மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-71-80—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி–கையை எடுத்துக் கொண்டு ஓடிக் களிறானது முகிலைக் குத்த –
ஒளிறு மருப்பொசிகை யாளி –வெண் மருப்பை முறியா நின்ற யாளி –கை எடுத்தோடி என்று யாளிக்காகாச் சொல்லவுமாம் –
-பிளிறி-விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே–யானையானது பிளிறிக் கொண்டு விழும் படிக்கு ஈடாகக் கொன்று
சினத்தாலே நின்று அதிரா நின்ற திருமலை –
மேனாள்-குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றது என்று
உகந்து நிற்கும் அவனுடைய திருமலை இ றே -திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகம் ஆகுமோ என்னில்
-அக்நீஷோமீய ஹிம்சையோ பாதி இ றே அவற்றுக்கும் –

—————————————————————-

ஆனையானது தன் துதிக்கையை எடுத்துக் கொண்டு பெரிய வேகத்தோடு சென்று மத யானை போலே எழுந்த
மா முகிலை பிரதிகஜம் என்று புத்தி பண்ணி குத்த -இத்தைக் கண்ட யாளியானது -அந்த யானையினுடைய வெளுத்த
நிறத்தை யுடைத்தான கொம்பை அநாயாசேன முறியா நின்ற கையை யுடைத்தாய்க் கொண்டு
-அது வாய் விட்டு அலறிக் கொண்டு முறிந்து விழும்படி கொன்று பொகட்டு பின்னையும் சீற்றம் மாறாத படியால்
இவ்விடம் தன்னிலே நின்று ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும் படி கர்ஜியா நிற்கும் வேங்கடமே முன்பு ஒரு நாளிலே
குழக் கன்றைக் கொண்டு விளங்கனி எறிந்தவனுடைய திருமலை –

—————————————————————————————————-

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை  போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர்   கோமான் இடம் —–72-

குன்று ஒன்றினாய குற மகளிர் –திருமலைக்கு கீழ் இழியில் குடிப் பழியாம் குறவருடைய பெண்கள் /
கோல்வளைக்கை-சென்று விளையாடும் திங்கழை  போய் -குறவருடைய பெண்கள் கோல் வளையை யுடைத்தான கையாலே
சென்று விளையாடுகிற கழலானது போய் -வென்று விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர்   கோமான் இடம் —-உஜ்ஜவலமான சந்திரனை ராஹு வானது க்ரஹிக்க ஒண்ணாது என்று
வென்று சந்திரனுக்கு அந்த வியசனத்தைப் போக்கும் திருமலை பரம பதத்தில் தன்னோடு ஓக்க
-த்வி த்வாதஸ வார்ஷிகரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவன் இடம் –
-தீங்கிழை -என்று இவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்குப் பிடித்து விளையாடும் மூங்கில் ஆகவுமாம் –

————————————————————

திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
-வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் -ஸ்வ இச்சையால் சென்று விளையாடும் குறப் பெண்களுடைய
தர்ச நீயமான வளையை உடைத்தான கையானது -பசுமையாலும் சுற்று உடைமையாலும் ஒழுகு நீட்சியாலும்
அழகிய மூங்கில்களை வென்று அதுக்கு மேலே உஜ்ஜவலனான சந்திரனை க்ரஸிக்க ஒருப்படுகிற
ராஹுவாலே வந்த அவன் வியசனத்தைப் போக்கும் திருமலையே –சர்வ உத்தமராய் -நிரந்தர அனுபவத்தால்
நித்ய யவ்வன ஸ்வ பாவரான நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வாமி யானவன் விரும்பி வர்த்திக்கும் ஸ்தானம் –
-விளையாடும் குற மகளிர் கோல் வளைக்கையானது சென்று நல்ல மூங்கில் செறிவை நீக்கிக் கிரணங்களை யுடைய
சந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் உண்டான இடரை நீக்கும் என்றுமாம்
-அன்றிக்கே -அவர்கள் வளையின் ஒளி சந்திரன் ஒளி புகுரப் பெறாத மூங்கில் இருளை அறுத்து வெளி யாக்கிச் சந்திரன்
–மறுவையும் போக்கும் -என்றுமாம் -அங்கனும் இன்றிக்கே -குற மகளிர் கோல் வளைக் கையாலே ஊஞ்சல்
ஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கிலானது போய் விளங்கு மதி கோள் விடுக்கும் என்றுமாம் –

——————————————————————————————————————–

திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——73-

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி-இடத்திலும் வலத்திலுமாக ஏழு குதிரை பூண்ட ஆதித்யனுடைய தேரை ஒட்டி
-ஏழு பூண்ட ஆதித்ய ரதத்தை மஹா மேருவுக்கு வலமே இடமாக -மார்க்கமாக ஒட்டி என்றுமாம்
-இரவியினுடைய தேரை பாரத சமரத்திலே நடத்தி -என்றுமாம் –
வடமுக வேங்கடத்து மன்னும் -வடக்கில் திக்கில் உண்டான திருமலையிலே நித்ய வாசம் பண்ணுகிற –
குட நயந்த-கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை
நாவால் படைக்கும் சம்பத்து -குடக் கூத்து ஆடின இளைப்பு ஆறத் திருமலையிலே வந்து நின்றான் போலே –

———————————————————————-

மேருவுக்கு இடமாயும் வலமாயும் சஞ்சரிக்கக் கடவதாய் -ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதாய் -ஏழு குதிரை பூண்ட
ஆதித்ய ரதத்தை தத் அந்தர்யாமியாய்க் கொண்டு ஒட்டி வடக்குத் திக்கில் பிரதானமாய் இருந்துள்ள திருமலையிலே
நித்ய வாசம் பண்ணா நின்றானுமாய் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடம் எடுத்து ஆடுகிற மநோ ஹாரி சேஷ்டிதத்தை
உடையவனாய் நின்றவனுடைய ஆபரணத் த்வனியை உடைத்தான திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

——————————————————————————————————-

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ  -சலமே தான்
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

நலமே வலிது கொல் –ஸ்த்ரீத்வ பிரயுக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே–
சலமே தான்- நஞ்சூட்டுவன் பேய்–தாய் வேஷத்தைக் கொண்டு நஞ்சூட்டுவதாக வந்த வலிய பேயானது –
நிலமே புரண்டு போய் வீழ  -நிலத்திலே புரண்டு விழும் படிக்கு ஈடாக
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——விஷ முலை யுண்டத்துக்குப்
நலமே வலிது கொல்-அச்சமும் ஸ்நேஹமும் கூடினால் -ஸ்நேஹமே வலிதாகாதே —

———————————————————

பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவு கொண்டு வருகை யாகிற க்ருத்ரிமத்தாலே விஷத்தைப் புஜிப்பதாக ஒருப்பட்ட
கடின சித்தையான பூதனையானவள் பூமியிலே பிணமாய் மறிந்து போய் விழும்படியாக வெவ்விய முலையை
அமுது செய்தவனை முலையை அமுது செய்தவனை அவள் பக்கலில் நின்றும் மீட்டு யசோதை பிராட்டி யானவள்
விஷத்துக்கு ப்ரத்ய ஒளஷதமான அம்ருதத்தை புஜிப்பதாக கேட்ட இடத்திலே மோஹித்து விழாதே அவ்வளவும்
கால் நடை தந்து சென்று கிட்டித் தன்னுடைய முலையை அவன் திருப் பவளத்திலே கொடுத்தாள் –
ஆனபின்பு நம்மை இழக்க வரில் செய்வது என் என்று பயப்பட்டு மீளுகைக்கு உடலான அறிவில் காட்டிலும்
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
-ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

—————————————————————————————————–

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்–பரந்த கொடு முடியில் கிட்டிக் கீழ் வயிறு தெப்ப-
-ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -போக்ய தையாலே மெள்ள சஞ்சரியா நின்ற சிகரத்தில் தேய்க்கையாலே
-ஒளியை யுடைத்தான சந்திரன் பக்கல் முயலை –
சேர்ந்து-சின வேங்கை பார்க்கும் திருமலையே –கிட்டிச் சினத்தாலே புலி படப் பார்க்கும் திருமலை –
ஆயன்-புன வேங்கை நாறும் பொருப்பு —–இடையர்க்கு காட்டில் மரங்களுடைய நாற்றம் சால பிரியம் இ றே –

——————————————————————

பரப்பை யுடைத்தான சிகரங்களினுடைய உச்சி இடத்திலே கீழ் வயிறு தேயும் படியாகக் கிட்டி அங்குத்தை போக்யத்தையிலே
கால் தாழ்ந்து மெள்ள சஞ்சரிக்கக் கடவனாய் -கொடு முடியில் தேய்க்கையாலே சாணையிலே இட்டால் போலே ஒளியை யுடையனாய்
இருக்கிற சந்திரன் பக்கல் யுண்டான அழகிய முயலை -கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது கிட்டித் தனக்கு
ஆமிஷமான முயலாகக் கருதி -பிடித்துக் கொள்ளுதல் -விட்டுப் போதல் செய்ய மாட்டாதே எப்போதும் பார்த்த படியே நிற்கும் திருமலையே
ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய் ஜாதி உசிதமான தன்னிலத்திலே வேங்கைகள் நிரந்தரமாகப் பரிமளிக்கும் பர்வதம் –

————————————————————————————————-

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
-நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா –வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை
ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–பனி நாள் மலைகளில் பொய்க்கைகளிலே புக்குக் குளித்து
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –
-விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –
மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி
உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் -அசேதனமான கொடிய பாபங்கள் தானே
தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ -தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –
-வருஷடி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

——————————————————————–

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் -குளிர் காலத்திலே பொய்க்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் -இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –
அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
-தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
-துஷ் கர்மங்கள் அடங்க லும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ
-சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே சேதன சமாதியாலே சொல்லுகிறது —
அன்றியே மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து கை தொழுதால் தீ வினைகள் அக்காவே என்னவுமாம்
–மென்மலர் என்ற பாடமாகில் மிருதுவான மலரை -என்றதாகிறது –

———————————————————————————————————

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
-இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் — சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல
ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக -இவனால் நோவு பட்டாலும்
நம்முடைய பாடே இ றே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து -/ வாய்ந்த குழவியாய்–அழகிய பிள்ளையாய் -/
வாளரக்கன்-சாயுதனான ராக்ஷஸன் யுடைய
-ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
-ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

——————————————————————-

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

—————————————————————————————————

அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய
கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்–சர்வ சக்தி நமக்கு ரக்ஷையாம் -வலவருகே திரு வாழி பிடிக்குமவன்
போலே காணும் ரக்ஷகனாவான் -தன்னைப் புரஸ்கரித்து இ றே மா ஸூ ச -என்றது -இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
-அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -விரோதியைப் போக்கி ரக்ஷிக்க வல்லன் என்னும் இடத்தை உபபாதிக்கிறது
-முரனுடைய ஆயுசு ஸூ ஆகிற மிடுக்கை முடிக்க வல்ல மிடுக்கன் –
சரணாமேல்-ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
-ஆழி வலவன்-அரணாம்–ஆஸ்ரயணீயன் ஆகும் -சமோஹம் சர்வ பூதேஷூ நமே த்வேஷயோ அஸ்தி ந ப்ரிய
–யோ அபி ஸ் யு பாபயோ நய–எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் –
ஒது கதி மாயனையே ஓர்த்து–சரண்யனாய் ஆச்சர்ய பூதனானவனை அனுசந்தித்து அவன் திரு நாமங்களை சொல்லு –

————————————————————————

ரக்ஷண பரிகரமான திரு வாழியை வலவருகே யுடையனாய் முராஸூரனுடைய ஆயுசாலே வந்த பலத்தைப் போக்கின
மிடுக்கை யுடையனானவன் ரக்ஷகனாகும் இடத்தில் -ஏது ஞானம் -ஏது வ்ருத்தி ஏது ஜென்மம் என்று
வித்யா வ்ருத்த ஜென்மங்கள் யுடைய நிகர்ஷம் பார்த்து உபேக்ஷியாதே -ஆபன்னராய்-ரக்ஷக அபேக்ஷை யுடையரான நமக்கு
சர்வ காலத்திலும் ரக்ஷகனாம் -ஆனபின்பு நம்முடைய குற்றத்தைப் பார்த்து பிற்காலியாதே சரணத்வஏகாந்தமான
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனானவனையே உபாயமாக அத்யவசித்து -அவன் திரு நாமங்களை
இடைவிடாமல் நெஞ்சே சொல்லு -நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு -என்று மேலே சொல்லுகிற நெஞ்சு
இங்கும் முன்னிலைக்கு விஷயம் -அன்றிக்கே நிலை வரம்பில பல பிறப்பாய் -என்கிறபடியே
-முரன் நாள் வலம் சூழ்ந்த மொய்ம்பன் சரணாம் இடத்தில் தனக்கு என்ன ஒரு நியதி இன்றிக்கே ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு
உறுப்பான ஏதேனும் ஒரு ஜென்ம வித்யா வ்ருத்தங்களைத் தான் உடையனாய்க் கொண்டு நமக்கு என்றும் காரணாம் என்றுமாம்
-ஒது கதி மாதவனையே ஓர்த்து -என்ற பாடமாகில் -ஸ்ரீ யபதியை உபாயமாகப் புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று பொருளாகக் கடவது –

—————————————————————————————————-

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –

நாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி-நிரையார மார்வனையே —–அழகிய திருத் துழாய் மாலையை யுடையவனுமாய்
-தேங்கின கடல் போலே இருக்கும் திரு மேனியை யுடையவனாய் சப் தாதிகளை நாக்கு வளைக்கலாம் படி ஆபரண அழகை யுடையவனை –
நின்று ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-நின்று அனுசந்தித்த மனசை யுடையராய் இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி
-அவை பொல்லாது என்று ஆராய்ந்து -சம்சாரத்தைப் போக்கப் புக்கால் போக்கலாம்
ஏழு பிறப்பு என்றது உப லக்ஷணம் -ஜென்மம் அடங்கப் போக்கலாம் என்ற படி –

—————————————————————

பசுத்த நிறத்தை யுடைத்தாய் பரிமள பிரசுரமான செவ்வித் திருத் துழாயாலே அலங்க்ருதனாய் -தேங்கின கடல் போலே
இருண்டு குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் -ஒழுங்கு பட்டு இருக்கிற திரு ஆரத்தாலே அலங்க்ருதமான
திரு மார்வை யுடையவனையே ஒருபடப் பட நின்று -நிரந்தரமாக அனுசந்திக்கிற மனஸை யுடையராய்
ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்த்ரியங்களையும் விஷயங்களில் போகாத படி நியமித்து -சம்சார தோஷத்தை அனுசந்தித்து –
-அதில் நின்றும் ஹிருதயத்தை மீள விட்டால் ஒன்றின் பின் ஒன்றாக வரக் கடவ ஜென்ம பரம்பரைகளை அநாயாசேன பேர்க்கலாம்-
அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம் என்று கருத்து –

————————————————————————————————————

நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –
-அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -தாமஸ தேவதையை ஆஸ்ரயிக்கையாலே சர்வேஸ்வரன் என்று அறியாதே
எதிரிட்டு தேரை யுடையனான பாணன் யுடைய தோளோடு தோள் ஒன்றிய அல்லாத ஆயிரம் தோளும் துணியும் படிக்கு ஈடாக வென்று –
வென்றிலங்கும்-ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே-ஒளியையும் கூர்மையையும் யுடைய திரு வாழியை யுடைய
அநந்த சாயியுடைய திருவடிகளிலே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —அணைய நெஞ்சானது தானே ப்ரவர்த்தியா நின்றது –

————————————————————————-

ருத்ரனை அண்டை கொண்ட பலத்தால் சர்வேஸ்வரன் என்று அறியாதே கூசாமல் முன்னே வந்து நின்று எதிராய் நின்றவனாய்
-ஒழுங்கு பட அழுத்தின மணிகளோடே கூடின தேரிலே எறி வந்த பாணாஸூ ரனுடைய அடி ஒன்றாய் பணைத்து இருந்துள்ள
ஆயிரம் தோளும் யேகோத் யோகேன அறுப்புண்டு விழும்படியாக ஜெயித்து -அத்தாலே ஒளி விடா நிற்பதாய் –
-கூர்மையை யுடைத்தாய் அதி பிரபலமான திரு வாழியை யுடையனான அநந்த சாயியை யுடைய சிவந்த திருவடிகளிலே
நெஞ்சானது எனக்கு முன்னே கிட்டுவதாகத் தானே உத்சஹியா நின்றது-
ஆர் படுகை–கூர்மையை யுடைத்தாகை–அரங்களை யுடைத்தாகை -என்றுமாம் – -வான் -வலி-

————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: