முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -31-40– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அனுசந்தித்தால் -வேறே ஒன்றை ஒரு சற்றுப் போது அனுசந்திக்கலாமோ -என்கிறார் –
இவ்விஷயத்தை ஒரு க்ஷண காலமும் விட்டு இருக்கை சாஹாசிகம்-என்கிறார் –

ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு உண்டான பாரதந்தர்ய வாத்சல்யங்களை அனுசந்தித்தால்
வேறே ஒரு விஷயத்தை க்ஷண காலமும் நினைக்கப் போமோ -என்கிறார் –

புரியொருகை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரியுருவும் ஆளுறுவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை –31-

பதவுரை

ஒரு கை புரி பற்றி–ஒரு திருக் கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி
(மற்றொரு திருக் கையிலே)
ஓர் பொன் ஆழி ஏந்தி–ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி
ஆள் உருவம் அரி உருவம்–நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு
எரி உருவம் வண்ணத்தான்—அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக்காண முடியாத] வடிவத்தை யுடையனான இரணியனுடைய
மார்பு–மார்பை
இடந்த–நகத்தால் குத்திப் பிளந்து போட்ட
மால்–திருமாலினுடைய
அடியை அல்லால்–திருவடிகளைத் தவிர
மற்று–வேறொரு விஷயத்தை
இமை–க்ஷண காலமேனும்
எண்ணத்தான் ஆமோ–நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]

புரியொருகை பற்றியோர் பொன்னாழி ஏந்தி–வலம் புரியில் -வலம் -என்கிற இடத்தைக் குறைத்துக் கிடக்கிறது
அரியுருவும் ஆளுறுவுமாகி–ஆயுதங்களை ஒழியவும் இரண்டு வடிவாலும் சாகேன் என்று வேண்டிக் கொண்ட படியால்
நரத்வ சிம்ஹத்வங்களை ஒரு வடிவாகக் கொண்டவன்
எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த–அநபிபவ நீயனான ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்த
மாலடியை யல்லால் மற்று-எண்ணத்தான் ஆமோ இமை ——-இமை கொட்டி விழிக்கும் போது வேறு ஒன்றை எண்ணல் ஆமோ
அன்றிக்கே -நெஞ்சை -அத்யாஹரித்து-வேறு ஒன்றை எண்ணப் போமோ –இமை -பார் என்றுமாம் –
புரி இத்யாதி -ஹிரண்யன் மேலே விழுகிறவனை விலக்கினால் போலே /
பொன்னாழி ஏந்தி –ஹிரண்யன் திரு உகிருக்கு இரையாய்ப் போனான் –திரு வாழி அழகுக்கு பிடித்த அத்தனை –
அரி-இத்யாதி -விசாரியா நிற்கப் பற்றாமே இரண்டு வடிவையும் கொண்டு தோற்றின படி -/
எரி யுருவ வண்ணத்தான் -அணுக ஒண்ணாத படி அநபிபவ நீயனாய் இருந்த படி /
மால் -கார்யப் பாட்டால் அன்றியே பிள்ளை பக்கல் வியாமோஹத்தால் கீண்டான் –இமை -பார் என்னவுமாம் –

—————————————————–

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஒரு திருக் கையாலே தரித்து மற்றைத் திருக் கையாலே அத்விதீயமாய் ஸ்ப்ருஹணீயமான
திரு வாழியைப் பரிந்து -இவற்றுக்கு விஷயம் இல்லாத படி -நரத்வ ஸிமஹத்வங்கள் இரண்டுக்கும் ஆஸ்ரயமான
வடிவை யுடையனாய்க் கொண்டு -அக்னியினுடைய வடிவு போலே ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத
வடிவை யுடையனான ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்து பொகட்ட ஆஹ்லாதத்தாலே ப்ரஹ்லாதன் பக்கல்
வியாமுக்தன் ஆனவனுடைய திருவடிகளையே ஒழிய ஒரு க்ஷண காலமும் வேறு விஷயத்தை நினைக்கத் தான் போமோ
அன்றிக்கே -நெஞ்சை அத்யாஹரித்து வேறு ஒன்றை எண்ணப் போமோ -இத்தை அனுசந்தித்துப் பார் –

——————————————————————————————

அவன் மேல் விழ விலக்காதார்க்கு-இந்திரிய ஜெயம் பண்ண சக்தர் அன்று ஆகிலும் கிட்டலாம் -என்கிறார் —
சர்வேஸ்வரனுடைய பரம பதம் -ஆஸ்ரயியா தார்க்குக் கிடைக்குமோ -ஆஸ்ரயித்தார் பேர விரகுண்டோ-
ருசி மாத்திரம் உடையார் அவனால் பெரும் அத்தனை என்றும் -அவன் அல்லது இல்லை என்றும் -அருளிச் செய்கிறார் –

சாஸ்திரங்களில் சொல்லுகிற சாதன அனுஷ்டானங்களில் அந்வயம் இல்லையே யாகிலும்-
சேஷ சேஷித்வ ரூபமான உறவை அறிந்தவர்களுக்கும்-பரம பதத்தை ப்ராப்பிக்கலாகும் கிடீர் -என்கிறார் –

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர்-32–

பதவுரை

இமையாத கண்ணால்–[ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்] உட்கண்ணாலே
இருள் அகல–[அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும்படியாக
நோக்கி–(தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு
அமையா–த்ருப்தி பெற்று அடங்கியிராத
பொறி புலன்கள் ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்ச விஷயங்களையும்
நமையாமல்–அடக்காமலே
ஆகத்து அணைப்பார்–(மாதர்களின்) தேஹத்தை அணைத்துக் கொண்டு கண்டபடி திரிபவர்கள்
ஆயிரம் வாய் நாகத்து அணையான்–ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
நகர்–நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை
அணைவரே–கிட்டப்பெறுவர்களோ?.

இமையாத கண்ணால்–ஞான சங்கோசம் அற்ற உட் கண்ணாகிய நெஞ்சால்
அமையா -அடக்க ஒண்ணாத –/ நகர் -நகரம் ஆகிய ஸ்ரீ வைகுண்டத்தை –

இமையாத கண்ணால்–கண் என்றும் -உட் கண் என்றும் -சொல்லக் கடவது –
அதில் உட் கண்ணாலே -மனஸா து விஸூத்தேன-என்னும் படி –
இருள் அகல நோக்கி–அஞ்ஞான அந்தகாரம் போம்படியாக நோக்கி –
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -அமைக்கப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் –
நமையாமல்-ஐயயியாது இருக்கச் செய்தே
ஆகத் தணைப்பார் -அவன் மேல் விழ -விலக்காதவர்கள் அனைவரும்
அணைவரே ஆயிர வாய்-நாகத் தணையான் நகர் ——என்கிற இத்தால் ஒருவனே எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்
என்கிற இடமும் -ஒரு தேச விசேஷம் உண்டு என்னும் இடமும் -அத்தேசமே ப்ராப்யம் என்னும் இடமும் சொல்லுகிறது
இமையாத கண் -நெஞ்சு என்னும் உட் கண் -திரு வாசலை நீக்கி அவனையும் தன்னையும் உள்ளபடி அறிகை –
அமையா -திரிய விடுவிக்க ஒண்ணாத பொறி ஐந்தும் புலன் ஐந்தும் -/ நமையாமல் -நியமியாமல்
ஆகத்து அணைப்பார் -மூலையடி என்னுதல் -அவன் மேல் விழா நின்றால் இறாயாமல் என்னுதல் –
நாகத்தணை-பரியங்க வித்யை –

——————————————————————————-

ஞான சங்கோச ரஹிதமான நெஞ்சு என்னும் உட் கண்ணாலே அஞ்ஞானம் ஆகிற வல்லிருள் விட்டு நீங்கும் படியாக
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை உள்ளபடி தரிசித்து பெற்ற விஷயங்களால் பர்யாப்தி பிறக்கக் கடவது அன்றிக்கே
இருக்கற யந்த்ர கல்பமான ஸ்ரோத்ராதிகள் ஐந்தையும் -தத் விஷயமான சப்தாதிகள் ஐந்தையும் நியமியாமல்
சம்பந்த ஞான மாத்ர யுக்தராய்க் கொண்டு ஹ்ருதயத்தில் அவனை வைத்து அநுஸந்திக்கும் அவர்கள்
அவனைப் புகழுகைக்கு ஆயிரம் வாயை யுடைய திரு வனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய
சர்வேஸ்வரனுடைய கலங்காப் பெரு நகரைச் சென்று கிட்டப் பெறுவர் –
அந்த சாதன அனுஷ்டானம் பண்ணாதார்க்கு பரமபதத்தை பிராபிக்கப் போமோ -என்றுமாம் –
அமையாய் பொறி புலன்கள் என்று நியமிக்க அரிதான விஷய இந்திரியங்கள் என்றுமாம் –

—————————————————————————————————

சர்வேஸ்வரனை நெஞ்சால் ஆதரியாதே பண்ணுகிற கர்த்தவ்ய தந்த்ரத்தால் எண்ண பிரயோஜனம் உண்டு -என்கிறார் –

எம்பெருமானை உள்ளீடாகக் கொள்ளாதே பண்ணும் சந்த்யா வந்தநாதி கர்மாநுஷ்டானம் நிஷ் பிரயோஜனம் -என்கிறார் –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் –33–

பதவுரை

பூ மேல்–திருநாபிக் கமலத்திலே
நான்முகற்கு–பிரமனுக்கு
நகரம் அருள் புரிந்து–இருப்பிடத்தை ஏற்படுத்தி யருளியும்
பகர–(யோக்யர்களெல்லாரும்) ஓதும்படியாக
மறை–வேதத்தை
பயந்த–உபகரித்தும் வைத்த
பண்பன்–குணசாலியான எம் பெருமானுடைய
பெயரினை–திருநாமங்களை
பிந்தியால்–மனத்தினால்
சிந்தியாது–எண்ணாமல்
ஓதி உரு எண்ணும்–ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால்
அங்கு ஆம் பயன் என்–உண்டாகப்போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.)

நகர மருள் புரிந்து—வாசஸ் ஸ்தானத்தை கொடுத்து அருளி
பகர -பிறருக்கு ஓதுவிக்கும் படி
அந்தியால் -சந்தியா வந்தனத்தால் –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்-பகர மறை பயந்த பண்பன்–பிறருக்கு ஓதுவிக்கும் படி ப்ரஹ்மாவை ஓதுவித்த
நீர்மையை யுடையவனுடைய -செல்வப் பிள்ளையைத் தேவைக்கு ஓதுவிக்குமா போலே –
பெயரினையே-புந்தியால் சிந்தியாது –அவனுடைய திரு நாமங்களையே நெஞ்சால் நினையாது
தோதி யுரு வெண்ணும்-அந்தியா லாம் பயன் அங்கு என் —-அல்லாதவற்றை ஓதிச் சென்று அவ்வுருவை எண்ணும்
சத்யாவந்த நாதிகளால் என்ன பிரயோஜனம் உண்டு -எம்பெருமானுக்கு உடல் அல்லாத கேவல ஸந்த்யை வ்யர்த்தம் –

நகரம் -இத்யாதி -திரு நாபீ கமலத்தை நகரமாக பிரசாதித்தான் -ப்ரஹ்மாவுக்கு ஜென்ம தேசத்தையே கொடுத்தான்
அந்தரங்கர்க்கு கிட்ட மாளிகை சமைக்குமா போலே
பகர இத்யாதி –அந்த வேண்டப்பாட்டுக்கு மேலே நாட்டாரை ஓதுவிக்கைக்கு வேதத்தை கொடுத்தான் -/
பண்பன் -அந்நீர்மை மறக்க ஒண்ணாமை /பெயர் இத்யாதி -ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே /
ஆம் பயன் எங்கென்–எம்பெருமானை அகலுகையே பலித்து விடுவது —
பெயரினையே -அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமம் /
ஓதி இத்யாதி – அஹ்ருதயமாகப் பண்ணும் ஆயாச ரூபமான கர்மத்தைப் பற்றுவதே –

—————————————————–

அந்தரங்கர்க்கு கிட்ட மாளிகை கட்டுமா போலே ஜென்ம பூமியான திரு நாபீ கமலத்தில் சதுர்முகனுக்கு இருப்பிடத்தை
கிருபா புரஸ்சரமாக பண்ணிக் கொடுத்து இவ்வருகு உள்ளார்க்கும் ஓதுவிக்கத் தக்கதாக தத்வ ஞாபனமான
வேதத்தை அபகரித்த ஸுசீல்யாதி குணங்களை உடையவனானவனுடைய அந்த குணங்களுக்கு வாசகமான
திரு நாமங்களை மனசால் அனுசந்தித்து வாங்மாத்திரத்தாலே ஜபித்து -இடக்கை பற்றி கொண்டு அனுஷ்டிக்கிற
சந்த்யா வந்தநாதி கர்ம அனுஷ்டானங்களால் அவ்விடத்தில் யுண்டான பிரயோஜனம் ஏது-

———————————————————————————————–

பிரளயத்தில் லோகத்தை எல்லாம் தன் திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலிலையிலே தனியே
கண் வளரா நின்ற ஈஸ்வரனுக்கு அஞ்சுகிற யசோதை பிராட்டியுடைய ஸ்நேஹம் ஓர் ஸ்நேஹமே -என்கிறார் –
சோபாதிகமாக அன்றியே ஸ்வ பாவத ஏவ ஸ்நேஹிக்கும் அவளை நினைக்கிறார் –

இவ்விஷயத்தில் தலையான பக்தியை யுடையாளாய்க் கொண்டு அவனை
அனுசந்திக்கப் பெற்றவள் யசோதைப் பிராட்டி ஒருத்தியுமே யன்றோ என்கிறாள் –

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே –34–

பதவுரை

முன்–முற்காலத்தில்
ஏழ் உலகு உண்டு–ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து
ஆல் இலையில்–ஓர் ஆலந்தளிரிலே
ஒருவன் ஆய–துணையற்றவனாய்க் கண் வளர்ந்தருளின
முகில்வண்ணா–காளமேகத் திருவுருவனான பெருமானே!
நின் உருகி–உன்விஷயத்தில் உருக்கம் கொண்டவள் போல மேலுக்குக் காட்டி
முலை தந்தாள்–முலை கொடுத்தவளான
பேய் தாய்–பேய்த் தாயாகிய பூதனை யானவள்.
பேர்ந்திலள்–அவ்விடத்தில் றின்றும் பேர மாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;
பேர் அமர் கண்–பெரிய அந்த யுத்த பூமியில்
ஆய் தாய்–இடைத் தாயாகிய யசோதை யானவள்
முலை தந்த ஆறு–முலை கொடுத்த விதத்தை
ஒருவர்–ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸ பராஸராதி ரிஷிகள்
மெய் என்பர்–மெய்யென்று சொல்லா நிற்பர்கள்;
என்–இது என்ன ஆச்சரியம்?

என்னொருவர் மெய்யென்பர் -இத்தை ஒருவர் மெய் என்னும் படி எங்கனே என்னவுமாம் -என் என்று -எத்திறம்
என்னும்படியே சொல்லவுமாம் –ஒருவர் மெய்யென்பர்- அறிந்த ருஷிகளிலே சிலர் அர்த்த வாத சங்கை இல்லை இது மெய் -என்பர் –
ஏழு உலகு உண்டு ஆலிலையில்–எழு உலகத்தையும் திரு வயிற்றிலே வைத்து ஆலிலையிலே
முன்னோருவனாய முகில் வண்ணா–முன்பு தனியேயாய் ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே –

பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் –பேயான தாய் முலையைத் தந்து திருமேனியினின்றும் பேராதே கிடைக்கச் செய்தே
நின்னுருகிப் பேரமர்க்கண்-ஆய்த்தாய் முலை தந்தவாறே —-உனக்கு நல்லவளாய் -யசோதை பிராட்டி
விஷத்துக்கு அம்ருதமாக முலை தந்தவாறு இது என்ன ஆச்சர்யம் –
என் -எத்திறம் / ஒருவர் மெய் என்பர் -விலக்ஷணர் மெய் என்பர் –இத்தை ஒருவர் மெய் என்பதே
என் என்ற போதே ஜகத்தில் நடையாடுவதொரு ஸ்நேஹம் ஆகில் அன்றோ மெய் என்னாலாவது –

ஏழு-இத்யாதி -நீ செய்யும் செயலுக்கு அடைவு யுண்டாகில் இறே உன்னை ஆஸ்ரயித்தார் செயலுக்கு அடைவு யுண்டாவது –
ஒருவனாய் -பரிஹரிக்கத் தாயும் தமப்பனும் ஒருவரும் இல்லை -/ முகில் வண்ணா -பரிவர் வேண்டி இருக்கிறபடி
நின்னுருகி -உன் குணங்களுக்கு உருகி / பேர்த்து இலளால் –அப்பிணம் கிடைக்கச் செய்தே–
அப்பேயின் கையிலே அகப்பட்ட தடையப் படுத்திக் கால் நடை தந்து -நஞ்சுக்கு பரிஹாரமாக அம்ருதமான முலையைக் கொடுத்த படி –

—————————————————————–

பிரளயத்தில் அழியாதபடி சப்த லோகங்களையும் அமுது செய்து முகிழ் விரியாததோர் ஆலந்தளிரிலே
ஒரு பரிவரும் இல்லாத பிரளய சமயத்திலே அஸஹாயனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளின
காள மேக நிபாஸ்யமான வடிவை யுடையவனே -அற்றை இழவு தீர உனக்கு ஸ்நேஹித்து பரிவுடனே
முலை தந்து உகப்பித்தாளாய் இருந்து பேய்த்தாயான பூதனையானவள் அவ்விடத்தின் நின்றும்
பேர மாட்டாமல் பிணமாய் விழுந்தாள்-அத்தை பெரிய சார பூமியிலே இடைத்தாயான யசோதை பிராட்டி
அஞ்சாமல் அந்த விஷத்துக்கு அம்ருதமான முலை தந்த பிரகாரத்தை –
அறிவுக்கு அத்விதீயரான வியாச பராசராதிகள் ஆன ரிஷிகள் பரமார்த்தம் என்று சொல்லா நிற்பார்கள் -எங்கனே
நாட்டில் கண்டு அறிவதொரு ஸ்நேஹம் ஆகில் அன்றோ மெய் என்னாலாவது -அகடிதகடிநா சமர்த்தனானவனுக்கு அஞ்சுகிற
யசோதை பிராட்டி ஸ்நேஹமும் ஒரு ஸ்நேஹமே -என்று வித்தாராகிறார் –

————————————————————————————-

யசோதை பிராட்டியோபாதி ஸ்நேஹம் இன்றிக்கே -அவளுடைய ஸ்நேஹத்தை யுடைத்தாக
பாவிக்கிறவர்களுடைய குற்றத்தைப் பொறுத்து அருள வேணும் -என்கிறார் –

இவளுடைய ஸ்நேஹத்தைக் கண்டவாறே அல்லாத தம் போல்வார் ஸ்நேஹம் பிராதி கூல்ய சமமாய் தோற்றி
அத்தைப் பொறுத்து அருள வேணும் என்று அவனை க்ஷமை கொள்கிறார் –

ஆறிய வன்பில் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி யடைதற் கன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் -35–

ஆறிய அன்பு இல்–நிரம்பின பக்தியில்லாதவர்களாய்
அடியார்–சேஷத்வ ஜ்ஞாந மாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால்–தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய–சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ–குற்றமாக
நீ கொள்ளல்–நீ கொள்ளாதே;
(அது ஏனெனில்)
ஈர் ஐந்து முடியான்–பத்துத் தலைகளை யுடையனான ராவணன்.
படைத்த–புத்தி பூர்வகமாகப் பண்ணின
முரண்–தப்புக் காரியமானது
நெடியோய்–பெருமை பொருந்திய உன்னுடைய
அடி–திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே–தெளிந்துவந்து (காலக்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?

ஆறிய வன்பில் அடியார் –ஏறி மறிந்த பக்தி இல்லாதவர்கள் –
தம் ஆர்வத்தால்-கூறிய –தங்களுடைய ஸ்நேஹத்தால் சொன்னவற்றை
குற்றமாகக் கொள்ளல் நீ –நீ குற்றமாகக் கொண்டு அருளாது ஒழிய வேணும் -நீர் குற்றத்தைச் செய்து வைத்து
குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்னப் போமோ என்னில் –
ஈரைந்து-முடியான்—படைத்த முரண் –தேறி—— நெடியோய் அடி யடைதற் கன்றே –
ராவணன் பண்ணின பிராதி கூல்யம் க்ரமத்தில் சிசுபாலனுக்கு உன்னை அடைகைக்கு உடல் ஆயிற்று இல்லையோ
பிராதி கூல்யம் –ஆனுகூல்யமாகப் பலித்தால் -ஆனுகூல்ய ஆபாசம் ஆனுகூல்யமாகத் தட்டுண்டோ

தேறி -என்றது செய்த குற்றத்தை குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் -என்றுமாம் –
அன்றிக்கே -தேறி என்றது சிசுபாலன் கையும் திரு வாழியுமாய் இருந்தபடி என் என்று நினைத்துக் கிடக்க
அந்த அந்திம ஸ்ம்ருதி ஆனால் போலேயாகவுமாம் –
ஆறியவன்பு–ஏறி மருந்து தன்னைப் பேணாதே அத்தலைக்குப் பரிகை -யசோதை பிராட்டி பரிவு தம்முடைய
பிராதி கூல்யத்தோடு ஒக்கும் என்கை -அவனுடைய பிராதி கூல்யம் தேறி அடைகைக்கு உடல் ஆயிற்று இல்லையோ
செய்த குற்றம் நற்றமாகவே கொள்–பொறுக்கவே அடைய நன்றாம் என்று இருக்கிறார் –
நெடியோய் -ஆனுகூல்ய லேசமுடையார் திறத்து நீ இருக்கும் இருப்பு எல்லை காணப் போமோ —

———————————–

உனக்கு என் புகுகிறதோ -என்று பாரித்து வயிறு எரியும் படி -ஏறி மறிந்த பக்தி இன்றிக்கே -சேஷத்வ ஞான ஏக மாத்ர யுக்தராய்
இருக்குமவர்கள் தம் தம்முடைய ஸ்நேஹத்தாலே அனுபவிக்க வேணும் -அடிமை செய்ய வேணும் -என்றால் போலே
ஸ்வ பிரயோஜன கர்ப்பகமாக சொன்ன வார்த்தைகளை குற்றமாகக் கொள்ளும் அதிமாத்ர வத்சலனான நீ
குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் -இது எங்கனம் கூடும் படி -என்று திரு உள்ளம் ஆகில் பிராதி கூல்யனான
ராவணன் புத்தி பூர்வகமாக பண்ணின திருவினைப் பிரித்த மிகைச் செயலானது -ஆனுகூல்ய லேச யுக்தர் திறத்தில்
ஸ்நேஹ பக் ஷபாதங்களுக்கு எல்லை காண ஒண்ணாத பெருமையுடைய உன் திருவடிகளை
கால க்ரமத்திலே தெளிந்து சிசுபாலனாய்க் கிட்டுக்கைக்கு உடலாய் விட்டதில்லையோ –
அன்றிக்கே –
நீ தேறி ப்ரசன்னனாய் செய்த குற்றத்தை குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் -என்னவுமாம்
பிராதி கூல்யம் ஆனுகூல்யமாகப் பலித்தால் ஆனுகூல்ய ஆபாசம் ஆனுகூல்யமாகத் தட்டுண்டோ -என்றபடி –

———————————————————————————————

யசோதைப் பிராட்டி ஸ்நேஹம் இன்றியிலே இருக்கச் செய்தே-அவளுடைய ஸ்நேஹம் யுண்டாக பாவித்துச் சொன்னவற்றைக்
குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்று நீர் இரக்க வேணுமோ -தன்னுடைமையை வேறு ஒருத்தனதாக்கி வந்து இரக்குமவனுக்கு–

இப்படி கூறிய குற்றமாகக் கொள்ளல் என்று பொறை கொள்ள வேண்டாத படி -நீ தானே உன்னை அழிய மாறி
வந்து காரியம் செய்தது -ஸம்ஸாரிகளின் கோணையைப் போக்கி உனக்கு ஆக்கிக் கொள்ளலாம் என்று பார்த்தே -என்கிறார் –

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

பதவுரை

முன்னம்–முற்காலத்தில்
தரணி தனது ஆக தானே–பூமியெல்லாம் தன்னுடையதென்று அஹங்காரங்கொண்டிருந்த
இரணியனை–ஹிரண்யாஸுரனை
புண் நிரந்த–புண்படுத்திப் பிளந்த
வள் உகிர் ஆர்–கூர்மையான நகங்கள் பொருந்திய
பொன் ஆழி கையால்–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையினால்
நீ–நீ
மண் இரந்து கொண்ட வகை–(மாவலியிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே–(ஸம்ஸாரிகளின்) முரட்டுத்தனத்தின் மிடுக்கைத் தொலைக்கலாமென்றல்லவோ?.

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்-தரணி தனதாகத் தானே இரணியனைப்-புண்ணிரந்த வள்ளுகிரால்
பொன்னாழிக் கையால் –முன்பே பூமி அடைய தன்னதாக அபிமானித்து இருந்த ஹிரண்யனைப் புண் படுத்தி பிளந்த வுகிரை
யுடைத்தாய் இருந்துள்ள பொன்னாழிக் கையால் –
நீ–பிரகாரம் -முரணை வலி தொலைதற்காம் என்றே—சர்வேஸ்வரனாய் இருந்துள்ள தம்முடைய அர்த்தித்தவம் தோற்ற நின்ற
ஸுலப்யத்தைக் காண -நாட்டாருடைய அஹங்கார மமகாரத்தாலே பிறந்த தண்மை நெகிழும் என்றே நீ இப்படிச் செய்தது –
முன்னம்-தரணி தனதாகத் தானே –முன்னே பூமி அடங்களலும் தன்னதாக அபிமானித்த மஹா பலி பக்கலிலே என்றுமாம்
முரணை -இத்யாதி -யசோதை பிராட்டியைப் போலே எங்களை உருக்கலாம் என்றே –
முன்னம் இத்யாதி -தன்னதாக உகக்குமாகில் நாம் இன்று பெற்றோமாக அமையாதோ -என்று இரந்து கொண்ட வலை –

————————————

முன்பே உன்னதமான பூமியைத் தன்னதாகத் தானே அபிமானித்திருந்த ஹிரண்யனைப் புண் படுத்திப் பிளந்த
கூரிய திரு வுகிரோடு கூடி இருப்பதாய் ஸ்ப்ருஹணீயமான திரு வாழி யை யுடைத்தான திருக் கையாலே
ஸ்ரீ யபதியான நீ பூமியை ஆர்த்தித்து அளந்து கொண்ட பிரகாரம் -ந நமேயம் -என்கிறபடியே
தலை வணக்கற்றுத் திரியும் சம்சாரிகள் கோணை மிறுக்கு அறுக்கலாம் என்றே -இரப்புத் தோற்ற நின்ற
ஸுலப்யத்தையும் வடிவு அழகையும் காட்டி நான் எனக்கு என்று இருக்கும் மிறுகுதலை மீட்டு
உனக்கே ஆளாம் படி சேர்த்துக் கொள்ளுகைக்காக வன்றோ என்றபடி

——————————————————————————————————

நாம் அந்த அவதாரத்துக்கு பிற்பட்டோம் இறே -அது தீர்த்தம் பிரசாதித்துப் போயிற்றே -என்ன அவன் தானே
சம்சாரத்திலே திருமலையை உகந்து வந்து நிற்கவும் அதுக்கு வெறுக்க வேணுமோ -என்கிறது –

அங்கனம் தன் அர்த்தித்தவம் தோற்ற வந்து என்னளவு அன்றிக்கே என்றும் தன்னை அர்த்தியாக்கிக் கொண்டு
சர்வர்க்கும் சர்வ காலத்திலும் ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து நித்ய சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் –37—

பதவுரை

வகை அறு–அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட்புகுந்து இன்ன வகை இன்ன வகை என்று அறுதியிடுவதற்குறுப்பான
நுண் கேள்வி வாய்வார்கள்–ஸூக்ஷ்மார்த்த ச்ரவண முடையவர்களான
வேதியர்கள்–வைதிகர்கள்
நாளும்–நித்தியமும்
புகை விளக்கும்–தூப தீபங்களையும்
பூ புனலும்–புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி–தரித்துக் கொண்டு
திசை திசையின்–பல திக்குக்களில் நின்றும்
சென்று–வந்து சேர்ந்து
இறைஞ்சும்–வணங்குமிடமான
வேங்கடம்–திருவேங்கடமலையானது,
வெண்சங்கம் ஊதிய வாய் மால்–வெளுத்த சங்கைத் திருப்பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கப் பெற்ற
ஊர்–திவ்யதேசமாம்.

வகையறு –பஹு சாகா ஹ்ய நன்தாஸ் ச -ஸ்ரீ கீதை -2-41-என்னும் படி பிரயோஜனாந்த பரமான
தேவதாந்த்ர ஸ்பர்சியான வகை யறுகை
நுண் கேள்வி வாய்வார்கள் -ஸ்தூலமாக வன்றிக்கே ஸ்ரவண வேளையிலே ஸூஷ்மமான கேள்வி வாய்த்தவர்களான
நாளும்-புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே–வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள் புஷ்பாதி உபகாரணங்களைக் கொண்டு
சர்வோ திக்கமாக வந்து தொழப் படும் திருமலை – வெண் சங்கம்-ஊதிய வாய் மால் உகந்த ஊர் –

பாரத சமரத்திலே அர்ஜுனன் தொடுத்து விட்ட அம்புகளுக்கு எதிரிகள் எட்டும் அளவன்றியே ஒழிந்தால் ஒருவராலும்
இறாய்க்கப் போகாத படி நின்ற நிலையிலே முழுக் காயாக அவியும்படிக்கு ஈடாக ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
வாயிலே வைத்து ஊதின கிருஷ்ணன் ஊதின வூர்
வகை யறும்–முழுகுவாரைக் கண்டவாறே முழுகி -ஜெபிப்பாராய்க் கண்டவாறே ஜபியா –
நுண் கேள்வி –ஸூஷ்மார்த்தம் கேட்டுக் கை புகுந்தார் –சஞ்சலம் ஹி மன கிருஷ்ண —
திசை திசையில் -சர்வதோ திக்கமாக / வேதியர்கள் -வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள் –
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–ஆஸ்ரித பக்ஷபாதி வர்த்திக்கிற வூர் —

———————————————————————

ஆயுஸ் புத்ர க்ருஹ க்ஷேத்ர வித்த பசவன்னா ஸ்வர்க்காதி ரூபேண பலவகைப் பட்டு இருக்கிற ஷூத்ர புருஷார்த்தங்களையும்
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தையும் அலகு அலகாக வகை அறுக்கைக்கு உறுப்பாக
ஸூஷ்மார்த்த விஷயமான ஸ்ரவணம் வாய்த்து இருக்கும் வேத தாத்பர்ய வித்துக்கள் அடங்கலும்
சர்வ காலமும் ஆராதன உபகரணமான தூப தீபங்களையும் பூவோடு கூடின ஜலத்தையும் தரித்துக் கொண்டு
பெரிய திரு நாளுக்குப் போமா போலே சர்வோ திக்கமாக எடுத்து விட்டுச் சென்று ஆஸ்ரயிக்கும் திருமலையே
பாரத சமரத்திலே பிரதிபக்ஷம் நசிக்கும் படியே வெளுத்த நிறத்தை யுடை
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்தமான தேசம் என்று உகப்புடனே வர்த்திக்கிற வூர் –

————————————————————————————————————-

பரமபதத்தில் உள்ளார் அடைய உத்தேசியரானவோபாதி திருமலையில் வர்த்திக்கும்
சர்ப்பம் – குறவர் – பட்டி தின்னும் யானை அடைய
இவர்க்கு உத்தேசியமாய் இருக்கிறபடி -எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –
அங்கே புக்காலோ என்னில் -உள்ளுப் புக ஒட்டா நின்றதோ-

இப்படி அவன் திருமலையிலே உகந்து நித்ய வாசம் பண்ணுகையாலே -இவரும் தத் சம்பந்தத்தால் -அங்குண்டான
சர்ப்பம்- குறவர்- ஆனை-அத்தை எறிகைக்கு கருவியான மணி -புற்று -முதலான பதார்த்தங்களை எல்லாம்
அவனோபாத்தி பிராப்யமாக நினைத்து மண்டி அனுபவிக்கிறார் –

ஊரும் வரியரவ மொண்  குறவர் மால் யானை
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் -38-

பதவுரை

ஊரும்–திரிகின்ற
வரி அரவம்–(உடம்பில்) கோடுகளை யுடைய ஸர்ப்பமானது,
ஒண் குறவர்–அழகிய குறவர்கள்
மால் யானை பேர–(பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக
எறிந்த–(அவ் யானைகளின் மேல்) வீசி யெறிந்த
பெரு மணியை–பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)
கார் உடைய மின் என்று–மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
புற்று அடையும் வேங்கடம்–புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,
மேல சுரர்–மேற்பட்டவர்களான நித்ய ஸூரிகள்
எம் என்னும் மாலது–‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும் படியாக வுள்ள எம்பெருமானது
இடம்–திவ்ய தேசமாம்.

ஊரும் வரியரவம்-ஒரு காரியப்பாடு அறத் திருமலையிலே ஊர்ந்து திரிகையே உத்தேசியமாய் இருந்தபடி-
பாம்பினுடைய உடம்பில் வரி திருவேங்கடமுடையானுடைய திருமேனியில் ஒரு அவயவத்தோபாதி உத்தேசியமாய் இருக்கிற படி –
மொண்  குறவர் –திரு வேடுவர்க்கு ஓண்மை யாவது -இவர்கள் பாட்டன் பாட்டனில் ஒருத்தன் பூமியிலே இறங்கினான் என்னும் பழி இன்றிக்கே இருக்கை –
மால் யானை-  –மலை போல் இருந்துள்ள யானை தன்னை -ஒரு மலை சலித்தால் போலே இருக்கப் போம் படிக்கு ஈடாக
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய-மின்னென்று புற்றடையும் வேங்கடமே –மஹார்க்கமான மணியை
ஆனை மேகம் போலே இருக்கையாலும் -அதிலே பட்ட மணி மின் போலே இருக்கையாலும்
பாம்பானது இடிக்கு அஞ்சுகையாலே மின்னின அநந்தரம் இடி உண்டாகும் என்று கொண்டு அதுக்கு முன்னே புற்று அடையா நிற்கும் திருமலை –
மேலசுரர்–எம்மென்னு மால திடம் ——ஆக்கரான தேவர்கள் அன்றியே -மேலான சுரர் -நித்ய ஸூரிகள் -அஹமஹமிகயா விரும்பும் இடம் –
ஊரும்–ப்ராதரி கச்சதி போலே / வரி –அதுவும் ஸ்ப்ருஹணீயம் / மால் யானை -மலை நடந்தால் போலே
பேர -ஆமிஷ் யர்த்தமாக வந்து மலை பேர்ந்தால் போலே பேர / பெரு மணியை -மலை போலே இருக்கை
ஊரும் வரி அரவம் –இவை ஸ்வ சஞ்சாரத்தால் ஸுபாக்யம் கொண்டாடப் புறப்பட்டு / புற்று அடையும் -இடிக்கு முன்னாக மின்னாகையாலே –

————————————————————

ஒரு காரியப்பாடு அற ஸ்வைர சஞ்சாரம் பண்ணா நிற்பதாய் -தர்ச நீயமான வரியை யுடைத்தான சர்ப்பமானது
திருமலையில் நின்றும் கீழ் இழியுமது குடிப் பழியாக நினைத்து இருக்கும் வி லக்ஷணரான குறவர் புனத்தில்
வந்து பட்டி மேய்கிற பர்வத உபமான ஆனையானது-மணிகளின் ஓளியைக் கண்டு சலித்து மலை பேர்ந்தால் போலே
பேர்ந்து போம்படியாக எறிந்த -ஒரு மலையிலே ஒரு மலை தாக்கினால் போலே இருக்கும் பெருமையை யுடைய மாணிக்கத்தை
யானையின் கறுப்பும் மணியின் புகரும் தன்னில் வாசி தோற்றுகையாலே மேகத்தோடே கூடினதொரு மின்னாகக் கருதி
தத் அனந்தர பாவியான இடிக்கு பயப்பட்டு நிர்ப்பய ஸ்தானமான புற்றிலே சென்று பிரவேசிக்கும் சிறப்பை யுடைய திருமலையே
ஆக்கரான தேவர்கள் அன்றியே -சர்வ உத்க்ருஷ்டரான நித்ய ஸூரிகள் எங்களது என்று மேல் விழுந்து அத்யபி நிவிஷ்டராய் அனுபவிக்கும் தேசம் —
என்னென்ற மாலதிடம் -என்று எங்களது எங்களது -என்று அபி நிவேசிக்கைக்கு விஷயமான ஸ்தானம் -என்றபடி –
என் -என்கிற இத்தை மாலோடே கூட்டி -எங்களுக்கு ப்ராப்யம் என்னப் பட்ட சர்வேஸ்வரதான இடம் -என்றுமாம்
முற்பட்ட யோஜனைக்கு மால் என்று அபி நிவேசத்தைச் சொல்லுகிறது –

——————————————————————————————————-

ஆபத்தில் பூமியை ரஷிப்பது-அவதாரங்கள் சாது பரித்ராணார்த்தம் -துஷ்க்ருத விநாஸார்த்தம் ஆவது
எப்போதும் உகந்து திருமலையிலே நிற்பது என்கிறார் –

மற்றுள்ள திவ்ய தேசங்களில் காட்டிலும் திருமலைக்கு இத்தனை ஏற்றம் என் என்ன –
அவை எல்லாம் ஒரு தட்டு -இது ஒரு தட்டு என்னும் படி அவன் விரும்பின தேசம் அன்றோ திருமலை என்கிறார் –

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது –39–

பதவுரை

பேர் ஓதம் வண்ணர்–பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான்
முன்–முற்காலத்தில்
இடந்தது–(மஹா வராஹமாகிக்) கோட்டார்குத்தி யெடுத்தது
பூமி–பூமியாம்;
எடுத்தது–குடையாக வெடுத்துப் பிடித்தது
குன்றம்–கோவர்த்தன மலையாம்
அஞ்ச கடந்தது–அஞ்சி முடிந்து போம்படி செய்தது
கஞ்சனை–கம்ஸனையாம்;
கிடந்ததுவும்–திருக் கண் வளர்ந்தருளினது
ஓதம் நீர் மாகடல்–பெரு வெள்ளமுடைய திருப்பாற்கடலிலாம்
பெரிது நின்றதும்–பெருமை யெல்லாம் தோற்ற நின்றது
வேங்கடம்–திருமலையிலாம்.

பெரிது நின்றதுவும் -எப்போதும் நின்று அருளி நித்ய வாசம் செய்து அருளியதும் –

இடந்தது பூமி –பிரளய ஆபத்தில் பூமியை எடுத்த அழகு காணலாவது –
எடுத்தது குன்றம்-கோவர்த்தன உத்தரணத்தில் அவ் வழகு காணலாவது –
கடநதது கஞ்சனை முன்னஞ்ச -கம்சன் அஞ்சும் படி அவனை அழித்த அன்று வெற்றி அழகு காணலாவது –
கிடந்ததுவும்-நீரோத மா கடலே-கண் வளர்ந்த அழகு காணலாவது ஆழ்ந்த கடலிலே சாய்ந்த போது
பேரோத வண்ணர் பெரிது —நின்றதுவும் வேங்கடமே—கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன்
எப்போதும் உகந்து நிற்பது திரு மலையிலே –
இடந்தது -பிரளயத்தில் வந்த நலிவு தீர / எடுத்தது -இந்திரனால் வந்த நலிவு தீர / கடந்தது -கம்சனால் வந்த நலிவு தீர –
கிடந்ததுவும் -அவதாரத்துக்கு ஏகாந்தமாம் –
நாம் பெருமாளை உகந்தோம் என்று சோற்றை உகப்புதோம்-சோற்றை உகந்தோம் என்று நாலும் பத்தும் பட்டினி விடுதோம்-
ஸ்திரீகளை உகந்தோம் என்று சதுரங்கம் பொருதல் உறங்குதல் செய்வுதோம்-ஒன்றிலும் ஸ்நேஹம் இல்லை —

——————————————————————–

பெரிய திரைக் கிளர்த்தியை யுடைய கடல் போன்ற வடிவை யுடையவர் -வராஹ வேஷம் கொண்டு பிரளயத்தில்
மூழ்கி இடந்து எடுத்துக் கொண்டு ஏறினது பூமி –
கிருஷ்ண வேஷம் கொண்டு வர்ஷாபத்தை பரிஹரிக்கைக்காக எடுத்து தரித்துக் கொண்டு நின்றது கோவர்த்தன பர்வதம் –
உறவில் அழைத்து நலிய நினைத்த முற்காலத்திலே கண்ட காட்சியிலே நடுங்கும் படியாக கம்சனை ஆக்ரமித்து முடித்து விட்டது –
இவ்வாதாரங்களுக்கு அடியாக மிக்க நீரை யுடைத்தாய் அலை எரிகிற பெரிய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்று
இங்கு அப்படி அன்று -ஸமஸ்த அவதாரங்களில் உள்ள தன் சேஷ்டிதங்கள் அடங்கலும் பிரகாசிக்கும் படி உகப்புடனே
என்றும் ஓக்க மிகவும் நின்று அருளிற்று திருமலையிலே கிடீர் –

——————————————————————————————————————

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று-40—

பதவுரை

பெரு வில்–பெரிய வில்லையும்
பகழி–அம்புகளை முடையரான
குறவர்–குறவர்களினுடைய
கை–கையிற்பிடித்திருந்த
செம் தீ–சிவந்த நெருப்புக்கு
வெருவி–பயப்பட்டு
புனம் துறந்த–கொல்லையை விட்டு நீங்கின
வேழம்–யானையானது,
இரு விசிம்பில்–பரந்த ஆகாசத்தில் நின்றும்
மீன் வீழ–நக்ஷத்திரம் விழ
கண்டு–அதனைப் பார்த்து (நாம் அப்பால் போக முடியாதபடி குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து)
அஞ்சும்–பயப்படுமிடமான
வேங்கடம்–திருவேங்கடமானது
மேல்–முன்பொருகால்
அசுரர் கோன் வீழ கண்டு–இரணியாசுரனை முடித்து
உகந்தான்–ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய
குன்று–திருமலையாம்

பகழி-அம்பு – / இரு விசும்பில்-பரந்த ஆகாசத்தில் / மீன் வீழ-நக்ஷத்ரம் விழ –

திருமலையை உகக்கிறார் –
ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணி உகக்கும் அதுவே கிடீர் அவன் இங்குத்தை
நித்ய வாசத்துக்கு பிரயோஜனமாக நினைத்து இருப்பது என்கிறார் –

பெருவில் பகழிக் –அவஷடப்ய மஹத் தனு-என்கிறபடியே சக்கரவர்த்தி திருமகன் கையும் வில்லும் போலே –
பெரிய வில்லையையும்-நெரிந்த பகழி யையும் -யுடையரான திரு வேடுவர் –
குறவர் கைச் செந்தீ-வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்-மீன் வீழக் கண்டஞ்சும் –குனிலே கொளுத்தி
கையிலே கொடு போகிற நெருப்பு ஒளியிலே வில்லின் பெருமையையும் கண்டு நெருப்பு தனக்கு ஆனை அஞ்சும் படியாகவும்
பட்டி மேய்ந்த ஆனை இப்புனம் கொய்தாலும் இங்கு வாரேன் என்று சந்யசித்துப் போனது –

இரு விசும்பு -இத்யாதி -வெளியையும் பரப்பையும் யுடைத்தான ஆகாசத்தில் நின்றும் மின் விழக் கண்டு இனி
ஓர் இடத்திலும் போக்கு இல்லை என்று நின்ற நிலையிலே நின்று அஞ்சுகிற திருவேங்கடம்-
வேங்கடமே மேலசுரர்-கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று —–பண்டு சிறுக்கனுடைய விரோதி போயிற்று என்று
உகந்து இன்னமும் ஆஸ்ரித விரோதி -ஏதேனும் வரிலும் பரிஹரிக்க வேணும் என்று அவன் பற்றி நிற்கும் திருமலை
பெரு வில் இத்யாதி -இதில் உத்தரார்த்தம் மீன் விழக் கண்டு அஞ்சும் நிலத்திலே நெருப்பை விழ விட்டார்கள் என்று
குறவர் எறிந்த கொள்ளிக்கு வெருவினதாகையாலே
வேங்கடம் –நிர்ப்பயமான தேசம் –அஸ்தானே பய சங்கை பண்ணும் அத்தனை –

———————————————————————-

அவஷடப்ய மஹத் தனு-என்கிறபடியே ஒரு கையிலே எடுத்துக் பிடித்த பெரிய வில்லையும் வாய் அம்புகளையும்
உடையரான திருக் குறவர் -மற்றைக் கையிலே வழியில் வெளிச் செறிப்புக்காக பிடித்த சிவந்த நிறத்தை
யுடைத்தான குந்நெருப்பின் ஒளி வழியே இவர்கள் கையும் வில்லும் பிடித்த சூழுமாயுமாகக் கொண்டு
ஆயத்தப் பட்டு வருகிற படியைக் கண்டு -நம்மை நலிய வருகிறார்கள் என்று பயப்பட்டு ஒருகாலும்
இங்கே வரக் கடவோம் அல்லோம் என்று புனத்தை சன்யசித்துப் போன ஆனையானது -போம் இடம் தன்னிலும்
பரப்பை யுடைத்தான ஆகாசத்தில் நின்றும் நக்ஷத்திரங்கள் விழ -அத்தைக் கண்டு நமக்கு அவ்வருகு ஓர் அடி இட ஒண்ணாத படி
பூமியில் நெருப்பை விழ விட்டார்கள் என்று அவ்வருகு போக மாட்டாமல் புனத்தில் புக மாட்டாமல்
நடுவே நின்று நடுங்கும் படியான திருமலையே
முன்பு ஒரு காலத்தில் அஸூர ராஜன் என்று விருதூதி திரிந்த ஹிரண்யன் பிணமாய் விழுந்து போகக் கண்டு
சிறுக்கன் விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த சர்வேஸ்வரன் -பின்புள்ள ஆஸ்ரித விரோதிகளை
தீர்க்க வேணும் என்று நித்ய வாசம் செய்து அருளும் திரு மலை —

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: