முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -41-50– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

அவன் குற்றம் பொறுக்கைக்காக திருமலையிலே வந்து நின்றான் -ஆபிமுக்யத்தைப் பண்ணினாலும்
தோஷாம்சத்தைப் பாராதே குணாம்சத்தைக் கொள்ளும் -அவன் உள்ள அன்றே இவ்வாத்மா யுண்டு என்கிறார் –

இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாகிலும் -தோஷமே வேஷமான நமக்கு அவனைச் சென்று அணுகப் போமோ -என்று
திரு உள்ளம் பயப்பட -உனக்கு ஆபிமுக்யம் மாத்திரமே யுண்டாக
அவன் நம் குற்றத்தை யடைய நற்றமாகக் கொள்ளும் அஞ்ச வேண்டா -என்கிறார் –

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு –41-

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்–அவன் நம் குற்றத்தை யடைய நற்றமாகக் கொள்ளும்
அஞ்ச வேண்டா -என்கிறார் -இத்தனை நாளும் இத்தை செய்யாது ஒழிவான் என்னில் –
இன்று  முதலாக -இவனுக்கு ஸ் வ பாவம் என்று அறிந்த இன்று தொடக்கமாக
வென்னெஞ்சே -என்றும்-எனக்கு ஹிதம் பார்க்கும் நெஞ்சே -சஹ்ருதயமாக அவன் குணங்களை பேசப் போமோ என்னில் –
புறனுரையே யாயினும் -அஸ்ருதயமான பேச்சே யாகிலும் -பிரயோஜனம் இன்றிக்கே அனர்த்தம் ஆயிற்றே ஆகிலும் என்றுமாம் –
பொன்னாழிக் கையான்-திறனுரையே சிந்தித் திரு –சர்வேஸ்வரன் திறத்தில் சப்தங்களையே அறிந்து -க்ருதார்த்தமாய் இரு –
அவனோடே சம்பந்தம் யுண்டாகிலும் முன்பு அங்கனம் செய்து அருளாது விடுவான் என் என்ன
குற்றம் குணம் என்று நினையாமை-பொன்னாழி –தானே சஹ்ருதயமாக்கும்

———————————————————————-

என் வழியே ஒழுகும் படி எனக்கு பாங்கான நெஞ்சே -சர்வ காலத்திலும் சஹ்ருதயமாக அன்றிக்கே –
கேவலம் வாங்மாத்ர சித்தமான புறப்பேச்சே யாகிலும் -அஹ்ருத யுக்தியை சஹ்ருதாயாம் படி பண்ண வற்றான
அழகிய திருவாழியும் கையுமான சேர்த்தி அழகை யுடைய சர்வேஸ்வரன் இடையாட்டமாய் –
மித்ர பாவம் அடியாக -நத்யஜேயம் -என்னும் படியான சொல்லையே அனுசந்தித்திக் கொண்டு ஸ்திதோ அஸ்மி -என்னும்படி
நிர்ப்பரனாய் கொண்டு இரு -இவ் வானுகூல்ய லேசம் யுண்டான இன்று முதலாக -மலை போலே ஸ்வ யத்னத்தாலே
சலிக்க ஒண்ணாத படி பெருத்து உறைத்து இருக்கிற குற்றங்களை பத்தும் பத்துமாகச் செய்தாலும்
அதி மாத்ர வத்சலனானவன் -செய்தாரேல் நன்றே செய்தார் -என்னும் படி குணமாக்க கொள்ளும் –

———————————————————————

பாராதே பொறுக்கைக்கு அடி பிராட்டிமார் அருகே இருக்கை -என்கிறார்

இப்படி குற்றத்தை ஸ்வ தந்த்ரனானவன் -குணமாகக் கொள்ளக் கூடுமோ -என்னில்
ந கச்சின் நாபராத்யதி -என்னும் பிராட்டிமார் மூவரும் அங்கே கூடி இருக்கையாலே கூடும் -என்கிறார் –

திருமகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்-திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்-
அனந்தாழ்வான் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் -மண்மகட்கே தீர்ந்தவாறு என் கொல் –
ஆய்மகட்கே தீர்ந்தவாறு என் கொல் -என்று பணிக்கும் –
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த–திருப் பாற் கடலின் திவலை திரு முகத்தில் படும் படிக்கு ஈடாக
திரு வனந்த ஆழ்வான் மேல் கிடந்த
மாலோத வண்ணர் மனம் —-மாலோத வண்ணருடைய—திருமகள் மேல் வைத்த திரு உள்ளம்
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்–திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்று -அருளிச் செய்வார் பட்டர்

பிராட்டியோடு கலந்த போது -புஷபாங்க ராகைஸ் சமம்-என்கிறபடியே அல்லாத பிராட்டிமார் உபகரண கோடியிலே நிற்பார்கள்
அல்லாத பிராட்டிமாரொடு பரிமாறும் போது –இவள் தன் இடையிலும் முலையிலும் கலந்தால் போலே இருக்கும் போகம் தான்
உன்மஸ்தகம் ஆனால் வ்ருத்த கீர்த்த நாதிகளுக்கு கூட்டாய் நிற்பார்கள் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இதர விஷயங்கள் இருவருக்கும் போரா மையாலே சீறு பாறு என்கைக்கு உடலாம் -இங்கு போக்யதா அதிசயத்தாலே
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரண்டு அவகாஹிக்க வேண்டும் என்றதாயிற்று —

———————————————————-

திருப் பாற் கடலில் சிறு திவலைகளானவை ஸ்ரமஹரமாம் படி துடை குத்துவாரைப் போலே நாலு பாடும் சிதறி விழ
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே பள்ளி கொண்டு
அருளுகிற பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடைய சர்வேஸ்வரனுடைய பெரிய பிராட்டியார் மேலே
அத்யபி நிஷ்டமாய்ச் செல்லுகிற திரு உள்ளமானது -குற்றத்தை பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும்
பொறை விளையும் தரையான ஸ்ரீ பூமி பிராட்டியாரும் -குற்றம் கிளராத படி திரு உள்ளத்தை திரை கொள்ளும்
கோப குல அவதீரணையான நப்பின்னை பிராட்டியாரும் சதாரமாக சம்ச்லேஷித்தால் புஷபாங்க ராகாதிகளோ பாதி
போக உபகரண கோடியில் நின்று பிராட்டியோடே கலக்கும் இடத்தில் சாபத்ந்ய கந்தம் அற அல்லாத பிராட்டிமார் எடுத்து
கை நீட்டுகையாலும் -அவர்களோடு கலக்கும் இடத்தில் தன் முலையிலும் இடையிலும் கலந்தால் போலே
பிராட்டி நினைத்து இருக்கையாலும் -பெரிய பிராட்டியார்க்கே அற்றுத் தீர்ந்ததாய் இருக்கிற படி எங்கனே தான்
-இத்தால் மூவர்க்கும் உண்டான ஐக ரஸ்யம் சொன்னபடி –

————————————————————————————

பிராட்டிமார் அடியாக அவனைப் பற்றினார்க்கு போகத்தில் பிரதிபந்தகங்கள் போக வேணும் என்றும்
பக்த்யாதிகள் உண்டாக வேணும் என்றும் இவர்களுக்கு கரைய வேண்டா -என்கிறது –
திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் –

பிராட்டிமார் நித்ய சந்நிஹிதராய் இருக்கையாலே தங்கள் குற்றத்தை நினைத்து பிற்காலிக்க வேண்டியது இல்லை
இனி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயிக்கவே விரோதி வர்க்கம் தன்னடையே விட்டு நீங்கும் -என்கிறார் –

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–

மனமாசு  தீரும் –மனஸ்ஸூ க்கு மாசாகிறது -ருசி வாசனைகள் –
அருவினையும் சாரா–அவித்யாதி கர்மங்கள் அணையா
தனமாய தானே கை கூடும் -இப்படியான அதிகாரிக்கு தனமான கைங்கர்ய பூர்வ பாவியான பக்த்யாதிகள் தானே யுண்டாம்
புனமேய-பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி-
தாம் தொழா நிற்பார் தமர் —தமரானவர்கள் சர்வேஸ்வரன் திருவடிகளிலே தாங்களே தொழா நிற்பர்கள் –
இவர்களுக்கு அவனுடைய திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு தொழுவது அவனை அனுபவிக்கையிலே அந்வயம் –
திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் -அவித்யாதிகள் போனார்க்கு வரும் தனம்-
அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –பூந்துழாயான் அடிக்கே–குடிக்கிற வேப்பங்குடி நீர் -போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் –இவன் வகுத்தது செய்ய அவன் வகுத்தது செய்யாது ஒழியுமோ –

————————————————————–

திரு மேனியின் ஸ்பர்சத்தாலே தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி பெற்று பூத்த திருத் துழாயாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனுடைய திருவடிகளுக்கே அடிமைக்குக் கை தொடுமானமான சூட்டு நன் மாலைகளோடே நீராட்டுகைக்கு
உப கரணமான நன்னீரையும் சாதரமாக தரித்துக் கொண்டு நின்று தங்கள் அபி நிவேசம் அனுரூபமாக
ஆஸ்ரிதரான தாங்கள் அடிமை செய்யா நிற்பர்கள் – இவர்கள் இப்படி வகுத்த அடிமை செய்யவே அனுசந்தான
பரிகரமான மனசைப் பற்றிக் கிடக்கிற அஞ்ஞானம் விஷயராகம் முதலான தோஷங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழலும்-
அவற்றுக்கு அடியாக ஸ்வ யத்னத்தாலே போக்க அரியதாய் துஷ் கர்மங்களும் கிட்ட வாராது -கைங்கர்ய உபகரணமாய்-
ஸ்வரூப அனுரூபமான தனமாய் இருக்கிற பரபக்த்யாதிகளும் தனக்குத் தானே வந்து கை புகுரும்-

———————————————————————————————————-

தமர் என்று சிலவரும் -அவர்களுக்கு பிரதிபந்தகம் போக்க வேண்டா -போகத்திலே அந்வயம் சொல்லுகிற படி -எங்கனே என்னில்
அவனுடைய ஸ்வரூபம் ஆஸ்ரித பரதந்த்ரம் ஆகையால் சொல்லுகிறது –

ஆஸ்ரிதர் இப்படி அடிமை செய்யும் அளவில் இவர்கள் உகந்த ரூப நாமாதிகளை உடையனாய்க் கொண்டு
தன்னை யமைத்து -அர்ச்சாவதார ரூபேண இங்கேயே அடிமை கொள்ளும் என்கிறார் –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் -44–

எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே–எவ்விதமாக நினைத்து இடைவிடாமல் தியானம் செய்து கொண்டு இருப்பாரோ –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே–யே யதா மாம் பிரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம் யஹம்
நமக்கு நல்லவர்கள் இன்னார் என்றும் இல்லை -இன்னபடி பஜிப்பார் ஒன்றும் இல்லை –அவர்கள் நின்ற நிலையிலே
அவர்கள் பஜித்த படியே அவர்களை பற்றுவேன் என்கிறது –தமரானவர்கள் பிராகிருத த்ரவ்யங்களிலே ஒன்றை
உனக்குத் திரு மேனியாகக் கொள்ள வேணும் -என்றால் அத்தைத் திருமேனியாகக் கொள்ளும் –
ஸூவர்ண ரஜாதாதிபி –எம்பெருமானார் மாது காரத்துக்கு எழுந்து அருளா நிற்க -சில பிள்ளைகள் காலாலே கீறி
உம்முடைய எம்பெருமான் திரு மேனி -என்று காட்ட -பாத்திரத்தை வைத்து தண்டனை இட்டு அருளினார்
இவ்வர்த்தத்திலே -கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள் திரு வீதியில் இருந்து
பெருமாளும் நாய்ச்சிமாரும் பெரிய திரு மண்டபமும் கற்பித்து பெரும் திருப்பாவாடையும் அமுது செய்வித்து
எம்பெருமானார் பிரசாதப்படும் -என்று மணலைக் கையிலே முகந்து எடுக்க
தத் காலத்திலே மாது கரத்துக்கு எழுந்து அருளுகிற உடையவர் -அவ்விடத்திலே அது கேட்டருளி தண்டனிட்டு
அவர்கள் எடுத்த பிரசாதத்தைப் பாத்ரத்திலே ஏற்றார் -என்று ஜீயர் அருளிச் செய்தார்
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் -நல்லவர் -சதங்கை அழகியார் -என்று திரு நாமம் சாத்தினார் ஆகில்
நாராயணாதி நாமங்களைக் காட்டிலும் அத்தை விரும்பும் —
தமருகந்து-எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —நல்லவர் உகந்து -யே யதா -என்னும் படி யாதொரு பிரகாரத்தில் உகந்து
சாவதாநராய் இருப்பார்கள் -அந்த பிரகாரத்தாலே அத்தை யுடையனாம் –
ஆழியானாம்-அப்ராக்ருதமாய் இருந்துள்ள சகல பரிகரத்துக்கும் உப லக்ஷணம் -அவை எல்லாம் கிடக்க
இவர்கள் நினைத்த படியாகத் தன்னை அமைத்துக் கொடுக்கும் –
தமர் இத்யாதி -இவன் கண்டு தொழ வேண்டாவோ -எங்கே காண்பது என்னில் -அவ்வுருவத்தானே
ஆத்மாநாம் மானுஷம் மன்யே–யே யதா –எப்பேர் மற்றப் பேர் –எங்கள் ஆழ்வார் ( விஷ்ணு சித்தர் இவரே ) பாடே
ஆயர் தேவு சென்று நாவல் பழம் வேண்ட நீ யார் -என்று அவர் கேட்க -ஜீயர் மகனான ஆயர் தேவு -என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை எங்களைக் குடி இருக்க ஓட்டுகிறீலன்-என்றார்
ஆழியானாம்–சிரேஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன் ஸ்ருஜ்யனுமாய் ந்யாம்யனுமாம் –

—————————————————————————-

தன் கருத்து அறிந்து எடுத்துக் கை நீட்டும் திருவாழி முதலான திவ்ய பரிகரங்களை யுடையனான சர்வேஸ்வரன்
அவர்களைக் கால் கடைக் கொண்டு இன்று சம்சாரத்திலே தன்னைப் பற்றி இருக்கும் ஆஸ்ரிதரானவர்கள்
ஸூவர்ண ரஜாதாதி களான த்ரவ்யங்களாலே உகந்து ஏறி அருள பண்ணினது யாதொரு விக்ரஹம்
அந்த விக்ரஹத்தை அசாதாரண விக்ரஹத்தோ பாதி தானே ஆதரித்து பரிக்ரஹியா நிற்கும்
இப்படி அவர்கள் உகந்த திரு மேனியை விரும்புகிற அளவன்றிக்கே ஆஸ்ரிதர் உகந்து சாத்தின திரு நாமம் யாதொன்று
அந்தத் திரு நாமத்தை நாராயணாதி நாமங்களோபாதி தனக்கு நாமமாக விரும்பா நிற்கும்
ஆஸ்ரிதரானார்கள் உகந்து கொண்டு குண சேஷ்டிதாதிகளான யாதொரு பிரகாரத்தை அனுசந்தித்து
அனவ்ரத பாவனை பண்ணி இருப்பார்கள் -அந்த பிரகாரத்தை உடையனாகா நிற்கும் –
இப்படி தன் பெருமை பாராதே ஆஸ்ரிதர் உகந்த ரூப நாம குண சேஷ்டிதாதிகளை தான் உடையானாய்க் கொண்டு
ஆஸ்ரிதரை அடிமை கொள்ளும் அர்ச்சாவதாரத்தின் நீர்மையின் ஏற்றத்தை அனுசந்தித்து வித்தார் ஆகிறார் –

—————————————————————————————————————–

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ்விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே
பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –
இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

——————————————————–

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே
ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ -அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாயே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் –

—————————————————–

ருத்ரனுடைய லஜ்ஜைக் கேடு சொல்கிறது -ப்ரஹ்மாவால் ஒரு ருத்ரன் அலைந்து கொடு கிடக்க அது தீர்த்தார் ஆர் –

ப்ரஹ்மாவுக்கு வந்த அநர்த்தத்தைப் பரிஹரித்து ரஷித்த அளவன்றிக்கே லோக குருவுமாய் பிதாவுமான அந்த ப்ரஹ்மாவின்
தலையை அறுத்து சாப உபஹதனாய் கையும் கபாலமுமாய் இரந்து உண்டு திரிந்த ருத்ரன் அனர்த்தத்தை
பரிஹரித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் —46-

பண்புரிந்த நான்மறையோன் –ஸ்வர யுக்தமாய் சர்வேஸ்வரனால் ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவின்
சென்னிப் பலியேற்ற–வாமாங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸீரோ மாயா -என்கிறபடியே ப்ரஹ்மாவின் தலையை அறுக்க
அவன் கபாலி ஆவாய் -என்று சபிக்க -அவனுடைய தலை ஒட்டிலே பிக்ஷை ஏற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர –விநீத வேஷனாய் -பிராயச்சித்தியான படி -இவனோடு சம்பந்தித்தார்க்கு எல்லாம் இதுவே இறே பணி
அகமுடையவளும் தகப்பனாரைக் கொன்றாள்–இவனை ஆஸ்ரயித்தவனும் தகப்பனைக் கொன்றான்
வினை தீர -என்கிற இத்தால் -இவனுடைய கர்ம வச்யத்வமும்-தான் பண்ணின கர்மம் தன்னால் பரிஹரிக்க போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை என்றபடி –
புண் புரிந்த-ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்——ஈஸ்வர அபிமானியாய் ஒருத்தனாயத் திரிந்தவன் வாசல் தோறும்
இடறித் திரிவதே-என்று திரு உள்ளத்திலே புண்பட்ட சர்வேஸ்வரனுடைய தாள் பணிவார் கிடீர் –
அமரர் தம்-போகத்தால் பூமி யாள்வார் -பூமியும் ஆண்டு பரம பதத்தில் போகமும் அனுபவிப்பார்கள் –
அன்றியும் போக பூமியிலே இருக்கச் செய்தே பரமபதத்தில் போகம் எல்லாம் அனுபவிப்பார்கள் என்றுமாம் –
பண்-இத்யாதி -ஒத்துச் சொல்லா நிற்க தலை அறுத்த படி -மூலை படியே திரிந்தார் பாதகி யானவாறே முழுகித் திரியும் படி —
அமரர் தம்-போகத்தால் பூமி யாள்வார் -விண்ணுளாரிலும் சீரியர் என்றுமாம் –

——————————————————————–

ஸ்வரத்திலே நோக்காய் ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருக்கிற வேதத்தை தரித்து இருந்துள்ள ப்ரஹ்மாவினுடைய
தலையை -வாமாங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸீரோ மாயா -என்கிறபடியே -அறுக்க -அவன் கபாலீ தவம் பவிஷ்யஸி -என்று
அநந்தரம் சபிக்க -தத் சாப உபஹதனாய்க் கொண்டு அவன் தலை ஒட்டாலே நெடும் காலம் இரந்து திரிந்தவனாய் –
ப்ராயச்சித்தி என்னும் இடம் தோற்ற வெளுத்த பூணூலையும் மார்விலே இட்டு விநீத வேஷனுமாய் இருக்கிற ருத்ரனுடைய
ப்ரஹ்மஹத்தி ரூபமான பாபம் விட்டு நீங்கும் படியாக -நகாக்ரேண விதாரிதம் -என்கிறபடியே திரு யுகிராலே கீறி
மாம்சளமான ரக்த ஜலத்தை அபகரித்த திருமேனியை யுடைய சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நித்ய ஸூரி போகமான பரம பாத ஐஸ்வர்யத்தோடே கூட பூமி உபலஷித்தமான லீலா விபூதியையும் ஸ்வ அதீனமாக நிர்வஹிக்குமவர்கள்–

———————————————————————————-

இந்த்ரியங்களினுடைய போகத்தைச் செறுத்து–விஷயத்தினுடைய சந்நிதியில் நில்லாது பரிஹரித்து
மெய்யான பக்தியை யுடையவர்கள் அவனைக் காண்பர் என்கிறார் –
விஷயா வி நிவர்த்தந்தே நிரா ஹாரஸ்ய தே ஹிந–ரஸ வர்ஜம் ரஸோப் யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே -ஸ்ரீ கீதை -2-59-

இந்திரியங்களை ஜெயித்து சம்யக் ஞானத்தை யுடையவர்களாய் -அவனை ஆஸ்ரயிக்கப் பார்க்கல்
அல்லது அவன் திருவடிகளைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்-மதித்த யானைகளை தண்ணீரிலே செறுக்குமா போலே இந்த்ரியங்களினுடைய போகத்தை குறுக்கி
சேரி திரியாமல் -தெருவில் திரியில் கொள்ளும் இறே யானை -அப்படி விஷயத்தின் யுடைய சந்நிதியில் திரியாமல் –
செந்நிறீஇ –செவ்விதாக நிறுத்தி -பதார்த்தங்களில் போகாமல் ப்ரத்யக் வஸ்து விஷயம் ஆக்கி –
கூரிய-மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே–விஹித கர்மங்களைப் பாலாபி சந்தி ரஹிதமாக அனுஷ்ட்டித்து-
ஷீண பாபராய் -ஆத்ம யாதாம்ய ஞானம் யுண்டாய் -ஈஸ்வர பாரதந்தர்யம் என்னும் இடம்
உபாசனம் தருவா ஸ் ம்ருதி-தரிசன சாமானாகாரதா ப்ரத்யக்ஷதா பத்தி –விஸதே தத் அநந்தரம் –என்று சொல்லுகிற பக்தியால் காண்பர்கள்-
மேலொரு நாள்-கைந்நாகம் காத்தான் கழல் —–பண்டு ஒரு நாள் ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பண்ணினவனுடைய திருவடிகளை
இத்தால் விரோதியான முதலையைப் போக்கி தன்னைக் காட்டிக் கொடுத்தால் போலே இவர்களுடைய
பிரதிபந்தகங்களைப் போக்கிக் காட்டிக் கொடுக்கும் என்கிறது –
சேரி திரியாமல் -ஆள் நடையாடாத இடத்தே கொண்டு போய் / கூரிய இத்யாதி –ஸூ பாஸ்ராயமாகவும் -நாதனாகவும்-
உபாயமாகவும் –உபேயமாகவும் அனுசந்திக்கை –
கைநநாகம்–பரமா பதமா பன்ன

———————————————————————

போக்யங்களான சப் தாதிகளான ஜலத்தைக் கண்டு கடுக மாற்றுதல் -நெடுக விடுதல் செய்யாதே நடுத்தரமான க்ரமத்திலே
சங்கோசிப்பித்து -களித்து கண்ட கண்ட விஷயங்களில் காடு பாய்ந்து திரிகிற ஸ்ரோத்ராதிகளான மத்த கஜங்கள் ஐந்தையும்
விஷயங்கள் ஆகிற குடி இருப்புகளில் பண்டு போலே கயிறு உருவிவிட்டு சஞ்சரியாத படியாக ப்ரதக் விஷய ப்ரவணமாம் படி
செவ்வே நிறுத்தி அநபி சம்ஹித பலமாக அனுஷ்டித்த சத் கர்மத்தால் தெளிந்த மனஸ் ஸூ தளமாக முளைத்து
ஸ்வரூப யாதாம்யாத்தை யதாவாக தரிசிக்கும் படி அதி ஸூஷ்மமாக த்யேய விஷயத்தை ப்ரத்யக்ஷமாக
க்ரஹிக்கையாலே பரமார்த்தமாய் இருக்கிற பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அவனை உள்ளபடி உணர
ஷமரானவர்கள் பண்டு ஒரு நாளிலே அடிமை செய்ய வேண்டும் -என்னும் அபி நிவேசத்தாலே புஷ்பாசயார்த்தமாக
ஒரு பொய்கை யிலே புக்குத் துதிக்கை முழுத்தும் படி முதலையாலே இடர் பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை
விரோதியைப் போக்கி அடிமை கொண்டு ரஷித்த சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கண்ட அனுபவிக்கப் பெறுவார்கள் –

————————————————————————————————————

இப்படி இந்திரிய ஜெயம் பண்ணி நாம் பெறுகை யாவது என் -என்று தம்முடைய திரு உள்ளம் பயப்பட
எளிதாகப் பற்றலாம் -நீ பயப்பட வேண்டாம் -என்கிறார் –

நமக்கு இவ்வரும் தொழில்களிலே இழிய வேண்டா -தானே வந்து தன்னைத் தரும் ஸ்வபாவன் அன்றோ என்று
அவன் படியை அனுசந்தித்து -நெஞ்சே நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார்–என்கிறார் —

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து -48–

கழலொன்று-நமுசியினுடைய காலை –

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றி–நமுசியுடைய ஒரு காலை எடுத்து கையாலே சுற்றி என்னவுமாம் –
அன்றியே பூமி அளக்க என்று தன்னுடைய ஒரு திருவடி மலரை எடுத்த அவசரத்திலே நமுசியை ஒரு கையாலே சுற்றி என்னவுமாம்
யோர் கை மேல்-சுழலும் -சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான்–ஒரு திருக் கை மலரில் அனுகூல பிரதிகூலரோடு வாசியற அழலா நின்ற செரு உடைத்தான
திரு வாழியை ஏந்தினவனுடைய சேவடிக்கே செல்ல-ஆழி நெஞ்சே மகிழ்ந்து —மருவு —-உகந்து உகந்து அனுபவி –
கழல் இத்யாதி -அளந்தபடி /ஆழி நெஞ்சே -உனக்கு உபதேசிக்க வேண்டா விறே-
சேவடி தானே இருந்த இடத்தில் வந்தால் -இறாவாமையே வேண்டுவது —

————————————————————————-

ஒரு திருவடியை ஊர்த்வ லோகங்களில் செல்ல வளர்த்து -ஒரு திருக் கையாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகளைச் சுற்றி
எறிந்து மற்று ஒரு திருக் கையின் மேலே -வயிறு மறுகிப் பரி பிரமிக்கிற அனுகூலரான தேவர்களும் பிரதிகூலரான
அஸூரர்களும் நடுங்கும் படிக்கு ஈடாக பிரதிபக்ஷத்தின் மேலே அழலையும் உமிழ்கிற யுத்த சாதனமான திருவாழியைத் தரித்த
சர்வேஸ்வரனுடைய ஆஸ்ரிதர் இருந்த இடமே எல்லையாக வளரும் திருவடிகளிலே கிட்டும் படி அளவு–
அது தேவை யாகாத படி மகிழ்வதும் செய் -ப்ரீதி பூர்வகமாக வாசனை பண்ணு -என்றபடி -சேவடி -சிவந்த அடி -என்றுமாம் –

—————————————————————————————————–

இப்படி இராதார்க்கு அவனைக் கிடையாது என்றும் பின்னையும் அதனுடைய அருமை சொல்லுகிறது –
பிரகிருதி ப்ராக்ருதங்களிலே அருசியும் -எம்பெருமானைக் கங்கையில் ருசியும் யுடையார்க்கு
எளிதாகக் காணலாம் என்கிறது -பொய்ந்நின்ற –இத்யாதி —

எல்லாம் செய்தாலும் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே விரக்தி பிறந்து அவனை
ஆஸ்ரயிக்கப் பார்க்க அல்லது அவனைக் காண முடியாது -என்கிறார்

மகிழல கொன்றே போல் மாறும் பல்யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49–

மகிழல கொன்றே போல் மாறும் பல்யாக்கை-நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் –அலகானது(-விதையானது )-
கோடி ஸ்தானத்திலும் நின்று காணி ஸ்தானத்திலும் நிற்குமா போலே இவ்வாத்மாவானது
தேவ சரீரத்தில் புகுவது திர்யக் சரீரத்தில் புகுவதாய் மாறி மாறி வருகிற பல யாக்கையை நெகிழ்ந்து போம்படியாகப் பண்ணுவார்க்கு அல்லால்
முகிழ் விரிந்த-சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்-ஆதி காண்பார்க்கும் அரிது —
விகசிதமாய் இருந்த தேஜஸைப் போலே தோன்றுமதாய் -ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேகத்தை யுடையனாய் –
எனக்கு காரணமாய் இருக்கிறவனை காணுமவர்களுக்கு அரிது –
மகிழ் இத்யாதி -கர்ம அனுகுணமாக சரீரங்கள் தோறும் நுழைகை -யாதானும் ஓர் ஆக்கை —
முகிழ் விரிந்த சோதி -செவ்வித் படிக் கோலம் / எம்மாதி –ப்ராபகனை / காண்பார்க்கும் -கேட்ப்பார்க்கும் அரிது
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கில் அல்லது ப்ரக்ருதியை உகப்பார்க்கு முகம் கொடுக்கும் இதர புருஷன் அல்லன் –

—————————————————————-

கணிதத்தில் நிபுணனாலே வைக்கப் பட்டதொரு மகிழ் அலகு காணி ஸ்தானத்திலும் கோடி ஸ்தானத்திலும்
மாறி மாறி நிற்குமா போலே -பகவத் சங்கல்பத்தாலே -கர்ம அனுகுணமாக உச்சாவச ரூபேண மாறி மாறி
வரக் கடவ ப்ரஹ்மாதி பீபிலி காந்தமாக பலவகைப் பட்ட சரீரங்கள் தன்னடையே விட்டு நீங்கும் படியாக
ஞான பக்தி வைராக்ய சம்பாதன முகேன யத்னம் பண்ணுமவர்களுக்கு அல்லது விகசித ஸ்வரூபமான
தேஜஸைப் போலே தோற்றுகிற தேஜஸை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான
திரு அபிஷேகத்தை யுடையனாய் -எல்லார்க்கும் என்னுடையவன் என்று முறை சொல்லிப் பற்றலாம் படி
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் -கேவலம் காண வேணும் என்று இருப்பார்க்கும் அரியனாய் இருக்கும் –

———————————————————————–

இந்திரியங்களை விஷயங்களில் போகாமல் காத்து அவன் பக்கலிலே ஸ்நேஹிக்கில் காண எளிது -என்கிறார் –

இதர விஷய சங்கம் அற்று ஸ்நேஹ புரஸ்சரமாக ஆஸ்ரயிக்குமவர்களுக்கு அவனைக் காணச் சால எளிது -என்கிறார் –

அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது -50-

அரிய புலன் ஐந்தடக்கி –ஒரு செய்யிலே பாயும் நீர் இரண்டு செய்யிலே பாய்ந்தால் இரண்டு செய்க்கும் போராது ஒழியும் இறே –
சர்வேஸ்வரனை இச்சிக்கக் கடவவான இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி -அரிய-என்றது-
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் –பிராதி கூல்யமான வாயுவை நியமிக்க அரிது ஆனால்
போலே மனசை நியமிக்க அரிது என்று அர்ஜுனன் சொன்னபடியே இருக்கை –
ஆய்மலர் கொண்டு –செவ்விப் பூக்களைக் கொண்டு
ஆர்வம்-புரிய பரிசினால் –ஸ்நேஹம் மிக்க பிரகாரத்தாலே
புல்கில் -அணையில் –
பெரியனாய்-மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்-ஏற்றானைக் காண்பது எளிது —
உதாரமான கையைக் கொண்டு நீர் ஏற்றவனைக் காண்கை எளிது –புல்கப் பெறில்-பெரியனாய் -ஐஸ்வர்யமும் உதார குணமும் /
வண கை -கொடுத்து வளர்ந்த கை / நீர்ஏற்றானைக் காண்பது எளிது -அப்ரதி ஷேதம் யுடையார்க்கு அர்த்தியாய் வரும் என்றவாறு –

————————————————————————

நியமிக்க அரிதான ஸ்ரோத்ராதி ஞான இந்திரியாதிகள் ஐந்தையும் இதர விஷயங்களில் போகாத படி நியமித்து
அங்குத்தைக்கு யோக்யமாம் படி மயிர் புழு அறச் சோதித்த செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு
ஸ்நேஹ உத்தரமான பிரகாரத்தாலே -அபிமத விஷயத்தை அணைக்குமா போலே போக ரூபமாக ஆஸ்ரயிக்கில்-
ஈஸ்வரனிலும் காட்டில் தன்னைப் பெருக்க நினைத்து இருக்குமவனாய் அர்த்திகளுக்கு கொடுக்கும்
கொடையில் ஒன்றும் மாறாமல் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவன் -என்று தன் வேறுபாடு தோற்ற வீற்று இருந்த
மஹா பலி பக்கல் கொடுக்கக் கொடுக்க பூரிக்கிற அழகிய திருக் கையாலே தான் அர்த்தியாய் சென்று
நீரை ஏற்று மண் கொண்டவனைக் கண்டு அனுபவிக்கை சால எளிதாய் இருக்கும்

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: