பிரிய நினைவின்றிக்கே இருக்க -அதி சங்கையால் பிரிந்தார் படும் -வியசனத்தைப் பட்டு –அத்தாலே அவசன்னரான இவரை –
உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று ஆஸ்வசிப்பிக்க -பாத்தாலே தரித்து மிகவும் ப்ரீதரானவர்
வீடுமின் முற்றத்திலும் பத்துடை அடியவரிலுமாக ப்ரஸ்துதமான பக்தியானது ஸ்வ சாத்யத்தோடே சேர்ந்த படியை சாஷாத் கரித்து –
அத்திருவாய்மொழிகளிலே பக்தி வர்த்தகமாகச் சொன்ன குணங்களை பராமர்சியா நின்று கொண்டு
தமக்கு பேற்றுக்கு உடலாக முதல் திருவாய் மொழியில் சொன்ன ப்ரபத்தியை சொல்லித் தலைக்கு கட்டுகிறார்–
மயர்வற மதி நலம் அருளினன்-என்று முதல் திருவாய் மொழியிலே ப்ரபத்தியைச் சொல்லிற்று இ றே –
இவருடைய பக்தி தான் உபய பரி கர்மித ஸ்வான்தஸ்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய-என்று
ஞான கர்ம அனுக்ருஹீத வேதாந்த விஹித பக்தி என்று –அது வாகில் அப சூத்ராதி கரண நியாயம் பிரசங்கிக்கும் –
அந்த ஞான கர்மங்களினுடைய ஸ்தானத்தில் -பகவத் பிரசாதத்தாலே பயபக்தி தொடக்கமான ப்ராப்யாந்தர் கதமான அவஸ்தைகள் இ றே இவரது –
அப்படி வீடுமின் முற்றத்திலும் -பத்துடை அடியவரிலும் பிறருக்கு உபதேசித்த பக்தி ஸ்வ சாத்யத்தோடே பொருந்தின படியை நிகமிக்கிறார்
-சாத்யத்தோடே பொருந்துகை யாவது -சாத்தியத்தை லபிக்கை-அதாகிறது சாஷாத்காரம் –
கீழ் இவருக்கு அனுசந்தானம் இல்லையோ என்னில் -அவை எல்லாம் ஒரு ரஸ விசேஷங்களை பற்றச் சொல்லிற்று –
இதில் உபக்ரமத்தில் தாம் விதித்த பக்தியை நிகமிக்கிறார் -பசு மேய்க்கப் போகாது ஒழிய வேணும் -என்று அபேக்ஷிக்க-அவனும் தவிர்ந்தோம் -என்று சொல்லுகையாலே ப்ரீதராய்-அவன் பக்தி லப்யன் என்னும் இடம் நிச்சிதம் என்கிறார் -என்று பிள்ளான் நிர்வாஹம்-
————————————————————
உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து ஆஸ்ரித ஸூலபனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தி யோக லப்யம் என்கிறார் –
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்–தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்–சார்வே –தவ நெறிக்குத் -பக்தி மார்க்கத்துக்கு -வணக்குடை தவ நெறி என்றத்தைச் சொல்லுகிறது –மாம் நமஸ் குரு–என்று வணக்கத்தை கரண சரீரமாக யுடைத்தாய் இருக்கும் இ றே பக்தி –அன்றிக்கே -யஸ்ய ஞான மாயம் தப -என்று ஞான விசேஷமான பக்தியை தபஸ் -என்று சொல்லுகிறது -இவன் ஒரு கால் தலை வணங்க -பெரு வருத்தமான காய கிலேசமாக நினைத்து இருக்கும் ஈஸ்வர அபிப்பிராயத்தாலே சொல்லவுமாம் —தாமோதரன் தாள்கள்–தாமோதரன் —உரலினோடு இணைந்து இருந்து -என்றத்தை சொல்லுகிறது -சர்வாதிகனாய் வைத்து ஓர் இடைச்சி கட்டவும் அடிக்கவும் -தன்னைக் கொடுத்து -அத்தாலே வந்த தழும்பாலே–அது தானே தனக்குத் திரு நாமமாம் படி இருக்கிறவன் – தாள்கள் -தன்னை உகப்பாருக்கு இவன் இப்படி எளியன் ஆனால் -அவனை உகப்பார் அவன் ஸுலப்யத்தத்துக்கு தோற்று அவன் திருவடிகளை பெறும் அத்தனை இ றே —சார்வு -ப்ராப்யம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் என்றும் -எளிவரும் இயல்வினன் என்றும் -அவன் சார்வு -என்றார் -இங்கே சார்வே -என்று அவதரிக்கிறார் -எப்படிப் பட்டவன் இங்கு ஸூலபன் ஆகிறான் என்னில்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்–விலக்ஷண விக்ரஹத்தை யுடையனாய் -உபய விபூதியுக்தனானவன் என்கிறார் -கார்மேக வண்ணன் — நீர் கொண்டு எழுந்த கார் மேகம் போலே சிரமஹரமான வடிவை யுடையவன் –அடியிலேஇவனுக்கு ருசியைப் பிறப்பித்து -பக்திபர்யந்தமாக வளர்த்து –அது பக்வமானால் பின்னைத் தானே ப்ராப்யமாய் இருக்கிற வடிவு -கறுத்த மேகம் என்னுதல் /கார் காலத்து மேகம் என்னுதல் -புயல் கரு நிறத்தனன் -என்றத்தை நினைக்கிறது – — கமல நயனத்தன்-அவ்வடிவுக்கு பரபாகமாய் அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை யுடையவன் –
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற–விக்ரஹ வைலக்ஷண்யம் அன்றியிலே-ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –பஞ்ச பூதங்கள் -தத் கார்யமான தேவாதி பூதங்களுக்கும் உப லக்ஷணம் –
நேமியான்-ஜகாத் ரக்ஷணத்துக்கு உறுப்பான திரு வாழி யை யுடையவன் –நித்ய விபூதியிலும் கையும் திரு வாழியுமாய் இ றே இருப்பது –
பேர் வானவர்கள்--அமரரான ப்ரஹ்மாதிகளை வியாவர்த்திக்கிறது -என்னுதல் -வானவர்கள் பேர் பிதற்றும் என்னுதல் –
பிதற்றும் பெருமையனே–அளவுடையாரும் அடைவு கெடப் பேசும்படியான பெருமையை யுடையவன் –யாவையும் யாவரும் தானாம் அமையுடை நாரணன் -என்றத்தை நினைக்கிறது —
இப்படி உபய விபூதி நாதனாய் வைத்து –தன் விபூதியில் ஒரு பதார்த்தத்துக்கு சேஷமாய் வந்து அவதரித்து -கட்டவும் அடிக்கவுமாம் படி இருக்கிற —தாமோதரன் –தவ நெறிக்கு –சார்வே –
—————————————————————–
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் – என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி -நாள் தோறும் என்னை இஹ லோகத்தில் அடிமை கொள்ளா நின்றான் -என்று -தாமோதரத்வம் தமக்குப் பலித்த படியைப் -பேசுகிறார் –
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-
பெருமையனே வானத்து இமையோர்க்கும் —-ஊர்த்தவ லோகஸ்த்தராய்–ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு தங்களுக்கு மேல் இல்லை என்று இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கும் ஈஸ்வரன் -அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யற நிலமதுவாம் அமைவுடை அமரர் -என்றத்தை நினைக்கிறது -துர்மானம் கனத்து இருக்கையும் -விடும் இடத்து கால் கட்டு குவாலாய் இருக்கையும் இ றே நம்மில் காட்டில் வியாவ்ருத்தி –
காண்டற் கருமையனே ஆகத் தணை யாதார்க்கு–தானே மேல் விழா நின்றால் இசைவு இன்றிக்கே இருப்பார்க்கு கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கும் -பிறர்களுக்கு அரிய வித்தகன் -என்றத்தை நினைக்கிறது –
என்றும் -திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் –என்றும் ஓக்க பிராட்டி திரு மேனியில் உறைகிற –என்றும் -அகலகில்லேன் இறையும் -என்ற நித்ய வாசத்தை சொல்லுகிறது -மலர்மகள் விரும்பும் -என்றத்தை நினைக்கிறது –செங்கண்–அவ ளோட்டை ஸஹ வாசத்தாலே-மதமுதிதரைப் போலே சிவந்த திருக் கண்களை யுடையவன் –-மால் -அவளோட்டைச் சேர்த்தியால் வந்த பெருமையை யுடையவன் -அப்ரமேயம் ஹி தத்தேஜ-அரும் பெறல் அடிகள் -என்றத்தை நினைக்கிறது –
நாளும்–இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–—-இருமை வினை கடிந்து -நாளும்- இங்கு என்னை ஆள்கின்றானே–புண்ய பாப ரூப கர்மங்களை போக்கி -ஒரு தேச விசேஷத்தில் அன்றிக்கே-இங்கு -இஹ லோகத்திலேயே -நாள் தோறும் -என்னை அடிமை கொள்ளா நின்றான் -அங்கே குண அனுபவம் –இங்கே குண ஞானத்தால் தரிக்கை–
—————————————————————–
மறுவல் இடாத படி சம்சாரத்தை போக்கி நப்பின்னை பிராட்டிக்கு நாதனாவனுடைய / வல்லனனானவனுடைய – திருவடிகளைக் கண்டு கொண்டு சிரோ பூஷணமாக என் தலை மேலே புனைய பெற்றேன் என்கிறார் –
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-
ஆள்கின்றான் ஆழியான்–வகுத்த சர்வேஸ்வரன் அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் / ஆஸிலே வைத்த கையும் தாணுமாய் விரோதியைப் போக்கி அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் / அசக்தனான தன்னாலே சாத்தியமான அசேதன க்ரியாகலாபங்கள் கொண்டு விரோதியைப் போக்குமவர் அன்றே இவர் –சர்வ சக்தி கையில் திரு வாழி யின் கூர்மையால் போக்குமவர் இ றே –
ஆரால் குறை உடையம்-என்னால் வருமதொரு குறையும் இல்லை -யமாதிகளால் வருமவையும் இல்லை –
மீள்கின்றதில்லை–இனி மறுவல் இடுகிறது இல்லை –
பிறவித் துயர் கடிந்தோம்–துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய் தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இ றே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை என்கை -இதுக்கு ஹேது என் என்னில் –
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்–ஒளியை யுடைத்தாய் கெண்டை போலே முக்தமாய் -தர்ச நீயமான திருக் கண்களை யுடையளாய் -ஆத்ம குணோபேதையான நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனுடைய -அவன் அடியாக வந்த பின்பு -என்னுடைய கர்ம வஸ்யத்தை யாதல் -அவன் ஸ்வ தந்திரத்தால் யாதல் இழக்க வேணுமோ –அவன் என்னை கடாஷியா விட்டால் -அவள் கடாக்ஷத்துக்கு இலக்கன்றிப் போகிறான் -அவன் ஸ்வா தந்தர்யம் கொண்டாடினால் அவள் நோக்கு இழக்கும் இ றே -என் ஜீவனத்தை பறித்தான் ஆகில் தன் ஜீவனத்தை இழக்கிறான் –
தாள் கண்டு கொண்டு –தாளாலே அவனைக் கண்டு கொண்டு -என்னுதல் /தாளைக் கண்டு கொண்டு என்னுதல் —
என் தலை மேல் புனைந்தேனே— நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்றும் –கோலமாம் என் சென்னிக்கு என்றும் ஆசைப்பட்ட படி என் தலை மேலே சூடாய் பெற்றேன் -என்கிறார் –
———————————————————————
என்னுடைய ஹிருதயத்தில் இருக்கிற சர்வேஸ்வரனை ஒருவராலும் விஸ்லேஷிக்கப் பண்ண ஒண்ணாமையை நிச்சயித்து -அத்தாலே க்ருதார்த்தனாய் இருந்தேன் -என்கிறார் –
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-
தலை மேல் புனைந்தேன் சரணங்கள்-அமரர் சென்னிப் பூவான திருவடிகளை சூடாய் பெற்றேன் -பிரார்த்தித்துப் போகை அன்றிக்கே கிட்டப் பெற்றேன் –
ஆலின்-இலைமேல் துயின்றான் –இவருக்கு ருசி பிறக்கைக்காக பண்ணின கிருஷியைச் சொல்கிறது -பிரளய ஆபத்தில் சர்வ லோகங்களையும் தன் திரு வயிற்றிலே வைத்து -ஒரு பாவனாய் இருபத்தொரு ஆலின் தளிரிலே கண் வளர்ந்து அருளினான் –
இமையோர் வணங்க-மலைமேல் தான் நின்று–அது தனக்கே மேலே நித்ய ஸூ ரிகள் அடிமை செய்ய திரு மலையிலே வந்து நின்றான் –
என் மனத்துள் இருந்தானை— நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே— தன்னுடைய ஆபத் ஸகத்வத்தையும் –சர்வ சக்தித்வத்தையும் –மேன்மையோடே கூடின ஸுலப்யத்தையும் -காட்டி என்னை இசைவித்து –என் மனசிலே புகுந்து -ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்தவனை -/ நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து –அவ்விருப்பை என்னால் போக்க ஒண்ணாமையை நிச்சயித்து –அவன் போகைக்கு உறுப்பாக என்னால் செய்யலாவது ப்ராதிகூல்யம் இ றே -நெஞ்சைக் கொண்டு இருக்கையாலே அத்தை செய்ய ஒண்ணாது இ றே -/ இருந்தேனே— இனி ஒரு பயம் இல்லை என்று நிர்ப்பயனாய் இருந்தேன் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி -என்று அவனுடைய ரக்ஷகத்வத்தை அறிந்தாலும் போக்யத்தை அறிந்தாலும் -ஒன்றாலும் சலியான் இ றே —
—————————————————————–
எம்பெருமான் என் திறத்திலே செய்து அருள நினைத்து இருக்கிறவை ஒருவருக்கும் அறிய நிலம் அல்ல என்கிறார் –
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை--தானே கிருஷி பண்ணி -தன் பேறாக வந்து என் நெஞ்சிலே இருக்கையாலே இனி ஒரு காலமும் விட்டுப் போகான் என்னும் இடத்தை நிச்சயித்து இருந்தேன் –
கைச் சக்கரத்து அண்ணல்--கையிலே திரு வாழி யையுடைய சர்வ ஸ்வாமி –கைப் பற்றினாரை ஒரு காலமும் விடான் என்கை –
கள்வம் பெரிது உடையவன்--நெஞ்சை விட்டுப் போகாமையே யன்றிக்கே இங்கே இருந்தே ஒருவருக்கும் அறிய ஒண்ணாதே -தான் அறிந்ததாக அநேகத்தைப் பாரியா நின்றான் -அர்ச்சிராதி கதியே கொடு போக நினைப்பது -அமாநவகரத்தாலே ஸ்பர்சிக்கத் தேடுவது –அப்சரஸ்ஸூக்களையிட்டு எதிர் கொள்ளத் தேடுவதாகா நின்றான் –
மெச்சப் படான் பிறர்க்கு–நான் தன் குணங்களை சொல்லி ஏத்தினால் போலே அநாஸ்ரிதர் கிட்டிக் கொண்டாடப் படான் –இரண்டும் இவர்க்கு பேறாய் இ றே இருப்பது -மெய் போலும் பொய் வல்லன்--பாண்டவர்களுக்கு மெய்யனாய் இருக்குமா போலே -துரியோதனாதிகளுக்கு செவ்வை செய்வாரைப் போலே இருந்து பொய்யாயத் தலைக் கட்டும் படி செய்ய வல்லன் –
நச்சப் படும் நமக்கு-தன்னை ஒழியச் செல்லாத நமக்கு கிட்டி ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கும் -/ நாகத்து அணையானே–சிலருக்கு அரியனாய் இருக்க -நமக்கு கிட்டலாய் இருக்கிறது எத்தாலே –என்னில் -ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக போகனாய் இருக்கையாலே –அவனுக்கு அபிமதனுமாய் -நமக்கு கிட்டுக்கைக்கு அடியுமாய் இ றே திருவனந்த ஆழ்வான் இருப்பது –
——————————————————————
இன்று புகுந்து ஆஸ்ரயிப்பாரையும் குண தோஷம் பாராதே நித்ய ஆஸ்ரிதரைப் போலே விஷயீ கரிக்கும் ஸ்வ பாவனான சர்வேஸ்வரன் திருவடிகளை /நிர்மமனாய் விழுந்து – பணியப் பெற்றேன் -திருவனந்த ஆழ்வானுக்கும் பிரயோஜனாந்தர பரர்க்கும் வாசி வையாதே உடம்பு கொடுக்குமவனை வணங்கப்பெற்றேன் என்கிறார் என்றவுமாம் –
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-
நாகத்து அணையானை-தன்னை யுகந்தாரை படுக்கையாகக் கொள்ளுமவனை
நாள்தோறும் ஞானத்தால்-ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை–ஞானத்தால்–ஆகத்து அணைப்பார்க்கு– நாள்தோறும்–அருள் செய்யும் அம்மானை–-ஞானம் -பக்தி -பக்தியால் நெஞ்சிலே அணைக்க நினைப்பார்க்கு -அவர்களுடைய ஹிருதயத்தை ஒரு நாளும் விடான் -அம்மான் -ஆஸாலேசம் யுடையார்க்கு தன் பேறாக விடாமைக்கு பிராப்தி சொல்லுகிறது –
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்–பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே—ஸூக ப்ர தானன்-என்று தோற்றும் படி சந்திரனைச் சூடி சாதகத்வ ஸூ சகமான ஜடையை யுடையனுமான ருத்ரனுக்கு திருமேனியில் ஒரு பார்ஸ்வத்திலே இடம் கொடுத்தவனுடைய திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பெற்றேன் –
——————————————————————
சர்வேஸ்வரனை நெஞ்சே நாள் தோறும் அனுபவி —அவன் தானே பிரதிபந்தகங்களை நீக்கி அடிமை கொள்ளும் -என்கிறார்
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-
பணி நெஞ்சே நாளும் -நெஞ்சே நாள் தோறும் அனுபவிக்கப் பார் –
பரம பரம்பரனை-சம்சாரிகளுக்கு அவ்வருகான-ப்ரஹ்மாதிகளுக்கும் பரரான நித்ய ஸூ ரிகளுக்கும் நிர்வாஹகானானவனை –
பிணி ஒன்றும் சாரா -சகல துக்கங்களும் நம்மை ஸ்பர்ஸியா –
பிறவி கெடுத்து ஆளும்-அந்த துக்கங்களுக்கு அடியானை ஜன்மத்தைப் போக்கி அடிமை கொள்ளும் –
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்–நீல மணியின் ஒளியை வடிவை வகுத்தால் போலே இருந்துள்ள வடிவை யுடையவன் –அடிமை கொள்ளும் வடிவு இருக்கிறபடி –/ மது சூதன் -அவ்வடிவை அனுபவிப்பார்க்கு விரோதியானவற்றை மதுவைப் போக்கினால் போலே போக்குமவன் / என் அம்மான்-அப்படியே என் விரோதியைப் போக்கி முகம் தந்தவன் –
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–தன் கைக்குத் தானே ஆபரணமாய் அனுபவிப்பார்க்கு ஸ்ப்ருஹணீயமான வடிவை யுடைய யுத்த உன்முகனான திரு வாழி யைக் கையிலே யுடையவன் -அனுபவத்துக்கு தானே விஷயமாய் -விரோதியைப் போக்குகைக்கு தானே ஆபரணமாக பரிகரத்தை யுடையவன் –
————————————————————————–
அவனை அனுபவி என்றவாறே -பரீதமான நெஞ்சைக் கொண்டாடி -நெஞ்சே அவனை இடைவிடாதே அனுபவி -என்கிறார் –
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-
ஆழியான் -ஸர்வேச்வரத்வ ஸூ சகமான திரு வாழி யைக் கையிலே யுடையவன்
ஆழி யமரர்க்கும் அப்பாலான்-கம்பீர ஸ் வ பாவரான நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானானவன் –
ஊழியான்-கால சேஷமான பிரளய காலத்திலேயே தான் ஒருவனுமே உளனாய்
ஊழி படைத்தான்-கால உபலஷித சகல பதார்த்தங்களையும் பஹுஸ்யாம் -என்று சொன்ன சங்கல்பத்தாலே உண்டாக்குமவன் –
நிரை மேய்த்தான்–தன்னாலே ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஒரு பதார்த்தத்துக்கு சேஷமாய் அவதரித்து —பாழி யம் தோளால் வரை எடுத்தான்--இப்பசுக்களுக்கும் இடையருக்கும் இந்திரனால் வந்த ஆபத்தாலே மலையை எடுத்து ரக்ஷிக்குமவன் –
–ரஷக அபேக்ஷை யுடைத்தானா பசுக்களை ரக்ஷிக்குமவன் -/பாழி-என்று வலி யாதல் -இடமுடை யாதல் –தோளின் நிழலிலே ஒதுங்கினால்-ஒரு கணையத்துக்கு உள்ளே இருப்பாரைப் போலே பயம் கெடுத்த தோள் என்னுதல் – லோகம் அடங்க ஒதுங்கினாலும் விஞ்சி இருக்கும் தோள் என்னுதல் –பஹுச்சாயா மவஷ்டபத–/ அந்தோள்–ரக்ஷமாகை அன்றிக்கே -மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்று மங்களா சாசனம் பண்ண வேண்டி இருக்கை–
பாதங்கள்–ஆபத்சகானுடைய திருவடிகளை –
வாழி-மேல் சொல்லப் புகுகிற காரியத்தை நினைத்து -ஆயுஷ்மன் -என்னுமா போலே -உனக்கு இது நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார் –
என் நெஞ்சே -புறம்பு உள்ளாரை சுமை எடுத்து தன் வழியே கொடு போகா நிற்க -முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே –
மறவாது -இதர விஷயங்களில் போல் அன்றியே விஸ்மரிக்கை ஸ்வரூப நாசம் என்னும் படியான விஷயம் கிடாய் -சா ஹானி –என்னக் கடவது இ றே –
வாழ் கண்டாய்–உன் பேற்றுக்கு இ றே நான் கால் பிடிக்கிறது –
———————————————————————-
ஜன்மாந்தர சஹஸ்ர க்ருத தப ஞாநாதிகளாலே சாத்தியமான பக்தி யோகத்தால் லப்யனான எம்பெருமானை -நான் கேவலம் அவன் பிரசாதத்தாலே காணப் பெற்றேன் என்று ஸ்வ லாபத்தைப் பேசுகிறார் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-
கண்டேன்–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் —
கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –
காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இ றே –தொண்டே செய்து –பர பக்தியாதிகளை யுடையவனாய்
என்றும் தொழுது வழி ஒழுக-நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி -அதுவே யாத்ரையாகச் செல்லும் படி–
பண்டே பரமன் பணித்த பணி வகையே–நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே -மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இ றே பாசுரம் –
———————————————————————–
ப்ரயோஜனாந்தர பரரோடு–சாத்தனாந்தர நிஷ்டரோடு –ப்ரபன்னரோடு வாசி அற அவனே அபாஸ்ரயம் என்று உக்த்தத்தை நிகமிக்கிறார் –
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-
வகையால் மனம் ஒன்றி மாதவனை–சாஸ்திரங்களில் சொல்லுகிற வழி தப்பாமே –ஏகாக்ர சித்தராய் ஸ்ரீ யதி யாகையாலே ஸ்வாராதானானவனை –இவன் செய்தது கொண்டு திருப்தமான படி பண்ணுவார் உண்டு என்னுதல் –இவன் செய்தது கொண்டு குறை நிரம்ப வேண்டும் அபூர்ணன் ஆலன் என்னுதல் –
நாளும்-புகையால் விளக்கால் புது மலரால் நீரால்–ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -ஆராதனை உபகரணங்களும் நியதி இல்லை -சம்பவித்த படியே அமையும் -என்கை –
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற-தகையான் சரணம் –சர்வதோ திக்கமாக ப்ரஹ்மாதிகள் கிட்டி ஆஸ்ரயிக்கலாம் படி நிற்கிற ஸ்வ பாவத்தை யுடையவனுடைய திருவடிகள்
தமர்கட்கு ஓர் பற்றே––அநந்ய பிரயோஜனர்க்கு அத்விதீயமான அபாஸ்ரயம் -பக்திமான்களுக்கு பல ப்ரதமமாய் உபாயமாய் இருக்கும் -தன்னையே பற்றினார்க்கு அவ்யவஹித உபாயமாம் –
——————————————————————–
நிகமத்தில் இத்திருவாய்மொழியைக் கற்றற்கு கிருஷ்ணனுடைய திருவடிகள் ஸூலபமாம் என்கிறார் –
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-
பற்று என்று பற்றி பரம பரம்பரனை–மல் திண் தோள் மாலை –– பரம பரம்பரனை–மல் திண் தோள் மாலை–பற்று என்று பற்றி-சர்வாதிகனாய் -விரோதி போக்குகைக்கு ஈடான தோள் மிடுக்கை யுடையனாய் -ஆஸ்ரிதர் பக்கல் வியாமுக்தனானவனை -பரம ப்ராப்யம் என்று பற்றி –
வழுதி வள நாடன்-சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-ஆழ்வாருடைய சொல்லாய் -அழகிய தொடையை யுடைத்தாய் -அந்தாதியான ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு -இப்பத்தை
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–-கற்றார்க்கு கிருஷ்ணனுடைய திருவடிகளே ப்ராப்யமாம் -தாமோதரன் –தாள்கள் –சார்வு -என்று ஆழ்வார் அறுதியிட்ட பேற்றைக் கொடுக்கும் –
———————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-