மூன்றாம் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த  சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

பரபக்தி பர ஞான பரம பக்தியை யுடையராய் -அத்தாலே பகவத் சாஷாத் காரத்தை யுடையராய் –
ஞான திருப்தஸ்ய யோகின -என்னும் படி-தத் ஏக தாரகராய் –
லோக யாத்திரையில் கண் வையாதே அலௌகிகராய் வர்த்திக்கிற முதல் ஆழ்வார்களில் –
மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் –
அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்–
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் -பெரிய திரு -2-10-8-ஆகையால்
ஸ்ரீ மத்தாய் அவர்களுக்குப் பாங்காக வசிக்கும் படியான மாடங்களை யுடைத்தாய் –
அத்தாலே தத் ஏக நிரூபணீயமாய் இருக்கிற திருக் கோவலூர் என்றபடி –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம் / வூர் -தானுகந்த வூர் –
பின்புள்ளவர்க்கும் ஆஸ்ரயணீயன் ஆகைக்காக ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் எல்லாம் தோற்ற
நீயும் திரு மகளும் நின்றாயால் -இத்யாதி படியே வர்த்திக்கும் தேசம் –

அதனுள் —
இப்படி விலக்ஷணமான தேசத்துக்கு உள்ளே –விலக்ஷணராலே-அன்று எரித்த ஞானச் சுடர் விளக்குகளாலே
புற இருளும் இதயத்து இருளும் -போனவாறே –

காரார் கரு முகிலைக் காணப் புக்கு –
மழை முகிலே போல்வானான -அவனைப் பொலிந்து இருண்ட கார் வானில் படியே கண்டு அனுபவிக்கப் புக்கு —
புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு
உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செலவத் திருக் கோவலூர் –பெரிய திருமொழி -2-10-10– இருக்கிறபடி –

காணப் புக்கு –
அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –

அதனுள் காரார் கரு முகில்–
குருங்குடியுள் முகில் போலே க்ருபாவானான மேகம் இறே –
காரார் கரு முகிலை வர்ஷூக வலாஹகம் போலே மேக காந்தியாய் இருக்கை —
காள மேகம் அன்றிக்கே -வர்ஷூக வலாஹக தர்சனத்தாலே ஒரு நிவேசனத்திலே ஒதுங்கப் புக்கு
மூவரை ஒழிய மாற்றார் என்று ஆராயும் இடத்து –என்றுமாம் –
ஏவம் விதனானவனை -நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணப் புக்கு

ஓரா –
திரு உள்ளத்திலே அவ்வனுபவம் விசதமாம் படி
ஓர்ந்து –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை -திருக் கண்டேன் -என்று தொடங்கி- பின்புள்ளவர்க்கும் பிரசித்தமாக அருளிச் செய்த

சீரான் கழலே –
இப்படி ஸ்ரீ மானை அனுபவித்தவருடைய ஸ்ரீயை யுடையரான ஸ்ரீமானுடைய ஸ்ரீ பாதங்களே
மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி -என்னைக் கடவது இறே –

உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து –
அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்–யத்தி மனஸா த்யாயதி தத் வாசா வததி இறே –

நெஞ்சே உகந்து –
இப்படி ததீய சேஷத்வத்துக்கு தகுந்த நெஞ்சே -அநுஸந்திக்கும் இடத்தில் ஹர்ஷத்துடனே அனுசந்தித்து
உகந்து பணி செய்து -என்னுமா போலே
தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்-என்றார் இறே

சீரான் என்று பகவத் சாஷாத்கார ஹேதுவான ஞான பக்தியாதி குணங்களை யுடையவர் என்னவுமாம் –

இத்தால் பகவத் சாஷாத் காரம் யுடையராய் -அத்தை சம்சாரிகளும் அனுபவிக்கும் படி ஸ்வ ஸூக்தி முகேன பிரகாசிப்பிக்கும்
அவர்களான ஸ்ரீ மான்கள் திருவடிகள் நித்ய அனுசந்தேயம் என்றதாய்த்து –

——————————————————————————

அவதாரிகை –
உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் முதல் ஆழ்வார்
அதுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் நடுவில் ஆழ்வார் –
அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ்வாழ்வார் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

—————————————————–

பகவத் பிரசாத லப்தமான பர பக்தி ரூபாபன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் பொய்கையார் –
ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி வையம் தகளி கேட்க்கையாலே
பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –
அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்

உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார் –
அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
(மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை
காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

———————————————————————

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

திருக் கண்டேன்–
தர்மம் தன்னைக் கண்டேன் –

பொன் மேனி கண்டேன்–
அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –

செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்–
அஸ்தானே பய சங்கை பண்ணி -வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் அலையும் பல்லாண்டு -என்கிறபடியே திரு வாழியைக் கண்டேன் –

புரிசங்கம் கைக் கண்டேன்-
ப்ராஞ்ஜலி ப்ரஹவ மாஸீனம் -என்கிறபடியே

என்னாழி வண்ணன் பால் இன்று —–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எனக்கு காட்டினவன் பக்கலிலே –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –ப்ரபைக்கு ஆஸ்ரயம் கண்டேன்
திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் —
செருக்கிளரும்–இருவரும் கலந்த கலவியாலே பிறந்த சமுதாய சோபை
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று —-
கடலிலே இறே பிராட்டியும் மற்றும் உள்ள ரத்னங்களும் எல்லாம் பிறப்பது –
இன்று -அவன் காட்டக் கண்ட இன்று -இவர்கள் புருஷகாரமாகக் கண்ட இன்று என்றுமாம் –

——————————————————————–

உனக்கு ஸ்வம்மாய் கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் பக்கலிலே
ஆழ்வார்கள் இருவரும் காட்டக் கண்ட இன்று
தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி
பிரதானையான பெரிய பிராட்டியாரைக் கண்டேன்
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்
மரகத கிரியிலே உதித்து ஒளி விட்டுக் கிளருகிற பாலார்க்கனைப் போலே இவருடைய ஒளியும் தன்னிலே கலசி
விளங்கா நின்றுள்ள அழகிய நிறத்தையும் கண்டேன் –
இச் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி
யுத்த உன்முகமாய் கண்டார் மேலே சீறி விழா நிற்பதாய் ஸ்யாமளனான அவன் வடிவுக்குப் பகைத் தொடையாம் படி
பொன் போலே நிறத்தை யுடைத்தான திரு வாழியைக் கண்டேன் –
திரு வாழியைப் போலே சீறி விடுகை அன்றிக்கே
எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் சீறிப் பார்க்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வெறும் புறத்திலே ஆலத்தி
வழிக்க வேண்டும் படி அழகிதான் திருக் கையிலே கண்டேன் –
இன்று நிர்ஹேதுகமாக-என்னவுமாம்
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும்
ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும் என்னவுமாம் –

—————————————————————-

கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று –
அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —2-

மருக்கண்டு கொண்டு-பொருந்தி உன்னைப் பெற்றது –

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்–
பிரதிபந்தகம் போயிற்று என்று தோற்றும்படி யாயிற்று –
(பாத தர்சனம் பாப விமோசனம்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறப்பும்
கைங்கர்யம் செய்யப் பெறுவேன் ஆகில் பெறுவேன் -ஆண்டாள் )

பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே —
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே -என்று
பிராட்டி -தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்பு படைத்த -ஸ்ரீ யபதியை –

உன்னை-மருக்கண்டு கொண்டேன் மனம் —–
ஒரு பிரயோஜனத்தைக் கொண்டு போகை யன்றிக்கே
உன் பக்கலிலே மருவிற்று என் மனஸ் ஸூ —

பொன் தோய்ந்த மலை போலே ஒளி பெற்று சிக்கென்று பரந்து சிலாக்யமான திரு மார்பில் சாத்தின அழகிய
திருத் துழாயை யுடையனாய் -அம்ருத மதனம் பண்ணின காலத்தில் –
தரித்ரன் நிதியைக் கண்டால் போலே பெரிய பிராட்டியால்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே –என்னும்படி கண்டு கொள்ளப் பட்டவனாய் உன்னளவில்
அவளுக்கு உள்ள அபி நிவேசம் குளப்படி என்னும் படி பிராட்டி பக்கலிலே
கடல் போலே பெருகி வருகிற அபி நிவேசத்தை யுடையவனே
என்னுடைய மனசானது -ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்துப் பிற்காலியாதே
அவளோட்டை உறவை நினைத்துக் கூசாதே பொருந்திக் கொண்டு கிடந்து -ஆகையால் -அந்தப்புர பரிகரமான நான்
இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அனுபவ விரோதியான ஜென்ம பரம்பரையும் சவாசனமாகப் போக்கினேன் –
மருக் கண்டு கொண்டு -மருவிக் கண்டு கொண்டு -என்றபடி –

—————————————————————

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று –
அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –

இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –3–

சினத்து செரு நருகச் செற்று உகந்த—
சீற்றத்தினால் எதிரிகள் ஆனவர்கள் அழியும் படி அழித்து மகிழ்ந்தவன்

மனத்துள்ளான்-
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –

மா கடல் நீருள்ளான் மலராள்-தனத்துள்ளான் தண் துழாய் மார்வன்–
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காகத் திருப் பாற் கடலிலே கிடந்து-
அவ்வோபாதி பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தையும் ஒரு ஸ்தானமாக யுடையனாய் –
தண் துழாய் மார்பனாய் –

சினத்தினாலே செருநரானவர்கள் மங்கும்படி செற்று ஆஸ்ரித விரோதிகள் போகப் பெற்றோம் என்று உகந்து
அத்தாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய் —
சினத்துச்-செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்-வரு நரகம் தீர்க்கும் மருந்து —
அனுபவித்து அல்லது விடாத நரகத்தைக் கடைக்கைக்கு பேஷஜம் ஆனவன் -மனத்துள்ளான்-என்னுடைய மனசிலே உள்ளான் –

————————————————————

பிராட்டி மேல் விழுந்து அனுபவிக்கும் படி ஸ்ரமஹரமான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையனாய்-
தாமரைப் பூவை இருப்பிடமாக யுடையளான பெரிய பிராட்டியாருடைய அவயவாந்தரங்களில் அழகு குமரிருக்கும் படி
திரு முலைத் தடத்திலே அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு அடங்கி கொண்டு அடங்கி வர்த்திக்குமவனாய்-
என் மனஸ்ஸூ பாங்காகும் அளவும் அவசர ப்ரதீஷினனாய்க் கொண்டு இடமுடைத்தான திருப் பாற் கடலிலே நீரிலே
கண் வளர்ந்து அருளுமவனாய் -சத்ரு வர்க்கம் உருத் தெரியாத படி அழிக்கத் தக்கதாய் சீறி அழித்துப் பொகட்டு –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அத்தாலே தேங்கின கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்-
அந்த மா கடலிலே பள்ளி கோளைப் பழக விட்டு என் மனக் கடலிலே வந்து நித்ய வாசம் பண்ணி வாழுமவனானவன் –
தப்பாமல் வரக் கடவதான சம்சாரம் ஆகிற நரகத்தை சவாசனமாகப் போக்கும் ஒவ்ஷதம்

———————————————————–

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி —4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே–
மருந்து என்று விரோதி நிரசன மாத்ரமாகக் கொண்டு /
பொருள் என்று உபாயமாக்கி –அமுதம் என்று உபேயம் என்கிறது –
மருந்து என்று உபாயம் ஆக்கி பொருளும் அமுதமும் தானே என்று உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது -என்றுமாம் –

திருந்திய செங்கண் மால் —
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம் படி திருந்தி சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன் —
திருந்திய –
இவ்வாத்மாக்கள் திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே இவற்றுக்கு ஈடாகத் தன்னைத்
திருத்திக் கொண்டு இருக்கும் சர்வேஸ்வரன் -என்னவுமாம் –

ஆங்கே பொருந்தியும்–
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்-அன்று உலகம் தாயோன் அடி –
ஸ்ரீயபதி வந்து நீர் ஏற்கிறான் என்று கூச வேண்டாத படி இரப்பிலே பொருந்தி நின்று -லோகத்தை நீர் ஏற்று
-லோகத்தை வயிற்றிலே வைத்துக் காத்து -வெளி நாடு காண உமிழ்ந்து நேர் ஏற்ற லோகத்தை
மூவடியாலே அளந்தவனுடைய திருவடி மருந்தும் பொருளும் அமுதமும் தானே –

—————————————————–

ஸர்வேச்வரன் இவன் என்னும் இடத்தை ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பிக்க வல்ல திருத்தத்தை யுடைத்தாய் –
ஐஸ்வர்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனாய் வ்யாமுக்தனானவன்
ஜகத் ரக்ஷணம் ஆகிற அந்தச் செயலில் ப்ரதிஷ்டித்தமான திரு உள்ளத்தை யுடையனாய்க் கொண்டு லோகத்தை
திரு வயிற்றிலே வைத்துக் காத்து வெளிநாடு காண புறப்பட விட்டுத் தன்னது அல்லாததைப் பெறுவாரைப் போலே
அந்நிய அபிமானம் தீர நீர் ஏற்று வாங்கி -உதக ஜலம் கையிலே விழுந்த அப்போதே மூன்று அடியாலே
லோகத்தை அளந்தவனுடைய திருவடிகள் தானே அநிஷ்டமான சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-
திருந்திய என்கிறது –
சர்வேஸ்வரனுக்கு விசேஷணமான போது ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானேயாம் படி
திருந்தி இருக்குமவன் என்றும் –
இவர்கள் திருந்தாக் குறை தீரக் தான் இவர்களுக்குமாகத் திருந்தி இருக்கும் என்றும் பொருளாகக் கடவது –
நமுசி பிரப்ருதிகளை போக்குகையாலே மருந்து
அர்த்தியாய் வருகையால் பொருள் —
தன் திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அமுதமானான் —

————————————————————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆகையால் அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

அடி வண்ணம் தாமரை–
திருவடிகளின் நிறம் தாமரை

அன்றுலகம் தாயோன்-படி வண்ணம் —
லோகத்தை அடங்கலும் அளந்து கொண்டவனுடைய நிறம்

பார்க்கடல் நீர் வண்ணன்-
பார் சூழ்ந்த கடலின் நிறம் / வெளுப்புப் பேசுகிற இடமாகில் திருப் பாற் கடலினுடைய நிறம் என்னவுமாம் –

முடி வண்ணம்-ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே–
திரு அபிஷேகத்தின் உடைய நிறம் ஆதித்யன்

ஆராழி கொண்டார்க்கு அழகு —-
கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை

——————————————————–

மஹா பலி நீர் வாரத்துக்கு கொடுத்த அன்று லோகத்தை அநாயாசேன அளந்து கொண்டவனுடைய திருவடிகளின்
நிறமானது தாமரை போலே சிவந்து இரா நின்றது –
திரு மேனியின் நிறமானது -பூமியைச் சூழ்ந்த கடலின் ஜலம் போலே இருண்டு குளிர்ந்து இரா நின்றது-
திரு அபிஷேகத்தின் யுடைய நிறமானது -ஏக சக்ர ரதாரூடனாய் ப்ரதாபோத்தரனான ஆதித்யன் போலே இரா நின்றது –
அவனுடைய தேஜஸ்ஸூ அந்த ஆதித்யனுடைய தேஜஸ்ஸூ போலே இரா நின்றது -அழகு பொருந்தின
திருவாழியைத் திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிறவனுக்கு அழகு பொருந்தின திரு வாழியைத்
திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிறவனுக்கு அழகு –பார்த்த அளவில் இப்படி இரா நின்றது என்று
அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –

———————————————————-

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல்  —–6-

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்–
சர்வேஸ்வரனுக்கு கடலின் நீரினுடைய நிறம் வெறும் நிறமாகுமதேயே

அழகு அன்றோ –
இந்நிறம் யுடையவர்க்கு வேறு ஒரு ஒப்பனை வேணுமோ –

அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே-
செயலோ அழகியது அன்றோ வாய் இருக்கிறது –அழகு என்றவாறு

அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்  —
திருவடி தான் கங்கைக்கு காரணம் என்று பாவனத்வம் மாத்திரம் ஆகுமதேயோ
-அதுவும் அவனுக்கு அழகு அன்றோ –

——————————————————-

திருக்கையிலே திருவாழியை யுடையவனுக்கு கடலின் நீரினுடைய நிறம் வெறும் மாத்ரமேயாய் -அழகுக்கு உடல் அன்றோ
அந்தரிஷிதகளான லோகங்களை அளந்து கொண்டது வருந்திச் செய்த செயல் மாத்ரமோ
ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ
கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே நீர் ஏற்றவனுக்கு திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய
ப்ரஹ்மா திருவடிகளை விளக்க -கங்கா ஜலத்தைப் புறப்பட விட்ட திருவடிகள் -கங்கைக்கு உத்பாதகம் என்று
பாவானத்வ மாத்ரமேயோ -வெண் துகில் கொடி என விரிந்து -என்கிறபடியே கங்கா ஜலத்தின்
வெளுப்பும் திருவடிகளின் சிவப்புமாய் அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ –

—————————————————————

அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் –

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாளும் படி வாராய் என்கிறார் –

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க்கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

கார்க்கடல் நீர் வேலை -பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன்–
கடல் சூழ்ந்த பூமியை அளந்து -புள்ளூர்ந்து அத்தாலே ஸ்ரீ மானாய்

எழில் அளந்தங்கு -எண்ணற்கரியானை —
எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை

எப்பொருட்க்கும் சேயானை -எல்லாப் பொருள்களுக்கும் தூரஸ்தனாய் உள்ளவனை –
நண்ணற்கரியானை –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு கிட்ட அரியனானவனை
நாம் கழல் தொழுதும் வா நெஞ்சே-அவர் காட்டக் காண இருக்கிற நாம் திருவடிகளைத் தொழுவோம் போரு –

———————————————————————-

கறுத்த கடலின் நீரோடு கூடின கரையை யுடைத்தான பூமியை அளந்து கொண்ட கருட வாஹனான ஸ்ரீ யபதியாய்
தன்னுடைய அழகை இவ்வளவு என்று பரிச்சேதித்துச் சொல்ல ஒண்ணாத அளவன்றிக்கே மனசாலே நினைக்கைக்கும் கூட
அரியனாய் இருக்குமவனாய் எல்லா பதார்த்தங்களும் அவ்வருகு பட்டு இருக்கிற வைலக்ஷண்யத்தை யுடையனாய்
ஆர்க்கும் ஸ்வ யத்னத்தால் கிட்டுக்கைக்கு அறியனானவனை அவன் தானே காட்டக் கண்ட நாம்
அடிமை சுவடு அறியும் நெஞ்சே -திருவடிகளைக் கிட்டி அடிமை செய்வோம் போரு –

—————————————————————————————————————-

எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் –
எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ———8–

நாமம் பல சொல்லி–கார்யா புத்தயா சொன்னால் ஆகில் இ றே ஒன்றைச் சொல்லுவது –எல்லா திரு நாமங்களையும் சொல்லி –
நாராயணா வென்று–அசாதாரண நாமத்தைச் சொல்லி –
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே-எல்லா இந்திரியங்களுக்கும் அடி நீ இ றே —
வா மருவி-
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ——–பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து
-வெளி நாடு காண உமிழ்ந்து -போக்கிய பூதனாய் ஸூ லபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண் –

—————————————————————–

என்னிலும் இவ்விஷயத்தில் முற்கோலி விழுகிற நல்ல நெஞ்சே -வாக் இந்த்ரியத்தில் நா யுறாவுதல் தீரும் படி
ஒரோ குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி –இவற்றுக்கு எல்லாம்
பிரதானமான ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு எல்லாம் பூர்ண வாசகமான அசாதாரணமான திரு நாமத்தைச் சொல்லி
-அங்குத்தைக்கு எடுத்துக் கை நீட்டக் கடவ அழகிய கையாலே நாம் அஞ்சலி பந்தம் பண்ணுகை முதலான
வ்ருத்தி விசேஷங்களை பண்ணுவோம் -நீ இறாயாதே பொருந்தி வாராய் –பூமி முதலான லோகங்களை பிரளயம்
வருவதற்கு முன்னே திரு வயிற்றிலே வைத்து நோக்கி -அங்கிருந்து நெருக்குண்ணாத படி புறப்பட விட்டு ரஷித்தவனாய் –
ரஷியா விடிலும் விட ஒண்ணாத படியாய் -மதுபான மத்தமாய்க் கொண்டு வண்டுகள் சப்திக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே
அலங்க்ருதன் ஆகையால் நிரதிசய போக்ய பூதனான கிருஷ்ணனையே காண வேணும் என்று மேல் விழுகிற
நம்முடைய கண்களானவை கண்டு களித்திடுக –

————————————————————————————————————————–

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்-திருமா மணி வண்ணன் தேசு –எண்ணில்-
ஸ்ரமஹரமாய கண்ணுக்கு அடங்காத திரண்டு குளிர்ந்து இருந்தவனுடைய
அழகை எண்ணில்-கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே -காடும் மோடுமாய் உள்ள பூமியை அளந்த வும் பூவையைக் கொண்டே

——————————————————————–

கறுத்துப் பெருத்த மேகம் போன்ற ஸ்ரமஹரமான வடிவை யுடையவனாய் -கறுத்த கடலின் நீர் போலே கண்ணுக்கு
அடங்காமல் அபரிச்சேத்யமான திரு நிறத்தை யுடையவனாய் -அழகு மிக்குப் பெரு நிலையனான நீல ரத்னம் போலே
கண்ணாலே முகந்து அனுபவிக்க லாம் படி இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனுடைய அலகால் வந்த தேஜஸ்ஸூ
குமிழ் நீர் உண்ணாதே வருந்தி அனுசந்திக்கப் புக்கில் -வவ்வலிடும்படி குளிர நோக்குகிற
திருக் கண்களும் -தாமரை போலே குளிர்ந்து மலர்ந்த சிவந்து இரா நின்றது -ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும்
நிலமாய் காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும் அந்தக் கமலம் போலே இரா நின்றன –

————————————————————————————————————-

அங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் -நாம்
அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம்
பெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது –

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும்   மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

தேசும் திறலும் திருவும் உருவமும்–
மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –

மாசில் குடிப்பிறப்பும்   மற்றவையும் –
குற்றம் அற்ற பிறப்பும் -அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்கு

பேசில்-
திரு நாமம் சொன்னதுக்குப் பலம் பேசப் போகாது -பிரயோஜனத்தில் பேசில் –

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத—-
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்ல –

நலம் புரிந்து சென்றடையும் நன்கு —
இஸ்ஸம்பத்து எல்லாம் தன் பேறாகச் சென்றடையும் –

————————————————————

வலவருகே புரிந்து இருப்பதாய் -ஸ்யாமளமான திருமேனிக்கு பரபாகமான வெளுத்த நிறத்தை யுடைத்தான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைத் திருக் கையிலே தரித்து கொண்டு இருக்கிற சர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு
வாசகமான திரு நாமங்களை சாதரமாகச் சொல்லி –தத் பலன்களை சிறிது சொல்லப் பார்க்கில் –
இருந்ததே குடியாகக் கொண்டாடும்படியான மதிப்பால் வந்த தேஜஸ்ஸூம் -பராபிபவன சாமர்த்தியமும் –
நிரவதிகமான சம்பத்தும் -அழகிய ரூப ஸ்ரீயும் -குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–
மற்றும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும் நாம் இவ்விஷயத்தைக் கிட்டி ஸ்வரூப லாபம் பெற வேணும் என்று –
ஸ்நேஹ உன்முகமாய்க்கொண்டு தன் பேறாக வந்து அடையா நிற்கும் –வான் சங்கம் என்றது வெளுத்த சங்கம் என்றபடி –

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: