முதல் திருவந்தாதி– பாசுரங்கள் –91-100– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

பரம பதம் ஸ்வ யத்ன சாத்தியம் அன்றோ என்றவோபாதி-இச்சையும் வேண்டாவோ -என்கிறது-
ஹேயத்தில் ஹேயதா புத்தியும் உபாதேயத்தில் உபேதேயதா புத்தியும் வேண்டாவோ பேற்றுக்கு –
கீழில் பாட்டு ருசி யுடையவனுக்கு உதவின படி –

சர்வேஸ்வரன் சர்வ அபேக்ஷித ப்ரதனேயாகிலும் இதர விஷயங்களில் ருசி யற்று அவனை
ஆஸ்ரயித்தார்க்கு அல்லது பரமபத பிராப்தி அரிது -என்கிறார் –

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி–சரீரம் கண்டது எல்லாம் பொல்லாதாய் இருக்கச் செய்தேயும்
ஆபாத ப்ரதீதியில் நன்று போலே இருப்பது ஓன்று உண்டு -அந்த இருள் சரீரத்தை -அவகாஹிக்கப் போம் –
ஞானச் சுடர் கொளீஇ –ஞானம் ஆகிற விளக்கை பிரகாசிப்பித்து –இதினுடைய ஹேயதையும்-அந்யதா ஞானமும்
யதார்த்த ஞானத்தால் போம் –ஆக யதார்த்த ஞான பூர்வகமாக பரஞானம் வேணும் –
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் –நோவு பட்ட போது உதவினவனாய் இவை இல்லாத வன்று -தான் உண்டாய்
ரஷிக்கும் அவனுடைய திருவடிகளிலே ருசி இல்லாதார்க்கும் உண்டோ பரம பதம் –
அவன் ஆபி முக்கியம் பண்ணுகிறபடியை அனுசந்திக்க வைமுக்ய சங்கை யுண்டோ —

ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து
இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன -நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ –
ஊனக் குரம்பை- ஹேயமாய் அல்பமாய் அஸ்திரமாய் அநர்த்தமாய் அகவாய் தெரியாத படி மேலே தோலை வைத்து
மினுக்கி ஆபாத ப்ரதீதியிலே நன்று என்று தோற்றும் படி இத்தை உள்ளபடியே அனுசந்தித்து அபுருஷார்த்தம் என்றும்
புருஷார்த்த விரோதி என்றும் பேசிற்று -பொய் நின்ற இத்யாதி –
ஞானச் சுடர் கொளீஇ–பிரகாரமான -தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கி –இத்தலை நினையாத போதும்
நினைத்திருந்து நோக்குமவன் -விரோதியான இவ்வாகாரத்தை யன்றோ துடைத்தது– ஏனத்துருவாய் இடந்த –ஞானப் பிரான் –

—————————————————————-

அகவாயில் தோஷம் தோற்றாத படி மாம்சம் செறிந்து மேல் எழ மினுங்கித் தோற்றுகிற சரீரம் ஆகிற குடிசையிலே-
அதில் தோஷம் உள்ள எல்லை அளவும் செல்ல உள்ளுற அவகாஹித்து அத்தை போக்யம் என்று இருக்கிற அஞ்ஞானம்
ஆகிற இருளைப் போக்கி ஜீவ பர யாதாம்யத்தை விஷயீ கரித்து இருக்கும் ஞானம் ஆகிற விளக்கை ஏற்றி
தன்னுருக் கெடுத்து நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தை யுடையனாய் கொண்டு
லோகத்தை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனாய் -இவை அழிந்து கிடந்த சம்ஹார காலத்திலும்
தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கும் ஸ்வ பாவனான வனுடைய திருவடிகளை நாள் தோறும் பொருந்தி
ஆஸ்ரயியாதார்க்கு பரமாகாச சப்த வாஸ்யமான பரமபதம் உண்டாமோ –

——————————————————————-

அவ்வவ ஜாதிகளில் அவதரித்து அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி-
ஸ்ரீ வராஹமானால் கோரைக் கிழங்கு தாரகமாம் -இடையன் ஆனாகில் வெண்ணெய் தாரகமாய் இருக்கிறபடி –

இப்படி ஆஸ்ரிதர் ரஷிக்கும் அளவன்றிக்கே அவாப்த ஸமஸ்த காமனான பூர்த்திக்குப் போராத படி –
-ஆஸ்ரிதர் தொட்டு அளைந்த த்ரவ்யத்தைத் தனக்கு தாரகமாக விரும்பி இருக்கும் -என்கிறார் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்-பஞ்ச பூதங்களாலே ஒரு அண்டமாய் அண்டாந்த வார்த்ததிகளான
புருஷர்களுக்கு நிர்வாஹகனாய்
தேனாகிப் பாலாம் திருமாலே –சர்வரஸ என்கிறபடியே பிராட்டியோடே கூட பரம பதத்தில் இருக்கிறவன்
ஆனாய்ச்சி-வெண்ணெய் விழுங்க நிறையுமே –உபய விபூதி உக்தனாய் இருக்கிற இருப்புக்குச் சேருமோ
ஓர் இடைச்சி வெண்ணெயை விழுங்குகை –
பிரளயம் கொள்ளாத படி வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறம்பே உமிழ்ந்து ரஷித்த வயிறு இத்தனை
வெண்ணெயாலே நிறைக்க வேண்டி இருந்ததோ -பின்னை உன் வயிற்றை வண்ணானுக்கு இட மாட்டாயோ -என்கிறார்
ருசி யுடையாரோடு சம்பந்தம் உள்ளது ஓன்று அல்லாத உபய விபூதி யோகம் குறை பட்டு இருக்குமவனுடைய ருசி சொல்கிறது –
ஆனாய்ச்சி வெண்ணெய் -முடை நாறும் வெண்ணெய் / நிறையுமே -குறைக்கும் இட்டு அடைக்க வேணும்
சம்சாரிகளுக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

—————————————————————-

ஆகாசம் அக்னி அலை எறிகிற கடல் காற்று முதலான பூதங்களாலே சமைந்த அண்டாந்த வர்த்தி பதார்த்தங்களுக்கு
நிர்வாஹகனாய் பரமபத வாசிகளுக்கு சர்வ ரஸ சமவாயமான தேன்–ஸ்வாபாவிக ரசமான பால் –
இவை போலே நிரதிசய போக்யனாய்க் கொண்டு இருக்குமவனாய் -இந்த உபய விபூதி யோகத்துக்கு மேலே
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த ஐஸ்வர்யத்தையும் யுடையவனே -பண்டு ஒரு நாளிலே பிரளயத்தில் அழியாத படி
பூமியை அடங்க எடுத்து விழுங்கி உள்ளுக் இடந்து தளராத படி வெளிநாடு காண உமிழ்ந்த உன்னுடைய
வயிறானது பசு மேய்க்கும் குடியிலே பிறந்த யசோதை பிராட்டி கடைந்து வைத்த முடை நாற்றம்
குன்றாத வெண்ணெயை அபி நிவேசத்தோடே அமுது செய்து அருள அத்தாலே நிறையுமோ

——————————————————————————————–

கீழ்ப் பாட்டிலே ஆஸ்ரித வாத்சல்யம் சொல்லிற்று -இதில் ஆஸ்ரித வாத்சல்ய கார்யமான
அவர்கள் விரோதிகள் பக்கல் யுண்டான சீற்றம் சொல்லுகிறது –
எங்கனே உய்வர் தானவர் நினைத்தால் என்று நரசிம்ஹத்தைக் கண்ட அஸூர ராக்ஷஸ
ஜாதியாகப் படும் பாட்டை அவனைக் கண்ட அனுகூலர் படும் படி –

ஓர் அரியாய் நீ இடந்தது என்று நம்மை ஆஸ்ரித பக்ஷ பாதியாகக் கீழே சொன்னீர் –
அது நீர் அறிந்த படி என் என்ன -ஹிரண்யன் மேலே பண்ணின சீற்றம் கொண்டு அறிந்தேன் என்கிறார் –

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று ——–93-

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச-வயிறு அழலுகிறது ஆர்க்கு என் என்னில் –ஆழ்வார்க்கு –முன்பு ஒரு நாள்
ஹிரண்யன் செய்ததாய் இராதே தம்முடைய எதிரே வாளும் உருவிக் கொண்டு புறப்பட்டால் போலே இருந்த படி
என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே—என்கிறபடியே –
வந்தானை-தம்முடைய மேலே வந்தால் போலே இருக்கிற படி

பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா–ஸுகுமார்யத்தாலும் அழகாலும் பூவைக் கீழ்ப் படுத்துவதான
கையிலே திரு வாழியை யுடையவனே
பொறி யுகிரால்-பார்த்த படியே இருக்க வேண்டி இருக்கிற திரு உகிராலே
நின்-சேவடிமே லீடழியச் செற்று ——என்றும் நாங்கள் ஆசைப்பட்டுப் போகிற திருவடிகளிலே
அவனை ஏறிட்டு இனி முளையாத படி முடித்து

எயிறிலக  வாய் மடுத்த தென் நீ–பிராட்டிமார்க்கும் சம்போகத்திலே திரு முத்து தோற்றாத படி பண்ணும் ஸ்மிதம் வேண்டா
எயிறு தோற்றும்படிக்கு ஈடாகப் பண்ணின ஹாசத்தைக் கண்டால் அதுவே அமையும் என்னும் படி இருக்கிற வாயை மடுத்தது என் நீ
உனக்கும் சீற்றத்துக்கும் விஷயம் யுண்டோ -முடிந்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே -முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு
த்வயி கிஞ்சித் சமாபன்னே-என்னும் விஷயங்கள் அன்று -அத ராமோ மஹா தேஜோ
கொடியவாய் விலங்கின் இன்னுயிர் மலங்கக் கொண்ட சீற்றம் -என்று சரணாகதர்க்குத் தஞ்சமான தனமாவது
ஆஸ்ரித அர்த்தமாக ஹிரண்யனைப் பற்ற பண்ணும் சீற்றம் அஸ்மான் ஹந்தும் நஸம்சய ராசாசோ அப்யேதி -இத்யாதி
தனித் தனியே சொல்லில் ஒருவர் அல்லா ஒருவர் பிழைக்கிலுமாம் -என்று வேர்ப் பற்றிலே நலிய –
பொறியுகிரால்- பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா-போகத்துக்கு ஏகாந்தமான அழகை யுடைய ஆறு காழி என்னுதல் –
திரு வாழி பிடிக்கத் தகும் கை என்னுதல் / சென்று வைத்து -வாய் மடுத்த தென் நீ-சங்கல்பம் தவிர்ந்து
திருவாழி தவிர்ந்து திரு வுகிராலே பிளந்து பிணத்தின் முகத்திலே நா மடிக் கொள்வதே –

———————————————————

ஸுகுமார்யம் அழகு முதலான ஸ்வ பாவத்தால் பூவைப் பூவினுடைய வடிவு அழகைத் தலை அழித்து இருப்பதாய்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை தரித்த திருக் கையை உடையவனே -கண்ட அனுகூலர் என்னாகத் தேடுகிறதோ -என்று
வயிறு எரியும் படி வாளை உருவிப் பிடித்துக் கொண்டு வந்த ஹிரண்யனை உன் உக்ர வேஷம் கொண்டு
அவன் பயப்படும்படியாக பிராட்டிமார் பள்ளி கொண்டு அருளும் உன்னுடைய சிவந்த திருவடிகளின் மேல் ஏறிட்டு
நாநா வர்ணமான அழகிய திரு யுகிர்களாலே கட்டுக் குலைந்து சிதறிப் போம் படி முடித்து-

பின்னையும் சீற்றம் மாறாமையாலே திரு எயிறுகளானவை விளங்கும்படிக்கு ஈடாக நீ நா மடிக் கொண்டது என்-
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையால் -என்ற பாடமாய்த்தாகில்-புஷ்பத்திலும் காட்டிலும் ஸூ குமாரமாய்
திருக் கைகளால் -திரு உகிராலே–அனுகூலரை வைத்துக் கொள்ளுகைக்கு யோக்கியமான திருவடிகளிலே
அவனை வைத்துக் கொண்டு -என்று பொருளாகக் கடவது –

—————————————————————————————————

இப்பாட்டு கீழ்ப் பாட்டில் விருத்தாந்தம் ஆகவுமாம் –
ஹிரண்ய சம்ஹாரத்துக்கு பிறகு ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு காட்டியதாகவுமாம் –
இந்த வைஸ்வரூப்யம் துரியோதன சதஸ்ஸிலே காட்டினதாகவுமாம் –
மார்க்கண்டேய பகவானுக்கு இது அடையத் தன் வயிற்றிலே இருந்தபடியைக் காட்டிற்று ஆகவுமாம்
தத் பஸ்யம் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன –என்கிறபடியே –

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன் படிகள் எல்லாவற்றையும் காட்டும் ஸ்வ பாவனை அல்லது
என் நாவானது வேறு சிலரை ஏத்தாது என்கிறார் –

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா –94-

வாய் அங்காந்து முற்றும்-மறையவர்க்குக் காட்டிய மாயவனை–பீஷ்மாதிகளுக்கு காட்டி அருளிய ஸ்ரீ கிருஷ்ணன் –
மார்கண்டேயருக்கு காட்டி அருளிய ஸ்ரீ வாமனன் என்றுமாம் –

செற்று எழுந்து தீ விழித்து-என்றது நீ ஒரு தூது வர விட வேண்டா என்ற துரியோத நாதிகளைச் சீறிப் பார்த்த படி யாகவுமாம் –
நரகில் பாப கர்மம் போக்குகைக்கு என்று சங்கல்பம் வேண்டா –
சென்றவிந்த வேழ் உலகும்-மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்-மறையவர்க்குக் காட்டிய மாயவனை
ஸ்ரீ மார்க்கண்டேய பகவானுக்காகவுமாம் – ஸ்ரீ பீஷ்ம துரோணாதிகள் ஆதல் -சாமான் யலஷியா வயம்
யல்லால்-இறையேனும் ஏத்தாது என் நா –பர வ்யூஹாதிகளில் போகாது –

————————————————————-

அதி பிரவ்ருத்தமான இவற்றை அழிக்கக் கடவதாய் பெரிய உத்யோகத்தோடே கிளர்ந்து -அகவாயில் சீற்றம் தோற்ற
நெருப்பு எழப் பார்த்து அழித்துப் பொகட்டு -தன் பக்கலிலே உப ஸம்ஹ்ருதமாய் வந்து சேர்ந்து கிடக்கிற
இந்த சப்த லோகங்களையும் அழித்துப் பொகட்டு -அதுக்கு மேலே அழிந்த போன வஸ்துக்கள் இவை காண் -என்று
தன் திருப் பவளத்தைத் திறந்து -தத் பஸ்ய அஹம் சர்வம் -என்று சகல ஜகத்தையும் வைதிகனான மார்க்கண்டேய பகவானுக்கு
முன்பிருந்த கட்டளையிலே காட்டின ஆச்சர்ய சக்தி உக்தனானவனை ஒழிய ஏத்தப் பெறாமல் உறாவிக் கிடக்கிற என் நாவானது

பர வ்யூஹாதிகளான அவஸ்தாந்தரங்களிலே ஏக தேசமும் ஸ்தோத்ரம் பண்ணாது –
அன்றிக்கே பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்வரூப்யம் காட்டின படியை இப்பாட்டில் சொல்லுகிறது ஆகவுமாம் –
அப்போது கிளர்ந்து நெருப்பு எழப் பார்த்து சம்ஹரித்துச் சொல்லுகிற இந்த சகல லோகங்களையும்-
வக்த்ராணி தே த்வரமாணா விசந்தி -என்கிறபடியே தன்னுடைய கோபாக்கினியால் ஜ்வலித்துக் கிளருகிற
திருப் பவளத்திலே விழுந்து நசித்துப் போகிற படியை வைதிகரான பீஷ்மாதிகளுக்குக் காட்டின ஆச்சர்ய பூதனை ஒழிய
என் நா ஏத்தாது என்று பொருளாகக் கடவது -பீஷ்மாதிகள் விஷயமான போது மறையவர்க்கு என்கிற இது
ரேபாந்தமாகக் கடவது -மார்க்கண்டேய விஷயமான போது னகர ஒற்றாகக் கடவது –

————————————————————————————————————–

இது விடப் போகாததாய் இருந்தது -இது கீழ்ப் போகாததாய் இருந்தது -இதுக்கு எங்கனே விலக்கடி யுண்டான படி –
அபரிகரராய் இருக்கில் செய்யலாவது இல்லை இறே -என்னில் ஈஸ்வரன் ஒரு பரிகரம் தேடும்படி வைத்தானோ என்கிறது –

இப்படி அவனை ஏத்துகைக்கு பரிகரமான நாவைக் கொண்டு அவனை ஏத்தாதே -சேதனர் அத்தை சம்ஹரிக்கைக்குக்
பரிகரமாக்கிக் கொண்ட படி எங்கனே -என்று ஆச்சர்யாப் படுகிறார் –

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று-ஓவாது உரைக்கும் உரை உண்டே–ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாசாயா -என்கிறபடியே
நாக்கு ஆகில் அவனை ஏத்தக் கடவது -அந்நாக்கு கண்டவோபாதி திரு மந்த்ரமும் இவனுக்கு இளைப்பாறிச் சொல்ல வேண்டாதது உண்டே
ஒரு சஹஸ்ராக்ஷரீ மாலா மந்த்ரம் -இது சொல்லுமதில் நரக அனுபவம் அமையும் என்னாத திரு மந்த்ரம் உண்டே –
மூவாத-மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே –அபுநராவ்ருத்தி லக்ஷணமான ப்ராப்யத்துக்குச் செல்லும் அர்ச்சிராதி மார்க்கம் உண்டே –
என்னொருவர்-தீக்கண் செல்லும் திறம் —-நரகத்துக்கு போக வழி நேராகக் கண்டிலோம் -இதுக்கு விலக்கடி எங்கனே உண்டாயிற்று
சம்சாரி ஹிதம் காண்கிறிலோம்-நாளோ செல்லா நின்றது -என்னொருவர்-தீக்கண் செல்லும் திறம் -வலிய விலக்கடி தேட வேணும்

————————————————————

ஏத்துகைக்கு பரிகரமான நாவானது புறம்பு போய்த் தேட வேண்டாத படி தம் தாம் வாயிலே உண்டே -சஹஸ்ராக்ஷரீ மாலா மந்த்ரம்
போலே நெடுக இருந்து சொன்னாலும் முடிவு காண ஒண்ணாத படி இருக்கை அன்றிக்கே -நமோ நாராயணாய என்று ஒரு காலே
சொல்லி இளைப்பாறலாம் படியான திரு மந்த்ரம் உளதாய் இரா நின்றதே -அபுநராவ்ருத்தி லக்ஷணமாய் பரம ப்ராப்யமான
மோக்ஷத்திலே செல்லுகைக்கு ஈடான உபாயம் உண்டே –இப்படி உஜ்ஜீவனத்துக்கு உடலான நல் வழி போகாமல் விநாசத்துக்கு
ஈடான துர் மார்க்கங்களிலே சென்று ஒருவர் விழுகிற பிரகாரம் என்னாயிருக்கிறதோ என்று விஸ்மயப் படுகிறார் –

——————————————————————————————————

விலக்கடி இல்லை என்று இருக்கலாய் இருக்கிறது இல்லை -இவ்வர்த்தத்தைக் கை விடாதே கொள்-என்று
தம்முடைய திரு உள்ளத்தைப் பார்த்து அருளிச் செய்கிறார் –

லௌகிகர் செய்தபடி செய்ய -நெஞ்சே நீ முந்துற முன்னம் நான் சொல்லுகிற இத்தை அழகியதாக புத்தி பண்ணு என்கிறார் –

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்–நான் சொல்லிற்று தப்பாதே போகிற நெஞ்சே –
அர்த்த தத்வம் கண்டு அல்லது கால் வாங்கேன் -என்று இருக்கிற நெஞ்சமே –
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் —
புறம் தான் இம் மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
விஹிதத்தைச் செய்து நிஷிதத்தைப் பரிஹரித்துப் போருகிற நம்மோடு விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில் -ஏஷ ஏவ சாது கர்ம கார யதி –தம்முடைய பக்கல் கர்த்ருத்வம் தவிர்த்த பின்பு
ஒரு அசேதன கிரியையைப் பற்றுவர் அன்றே -செங்கண் மால் கண்டாய்-சர்வேஸ்வரன் கண்டாய் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷிணீ

இம்மண் இத்யாதி -பிரதிபந்தகமான -அசித்தோடே கூட சேதனனும் அவனே -அநுக்தமான மஹத்தாதிகளைச் சொல்லுகிறது
அவனை ஒழிய ஸ்வ தந்திரமாய் இருப்பது ஒன்றும் இல்லையே –கண்டாய்  கடைக்கட்   பிடி–இவ்வர்த்தத்தை திரும்பாது
கடைக்கட் பிடி -கடி போகப் பிடி -இவ்வர்த்தத்தின் யுடைய கடைப்பிடி கண்டாயே என்றுமாம்

அறம் இத்யாதி -ஆபாத ப்ரதீதியில் அவனை ஒழிய புண்ய பாபம் என்று தோற்றுவது-நிலை நின்று பார்த்தால் அவனே கடவன் என்று தோற்றும்
திரும்பாது என்று நெஞ்சோடு கூட்டவுமாம் –திரும்பாது -அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் -என்னவுமாம்
திரும்பாது கடிகைக் கடிபிடி -என்னவுமாம் –
நாட்டார்க்கு பல வழி யுண்டாகிலும் நம்முடைய வழியைப் பற்றி இராய நீ -திரும்பாது என் நெஞ்சமே
சொல் என்று அலைகிற நெஞ்சே -/ செங்கண் மால் – நம்முடைய விஷயத்தில் இருக்கிறபடி கண்டாயே –
அறம் இத்யாதி -பெறுகைக்கும் இழக்கைக்கும் அவனுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களை ஒழியப் போக்கு இல்லை
சர்வமும் பகவத் அதீனம் அன்றோ -கடைக் கட் பிடி –அறுதியாகப் பிடி —

—————————————————————

எனக்கு பவ்யமான நெஞ்சே புண்யம் பாபம் என்று சொல்லப்படுகிற இரண்டுக்கும் நிர்வாஹகனாய்ப் போருகிறவன்
புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் தானே கிடாய் -இந்த பூமியும் அலைகிற கடலும் வாயுவும் ஆகாசமும் இவற்றுக்குப்
புறம்பான மஹதாதிகளுமான இவற்றுக்கு எல்லாம் நிர்வாஹகனாய் இருக்கிறவன் அந்த புண்டரீகாக்ஷன் தானே கிடாய்
முடிவில் வந்தால் இதுவே அர்த்த தத்வம் என்று இத்தைத் தவறாத படி மனசிலே பிடித்துக் கொள் –

————————————————————————————————

அறம் பாவம் என்றும் இரண்டும் ஆவான் -என்றதுக்கு வியாக்யானம் இப்பாட்டு –
பொடி சேர் -என்ற இத்தால் பிராயச்சித்தம் பண்ணி அத்தால் ஸூத்தன் அன்றியிலே இருக்கிறவனையும்
ஸூத்தன் ஆக்கிற்று திருவடிகளில் ஸ்பர்சத்தாலே என்கிறது

அறமும் அவனே என்று பாவனமாகச் சொல்லா நின்றீர் -கங்கை தொடக்கமானவையும் பாவனம் அன்றோ என்ன
அதனுடைய பாவனத்வம் தத் சரண கமல சம்பத்தாயத்தம் என்கிறார் –

பிடிசேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பிடிசேர் களிறளித்த பேராளா உந்தன்-அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே –ஜென்ம ஞான வ்ருத்தங்கள்-
சாந்தோ தாந்தோ உபரதஸ் திதி ஷூ -என்னும் அவன் இறே மோக்ஷத்து விஷய பிரவணம் ஆகையிறே பாபம் ஆவது
தன் பிடி பக்கல் ப்ரவணமாய் தன் பக்கலில் இன்றிக்கே இருந்த களிற்றை ரஷிக்கும் போது பாபம் தான் இட்ட வழக்காக வேணும் இறே –
பேராளா -பிடி சேர்ந்த களிற்றை ரக்ஷித்தான் என்றால் அவன் செய்தான் ஆகில் கூடும் என்று இருக்கை –
உந்தன்-அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே–இத்தால் தர்மம் அவன் இட்ட வழக்கு என்கிறது
பொடி சேர்-அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த-புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் —
பஸ்மச் சந்தனாய் அக்னியைக் கையிலே ஏற்றானாய் இருந்துள்ள ருத்ரனுடைய விளங்கா நின்ற ஜடை மேலே
பாய்ந்த புனலை யுடைத்தான கங்கை என்னும் பேரை யுடைத்தான வி லக்ஷணையான ஸ்த்ரீ உன் திருவடிகளிலே
சேர்ந்து அன்றோ நாட்டுக்கு பாவனம் ஆயிற்று –
பிடி சேர் களிறு -அவன் பிடியை நினைக்க நீ அவனை நினைத்திலையோ -ஒரு கால் நினைத்தான் ஆகில்
முன்பு ஸ்வரூபம் இது அன்றோ என்கிறது –ஜென்ம வ்ருத்தங்கள் அன்று பிரயோஜகம் –
அருள் பெற்றாள் -பிறரை ஸூத்தராக்கும் படி பார்த்து அருளினான் –

————————————————————-

ஸ்வ ஹிதம் அறியாதே பிடியின் பக்கலிலே பிரவணமாய் -அத்தை விட்டு நீங்க மாட்டாமல் கூடி வர்த்திக்கிற ஆனையை-
அதின் வ்ருத்த தோஷம் பார்த்து இகழாதே தண்ணளி பண்ணி ரஷித்த மஹா பிரபாவன் ஆனவனே
பஸ்ம சய்யா சயான -என்கிறபடியே பண்ணின தோஷத்துக்கு பிராயச்சித்தமாக எப்போதும் பஸ்மத்திலே சாயுமவனாய்
அக்னிக்கு அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய ஒளியை யுடைத்தான ஜடையின் மேலே
தச் சுத்யர்த்தமாக வந்து குதித்த நீரை யுடையளாய் -கங்கை என்னும் பேரை யுடைய சிலாக்யையான ஸ்த்ரீ யானவள்
பாதகிகளையும் பரிசுத்தனாக்கும் -ஸ்வதஸ் சக்தியை யுடையனான உன் திருவடிகளைக் கிட்டி அன்றோ
அவள் அந்த பிரசாதம் எல்லாம் பெற்றது -விஷய பிரவணமான களிற்றை ரஷிக்கையாலே பாபம் இவன் இட்ட வழக்கு என்றும்
கங்கையினுடைய பாவனத்வம் தத் சம்பந்தாயத்தம் என்கையாலே புண்யம் அவன் இட்ட வழக்கு என்றும் சொல்லிற்று யாய்த்து –

——————————————————————————————————————

ஈஸ்வரனாய் அதிகாரியாய் -தானும் சிலர் காரியத்துக்கு கடவனாய் இருக்கிறவனை -இவனுடைய சம்பந்தத்தாலே
ஸூத்தன் ஆனான் என்று சொல்லும் படி எங்கனே என்னில் -ஈஸ்வர அபிமானியாய் இருக்கும் போது சொல்லுமத்தை
பிரமாணிக்க ஒண்ணாது -இவனுடைய ஸ்வரூபத்தை பார்க்கலாகாதோ -என்கிறார் –
ருத்ரனுடைய ஐஸ்வர்யம் பொய்யோ -என்னில் பகவத் அதீனம் -என்கிறார் —

அவன் திருவடியில் பிறந்த கங்கையை ஜடையிலே தரித்தான் என்று ருத்ரனுக்கு குறை சொல்லுகிறது என்
அவனும் ஒரு காரியத்தில் அதிகரித்து ஈஸ்வரனுமாய் அன்றோ போருகிறது-என்ன அவனுடைய ஈஸ்வரத்வம்
இவனுக்கு சரீர பூதன் ஆகையால் வந்தது அத்தனை போக்கி ஸ்வத இல்லை என்கிறார் –

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் –98-

இருவரங்கத் தால் திரிவரேலும்–இருவர் அங்கத்தால்-வடிவுடன் திரிந்தார்கள் ஆகிலும்
ஒரு வனங்கத் தென்று முளன்-ஒருவன் -சாதக வேஷம் பூண்ட சிவன் -அங்கத்து என்றும் உளன் -நெடுமாலின்
ஏக தேச சரீரத்தைப் பற்றி எக்காலத்திலும் சத்தை யுடையனாய் இருப்பன் –

பொன் திகழு மேனிப்–சர்வேஸ்வரனாய் இருக்கும் போது மேக ஸ்யாமமாய் இருக்கும் இறே
புரி சடை–தாழ் சடையானுக்கும் நீண் முடியானுக்கும் வாசி பார்த்துக் கொள்ளலாம் அத்தனை இறே –
அம் புண்ணியனும்–ஹூத்வாத்மா நம் தேவ தேவோ பபூவ –என்கிற படியே –
நின்றுலகம் தாய நெடுமாலும் –ஸ்வைரமாக அதி மானுஷ சேஷ்டிதத்தைப் பண்ணினவனும் -அவன் தலையிலும்
பிறர் தலையிலுமாகத் திருவடிகளை வைத்தவனும்
என்றும்-இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் —–இருவரும் ச பரிகரமாகத் திரிந்தாரே யாகிலும் -ஒருவனுக்கு ஸ்திதி ஒருத்தன் சரீரத்தைப் பற்றி
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் என்னும் படியே —
நின்று உலகம் இத்யாதி -ருத்ரன் தலையிலும் நாட்டார் தலையிலும் ஓக்க அடியிட்டவன் –
இரு அங்கத்தால் -இரண்டு வடிவுகளாலே -என்றுமாம் -அங்கத்தில் ஏக தேசத்தில் உளன் என்றுமாம் –

——————————————————-

பொன் போலே ஒளி விடுகிற வடிவையும் பின்னின ஜடையையும் யுடையனாய் -இப்படி ஜடை கட்டி அனுஷ்டித்த
அழகிய புண்யத்தை யுடைய ருத்ரனும் ஸ்வைரமாக நின்று ருத்ரனோடு அல்லாதாரோடு வசியற சகல லோகங்களையும்
அநாயாசேன அளந்து கொண்ட சர்வாதிகனான சர்வேஸ்வரனுமாகிற இவர்கள் இருவரும் சர்வ காலத்திலும்
இரண்டு சரீரத்தை உடையவராய் -அறிவு கேடர்க்கு ஓக்க நினைக்கலாம் படி திரிந்தார்கள் யாகிலும்
புண்ணியனான ஒருவன் நெடுமாலான ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு சர்வ காலத்திலும் லப்த சத்தாகனாய் இருக்கும்
அன்றிக்கே ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த சத்தாகனாய் இருக்கும் என்னவுமாம்
இத்தால் பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -என்கிறார் –

——————————————————————————————————————–

நாட்டில் பெரியவராய் இருக்கிறவர்களும் தங்களுக்கு ஏற ஷேத்ரஞ்ஞராய் இருக்கிற படி அறிந்து இருக்கச் செய்தே-
ஈஸ்வரர்களாகப் பிரமிக்கிற படி கண்டு திரு உள்ளம் பயப்பட -நாம் கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் என்கிறது –
புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –

இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் –நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் –99-

உளன் கண்டாய் -இலனானவனை உளன் என்கிறது அன்று -அவனுடைய சத்தை நம்முடைய ரக்ஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய வி நாசத்துக்கும் -நாம் பிரதிபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்றி -நம்மை அஞ்சி
பித்தத்தாலே மோஹித்து கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டேன் ஆகில் அறுத்து விழ விடு கிடாய் என்று
அறிவுடையார்க்குச் சொல்லி வைக்குமா போலே

நன்னெஞ்சே –எம்பெருமான் நமக்கு உளன் என்று சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
உத்தமன்  என்றும்-உளன் கண்டாய் –அவனுடைய உண்மை ஸூ ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனனாய் இருக்கை –

உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்-இவன் ஒரு நாள் உளன் என்று இருக்கில் -பின்னை இவன் என்றும் நமக்கு உளன்
என்று இருக்கும் -தான் புகுரப் புக்கால் விலக்காதவர்களுடைய ஹிருதயம் விட்டுப் போக அறியான் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்-உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —-திருப் பாற் கடலில் கிடக்கிறதும்
திருமலையில் நிற்கிறதும் தம்முடைய ஹ்ருதயத்தில் புகுருகைக்கு அவகாசம் பார்த்து என்று அறி –
உளன் கண்டாய் –பிறருக்கு உபதேசிக்கிறவர் –எம்பெருமான் உளன் என்று இருக்கிறார் அல்லர்
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –
நன்னெஞ்சே –இவ்வர்த்தத்தில் என்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே -உத்தமன் -தன் பேறாக உபகரிக்கை -என்றும்
அசன்னேவ ச பவதி -ஆனவன்றோடு–சந்தமேனம் ததோ விது–ஆனவன்றோடு வாசி இல்லை – உள்ளுவார்–புகுர சம்வத்திப்பார்
உள்ளத்து உளன் -இடவகைகள் இகழ்ந்திட்டு -வெள்ளம் இத்யாதி -என்றும் உளனானமை காட்டுகிறார் -அணைப்பார் கருத்தானாவான் —

—————————————————————————-

அவன் ஒருவன் உளன் -என்று சொன்னால் உகக்கும் நல்ல நெஞ்சே -பிறர்க்கு நன்மை வேணும் -என்று
எப்போதும் சிந்தித்த படியே இருக்கும் உத்தம புருஷன் -நம்முடைய ரஷணத்தாலே தன் சத்தையாம் படி உளனா மவன் கிடீர்
நாம் உளரான அன்றோடு இலரான அன்றோடு வாசி அற சர்வ காலத்திலும் நம்மை ரஷிக்கையிலே தீஷித்து உளனாய் இருக்குமவன் கிடாய்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டு விலக்காதே அத்தை பொருந்தி அநுஸந்திக்குமவர்களுடைய நெஞ்சிலே சாதரமாக
நித்ய வாசம் பண்ணுமவன் கிடாய் -திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனும் -திரு மலையிலே நின்று அருளினவனும்
கிடப்பது நிற்பதாய் அங்கு பண்ணின கிருஷியின் பலமாக நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
இடவகைகள் இகழ்ந்திட்டு -என்கிறபடியே அவ்விடங்களை அநாதரித்து சாதரமாக நித்ய வாசம் பண்ணுமவன் என்று புத்தி பண்ணு –

—————————————————————————————————————–

பேறும் அத்தாலே -பெறுவதும் அவன் திருவடிகளை அவனாலே பெறுவது -என்கிறது –

இப்படி மேல் விழுந்து நம்மை ஆதரிக்கிறவனைப் பெறுகைக்கு உபாயம் ஏது என்ன அவனே ப்ராப்யம்
அவனைப் பெறுகைக்கு ப்ராபகமும் அவனே என்று அத்யவசி -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

ஓரடியும்-லோகத்தை அடங்கலும் தன்னதாக்கின திருவடிகளையும்
சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்–சகடாசூரனை நிரசித்த போக்யமான திருவடியையும்
ஈரடியும் காணலாம் –இவ்விரண்டு திருவடிகளை ப்ராப்யம்
என் நெஞ்சே –காண வேணும் என்று இருக்கிற என்னெஞ்சே -இதுக்கு உபாயம் ஏது என்னில் -அவன் என்கிறது –
ஓரடியில்-தாயவனைக் -ஓர் அடியாலே எல்லாவற்றையும் அளந்த ஸூலபனை
கேசவனைத் -விரோதி நிராசன சீலனானவனை
தண் துழாய் மாலை சேர்-மாயவனையே மனத்து வை —ஸூலபனும் இன்றிக்கே விரோதியைப் போக்குமவனும் இன்றிக்கே
இருக்கிலும் விட ஒண்ணாத போக்யமான மாயவனை -நாம் உன் சஹகாரிகள் என்று இராதே
காண்பதுவும் அவனையே -காட்டுவானும் அவனே –நமக்கு பிரதிபத்தியே உள்ளது –
சாடுத்த ஓர் அடியையும் திரு உலகு அளந்த சேவடியையும் காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி

———————————————————————–

காண வேணும் என்று அபி நிவேசிக்கிற -என்னுடைய நெஞ்சே -ஒரு திருவடியால் ஜகத்தை எல்லாம் அளந்து கொண்ட
சீல ஸுலப்யாதி குணங்களை யுடையவனாய் -கேசி ஹந்தா வாகையால் விரோதிகளை வேறு அறுக்கைக்கு உறுப்பான
ஞான சக்தியாதிகளை யுடையனாய் -ஸூ லபனும் அன்றிக்கே விரோதியை வளர்க்கிலும் விட ஒண்ணாத படி
குளிர்ந்த திருத் துழாய் மாலையால் அலங்க்ருதனாயக் கொண்டு நிரதிசய போக்யனாய் ரஷிக்கும் இடத்தில்
சஹாயாந்தரங்களை அபேக்ஷியாத ஆச்சர்ய பூதனு மாயிருக்கிற ஸர்வேஸ்வரனே உபாயம் என்று மனசிலே
அத்யாவசாய புரஸ்சரமாக வைத்துக் கொள்ளு -இப்படி அவனே உபாயம் என்று அத்யவசித்தால் லோகத்தை அளந்து கொண்ட
ஒரு திருவடியையும் -சகடம் முறிந்து விழும்படி உதைத்துத் தள்ளிப் பொகட்டதாய் -அழகிய பூ போலே அதி ஸூகுமாரமான
சிவந்த ஒரு திருவடியுமான இரண்டு திருவடிகளையும் சாஷாத் கரித்து அனுபவிக்கலாம் –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: