முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -21-30– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

இரண்டு பட்டாலும் சர்வேஸ்வரன் கிடீர் ஆஸ்ரித அர்த்தமாக இப்படி எளியனானான் என்று
சொல்லிற்றாய் ஈடுபடுகிறார் –

அவன் பெருமையைப் பார்த்து பிற்காலியாதே-ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவன் -என்று அறிந்து
அவன் திருவடிகளைக் கிட்டப் பாராய் -நெஞ்சே என்கிறார் –

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-

பதவுரை

சென்று நின்று–(மஹாபலியின் யாக பூமியிற்) போய் நின்று
அம் கை–(தனது) அழகிய திருக்கையினால்
நிலம் நீரேற்று–பூமி தானம் வாங்கி
மூ அடியால்–மூன்றடிகளாலே
திசை அளந்த–எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்ட
செம்கண்மாற்கு–செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு
என்றும்–எப்போதும்
ஆழி–சக்கரமானது
படை–ஆயுதமாயிருக்கும்;
புள்–கருடன்
ஊர்தி–வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
அறி–நான் சொல்வதை ஆராய்ந்து கொள்;
பாம்பு அணையான் பாதம் அடை–சேஷ சயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.

நின்று -சர்வேஸ்வரனானவன் அர்த்தித்தவம் தோற்றும் படிக்கு ஈடாக நின்று
நிலமங்கை நீரேற்று –நிலம் அங்கை நீர் ஏற்று -கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே பூமியை நீர் ஏற்று
மூவடியால்-சென்று திசை யளந்த செங்கண் மாற்கு –திக்குகள் தோறும் சென்று அளந்து
அத்தாலே அலாப்ய லாபம் பெற்றானாய் இருக்கிறவனுக்கு –
என்றும்-படையாழி புள்ளூர்தி பாம்பணையான்–எல்லாவற்றையும் உடையவன் கிடீர் இரந்தான்
கையிலே திருவாழியை பேராதே பிடிக்க வல்லவனும் -திருவடி முதுகில் நல் தரிக்க இருக்க வல்லவனும்
திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும் சர்வேஸ்வரன் ஆகிறான் –

பாதம்-அடையாழி நெஞ்சே அறி —–மஹா பலியைப் போலே ஆகாதே அவன் திருவடிகளை அடை –
யாழி நெஞ்சே அறி -அளவுடைய நெஞ்சே அறி–ஓலக்க வார்த்தை என்று இராதே இத்தை புத்தி பண்ணி இரு
நின்ற இத்யாதி -பிராட்டியை ஸ்ரீ ஜனகராஜன் நீர் வார்க்கப் பெற்றால் போலே சென்று நின்று என்னுதல் –
சென்று -நடந்தபடி சென்று அளந்து என்னுதல்
செங்கண் மால் -தம்தாமது பெற்றாலும் இனியராக வேணுமோ -என்றும் -பரிபூர்ணன் கிடீர்
பாதம் அடை யாழி நெஞ்சே-என்னை ஓதுவிக்க வல்ல நீ என் செல்லாமை அறி –
அல்லாத வார்த்தை போல் அல்ல -இத்தை புத்தி பண்ணு
சீரால் பிறந்து -அன்று அறுபதினாறாயிரம் தபஸ் ஸூ பண்ணினவன் வயிற்றிலே –
பிதரம் ரோசயாமாச-என்று ஆசைப்பட வந்து பிறக்கை
சிறப்பால் வளராது -வெண்ணெயும் பெண்களையும் களவு கண்டு மூலை படியே வளருகை
பேர் வாமனாகாக்கால் -நாராயணன் ஆனால் ஆகாதோ – பேராளா-ஐஸ்வர்யத்தில் இளைப்பாற வேணுமோ
மார்வு இத்யாதி -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமி –

———————————————————–

மஹாபலி யஜ்ஜ வாடத்து அளவும் நடந்து சென்று -அவன் முன்னே அபிமதம் பெற்று அன்றிப் போகேன் -என்று
மலையாளர் வளைப்பு போலே அர்த்தித்தவம் தோற்ற நின்று -எல்லாருக்கும் குறைவற கொடுத்துப் போந்த
அழகிய திருக் கையிலே பூமியை நீர் ஏற்று வாங்கிக் கொண்டு -ஓர் அடிக்கு அவனை சிறையிட்டு வைப்பதாக
மூன்று திருவடிகளாலே திக்குகளோடு கூடின சகல லோகங்களையும் அளந்து கொண்டவனாய்
அத்தாலே வந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனுமான சர்வாதிகனுக்கு
சர்வ காலத்திலும் ரக்ஷண பரிகரமான திவ்ய ஆயுதம் திரு வாழி -மேல் கொண்டு நடத்துகிற வாஹனம் பெரிய திருவடி
திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனாகை யாலே ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனுடைய
திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பார்-கம்பீர ஸ்வ பாவமான நெஞ்சே இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே
நன்றாக புத்தி பண்ணி இரு –

——————————————————————————————————–

ஆஸ்ரித பக்ஷ பாதம் போலே ஆஸ்ரித பவ்யத்தையும் –

நீர் நம்மை ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவன் என்று அறிந்த படி எங்கனே என்ன
நான் ஒருவனுமேயோ -லோகம் அடைய அறியாதோ -என்கிறார் –

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு –22-

பதவுரை

பொறி கொள் சிறை–பல நிறங்களையுங்கொண்ட சிறகுகளை யுடைய
உவணம்–கருடாழ்வானை
ஊர்ந்தாய்–ஏறி நடத்தும் பெருமானே!
காம்பு ஏய் மென் தோளி–மூங்கிலை யொத்த மெல்லிய தோள்களை யுடைய யசோதையினாலே
கடை–கடையப்பட்டு
வெறி கமழும்–பரிமளம் வீசப்பெற்ற
வெண்ணெய்–வெண்ணெயை
உண்டாயை–(களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பே கொண்டு–(கையில் கிடைத்ததொரு) தாம்பை கொண்டு
ஆர்த்த–கட்டியதனாலுண்டான
தழும்ப–காய்ப்பை (அறிபவன்)
யானேயும் அல்லேன்–நானொருவனே யன்று;
உலகு எல்லாம் அறியும்–உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.

அறியும் –ஆஸ்ரித அர்த்தமாக எளியனானான் என்னும் படி நீர் அறிந்த படி எங்கனே என்னில் –
உலகு எல்லாம் யானேயும் அல்லேன்–சிசுபாலன் கூட அறியானோ –
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை -பொறி கொண்டு இருந்துள்ள சிறகை யுடைத்தான திருவடியை ஊர்ந்த உன்னை
வெறி கமழும்-பிள்ளை முகம் வாட ஒண்ணாது என்று எப்போதும் ஒப்பித்த படியே இருக்கையாலே பரிமளம் கமழா நின்ற
காம்பேய் மென் தோளி–மூங்கிலோடு ஒத்த மிருதுவான தோளை யுடையவள்
கடை வெண்ணெய் யுண்டாயைத்-அவள் மார்த்த்வம் பாராதே கடைந்த வெண்ணெய் யுண்டாயை
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு  –கைக்கு எட்டிற்று தாம்பாலே கட்டின தழும்பு -கயிறை நீட்ட ஒண்ணாது
உரலைச் சிறுக்க ஒண்ணாது –இவன் உடம்பில் இடம் காணும் அத்தனை -இறே –
உலகு எல்லாம் -சிசுபாலனை இட்டுச் சொல்ல வேணுமோ
யானே -அனுக்ரஹம் யுடைய நானே ஆலன் –
பொறி இத்யாதி -நிரபேஷனாய்-அர்த்திக்கப் பிறந்த நீ –
வெறி -ஸ்வாபாவிகம் என்னுதல் / பிள்ளை முசியாமைக்கு என்னுதல்
காம்பு -பசுமையும் திரட்சியும் செவ்வையும் –
கடை வெண்ணெய் இத்யாதி -இருவருக்கு தாரகம் -அபலை கட்டிலே கட்டுண்பதே-
தாம்பே கொண்டு – குறும் கயிற்றைக் கொண்டு

——————————————-

சித்ர படம் போலே நாநா வர்ணமான சிறகை யுடைய பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனாய்
பிள்ளை அனுங்காத படி ஸூகந்த த்ரவ்யத்தாலே அலங்கரித்துக் கொண்டு இருக்கையாலே பரிமளம் அலை எறியா நிற்பாளாய்
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலேயாய்-அதில் வியாவிருத்தமான
மார்த்வத்தை யுடைய தோளை யுடையவளுமான யசோதை பிராட்டி உடம்பு நோவக் கடைந்து திரட்டி வைத்த வெண்ணெயை
அமுது செய்து அருளின உன்னை கைக்கு எட்டிற்று ஒரு அறுதல் தாம்பையே கொண்டு உறைக்கக் கட்டுகையாலே
வந்த தழும்பு நான் ஒருவனுமே யல்லேன் -நாடு அடங்க அறியும் காண் –உவணம் என்று பருந்துக்குப் பெயர் –

————————————————————————————-

ஒரு செயலைக் கொண்டு சொல்லும்படி என் என்னில் -ஒரு செயலிலேயோ -ஒரு அவதாரத்திலேயோ
தழும்பு சுமந்து -என்கிறார் –

நாம் சிலருக்கு அஞ்சுகையாவது என் -கட்டுண்கை யாவது என் -அத்தைப் பின் நாடு அறிகை யாவது என் -என்று
அத்தை மறைக்கப் புக்கான் -ஒரு தழும்பு ஆகில் அன்றோ மறைக்கலாவது -உன் உடம்பு அடங்கலும்
ஆஸ்ரித கார்யம் செய்கையால் வந்த தழும்பு அன்றோ -என்கிறார் –

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

பதவுரை

வீங்கு ஓதம் வண்ணர்–பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவை யுடைய எம்பெருமானது
அம் கை–அழகிய திருக் கைகளில்
சார்ங்கம்–சார்ங்க வில்லினுடைய
நாண்–நாணி
தோய்ந்–உராய்ந்த்தனா லுண்டான
தழும்பு–காய்ப்பானது
இருந்த ஆம்-இருக்கின்றது காண்;
தாள்–திருவடிகளிலே
சகடம் சாடி–சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான)
தழும்பு இருந்த–காய்ப்பு இருக்கின்றது;
பூங் கோதையாள்–அழகிய மயிர் முடியையுடைய பிராட்டி
வெருவ–(என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே
பொன் பெயரோன்–இரணியாசுரனுடைய
மார்பு இடந்த தழும்பு–மார்பைக் கிழித்தெறிந்த தனாலுண்டான காய்ப்பு
விரல்–விரல்களிலே
இருந்த–இருக்கின்றது.

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த –பிராட்டியும் கூட கூசி ஸ்பர்சிக்க வேண்டும் அழகிய கை
சார்ங்க நாண் தோய்ந்த தழும்பு இருந்தவாம் -ஜ்யாகிணத்தாலே கர்க்கஸமாய் இருக்கும் -தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த –அடல் அரியாய்ப் பெருகினானை -என்கிறபடியே
வீங்கோத வண்ணர் விரல் -கால் தழும்பு -கை தழும்பு -அவாந்தர அவயமான விரல் தழும்பு -ஒன்றேயோ தழும்பு ஆயிற்று -என்கிறார்
பூங்கோதையாள் வெருவ-ஆஸ்ரிதர் உடைய கார்யம் என்றால் உகக்கும் அவளும் பயப்படும்படி உடம்பு அடையத் தழும்பு
சாடி -அவன் மூரி நிமிர்ந்தான் -இவர்க்கு குவாலாய் இருக்கிற படி –
பூங்கோதையாள் வெருவ-பொறாது என்று இருக்குமவள் -வீர வாசி அறியுமவள்-ருஷி வேஷத்தோடே திரிய வேணும் என்னுமவள் –
வீங்கோத வண்ணர் விரல்-வளர்த்தியும் குளிர்த்தியும் –மஹா விஷ்ணும் –விக்ரஹ வியாப்தி யாயிற்று

————————————————————–

அழகிய திருக்கையானது -ஸ்ரீ சார்ங்கத்தின் யுடைய நாண் அறைவால் வந்த தழும்பைச் சுமந்தன -அதி ஸூகுமாரமான
திருவடிகள் ஆனவை அஸூரா விசிஷ்டமான சகடத்தை முறிந்து விழும்படி உதைத்து அத்தால் எழுந்த தழும்பைச் சுமந்தன-
கிளர்ந்து அலை எறிகிற கடல் போலே இருந்துள்ள வடிவை யுடையவருடைய திரு விரல்களானவை –
அழகிய மயிர் முடியை யுடைய பிராட்டி என்னாகத் தேடுகிறதோ -என்று நடுங்கும் படியாக ஹிரண்யன்
மார்வைப் பிளந்து பொகட்டத்ததால் வந்த தழும்பை சுமந்தன
விரல் தழும்பு -கால் தழும்பு -கை தழும்பு -இவற்றை எங்கனே உன்னால் மறைக்கும் படி -என்கை-

————————————————————————————————-

நாம் வெண்ணெய் களவு காணப் புக்கு கட்டுண்டோம் ஆக வேணுமோ என்ன –
களவு கண்டு கட்டுண்டு இருக்கும் படி அறியாயோ -என்கிறார் –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை —24–

பதவுரை

ஓங்கு ஓதம் வண்ணா–ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே!
(நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது)
விரலோடு வாய் தோய்ந்த–உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
ஆய்ச்சி–யசோதை யானவள்
கண்டு–பார்த்து
(உன்னைத் தண்டிக்க வேண்டி)
உரலோடு உற பிணித்த நான்று–உரலோடு சேர்த்துக் கட்டி வைத்த போது
குரல் ஓவாது–நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி–ஏங்கிக் கொண்டு
நினைந்து–(அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக் கொண்டு
அயலார் காண–அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே–இருந்தாயல்லவோ?
உரை–உண்மையாகச் சொல்லு.

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு–விரல் வாயிலே தோய்ந்த அளவிலே –
வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு -என்றும் சொல்லா நின்றது –
விரலோடு வாய் தோய்ந்த -என்றும் சொல்லா நின்றது -இவை எங்கனே சேரும் படி
என்று பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டரைக் கேட்க –
இவனுக்கு என்றும் திருப்பணி இது வன்றோ -ஒரு நாள் அங்கனும் ஆகிறது
ஒரு நாள் இங்கனும் ஆகிறது -என்று அருளிச் செய்தார் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் -என்கிற படியே
ஆய்ச்சி-உரலோடு உறப் பிணித்த நான்று —உரலோடும் அவன் என்றும் பிரித்துக் காணப் போகாத படி கட்டின அன்று –

குரலோவா-தேங்கி –அழப் புக்க த்வனி மாறாதே –என்கின்ற ஏக்கம் கீழ் விழாதே –
நினைந்து -இப்படி அழா நிற்கச் செய்தேயும் பெரிய திருப் பணிகள் ஆயிற்று நினைப்பது –
வெண்ணெய் களவு காணும் படி நினைத்து –

அயலார் காண இருந்திலையே–ஐந்து லக்ஷம் குடியில் பெண்களில் காணாதார் யுண்டோ -இவனால் நெஞ்சு புண் பட்டார் எல்லாம்
இவன் பட்டபாடு காண வருவார்கள் இறே -அத்யுத்கடை புண்ய பாபை ரிஹைவ பலம் அஸ்னுதே–இறே –
ஒங்கோத வண்ணா வுரை —–இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலைத் தேக்கி வைத்தால் போலே காணும் –
உரை -இவ்வடிவு காண வேணும் -இவ்வடிவோடே கூடிய வார்த்தையும் கேட்க வேணும்
பொய்யாகில் உரலோடே கூடி இழுத்துக் கொண்டு புறப்படுவனோ —

விரல் இத்யாதி -வயிறு வளர்த்து அகப்படப் பெற்றோமோ -மிடற்றுக்கு கீழ் இழியப் பெற்றோமோ –
உரலோடு -உரலோடு தன்னோடு வாசி இல்லாமை –
குரல் ஓவாது -அழப் புக்கவாறே இக் கோல் உண்டு பார் என்ன -ஏங்கி நின்றான்
நினைந்து -வெண்ணெயையே நினைந்து இருக்கை –
அயலார் காண -பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் அடைய -அவர்களை பந்தித்துத் தான் அகப்படா நிற்கும் –
அவர்கள் இவன் அகப்பட வல்லனே என்று இருப்பார்கள் –
இருந்திலையே-ராம சரத்தை ராவணன் மறக்கில் மறக்கலாம்

ஓங்கோத வண்ணா -நெருக்குணகையால் வந்த பூர்த்தி
உரை -நமே மோகம் -என்னும் நீ சொல்லிக் காண் -அவாப்த ஸமஸ்த காமன் குறையாய் அழுவதே –
சர்வ சக்தி மிடுக்கு இன்றி ஒழிவதே -சர்வஞ்ஞன் புரை அறுவதே –

——————————————————

திருக்கையாலே அள்ளித் திருப் பவளத்திலே வைத்த வெண்ணெயை அமுது செய்து அருளுவதற்கு முன்பே
வாயது கையதாகக் கண்டு இடைச்சியானவள் களவுக்குப் பெரு நிலை நின்ற உரலோடே எடுத்து உறைக்கக் கட்டின வன்று-
கூப்பிடுகிற கூப்பீடு உச்சிவீடு விடாத படி -வாய் விட்டு அழ மாட்டாமல் -விம்மல் பொருமலாய் -ஏங்கிக் கொண்டு
அவ்வளவிலும் வெண்ணெய் எங்கே இருக்கிறது-அது களவு காணும்படி எங்கனே என்று இத்தையே உருவ நினைத்துக் கொண்டு
உன்னாலே புண்பட்ட இடைப் பெண்கள் எல்லாரும் -கள்ளனுக்கு இத்தனையும் வேணும் -என்று சிரித்துக் கொண்டு
வந்து காணும் படியாக க்ருதார்த்தனாய்க் கொண்டு இருந்திலையோ -கட்டுண்ணப் பெற்ற ஹர்ஷத்தாலே
ஓங்கி கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே -நீ இத்தை உண்மையாக சொல்லிக் காண்
இவர்க்கு இவன் வடிவு காண வேணும் -வார்த்தை கேட்க வேணும் -என்றும் போலே காணும் ஆசை –

——————————————————————————————————

இவனுடைய இந்நீர்மை அனுபவித்தால்-வேறு ஒன்றால் போது போக்க ஒண்ணாது என்கிறார் –
இவனுக்கு நினைவும் பேச்சும் வெண்ணெயில் ஆனால் போலே
ஆழ்வாருக்கு நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே ஆணைப்படி சொல்கிறது –

அவன் ஓவாதே அழுத படியைக் கண்டு இவரும் ஓவாதே ஏத்தத் தொடங்கினார் –

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  –25-

பதவுரை

வரை மேல்–ஒரு மலையின் மேலே
மரகதமே போல–மரகதப் பச்சை படிந்தாற்போல
திரை மேல்–திருப்பாற்கடலிலே
கிடந்தானை–சயனித்திருப்பவனும்
கீண்டானை–இரணியனுடலைப் பிளந்தவனும்
கேழல் ஆய்–வராஹ மூர்த்தியாகி
பூமி இடந்தானை–பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.
என் உள்ளம்–எனது மனமானது
உரை மேற்கொண்டு–உரைப்பதில் ஊற்றங்கொண்டு
ஓவாது எப்போதும்–இடைவிடாமல் எப்போதும்
ஏத்தி–அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)
எழும்–உஜ்ஜீவிக்கும்.

உரை மேல் கொண்டு -மேலான உரையைக் கொண்டு -அதாவது வாக்குக்கு விஷயமானத்தைக் கொண்டு
அன்றிக்கே -உரைக்கையிலே மேற்கொண்டு -அதாவது சொல்லிச் செல்லுகையில் கிளர்ந்து
என்னுள்ளம் ஓவாது எப்போதும்-என்னுடைய ஹிருதயமானது உச்சிவீடு வீடாக கடவது அன்றிக்கே -ஸ்வரூபம் ஒரு காலாக அழியுமோ

வரை மேல் மரகதமே போலே திரை மேல்-கிடந்தானைக் –
ஒரு மலையிலே ஒரு மரகத கிரியானது பரப்பு மாறப் படிந்தால் போலே யாயிற்று திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின போது இருக்கும்படி
கீண்டானைக் கேழலாய்ப் பூமி-இடந்தானை யேத்தி எழும்  —
சர்வேஸ்வரனாய் சர்வ சக்தியானவனுடைய ஸுலப்ய சரிதங்களை சொல்லுகைக்கு

என்னுள்ளம் -இத்யாதி —
தாச வ்ருத்திகனான என்னுடைய மனசானது இடை விடாது -எப்போதும் இத்யாதி –
ஒரு பர்வத சிகரத்தில் இந்த்ர நீல மணி இருந்தால் போலே விளங்குகிற சமுத்திர சாயியானவனை
கிடந்தானை -கீண்டானை -ஆர்த்தரைக் கண்டால் படுக்கை அடிக் கொதிக்கும் படி
ஏத்தி எழும் -ஸ்துதித்து உஜ்ஜீவிக்கும் –
உரை மேல் கொண்டு -வாக்குக்கு விஷயமாகக் கொண்டு -வாக் விருத்தியை மேற்கொண்டு -என்னவுமாம்
என்னுள்ளம் இத்யாதி -ஒரு மலை மேல் மரகதம் கிடந்தால் போலே திரள் மேல் கண் வளர்ந்து அருளுகிறவனை –
கீண்டானை இத்யாதி -வராஹ ரூபியாய்ப் புக்கு அண்டபித்தியில் நின்றும் ஓட்டுவிடுவித்து பூமியை இடந்தவனை
ஏத்தி எழும் -ஏத்தி உஜ்ஜீவியா நின்றது

—————————————————————-

ஒரு மலையின் மேலே ஒரு மரகத கிரி படிந்தால் போலே ஸ்வ சந்நிதானத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளினவனாய் -சிறுக்கன் ஆர்த்தி தீர்க்கைக்காக நரசிம்ஹமாய் தூணிலே வந்து தோற்றி
ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனாய் -மஹா வராஹமாய் பிரளயத்தில் கரைந்து அண்டபித்தியிலே ஒட்டின பூமியை
இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனை என்னுடைய ஹிருதயமானது -உரைக்கையிலே தத்பரமாய்க் கொண்டு
உச்சிவீடு விடாதே சர்வகாலத்திலும் இவ் வாபதானங்களையே சொல்லிப் புகழ்ந்து உஜ்ஜீவியா நிற்கும்-
உரை மேல் கொண்டு -என்று மேலான உரையைக் கொண்டு -உத்க்ருஷ்டமான சப்தங்களைக் கொண்டு என்னவுமாம்
கேழலாய்க் கீண்டவனை பூமியிடந்தானை -என்று இரண்டையும் இங்கே யாக்கி அண்டபித்தியில் ஒட்டின இத்தை
முதலிலே கீண்டு பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

——————————————————————————————————–

எல்லார்க்கும் நினைவும் செயலும் ஒக்கப் பரிமாறலாவது பரமபதத்தில் அன்றோ என்னில் -நித்ய ஸூரிகளும் கூட
அவனுடைய ஸுலப்யம் காண வருகிறது திருமலையில் அன்றோ -என்கிறார் –

அவதாரங்களுக்குப் பிற்பாடானார் இழவைப் பரிஹரிக்கைக்காகத் திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

பதவுரை

எழுவார்–(தாங்கள் விரும்பின ஐச்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐச்வர்யார்த்திகளும்
விடை கொள்வார்–(தாங்கள் விரும்பின கைவல்யமோக்ஷம் கைப்பட்டபின் எம்பெருமானைத் திரும்பிப்பாராமல்)
விடைப்பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும்
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்–இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை
ஒருநாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய
இம் மூவகை அதிகாரிகளுடைய
வினை சுடரை–(அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீவினையாகிய நெருப்பை
நந்துவிக்கும்–அணைக்கின்ற
வேங்கடமே–திருவேங்கடமலையே
வானோர்–நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை–ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும்–தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற
மலை–மலையாகும்.

எழுவார் -ஐஸ்வர்யம் வேணும் என்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் –
விடை கொள்வார் -ஆத்ம பிராப்தியே அமையும் -நீ வேண்டா என்று இவன் பக்கலிலே நின்றும் அகலுமவர்கள்
ஈன் துழாயானை-வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்–இவனை பிரியாது ஒழிய வேணும் என்று நினைத்து
காலம் எல்லாம் தொழுவார்கள் –
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

வானோர்-மனச் சுடரைத் தூண்டும் மலை –நித்யஸூ ரிகளுடைய கிளர்ந்த மனசை அவனுடைய ஸுலப்யம் காணப் போரி கோள்-
என்று கிளர்ந்து –நிற்கும் திருமலை -காலாந்தரம் அன்று –சந்நிஹிதம்
எழுவார் -பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர்யார்த்திகள்
விடை கொள்வார் -பலம் நித்யம் ஆகையால் மீட்சி இல்லை கேவலர்க்கு
வினை -இத்யாதி -இம் மூவருக்கும் உத்தேச்ய விரோதிகளை போக்கும்
நந்துவிக்கை -அவிக்கை –
வானோர் -இத்யாதி -இங்கு உள்ளார் – ஒழிவில் காலம் என்ன -அங்குள்ளார் -அகலகில்லேன் -என்னைச் சொல்லும்

———————————————————–

போற்றி என்று ஏற்றெழுவர் -என்கிறபடியே எங்களுக்கு அபிமதமான த்ருஷ்ட ஐஸ்வர்யத்தை தரலாகாதோ என்று
பிரயோஜனத்துக்கு கை ஏற்றுக் கிளர்ந்து -அது கைப் பட்டவாறே -விட்டு அகன்று போம் ஐஸ்வர்யார்த்திகளும்
உன் அனுபவம் வேண்டா -எங்கள் ஆத்மாவை அனுபவித்துக் கொண்டு ஒரு நாளும் உன் முகத்திலே விழியாது இருக்கும் படி
விடை கொள்ளுகைக்கு திருக் கை சிறப்பிட்டு அருள வேணும் என்று விடை கொண்டு போகும் கைவல்யார்த்திகளும் –
நிரதிசய போக்யமான திருத் துழாயாலே அலங்க்ருதமான பரம ப்ராப்ய பூதனானவனை ஒரு நாளும் விட்டு நீங்காதே
கிட்டி நின்று அனுபவிக்கும் பிரகாரத்தை அனுசந்தித்து சர்வ காலமும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்கும்-
பகவத் சரணார்த்திகளுமான -அதிகாரிகளுடைய தத் தத் புருஷார்த்த பிரதிபந்தகமான பாபாக்கினியை
உருத் தெரியாத படி நசிப்பிக்கும் திருமலையே காணும் -அஸ்ப்ருஷ்ட பாப கந்தரான நித்ய ஸூரிகளுடைய
திரு உள்ளம் ஆகிற விளக்கை அவன் சீலாதி குண அனுபவத்தின் ஸ்ரத்தையை வர்த்திப்பித்துக் கொண்டு ப்ரேரியாய் நிற்கும் திருமலை –

————————————————————————————————————–

சேஷ்டிதங்களிலே உருகுகிறார் –ஸூகுமாரமான கையைக் கொண்டே இப்பெரிய செயல்களை செய்வதே
செய்யா நின்றால் அநாயாசேன செய்வதே –
திருவேங்கடமுடையானுடைய திருக்கையைப் பார்த்தார் போலே –

இங்கே எழுந்து அருளி இருக்கிற திருவேங்கடமுடையானடைய தோளின் துடிப்பைக் கண்ட போதே
அவதாரங்களில் விரோதி வர்க்கத்தை பொடி படுத்தின வீரப்பாடு அடங்கலும் காணலாம் -என்கிறார் –

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை -27-

பதவுரை

மலையால்–கோவர்த்தன கிரியைக் கொண்டு
குடை கவித்து–குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசி யென்னும் அஸுரனுடைய வாயைப் பிளந்தும்,
சிலையால்–வில்லைக் கொண்டு
மராமரம் ஏழ் செற்று–ஸப்த ஸால விருக்ஷங்களை அழித்தும்,
(இச்செயல்களோடு நிற்காமல்)
கொலை யானை–கொலை செய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய
போர் கோடு–சண்டை செய்ய உதவியாயிருந்த தந்தங்களை
ஒசித்தனவும்–பிடுங்கினவையும்.
பூ குருந்தம்–பூ வோடு கூடிய குருந்த மரத்தை
சாய்த்தனவும்–வேரோடே பறித்துத் தள்ளினவையும்
(எவையென்றால்)
கார்–(கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தை யொத்த
கோடு–சங்கை
பற்றியான்–ஏந்தி யிருக்கின்ற பெருமானுடைய
கை–திருக்கைகளேயாகும்.

மலையால் குடை கவித்து -வர்ஷத்துக்கு குடை அபேக்ஷிதம் இறே -இந்த்ர அஸூர ப்ரக்ருதி அல்லாமையாலே
பசி க்ராஹத்தாலே செய்தானாகில் மலையை எடுத்து நம்மை நோக்கிக் கொள்வோம் என்று மழையைக் குடையாகக் கவித்து –
மாவாய் பிளந்து-பண்ணின ப்ராதிகூல்யத்தின் கனத்தாலே கேசியைக் கொன்று —
சிலையால் மராமரம் ஏழ் செற்று–
அவதாரத்துக்கு அடுத்த ஆயுதத்தாலே மரா மரம் ஏழையும் செற்று
கொலையானைப்-போர்க்கோடு ஒசித்தனவும் –கொல்லக் கடவதாக நிறுத்தின குவலயா பீடத்தினுடைய
பொரா நின்ற கோட்டை அநாயாசேன முறித்தனவும்
பூங்குருந்தம் சாய்த்தனவும்-பூப்பறித்தனவும்

கார்க்கோடு பற்றியான் கை —–சிரமஹரமாய முழக்கத்தை உடைத்தாய் இருக்கும் -என்கை
அன்றிக்கே திருக்கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருந்த போது மேகத்தைப் பற்றி இருந்த சங்கு போலே இருந்தது என்கை
இடையவர் செய்வது எல்லாம் முன்கை உரத்தாலே-க்ஷத்ரியர் என்றும் வில்லாலே -என்னும் இடம் தோற்றுகிறது
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் பிடிக்கவும் பொறாத மிருதுவான கையைக் கொண்டு கிடீர் இது எல்லாம் செய்தது –

மலை இத்யாதி -மலையாக விநியோகம் கொண்டானோ
மாவாய் பிளந்து –நாரதாதிகள் கூப்பிடும்படி வந்த கேசியை நெட்டிக்கோரை கீண்டால் போலே கீண்டு –
சிலை இத்யாதி -எய்ய ஒண்ணாத படி திரள நின்ற மரா மரங்களை –
கொலை இத்யாதி -கொலையில் உற்ற ஆனை
பூங்குருந்தம் -தழைத்துப் பூத்து நின்ற
கார்க்கோடு -குளிர்ந்து சிரமஹரமாய பெருத்து முழங்குகை –ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் தொடப் பொறாத கை கிடீர் –

———————————————————————-

இந்திரன் ப்ரவர்த்திப்பித்த கல் வர்ஷத்திலே ரஷ்ய வர்க்கம் அழியாத படி கைக்கு எட்டிற்று ஒரு மலையாலே
குடை பிடிப்பாரைப் போலே கீழது மேலதாக மறித்து -ரக்ஷித்து –
தன்னை விழுங்குவதாக வந்த கேசி யாகிற குதிரையினுடைய வாயை இரு பிளவாக கிழித்துப் பொகட்டு –
ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமாக எடுத்த திரு வில்லாலே ஓர் ஆஸ்ரிதனை விசுவசிப்பிக்கைக்காக மரா மரங்கள் ஏழையும் இழியச் செய்து
எதிர்த்தவர்களைக் கொன்று விழ விடும் குவலயா பீடத்தினுடைய பொருகைக்கு பரிகரமான கொம்பைப் பிடுங்கி பொகட்டனவும் –
கண்டார்க்கு ஆகர்ஷகமாம் படி முட்டாக்கிடப் பூத்துக் கிடக்கிற குருந்தை வேர் பறியும்படி தள்ளி விழ விட்டனவும்-
குளிர்ந்து முழங்குகிற ஸ்வ பாவத்தால் மேகத்தோடு ஒத்து இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை தரித்து அருளினவனுடைய திருக் கைகள் கிடீர் –

—————————————————————————————————

ஐஸ்வர்யம் சொல்லுகிறது என்னவுமாம் -நீர்மை சொல்லுகிறது என்னவுமாம் –

திருமலையிலே எழுந்து அருளி நிற்கிற திருவேங்கடமுடையான் திரு மேனியில்
அழகும் ஐஸ்வர்யமும் சீலாதி குணங்களும் நிழல் இட்டுத் தோற்றா நின்றது கிடீர் -என்கிறார் –

கைய  வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை ——–28-

பதவுரை

கார் வண்ணத்து ஐய–மேகம் போன்ற வடிவையுடைய பெருமானே
வலம் புரியும்–வலம்புரிச் சங்கமும்
நேமியும்–சக்கரமும்
கைய–என் கையிலுள்ளன;
மலர் மகள்–பெரிய பிராட்டியார்
நின் ஆகத்தாள்–உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான்–சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான்–உனது உந்திக்கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான்–பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை–உனது திருமேனியின் ஏக தேசம்

கைய  வலம் புரியும் நேமியும்–கைய -கையிலே உள்ள
கார் வண்ணத்தைய–சிரமஹரமான வடிவை யுடைய ஸ்வாமி யானவனே
மலர்மகள் நின்னாகத் தாள் -கோலா மலர்ப்பாவை நின் திரு மார்விலாள் –
செய்ய-மறையான் நின்னுந்தியான் -நேரே உன்னைக் காட்ட வற்றான வேதத்தை யுடைய ப்ரஹ்மா உன் திரு நாபீ கமலத்திலானான் –
மா மதிள் மூன்று எய்த-இறையான் நின்னாகத் திறை ——த்ரி புரம்-தஹநம் பண்ணி ஈஸ்வர அபிமானியாய் இருக்கிற ருத்ரன்
உன் திருமேனியைப் பற்றி இறையாயிற்று –
அன்றியே -நின்னாகத்து இறை -என்று திருமேனியில் ஏக தேசத்தில் என்னவுமாம் –
இத்தால் ஐஸ்வர்யமும் அழகும் சொல்லிற்றாயிற்று
கார் வண்ணம் -வேறே வேணுமோ -வடிவமையாதோ –
ஐய-என்னது என்னலாய் இருக்கை -அலர்மேல் மங்கை உறை மார்பன் –
மா மதிள் மூன்று எய்த-இறையான் நின்னாகத் திறை –ஊரைச் சுட்டு பேரைப் படைத்தான் —
கோட் சொல்லி பிரசித்தராமா போலே
ஆகத்திலே ஏக தேசத்தை பற்றினான் -என்னுதல் -ஆகத்தைப் பற்றி இறையானான் என்னுதல் –

————————————————————–

மேகம் போலே சிரமஹரமான வடிவையுடைய நிருபாதிக பந்துவானவனே -ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் திருவாழியும்
திருக் கைகளிலே உளவாய் இரா நின்றன -அலர்மேல் மங்கை யானவள் உன்னுடைய திரு மார்வில்
அகலகில்லேன் இறையும்-என்று உறையா நின்றாள்-உன்னை உள்ளபடி காட்டும் செவ்வையை யுடைய வேதத்தை
தனக்கு நிரூபகமாக யுடைய ப்ரஹ்மா உன்னுடைய திரு மேனியைப் பற்றி லப்த சத்தாகனாய் இரா நின்றான்
பெரிய மதிளையுடைய த்ரி புரத்தை தக்தமாம் படி எய்து விழ விட்ட ஈஸ்வர அபிமானியான ருத்ரன்
உன் திருமேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபன் ஆகா நின்றான் –

———————————————————————————————————–

ஐஸ்வர்யம் கண்டு அஞ்ச வேண்டா -ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்கிறார் –
ஐஸ்வர்யம் கண்டு வெருவாதே சீலத்தை அநுஸந்தி -என்கிறார் –

நெஞ்சே உபய விபூதி நாத்தனாய் இருக்கிற அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய் -இத்தை நன்றாகக் புத்தி பண்ணு -என்கிறார் –

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி -29-

பதவுரை

இறையும்–ஸ்ரீவைகுண்ட நாதனாயும்
நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான்–பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன
அலை யெறிகிற ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய
லீலா விபூதியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்,
பிறை மருப்பின்–பிறை போன்ற தந்தத்தை யுடையதும்
பைங்கண்–பசுமை தங்கிய கண்களை யுடையதுமான
மால் யானை–பெரிய கஜேந்திரனை
படு துயரம்–(முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த–ரக்ஷித்தருளின
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான பெருமான் காண்;
தெளி–[நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள்.

இறையும்– பரம பதத்தில் இருப்பை சொல்கிறது –
நிலனும் இரு விசும்பும் காற்றும்-அறை புனலும் –செந்தீயும் ஆவான்– ஜகதாகாரனாய் லீலா விபூதி உக்தனான படி சொல்கிறது –
பிறை மருப்பின்-பைங்கண் மால் யானை -பிறை போலும் கொம்பை யுடைத்தாய் -ஜாதி உசிதமான கண்ணை யுடைத்தாய்
பெருத்த யானை–ஆனைக்குப் போரும்படியான துயரைப் போக்கி ரஷித்த

செங்கண் மால் கண்டாய் தெளி —–வாத்சல்ய அம்ருதத்தை வர்ஷியா நின்ற கண்ணை யுடையனான சர்வேஸ்வரன்
தெளி -இவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யமே ஸ்வரூபம் என்னும் இடத்தைப் புத்தி பண்ணு –
இறையும் -நியாமகனாய்க் கொண்டு பரமபதத்தில் இருக்கும் -/ நிலன் இத்யாதி -இந்த விபூதியை யுடையனாய் இருக்கும் இருப்பு
மால் யானை -உடம்பில் பெருமை பாடாற்ற ஒண்ணாமை / அளித்த -புண் பட்டத்தை ஸ்பரிசித்து அருளின படி /
செங்கண் -வாத்சல்யம் / மால் என்று அரை குலைய தளை குலைய வந்து தோற்றின படி /
அவன் தம்மை மாஸூச -என்ன திரு உள்ளத்தைத் தாம் மாஸூச -என்கிறார் -வாசலைத் திறந்து வைப்பாரைப் போலே
பெறுகைக்கு அங்கும் போக வேண்டா -இசைவே வேண்டுவது -ஆர்த்தியே வேண்டுவது
அவனே வாரா விடில் சமாயதிக தரித்ரனே அவன் -மற்று அவனைப் பெற உபாயம் உண்டோ
வாசனையால் அம்மே என்பாரைப் போலே அழைத்தது அத்தனை –

————————————————————————-

பரம பதத்தில் சர்வ ஸ்வாமித்வம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுமாய்
பூமியும் பரப்பை யுடைத்தான ஆகாசமும் வாயுவும் -அலை எறிகிற ஜலமும் -தேஜஸ் தத்வம் ஆகிற பஞ்ச பூத ஆரப்தமான
லீலா விபூதியை பிரகார தயா சேஷமாக யுடையவனுமாய் இருக்கிற பெருமையை யுடையவன் –
பிறை போலே இருக்கிற கொம்பையும் ஜாதி உசிதமான பசுமையையும் யுடைய கண்ணை யுடையனுமாய்
அடிமை செய்கையில் பெரும் பிச்சனுமாய் இருக்கிற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் யுடைய -முதலையின் கையில்
அகப்பட்டுப் பட்ட துக்கத்தை பரிஹரித்து -கையிலே பறித்த பூ செவ்வி அழிவதற்கு முன்பே திருவடிகளிலே
பணிமாறி வித்துக் கொண்டு ரக்ஷித்து அருளின வாத்சல்ய ஸூ சகமான சிவந்த திருக் கண்களை யுடைய
வ்யாமுக்தன் கிடாய் -இத்தை அழகிதாகப் புத்தி பண்ணு -மால் என்று அரை குலைய தளை குலைய வந்து தோற்றின படி —

——————————————————————————————

சம்சாரத்தில் ஸமாச்ரயணீயர் பலர் உண்டு என்று பிரமிக்க வேண்டா -சம்பந்த ஞானம் உண்டாகவே
நெஞ்சு தானே அவனை ஆராய்ந்து பற்றும் –

வியதிரிக்தங்களிலே போகாத படி மனசை நியமித்து திருவடிகளின் உறவை அறிந்து இருப்பார்க்கு-
அம் மனஸ்ஸூ தானே -வர பிராப்தி பற்றாதபடி பற்றிக் கொண்டு அத்யபி நிவிஷ்டமாய் அவனைக் கிட்டும் என்கிறார் –

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து ——30-

பதவுரை

உள்ளத்தை–மனத்தை
தெளிது ஆக–[ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவையுடைய தாம்படி
செம் நிறீஇ–செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தை மூட்டி]
ஞானம்–பகவத் விஷய பக்தியாலே
தெளிது ஆக–‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி
நன்கு–நன்றாக
உணர்வார்–அறிபவர்களுடைய
சிந்தை–மனமானது.
எளிது ஆக–வருத்தமில்லாமல்
தாய்நாடு கன்றேபோல்–[பெரிய பசுக்கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக் கொண்டு கிட்டுகிற கன்றைப்போல,
தண் துழாயான் அடிக்கே–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த எம்பெருமானது திருவடிகளையே
புரிந்து–விரும்பி
போய் நாடிக் கொள்ளும்–தானே சென்று தேடிச் சேரும்.

செந்நிறீஇ—நன்கு நிறுத்தி / புரிந்து போய் –விரும்பி அடைந்து-

தெளிதாக உள்ளத்தைச்–உள்ளத்தை தெளிதாக -விஷய ப்ராவண்யத்தாலே காலுஷ்யமான ஹிருதயத்தினுடைய காலுஷ்யம் போக
செந்நிறீஇ–செவ்விதாக நிறுத்தி
ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்–ஞானத்தால் எளிதாம் படி -அவன் சேஷீ நாம் சேஷபூதர் –என்று
அவனை உணர்வாருடைய சிந்தை
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே போய் நாடிக் கொள்ளும் புரிந்து —-
அநேகம் பசுக்கள் நின்றால் தாயைத் தேடும் கன்றே போலே
தண் துழாயான் அடிக்கே புரிந்து போய் நாடிக் கொள்ளும்
செந்நிறீஇ-இந்திரியங்களை தாம் வெல்லப் பாராதே எம்பெருமான் பக்கலிலே மூட்டி விஷயங்களை ஜெயிக்கப் பார்க்கை –
தெளிதாக -ஞானத்தால் விகசிதமான பக்தியால் / எளிதாக -விஷயங்களில் பழக்கம் போலே தானே மூளும் படியாய் இருக்கை
தாயாய் இருக்கிறபடி
அடியே -அல்லாத ஸ்தலங்களைக் கடந்து /புரிந்து -விரும்பி –

—————————————————————-

விஷயாந்தரங்களால் உள்ள காலுஷ்யம் போய் தெளிவுடையதாம் படிக்கு ஈடாக -ஹ்ருதயத்தை
பகவத் பிரவணமாம் படி என்னை நிறுத்தி
தத் விஷய பக்தி ரூபா பன்ன ஞானத்தினால் -அவன் சேஷி நாம் சேஷம் -என்கிற தெளிவு
யுண்டாம்படியாக சாஷாத்கார பர்யந்தம் நன்றாக உணர்ந்து இருக்குமவர்களுடைய மனசானது வருத்தம் அற
கூட நிற்கிற பசுக்களையும் கணிசியாதே-தன் தாயைக் கிட்டிக் கொண்டு நிற்கும் கன்று போலே
சிரமஹரமான திருத் துழாயாலே அலங்க்ருதனாகையாலே வகுத்த சேஷியுமாய் -நிரதிசய போக்யனுமான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாக்யாதி இந்திரியங்களை கணிசியாதே அங்கே
அபிமுகமாய் கொண்டு போய் தேடிக் கொள்ளா நிற்கும் -இது நிச்சயம் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: