மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-81-90—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று
கொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

நெஞ்சால் நினைப்பரியனேலும் –நெஞ்சமே உன்னால் நினைக்கப்போகாதது ஆகிலும் –
நிலைப் பெற்றேன்- நெஞ்சமே பேசாய்–நிலை பெற்று என் நெஞ்சமே பேசாய் -ஐஸ்வர்யம் கன்று பிற்காலியாதே அனுபவியாய் –
நினைக்கும் கால் -நெஞ்சத்துப்பேராது நிற்கும் பெருமானை -ஒரு கால் நினைக்கில் நாக்குண்டா நா எழா என்ற நெஞ்சு
விட்டுப் போக அறியாத சர்வேஸ்வரனை -கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -என்கிறபடியே
என் கொலோ- ஓராது நிற்பது உணர்வு —–அவனை நினையாதே மணலை முக்கப் பார்க்கிறதோ
-அவனை நினையாதே தான் உண்டாம் படி எங்கனே -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு —

—————————————————————————-

பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான மனஸ்ஸாலே பரிச்சேதித்து நினைக்க ஒண்ணாத பெருமையை யுடையனாய் இருந்தானேயாகிலும்
-அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே ஆஸ்ரித ஸூ லபன் என்று அனுசந்தித்து காலூன்றி தரித்து நின்று
எனக்கு பவ்யமான நெஞ்சே -அவனைப் பேசப் பாராய் -இப்படிச் சொன்ன இடத்திலும் திரு உள்ளம் மெத்தென்று இருந்தவாறே
தனக்குப் பாங்கான சமயத்திலே இவன் ஒரு கால் நினைத்துக் கை வாங்கினால் பின்னை எப்போதும் நெஞ்சு விட்டுப் போக மாட்டாமே
நித்ய வாசம் பண்ணும் சர்வேஸ்வரனை அறிவுக்கு வாய்த்தலையான மனஸ்ஸானது அநுஸந்தியாதே இருக்கிறது என்னோ
-வேறே சில துராராத தேவதைகளை பற்ற இருக்கிறதோ -சப் தாதி விஷயங்களை பற்ற இருக்கிறதோ
-இந்த மனஸ் ஸூ எத்தை நினைத்து அவனை நினையாது இருக்கிறது -என்று ஸ் வ களமாக அனுசந்தித்தார் யாய்த்து –

————————————————————————————————————–

இம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய்
இருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

உணரில் உணர்வரியன் –தன்னாலும் அறியப் போகாது -இவனால் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அறிவரியானை
-ஸ்வ யத்னத்தால் காண்பார்க்குக் காணப் போகாது
உள்ளம் புகுந்து-புணரிலும் காண்பரியன் உண்மை -தானே வந்து ஹிருதயத்திலே புணர்ந்தானே யாகிலும் அவனுடைய உண்மை அறியப் போகாது
இணரணையக்-கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை-எங்கணைந்து காண்டும் இனி —
—–காண அரியன் என்று கை வாங்கப் போகாது என்கிறது -பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக -மதுவைப் பானம் பண்ணின
வண்டுகள் சப்தியா நின்ற திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை எங்கே கிட்டிக் காண்போம் இனி –

————————————————————————–

யாரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தால் அறியப் பார்க்கும் அளவில் அறிவரியனாய் இருப்பான் ஒருவன்
-இவ்வருமை தீர அவன் தானே வந்து ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்தானே யாகிலும் இவ்வளவு என்று
பரிச்சேதித்துக் காண்கைக்கு அரியனாய் இருப்பான் ஒருவன் -இது பரமார்த்தம் -இப் படியான பின்பு
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக தேனில் வண்டுகள் வந்து கிட்டி அத்தை கழுத்தே கட்டளையாகப் பருகிச் செருக்கி
அதுக்கு போக்குவிட்டு சப்தியா நின்றுள்ள குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை எங்கே கிட்டுக் காணக் கடவோம்
-காண்பரியன் உண்மை -என்றான போது ஒருவருக்கும் இவ்வளவு என்று அளவிட்டுக் காண அரிதான
வைலக்ஷண்யத்தை யுடையவன் என்று பொருளாகக் கடவது -இணர் -பூங்கொத்து-

——————————————————————————————————–

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்–வர்த்தமான தசையில் -பிரக்ருதியில் சம்பந்தித்து
-மம மாயா துரத்யயா–என்னும் படி காண அரியன் ஆகிலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்-கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்-உள்ளத்தின்
உள்ளே உளன் —நெஞ்சுக்கு இனியனுமாய்த் தன்னுடைமையை மஹா பலி பக்கலிலே
வஞ்சித்தானாய்க் கொண்டு அளந்தவன் ஹிருதயத்திலே நின்று மறக்க ஒட்டான்–

——————————————————————

பகவத் ஸுலப்யத்தின் ஏற்றம் அறியாத வாய்கரையர் ஆனவர்கள் இப்போது அந்த சர்வேஸ்வரன் ஒருவராலும்
அறிய அரிய ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்கள் யாகிலும் -இப்போது அவன் ஒருவராலும் கண்டு அனுபவிக்கைக்கு
அரியனாய் இருந்தானே யாகிலும் -ஈஸ்வரன் என்று தெரியாதபடி க்ருத்ரித்மத்தாலே மஹா பலி பக்கலிலே பூமியை
நீர்ஏற்று வாங்குவாரைப் போலே அபஹரித்துக் கொண்டு ஆகாசாதிகளான லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அவன் -இப்போது பட்டது பட -என் ஹிருதயத்தினுள்ளே ஸ்தாலாந்தரம் அறியாத படி
சந்நிஹிதனாய் இரா நின்றான் -இவ்வம்சத்தை ஒருவராலும் இல்லை செய்ய ஒண்ணாது இ றே -என்கை –
இனி -என்று -இப்போது -என்றபடி -அன்றிக்கே இனியவன் என்று ஒரே சொல்லாய் அனுசந்திப்பார்க்கு
நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –
-மாயன் -என்றது மம மாயா துரத்யயா -என்கிறபடியே தன்னுடையதான ப்ரக்ருதியாலே பந்தித்து இவர்களுக்கு
காண அரியனாய் இருக்குமவன் -என்றுமாம் -பைங்கழலான் -என்று அழகிய திருவடிகளை யுடையவன் என்றுமாம் –

———————————————————————————————————–

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

உளனாய நான் மறையினுள் பொருளை –நிர்தோஷ பிராமண சித்தன் ஆகையால் தான் உளனாய் -வேதத்தாலே பிரதிபாதிக்கப் பட்டவனை
உள்ளத்து-உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்–கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து -ஞான யோகத்தாலே காண ஆசைப் பட்டாரே யாகிலும்
உளனாய-வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டார் கவி ———–யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்று ஸ்ருதி ப்ரஸித்தமான கண் அழகை யுடைய
சர்வேஸ்வரனை ஆர் காண வல்லார் -/ உகப்பார் கவி -பின்னைக் காணும் படி எங்கனே என்னில்
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகக்கும் அத்தனை –

—————————————————————————

ருகாதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதத்தில் பூர்வ பாக ஸித்தமான கர்மாதிகள் போல் அன்றிக்கே
-உபநிஷத் பாக்க ஸித்தமான ரஹஸ்யார்த்த பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கிறவனை -கர்ம யோக ஸித்தமான
ஞான யோகத்தாலே யதாவாக ஆராய்ந்து ஹ்ருதயத்தில் சந்நிஹிதனாகப் பரிச்சேதித்து அறிந்தார்களே யாகிலும்
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்கிறபடியே அழகிய தாமரைப் பூ போலே நீண்ட திருக் கண்களை யுடைய
ஆச்சர்ய பூதனாய்க் கொண்டு உளனானவனை யார் தான் கண்டு அனுபவிக்கப் பெற்றார்
-கண்டாராகச் சொல்லுகிறவர்களும் இவ்விஷயத்தில் கிஞ்சித் கரித்தோமாக வேணும் என்னும் ஆசையினால்
கவியை உக்காந்தாள் அத்தனை அல்லது உள்ளபடி காணப் பெற்றார்களோ என்று கருத்து –

—————————————————————————————————————–

ஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும்
கூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் –

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

கவியினார் கை புனைந்து-ஸ்தோத்ரத்தால் அபிமான ஸூன்யராய்த் தொழுது –
கண்ணார் கழல் போய்ச்-கண் விலக்ஷணமான திருவடிகளை அடைந்து –
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் -புவியினார்–செவி நிறைந்த கேள்வியை யுடையராய்ச் சேர்ந்தாரான பூமியில் உள்ளார் எல்லாம் –
போற்றி யுரைக்கப் பொலியுமே —–எல்லாரும் கூடிப் போற்றி உறையா நின்றால் அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப் பண்ணப் போமோ –
பின்னைக்காக-ஏற்று யிரை யட்டான் எழில்–நப்பின்னை பிராட்டி கலவிக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்களை அடர்த்த
ஒரு செயலையும் நடுவு அழகையும் முடியாகி சொல்லப் போமோ –

——————————————————————-

நப்பின்னைப் பிராட்டிக்கு பர தந்திரனாய்க் கொண்டு தத் சம்ச்லேஷ பிரதிபந்தகமான ரிஷபங்களுடைய ப்ராணன்களை முடித்து
பொகட்டவனுடைய மணக்கோலமும் -ஏறு தழுவின ஒரு செயலும் வாயாலே சொன்ன கவியோடே கூடிக் கொண்டு –
-கையாலே அஞ்சலியைப் பண்ணி -கண்களானவை அழகு நிறைந்துள்ள திருவடிகளிலே சென்று கிட்டி –
செவியில் நிறையும்படியான அவன் கல்யாண குணங்களில் கேள்வியை யுடைய ராய்க் கொண்டு கிட்டினாரான
பூமியில் உள்ளார் எல்லாம் மங்கள வாசகமான சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி அவர்கள்
புகழப் புகழ மேன் மேல் என சம்ருத்தமாம் அத்தனை போக்கிச் சிறிது வரையிட்டுக் காட்டுமோ-
-இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ என்றுமாம் –

—————————————————————————————————————–

ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து –எழிலை யுடைத்தான மின்னைக் கொடியாக எடுத்து
வேகத்-தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -வேகத்தை யுடைத்தான தொழிலைக் கொண்டு தானே முழங்கித் தோன்றா நின்ற கார் வானம்
எழில் கொண்ட-நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து —–ஆகளமாக நீரைப் பானம் பண்ணின காள மேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரன்
உடைய நிறம் போலே –கார் காலத்திலே மேகமானது கலந்து காட்டும் –

——————————————————————————

அழகை யுடைத்தாய் கொண்டு மின்னை த்வஜமாகத் தரித்து வேகமாகிற வியாபாரத்தை உடைத்தாய்க் கொண்டு தான்
மிகவும் கோஷித்துக் கொண்டு தோற்று கிற கார் காலத்திலே மேகமானது கண் மாற வைக்க ஒண்ணாத அழகை யுடைத்தாய்
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின காளமேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய நிறம் போலே சேர்ந்து பிரகாசியா நிற்கும்
-எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது அழகை யுடைத்தாய் இருக்கிற கார் வானம் என்று மேகத்துக்கு விசேஷணமாகக் கடவது –

——————————————————————————————————

பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

கலந்து மணியிமைக்கும் கண்ணா–நின்-மேனிமலர்ந்து மரகதமே காட்டும் –ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திரு மேனியை –பிரகாசியா நின்ற ஸ்ரமஹரமான மரகதமே காட்டா நின்றது –
-நலந்திகழும்-கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை-அந்தி வான் காட்டுமது –அழகு நிகழா நின்ற கொத்திலே
வண்டு அறையா நின்ற திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை சந்த்யா ராகத்தாலே சிவந்த மேகம் காட்டா நின்றது
————————————————————————-

ஆஸ்ரித ஸூலபனானவனே-ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற உன்னுடைய திருமேனியை -ஸ்ரமஹரமான
மரகத ரத்னமானது விஸ்திருதமான பிரபையை யுடைத்தாய் கொண்டு ஸ் பஷ்டமாக பிரகாசிப்பியா நின்றது
-அழகு விளங்கா நின்றுள்ள கொத்துக்களிலே படிந்து மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள
குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனான உன்னை சந்த்யா ராகத்தை யுடைத்தான அந்த ஆகாசமானது பிரகாசிப்பியா நின்றது
-திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்திவான் காட்டும் என்றபடி -அது போல் காட்டும் என்னவுமாம் –

—————————————————————————————————————

-உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –

இதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே–பகவத் ப்ராவண்யம் நன்று விஷய ப்ராவண்யம் பொல்லாது என்று சம்சயப் படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன்–பொது நின்ற-பொன்னங்கழலே தொழுமின் -சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான
திருத் துழாயை யுடையவனுடைய திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்
முழுவினைகள்-முன்னம் கழலும் முடிந்து ——நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும் –

——————————————————————————-

சாஸ்திர ஸித்தமான பகவத் விஷயம் நல்லது -ப்ரத்யக்ஷ ஸித்தமான இதர விஷயங்கள் சாலப் பொல்லாதது -என்னும் இவ்வர்த்தத்தில்
சம்சயப்படாதே –ஐஸ்வர்ய பிரகாசமாய் தேன் நிறைந்து இருக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையவனுடைய
சர்வ ஆஸ்ரித சாதாரணமாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் இருந்துள்ள திருவடியை ஆஸ்ரயியுங்கோள்
-ஆஸ்ரயண விரோதிகளான ஸமஸ்த பாபங்களும் வியாக்த்யந்தரங்களில் கார்யகரம் ஆகமாட்டாத படி நசித்து
-தொழுவதாக ஒருப்பட்ட அளவிலே விட்டு நீங்கும் -அது நன்று இது தீது என்று ஐயப்படாதே என்று அனுபூதமான
விஷயம் நல்லது இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாது என்று இதர விஷயங்களில்
உள்மானம் புறமானங்களைப் பார்த்து சம்சயியாதே என்னவுமாம் –

—————————————————————————————————

திருமலையிலே குறவரோடு -திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி –

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

முடிந்த பொழுதில் குறவாணர் –சரம அவஸ்தையில் வர்த்திக்கிற குறவர்க்கு நிர்வாஹகர் –
ஏனம்-படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தங்களுக்கு பலம் இன்றிக்கே பன்றி உழுத சாலிலே அழகிய திணைகளை வித்த
தடிந்து எழுந்த-வேய்ங்கழை போய் விண் திறக்கும்–வேங்கடமே -தினை விரைக்காக வெட்டி எழுந்த
வேய்ங்கழை போய் விண்ணைத் திறக்கும் திருமலை
மேலோருநாள்-தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———பண்டு ஒரு நாள் இனிய குழலை வாயிலே வைத்து திரு வாய்ப்பாடியில்
உள்ளாரை வசீகரித்தால் போலே ஒரு மலையிலே நின்று சம்சாரிகளை வசீகரிக்க நிற்குமவன் சிலம்பு –

———————————————————————

அப்போது முடித்தார்கள் இப்போது முடித்தார்கள் என்னும் படி சரம தசை ஆபன்னரான குற வ்ருத்தர்கள் தங்கள் ஏர் பிடித்து உழ
மாட்டாமையாலும் ஜாதி உசித வ்ருத்தி தவிர ஒண்ணாமையாலும் வராஹங்களானவை தாங்கள் செருக்காலே மூங்கில்கள்
வேர் பறிந்து விழும்படி படிந்து உழுத சால்களிலே -உழுத செவ்வி போவதற்கு முன்பே அழகிய தினை களை விதைக்க
-பிற்றை நாள் பன்றிகள் சாய்த்துப் பொகட்ட மூங்கில்களை தினைக்கு களையாக ஒண்ணாது என்று அவர்கள்
வெட்டிக் களைந்த வேய் மூங்கில்கள் ஆனவை போய் ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும்படியான திருவேங்கடமே
பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை / சிலம்பு -மலை –

—————————————————————————————————————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இ றே என்கிறார் –

திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த  மண் ————90-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -சிலம்பையும் செறி கழலையும் யுடைத்தாய் -கங்கையிலே விளக்கின் திருவடி போய் அண்டம் சென்று இசைப்ப
புலம்பிய தோள்-எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ-வண்டுழாய் மாலளந்த  மண் ——சங்கைஸ் ஸூ ராணாம் என்ற
தேவர்களால் திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட தோள் எட்டுத் திக்கும் சூழ இடம் போராது
-அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————————

திருச் சிலம்பும் செறியச் சாத்தின திரு வீரக் கழலும் சர்வோதிக்கமாக ஒக்கச் சென்று தவனிக்க -ஆகாச கங்கையில் விளக்கப்பட்ட
சிவந்த திருவடிகளானவை அண்ட பித்தியிலே தாக்க -சகல லோகங்களும் வாய் புலத்தும் படியான அழகை யுடைத்த
திருத் தோள்களானவை எட்டுத் திக்குகளையும் வியாபிக்க -அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் அளந்த பூமியானது அவன் தனக்கு நின்று அளக்க இடம் போதாது -இது என்ன ஆச்சர்யம் தான் –

———————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: