மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 41-50– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

மண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்   குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

அண்டம் போய் எண்டிசையும்—மன்னு மணி முடி நீண்டு–அண்டத்தையும் -எட்டுத் திக்குகளையும் ஆதி ராஜ்ய ஸூ சகமான
திரு அபிஷேகம் வியாபிக்கவும் –
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –சேதனராலே செறியப் பட்ட பூமி யடங்கலும் திருவடிகளே யாகவும் –
மின்னை-உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்  -மேக பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து அருளுகிற போது
மின்னைத் திருப் பீதாம்பரமாகக் கொண்டு உலகு அளந்தான் –
குன்றம்-குடையாக ஆ காத்த கோ ——-த்ரை லோக்யத்தையும் தன்னுடைய திரு மேனியில் மறைத்தவன்
ஒரு மலையாலே தன்னுடைய திரு மேனியை மறைத்துக் கொண்டான் –

————————————————————-

மலையைக் குடையாக தரித்துக் கொண்டு நின்று வர்ஷத்திலே அழியப் புக்க பசுக்களை ரக்ஷித்து அருளின நிருபாதிக
ஸ்வாமியான கிருஷ்ணன் உபய விபூதி நாதத்வத்துக்குத் தகுதியாய்க் கொண்டு பொருந்தி அழகிய ரத்னங்களாலே
சமைக்குப் பட்டு இருக்கிற திரு அபிஷேகம் ஆனது முசிவற வளர்ந்து அண்ட பித்தியிலே சென்று கிட்டும் படியாகவும்
எட்டுத் திக்குகளையும் பிராணிகள் நிறைந்து கிடக்கிற பூமி எல்லாவற்றையும் திருவடிகளே வியாபிக்கும் படியாகவும்
மேக பதத்துக்கு அவ்வருகே செல்ல வளருகையாலே அங்குண்டான மின்னலை திருப் பீதாம்பரமாகக் கொண்டு
மஹா பலி உதகம் பண்ணிக் கொடுத்த வன்று லோகத்தை அளந்து கொண்டான் –

——————————————————————————————————

ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி–ப்ராஹ்மணானாய் ஒத்துச் சொல்லப் பெறுமா போலே
இடை ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களையும் மேய்த்துக் குழலையும் ஊதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -அப்பருவம் -நிரம்பாமையிலே கேசியினுடைய வாயைக் கிழிக்க வல்லனாய்
-விரோதியைப் போக்குகையாலே -ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
-மேவி-அரியுருவமாகி இரணியனதாகம்-தெரியுகிரால் கீண்டான் சினம் —மேவி -நரத்வ சிம்ஹத்வமான இரண்டு வடிவு கொண்டால்
பொருந்தாதே இருக்குமோ என்னில் -ஒரு வடிவு போலே பொருந்தின படி-
-அன்றிக்கே -மேவி என்று ஹிரண்யனுடைய வரத்தைக் கிட்டி -என்றுமாம் –
-எரி உருவமாகி –ஒளி யுண்டான ரூபத்தை யுடையவனாய்ச் சினத்தாலே இரணியன் ஆகத்தைக் கீண்டான்-
-அன்றிக்கே அருள் என்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்
-அச் சினத்தை தெரி -அநுஸந்தி -என்றுமாம் –

————————————————————————-

பசு மேய்க்கைக்கு யோக்யதை யுண்டாம் படி இடையனாய் பிறந்து ஜாதி உசிதமாக பசுக்கள் திரளைப் புல்லும் தண்ணீரும்
உள்ள இடம் தேடி வயிறு நிறைய மேய்த்து -திருக் குழலை ஊதி அந்தப் பருவத்தே தான் பிற்காலியாதே
நினைத்தது செய்ய வல்ல சமர்த்தனாய்க் கொண்டு கேசியினுடைய வாயைக் கிழித்தவனாய் –
-விரோதி போகப் பெற்ற ஹர்ஷத்தாலே –நீல ரத்னம் போலே -இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய்-
-இரண்டு வடிவை ஏக காலத்திலே எடுத்துக் கொண்ட அளவிலே சேராச் சேர்த்தியாய் இராதே –
-சேர்ப் பாலும் கண்ட சர்க்கரையும் போலே பொருந்தி இருக்கிற -நரசிம்ஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு-
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பைத் திரு உகிராலே கிழித்துப் பொகட்டவனுடைய ஆஸ்ரித விரோதி விஷயமாகக் கிளர்ந்த
பரம ப்ராப்யமான சீற்றத்தை நெஞ்சே -ஆராய்ந்து அநுஸந்தி -அன்றிக்கே மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன்
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்டான் என்னவுமாம் –
-தெரி யுகிர் — விசத்தமாகப் பிரகாசிக்கிற உகிர் என்றபடி –

——————————————————————————————————-

அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் –

இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள்  ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

ஓரகலத்துள்ள உலகு–ஓர் அகலத்து உலகு உள்ளது -சங்கல்ப ஞான ரூபத்தில் ஏக தேசத்தில் உலகம் எல்லாம் நிலை பெற்று உள்ளது –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து–சினத்தை யுடைத்தாய் -பெருத்து மதித்த குவலயா பீடத்தின் யுடைய
இரண்டு மருப்புகளையும் அநாயாசேன பறித்து –
புனமேய பூமி யதனைத் -சேதனர்க்கு போக்யங்களை யுடைத்தான பூமியை –
தனமாகப்-பேரகலத்துள்  ஒடுக்கும் —-தனம் போலே இருக்கத் திரு வயிற்றிலே வைத்துக் காக்கும் –
பேரார மார்வனார்–தன்னுடைமையானது ரக்ஷிக்கப் பட்டது என்றத்தாலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற படி –
-ஓரகலத்துள்ள உலகு –அம்சமான சங்கல்பத்து உள்ளது லோகம் -ஓரப்படுகிற சங்கல்பத்து உள்ளது -என்றுமாம் –

——————————————————————————

மிக்க கோபத்தையும் முரட்டு வடிவையும் யுடைத்தாய் -மத முதிதமாய்க் கொண்டு -முன்னாடி தோற்றாதே வருகிற
குவலயா பீடத்தினுடைய திண்ணிதான கொம்புகளை அநாயாசேன முறித்து விழ விட்டு –
-சேதனர்க்கு நல்ல போகங்களை விளைத்து கொள்ளுகைக்கு அனுரூபமான பிரதேசங்களோடு கூடின பூமியை
சீரிய நிதியாக நினைத்துக் கொண்டு பெரிய பரப்பை யுடைத்தான திரு வயிற்றுக்கு உள்ளே வைத்து நோக்கும்
ஸ்வபாவனாய் இரு மடியிட்டுச் சாத்த வேண்டு படி பெரிதாய் இருக்கிற திரு ஆரத்தாலே ஒப்பித்து இருக்கிற
திரு மார்வை யுடையவனுடைய -அத்விதீயமாய் அபரிச்சின்னமான சங்கல்ப ரூப ஞானத்தால் உண்டாய் இருக்கும் ஜகத்து
-அன்றிக்கே -ஓரப்படுவதாய் -அனுசந்திக்கப் படுமதான சங்கல்ப ரூப ஞானத்து என்னவுமாம் –

———————————————————————————————————-

நெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்-அலர் கதிரும் செந்தீயும் ஆவான் –லோகமும் -எல்லாம் ஸம்ஹ்ருதமாய்க் காலமே
சேஷித்த காலமும் –கடலும் –அழகிய தாய் -அலரா நின்றுள்ள -ஒளியை யுடைத்தான ஆதித்யனும் -அக்னியும்
தனக்கு பிரகாரமாக யுடையவன் -இத்தால் ஜெகதாகாரதையைச் சொல்கிறது –
-பல கதிர்கள்-பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே—-பரம பதத்திலே எழுந்து அருளி இருக்கும் படி
-திவி ஸூ ர்ய சகஸ்ரஸ்ய பவேத் யுகபுதுத்திதா–என்னும் படியே நூறாயிரம் ஆதித்யர்களை ஓட வைத்த
ஒளியை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமான திரு அபிஷேகத்தை யுடையவனுடைய திருவடிகளிலே -/
பூரித்து என்னெஞ்சே புரி -ஸ்நேஹித்து ஆஸ்ரயி

——————————————————————–

லோகங்களும் -கால ஷேமமாம் படி சர்வமும் உப ஸம்ஹ்ருதமான சம்ஹார காலமும் -கடல்களும் –
அழகிய நிறத்தை யுடைத்தாய் விஸ்திருதம் ஆகா நின்றுள்ள கிரணங்களை யுடைய சந்த்ர ஸூ ர்யர்களும்
-சிவந்த நிறத்தை யுடைத்தான அக்னியும் ஆகிற பதார்த்தங்களை பிரகாரமாக யுடையனாய் -இவ்வளவு அன்றிக்கே
பரம பதத்திலே அசங்க்யாதமான கிரணங்களைப் புறப்பட விடா நிற்பதாய் -அழகிய பொன் போலே ஸ்ப்ருஹணீயமான
திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்குமவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளிலே
எனக்கு பவ்யமான நெஞ்சே -ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –

————————————————————————————————

பல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் –என்று பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு
ஸூலபனாமோ என்னில் -நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –

இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

விரிந்த சீர்-வெண் கோட்டு -வீர ஸ்ரீ யை யுடைய வெளுத்த கொம்புகளினின்று –/ கோடு-கோரப் பல்லின் மீது –

பொருகையால் வீர ஸ்ரீ யை யுடைத்தான வெள்ளைக் கோட்டிலே யுண்டான முத்தை யுதிரா நின்ற திருமலை –
பண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –
-திருமலையில் ஆனைகளுக்குச் சேரும் இ றே செய் வராஹ ரூபமான வடிவு –

——————————————————–

பெரிய சீற்றத்தை யுடைத்தாய் கொண்டு பொருது அத்தாலே விஸ்திருதையான வீர ஸ்ரீ யை யுடைத்தாய்-
-வெளுத்த கொம்புகளினின்றும் முத்துக்களைச் சொரியா நிற்கும் வேங்கடமே முன்னொரு நாளிலே
ஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –

———————————————————————————————————

திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் –  ——46–

பிண்டமாய் நின்ற பிரான் –  -உபாதான காரணமாய் நின்ற எம்பெருமான் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்– ஓங்கி இருந்துள்ள மலையைத் தன் முதுகின்
மேலே வைத்து -அதிலே வாசுகியைச் சுற்றி – / –
தலை முகடு தான் ஒரு கை பற்றி -கீழ் கடைகிறது குலையாமல் ஆமையாய்த் தாங்கி -மேலே வைத்த சிகரம்
அடிக் கிளர்ந்து போகாத படி ஒரு கையாலே பற்றி –
-அலை முகட்டு-அண்டம் போய் நீர் தெறிப்ப –இத்திறந்த திவலை போய்த் தெறிப்ப –அலை மேல்
நீர் அண்ட பித்தியிலே போய்த் தெறிப்ப-
அன்று கடல் கடைந்தான்–பிண்டமாய் நின்ற பிரான் —இதுக்கு உபாதான காரணமானவன் –ஏகோ ஹவை நாராயண ஆ ஸீத்-

——————————————————————–

உயர்ந்த சிகரத்தை யுடைத்தான மந்த்ர பர்வதத்தைக் கீழே ஆதார கூர்மமாய் இருக்கிற தன் மேலே வைத்து
-வாஸூகியாகிற பாம்பை -அதன் நடுவே கடை கயிறாகச் சுற்றி -அது கொந்தளியாத படியாக அதன் தலையான
சிகரத்தைத் தான் ஒரு கையைக் கொண்டு அமுக்கி -கடைகிற வேகத்தால் அலைகளில் சிறு திவலைகள் ஆனவை
அண்டத்தினுடைய உச்சியிலே சென்று ஜலமானது தெறிக்கும் படியாக இந்த்ராதிகள் திருவடிகளில் வந்து விழுந்த அன்று
மஹத்தத்வமான கடலைக் குளப்படி போலே கலக்கிக் கடைந்து அருளினான் –கட சராவாதிகளுக்கு காரணமான
ம்ருத் பிண்டம் போலே -ஏகமேவ என்னும் படி பிண்டமாய் சகல காரியங்களும் தன்னோடு ஒன்றி நாம ரூப விபாக அநர்ஹ
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டானாய்க் கொண்டு நிகிலா ஜகத் உபாதான காரண பூதனாய் நின்ற உபகாரகன் கிடீர் —

——————————————————————————————

தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

நின்ற பெருமானே நீரேற்று–மஹா பலி பக்கல் நீர் ஏற்று சேஷித்வம் தோற்றும்படி நின்றவனே
உலகெல்லாம்-சென்ற பெருமானே –லோகத்தை எல்லாம் அளந்து உடையவன் என்று தோற்றும்படி நின்றவனே –
செங்கண்ணா -ஸ்நே ஹம் தோற்றும்படி நின்றவனே –
அன்று-துரக வாய் கீண்ட துழாய் முடியாய்–வைத்த வளையம் வாடாமல் கேசி வாயைக் கிழித்தவனே –
நங்கள்-நரகவாய் கீண்டாயும் நீ ——–ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –

————————————————————————–

மஹா பலி பக்கலிலே சென்று உதக ஜலத்துக்குக் கை ஏற்றுக் கொண்டு சேஷித்வம் தோற்ற நின்று அருளின வனாய்
-அவன் உதகம் பண்ணின அநந்தரம் சகல லோகங்களிலும் சென்று அளந்து கொண்ட சர்வ ஸ்மாத் பரனாய்
-இந்திரன் கார்யம் தலைக் கட்டப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனாய்
-ஜகத்து அஸ்தமிதமாகப் புக்க வன்று குதிரை வடிவு கொண்டு வந்த கேசியினுடைய வாயை கிழித்துப் பொகட்டவனாய்-
அத்தசையிலும் திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு அவ் ஓப்பனை
குறி அழியாமே நின்றவனே -இப்படி விரோதி நிரசன சீலனாய் இருக்கிற நீயே யாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனரான எங்களுடைய சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டாயும்-

——————————————————————————————————————

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்-உன்னுடைமைக்கு மஹா பலி பக்கலிலே நீர் ஏற்று அத்தை திருவடிகளால் அளந்தாய் –
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்துப் பசு மேய்த்தாய் –
-நீ யன்றே-மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —கேசி வாயைப் பிளந்து மருதினிடை போய் -ஞான ஹீனமான அசேதனங்களைப்
போக்கினதுவேயோ –சேதனரான விரோதிகளையும் போக்கிற்று இல்லையோ –

—————————————————————————

மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று நீர் ஏற்று -ஜகத்தை அடையத் திருவடிகளால் அளந்து கொண்டாய் நீ யன்றோ
-ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து ரக்ஷணத்திலே ஒருப்பட்டு நின்று -கையும் கோலுமாய்க் கொண்டு பசுக்களை
வயிறு நிறையும் படி மேய்த்தாய் நீ யன்றோ -உன்னை விழுங்குவதாக வந்த கேசியினுடைய வாய் வலி குலையும் படி
வயிற்றைக் கிழித்துப் பொகட்டு -பெரிய மருதுகளின் நடுவே அவை வேர் பறிந்து விழும்படி தவழ்ந்து போய்-
-தேவா ஸூர சங்க்ராமத்திலே அ ஸூ ற வர்க்கத்தை அழியச் செய்து யுத்தம் பண்ணின நீ யன்றோ

—————————————————————————————————————

இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் –

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

செற்றதுவும் சேரா இரணியனைச் -ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனைக் கொன்றது –அவன் இழவுக்காக என்றவுமாம்
சென்றேற்றுப்-பெற்றதுவும் மா நிலம்-மஹா பலி பக்கல் நீர் ஏற்றுப் பெற்றது பூமி –
பின்னைக்காய் -முற்றல்-முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய்-நப்பின்னைப் பிராட்டிக்காக திண்ணியதாய்
-உலவா நின்ற ஏற்றினுடைய மிடுக்கை அழித்தாய்/
மூரிச்-சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —சூழ்ந்து -இடம் பார்த்து நின்று -கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவனே –

—————————————————————————

நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக-மிடுக்கு யுடைத்தாய்க் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள ருஷபங்களின் முன்னே
பயப்படாதே உறைத்து நின்று -கொல்லும் விரகு விசாரித்து -அவற்றின் மிடுக்கைப் போக்கினவனாய் –
-இடமுடைத்தாய் சுரியையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திவாயுதமாக யுடையவனே -இப்படி இருக்கிற நீ
கை கூசாமல் முடித்துப் பொகட்டதுவும் உன்னுடனே பொருந்தோம் என்று இருக்கும் துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை
-மஹா பலி பக்கல் சென்று நீர் ஏற்று அலைபாய லாபமாகப் பெற்றதுவும் உன்னதான மஹா பிருத்வியை
–மூரி என்று -குனிவாய் -அத்தாலே புடை பெருத்து இருக்கையை நினைக்கிறது
-மூரி என்று கடலாய் -கடலைப் பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -என்னவுமாம் —

————————————————————————————————————-

ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்–ஆக முதலியாய் இட்ட திருத் துழாய் மாலையையும்
ஆதி ராஜ்ய ஸூசகமான மணி முடியையும் யுடையவன் –
தாழ்ந்த வருவித் தடவரைவாய் –தாழ்ந்த அருவிகளை யுடைத்தாய் இருந்துள்ள தடவரையில்
-ஆழ்ந்த-மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்–ஆழ்ந்து நிர்மலமான நீரை யுடைத்தான
சுனையில் வளர்ந்த பெரிய முதலையை நீர்ப் புழு என்று பாராதே சினத்தோடு கொன்றான் –
அணி நீல வண்ணத்தவன் ———–ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்று என்று ஸ்ரமஹராமான வடிவுடையவன் ஆனான் –

——————————————————————————

வளையச் சாத்தின திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் மிக்க தேஜஸை யுடைத்தான ரத்னங்களோடே கூடின
திரு அபிஷேகத்தை யுடைய சர்வாதிகனாய் -கண்ட போதே சகல சிரமங்களும் போம்படி அழகிய நீல நிறத்தையும்
யுடையனான அந்த சர்வேஸ்வரன் -பூமி அளவும் வரத் தாழ்ந்த அருவிகளும் -தாழ் வரைகளையும் யுடைத்தான மலையிடத்து யுண்டான
=-ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான மடுவில் மனுஷ்யர் முகம் காணாமல் வளர்ந்த பெரிய முதலையை ஒரு நீர்ப் புழு
என்று பாராதே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கல் வாத்சல்யத்தால் தன் சினம் தீர முடித்துப் பொகட்டான் –

————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: