ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71 –
ஊழிகள் ஆய்–காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான்–உலக முழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம்–என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) கூறினோமில்லை.
களா பழம் கண்டு–களாப் பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு–‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று
(குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு–அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை–(எனது) தாய்
இவளோ நாழ் என்னும்–‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி)
சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும்–உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ–தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற–எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர்–நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்
அலர் பரவும் தாய் முனியவும் இருக்கிற இக்கள வொழுக்கம் இனி ஆகாது –
மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹ ருசியை வெளியிட்டவாறு –
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–ஊழிகள்-பன்மை காலத்தின் பகுப்புக்களைக் குறிக்கும் -சகல காலங்களுக்கும் நிர்வாஹகன் -சர்வ ரக்ஷகன்
பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பழத்தின் நிறம் கடலின் நிறம் என்றே சொன்னேன் / நாழ் குற்றம் –
ஸ்வாபதேசம் —
ஆழ்வார் அவன் வண்ணம் ஸ்வபாவம் கடல் போலே என்று சொல்வதைக் கேட்டு –
இது சாதனாந்தர நிஷ்டையில் உள்ளோர் வார்த்தை யன்றோ என்ன-என் நெஞ்சு ஆராயாமல் ஆரோபித்துச் சொன்ன வார்த்தை
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-உபாஸனைக்கு உரிய காரண வடிவத்தை சொன்னோம் இல்லை
பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பலத்தைக் கண்டு கடல் போலென்ற வடிவம் என்றே சொன்னேனே
அக்தே கொண்டு அன்னை-அந்த சொல்லுக்கே வேறே பொருளைக் கொண்டு ஞானிகள்
நாழி வளோ வென்னும்-பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு விரோதமான ஸ்வாதந்தர்ய வார்த்தை என்று ஏறிட்டுச் சொல்வார்கள்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-உபாஸனைக்கு உரிய காரண வடிவைச் சொன்னேன் என்பர்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே -ஏறிட்டு சங்கித்த சங்கைக்கு என் நெஞ்சு அறிந்த நீங்களே பரிஹாரம் சொல்லுங்கோள்-
தாயின் முனிவைத் தலைவி தோழியர்க்கு உரைத்த பாசுரம் இது.
நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து நாயகி வருந்துமளவில் அக்களவொழுக்கம்மெல்ல வெளிப்பட்டு ஊரெங்கம் பழி பரவ,
அதனையறிந்த தாய் ‘இது நம் குடிக்குக் குறையாம்’ என்று கருதி இவளை நிர்பந்தத்திலே வைத்திருக்க,
அவளுக்கு அஞ்சி நாயகி தன் ஆற்றாமையால் வாய் பிதற்றுதலொன்றுஞ் செய்யாத ஆற்றாமையை அடக்கிக் கொண்டிருக்க,
அவ்வளவிலே சிலர் களாப்பழங்கொண்டு விற்க, அதனை நோக்கி நாயகி ‘இதன் நிறம் கடல்போலுள்ளது’ என்று பாராட்டிக் கூற,
ஏற்கனவே இவன்மேல் குறிப்புக் கொண்டுள்ள தாய் ‘இவள் இப்படி சொன்னது நாயகனது நிறத்தைப் பாராட்டிக் கூறியபடியாம்’ என்று உட்கொண்டு
‘இப்படியும் ஒரு அடங்காத்தன்மை யுண்டோ’ என்று வெறுக்க, அதற்குக் கலஙகிய நாயகி தோழியரை நோக்கி
ஒருவகையான உட்கருததையுங் கொண்டு சொல்லவறியாத எனது தன்மையை நீங்கள் அவளுக்குச் சொல்லி
அவளுடைய கோபத்தைத் தனிப்பீராக வென்று வேண்டிக் கொள்ளுகிறாளென்க.
சில பிரதிபந்தங்களினால் நாயகனை அடையப் பெறாத நாயகி, அவன் தன்னை வெளிப்படையாக விரைவில்
விவாஹஞ் செய்து கொள்ள வேண்டுமெனக் கருதிச் சிறைப்புறத்தானாகுமளவில் தோழியர்க்குச் சொல்லுவாள் போன்று
ஊர்ப்பழி மிகவும் பரவியிருக்கிறபடியையும் அதனைக் தாயுமறிந்து வெறுக்கிறபடியையும் தெரிவிக்கும் முகத்தால்
விரைவில் வெளிப்படையாக விவாஹஞ் செய்து கொள்ளத் தூண்டியதாமிது.
அவர் பரவவும் தாய் முனியவும் இருக்கிற இக்களவொழுக்கம் இனி ஆகாது, மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹருசியை வெளியிட்டவாறு.
ஊழிகளாய் உலகேழு முண்டானென்றிலம் = ஊழிகள் என்ற பன்மை காலத்தின் பகுப்புகளைக் குறிக்கும்;
ஸகல காலங்களுக்கும் நிர்வாஹகனாய் மஹாகல்பகாலத்தின் முடிவிலே திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவனான
எம்பெருமான் என்று அவன் திருநாமத்தையோ தொழிலையோ பெருமையையோ ஒன்றையும் நான் வெளிப்படையாகச் சொன்னேனில்லை;
ஒருகால் அப்படி சொல்லியிருந்தேனாயின் தாய் குறை கூறுவது தகுதியேயாம்;
அந்தோ! ஆதாரமொன்று மின்றிக்குறை கூறுகின்றானே யென்றவாறு. ஊழிகளாய் என்பதற்கு- கல்பமும்,
அக்காலத்தில் அழிவு செய்கிற கடல் நெருப்பு முதலியனவுமாகிய இவற்றின் வடிவமாய் என்றும் உரைப்பர். என்றிலும்- என்று சொல்லிற்றிலோம்.
ஊழிகளாயுலகேழு முண்டான என்று சொல்லவில்லையாகில் பின்னை என்ன வென்று சொல்லிற்றென்ன.
பழங்கண்டு ஆழிகளாம் பழ வண்ணமென்றேற்கு’ என்கிறான். (விற்பனைக்காக வீதியில் வந்த) களாப்பழத்தைப் பார்த்து
இப்பழத்தின் நிறம் கடலின் நிறம் போன்றுள்ளதென்று உட்கருத்து ஒன்றுமின்றியே இவ்வளவே சொன்னேன்:
குறிப்பொருளொன்றுங் கருதாது இயல்பாகச்சொன்ன இச்சொல்ல¬யே பற்றிக்கொண்டு எனது தாய்
“இப்பெண்பிள்ளை என் சொற்கேளாது தன் நினைவின்படி ஸ்வதந்த்ரமாய் நடக்குஞ் செருக்குடையவளாயினள்’ என்று
கடுஞ்சொல் கூறத்தலைப்பட்டாள். களாம் பழவண்ணம் கடல் வண்ணமென்று இவள் சொன்னதானது வெறுமனோ?
உலகமுண்ட பெருவாயனுடைய திமேனி நிறத்தைச்சொன்னபடியன்றோவென்று குற்றங்கூறுகின்றான்;
தோழிமார்களே! இப்படி எனது தாய் என்னை மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
நீஙகளே ஸமாதானஞ் சொல்லித் தெளிவிக்க வேணுமென்றாயிற்று.
நாழ் -குற்றம்; “நாமா மிகவுடையோம் நாழ்” “நாழாலமர் முயன்ற” என்ற திருவாந்திதிப் பாசுரங்களில் இப்பொருளில் பிரயோகங்காண்க.
பெரியாழ்வார் திருமொழியில் “பல நாழஞ்சொல்லிப் பழித்த சிசுபாலன்” என்ற விடத்தில் இச்சொல்
‘அம்’சாரியை பெற்று வந்தமையும் காண்க. இங்கே, நாழுடையாள் என்ற பொருளில் ‘நாழ்’ என்றது உபசார வழக்கு.
இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது-
ஆழ்வார் எம்பெருமானிடத்தில் தமக்கு உண்டான ஈடுபாட்டினை மிகுதியால் அப்பெருமானது பயனாகிய வடிவத்தின்
கடல்போலளவிடப்படாத பெருமையைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல, அது கேட்ட ஞானிகள் அவ்வார்த்தைக்கு வேறு பொருள் சங்கித்து,
ஸாதநாந்தர நிஷ்டையுடையோர்போல உபாஸஸநக்கு உரியதொரு காரணவடிவத்தைப் போற்றினதாக நினைத்து
அது தகுதியன்றென்று அறியாமல் ஆரோபித்துச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள்
மறு மாற்றஞ் சொல்லி இவர்களைச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி
இவர்களைத் தெளிவியுங்க ளென்று அருளிச் செய்தலாம்.
(ஊழிகளாய் உலகேழு முண்டானவற்றிலம்) ஸாதுநாந்தா நிஷ்டையுடையார்போல உபாஸகைக்கு உரிய காரணவடிவத்தைச் சொன்னோமில்லை.
(பழங்கண்டு ஆழி களாம்பழ வண்ணமென்றேற்கு.) பயனாகிய வடிவத்தைக் குறித்து அவ்வடிவம் கடல்போலும் என்று கூறிய எமககு.
(அஃதே கொண்டு) அந்தச் சொல்லுக்கே வேறு பொருள் கொண்டு. (அன்னை) ஞானிகள்
(இவளோ நாழ் என்னும்) இவரே பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விரோதியான ஸ்வாதந்திரியத்தை யுடையாரென்று குறையேறிட்டுச் சொல்வார்கள்.
(ஞாலமுண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்) உபாஸகைக்கு விஷயமாகின்ற காரணவடிவத்தை யாம் கூறியதாகக் குற்றங்கூறுவார்கள்.
(அமனை எம்மை சூழ்கின்ற) தாய்போ லெம்மிடத்தும் பரிவுடையான் ஞானிகள் எமது ஸ்வரூபத்துக்கு எங்கே குறைபாடு
வருகிறதோவென்று ஏறிட்டுச் சங்கித்த சங்கைக்கு (தோழிகளோ! உரையீர்) என நெஞ்சரிந்த அன்பர்களே! நீங்கள்
பரிஹாரஞ் சொல்லித் தெளிவிக்கவேணும் என ஸ்வாபதேசப்பொருள் காண்க.
ப்ரபத்தி மார்க்கத்தை யனுட்டிப்பவர் எம்பெருமானது பயனாகிய வடிவத்தையே கருதிப் பாராட்டக் கடவரென்றும்,
அதுவே முக்தி பெறுவதற்குச் சிறந்த வழியாகுமென்றும், உபாஸகைக்கு உரிய காரண வடிவத்தையே பாராட்டி உபாளித்தல்
முக்தி பெறுவார்க்கு அவ்வளவாகச் சிறவா தென்றும் உணர்க.
————————————————————————
சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – – – 72 -சீலமில்லாச் சிறியன் -4-7-
பதவுரை
சூழ்கின்ற–(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்–ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்–சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை–கறுத்த செறிவை
போழ்கின்ற–விளக்கிற
அம்பிள்ளை திங்களும்–அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க–(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து–(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்–ஒரு துணையும்மில்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு–(இயல்பான) மேனிநிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு–(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று–சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ–இப்படியோ?
இருளுக்கு ஆற்றாத தலைவி அதுக்கு மேலே இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் -துயர் நீக்க வந்தான் என்று
கருதும் படி வந்து மேலும் துயரை விளைவிப்பதே
பேறு கிட்டாததால் வந்த மோகாந்தகாரமும் -அதனை அடக்கி மேலிடுவதான தத்வ ஞான பிரகாசமும் இரண்டும்
ஒன்றின் மேல் ஒன்றுடன் சேர்ந்து வருந்தி ஸ்வரூபத்தை அழிக்க இருக்கும் தன்மை -சந்திரோதயம் -என்றது விவேகத்தை –
இவளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் இது. நாயகனைப் பிரிந்த நிலையில்
பகலிற் காட்டிலும் இரவில் இருளில் மிக வேதனைப்படுகிற நாயகி, அப்பொழுது இளம்பிறை தோன்றி அவ்விருளை
அழிக்கத் தொடங்கியதை நோக்கி இனி நமக்கு இருளினாலாகுந் துயரம் குறைவுபடுமென்று கருதி
ஒருவாறு தணிந்திருக்கத் தொடங்கிய வளவிலே, இளம்பிறையும் விரஹிகளுக்குத் தாபஹேதுவான பொருள்களும் ஒன்றாதலால்
அது இவளை இருளினும் அதிகமாக வேதனைப்படுத்த, அது நோக்கி அத்தலைவி இரங்கிக் கூறியதென்க.
எனக்குப் பகையாய்ச் சூழ்கிற இருளைப் பிளந்தொழிக்கிற இளம்பிறை அவ்வருளின் ஒழிவுக்கு மகிழ்கிற என்னையும் பிளந்தொழிக்கட்டும்.
பிறைதோன்றி இருள் அகன்றதைக் கண்டு இனி என் துயரங் குறைந்து இழந்த மாமை நிறத்தைப் பெற்று வாழ்வேனென்று கருதிய
எனக்கு அந்தோ! பிறை தோன்றியது இங்ஙனமோ முடிந்தது! என்கிறான்.
துயர் நீக்க வந்தானென்று கருதப்பட்டவன்தானே துயர¬ மிகுவிக்கின்றானே! என்செய்வேன்! என்கிறாள்.
வாலியது – வாலிமை யென்னும் பண்பிணடியாய் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு வினையாலனையும் பெயர். இதுவோ வந்து தோன்றிற்று-
இப்பிறையோ வந்து தோன்றியது. வாலியதே- இதன் தன்மை சீரிதாகவுள்ளது! என்றுங் கொள்ளலாம்;
இப்பொருளில் விபரீத லக்ஷனையால் வெறுப்புத் தோன்றும். பிள்ளை- இளமைப்பெயர்.
தாம் நினைத்தபடியே பேறு கிடைத்திடாமையா லுண்டான மோஹாந்தகாரமும் இதனையடக்கி மேலிடுவதான
தத்துவஞானப் பிரகாசமும் இரண்டும் எம்பெருமானைச் சேராது நிலையில் தம்மை ஒன்றினுமொன்று மிகுதியாக வருத்தித்
தமது ஸ்வரூபத்தையும் அழிக்கவிருந் தன்மையை ஆழ்வார் வெளியிடுதல் இதற்கு உள்ளுறை பொருள். சந்திரோதய மென்றது விவேகத்தை.
———————————————————————–
வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73- – வேய் மரு தோள் இணை -10 -3 —
பதவுரை
விண்–ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு–மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால்-பாலை
உலகு ஆர சுரக்கும்–உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
வெண் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய
சுரவி–பசுவினது
சுர–சுரம்பு
முதிர்–மிகப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது–(நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்த தன்மை
பரிதிவட்டம் போலும்–இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி–வலிய சக்கராயுதமுடைய
பிரான்–அத்தலைவன்
ஏழ்பொழில்–ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம்–ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?
நிலாவின் இடத்து பாலின் தன்மையையும் -அதை வெளியிடும் அம்ருத கிரணான சந்திரன் இடத்து பால் சுரக்கும்
பசுவின் தன்மையையும் ஏறிட்டுச் சொல்வது ரூபக அலங்காரம்
அரும் தவன் சுரபியே ஆதி வானமா விரிந்த பேருதயமே மடி வெண் திங்களா -வருந்தலின் முலை கதிர் வழங்கு
தாரையாய்ச் சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே -கம்பர் –
விண் சுரவி சுர-தெய்வப்பசு சுரப்பி –
உரிய காலத்திலே பேறு கை புகாமையாலே ஞான விளக்கமும் பாதகமாக ஆழ்வார் தளர்ச்சியைக் கண்ட
பாகவதர்கள் நொந்து அருளிச் செய்யும் பாசுரம் –
பிரான் பொழில் ஏழும் அளிக்கும்-சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே-ஸ்வாபாவிகமான சர்வ ரக்ஷகத்வமும்
இவர் பால் கிடையாது ஒழிவதே– -பாட பேதம் –
பிறைபடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது.
மாலைப்பொழுதுக்கும் இளம்பிறைக்கும் வருந்தும்படி இவளைத் தனியே விட்டிருத்தல் உலக முழுவதும் ரக்ஷிக்கும்
அவனுடைய பெருந்தன்மைக்குச் சிறிதும் ஏழாது என்கிறாளாயிற்று.
ஆகாசத்தில் நின்றும் மிகுந்த வெளுத்த நிலாவாகிய பாலை உலகமெங்கும் நிறையச் சுரந்து சொரிகிற சந்திரனாகிய காமதேநுவின்
சுரப்பு அதிகரித்திருக்கின மாலைப்பொழுதிலே இத்தலைவி தனிமைப்பட்டுத் தளர்ந்திருப்பதானது
ஆழியங் கையவன் அனைத்துலகங்களுயும் காத்தருளுந் திறத்துக்குப் பொருந்துமோ? (பொருந்தாது) என்றவாறு.
நிலாவினிடத்துப் பாலின் தன்மையையும்,அதனை வெளியிடுகிற அம்ருத கிணனான சந்திரனிடத்துப் பால்சுரங்கும்
பசுவின் தன்மையையும் ஏற்றிக்கூறினது ரூபகாலங்காரம். (கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – ஊர் தேடு படலம் 56.)
“அருந்தவன் சுரபியே ஆதிவானமா,விரிந்த பேருதயமே மடிவெண்டிங்களா,
வருத்தலின் முலைக்கதிர் வழங்கு தாரையாச், சொரிந்த பாலொத்தது நிலவின் தோற்றமே” என இவ்வர்ணனைப்
பிறவிடத்துஞ் சிறிது வேறுபடக் கூறப்பட்டிருக்குமாறு காண்க.
உலகு ஆர்ச்சுருக்கும்- உலகமாகிய தாழி நிறையும்படி சுரக்குமென்க. விண்சுரவி- தெய்வப்பசு, ஸுரபி: என்னும் வடசொல் சுரவியெனத் திரிந்தது.
சுர- சுரப்பு; முதனிலைத் தொழிற்பெயர். பரிதி- வடசொல் (பொழிலேழனிக்கும்) பொழில்- உலகம்.
இனி, பொழில்- சோலையுமாம்; உலகங்களை எம்பெருமானுடைய சிங்காரப் பூந்தோட்டமென்ப;
“பிரான் பெய்த காவுகண்டீர் பெருந்தேவுடை மூவுலகே” 6-3.5) என்பர் திருவாய்மொழியிலும்,
இப்பாட்டுக்கு ஸ்லாபதேசப் பொருளாவது: உரிய காலத்தில் பேறு கைபுகாமையாலே ஞானவிளக்கமும் பாதகமாக ஆழ்வார்
அடைந்த தளர்ச்சியைக் கண்ட அன்பர்கள் நொந்து உரைத்த வார்த்தையாம்.
(பிரான பொழிவேழளிக்குஞ் சால்பின் தகைமை கொலாம் தமிபாட்டி தளர்ந்ததுவே)
எம்பெருமானுக்கு இயல்பான ஸ்வாக்ஷகத்வமும், இவ்வாழ்வார் திறத்தில் நிகழா கொழிவதே! என்று சங்கித்தபடி.
‘சால்வின்’ என்றும் பாடமுண்டாம். வால் வெள்- ஒருபொருள் பன்மொழி.
“நிலவுகார” என்றவிடத்து, ‘நிலவு’ என்னாமல் ‘நீல’ என்றும் பிரிக்கலாம்;
“குறிய தன் கீழ் ஆக்குறுதலுமதனோடு, உகர மேற்றலுமியல்புமாந் தூக்கின்” என்ற நன்னூல் அறிக.
———————————————————————
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 -செய்ய தாமரை -3 -6-
பதவுரை
தளர்ந்தும் முறிந்தும் வருதிரை–(கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்–(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்–அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்–(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்–பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்–கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக்
கவியும்படி பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்–திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்–அளாவியுண்ட
பசு சிறு தென்றல்–புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது–மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.
நாயகன் உடைய திரு முடியில் சூடிய திருத் துழாய் வாசனை பருகி வந்து தென்றல் வீச நாயகி மகிழ்ந்து பேசும் பாசுரம் –
அவன் வரவுக்கு ஸூ சகம் என்று சொல்லி தோழி தலைவியை ஆற்றாமை தணிக்கும் பாசுரம் என்றுமாம்
திரு நெடுங்கண்-வளர்ந்தும் அறிவுற்றும்-
லோக ரக்ஷணம் சிந்தனை -யோக நித்திரை -அறிதுயில் -விழி துயில் -துயிலாத துயில் -போய் உறக்கம் –
மால் வரையைக்-கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-
பசுக்கள் எட்டிப் புல் மேயலாம் படி கோவர்த்தன மலையைத் தலை கீழாக எடுத்துக் பிடித்தமை –
சிறு பசுந்தென்றல்-மந்த மாருதம் –
ஸ்வாபதேசம் –
ஆழ்வார் எம்பெருமானது காருண்யம் ஐஸ்வர்யம் போக்யதைகளில் ஈடுபட்டு தரித்தமையம்
அவனது மஹா குணங்களை சொல்லி ஆழ்வாரை பாகவதர்கள் ஆற்றாமை தனித்தவையும் சொல்லிற்று யாய்த்து-
நாயகனது திருத்துழாயிற்பட்ட தென்றல், நாயகி மகிழ்நதுரைக்கும் பாசுரம் இது.
நாயகனது மேனியோடு ஸம்பந்தப்பட்ட பொருள் தன் உடம்பின்மீது வந்து பட்டுத் தனது பிரிவாற்றாமைத் துயரைச் சிறிது
தணிப்பித்தலாகிய ஸந்தோஷத்தைத் தலைவி தோழிக்கு உரைக்கின்றாளென்க.
கொந்தளித்து வீசுகின்ற அலைக்கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில் சேஷசயனத்தில் உறங்குவான் போல் போகு செய்தும்
பிரளயகாலத்தில் உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும் கோவர்த்தநகிரியைக் குடையாகவெடுத்துப் பிடித்துப்
பெருமழைத் துன்பத்தைப் போக்கியும் உபகரித்தருள்கின்ற எம்பெருமானுடைய திருமுடியில் அணிந்துள்ள திருத்துழாயை
யளைந்த புதிய இளந்தென்றற் காற்றானது மகிழ்ச்சியுண்டாகும்படி என்மேல்வந்து வீசுகின்றது என்றாளாயிற்று.
இனி, இதனை, வழக்கம்போலத் தென்றல் வரவுகண்டு அதற்கு வருந்தத் தொடங்கிய நாயகியை நோக்கித் தோழி
‘இதை நீ வெறுந்தென்றலென்று கருதாதே; அவனுடம்பிற்பட்டு வருகிறது காண் இது;
இது அவன் வரவுக்கு அறிகுறி’ என்று கூறிச் சோகந்தணிக்கிறதாகவுங்கொள்வர்.
ஹந்த! என்னும் வடசொல் (அவ்பயம்)- மகிழ்ச்சி, இரக்கம், துன்பம் முதலிய பொருள்களில் வருமென்று வடமொழி நிகண்டினால்
தெரிகிறதனால் அதன் விகாரமாகிய அந்தோ வென்பது இங்கு மகிழ்ச்சிப் பொருளில் வந்ததென்க.
திருநெடுங்கண் வளர்ந்து மறிவுற்றும் = எம்பெருமானது தூக்கம் நமது தூக்கம் போல் தமோகுண காரியமாய்
உடம்பு தெரியாது கொள்ளுந் தூக்கமன்றியே எல்லாப் பொருளையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணை சிந்தனை பண்ணும் தூக்கமாதலால்
‘கண்வளர்ந்தும் அறிவுற்றும்’ எனப்பட்டது; இது பற்றியே அத் தூக்கம்- யோக நித்திரை, அறிதுயில், விழிதுயில்
துயிலாத் துயில், பொய்யுறக்கம் எனப்படும்.
“மால்வர¬யை மறிதர எடுத்தான்” என்றதனால் பசுக்கள் எட்டிப் புல்மேயலாம்படி கோவர்த்தந மலையைத் தலைகீழாக
எடுத்துப் பிடித்தமையுந் தோன்றும்.சிறு தென்றல் – மந்தமாருதம்.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பிரிந்த நிலையில் ஆழ்வார் தாம் எம்பெருமானது காருண்யம் ஆச்வர்யம் யோக்யதை
என்னும் இக்குணங்களின் நடையாட்டத்தைக் கண்டு ஆறியிருக்குந் தன்மையை அருளிச் செய்தலாம். மற்றவை வெளிப்படை.
இனி தோழிவார்த்தை யென்னும் பக்ஷத்தில், அவன் ஆச்ரிதர்களை ரக்ஷித்தருளும் பொருட்டுக் கடலிலே யோகநித்திரை
கொண்டருள்வதும் பிரளயாபத்தில் உலகத்தை வயிற்றில் வைத்து நோக்குவதும் கோவர்த்தநோத்தாரணம் பண்ணினமையுமாகிய
மஹாகுணங்களைச் சொல்லி அன்பர்கள் ஆழ்வாரை ஆற்றுகின்றதாக ஸ்வாபதேசன் கொள்கை.
—————————————————————–
உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 -சன்மம் பல பல -3 -10–
பதவுரை
உலாகின்ற–(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை–கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு–ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ–எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற–(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற
வெம்சிலை–(புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர்–ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி–வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற–மீன் நாற்றம் வீசப்பெற்ற
வேலை–அலைகிளர்ச்சியையுடைய
புணரி–கடலை
அம்பள்ளி–அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான்-ஸர்வேச்வரனது
அடியார் நிலா கின்ற–பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ–ஸ்ரீவைகுண்ட லோகோம
வையோமோ–இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம்–உங்களது இருப்பிடம்?
நாயகியும் தோழியும் ஒருங்கு இருந்த சமயம் நோக்கி நாயகன் அங்குச் சென்று தன் கருத்தை குறிப்பதற்கு வியாஜமாக ஊர் வினவுகிறான் –
இவர்கள் வடிவு அழகு மிக வேறுபட்டு சிறந்து இருத்தலால் -நும் நிலையிடம் வைகுந்தமோ -இவ்வுலகத்தில் இல்லாதால் –
வையமோ-உமது இடம் அந்த நித்ய விபூதியோ -ஞான விசேஷங்கள் கண்டால் முக்தரோ என்னலாம் படி –
பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையாலே இவர் இவ்வுலகத்தவரோ என்றும்
சம்சார சம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோ என்றும் சங்கை –
மதியுடம்படுக்கலுற்ற நாயகன் நாயகியின் தோழியரைப் பதிவினாதல் இது. நாயகியும் தோழியும் ஒருங்கிருந்த ஸமயம் நோக்கி
நாயகன் அங்குச்சென்று தன் கருத்தைக் குறிப்பிப்பதற்கு ஒரு வியாஜமாக ஊர் வினாவுகின்றானென்க.
காதளவும் நீண்டு கெட்டை மீன் வடிமான கண்களாகிய அம்புகள் எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படியாக அவ்வம்புகளைப்
பிரயோகிப்பதற்கு வளைந்திருகின்ற புருவமாகிய கொடிய வில்லையுடைய அழகிய முகமுடையவர்களே! என்று
நாயகியையும் அவளது தோழியரையும் விளித்தபடி. கண்களை அம்பாகவும் புருவத்தைச் சிலையாகவும் வருணித்தல் கவிமரபு.
கையிற்கொள்ளும் வில்லம்புகளால் வருத்தும் உலகவியல்பு’ எனப்பட்டது.
பின்னடிகள் பதிவினாவுவன. இவ்வுலகத்தவரினும் இவர்களது வடிவழகு மிக வேறுபட்டுச் சிறந்திருத்தலால் ‘
நும் நிலையிடம் வைகுந்தமோ?’ என்றது; இவர்களைக் கண்டது இவ்வுலகத்திலாதலால் ‘வையமோ?’ என்றது.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர் அவரையும் அவரோடொத்த
அவரது அன்பரையும் நோக்கி ‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.
(உலாகின்ற + வாண்முகத்தீர்!) பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி
செலுத்தும் முகமலர்ச்சியுடையவரே! என விளித்தபடி.
எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்?
ஆழ்வார், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும் அங்கு நின்று இங்கு வந்தவரொருவரென்று
சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி விகற்பித்து வினாவுதற்குக் காரணம்.
அன்றியும் பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையால் இவர் இவ்வுலகத்தவரோவென்றும்,
ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோவென்றும் சங்கை நிகழ்ந்ததென்க.
———————————————————————-
இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே – -76 – ஓராயிரமாய் -9 -3
பதவுரை
இடம்போய் விரிந்து–எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான்–இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர்–அழகு நிறைந்த
தண்–குளிர்ந்த
துழாய்போது வடம்–திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும்-வருந்துகிற
மட நெஞ்சமே–பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது–சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க–குவிய
மேல் ஆம்பல்–புல்லிய ஆம்பலை
அலர்விக்கும்–அலரச் செய்கிற
வெள் திங்கள்–வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது–நமது வெளுத்த வளைகளைக் கழலச் செய்வதற்காகவே
விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே–ஓர் ஆச்சரியமோ?
சந்திரன் தாமரையை வருத்தி மூடச் செய்து ஆம்பலை அலர்த்துவது போலே -தாமரைக்கு தலைவன் ஸூ ரியான் மறைந்த இடத்தில்
தலைவனை பிரிந்த என்னை வருத்தி கை வளைகள் கழல பண்ணுவதில் ஆச்சர்யம் இல்லையே
வடம் போதினையும்-போது வடம் இனையும் -மாலையைப் பெரும் பொருட்டு வருந்துகிற –
வடம் போதில் நையும் என்றும் பிரித்து அதே பொருள்
விடம் போல் விரிதல் -நம்மை கொலை செய்யவே தோன்றியது என்றபடி
ஸ்வாபதேசம் –
பேறு பெறாத நிலையில் தமக்கு உண்டான விவேகமும் பிரதிகூலமாய் வருத்தும் தன்மையை ஆழ்வார் திரு உள்ளத்தை நோக்கி கூறுதலாம்
இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்-வடம் போதினையும் மட நெஞ்சமே-சர்வ ஸூலபனானவனுடைய
போக்யதையில் ஈடுபட்டு பூர்ண அனுபவம் கிடைக்காமல் வருந்தும் இள மனமே –
வியன் தாமரையின்-தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே-சிறந்த பொருள்களை வெளிக் காட்டாமல்
இழிந்த பொருள்களை வெளிக்காட்டுகிற விவேகம்
நங்கள் வெள் வளைக்கே-விடம் போல் விரிதல் இது வியப்பே -நம் சுத்தமான அடிமைத் தன்மையை குலைக்க பரப்பும் இது ஆச்சர்யமோ –
நாயகனது மாலைபெறாமல் வருந்துகின்ற நாயகி மதிக்கு இரங்கி நெஞ்சொடு கூறல் இது.
எல்லாவிடங்களிலுஞ் சென்று வளர்ந்து இந்தவுலகத்தை அளந்து கொண்டவனான ஸர்வேச்வரனுடைய திருத்துழாய்
மாலையைப் பெறும்பொருட்டு வருத்திக் கிடக்கிற நெஞ்சமே! சந்திரன், சிறப்பில்லாத ஆம்பலினிடத்து அன்பு வைத்து
அதற்கு மகிழ்ச்சி தந்து சிறந்த தாமரையை அழிக்கும் அற்பகுண முடையவனாதலால் அவன்
நமது அழகிய கைவளைகளைக் கழலச் செய்தல் ஒரு வியப்பன்று என்கிறாள். இது சந்திரோபாலம்பம்.
தாமரைக்குத் தலைவனான ஸூர்யன் கண் மறைந்த விடத்து அத்தாமரையை வருத்துகிற இவனுக்கு,
தலைவனைப் பிரிந்த எம்மை வருத்துதல் இயல்பே என்றவாறு.
வடம்போதினையும் = ‘வடம்போது இனையும்’ என்று பிரிப்பதன்றி, வடம்போதில் நையும் எனவும் பிரிக்கலாம்; பொருள் ஒன்றே.
மடநெஞ்சமே! = தூலபமான பொருளில் பற்றுவைத்ததோடு அப்பற்றை என்றும் விடமாட்டாமல் வீணே வருந்துகின்ற நெஞ்சமே! என்றவாறு,
‘விடம்போல் விரிதல் என்றது- விஷம் கொலைசெய்வது போல நம்மைக் கொலை செய்வதற்காகவே வந்து தோன்றல் என்றபடி;
ஆகவே இவ்வுலமை- வருத்துந் தன்மை பற்றியதேயன்றி நிறம்பற்றியதன்று. வியப்பே = எ- எதிர்மறை; வியப்பன்று என்றவாறு.
இதற்கு உள்ளுறை பொருளாவது- பேறுபெறாத நிலையில் தமக்குண்டான விவேகமும், பிரதிகூலமாய் வருத்துந் தன்மையை
ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலாம். (இடம் போய் + மடநெஞ்சமே!) ஸவஸகூலபனான ஸர்வேச்வரனுடைய
போக்யதை முதலியவற்றறில் ஈடுபட்டுப் பூர்ணாநுபவங் கிடையாமை பற்றி வருத்தம் இளமனமே!
(வியல் தாமரையின் தடம்போது ஒடுங்க மெல்ஆம்பல் அலர்விக்கும் வெண்திங்கள்) சிறந்த பொருள்களை வெளிக்காட்டாமல் இழிந்த
பொருட்களை வெளிக்காட்டுகிற விவேகம். (எங்கள் வென்வளைக்கே விடம்போல் விரிதல் இது வியப்பே)
நமது சுத்தமான அடிமைத் தன்மையையும் குலைப்பதாகப் பரவுகிற விது ஆச்சரியமோ! என்று
ஆழ்வார் திருவுள்ளத்தில் க்லேசத்தோடு அருளிச் செய்தராயிற்று.
———————————————————————
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-தாள தாமரை -10-1-
பதவுரை
திங்கள்–பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை–அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப–(தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட–சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய செங்கோள்மையையுடைய
தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம்–செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி–அடைந்து
நின்று–(நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
என்கு–வருந்துகிற
புல்மாலை–சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை–தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம்செய்த–கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார்–நமது வோதி தேவனான தலைவனது
துழாய்–திருத்துழாயை
துணை ஆ–தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்ககளை மாமை கொள்வான்–நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது–எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது
மாலைப் பொழுதை மகளாகவும் -சூரியனை அவள் கணவனாகவும் -சந்திரனை அவர்கள் பிள்ளையாகவும்
சூரியனது சிவந்த கிரணங்களை செங்கோலாகவும்
சூர்யன் அஸ்தமிப்பதை கணவன் இறந்ததாகவும் -அஸ்தமித்த திக்கை அவன் இறந்து விழுந்த போர்காலமாகவும்
அஸ்தமிக்கும் காலத்து செவ்வானத்தை அவன் ரத்தம் தெரித்ததாகவும் உருவாக்கப் படுத்தியவாறு
கணவனை பிரிந்தவளுக்கு பார்த்த பொருள்கள் எல்லாம் தம்மைப் போலே கணவனை இழந்ததாகவே கருதுவாளே
இப்படி கண்டார் இரங்கத் தக்க நிலைமையை அடைந்த மாலைப் பொழுது ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத் துழாயை
துணையாகக் கொண்டு நாயகியை வருத்துதலை
தனது மக்கள் தனிமைப்பட தன் கணவனை இழந்து வருந்திய தாடகை அகஸ்திய சாபத்தை உதவியாகக் கொண்டு
முனிவர்களை எதிர்த்து வருந்துதல் போலே கொள்க
மாலைப் பொழுதில் காணப்படும் பிறையின் பிரகாசக் குறையை வாடுதலாகவும் -அக்காலத்தில் பறவைகள் கடல் ஓசையை அழுகை குரலாகவும்
தென் பாலிலங்கை-வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –பிராட்டிக்கு உதவியவர் -விண்ணோர்களுக்கு உதவியவர் எமக்கு கொடுமை தீர்த்திலரே –
துழாய் துணையா-மாலைப் பொழுதும் தம்மைப் போலவே திருத் துழாய் துணையாக பெற வில்லையே என்று வருந்துவதாக ஆழ்வார் திரு உள்ளம்
அவன் போக்யத்தை தம்மை நினைப்பூட்டி வருந்துவதை இத்தால் ஆழ்வார் அறிவிக்கிறார்
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட-செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை-
தமக்கு உண்டான ஞான பிரகாசமும் துயர் அடையும் படி விவேகமும் குலைந்து-பக்தியே விஞ்சி ஆற்றாமையே விளைக்கும் கொடிய காலம்
தென் பாலிலங்கை-வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா-
துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன சீலரான-எம்பெருமானது போக்யதையை நினைப்பூட்டிக் கொண்டு –
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -எமது ஸ்வரூபத்தை மாற்றும் படி வருத்துகிறது –
மாலைப்பொழுதுக்கு ஆற்றாத நாயகி இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.
கீழ் “பால்வாய்ப் பிறைப்பிள்ளை” என்ற முப்பத்தைந்தாம் பாட்டின் முன்னடிகளை இப்பாட்டின் முன்னடிகட்கு ஸ்மரிப்பது.
இதில் மாலைப்பொழுதை ஒரு மகளாகவும், ஸூர்யனை அவளது கணவனாகவும், சந்திரனை அவர்களது பிள்ளையாகவும்
ஸுர்யனது சிவந்த கிரணங்களை அவனது செங்கோலாகவும், அந்த ஸூர்யன் அஸ்தமிப்பதை அக்கணவன் இறந்து போவதாகவும்,
அவன் அஸ்தமிக்கின்ற திக்கினிடத்தை அவனிறந் விழுந்தொழிந்த போர்க்கலமாகவும்,
ஸூர்யாஸ்தமாக காலத்து மேற்குத் திக்கில் அவன் கிரணஸம்பந்தத்தால் தோன்றுகிற செவ்வானத்தை அவன் போரில் பட்டு இறக்கும்போது
அவனது ரத்தம் தெரித்த இடமாகவும் உருவகப்படுத்தியவாறு.
கணவனைப் பிரிந்த இவளுக்கு, கண்ணிற்காணும் பொருளெல்லாம் கணவனை யிழந்ததாகத் தோன்றுதலால் இக்கற்பனை கூறினானென்க.
இப்படி கண்டாரிரங்கத்தக்க நிலைமையை யடைந்த மாலைப்பொழுது, ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத்துழாயைத்
துணையாகக்கொண்டு நாயகியை வருத்துதலை, தனது மக்கள் தனிமைப்படத்தன் கணவனையிழந்து வருந்திய தடாகை
அகஸ்திய சாபத்தை உதியாகக் கொண்டு முனிவர்களை எதிர்த்து வருந்துதல்போலக் கொள்க.
‘புலம்ப’ என்பதற்கு-தனிப்பட்ட என்றும், வாட என்றும், அழ என்றும், உரையிடலாம்.
புலம்புதலென்பதும தனித்தலென்னும் பொருளதாதலை ‘புலம்பே தனிமை’ (தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- உயிர்ச்சொல்லியல்-33.) என்பதனால் அறிக.
மாலைப்பொழுதிற் காணப்படும் பிறையின் பிரகாசக் குறையை வாடுதலாகவும், அக்காலத்தில் பறவைகள் மிகுதியாக ஒலித்தலையாவது
கடலொலியையாவது அழுகைக் குரலாகவும் கருதுக. இலங்கை வேங்களஞ்செய்த = எல்கையிலள்ள ராக்ஷஸர்களை வேரறும்படி போர் செய்தழித்த என்றபடி.
‘வெங்களஞ்செய்தல்- ச்மசாநமாக்குதல்’ என்றுமுரைப்பர். ‘ஒரு பிராட்டியைப் பிரிந்திருக்கமாட்டாமல் தாம் பெரு முயற்சி செய்து
கடல்கடந்த கொடும் பகை யொழித்துக் கூடியருளியவர், இப்பொழுது எம்மை இங்ஙனம் உபேக்ஷப்பதே!’ என்ற இறக்கந்தோன்ற
தென்பாலிலங்கை வெங்கனஞ் செய்த நம் விண்ணோர் பிரானார்’ என்றது. தேவர்களுக்குக் கொடுமை தீர்த்தவர்
எமக்குக் கொடுமை நீர்த்திலரே என்று குறிப்பிட வேண்டி, ‘விண்ணோர்பிரானார்’ என்றது.
துழாய் துணையா = மாலைப் பொழுதுக்குத் திருத்துழாய் துணையானதாகச் சொல்ல தன் கருத்து,
திருத்துழாய் நமக்குக் கிடையாததாய்க் கொண்டு நம்மை எப்படி வருத்துகின்றதோ அப்படியே இந்த மாலைப்பொழுது
வந்து வருத்துகின்றது என்பதாம். நங்களை- நங்களது உருபுமயக்கம்.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிப்பதற்கு உரிய காலம் ஸமீபித்து
அவனது போக்யதையை நினைப்பூட்டித் தம்மை வருந்தும் விதத்தை ஆழ்வார் அருளிச் செய்தலாம்.
(திங்களம்பிள்ளை + எள்குபுன்மாலை) தமக்கு உண்டான ஜ்ஞாநப்ரகாசம் துயரமடையும்படி செவ்விதான மஹா விவேகமுங் குலைந்து
பக்தியே விஞ்சி ஆற்றாமை விளைக்கிற கொடிய இக்காலமானது (தென்பால் + துழாய் து¬ணா) துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சீலரான
எம்பெருமானது யோக்யதையை நினைப்பூட்டிக்கொண்டு. (நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே)
எமது ஸ்வரூபத்தை மாற்றும்படி வருத்துகிறது என்கை.
————————————————————
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – – 78- -இன்பம் பயக்க-7-10-
பதவுரை
(எமது நாயகனார்)
நலியும்நரகனை வீட்டிற்றும்–(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண்தோள் துணிந்த வலியும்–பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்–(அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல–(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார்–அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே–சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப்பெறுவதற்காகவே
மெலியும்–ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்–(எமது) பேதைநெஞ்சு
தந்து போயின–(தான் எம்மைவிட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்துவிட்டுப் போனவை
வேதனை–இத் துன்பங்கள்.
ஆழ்வார் திரு உள்ளம் அவன் திருத் துழாய் மாலையைப் பெற ஆசைப்பட்டு கிடையாமையாலே இவருக்கு
வருத்தம் விளைவித்து அவன் இடம் தான் போய் அடைந்ததே
இவரே தேவாதி தேவன் என்பதை நரகாசுர வத – பாணாசூர விருத்தாந்தங்களால் வெளியிட்டு –
வருணன் குடை -மந்தரகிரி சிகரம் ரத்னா கிரி -அதிதி உடைய குண்டலங்கள் -ஐராவத யானை -கவர்ந்து போக -சத்யாபாமை தேவி யுடன்
கருட வாகனத்தில் வந்து முரனை அழித்து-நாயகனையும் அழித்து 16100 — தேவ கன்னிகைகளையும் -கொண்டு பாரிஜாதம் கொணர்ந்து
துவாரகையில் சத்யா பாமை வீட்டுப் புழக்கடையில் நாட்டினானே
அவனது விரோதி நிரசன வல்லமை பரத்வம் நம் போல்வாருக்கும் வேதங்களுக்கும் கூட சொல்ல முடியாதே
அவனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமல் அவனது போக்யத்தையிலே மனம் செலுத்துவதும் ஆற்றாமையையே விளைவிக்கும் -என்றவாறு
பிரிவாற்றாத தலைவி தலைவனது ஆற்றலைக் கருதிநெஞ்சழிந்து இரங்கும் பாசுரம் இது.
நானோவென்னில் எனது நாயகருடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் ப்ரபுத்வத்தையும் நோக்கி ‘நமக்கு அவர் துர்லபர்’ என்று கருதி
ஒருவாறு காதலையடக்கி ஆறியிருக்குந் தன்மையுடையேன்;
எனது மனமோ அங்ஙனம் ஆறியிராமல் அவனது மாலையைப் பெறுதற்கு
ஆசைப்பட்டு அது கிடையாமையால் எனக்கு இப்படிப்பட்ட வருத்தத்தை வினைத்துத்தான் அவனிடம் போய்விட்டது
என்று இரக்கத்தோடு உரைத்தானாயிற்று.
நரகாஸுரனைக் கொன்று பதினாறாயிரத்தொருநூறு கன்னிகைகளை மணஞ்செய்து கொண்டவரும்,
பாணாஸுரனது தோள்களைத் துணித்து ஆவன் மகனான உஷை தனது போனான அநிருத்தனை வெளிப்படையாக மணஞ் செய்துகொண்டு
கூடி வாழும்படி செய்தவருமான தலைவர் அவர் பக்கற்காதலியாகிய என்னை வந்து அடைந்து இன்பமடைவிக்கவேண்டாவோ வென்பால்
அவ்விரண்டு வரலாறுகளையும் எடுத்துக் கூறினாள்.
தாமே தேவாதிதேவ ரென்று தோன்றும்படி வெளியிட்ட வீர்யசக்தியை ‘பெருமை’ என்றது.
வீட்டிற்று உயிர் விடுவித்தது; இறந்தகாலத் தொழிற்பெயர். விடு என்பதன் விகாரமாகிய வீடு என்பதனை பிறவினையான ‘வீட்டு’- பகுதி;
று- விகுதி. இனி, வீழ்த்திற்கு என்பது வீட்டிற்று என மரூஉ வாயிற்றென்பாருமுளர்.
நீர்த்து = நீர்மை என்னும் பண்பின் அடியாய்ப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புமுற்று. மை வரை = மேகம் படிந்த மலை என்னவுமாம்.
பாட்டின் முடிவில் ‘வேதகா’ என்னும் வடசொல் ஐயீறாகத்திரித்தது. வலியின் பெருமையும், என்றும் பாடமுண்டாம்.
ஆச்ரித விரோதிகளை அழிக்குங்குணம் எம்பெருமானுக்கு இயல்பாயிருக்கவும் தாம் அவனருளால் தமது பிரதிபந்தங்கள் ஒழிய
அவனது போக்யத்தையை அநுபவிக்கப் பெறாமல் மனங்கலங்கி அதனால் வருந்துகிறபடியை ஆழ்வார் அருளிச் செய்தல் இதற்கு உள்ளுறை பொருள்.
எம்பெருமானது விரோதி நிரஸந் சக்தியும் பரத்வ மஹிமையும் எம்போலியர்க்கு வரையறுத்துச் சொல்லக் கூடியவையல்ல;
தேவங்களுக்கும் எட்டாதவை; அப்படிப்பட்ட ஸர்வேச்வரனைக்கிட்டு அநுபவிக்கப் பெறாதவளவில் அவனது யோக்யதையில்
மனஞ்செலுத்துதலும் ஆற்றாமை துயிரையே மூட்டுகின்றதென்றவாறு.
————————————————————————–
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 -மெய்ம்மாம் பூம் பொழில் –3 –5-
பதவுரை
வேதனை–வேதம் வல்லவனும்
வெள் புரி நூதனை–சுத்தமான யஜ்னோபவித முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை–மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை–(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி
(அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை–உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல்–திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும்–யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே–குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார்–இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர்–பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.
நாயகனைப் பிரியாத மகளிர் பாக்யத்தை கூறித் தலைவி இரங்கும் பாசுரம் –
இங்கேயே அவனை-இடைவிடாமல் அனுபவிக்கப் பெற்றவர் முக்தர்களிலும் சீரியர்
பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்-சீதனையே-ஸ்ரீ தேவி பூ தேவி திருவடி வருட –
அப்படிப்பட்ட இடையில்லாத் போகம் தனக்கு கிடையாமையை சொல்லி
வேத முதல்வன் விளங்கு பூரி நூலன் -ஞாலந்தத்தும் பாதனைப் –
திரு உலகு அளந்த திருவடி யுடையவன் -உத்பத்தி ஸ்தானமான திருவடியை யுடையவன் என்றுமாம்
திருமாலின் திருவடியின் நின்றும் பூ லகம் வந்தமை புருஷ ஸூ கதம் சொல்லுமே
உண்ணும் சோறு இத்யாதி -மனம் மொழி காயம் மூன்றாலும் இங்கேயே பகவத் அனுபவமே யாத்திரையாக-கொண்ட
ஆழ்வார் நித்ய ஸூ ரிகளிகளும் மேம்பட்டவர் என்றதாயிற்று –
நாயகனைப் பிரியாத பாக்கியம் பெற்ற மகளிர்களின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கும் பாசுரம் இது.
வேதம் வல்லவனாய் சுத்தமான யஜ்ஞோபவீத மணிந்தவானய் மேலுலகத்தார் துதிக்குமாறு அவர்கட்குத் தலைவனாக நிற்பவனாய்ப்
பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுள் வைத்து நோக்குபவனாய்த் தனக்கொரு தலைவனையுடையனாகாதவனாய்
உலகத்தையளந்த திருவடியையுடைவனாய்த் திருப்பாற்கடலில் க்ஷேசாயியாகி யோகந்துயிர் கொண்டருள்பவனாய்க்
குளிர்ந்த தன்மையயுடைவனான எம்பெருமானையே இடைவிடாது வணங்கி யநுபவிப்பவர் யாரோ, அவர்கள் பரமபதத்தில் வாழும்
நித்ய முக்தர்களிற் காட்டிலும் சிறப்புடையராவர் என்கிறது.
நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை சிறப்புடையராவர் என்கிறது.
நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை யாற்றுவிக்கிற தோழியை நோக்கி,
‘நாயகனைப் பிரியாமல் அவனுடன் என்றுங்கூடி வாழ்பவர் முத்தியுலகத்துப் பேரின்பம் நுகர்வாரினுஞ் சிறப்புடையாராவர், என்ற இதனால்
‘அப்படிப்பட்ட பாக்ய விசேஷத்தை யான் பெற்றிலனே!’ என்று தன் ஆற்றாமை மிகுதியை வெளியிட்டாளாயிற்று.
ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒருகாலும் விட்டுப் பிரியாது திருவடி வருடக் கூடிக்குலவி யின்புற அவர்களுடன் அறிதுலமருந்தன்மையை
‘பாற்கடல் பாம்பணைமேற் பள்ளிகொண்டருளுஞ் சீதனை’ என்றதனால்குறிப்பிட்டு,அப்படிப்பட்ட இடையீடில்லாப் போகம்
தனக்குக் கிடையாமையைப் பற்றிப் பொறாமையும் வருத்தமுங் கொண்டவை கொள்க.
‘வேதனை’ என்பதற்கு- வேதம் வல்லவன் என்றும், வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
வெண்புரிநூல் = வெண்ணிறமான முப்புரிநூல் வைதிக புருஷனென்கைக்கு அடையாளமான சுத்த யஜ்ஞோவீதத்தையுடையவன் என்றவாறு.
“வேதமுதல்வன் விளங்கு புரிநூலன் (8-4-2.) என்ற திருமொழியுங் காண்க.
“ஞாலந்தத்தும் பாதன்” என்பதற்கு- ‘உலகத்தை யளந்த திருவடியையுடையவன்’ என்று பொருள் கொள்வதன்றியே,
பூமிக்கு உற்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் என்றும் பொருள் கொள்வர்;
திருமாலின் திருவடியினின்று பூலோக முண்டாயிற்றென்று வேதங்கள் கூறும். சீலன் – அருளுடையானென்றபடி.
இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான
இடையூறுமில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம்
பகவதநுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே
அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது
அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?
ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம்மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனமொழிமெய்களால்
பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று.
அப்படிப்பட்ட அநுபவம் தமக்குக் கிடைக்கவில்லையே! என்று வருந்துகின்றமையும் இதில் தோன்றும்.
————————————————————————–
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 – -முடிச் சோதியாய் -3–1
பதவுரை
சீர் அரசு ஆண்டு–சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ–தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த–பின்பு இறந்தொழிந்த
பார் அரசு–ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து–போன்று
ஞாயிறு–ஸூர்யன்
மறைந்து–அஸ்தமித்தான்;
பார் அளந்த–உலகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே–சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே–பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த–எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே–ஒப்பற்ற நாதனே!
அருளாய்–(இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள்புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது–இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது.
மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கும் பாசுரம் -உரு வெளிப்பாட்டால் நாயகன் நேராக தோன்றி-அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த-பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு –
சூர்ய அஸ்தமனம் அரசன் ஆண்டு மறைந்தால் போலே என்றவாறு –
நீர் வந்து ரஷியா விடில் அரசர்கள் இல்லாத ராஜ்யத்தில் கணவனை இழந்த பெண் மக்கள் கொடியோரால்
படும் பாட்டை இருளினால் நான் பாடுவேன் என்கிறார் யாயிற்று
இருளில் அகப்பட்ட தன்னையும் சூரியனையும் மீட்க ஓங்கி இலக்கு அளந்த உத்தமன் வேண்டுமே -பாரளந்த பேரரசே -என்கிறார் –
பரமபதம் போலே என்னையும் அனர்யார்ஹம் ஆக்கிக் கொள்ளத் தக்கவனே-எம் விசும்பரசே
பிரியேன் பிரிந்தால் தறியேன் -இன்ன காலத்தில் வருவேன் சொல்லி வராமல் -எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே –
ஓரரசே -இப்படியும் ஒரு தலைவன் உண்டாவதே –
என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாது இருக்கும் இந்த ஸ்வபாவத்தில் முடி சூடி இருக்கிறவனே-வஞ்சித்ததோர் அரசே –
அவனைச் சேர பெறாமையாலே விவேக பிரகாசம் குலைந்து மோஹாந்தகாரம் மேல் இடுகின்ற படியை-எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார்
இத்தால் சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேல் இடும்படி இருக்கையாலே
கடுக இவ்விருப்பைக் கழித்துத் தர வேணும்-என்று அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை -ஸ்ரீ ஸூ க்திகள்-
பிரிவாற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.
இப்பாட்டில் நாயகனை நோக்கின் விளியுள்ளதனால், உருவெளிப்பாட்டில் கண்ணெதிரில் நாயகன் காணப்பட்டாதென்றும்
அன்னவனை நோக்கி இது கூறுகின்ற தென்றுங் கொள்க.
ஸூர்யன் உலகமுழுவதும் பகலெல்லாம் தடையறத் தனது செய்ய கிரணத்தைச் செலுத்திப் பின் அப்பாற் சென்றபடியை
“சீராசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்தஅ பாராசொத்து மறைந்தது நாயிறு” என்றார்.
ஓரரசன் சிறப்பாக ராஜ்யத்தை அரசாட்சி செய்து தனது நீதி தவறாது ஆஞ்ஞையைச் சிலகாலம் உலகததிற் செலுத்திப் பிறகு
இறந்தொழியுமாபோலேயிருக்கிறதாயிற்று ஸூர்யாஸ்தமனம், நாயகனே! இப்பொழுது நீ என்னை வந்து சேர்ந்திடாயாயின்
அரசனில்லாத ராஜ்யத்தில் கணவனையிழந்த பெண்மகள் கொடியரால் படும் பாட்டை
யான் இருளினால் படுவேன் என்பது தோன்ற இது சொல்லப்பட்ட தென்க.
இருளின் கையிலே யகப்பட்ட ஸூர்யனையும் தன்னையும் மீட்கைக்கு மஹாபலிகையிலே யகப்பட்ட உலகத்தை மீட்டவன்
வேண்டுமென்பாள் பாரளந்த பேரரசை விளித்தாள்.
எம் விசுபரசே!= பரமபதத்தைப்போலவே எம்மையும் அநந்யார்ஹ சேஷமாக்கிக் கொள்ளதக்கவனே! என்றபடி.
முதலில் என்னை விட்டுப் பிரியவேமாட்டேன், என்று சொன்னதும், பின்பு ‘இன்ன காலத்தில் வருவேன்’ என்று
காலங்குறித்துக் கூறினாலும் இரண்டும் பொய்யாம்படி. தன்னைப் பிரிந்து சென்று நெடுநாள் வாராது விளம்பித்தது பற்றி
“எம்மைநீத்து வஞ்சித்த ஓராசே” என்றாள். ‘இவ்விடத்து ஓராசே!’ என்றது இப்படியும் ஒரு தலைவனுண்டோவென்று குறை கூறியவாறு.
“எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்பதற்கு- “என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாதிருக்கிற இந்த ஸ்வபாவத்திலே முடிசூடியிருக்கிறவனே!”
என்று விசேஷார்த்தம் உரைப்பர். ‘வஞ்சித்த’ என்னும் பெயரெச்சத்தின் ஈறு தொக்கியிருப்பதால் ‘வஞ்சித்தோராசே’, என்றாயிற்று.
செலீஇ = செலுத்தி; சொல்லிசை யளபெடை! இங்கு அளபெடை அலகுபெறவில்லை.
“எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறாமையாலே தமது விவேகப்ரகாசங்குலைந்து மோஹாந்தகரநம் மேலிடுகிறபடியை
எம்பெருமானைக் குறித்து இதனால் ஆழ்வார் விண்ணப்பஞ் செய்தாராயிற்று. இங்கே நம்பிள்ளையீடுகாண்மின்;
“இத்தால் ஸம்ஸாரத்திலிருப்பு அஜ்ஞானம் வந்து மேலிடும்படியிருக்கையாலே கடுக இவ்விருப்பைக் கழித்துத் தரவேணுமென்று அருளிச்செய்கிறார்.
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .