகாசகமாய் த்விஜ அரவிந்தாதி சிந்நிஹிதமான திருவடிகளிலே
சேஷத்வ அனுரூபமாகச் சேருகைக்கு அனுரூபமான தலையை உடையராய் இருந்தார்கள்-
-இப்படி இருக்க நேர் கொடு நேரே கொடிதான சம்சாரத்தைச் சென்று கிட்டுகை அரிது –
-இங்கனே இருந்த பின்பு இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு திரிகிற படி எங்கனேயோ -என்று ஆச்சர்யப்படுகிறார் –

——————————————————————————————-

தங்களுக்கு ஒரு பரிகர சம்பாத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு
எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார்

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து——22-

வஸ்துவை வஸ்தாந்தரம் ஆக்க வல்ல சக்தி யோகத்தாலே -உன் பேற்றுக்கு உறுப்பாக நீ ஒன்றும் யத்தனித்துச் செய்ய வேண்டா
-என்று ஸ்வ ரக்ஷண அர்த்தமாக -இவன் பண்ணும் ப்ரவ்ருத்திகளை அடைய மாற்றி -ஞானம் ப்ரேமம் முதலாகக் கைங்கர்ய பர்யந்தமாக
இவனுக்குச் செய்ய வேண்டும் சர்வ காரியமும் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவன் பக்கலிலே அந்வயமாம் படி –
-தன் பேறாக சர்வ ரக்ஷைகளையும் பண்ணுகையிலே மிகவும் உத்ஸாஹியா நிற்கும் மஹா புருஷரைப் பெற்றால் –
-பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் எளிதாகா நிற்கும் -அது எங்கே கண்டோம் என்னில்-
-கறுத்த நிறத்தையும் -வெளுத்த கொம்பையும் பெரிய வடிவையும் யுடைத்தான ஆனையானது -அடிமைக்கு கால் கட்டான
முதலையை ஜெயித்து அழியச் செய்தன்றே-குளிர்ந்த பொய்கைக் கரையிலே சிலாக்யமான தாமரைப் பூக்களைக் கொண்டு –
-அரை குலையத் தலை குலைய வந்து தோன்றி விரோதியைப் போக்கி ரக்ஷித்து அருளின அவன் திருவடிகளிலே தாழ்ந்து
அடிமை செய்யப் பெற்றது -தாழ்ந்து என்றது தாழ்ந்தது என்றபடி / கோடு என்று கரைக்குப் பேர் -/
தட்டம் குளிர்த்தி / குளிர்ந்த பொய்கை கரையிலே என்றபடி –
தண் தோட்டு மா மலர் -என்ற பாடமான போது -குளிர்ந்த இதழை யுடைத்தான பெரிய புஷ்ப்பத்தாலே-என்று பொருளாகக் கடவது –

——————————————————————————————

தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத்
தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—-23-

கனியப் பழுத்துக் கிடக்கையாலே தரை அளவும் வரத் தாழ்ந்து கிடக்கிற அஸூர மயமான விளாவினுடைய பழங்களுக்கு
அஸூர மயமான கன்றை எறி கோலாக எடுத்து எறிந்து-ஸ்ரீ யபதியான தன் உருவை விட்டு அர்த்தியான வாமன ரூபத்தை
உடையனாய்க் கொண்டு -பூமியை அளந்து -தன் கால் கீழே இட்டுக் கொண்ட -அந்த சர்வேஸ்வரன் -ந நமேயம் -என்கிற
-ஸ்வாதந்தர்யத்தைப் பொகட்டுத் தன் திருவடிகளிலே வணங்கி -எங்கள் அபிமதம் நீயே பண்ணித் தர வேணும் என்று
தன் பிரசாதத்தைக் கை தொடுமானமாகப் பிடித்துக் கொண்டு தம் தாமுடைய அதிகாரங்களுக்குத் தகுதியாக இருந்த பிரகாரங்களாலே
-ஐஸ்வர்யம் ஆத்மலாபம் -ஸ்வ பிராப்தி ஆகிற ஸ்வ ஸ்வ அபிமதங்களைப் பெற்று ஸூக உத்தரராய்த் தலைக் கட்ட வேணும் என்று
இருக்கும் அவ்வவ அதிகாரிகளையும் -அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

————————————————————————————————

இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ –
அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பகவத் வைபவம் கேட்டால் உகக்கும் நல்ல நெஞ்சே -பரி பூர்ணமான கிருபையால் உண்டாகக் கடவ மோக்ஷமும் –
நிக்ரஹ காரியமாய் வரக் கடவ சம்சாரம் ஆகிற மஹா அநர்த்தமும் ஆகிற இவற்றுக்கு நிர்வாஹகன் அவனே கிடாய் –
-இரண்டுக்கும் பொதுவான சரீரத்துக்கு ஆரம்பகமான வாயு அக்னி ஜலம் ஆகாசம் பூமிகள் ஆகிற பூத பஞ்சகம்
-தத் கார்யமான பெரிய பர்வதங்கள் ஆகிற இவற்றை அடியிலே உண்டாக்குவானும் அவன் கிடாய் –
சம்சார காலத்திலே இவற்றை அழிக்க ஒருப்பட்டுத் திரு உள்ளம் சென்று -அதுக்கு உபகரணமாய் –
-கறுத்த கடலைச் சீறிச் சுடக் கடவ படபாமுக அக்னிக்கு நிர்வாஹகனாய் இருப்பவனும் அவன் கிடாய்-
-ஆக த்யாஜ்ய உபேதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் என்றபடி -ஆர் அருள் என்று அருளின் கார்யமான மோக்ஷத்தை லஷிக்கிறது
-அன்றிக்கே அநுக்ரஹ ஹேதுவான புண்யத்தையும் -நிக்ரஹ ஹேதுவாய் -அநர்த்த கரமுமான பாபத்தையும் சொல்லவுமாம் –

—————————————————————————————

இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் –
-அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

பரமபத வாசிகளான நித்ய ஸூ ரிகள் தாங்கள் வாய் விட்டு ஏத்துகைக்கு விஷயம் ஆகையால் உத்துங்கமாய் -ஸ்வாபாவிகமான
கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் -அங்கு நின்றும் வந்து அவதரித்து -சங்கல்பத்தால் அன்றிக்கே
நேர் கோடு நேரே -அபியாதா -என்னும் படி எடுத்து விட்டுச் சென்றது இந்த்ராதிகள் கேட்கவே வயிறு பிடிக்கும் படியான லங்கையில்
-ப்ரஹர்த்தா ச -என்கிறபடியே அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே அபேக்ஷித சமயத்திலே உதவி முகம் காட்டக் கடவதான கோபத்தால்
கொன்று விழ விட்டது -அவத்யனாக வரம் பெற்றுடைய ராவணனை -அவன் படிகளை சொல்லப் புக்கால் அவதார காலத்தில்
இழந்தவர்கள் இழவைப் பரிஹரிக்கைக்காக எழுந்து அருளி நின்றதுவும் மூங்கில் வளர்ந்து இருக்கிற குளிர்ந்த பர்யந்தங்களை யுடைத்தான திருமலையிலே –
விண்ணவர் -இத்யாதிக்கு ராவண வத சமனந்தரம்-ப்ரஹ்மாதிகளால் ஸ்துதிக்கப் படுகிற புகழை யுடையவன் என்று பொருள் ஆகவுமாம் –

—————————————————————————————————

கீழ் ப்ரஸ்துதமான திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே
திரு உள்ளம் சென்று திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

அபிமான ஸூன்யராய்க் கொண்டு –திருவடிகளிலே தலை மடுத்து -அவனை ஆஸ்ரயித்து -தத் பிராப்திபிரதிபந்தகங்களாய்க் கொண்டு
நடுவே நின்று தகைகிற பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் -ஸ்ரோத்ராதிகளான இந்திரிய பஞ்சகத்தையும் ப்ரத்யகர்த்த ப்ரவணமாம் படி
நியமித்து அவன் பக்கலிலே அபிநிவேசத்தை உடையராய்க் கொண்டு ஒருவர்க்கு ஒருவர் முற்கோலி வந்து ஆஸ்ரயிக்கும் படி
ப்ரஹ்மாதி தேவர்களுக்காகத் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்
-யத்ர பூர்வே சாதியா சந்தி தேவ -என்னும்படி முற்பாடரான நித்ய ஸூ ரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே கொடுத்து அருளிற்று
பூஸூராரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுபவித்து அடிமை செய்து வாழ்கிற திருமலை முன்பு நித்ய ஸூ ரிகளுக்கு கொடுத்தது என்றுமாம் –

————————————————————————————————————-

இப்படி திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி
பரிமாறலாம் பரமபதத்திலே இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

திருமலை யாகிற ஸ்தானத்தில் வேரூன்றி நின்று அபிநிவேசம் தோற்ற -எங்கே எங்கே என்று தேடிக் கொண்டு
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் -சந்த்ர பதத்தையும் உரோஸிக் கொண்டு
-அவ் வருகு பட்டு -அண்ட பித்தியில் செல்லக் கடாக்ஷித்து -ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாய்க்கொண்டு
பரம பதத்திலே தம் மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடி விட்டவிடத்தில் விடாதே
பற்றிச் செல்லுகிற என்னுடைய நெஞ்சானது கமன சைக்ர்யத்தை உடைத்தாய்க் கொண்டு அழகிய கொம்பைத் தேடி
பரந்து செல்லுகிற கொழுந்து போலே இரா நின்றது –மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமா போலே –

——————————————————————————————-

தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு
கோயில் திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் –

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

அசங்க்யாதரரான வேத வைதிக புருஷர்கள் பலரும் -நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான -பெரிய மேன்மையை யுடையவன்
-என்று சொல்லப் படா நிற்பானாய் -ஜகத் ரக்ஷண அர்த்தமாக -அங்கு நின்றும் வந்து -பரப்பை யுடைத்தான
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு அருளா நிற்பானாய் -முன்பே ஒரு நாளிலே கிருஷ்ணனாய் வந்து
-அவதரித்துக் கேசி வாயை அநாயாசேன பிளந்து புகட்ட சிறு பிள்ளையாய் -அதுக்கு மேலே நினைக்க அரிதான
நீர்மை ஏற்றத்தை யுடையனாய்க் கொண்டு போக்யதை மிக்கு இருக்கிற கோயிலிலே -சம்சாரிகளை ரக்ஷித்து அல்லது பேரேன் -என்று
கண் வளர்ந்து அருளுமவனாய் -திருமலையிலே சர்வ ஸூ லபனாய்க் கொண்டு எழுந்து அருளி நிற்கிறவன்
-என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

——————————————————————————————————-

மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

பக்குவமான தசையில் கட்டளை பட்ட லங்கையை பஸ்மா சாத்தாக மனஸுக்கு ஏகாந்தமான திரு வில்லாலே
திருச் சரங்களை நடத்தி முடித்துப் பொகட்டவனே –
இப்படி இருக்கிற நீ பருவம் நிரப்புவதற்கு முன்னே யசோதை பிராட்டியை போலே புத்ரனாகவே புரையற ஸ்நேஹித்துக் கொண்டு
-பரிவு தோற்ற ஒசழக்காகத் தூக்கி எடுத்த பூதனையுடைய பாலின் கனத்தாலே விம்மி ஒளி விடுகிற முலையை
வயிறு நிறையத் தக்கதாக உண்பான் என்று அபிநிவேசம் தோற்ற பாலோடு பிராணனும் போம்படி அமுது செய்து
-புத்திரனான உன்னைத் தாயாரான யசோதை பிராட்டி விஸ்வசியாதே துணுக்கு துணுக் என்று வயிறு மறுகும் படி சிஷித்து விட்டாய் –

—————————————————————————————————-

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

பெரிய கடல் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியை யுடையனாய் -அவ் வழகை முற்றூட்டாக என்னை அனுபவிப்பித்த
உபகாரகனாய் -அபரிச்சேத்ய வைபவனான ஸ்ரீ யபதியே -இப்படி சர்வாதிகனான நீ ஆஸீரிதரான இந்திரன்
ஐஸ்வர்யத்தை இழந்து கண்ணும் கண்ண நீருமாய் திருவடிகளிலே விழுந்த அன்று -மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
-இரந்து -ஜகத்தைத் திருவடிகளாலே அளந்து கொண்டாய் என்றும் -பூமியானது பிரளயத்தில் கரைந்து அண்ட பித்தியிலே சென்று
ஒட்டின அன்று -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு ரக்ஷகனான நீ அந்த பூமியை பிரளயத்தில் முழுகி
இடந்து எடுத்துக் கொண்டு ஏறினாய் என்றும் -துர்வாச சாபத்தால் நஷ்ட ஸ்ரீ கராய்க் கொண்டு இந்த்ராதிகள்
சரணம் புக்க வன்று சர்வ சக்தியான நீ கறுத்த நிறத்தை யுடைத்தான கடலை பிராட்டியை லபிக்கைக்காக முற்படக் கடைந்து
-பின்பு ஒரு காலத்தில் அவள் முக மலர்ச்சி காண் கைக்காக -தத் சஜாதீயமான பெரிய கடலை அடைத்து அருளினாய் என்றும்
உன் படியை அறியக் கடவ பிராமாணிகரான ரிஷிகள் சொல்லா நின்றார்கள்
-இவை சில சேஷ்டிதங்கள் இருக்கும் படியே என்று வித்தாராகிறார் –

———————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: