திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-7–

இப்படி எம்பெருமான் ஆழ்வார் தம் பக்கலிலே அத்யபி நிவிஷ்டனாய் -அவர் விதித்த படியே செய்யக் கடவனாய் இருந்து வைத்து –
தன்னுடைய சாபலதிசயத்தாலே-இவரை இத்தேகத்தோடே கூடத் திரு நாட்டில் கொடு போகையில் மிகவும் அபி நிவிஷ்டனாய் –
இத்தை அறியில் இவர் இசையார் என்று பார்த்து -இவரைக் கொண்டு திருவாய் மொழி பாடுவிப்பாரைப் போலே புகுந்து
இவருடைய திருமேனியிலும் இவர் தம்மோடு கலந்த அத்யபி நிவேசத்தைப் பண்ணி இவ் உடம்போடே கூடத் திருநாடு ஏறக் கொடு போகையிலே
அவன் அபி நிவேசிக்கிற படியை அறிந்து –இவன் இப்படி அபி நிவேசிக்கில் ஒரு நாளும் பிரகிருதி விஸ்லேஷத்துக்கு உபாயம் இல்லை –
ஆனபின்பு அவனுடைய அனுபவத்துக்கு விரோதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை அவனைவிட்டு இங்கேயே அருப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்து அருளி
சதுர் விம்சதி தத்வாத்மக ப்ரக்ருதி தத்வத்தோடு உள்ள சம்பந்தத்தை அறுத்து என்னைக் கொடு போக வேணும் என்று பிரார்த்திக்க
-உம்முடைய உடம்பு ஒழிய வேறு எனக்கு பிராப்யம் உண்டோ -என்று அவன் நிர்பந்திக்க -என் பக்கல் உண்டான விஷயீ காரத்தாலே
யன்றோ இவ்வுடம்பில் அபி நிவேசம் பண்ணுகிறது -ஆனபின்பு எனக்காக இதில் நசையை விட்டு அருள வேணும் -என்று
இவர் சரணம் புக்கு இரக்க அவனும் அப்படியே செய்கிறோம் -என்று இசைய -அத்யந்த ஹ்ருஷ்டராய்-அவனுடைய ஸுசீலாதி குணங்களில் அழுந்தி -அவனுக்கு அடிமை செய்யப் புகில் அவனுடைய ஸு சீல்யாதி அதிசயத்தாலே பிழைக்க ஒண்ணாது
-ஆனபின்பு தம் தாமை வேண்டி இருப்பார் அவனுடைய குணத்திலே அகப்படாதே
பரிஹரித்து அடிமை செய்யுங்கோள்–என்று ப்ரீதி அதிசயத்தாலே அருளிச் செய்கிறார் –

——————————————————–

திருவாய் மொழி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு வியாஜ்யத்தாலே- பேரையிட்டு கொடு வந்து புகுந்து தம் பக்கல் எம்பெருமான் பண்ணின வ்யாமோஹத்தைச் சொல்லி -இவனுக்கு அடிமை செய்வார் -இவன் சீலாதி குண வெள்ளத்திலே அகப்படாதே கொள்ளுங்கோள் -என்கிறார்

செஞ்சொற்  கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்–செவ்விய சொல்லையுடைய கவிகாள் -கவி பாடி அடிமை செய்யும் இடத்தில் உங்களை பரிஹரித்துக் கொண்டு அடிமை செய்யுங்கோள்
திருமால் இரும் சோலை-வஞ்சக் கள்வன் –என் கண்ணன் கள்வன் எனக்கு செம்மமாய் நிற்கும் -என்னுமா போலே மெய் செய்கிறான் என்று தோற்றும் படி தெரியாமே -வஞ்சிக்க வல்லனாய் -அதுக்கு அடியான மஹா ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையவன் –மா மாயன் மாயக் கவியாய் வந்து என்-நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே-அத்யாச்சர்ய அவஹமான திருவாயமொழி பாடுவித்துக் கொள்ள -என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு -இப்பரிமாற்றத்துக்கு நிலவரானார்க்கும் தெரியாத படி என் நெஞ்சையும் உயிரையும் உள்ளே புக்கு கலந்து அவற்றைப் புஜித்து-என் அபிமானத்தைப் போக்கித் தானே எனக்கு அபிமானியாய் அத்தாலே பூர்ணனானவன் –

——————————————————————-

தம்மோடு கலந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்தியைக் கண்டு இனியராய் அனுபவிக்கிறார் –

தானே  ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

என்னைப் பெறுகையாலே சர்வேஸ்வரனாய் –என்னை உபகரணமாகக் கொண்டு -தன்னைத் தானே ஸ்துதித்து -எனக்கு நிரதிசய போக்யனாய் -என்னைப் பெற்ற பின்பு திருமலைக்கு நாதனும் ஆனான் -/ என்னை முற்றும் உயிர் உண்டே–என்னுயிரை ஓன்று ஒழியாமே அனுபவித்து –

————————————————————————-

எம்பெருமானுக்கு மேன்மேல் எனத் தன் பக்கல் யுண்டான அபிநிவேச அபர்யாவசநத்தை -எல்லை இல்லாமையை –அருளிச் செய்கிறார் –

என்னை  முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என் ஆத்மாவை புஜித்து அதி ஷூத்ரமான என் சரீரத்தில் வந்து புகுந்து -என்னை யடைய வியாபித்து நிற்கிற ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரன் சேர்வதும் செய்து -தெற்கேயான திருமலைத் திக்கை பரம ப்ராப்யம் என்று சேர்ந்த நான் -இவ்வளவில் பர்யவசியேன் போலே இருந்தது -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –

————————————————————

தம்முடைய திருமேனியிலும் தம்மோடு பரிமாறலாம் நிலம் என்று திருமலையிலும் எம்பெருமானுக்கு யுண்டான வியாமோஹத்தை அருளிச் செய்கிறார் –

என் கொல்  அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து என் ஆத்மாவை விடாத மாத்ரம் அன்றிக்கே மிகவும் என் உடம்பை விடுகிறிலன் –பூமி எங்கும் உலாவித் திரிந்து என்னை விஷயீ கரிக்கைக்கு ஈடான நிலமாகத் திரு மலையைப் பார்த்து பிரதிகூலர் மண் உண்ணும் படி அதிலே அத்யபி நிவேசத்தைப் பண்ணி அத்தை ஒரு காலும் கை  விடுகிறிலன் –

————————————————————

எம்பெருமான் தன்னோடே கலந்து தம் வாயிலே திருவாய் மொழி கேட்ட ப்ரீதி யுள்ளடங்காமை தென்னா தென்னா என்று நித்ய முக்தரைப் போலே பாடா நின்றான் -என்கிறார் –

நண்ணா  அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும்  நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

உதவாத அஸூரர் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாதே முடியும்படியாகவும் -அனுகூலர் இத்தைக் கண்டு சம்ருத்தராம் படியாகவும் -உபய விபூதியும் கூடினாலும் எம்பெருமானுக்கு சம்பத்து போராது-இன்னம் மேன்மேலும் நன்மைகளை வேணும் என்று எண்ணா நிற்கும் நல் முனிவர் -இதுவே அமையும் -மற்று ஒரு சம்பத்து வேண்டா -என்று மிகவும் ஹ்ருஷ்டராம் படியாகவும் –
பண் சேர்ந்து இருந்துள்ள பாடலையுடைய இனிய கவிகளை என்னைப் பேர் இட்டுக் கொண்டு தன்னைத் தான் பாடி –என் அம்மான்–என் நாதனானவன் திரு மால் இரும் சோலையானே–

—————————————————————–

ஸ்ரீ யபதியானவன் திருமலையில் நின்று அருளி என்னை ஆளுகையில் மிகவும் வியாமுக்தன் ஆனான் -என்கிறார்

திருமால்  இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

கல்பம் தோறும் அழகிய மூன்று லோகத்தையும் தன் திரு வயிற்றிலே வைத்து உத்க்ருஷ்டமாக ரக்ஷிக்கும் ஸ்ரீ யபதி —
சிவனும் பிரமனும் காணாதே நிரதிசய பக்தி உக்தராய் தன் திருவடிகளை ஆஸ்ரயிக்க -அவர்களுடைய அபேக்ஷிதங்களைக் கொடுத்த சர்வேஸ்வரன் –

————————————————————————-

தம்முடைய ஸம்ருத்திக்கு அடியான திருமலையை ஏத்துகிறார் –

அருளை ஈ  என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் என் ஸ்வாமியே என்னும் ருத்ரனும் -அவனில் காட்டிலும் அறிவுடைய ப்ரஹ்மாவும் -இந்திரனும் தேவர்களும் ஜகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்காக கடவ ரிஷிகளும் -ஏத்தும் படியை யுடைய சர்வேஸ்வரனுடைய திருமலை -ஆத்மாவுக்கு பகவத் கைங்கர்ய விரோதிகளான அவித்யாதிகள் எல்லாம் போக்கும் நிரதிசய புருஷார்த்தமான திருமலை –திரு மாலிருஞ்சோலையே –

———————————————————————

திருமால்  இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

திருமலை தொடக்கமான கோயில்கள் எல்லாவற்றிலும் பண்ணும் அபி நிவேசத்தை தம்முடைய திரு உடம்பிலும் பண்ணா நின்றான் -என்று அனுசந்தித்து -அவனுடைய அபி நிவேசம் அவ்வளவும் அன்றிக்கே இருக்கையாலே அவை தன்னையே பரி கணித்து -இவற்றை ஒரு க்ஷணமும் பிரிகிரறிலன் –என் பக்கலிலே அபி நிவிஷ்டனான சர்வேஸ்வரனுடைய படி இருந்த படி என் -என்கிறார் –அருமா மாயத்து எனது உயிரே-என்றது மமமாயா துரத்யயா-என்னும் படியால் கடக்க அரிதான ப்ரக்ருதியோடே மயங்கின -மங்கின -என் ஆத்மா என்றவாறு –

————————————————————–

நமக்கு இந்த சம்பத்து எல்லாம் திருமலையாலே வந்தது -ஆனபின்பு திருமலையைக் கை விடாதே -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்துச் சொல்லி -தம்மைச்  சரீரமாக திரு நாட்டிலே கொடு போக வேணும் என்று இருக்கிற எம்பெருமானுடைய அபி நிவேசத்தைக் கண்டு -இந்த ஹேயமான பிரக்ருதியை -நீக்கி என்னைக்  கொடு போக வேணும் என்கிறார் –

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

கால உபலஷித சகல பதார்த்தத்துக்கும் காரணம் ஒருவனே என்று சொல்லப் படுகிற அதிதீயனாய் -கல்பம் தோறும் தன்னுடைய சங்கல்பத்தினாலே ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணி -அதுவே போது போக்காவதுவும் செய்து -கடல் போலே கம்பீர ஸ்வ பாவனான என் ஸ்வாமி யுடைய அழகிய ஸ்ரமஹரமான திருமாலிருஞ்சோலையை -மனசே கை விடாதே கொள்-வாழி –என்று மனசை சிலாகிக்கிறார் / உடலும் உயிரும் மங்க ஓட்டே–சரீர பிராணாதி ரூபமான பிரகிருதி சம்பந்த வி நாசத்தை சம்வதித்து அருள வேணும் —

—————————————————————-

தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே -சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

மங்க ஒட்டு உன் மா மாயை-ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி நீ வைத்த பிரக்ருதியை மங்க இசை / திருமலையில் வந்து நின்று -எங்களை அடிமை கொண்டு -ஒருவன் தனக்கு பரியுமா போலே என் திறத்திலே அனுக்ரஹம் பண்ணினவனே -அனுபவித்தவர்கள் தங்களுக்கு உரியர் அன்றிக்கே விக்ருதராம் படியான ஐந்து விஷயங்களும் -ஆத்மாவுக்கு நாசகமான ஞான இந்திரியங்களும் -கர்ம இந்திரியங்களும் – பிருதிவ்யாதி பூதங்களும் -இஸ் சம்சாரத்திலே இருக்கிற இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல ப்ரக்ருதி -இதனுடைய விகாரமான மஹான் அஹங்காரம் மனஸ் ஸூ -இவை யாகிற உன்னுடைய மா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –

————————————————————————

நிகமத்தில் மஹத் அஹங்கார விஷயமான இத்திருவாய் மொழி திருமலையில் சொல்லிற்று -என்கிறார் –

மான்  ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் கெடும்படியும் -பேறு மிடுக்கை யுண்டைய ஐந்து இந்திரியங்களும் மங்கும் படியாகவும் -எனக்குத் தானே அபிமானியாய்ப் புகுந்து ஆத்மாத்மீயங்களிலே எனக்கு யுண்டான அபிமானத்தைத் தவிர்த்தவனை -வண்டுகளினுடைய களிப்பை யுடைய பொழிலொடு கூடின திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திரு வாய் மொழியிலும் –
மஹத் அஹங்காராதி ரூபமான ப்ரக்ருதி நிரசன அர்த்தமாகச் சொன்ன இத் திருவாய் மொழி –மிக்கு இருந்துள்ள ஹர்ஷத்தாலே பிறந்த இத்திருவாய் மொழி –

————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: