மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-91-100—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

சாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த
த்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்–ஜகத்தை வயிற்றிலே வைத்தும் -பூதனையுடைய பிராணனை யுண்டும்
இரண்டாலும் அபரியாப்தனாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -இவனுக்கு வெண்ணெய் களவு காண்கையிலே ஸ்நேஹம் போரும் இ றே
-அவளுக்கு ரஷிக்கையிலும் -வெண்ணெய் களவு போயிற்று என்ற மாத்திரத்திலே இவன் முகத்திலே பையாப்பையைக் கண்டு தாயார் சீறி –
கண்ணிக்-கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் —–பல பிணை யுடைத்தான கயிற்றாலே அவள் கட்டுவதற்கு பரிஹாரம் இன்றிக்கே கட்டுண்டு இருந்தான்
-தாய் எடுத்த சிறு கோளுக்கு உளைந்து–நெய்யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள்ள நீ யுன் தாமரைக்கு கண்கள்
நீர் மல்கப் பையவே நிலையும்–முழுதும் வெண்ணெய் அளந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக்கு கையும் –
வயிற்றினோடுஆற்றா மகன் -இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ என்று பணித்தார் –

—————————————————————————-

அனுகூல பிரதிகூல விபாகமற பூமியில் உள்ளவர்களை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும் -பிரதிகூலையான பூதனையுடைய
முலையை அவள் பிணமாய் விழும்படி அமுது செய்தும் -இவற்றால் பர்யாப்தி பிறவாமல் அனுகூலர் கடைந்து சேர்த்து வைத்த
வெண்ணெயைக் களவிலே அமுது செய்ய -பரிவுடையாளான யசோதை பிராட்டி ஸ்நேஹம் தோற்றச் சீறி
-பல முடிச்சுகளை யுடைத்தான தாம்பாலே உரைக்கப் பட்ட ஸ் வ சங்கல்பத்தாலே சர்வரையும் கட்டுவது விடுவதாய் போரும்
சர்வ சக்தியான தான் கட்டுண்டு அதுக்கு ஒரு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்தான்
-வயிற்றைக் கொண்டு எங்கு புகுவோம் என்று பாடாற்ற மாட்டாத பிள்ளை –

————————————————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்–பிதா புத்ரேண பித்ருமான் -என்னும்படி இல்லாமையாலே சர்வேஸ்வரனுக்கு
அலாப்ய லாபம் இறே-புத்ர லாபம் –தனக்கு இல்லாத ஒன்றிலே இ றே ஸ்நேஹாம் ஜனிப்பது
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்–சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே–நிறை செய்தேன் நெஞ்சே நினை—புத்ரனைக்
காட்டில் பவுத்ரன் பக்கல் ஸ்நேஹம் யுண்டு இ றே –ஸ்நிக்தனுமாய் பவ்த்த்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறை செய்த சீற்றத்தால்
பாணனுடைய தோளைக் கழித்தவனுடைய திருவடிகளை -நெஞ்சே அவன் பிரதிபந்தகங்களைப் போக்க -ஸ்நேஹித்து அனுபவி –

——————————————————————–

கர்மம் அடியாக ஒருவனுக்குப் பிள்ளையாய் பிறக்குமவன் அன்றிக்கே -சர்வ லோகத்துக்கும் பிதாவான பெருமையை யுடையனாய்
-அப்ராக்ருதம் ஆகையால் பரம பூஜ்யமான திருமேனியை யுடையனாய் -அத்யாச்சர்யமான ஞானாதி குணங்களை அமைத்துக் கொண்டு
ஸ்ரீ வாஸூதேவர்க்குப் பிள்ளையாய்ப் பிறந்த கிருஷ்ணன தன்னுடைய புத்ரனுக்குப் புத்ரனாய் -அத்தாலே மிகவும் ஸ்நிக்தனாய்
இருக்கிற அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே வைத்த பாணாசூரனுடைய செருக்கும் அடியான தோள்கள் ஆயிரத்தையும்
அறுத்துப் பொகட்டவனுடைய திருவடிகளை -எனக்கு விதேயமான நெஞ்சே பூர்ணமாக அனுசந்திக்கப் பார்–

———————————————————————————————————————–

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–93-

நினைத்து உலகிலார் தெளிவார் -அவனை அனுபவித்துத் தம் தாமுக்கு உரியராக வல்லார் யுண்டோ –
நீண்ட திருமால்-அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல்
-லோகத்தை எல்லாம் அளக்கைக்கு வளர்ந்து -அளந்த லோகத்தை ஒரு வயிற்றிலே வைத்து ஒரு பவனாய் இருபத்தொரு ஆலிலையிலே
-கனைத்துலவு-வெள்ளத்தோர் பிள்ளையாய்–சப்தித்துப் பரந்து வளரா நின்றுள்ள வெள்ளத்திலே உளனான பிள்ளையாய்
மெள்ளத் துயின்றானை-உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–வயிற்றிலே புக்க லோகம் தளராத படிக்கு ஈடாக
மெள்ளக் கண் வளர்ந்தவனை —உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து-கொடு வருகை யாவது -அவன் புகுரப் புக்கால் விளக்காது ஒழிகை –

———————————————————————–

சர்வ பிரகாரத்தாலும் அபரிச்சேதயனான ஸ்ரீ யபதியாய் -இப்படி இருந்து வைத்து -சகல லோகங்களையும் திரு வுதரத்திலே
ஏக தேசத்திலே அடக்கி வைத்து ஒரு பவனாய் இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே கோஷித்துக் கொண்டு கண்ட இடம் எங்கும்
தடையற சஞ்சரிக்கிற பிரளயத்தில் அத்விதீயமான முக்த சி ஸூ விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு வயிற்றிலே புக்க
பதார்த்தத்துக்கு ஓர் அலசு வராதபடி மெள்ள கண் வளர்ந்து அருளினவனை -நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று
அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை -ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து
உன் ஹிருதயத்திலே வை -அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி -என்றபடி
-அன்றிக்கே நீண்ட திருமால் அனைத்து உலகும் உள்ளொடுக்கி என்றாய் -லோகத்தை எல்லாம் அளக்கைக்காக வளர்ந்த ஸ்ரீ யபதியாய்
-அளந்த லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து ஆலின் மேலே மெள்ளத் துயின்றானை என்றுமாம் –

——————————————————————————————————–

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி–உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே-
திணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –
உய்த்து – வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -கொடு வந்து வைத்து அநு சந்தித்து ஆனுகூல்யம் ஆகிற வலையிலே அகப்பட்டு
மெத்தனவே-நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்-பொன்றாமல் மாயன் புகுந்து —–விச்சேதம் இன்றிக்கே
என்னுடைய நெஞ்சிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆனான் -பொன்றாமை -என்றது நான் நசியாமல் -என்னவுமாம்
-ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே என்றுமாம் –

————————————————————
ஞானம் ஆகிற தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே செறிந்த ஒளியை யுடைத்தான விளக்கை ஏற்றி
அவனைக் கொண்டு வந்து வைத்து -தத் ஸ்வபாவங்களை ஆராய்ந்து அனுசந்தித்து -ஆனு கூல்யம் ஆகிற வலையிலே
தப்ப ஒண்ணாத படி சேர்த்துக் கொண்டேன் -அநந்தரம் ஆச்சர்ய பூதனானவன் நான் நசித்துப் போகாத படியாக
என் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து மெள்ளக் கொண்டு கால் பாவி தரித்து நின்றான் -புறம்பு போக்கு இல்லை என்று
தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான் -பின்னை படுத்த படுக்கை கொட்டுப் படாமல் பள்ளி கொண்டு அருளினான்
-பொன்றாமை என்று ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் வாராத படி என்றுமாம் –

————————————————————————————————-

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்
சொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——95-

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் –ஹிரண்யன் வரம் கொள்ளாத ஸந்த்யையிலே
-புகுந்து இலங்கும் என்றது -ஸந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறது –
அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —சுகிர்ந்தெங்கும்-சிந்தப் பிளந்த-ஆஸ்ரித விரோதி யாகையாலே கொன்றது
என்ற மாத்திரம் அன்றிக்கே சீற்றத்தின் உரம் இருந்த படி –
திருமால் திருவடியே–ஆஸ்ரிதர் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –
திருமால் திருவடியே வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——வந்திகைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –

——————————————————————

வந்து பிரவேசியா நிற்பதாய் செக்கர் வண்ணத்தால் வந்த ஒளியை யுடைத்தாய் -அசூரர்க்குப் பலம் வர்த்தித்துச் செல்லக் கடவதான
சந்த்யா சமயத்திலே -அவன் வரத்துக்குள் அடங்காத நர சிம்ம ரூபியாய்க் கொண்டு நிர் நிபனந் தனமாகத் தன்னையும்
ப்ரஹ்லாதனையும் பஹு முகமாக நிந்தித்த அஸஹ்ய அபசாரத்தை யுடையனான ஹிரண்யாசூரனுடைய வர பலாதிகளால்
வளர்ந்த சரீரத்தை -சீற்றத்தின் மிகுதியால் -சின்னம் பின்னம் -என்கிறபடியே பல கூறாக வகிர்ந்து
சர்வ பிரதேசத்திலும் சிதறி விழும்படியாகப் பிளந்து பொகட்ட ஸ்ரீயபதியானவனுடைய திருவடிகளை
-என் கருத்திலே நடக்கும் நெஞ்சே -தலையால் வணங்கி வாயார மங்களா சாசனம் பண்ணு -அந்தித்துப் பொழுதத்து
இலங்கும் அரியாய்ப் புகுந்து என்றாய் -சந்த்யா காலத்திலே ஒளியை யுடைத்தான நரசிம்ஹமமாய் புகுந்து என்றுமாம் –
-திருமால் என்று ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு அடி அவ்ளோட்டைச் சேர்த்தி என்கை –

———————————————————————————————————-

நித்ய ஸூ ரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –

நித்ய ஸூ ரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் ———-96-

-கேழ்ந்த-அடி–பெருத்த தாளை யுடைய
தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்-அடித்தாமரை யாமலர் —திருவடிகள் ஆகிற தாமரைப் பூக்கள்
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்-தாழ்த்தி வணங்கத் தழும்பாமே — வாயாலே வாழ்த்தி மணிகள் அழுத்தின
கிரீடத்தை தாழ விட்டு வனக்குப்பதால் தழும்பு ஏறிக் கிடக்கின்றனவே –

—————————————————————————————————————–

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான்   ஆமோ இமை ——-97-

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய-மலரெடுத்த மா மேனி மாயன் –அலரைக் காட்டா நின்ற திரு நாபியை யுடையனாய்
–எழிலை யுடைத்தாய் இருந்துள்ள மலர் காட்டா நின்ற திரு மேனியை யுடைய ஆச்சர்ய பூதன்
அலரெடுத்த-வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு-எண்ணத்தான்   ஆமோ இமை –
-இந்த்ராதிகளுக்கும் அவனை மநோ ரதிக்கத் தான் போமோ -இமை -விசாரி -சற்றுப் போது என்றுமாம்

——————————————————————-

சகல ஜகத் யுதபத்தி காரணமான தாமரைப் பூவை தோற்றுவியா நிற்கிற திரு நாபியை யுடையனாய் -அழகை யுடைத்தான
பூவை பிரகாசிப்பிக்கிற அதி ஸூ குமாரமான கறுத்த திருமேனியை யுடைய ஆச்சர்ய பூதனான அவன் இடையாட்டத்தில்
பூவைத் தெரிவிப்பிக்கிற நல்ல நிறத்தை யுடைய இந்திரன் சிலாக்யமான திரு நாபீ கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா
-தாழ்ந்த ஜடையை யுடையனான ருத்ரன் என்று பிரசித்தரான இவர்களுக்கு நெஞ்சால் தான் நினைக்கத் தான் போமோ
-இது ஒக்குமோ ஒவ்வாதோ என்று விசாரித்துப் பார் -சற்றுப் போது என்றுமாம்
-அலர் எடுத்த உந்தியான் எழிலாய மலர் எடுத்த மா மேனி ஆயன் அங்கு -அவன் இடையாட்டத்திலே -என்றுமாம் –

——————————————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

அமம் சூழ்ந்து -பருமன் உயர்த்தி வேகத்தாலும்-கீழ்ப் படுத்தி வியாபித்து –
துரகத்தை-குதிரை வடிவு கொண்டு வந்த கேசி என்னும் அசுரனை –

இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்-அமஞ்சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு–ஹிமவானிலும்
வாயுவின் பக்கலிலும் அமைத்துப் பரந்து அற பிரகாசித்துத் தோன்றுகிற துரகத்தைத் தொட்டு வாய் பிளந்தான்
நமஞ்சூழ்-நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்–துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —-கேசியை ஆஸ்ரித விரோதி என்று
கை தொட்டுப் பிறந்தவன் நமனாலே சூழ்க்கப் பட்டு உள்ள நரகத்திலே நம்மைக் கிட்டாமல் காக்குமவன் –

————————————————————————–

பனியால் சூழப் பட்டு இருக்கிற பர்வதமும் -சர்வத்துக்கும் அவகாச பிரதமான பெரிய ஆகாசமும் -வாயுவும் -சகல பதார்த்தங்களிலும்
வியாபித்து நிற்குமவனாய் இருந்து வைத்துக் கண் காண வந்து அவதரித்து -ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
மிகவும் உஜ்ஜவலமான குணங்களை யுடையனாய்க் கொண்டு பிரகாசிக்குமவனாய் -பத்தும் பத்தாக நம்மாலே
சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகத்திலே நம்மைக் கிட்டாதபடி ரக்ஷிக்குமவன் -கேசியாகிற குதிரையைப் பிடித்து
வாயைக் கிழித்துப் பொகட்ட கிருஷ்ணன் -அன்றிக்கே எம வஸ்யத்தை தவிராத படியான சம்சாரத்தில் நம்மைக் கிட்டாத படி
காப்பான் என்னவுமாம் -அற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் என்று குதிரைக்கு விசேஷணம் ஆகவுமாம்
-அப்போது மிகவும் பிரகாசித்தது தோற்றுகிற குதிரை வாயைக் கிழித்துப் பொகட்டான் என்று பொருளாகக் கடவது –

—————————————————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ் வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான்  அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்-அட்ட புயகரத்தான்  அந்நான்று–ஏதேனும் ஒரு ஆயுதத்தைத் தொட்டால் அவ்வாயுதத்தால்
எதிரிகளுக்கு தோலாதே-வெற்றியை யுடையனாய் திரு அட்ட புயகரத்திலே நின்றவன் –
குட்டத்துக்-கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்-தாள் முதலே நங்கட்குச் சார்வு -த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
என்னும் படியே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினவனுடைய திருவடிகளே நமக்கு அபாஸ்ரயம் –

——————————————————————–

எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் போரிலே தோலாதே எதிரிகளை மூலமற மாய்த்து -வெற்றியை யுடையனாய் இருக்கும் ஆண் பிள்ளையாய்
-இந்த வடிவோடும் மிடுக்கோடும் எட்டா நிலத்திலே இருக்கை யன்றிக்கே -திரு அட்ட புயகரத்திலே சந்நிஹிதனாய் –
-ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் ஆபன்னனான அத்தசையிலே மடுவில் முடிக்கும் ஸ்வ பாவமான முதலையானது உருவழிந்து சிதிலமாம் படி –
-அவ்வாபத்திலும் கலங்காத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே இலக்குத் தப்பாத படி எறிந்த திரு வாழியை
யுடையவனுடைய பாத மூலமே ப்ராப்ய ருசி பரவசரான எங்களுக்கு பரம ப்ராப்யம் -அன்றிக்கே ஸ்வ ரக்ஷணத்திலே அசக்தரான எங்களுக்கு
-த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்கிறபடியே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவின சிவந்த திருவடிகளே
சஹாயாந்தர நிறபேஷமான உபாயம் என்னவுமாம் –

————————————————————————————————————

எம்பெருமான் ஆபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –ஆபத்துக்கு சர்வேஸ்வரன் –
-ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் -ரக்ஷணத்துக்கு உபகரணமான
திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் -போக உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்
-போக உபகரணமான திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான –இதுக்கு உவமானம் மேலே –
-காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு –மேகங்கள் செறிந்து இருந்துள்ள
ஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற
திருக் கண்களை யுடையாளாய் –
-தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் -பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –

——————————————————————-

திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய் போக உபகரணமாய் சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த
திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச் செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த
திரு மார்வை யுடையனான தான் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி
இருக்குமவளாய் -மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே கறுத்த
திரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் -ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற
உதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்
-தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய வேறு புகல் இன்றியே
இருக்கிற நமக்கு ஆபத்து உள்ள போதோடு இல்லாத போதோடு வாசியற சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –

————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: