மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 21-30– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் –

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு —21-

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே-
பேசுமவர்களுக்கு யாதொரு அளவுண்டு அவ்வளவு பேசிப் போம் அத்தனை
விஷயத்தைப் பரிச்சேதித்துப் பேசப் போகாது

வாச மலர்த் துழாய் மாலையான் –தேசுடைய-சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்-
பரிச்சேதித்துப் போக ஒண்ணாமைக்கு இவை தனித் தனியே ஹேதுக்கள்

பொங்கரவ-வக்கரனைக் கொன்றான் வடிவு —
விஸ்திருதமான சப்தத்தை யுடையனான தந்த வக்தரனைக்
கொன்றவனுடைய வடிவு பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே –

——————————————————————

பரிமளம் அலை எறியா நின்றுள்ள பூத்தாரை யுடைத்தாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
நிரவதிக தேஜஸை யுடைத்தான திருவாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஸ்ரீ சார்ங்கம் -இவற்றை யுடையவனாய்
பெரிய கிளர்த்தியோடே எங்கே எங்கே என்று பெரிய ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு வந்த தந்த வக்ராசூரனை
முடித்துப் பொகட்டவனுடைய பிரகாரம் மாறு பாடுருவப் பேசுகைக்கு சக்தராய் இருக்கும் அவர்கள் தங்கள் ஞான சக்திகளைக்
கொண்டு எவ்வளவு பேச வல்லவர்கள் -அவ்வளவேயாய் இருக்கும் அல்லது -உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது -என்கை —

————————————————————

அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் –

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச்   செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு –22-

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்–கடியார் மலர் தூவிக் காணும் -படியானை–
தர்ச நீயமாய் இருந்துள்ள முடிகளை வணக்கித் தேவர்கள் நாள் தோறும் பரிமளம் மிக்கு இருந்துள்ள
புஷ்ப்பத்தை கார்ய புத்தி இன்றிக்கே
திருவடிகளிலே பொகட்டுக் காணும் ஸ்வ பாவத்தை யுடையனாய் உள்ளவனை

செம்மையால் உள்ளுருகிச்   —-
அவன் சேஷீ நான் சேஷ பூதன் என்னும் முறையாலே ஹிருதயம் சிதிலமாய் –

செவ்வனே -அவன் காட்டும் வழியாலே

நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு–
பிரயோஜன நிரபேஷமாகக் காண ஆசைப்படு –

———————————————————————-

அழகு மிக்கு இருந்துள்ள அபிஷேகங்களை வணங்கி நித்ய ஸூரிகள் நாள் தோறும் பரிமளம் மிக்கு இருந்துள்ள
புஷ்பங்களை அக்ரமமாக பணி மாறி -சதா பஸ்யந்தி -என்கிறபடியே
இவை விடாமல் கண்டு அனுபவிக்கும் வடிவு அழகை யுடையவனை –
அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் முறையாலே தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து ஹிருதயம் சிதிலமாய்
நாம் ஒரு யத்னம் செய்யாது இருக்கத் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் காண்கிற
செவ்வை வழியாலே மனஸ்ஸே ஒரு குண ஆவிஷகார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே
விருப்பத்தைப் பண்ணு –
வானவர்கள் என்று ப்ரஹ்மாதிகள் ஆகவுமாம்
படி -விக்ரஹம் –

———————————————————————-

உபதேசம் பலித்த படி சொல்கிறது –

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற டியைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில்  சென்றூத  -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் —23-

சுரும்பு -ஆண் வண்டு-

விரும்பி விண் மண்ணளந்த —
பொன்னங்கழற்கே விரும்பி என்னவுமாம் –
விருப்பத்தோடு விண்ணும் மண் அளந்த

அஞ்சிறைய வண்டார்-சுரும்புதுளையில்  சென்றூத  –
அழகிய சிறகை யுடைத்தான வண்டார்க்கும் சுரும்பு நரம்பு அறிந்து ஊத

அரும்பும்-புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே மனந்துழாய் மாலாய் வரும் —
அரும்பா நின்றுள்ள புனந்துழாய் மாலையானுடைய விலக்ஷணமான கழலிலே
மனஸ்ஸானது வியாமோகத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –

———————————————————————

அழகிய சிறகை யுடைத்தான வண்டும் -அத்தை விட்டு நீங்காதே சேர்ந்து வர்த்திக்கக் கடவ சுரும்பும் ஆகிற இவை
ரஸ சிரைகளிலே வாய் வைத்தூத –அவற்றால் கணுத் தோறும் அரும்பிச் செல்லா நிற்பதாய்
திரு மேனியின் ஸ்பர்சத்தாலே தன்னிலத்தில் நின்றால் போலே செவ்வி பெற்றுச் செல்கிற திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனாவனுடைய -ஆகாசம் பூமி முதலானவற்றை உகந்து அளந்து கொண்டு ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே
மனசானது முன்னாடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிப் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று மனசோடு சேர்க்கவுமாம் –

————————————————————————

ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்-

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

வருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

வருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்-நெருங்கு தீ நீருருவு மானான் —
காரணமான பூத பஞ்சகமும் -லீலா விபூதிக்கும் உப லக்ஷணம் –

பொருந்தும்-சுடராழி ஒன்றுடையான்–
நித்ய விபூதிக்கும் உப லக்ஷணம் –

சூழ் கழலே நாளும்-தொடராழி நெஞ்சே தொழுது —
உபய விபூதி உக்தனுடைய சூழ் கழலே வரும் கால் நாளும்
ஆழி நெஞ்சே தொழுது தொடர் -கீழே விச்சேதித்து அநர்த்தப் பட்டது போரும் -முறையாலே ஆஸ்ரயி –

———————————————————

பரப்பை யுடைத்தான பூமியும் -அபரிச்சேத்யமான ஆகாசமும் வாயுவும் செறிந்த தேஜஸ்ஸும் ஜலமும் ஆகிற
இவ்விவ பதார்த்தங்களுக்கு அந்தர்யாத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி நிஷ்டானாய் –
திருக்கையிலே பொருந்தி இருக்கும் அத்விதீயமான தேஜோ ரூபமான திரு வாழியை யுடையவன் ஆகையால்
நித்ய விபூதி விசிஷ்டானாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய -ஆஸ்ரிதரை ஸ்வ வைலக்ஷண்யத்தாலே
தப்பாத படி சூழ்த்துக் கொள்ளுகிற திருவடிகளையே அளவுடைய நெஞ்சே -ஸ்வரூப அனுரூபமாக தொழுது
மேல் வரும் காலம் எல்லாம் ஆறி இராதே நாள் தோறும் பின்பற்றி ஆஸ்ரயி –

———————————————————–

நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் –

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

விழுது–semi solid -கடை வெண்ணெய் -நக்கியே உண்ண வேண்டுமே –
லேகியம் லிக்-lick / மாதா -mathar / கொல்-kill

தூ நீருலகம்—வைத்து -முழுதுண்டு–
சூழ்ந்த கடல் அலையாத படிக்கு ஈடாக லோகத்தை எல்லாம் வயிற்றிலே வைத்து –

மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட வாயானை–
அனுகூலருடைய த்ரவ்யத்தால் அல்லது தரியாதவனை

மால் விடை ஏழ் செற்றானை-
நப்பின்னை பிராட்டியுடைய சம்ச்லேஷத்துக்கு விரோதியான மதித்த ஏறு ஏழையும் செற்றவனை

வானவர்க்கும்-சேயானை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு மனஸூக்கும் வாக்குக்கும் தூரஸ்தான் ஆனவனை

சிறந்து ——நெஞ்சே–தொழுதால் பழுதுண்டே —
ஆஸ்ரிதற்கு ஸூலபனானவனைக் கிட்டித் தொழுதால் பழுது உண்டோ –

———————————————————————–

நிர்மலமான ஜலத்தை யுடைத்தான கடலோடு கூடின பூமியாதி லோகங்களை ஒன்றும் பிரிக்கதிர் படாத படி
கடலின் நீரும் கலங்காமல் இருந்த கட்டளையிலே எடுத்து -திருவயிற்றிலே வைத்து -அவ்வளவிலும்
வயிறு நிறையாமையாலே -அழகிய குழலை யுடையளான யசோதை பிராட்டியாருடைய வெண்ணெயை அமுது செய்த
திருப் பவளத்தை யுடையனாய் -நப்பின்னைப் பிராட்டியைக் கைப் பிடிக்கைக்கு இடைச்சுவரான முரட்டு ரிஷபங்கள்
ஏழையும் முடித்துப் பொகட்டவனாய் -மிகை மிடுக்காலே காண ஒருப்படும் ப்ரஹ்மாதிகளுக்கும் சால தூரஸ்தனாய் இருக்கிறவனை
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

—————————————————————————————————————

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார்  ——–26–

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்-நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
என்னுடைய சிந்தையுள்ளும் -திருவனந்த ஆழ்வான் மேலும்
கச்சியுள்ளும் சாதரமாக யுறைந்தது –

வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே-தாங்கடவார் —
திருமலையிலும் திரு வெஃகாவிலும் வேளுக்கை பாடியிலும் கடவரான மாத்திரம் –
கடவரான மாத்திரம் என்று சொன்ன உரம் எத்தாலே என்னில் –
தண் துழாயார் 

நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் -வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே–உறைந்ததுவும்–
சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்-தாங்கடவார்–
உகந்த படுக்கையான திருவனந்த ஆழ்வானோபாதி என்னுடைய நெஞ்சை அதிக்ரமியார்-அன்றிக்கே
திரு வனந்த ஆழ்வானையும் என்னுடைய நெஞ்சையும் தம்மதாக அபிமானித்து இருப்பது –
அல்லாத வற்றில் உறைந்த மாத்திரமே என்றும் அருளிச் செய்வார் –

——————————————————————–

ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதனான பெருமையை யுடைய தாம் -திரு உள்ளத்திலே
உகப்புடன் நித்ய வாசம் பண்ணி அருளிற்றும் -தாம் விரும்பி மேல் விழுகைக்குத் தகுதியான என்னுடைய ஹிருதயத்திலும்
மதுபான மத்தரைப் போலே நிரந்தர அனுபவத்தால் சிவந்த கண்களை யுடையனான திருவனந்த ஆழ்வான் பக்கலிலும்
திருப்பதிகளாலே நிறைந்த ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் போக்யதை அளவிறந்த இருந்துள்ள திருக்கச்சியிலுமாய் இருக்கும் —
திருமலையும் திரு வெக்காவும் திரு வேளுக்கைப் பாடியும் ஆகிற இவ்விடங்களை –
நிர்வாஹகரான நமக்கு விட ஒண்ணாதே என்று பிராப்தி மூலமாக விரும்பி இருப்பர் –
திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூ ரிகளில் பிரதானனான
திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும் தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

——————————————————————-

அவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம்
புஜிப்பார் யுண்டோ என்கிறார் –

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை –  நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27–

காரே மலிந்த கருங்கடலை –  நேரே கடைந்தானைக்–
மேலே படிந்த மேகங்கள் சலியாதபடி அமிர்தம்படும் படிக்கு ஈடாகக் கடலைக் கடைந்தானை

காரணனை–ஜகத் காரண பூதனை –

நீரணை மேல் பள்ளி-அடைந்தானை–
ஆஸ்ரிதர் கார்யம் செய்க்கைக்காக திருப் பாற் கடலிலே கிட்ட வந்து கிடந்தவனை

நாளும் அடைந்து –ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்–
தாம் தாம் பண்ணின நிஷித்த கர்மத்தினுடைய பலமான துக்கத்தை அவனை ஆஸ்ரயித்து அனுபவிப்பார் உண்டோ

ஆண்டையார் -என்றது
எங்குள்ளார் என்றபடி

நாளும் -என்றது
எக்காலத்திலும் என்றபடி

எக்காலத்தில் எத்தேசத்தில் யார் அவனைப் பற்று துஷ்கர்ம பலத்தை அனுபவித்தார் –

——————————————————————-

மேகங்களால் நிறைந்த பெரிய சமுத்திரத்தை மேற்படிந்த மேகங்கள் சலியாதபடி நேர் கொடு நேரே நின்று கடைந்தவனாய்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான உறவை யுடையவனாய் -இவற்றை ரஷிக்கைக்கு அவசர பிரதீஷனாயக் கொண்டு
கடைந்த கடலின் நீரிலே திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே கண் வளர்ந்து அருளுகிறவனை-
தேவையாக அன்றிக்கே போக ரூபமாக நாள் தோறும் ஆஸ்ரயித்து வைத்து துக்க ஹேதுவான பாபங்கள்
உச்சி வீடு விடாதே பண்ணினவர்களில் யார் தான் அந்த பாப பலமான துக்கத்தை அனுபவித்தார்-
அவர்கள் தான் எக்காலத்தில் உள்ளவர்கள் -பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகைக்கும் பாப பலம் அனுபவிக்கைக்கும்
அக்னி நாசிஞ்சேத் என்ன சேர்த்தி உண்டு என்றபடி –

————————————————————————–

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

அடைந்தது அரவணை  மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால்  உண்ட   பிரான் –28-

அடைந்தது அரவணை   மேல் —
உகந்தார்க்கு உடம்பு கொடுப்பது

ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம் போர் –
ஆஸ்ரிதர்க்காக தன்னுடம்பை அழிய மாறி அம்பேற்றது –

உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே–
பரிஹாரம் இன்றிக்கே ஒழிந்ததுவும் யசோதை பிராட்டிக்குப் பயப்பட்டு –

வாள் எயிற்றுப்-பேய்ச்சி பால்  உண்ட   பிரான் —
பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடைய பூதனையை முடித்த உபகாரகன்
அனுகூலையாய் இருப்பாள் ஒரு இடைச்சிக்குப் பயப்பட்டு
பரிஹாரம் இன்றிக்கே இருப்பதே –

அம்மனே -எத்திறம் –

———————————————————————

பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடையளான பூதனையுடைய பாலை
வேற்று முலை என்று வாசி அறிந்து அமுது செய்து -ஜகத்துக்கு ஒரு சேஷியைத் தந்த உபகாரகன் ஆனவன்-
தன்னால் அல்லது செல்லாத திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் யாய்த்து தன் செல்லாமை தோற்றப்
பள்ளி கொண்டு அருளிற்று -ஆஸ்ரிதரான தர்மபுத்திராதிகளுக்காக அவர்கள் வெறுவியரான வன்று
தன்னை அழிய மாறி மேன்மேல் என நெருங்கி ப்ரவர்த்தித்தது பாரதம் ஆகிற கொடிய பூசல் –
யசோதை பிராட்டி பக்கல் யுண்டான மத்துக்கே ஒக்கும் -தனக்கு சத்ருக்கள் அஞ்சுமா போலே தான் அஞ்சி
சிதிலம் ஆயிற்றதும் -அம்மே -இவன் நல்லபடி என் என்று வயிறு பிடிக்கிறார் –

——————————————————————-

அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கு யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் –

ப்ரஸ்துதையான யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் –
பூதனையை முடித்தவனை

வாய்த்த-இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்–
பூதனையினுடைய மடியிலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்

பவளம் போன்று இருந்துள்ள அதரத்தை யுடையனாய் தெருளா மொழியானைச் சேர்ந்து —
பேர்ந்து எடுத்து-ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே –
பூதனை முகத்தில் முக்த ஜல்பிதம் பண்ணுகிறவனைக் கிட்டிக் கால் நடை தந்து எடுத்து
தாயானவள் அஞ்சாதே முலையைக் கொடுத்தாள்–
ஸ்வ ரூபத்தை அழிய மாறி முலையைக் கொடுத்தாள் -ஸ்த்ரீத்வ ப்ரயுக்தம் இறே அச்சம் –

——————————————————–

பூதனை பக்கல் யுண்டான முலைப்பாலை யுண்டு அவளை முடித்து -ஜகத்துக்கு சேஷியான தன்னை
யுண்டாக்கிக் தந்த உபகாரகனாய் -அவள் மடியிலே இருந்து முலை யுண்கிற போது ஆகர்ஷகமாய்த் தோற்றுகிற
அழகிய இருளோடு ஒத்த திரு மேனியையும் -உகப்புத் தோற்ற ஸ்மிதம் செய்த அழகிய பவளம் போன்ற
சிவந்த திரு வதரத்தையும் யுடையனாய்
அத்தசையில் அவள் முகத்தைப் பார்த்து ஆச்சி ஆச்சி என்றால் போலே சொல்லுகிற அறிவு கலசாத முக்த ஜலப்பிதங்களை
யுடையனுமானவனை -தாய் தன்னிடத்தும் நின்று போந்து கால் நடை தந்து வந்து கிட்டியதா பூர்வம் சாதரமாக எடுத்துக் கொண்டு
ஸ்த்ரீத்வ பிரயுக்தமாயும் ஜென்மம் அடியாகவும் வரக் கடவ யுடையவள் அன்றிக்கே –
உண்ட நச்சுப்பாலுக்கு ப்ரத் ஒளஷதமாக முலை கொடுத்தாள் –
கெட்டேன்–ஒருத்தியுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

————————————————————

அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் –

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை  —-30–

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும்
ஸ்வாமிக்கு படை வீடான இவை ஸ்ரீ யபதி சேர்ந்த பாடியாய இவை -இறையாய திருமால் சேர்ந்த -என்னவுமாம்

சிந்தை என்கையாலே
இத் திருப்பதிகளில் எல்லாம் வந்து இருக்கிறது எல்லாம் என் இருதயத்தில் புகுருகைக்காக என்கிறது

வாய்ந்த மறை -என்றதாலே
ப்ரமாணமான வேதத்திலே நின்றதோடு கண்ணாலே காணப்படுகிற
திருப்பதிகளோடு வாசியற இவர்க்கு பிரகாசமாய் இருக்கிற படி –

———————————————————

திருப் பாற் கடல் -திருக் குடந்தை –திருமலை -இவற்றிலும் காட்டில் ஆதரிக்கும் படி நேர்பட்ட என்னுடைய ஹிருதயம்
த்ரிபாத் விபூதி -என்னும் படி பரப்பை யுடைத்தாய் பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதம் –
அவனை உள்ளபடி பிரதிபாதிக்க வல்ல அழகிய வேதம் திருப் பாடகம் -அனந்தாழ்வான் ஆகிற இத்திருப்பதிகள் எல்லாம்
அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்கரித்துக் கொண்டு இருக்கிற சர்வ ஸ்வாமியான
ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானியாய் இருக்கும் –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: