இரண்டாம் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே –ஐப்பசி -அவிட்டத்தில்-ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

துலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே ‘நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –

——————————————————————————————

திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி பஜித்தேன் என்கிறது –
இன்னமுதாய் -அன்பே தகழி யளித்தா ருமாய் -நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே
ஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் -நன் புகழ் சேர்
நன் புகழ் ஆவது –
யசஸ் சைக பாஜனம்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே
எண்ணிறந்த புகழினானை -என்னும்படியான
கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-
எப்புவியும் பேசும் புகழ் பூதத்தாரையும்
உடைததாகையாலும் –
சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
இக்கரை ஏறி -என்னக் கடவது இ றே
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இ றே
மா மயிலை என்று இ றே இவர் தாமும் மண்டி இருப்பது
கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இ றே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இ றே

-கடல் மலை பூதத்தார் –
திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இ றே -அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -என்று இ றே நிரூபகம்
பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இ றே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக வி றே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால் பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-

—————————————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் உபய விபூதி நாதனாய் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய் பரபக்தி தசா பன்னமானஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
-அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும் சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும் அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும்
அவன் திருவடிகளே என்னும் இடத்தையும் அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-

அநந்தரம் பூதத்தார் -வையம் தகளி யில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து அனுசந்தித்துத் தாம் அனுபவித்த பிரகாரத்தை
நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –
பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

பரபக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும் ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை
தலையெடுத்து -அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் -பரஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும்படியே
பரபக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு -பரபக்தி முற்றிப் பக்வமானதாய் பரமபக்தி சிரஸிகமான பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு
-பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றையவருக்கு –
பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
-இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –
பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரபக்தி–சாஷாத் காரம் பரஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரமபக்தி –
சம்ச்லேஷத்தில் ஸூ கித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பயபக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று அருளிச் செய்யும் படி –
நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் -இவை பிராமாணி கருக்கு முக்கிய அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –
இனி -பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ் வ பாவம் மாம் குருஷ்வ -என்று பிராமாணிகருக்கு அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் –
ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –
ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -15-என்று இ றே கீதாச்சார்யன் வார்த்தை
ச்மஞ்ஞாயதே சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இ றே பராசர வசனம் –

——————————————————————————————-

பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

விஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பரபக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது -மேல் சொல்லுகிற
நெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் -அந்த விஷய வை லக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று
பரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு
உறுப்பான நெய்யாகவும் -விஷய வை லக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த
ப்ரேம அவஸ்தைகளுக்கு வாய்த்தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பரஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –
ஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணக்கமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால் அத்யந்த விலக்ஷணமான
ஆத்ம வஸ்துவானது பகவத் குணாஸ்வாத ரசத்தாலே-த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை
-பகவத் தத்வ யாதாம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே
சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை லோக உபகாரகமாகப் பண்ணின நான்-சர்வ சேஷியான நாராயணனுக்கு
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –

பேசுவிக்க ஒருப்பட்ட ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் -பேசித் தலைக் கட்டி யல்லது
தரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் -சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –
அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஆழ்வாரும்
பரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் -சூடுதற்கவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து
–பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று பர பக்தியால்
உருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூ ஷ்மமான காதல் -என்று
பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இ றே –

அந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது -ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்
-ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் -ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்
பர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே -அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்
உபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை -சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே
கீதாச்சார்யனும் அருளிச் செய்தது -காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இ றே அதுக்கு பாஷ்யம் –
-ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இ றே திருவடியும் –
ஆகையால் பார்ப்பக்த்யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி
விழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக
நெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –
-உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று பர பக்த் யவஸ்தையில் காரணமான நெஞ்சும் உருகும்
-பர ஞான அவஸ்தையில் கரணமான நெஞ்சும் -கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்காக–

—————————————————————————————

பக்தி பரவசர்களாய்க் கொண்டு -அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை –
-சர்வேஸ்வரன் நித்ய ஸூ ரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார்

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

வகுத்த சேஷியான சர்வேஸ்வரனுடைய விக்ரஹாதிகளுக்கு வாசகமாய் -அசாதாரணமான திரு நாமங்களையும்
-ப்ரேம தசா பன்னமான ஞானத்தாலே-அவனுக்கும் தனக்கும் யுண்டான சேஷ சேஷித்வ ரூபமான உறவளவும் செல்ல
உள்ளபடி அறிந்து -பேர் பல சொல்லிப் பிதற்றி -3-5-8-என்கிறபடியே சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத படி
தலை மண்டிக் கொண்ட பிரேமத்தினுடைய முடி ஸ்தானத்தில் நின்று -அடைவு கெடக் கூப்பிட்டால் –
பரமாகாச சப்த வாஸ்யமான பரம பதத்தில் ஸ்வ சம்பந்தத்தாலே நிறம் கொடுக்கும் படியான அழகை யுடையரான
ஸூ ரிகளோடு ஒத்த பெருமை யுடையராம் படி பண்ணுமாதன்றோ –
நமக்கு நிருபாதிக பந்துக்களாய் -நித்யாஞ்சலி புடா -என்கிறபடியே கையும் அஞ்சலியுமாக கொண்டு தொழுகையே
நித்ய யாத்திரையாக யுடையராய் இருக்கிற அநந்த வைநதேய நாதிகள் ஆகிற நித்ய சித்த புருஷர்களுக்கு
நிருபாதிக சேஷியானவனுடைய பிரகாரம் -இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே
அடைவு கெட்டுக் கூப்பிடும் கோசடியிலே வைக்கும் என்றபடி –

——————————————————————————

அடுத்து அணித்தாகத் திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை யுடையவனை
ஆஸ்ரயிக்குமவர்கள் -பரமபதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் –

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

செவ்வி குன்றாத அழகிய பூக்களைக் கொண்டு சம்சாரிகளை அக்கரைப் படுத்துகைக்காகத் திரு பாற் கடலிலே
முற்கோலிக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை சாஸ்திர யுக்தமான பிரகாரத்தால் பக்தி பரவசராய்க் கொண்டு
ஆஸ்ரயிக்குமவர்கள் -முழுகுவது -மூக்குப் புதைப்பது -ஜபிப்பது தொழுவது -புகழுவதாய்க் கொண்டு இடை விடாமல்அ
வனை ஆஸ்ரயித்துக் கொண்டு போரக் கடவர்களாய் -சம்சாரிகளில் பழையரான ப்ரஹ்மாதி தேவர்கள்
-காண ஒண்ணாதே என்றும் -கேட்டே போம் இத்தனை யாய் -நிரவாதிக தேஜஸை உடைத்தாய்க் கொண்டு
பிரகாசிக்கக் கடவதாய் இருந்து -பிரியில் தரிக்க மாட்டாத நன்மையை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு நாயகனான
சர்வேஸ்வரனுடைய வைகுண்ட மா நகரத்தை பிராபிக்க பெறுவாராம் –

———————————————————————————–

அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளி யும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தனமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பக்தி யுத்ப்பத்தி ஸ்தானமான நெஞ்சை ராஜாதி ராஜனான சர்வேஸ்வரனுக்கு திருப் படை வீடாக வகுத்து -நெஞ்சமே நீள் நகர் -5-8-2-
அந்தத் திருப் படை வீட்டிலே -அந்நெஞ்சில் யுண்டாய் -ஸ்வாதந்தர்யம் ஆகிற அழல் தட்டாமையாலே குளிர்ந்து
சர்வ கந்த -என்கிற விஷயத்தைப் பற்றிக் கிளருகையாலே
பரிமளிதமாய்-ஒளி விடுகிற ஸ்நேஹம் ஆகிற முத்தை செவ்வி குன்றாத இதழாக வகுத்துக் கொண்டு
ப்ராப்தியையும் வை லக்ஷண்யத்தையும் விஷயீ கரித்து இரண்டு கூறாக எழுந்து இருக்கிற அபிநிவேசம் ஆகிற
உஜ்ஜவலமான மாணிக்ய வைரங்களை அல்லியும் தாதுமாகச் சேர்த்து
இப்படி லௌகீகமான தாமரையில் காட்டில் வியாவிருத்தமான இதழையும் அல்லியையும் தாதையும் யுடைத்தாய் யாகையாலே
உபமான ரஹிதமான பக்தி யாகிற பெரிய தாமரைப் பூவை அழகு பெற தரித்துக் கொண்டு
குளிர்ந்த தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய போக்யதை ஏக வேஷையான பெரிய பிராட்டியாரைத்
திரு மேனியில் வலவருகான திரு மார்விலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளிலே நிர்மமனாய்க் கொண்டு விழுந்து ஆஸ்ரயித்தேன் –
நெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான வி லக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று
பக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –
பைங்கமலம் ஏந்தி -என்று பக்தியைத் தாமரையாக நிரூபிக்கையாலே அந்த பக்த்யாவஸ்த பேதமான ஸ்நேஹாதிகளை
அதுக்கு இதழும் அல்லியும் தாதுவும் ஆக ரூபிக்கிறது –
பக்தியினுடைய போக உபகரணத்வமும் -போக்யத்தையும் -தோற்றுகைக்காக -அத்தைத் தாமரையாக நிரூபிக்கிறது –
நெஞ்சை நரகமாக நிரூபிக்கிறது -கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் விருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு
அவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக –

—————————————————————————-

ஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி
-ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் –

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

சால தூர தர்சியாய்க் கொண்டு -இரண்டு அடியாலே அளந்து -ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பாயாக -மஹா பலி பக்கலிலே முந்துறச் சென்று –
மூன்றடியை அர்த்தித்து -பூமியை அளந்து கொண்டாய் -அளந்து கொள்ளுகிற அக்காலத்திலே இரண்டு அடியால் அளந்து கொண்டது
அத்தனை போக்கி -மூன்று அடியால் இந்த லோகங்களை அளந்து கொண்டாயோ தான் –
பூமியிலே ரக்ஷகனாய் கொண்டு செவ்வே வந்து அவதரித்து நின்று நீர்மையை யுடையையாய் –
ஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையாய் –சர்வாதிகனான ஸர்வேஸ்வரனே –
-இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளை -என்னைப் போலே அறிவு கெட்டார் பேசில் பேசும் அத்தனை போக்கி
நேர் கொடு நேரே இவ்வளவு என்று அறிந்து பேச வல்லார் யார் –

—————————————————————————————————

ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில் அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று
அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளை பெறுவார் -என்கிறார் –

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பகவத் வை லக்ஷண்யத்தையும் -இதர விஷய தோஷங்களையும் நன்றாக அறிந்து -ஹேய விஷயங்களில் போகாதபடி
ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் ப்ரத்யக்கான பகவத் விஷயத்தில் ப்ரவணமாம் படி நியமித்து
-அங்குத்தைக்கு சத்ருசமாம் படி கந்தல் அற ஆயப்பட்ட செவ்விப் பூக்களை சம்பாதித்துக் கொண்டு
-அபிநிவேசம் மிக்க மனஸை யுடையராய் -அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்னும் முறையை நன்றாகத் தெரிந்து
குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான அவன் திரு நாமங்களை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே
ஸ்தோத்ரம் பண்ணும் பெரிய பாக்யாதிகர்கள் ஆனவர்கள் –கறுத்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாவன்
திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

————————————————————————————————————

இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக நெஞ்சே -நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

ஆஸ்ரிதர் வாழும் படி திருவடிகளை வளர்த்து -சத்ருக்களான நமுசி பிரக்ருதிகள் நெருப்புக் கொளுத்தின ஹ்ருதயத்தை
யுடையராய்க் கொண்டு -பல்லிறுகி -நா மடிக் கொண்டு -பார்வையில் பட்டு விழும்படி சுடப் பார்க்கிற கண் -பரிபிரமித்து
நடுங்கும் படியாக எதிரிகள் மேலே நெருப்பை உமிழ்கிற யுத்த உன்முகமான திரு வாழியை தரித்த சர்வேஸ்வரனுடைய
-பொன் போலேயும் பூ போலேயும் -ஸ்ப்ருஹணீயமாய் -அதி ஸூ குமாரமான சிவந்த திருவடிகளையே
-அளவுடைய நெஞ்சே -தேவையாக யன்றிக்கே ப்ரீதியோடே கூடிக் கொண்டு அநுஸந்தி —
வாய் மடித்துக் கொண்டு கண் சுழன்று கொண்டு மாற்றார் அழல் எடுத்த சிந்தையராம் படி தழல் எடுத்த போராழி என்னவுமாம் –

—————————————————————————————————

இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் –பூதனையை முடித்தால் போலே
அவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பூதனை யானவள் -யசோதை பிராட்டி ஸ்நேஹிக்குமா போலே ஸ்நேஹித்துப் பரிவு தோற்ற ஒசழக்காக உன்னை உறக்கத்தில்
தூக்கி எடுத்து -பால் விம்மி -ஒளி விடுகின்ற புகரை யுடைத்தான முலையை ஹிருதயம் குளிரும்படி உண் என்று சாதரமாக முலை தந்தாள் –
ஆகையால் நீயும் அவள் முலை தந்த அன்று அலை எறிகிற குணத்தால் பெறாப் பேறு பெற்றால் போலே உகந்து கொண்டு
மெய்யே முலை உண்பாரைப் போலே சீறி யுண்டு அவள் பிராணனை முடித்துப் பொகட்டாய் –
அலை பண்பால்-என்று அழிந்த நீர்மையை யுடையவள் -என்று அவள் மேலே ஏறிடவுமாம் -உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம்
கொள் கொங்கை-அகம் குளிர உண்-என்றாள் –ஆனமையால் நீயும் -அலை பண்பால் உகந்து-முலை  யுண்பாய் போலே
முனிந்து ஆவி உண்டாய் -என்று அந்வயம் –

————————————————————————————————————–

பூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ்விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய
யசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

அவள் பிணமாய் விழும்படி நீ முலையுண்டு முடித்த அன்று -முலை கொடுத்தவள் பட்டது கண்டு -நாமும் அப்படிச் செய்வது என்
-என்று பயப்படாத யசோதை பிராட்டியானவள் -உனக்கு ஏது விளையாத தேடிற்றோ -என்னும் வயிறு எரிச்சலாலே பரிந்து
தளராதே தறையிலே கால் பாவும் படி தரித்து நின்று முலை தந்த இந்த மஹா ஸ்வபாவத்துக்கு
மஹா பலி நீர் வார்த்துத் தந்த அன்று நீ உடையவனும் இவை உடைமையும் ஆகிற ஸ்ரேஷ்டமான உறவாலே ரக்ஷகனான நீ
அந்நிய அபிமானத்தால் வந்த அழல் மாறும் படி குளிரத் திருவடிகளாலே ஸ்பர்சித்து அளந்து கொண்ட பெரிய கடலாலே
சூழப் பட்ட பூமியானது மறித்துப் பார்க்கும் இடத்தில் -இதில் இது பெரியது என்று பெருக்கப் பார்க்கும் க்ரமத்தாலே ஒக்குமோ
-அதுவும் பெரிய செயல் -இதுவும் பெரிய செயல் -அந்த ஸ்வ பாவத்துக்கு இது ஒப்பாகப் போருமோ என்றபடி –

—————————————————————————————————-

அவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் -ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே –
அதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட
என் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

வளர்த்தின தொட்டிலிலே கிடக்கும் படியான சிறு பிள்ளையாய்க் கொண்டு பெரிய சகடத்தை கட்டு அழியும் படி தள்ளிப் பொகட்டாய் –
சர்வ ரக்ஷகன் ஆனவனே -அந்த ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை புரஸ்கரித்துக் கொண்டு ஆஸ்ரிதனான இந்திரன் இழவைப் பரிஹரிக்கைக்காக
பூமியை அர்த்தித்து வாங்கிக் கொண்ட -திருவடிகளாலே குளிர ஸ்பர்சித்து சகல ஆத்மாக்களையும் ரக்ஷித்து அருளினாய்
-இப்படி ரக்ஷகனான உன்னை சர்வ ஸமாச்ரயணீயன் என்று
அனுசந்தித்து நிற்கையாலே தனக்குத் தானே ஏத்தும் படியான நாவை யுடையேன் ஆனேன் –
காயிகமான அடிமை செய்கைக்கு உபகரணமான புஷ்ப்பங்களை யுடையேன் ஆனேன் –
உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான் அநாதி காலம் அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே
தலை மடுத்துப் பட்ட தண்மை யை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: