திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-10–

திருநாட்டில் புக்கு அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்த ஆழ்வார் அவ்விருப்பு ஞான அனுசந்தான மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அன்றிக்கே -ப்ரக்ருதி பத்தரானமையை அறிந்து மேரு சிகரத்தில் இருந்து நிர்த்துக்கனாய் மிகவும்
ஸூகியாய் நின்று வைத்து -துக்க பஹுளமாய்-துஸ் தரமாய் மிகவும் ஓர் இடத்திலும் ஸ்திதி இல்லாத படி பேர் ஆழமான கடலின் நடுவே
தள்ளுண்டவனைப் போலே அவசன்னராய் -அதுக்கு மேலே தமக்கு அவன் பண்டு கை வந்த படியையும் தன்னைப் பெறுகைக்கு
உபாயம் தானே அல்லாது இன்றிக்கே இருந்த படியையும் அவ்வளவு அன்றிக்கே -எல்லார்க்கும் அவன் அல்லது வேறு ரக்ஷகர் அன்றிக்கே
இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து -இப்படியே இருக்கிறவனை அஷணத்திலே பெறாமையாலே -பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து
தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட
இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால்
தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு
காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டத் தவிர்ந்து
தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு
மிகவும் கூப்பிட்டு தரிக்க மாட்டாமை சரணம் புக –
பரம தயாளுவான சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே இவர் அபேக்ஷித்தாலே போலே
தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து
-இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –

—————————————————————-

நிர்ஹேதுகமாக உன்னுடைய ஸுந்தரியாதிகளைக் காட்டி எனக்குத் தன்னை ஒழியச் செல்லாத படி பண்ணி என்னை துஸ் ஸஹமான சம்சாரத்திலே வைத்து நீ போய்ப் பண்டு போலே ஒரு குண ஆவிஷ்காரத்தை பண்ணி விட ஒண்ணாது என்கிறார் –

முனியே  நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

முனியே –பஹுஸ்யாம் என்று தொடங்கி சொல்லப்படுகிற மஹத் அஹங்காராதி பஞ்ச பூத பர்யந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியை பண்ணுவதாய் யுள்ள திவ்ய சங்கல்பத்தை யுடையனாய் பகவத் சப்த வாச்யனாய் பர ப்ரஹ்ம பரமாத்ம சப் தங்களினாலே வேதாந்தங்களிலே சொல்லப் பட்ட ஸ்வரூபேண அவஸ்த்திதனாய் இருந்துள்ள பரம புருஷனே என்றவாறு –
நான்முகனே -சதுர்முக ஸ்வரூபனாய் -அவனுக்கு அந்தராத்மாவாய்க் கொண்டு திசைமுகன் கருவுள் வீற்று இருந்து சேதனரான புருஷர்கள் அசேதனமான ஸ்வ சரீரத்தை கொண்டு தம் நினைவுக்கு தக்கபடி கமன ஆகமனாதி சேஷ்டைகளைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர் முகனைக் கொண்டு -ஸ்வ சங்கல்ப அனுகுணமான -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித பூத ஸ்ருஷ்ட்டியையும் பண்ணி அருளுதலால் சேதனரானவர்கள் தேவர்கள் என்றும் மனுஷ்யர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் க்ஷத்ரியர் என்றும் கோ வென்றும் ஸ் வ சரீரங்களைக்காட்டுகிற சப் தங்களால் வேறாய் இருந்த தாங்களும் சொல்லப் பட்டால் போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் காட்டக் கடவ சதுர்முக சப்தத்தாலே-அவனில் வேறாய் அவனுக்கு அந்தராத்மாவாய் இருந்த எம்பெருமானும் சொல்லப்படுகையாலே –நான் முகனே -என்னும் சொல்லாலே எம்பெருமானை சம்போதிக்கிறது –
முக்கண் அப்பா–இப்படி ஜகத் சம்ஹாரம் பண்ணுகிற  எம்பெருமானுக்கு சரீர பூதனான த்ரி நேத்ரனுடைய பேரான சப்தத்தினாலே அவனுக்கு அந்தராத்மாவான எம்பெருமானை சம்போதிக்கிறது –
என் பொல்லாக்-கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –-ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய் ஆதி தேவர்களாய் யுள்ள ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே -தான் அடியவர்க்கு எளியன் ஆதலால் தான் அவர்களோடே ஒத்த தரத்தனாய் இஷ்வாகு வம்சயரோடும் யது வம்சயரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திருவவதாரம் பண்ணினால் போலே ஆஸ்ரித ஸூலபத்வர்த்தமாக ஆதி தேவனாய் விஷ்ணு நாமாவாய் ஸ்வ ஸ்வரூபத்தாலே திருவவதாரம் பண்ணின படியால் சம்போதிக்கிறது –த்ருஷ்ட்டி தோஷ சாந்த்யர்த்தமாகவாதல் -அவனுடைய அழகால் விசஜாதீயத்தையாலே –பொல்லா -என்கிறது –
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி என்னை வஞ்சித்து என்னை அடிமை கொண்ட பிரானே
தனியேன் ஆர் உயிரே -தன்னைக் காணப் பெறாதே வியசனத்தில் ஒரு துணை இன்றியே இருந்த எனக்கு பிராண ஹேதுவாய் இருந்துள்ள பிராணனாய் யுள்ளாயே -என் தலை மிசையாய் வந்திட்டு–இப்படி ஸ்வரூபத்தினாலும் -ஸமஸ்த ஜகத்தினுடைய ஸ்ருஷ்டியாதி சேஷ்டிதைகளும் உன்னால் அன்றி ஒருத்தராலும் தம்மால் செயல் இல்லை -என் பக்கலிலும் சுவீகார ப்ரப்ருதி இவ்வளவும் வர உன்னால் அல்லது என்னால் செய்யப் பட்டது ஒன்றும் இல்லை -மேலும் என்னால் செயல் இல்லை –இப்படி ஸமஸ்த வியாபாரமும் செய்கிற உனக்கு இனி மேல் பரிஹரிக்கை ஒரு பரமும் அன்று – ஆதலால் இப்படி என் தலை மிசையாய் வந்திட்டு –இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–
இப்பாட்டில் பத யோஜனை ஆழ்வான் படி –என் தலை மிசையாய் வந்திட்டு -என்கிறது எனக்கு பூர்ணமாக வந்து தோற்றி —நிர்ஹேதுகமாக வந்து வைத்து என்றுமாம் –
இனி நான் போகல் ஒட்டேன்-உன்னைக் காட்டின மாத்ரம் அன்றிக்கே -முக்த ப்ராப்த தேசத்தையும் காட்டிலும் இனி விஸ்லேஷிக்க ஓட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–பண்டு போலே குண ஆவிஷ் காரங்களை பண்ணி -பெற்றேனாகப் பண்ணி -என்னை வஞ்சியாது ஒழிய வேணும் –

——————————————————————-

தம்முடைய அபேக்ஷிதத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி எம்பெருமானுக்கு பெரிய பிராட்டியார் திரு வாணை யிடுகிறார்-

மாயம்  செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

விஷ்ணோ ஸ்ரீ என்னும் படியே உனக்கு சம்பத்தாய் உன் திரு மார்வுக்கு அலங்காரமான மாலையாய் -உன்னாலும் சிலாகிக்கப் படுவாளாய் உன் திருமேனிக்கு பரிமளத்தைப் பண்ணா நின்றுள்ள அழகிய திருக் குழலை யுடைய பெரிய பிராட்டியார் உடைய ஆணை கிடாய் -உனக்கு இட்டவடி பேராதே என் அபேக்ஷிதம் செய்து முடிக்க வேண்டும் படி இட்ட ஆணை -போக வல்லை யாகில் -போய்க் காண் என்று கருத்து -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்னும் படியால் பெரிய பிராட்டியார் ஆணை உன் ஆணை கிடாய் என்றுமாம் –
இனி இத் திருவாய் மொழி குறையும் -நீர் பெறா ஆணை விட்டீர் -என்று எம்பெருமான் அருளிச் செய்ய அல்லாமை ஏத்துகிறார் -பெரிய பிராட்டியார் பக்கலிலும் பண்ணாத ஸ்நேஹத்தை என் பக்கலிலே பண்ணி -என் பக்கல் உள்ள அயோக்யதை பாராதே உன்னோடு ஆத்ம பேதம் இல்லாத படி என்னைப் பரிஹரித்தாய் -ஆனபின்பு ஐயோ ஈண்டு என்னை வந்து விஷயீ கரியாய் –

—————————————————————–

பெரு மிடுக்கரான ப்ரஹ்ம ஈஸா நாதிகள் யுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகளுக்கு எல்லாம் நிர்வாஹகானான நீ -உன்னால் அல்லது உஜ்ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை ஐயோ விஷயீ கரித்து அருளாய் -என்கிறார் –

கூவிக்  கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

அதி லோகமான அழகைக் காட்டி என்னை மிகவும் ஈடுபடுத்தினவனை -என் ஆத்மாவுக்கு -உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய  வேறு ஓன்று அறிகிறிலேன்  -அபிமான ரஹிதமாய்க் கொண்டு தொழும் ப்ரஹ்மாதிகளுக்கு எல்லாம் காரணமான திரு நாபீ கமலத்துக்கு கிழங்கு ஆனவனே – உம்பரந்ததுவே-அயர்வறும் அமரர்களுக்கு பரம ப்ராப்யன் ஆனவனே –

————————————————————–

சர்வ நிர்வாஹகனான நீ என்னுடைய நிர்வாஹம் நானே பண்ணிக் கொள்வேனாக பார்த்து அருளினாய் யாகில் என்னைக் கை விட்டாயே  யல்லையோ என்கிறார் –

உம்பர்  அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

மஹதாதி விகாரங்களுக்கும் காரணம் ஆகையால் -ஸ்வ காரியங்களுக்கு எல்லாம் மேலாய் -ஸ்வ கார்யங்களை பிறப்பிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தையும் யுடைத்தாய் -சேதனர்க்கு போக மோஷாதி புருஷார்த்தங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன்   ஆனவனே -அதிலே பத்தமாய் நிற்கிற விலக்ஷணமான ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகனாய் -ஆகாசாதி பூத பஞ்சகத்துக்கும் பாஞ்ச பவ்திகமான அண்டத்துக்கு உள்ளே வர்த்தமானரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிர்வாஹகன் ஆனவன் நீ -தேவர்களையும் மற்று உள்ளாரையும் படைத்த முனியாக பிரசித்தனானவன்  நீ -என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கல் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாயே —

——————————————————————-

நான் என்னுடைய யத்தனத்தாலே உன்னைப் பெறுகிறேனாக நீ என்னைக் கை விட்டு இருக்கில் -நான் என்றும் என்னது என்றும் சில உளவோ -முடிந்தேன் அத்தனை இ றே என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

ரக்ஷகனான நீ -அநந்ய கதியான என்னை உன் பக்கல் நின்றும் போர தூக்கிப் பொகட்டால் பின்னை நான் ஆரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -என்ன சாதனத்தாலே என்னாதே ஆரைக் கொண்டு என்கிறது என் என்னில் -என்றும் புருஷார்த்தம் பெறுவது பரம சேதனனாய் இருப்பான் ஒருவனாலே என்று இருக்கையாலே –அக்னி சந்தப்த்தமான இரும்பு நீரை  நிஸ் சேஷமாக புஜிக்குமா போலே / என் ஆர் உயிரை-சமைய புஜிக்கைக்காக எனக்கு உன்னுடைய  நிரதிசய போக்யதையைக் காட்டி  என்னை அகப்படுத்தினாய் –காய்ந்த இரும்பு -அக் காய்ச்சல் தீர  நீரைப் பருகுமா போலே என்னுடைய சந்தானம் எல்லாம் தீரும் படி எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே -என்றுமாம் –

—————————————————————-

பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யபி நிவிஷ்டனாய் -என் ப்ரக்ருதியிலும் கூட அத்யாதரத்தைப் பண்ணி என்னை புஜித்த நீ -என்னை உபேக்ஷியாதே ஈண்டென விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

எனக்கு  ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய பிரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும் ஓக்க ஹிருதயத்துக்கு அமையாமை நிரந்தரமாக புஜித்தாய்-இனி இத்தை விடாதே விஷயீ கரியாய்-எம்பெருமான் கருத்தால் இன்னுயிர் -என்றதாகவுமாம் -தன்னிலத்திலே நின்ற காயம் பூ போலே இருக்கிற திரு நிறத்தை யுடையையாய் புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் -சிவந்த திருப் பவளத்தையும் யுடையையான உனக்கு சத்ருசமான அழகை யுடைய பெரிய பிராட்டியாருக்கு ஸ்நே ஹியாய் வைத்து என் பக்கலிலே அபி நிவிஷ்டன் ஆனவனே –

—————————————————————-

நான் பெரிய பிராட்டியார் பரிக்ரஹம் ஆகையால் -பிரளய ஆர்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப பிராட்டியை எடுத்து அவளோடு சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -சம்சார ஆர்ணவ மக்நனான என்னை எடுத்து என்னோடே சம்ச்லேஷித்து அருளினான் -என் பக்கல் அதி வியாமோஹத்தை பண்ணின உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ என்கிறார் –

கோல  மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-பெரிய பிராட்டியாருக்கு ஸ்நேஹியாகையாலே அவள் பரிஹாரமான என் பக்கலில் ஸ்நே ஹத்தைப் பண்ணினவனே –நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-ஒரு அஞ்சன கிரி இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் போலே / நீலக் கடல் -என்று கடைந்து அருளுகிற எம்பெருமானுடைய திரு நிறம் நிழல் இட்ட படியைச் சொல்லுகிறது

—————————————————————

அத்யந்த துர்ஜ்ஜேயனான உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விட உபாயம் இல்லை என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

அத்யந்த விஸஜாதீயனாய் இருந்து எனக்கு மிகவும் சத்தா தாரகனான உன்னைப் பெற்று வைத்து – இனித் தப்ப விடுவேனோ -ஆத்மாவைப் பற்றி விடாதே இருக்கிற புண்ய பாப ரூப கர்மங்களையும் -ஆத்மா தன்னையும் -கர்ம பலமானவற்றையும் -இவை எல்லாம் ஆகிற துர்ஜ்ஜேய ஸ்வ பாவமான த்ரை லோக்யம் ஆகிற தூற்றை யுண்டாக்கி -அந்த துர்ஜ்ஜேய ஸ்வ பாவமான ஜகத்தினுள்ளே புக்கு -எங்கும் வியாபித்து தெரியாதபடி நின்றாய் –என் முதல் தனி வித்தேயோ-எனக்கு முதலிலே இச்சையும் இன்றிக்கே இருக்க உன் பக்கலிலே ஆபி முக்யத்தைப் பிறப்பித்தவனே –

——————————————————————

நான் ஜகத் சரீரனாய் இருக்கிற இருப்பை உமக்கு காட்டக் கண்டீர் ஆகில் வேறு அபேக்ஷிதம் என் என்னில் -எனக்கு அத்தால் போராது -திரு நாட்டிலே வியாவ்ருத்தமாய் பரி பூர்ணனாய் இருக்கிற இருப்பையும் காண வேணும் என்கிறார் –

முதல் தனி  வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

மூவுலகு தொடக்கமானவற்றுக்கு ஓன்று ஒழியாமே எல்லாவற்றுக்கும் காரணம் ஆனவனே -பிரதானனாய் ஒப்பு இன்றிக்கே குண விபூதி யாதிகளால் பரிபூர்ணனான உன்னை நான் என்று வந்து கூடுவேன் -மஹதாதி விகாரங்களுக்கு ஒப்பில்லாக் காரணமாய் -கார்யங்கள் எங்கும் முற்றும் வியாபித்து -சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் -தனக்கு ஒப்பு இன்றிக்கே நியாமகமாய்-ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை அடைய பத்துத் திக்கும் வியாபித்து அபரிச்சேதயமாய் யுள்ள ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –

————————————————————–

எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட இவர் பிரார்த்தித்த படியே பரிபூர்ணனாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அபரிச்சேதயமான பிரகிருதி தத்துவத்திலும் -ஆத்மதத்வத்திலும் உன்னுடைய சங்கல்ப ஞான ரூப ஞானத்திலும் பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் -என்னுடைய மநோ ரதமும் ஒரு படி முடிய பெற்றேன் -என்கிறார் –

சூழ்ந்து  அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

பத்துத் திக்குகளிலும் வியாப்தமாய் அபரிச்சேதயமாய் இருக்கிற பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் நிற்கிறவனே -அத்தையும் கூட வியாபித்து அதுக்கு நியாமகனான ஆத்ம தத்துவத்துக்கு ஆத்மாவானவனே -பிரகிருதி புருஷ தத்துவங்களில் இரண்டையும் வியாபித்து அவற்றுக்கும் நிர்வாஹகமுமாய் சங்கல்ப ரூபமாய் ஸூ க ரூபமான ஞானத்தை யுடையவன் –சுடர் ஞான இன்பம் -என்று எம்பெருமானைச் சொல்லிற்று ஆகவுமாம் -அதினிலும் பெரிதான என்னுடைய விடாய் கெடும்படி வந்து சம்ச்லேஷித்தாயே –

————————————————————————

நிகமத்தில் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் உயர்வற உயர்நலம் உடையனாய் -அபரிமித திவ்ய பூஷண பூஷிதனாய் சர்வ ஆயுத உபேதனாய் லஷ்மீ பூமி நீளா நாயகனாய்  -அஸ்தானே பய சங்கிகைகளான அநந்த வைனதேயாதிகளாலே  -அனவரத பரீசர்யமான சரண நளினனாய் ஸ்ரீ வைகுண்ட  நிலயனான சர்வேஸ்வரனாய் -ஸ்வ விபூதி பூதரான -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவாய் -தன்னைக் காண வேணும் என்று விடாய்த்து ஆஸ்ரயிக்குமவர்களுடைய விடாய் தீர சம்ச்லேஷிக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிட்டு -அவனைப் பெற்று நிர்த்துக்கராய்-நிரஸ்த ஸமஸ்த பிரதிபன்னகரான ஆழ்வாருடைய பக்தி பலாத்கார பூர்வகமாக பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு -கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க முடியாத படியான  பரமபக்தியாலே பிறந்த அந்தாதியான இத்திருவாய் மொழி வல்லார் சரம்சாரத்திலே பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களோடே ஒப்பர் என்கிறார் – அயனை அரனை அவா அறச் சூழ் அரியை-என்றுமாம் –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அயனை அரனை –அவா அறச் சூழ் அரியை- அலற்றி–என்றுமாம் –1–முதலிலே மயர்வற மதி நலம் அருளினன் -என்றார் -நடுவு பல இடங்களிலும் அவனே அபாஸ்ரயம் என்றார் -முடிவிலும் -இன்று என்னைப் பொருளாக்கி -என்றும் -என் தலை மிசையாய் வந்திட்டு -என்றும் -எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தையே தமக்கு உபாயமாகப் பேசித் தலைக் காட்டினார் –
-2–இங்கனே இருக்கிற நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு அடியான ஸ்ரீயபதித்தவத்தை-மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்று முதலிலே தொடங்கி நடுவு பல இடங்களிலும் பிரஸ்தாவித்துக் கொடு போந்து –முடிவிலே திருவாணை நின் ஆணை என்றும் -கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டினார் –
-3–ததீயருடைய பிராப்தையையும் முதலிலே அயர்வறும் அமரர்கள் என்று தொடங்கி –நடுவு பல இடங்களிலும் -அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும் பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை அகப்பட பரக்கத் பேசிக் கொடு போந்து முடிவிலும் அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றும் தலைக் கட்டினார்-
-4-எம்பெருமானுக்கு ஸுசீல்யம் என்று கொண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு–எத்திறம் என்று தொடங்கி பல இடங்களிலும் பேசினார் –
-5-இவனுக்கு அசாதாரண திரு நாமம் நாராயணன் என்னும் இடம் -வண் புகழ் நாரணன் -என்று தொடங்கி பல இடங்களிலும் பேசிக் கொடு போந்து -வாழ் புகழ் நாரணன் -என்று தலைக் கட்டினார் –
ஆழ்வார் இப்படி ஆறி —- யால் இவ்வைந்து அர்த்தமே இப்பிரபந்தத்துக்கு பிரதான அர்த்தங்கள் என்று கருத்து –

————————————————————————-

கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: