மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 31-40– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்   —–31–

செவி தெரியா-நாகத்தான் –
கண்ணையே செவியாக யுடையவன் ஆகையால் தனிப்பட செவி தெரியாமல் இருக்கிற
திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனும்

நறவேற்றான்-பாகத்தான் –தேன் போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனுடைய /நறவையும் ஏற்றையும் யுடைய-ருத்ரனை
திருமேனியில் ஏக தேசத்திலே கொண்டவன் –

இரணியனதாகம்-அவை செய்தரியுருவமானான் —
உபசயாத்மகமான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பலவாகச் செய்து சிம்ம ரூபியானான் –

செவி தெரியா-நாகத்தான் —
ஒரு இந்த்ரியத்தாலே எல்லாவற்றையும் க்ரஹிக்குமவன் -சஷூஸ் ஸ்ரவா இறே –

நால் வேதத்துள்ளான் –
நாலு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்பட்டவன்

நறவேற்றான்-பாகத்தான்–
நறவை ஏற்றவன் –நறவையும் ஏற்றையும் யுடைய ருத்ரனுக்குத் திருமேனியிலே இடம் கொடுத்த சீலவானாவான்-

பாற் கடலுளான்–
திருப் பாற் கடலிலே உள்ளவன் / இவையவன் கோயில்-கீழ்ச் சொன்னவை -நெஞ்சை வருந்தி அனுவர்த்தித்தபடி –

—————————————————————–

அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்தலங்களாய் இருக்கும் கீழ்ச் சொன்ன இந்தத் திருப்பதிகள் எல்லாம்
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பை சின்னம் பின்னம் என்னும்படி பல கூறாம் படி பண்ணி அவன் வாரத்துக்கு
உள்ளடங்காத நரசிம்ஹ ரூபியானவன் –
சஷூஸ் ஸ்ரவா யாகையாலே சஷூர் இந்திரியம் கொண்டே ஸ்ரோத்ர இந்திரிய காரியமும்
கொள்ள வல்லவன் ஆகையால் செவியால் தெரியும் தெரிவின்றிக்கே இருக்கிற திருவனந்த ஆழ்வான் உடைய
திரு மேனியில் நிரந்தர சம்ச்லேஷம் பண்ணி வர்த்திக்குமவனாய்
நிர்தோஷ ப்ரமாணமான நாலு வேதங்களுக்கும் ப்ரதிபாத்யனாய் வர்த்திக்குமவனாய் –
ஹேயமான மதுவையும் ருஷபத்தையும் யுடைய துர்மாணியான ருத்ரனைத் திருமேனியின் பார்ஸ்வத்திலே
யுடையவன் ஆகையால் அத்யந்தம் ஸூ சீலனுமான சர்வேஸ்வரன் ப்ரஹ்மாதிகளுக்கு ஆசிரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினான் –

——————————————————————–

இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்

நூற் கடலும் —
இதிஹாச புராணங்கள் ஆகிற கடலும் –

நுண்ணூல தாமரை மேல் –
இதிஹாச புராணங்களில் ஹ்ருதய கமலம் என்று

பாற் பட்டு-
சொல்லப் படுகிறதின் மேல் வைக்கப் பட்ட

இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்-
இந்திரியங்களை யுடைய மனஸை தனக்கு இருப்பிடமாகக் கொண்டான்

குருந்து ஒசித்த கோபாலகன் —-
விரோதியைப் போக்கி ஸூலபனானவன்-இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம் என்கிறது –

——————————————————————–

குருந்தத்தை அநாயாசேன முறித்துப் பொகட்ட கோப குல அவதீர்ணனான கிருஷ்ணன் -திருப் பாற் கடலும் -திரு மலையும்
திருவனந்த ஆழ்வானும் -சம்சார வெக்காயம் தட்டாத படி -குளிர்த்தி மிக்கு நிரதிசய போக்யமான ஸ்ரீ வைகுண்டமும்
ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான சாஸ்திர சமுத்திரமும் –பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்-என்று
அதி ஸூ ஷ்மமான வேதாந்த சாஸ்திர ஸித்தமான ஹ்ருதய கமலத்தின் மேலே ஸமஸ்த கரணங்களும்
ப்ரவணமாம் படி யோகத்தில் ஸூ பிரதிஷ்டராய் இருக்கிற பரம யோகிகளுடைய மனஸ்ஸூம் ஆகிற
இவ்விவ ஸ்தலங்களை அபிமதமான இருப்பிடமாகக் கொண்டான் –

——————————————————————-

இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்–
ஒரு பாவனாய் இருபத்தொரு ஆலிலையின் மேலே பருவம் நிரம்பாப் பிள்ளையாய் –

மேலோருநாள் உண்டவனே —
லோகங்களை எல்லாம் நோவு படாமல் மெள்ளத் திரு வயிற்றிலே வைத்தவன் –

மெய்ம்மையே —
ஐந்த்ர ஜாலகரைப் போலே யன்றிக்கே சத்யமே–

மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று–
பிராணனைக் கொடுக்கவல்ல மிடுக்கை யுடைத்தான அம்ருதத்தை ஆகாசத்தே நிற்கிறவர்களுக்குக் கொடுத்தாய் நீ அன்று –

———————————————————————–

தனக்கு சிலர் பரிய வேண்டும் படி முக்த சிஸூவான விக்ரஹத்தை யுடையவனாய்க் கொண்டு பவனாய் இருபத்தொரு
ஆலந்தளிரின் மேலே பூர்வ காலத்திலே லோகங்கள் எல்லாவற்றையும் நெருக்குப் படாதபடி மெள்ள இந்த்ர ஜாலமாக வன்றிக்கே
பரமார்த்தமாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனாய் –
இந்த அக்கடிகடனா சாமர்த்தியத்தால் சர்வாதிகன் என்று தோற்ற இருக்கிறவனே-
ஏவம் விதமான சக்தி மஹாத்ம்யத்தை யுடைய நீ தேவர்கள் சாகாமைக்கு மருந்து தேடித் தர வேணும் -என்று
அர்த்தித்த அன்று மந்த்ர பர்வதத்தாலே-மிக்க ஜலத்தை யுடைத்தான திருப் பாற் கடலைக் குளப்படி போலே கலக்கி
உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் உரப்பை யுடைத்தான அம்ருதத்தை ஸ்வர்க்க வர்த்திகளான தேவர்களுக்கு கொடுத்து அருளினாய் –

——————————————————————

அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று
தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் –

ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34–

கேடில் சீரானை —
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையவனை —

முன் கஞ்சனைக் கடந்தானை நெஞ்சமே காண்–
கம்சன் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடு போம்படி முடித்து உபகாரகன் ஆனவனை –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று-கிடந்தானை-
பூமி அடங்கலும் நின்று அளந்த வருத்தத்தாலேயே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிறதும் –
திரு வேளுக்கையில் இருக்கிறதும் என்று நெஞ்சே அநுஸந்தி

————————————————————————-

திரு வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து -மஹா நகரமான திரு வெஃகாவில் சாய்ந்து அருளினவனாய் –
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையனாய் முன்பு ஒரு நாளிலே விரகிலே நலியப் பார்த்த கம்சனை
முடித்துப் பொகட்டுத் தன்னை நோக்கித் தந்தவனை –
நினைவற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கிற அன்று
அநாயாசேன நின்று காடு மோடையுமான இஜ்ஜகத்தை அளந்து கொண்ட அலசுதலாலேயோ இருப்பது கிடப்பது ஆகிறது
என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-

————————————————————————

நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது –

நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு பூண்டார கலத்தான் பொன் மேனி —
காண் காண் என விரும்பும் கண்கள்–ஒளி விடா நின்ற ஹாரத்தையும் தாரையும் யுடைத்தான –
திரு மார்பை யுடையவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக் கண்கள் காண் காண் என விரும்பா நின்றது –

பாண் கண்-தொழில் பாடி —
பாட்டிலே தொழில் யுண்டாக பாடி –பாண் தொழில் உண்டாகப் பாடி என்றுமாம்-
அவனுடைய தொழிலைப் பாட்டிலே வைத்துப் பாடி என்னவுமாம் –

வண்டறையும் தொங்கலான செம்பொற்-கழல் பாடி யாம் தொழுதும் கை —-
வண்டுகள் சப்தியா நின்றுள்ள மாலையை யுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளைக் கையாலே தொழுவோம் –

————————————————————————-

என்னுடைய கண்களானவை புகர் ஒளி விடா நின்றுள்ள ஆபரணங்களையும் திரு மாலையையும் யுடைத்தான
அகன்ற திரு மார்வை யுடைத்தானவனுடைய பொன்மலை போலே ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக்
காண வேணும் காண வேணும் என்று ஷாம காலத்தில் சிறு பிரஜைகள் சோறு சோறு என்று அலையுமா போலே
மிகவும் ஆசைப்படா நின்றன –
பாட்டினிடத்திலே அவனுடைய சேஷ்டிதங்களை வைத்துப் மதுபான மத்தமாய்க் கொண்டு
வண்டுகள் சப்தியா நின்றுள்ள திரு மாலையாலே அலங்க்ருதனானவனுடைய –சிவந்த பொன் மேலே அதி சிலாக்யமான
திருவடிகளை நாம் வாயாரப் பாடி –கையாலே அத்யபி நிவேசம் அடங்கும் படி -தொழுவோம்
பாண் -என்று பாட்டாய் -கண் என்று இடமாய் -பாட்டின் இடத்திலே தொழிலை வைத்துப் பாடி என்றபடி –
அன்றிக்கே பாண் என்று அழகாய் அழகிய தொழிலைப் பாடி என்னவுமாம் -பாணருடைய தொழிலிலே-ரீதியிலே பாடி -என்னுதல்
பாட்டுக்களைத் தொழில் யுடைத்தாம் படி பாடி என்னவுமாம் –

—————————————————————————

யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

கையனலாழி கார்க்கடல்வாய் வெண் சங்கம்
வெய்யகதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய
படை பரவை பாழிபனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

அனலாழி கார்க்கடல்வாய் வெண் சங்கம்-வெய்யகதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய–படை –கைய-இவை கையில் உள்ளன
-செய்ய என்று ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –
பரவை பாழி—-திருப் பாற் கடல் படுக்கை —/ பனி நீருலகம்-அடியளந்த மாயரவர்க்கு –கடல் சூழ்ந்த பூமி யளந்த சர்வேஸ்வரனுக்கு –

—————————————————————————

குளிர்ந்த நீரை யுடைத்தான கடல் சூழ்ந்த பூமியைத் திருவடிகளாலே அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனான அந்த
சர்வேஸ்வரனுக்கு பிரதி பக்ஷத்தின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு வாழி –கறுத்த நிறத்தை யுடைத்தான
கடல் இடத்தே பிறந்த வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -செவ்விதான ஸ்ரீ கதை –
அப்படி இருந்துள்ள ஸ்ரீ சார்ங்கம் -வெவ்விய தேஜஸ்ஸை யுடைய திருக் குத்துடை வாள் இவை யாகிற அழகிய
திவ்ய ஆயுதங்கள் திருக் கையிலே யுளவாய் இரா நின்றன –
திருப் பாற் கடல் படுக்கையாய் இரா நின்றது -என்று வித்தராய் அனுபவிக்கிறார் –

———————————————————————-

நாம் அடிமையில் அந்வயிக்க ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது –

இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் —
திருப் பாற் கடலை வாசஸ் ஸ்தானமாக உடையனாய்

துவர்க்கும்-பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம் திகழும் திரு மார்வன் தான் —-
பெரிய பிராட்டியாரையும் அநேகம் மாணிக்கங்களையும் யுடைத்தாய் இருந்துள்ள
பூண் ஆரத்தாலே திகழா நின்றுள்ள திரு மார்பையும் யுடையவன் -அவனுக்கு அடிமைப் பட்டவன்-
குறைவற்ற மேன்மையையும் -வடிவு அழகையும் யுடைய ஸ்ரீயபதியானவன் நான் அடிமையிலே அந்வயித்த
மாத்திரத்திலே உள்ளும் புறமும் விட சக்தன் ஆகிறிலன்-

—————————————————————-

அப்படிப்பட்ட வைபவத்தை யுடையனானவனுக்கு ஒரு பிரகாரத்தாலே அடிமை புக்கேன் -அநந்தரம் பூமியைச் சூழ்ந்து
லவண உத்தரமாய் -கறுத்து இருந்த கடல் நீரிலே கண் வளர்ந்து அருளுமவனாய் -சிவந்த பவளம் போலே இருந்துள்ள
திரு அதரத்தை யுடையளான பெரிய பிராட்டியாரையும் -பல வகைப்பட்ட ரத்தினங்களை யுடைத்தான ஆபரணங்களையும் –
திரு ஆரத்தையும் யுடைத்தாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள திரு மார்வை யுடையனான அவன் தான் –
அந்த ஒப்பனையையும் குறைவற்ற மேன்மையையும் பிராட்டியுடைய ஆதாரத்தையும் புரிந்து பாராமல் ஸுபரியைப் போலே
பல வடிவு எடுத்துக் கொண்டு உள்ளொடு புறம்போடு வாசி அறக் கலந்து நின்று அனுபவியா நின்றான்-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –

———————————————————————

இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

தானே தனக்குமவன் –
தனக்கு உபமான ரஹிதன் / உபமான ராஹித்யத்துக்கு அடி -சகல பதார்த்தங்களும் அவனுக்கு
பிரகாரங்களாய் -தான் பிரகாரியாய் -பிரகாரயந்த்ரம் இன்றிக்கே இருக்கை –
தன்னுருவே எவ்வுருவும் -எல்லா பதார்த்தங்களும் அவனுக்கு சரீரம் –
தானே தவவுருவும் –தபஸ் ஸூ பண்ணி புண்ய சரீரான அதிகாரிகளும் அவனுக்குப் பிரகாரம் –

————————————————————-

தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தனக்கு சரீரமாய் இருக்கும் -தபஸ்ஸைப் பண்ணின புண்ய சரீரராய் –
ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அதிகரித்த ப்ரஹ்மாதி பதார்த்தங்களும் நக்ஷத்ரங்களும் தான் என்கிற சொல்லுக்குள்ளே
அடங்கும் படி தனக்கு பிரகாரமாயேயாய் இருக்கும் -ஜ்வலன ஸ்வபாவமான அக்னியும் -பெரிய குல பர்வதங்களும் –
எட்டு திக்குகளும் -அண்டாந்தர வர்த்திகளான சந்த்ர ஸூரியர்கள் ஆகிற இரண்டு வகைப்பட்ட தேஜஸ் பதார்த்தங்களும்-
தனக்கு பிரகாரமாய் இருக்கும் -இப்படி கார்ய காரண ரூபமான சகல பதார்த்தங்களும் தனக்கு பிரகாரமாய்-
தான் பிரகாரியாய் -தனக்கு ஒரு பிரகாரயந்த்ரம் இன்றிக்கே இருக்கக் கடவ சர்வேஸ்வரன் தனக்குத் தானே
உபமானமாய் இருக்கும் –
இன்னமும் இப்படி இருப்பான் ஒரு ஈஸ்வரன் உண்டாகில் இறே ஒப்புக் சொல்லலாவது என்று கருத்து–

——————————————————————–

இப்படி ஜெகதாகாரனாய் நின்ற சர்வேஸ்வரன் திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய்  மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே  உளன் —–39-

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்-மறையாய்
உபாயவிபூதி உக்தனாய் -பூமியும் எட்டுத் திக்குகளும் வேதங்களும் தான் இட்ட வழக்கு –

மறைப் பொருளாய்
வேத ப்ரதிபாத்யனாய் –

வானாய்-பிறை வாய்ந்த வெள்ளத்தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்-
சந்த்ர பதத்தில் கிட்டின வெள்ளத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையில் நின்று

உள்ளத்தின் உள்ளே  உளன்-
என்னுடைய ஹிருதயத்திலே புகுர அவசர பிரதீஷனாய் இருக்கிறான் –

————————————————–

சர்வ ஸ்வாமியாய் -பூமிக்கு அந்தர்யாமியாய் -எட்டுத் திக்கில் யுண்டான ஸமஸ்த சேதனரையும் தனக்கு
பிரகாரமாக யுடையனாய் -சேதனர்க்கு ஹித அஹித ஞாபகமான வேதங்களுக்கு நிர்வாஹகனாய் –
பரம ஆகாச சப்த வாஸியான பரம பதத்தையும் பிரகாரமாக யுடையனாய் -சந்த்ர பதத்தைக் கிட்டி இருப்பதாய்-
மிக்க ஜலத்தை யுடைத்தான திரு அருவிகளினுடைய விளக்கத்தை யுடைத்தாய் த்வனியா நின்றுள்ள
ஜல ஸம்ருத்தியோடே கூடி இருப்பதுமான திருமலையை வாசஸ் ஸ்தானமாக யுடையனான சர்வேஸ்வரன்
திருமலையிலே நிலை இங்கே வந்து புகுருகைக்கு அவசரம் பார்த்து நின்ற நிலை என்று தோற்றும்படி
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –

——————————————————

இப்படி சர்வாதிகனானவன் எண் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா —

நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திரா அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு உயரா நின்ற
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள
திருமலையிலே நின்றவன் பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்
இந்திரன் இழந்தது பெறுகையாலும் -மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –

————————————————————————

அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே -நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும்
ஸ்வபாவனான சர்வேஸ்வரன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –
நாம் அவனுடைய உண்மைக்கு இசைந்த இன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு உளனாய் இருக்குமவன் கிடாய் -அவன் தானே வந்து புகுரும் இடத்திலே
விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-
ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான -திருமலையை இருப்பிடமாக
உடையனானவன் பூமிப பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –

—————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: