திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-6–

பக்தி ஸ்வரூபத்தை உபதேசித்து அருளி -அந்நிய பரதை கெட்டுத் தன்னை ஒழியச் செல்லாத தன்மையான ஆழ்வாருடைய படியை அனுசந்தித்து
அவரை ஒழிய க்ஷண மாத்ரமும் செல்லாத படி திரு வாட்டாற்றில் எம்பெருமான் தான் இவரோடே ஆத்மாவதியாக
நிரந்தர சம்ச்லேஷம் பண்ணுகைக்காக உறுப்பாக திரு நாட்டிலே
கொடு போகையிலே பதறா நின்று வைத்து இவர் தாமே சொல்லக் கொடு போக வேணும் என்று அதுக்கு அவசர ப்ரதீஷனாய்
தம் பக்கல் பரதந்த்ரனாய் இருக்கிறவனுடைய நிர்ஹேதுக வியாமோஹத்தை அனுசந்தித்து விஸ்மிதராய்
திரு உள்ளத்தைக் குறித்து -நாம் பெற்ற பேறு கண்டாயே -என்று சொல்லி மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –

———————————————————

நம்மை  விஷயீ கரிக்கையிலே ஒருப்படா நின்று கொண்டு -அது தானும் நான் விதித்த படியே செய்வானாய் இரா நின்றான் என்கிறார் –

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

ஆழியான்–திரு வாழி யாழ்வானை விஷயீ கரித்தாலே போலே / அஞ்ஞான அவஹமான சம்சாரத்திலே பிறக்கையிலே நசை ஆற்றேன் –சாதுவான நெஞ்சே –நீ உகந்து அருளின கோயில்களில் நசையாலே -சம்சாரத்தை விட்டுத் திரு நாட்டுக்குப் போவேன் அல்லேன் நான் -என்று பண்ணின ப்ரமத்தைத் தவிர்–அவன் தந்து அருளுகிற படியே திருவடிகளை அனுபவி –

—————————————————————

வாட்டாற்றான்  அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

கேட்டாயே பவ்யமான நெஞ்சே –தன்னை அனுபவிக்கைக்கு விரோதியான மா ஞாலப் பிறப்பு அறுக்க வேணும் என்று -கேசி ஹந்தாவாய் என்னை அடிமை கொண்ட வாட்டாற்றானை அடி வணங்கி -அவன் பிரசாதத்தாலே திருவாய் மொழியும் பாடவும்  பெற்று தன்னுடைய ப்ராப்திக்கு பிரதிபந்தகமான அவித்யாதிகள் எல்லாம் போக்கி -இதர விஷய ப்ரவணராய் நம்மோடு ஒரு பற்று இன்றிக்கே இருக்கிற நாட்டாரோட்டைச் சேர்த்தியையும் தவிர்ந்து -நாராயணனை பிராபிக்கப்  பெற்றோம் -என்கிறார் –

———————————————————–

எம்பெருமான் நம்மை விஷயீ கரிக்க வல்லனே என்று யாம் இருக்க -அவ்வளவு அன்றிக்கே அத்யபி நிவிஷ்டனாய்-நாம் விதித்த படி செய்வானாய் இரா நின்றான் -நெஞ்சே -எண்ணின அளவன்றிக்கே கருமங்கள் விழும்படி என் என்கிறார் –

நண்ணினம்  நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

பல திரு நாமங்களை சொல்லி எம்பெருமானை அனுபவிக்கப் பெற்றோம் / வளம்-சம்பத்து / என் நெஞ்சே -இஸ் ஸம்ருத்தி எல்லாம் உன்னுடைய ஆனுகூல்யத்தாலே வந்தது என்று கருத்து –

—————————————————————

நம் விஷயத்தில் இத்தனை பவ்யனாக சம்பவிக்குமோ என்னில் -ஆஸ்ரித விஷயத்தில் எல்லாம் செய்வானான பின்பு நாம் அபேக்ஷித்தது எல்லாம் செய்யும் என்கிறார் –

என்  நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

ஹிருதயத்திலே இருந்து என்னை உபகரணமாகக் கொண்டு இஸ் சம்சாரத்திலே இப்படி விலக்ஷணமான திருவாய் மொழியை அருளிச் செய்து -ஆஸ்ரிதனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்காக வலிய நெஞ்சை யுடையனான ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்த திரு வாட்டாற்றில் எம்பெருமான் –பீஷ்மாதி ராஜாக்கள் அஞ்சும் படி பாரத ஸமரத்திலே ஆயுதம் தொடேன்  என்று ப்ரதிஜ்ஜை பண்ணி வைத்து ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்காக அசத்திய ப்ரதிஜ்ஜனாய் ஆயுதத்தை எடுத்தான் -எம்பெருமான் என்றால் உகக்கும் நெஞ்சே -நமக்கு நாதனான தான் நம் அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்யும் –

————————————————————–

அவன் பிரசாதத்தாலே ஆஸ்ரிதர்க்கு திரு நாட்டுக்குப் போகைக்கு வைத்த -அர்ச்சிராதி கதியாலே போகவும் பெறா நின்றேன் -பெரிய திருவடி மேலே இருக்குமா போலே அவன் திருவடிகள் என் தலை  மேலே இருக்கவும்  பெற்றேன் -என்று ப்ரீதர் ஆகிறார் –வழி –என்று உபாயம் ஆகவுமாம் –

வான்  ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-

நரகத்தை நகு நெஞ்சே-நெஞ்சே அவனைப் பிரிந்து இருக்கை யாகிற நரகத்தை நகு –நரகம் -என்று சம்சாரம் ஆகவுமாம் -/ தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன்-தேன் மிகா நின்றுள்ள திருத்த துழாயாலே அலங்க்ருதமான திருவடிகளை யுடையவன் –

———————————————————-

திருக் கண்களின் அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டு என் ஹிருதயத்தில் நின்றும் ஒரு காலும் போகிறிலன் -அவன் திருவடிகளைக் குறுகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

தலை  மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

கொலையானை மருப்பு ஒசித்தான்-தம்முடைய பிரதிபந்தகத்தைப் போக்கினை படி / குரை கழல்கள் -சிறு சதங்கைகளாலே த்வநிக்கிற திருவடிகள் –

——————————————————————–

எம்பெருமான் சபரிகரமாக வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -அத்தாலே என் உடம்பு நிரந்தரமாக த் திருத் துழாய் நாறா நின்றது -என்கிறார் –

குரை  கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

 நம் கோவிந்தன்–ஆஸ்ரித ஸூ லபனான கிருஷ்ணன் -திரை மிக்க கடல் அருகே சூழ்வதும் செய்து -தென்னாட்டுக்கு ஒரு திலகம் போலேயாய்-மலைகள் திரண்டால் போலே இருக்கிற அழகிய மாடங்களை யுடைய திரு வாட்டாற்றில் எம்பெருமானுடைய திருவடிகளிலே பரிமளம் மிக்கு இருந்துள்ள  நல்ல செவ்வித் திருத் துழாய் –

———————————————————————

அத்யந்த விலஷணனான திரு வாட்டாற்றிலே எம்பெருமான் என் ஹிருதயத்திலே  ஸூலபனாய்  புகுந்து உஜ்ஜவலன் ஆகைக்கு நான் என்ன நன்மை செய்தென் -என்கிறார்  –

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

திரு மேனி எல்லாம் நின்று கமழ்கிற திருத் துழாயினுடைய பரிமளம் பரம்பா நின்றுள்ள திரு முடியை யுடையனாய் –திரு உள்ளமான இடத்திலே சென்று யுத்தம் பண்ணி மீண்டு வந்து திருக் கையிலே இருக்கும் திரு வாழி யை யுடையனாய் புனல் போலேயும் மை நின்ற வரை போலேயும் இருக்கிற திரு உருவை யுடைய திரு வாட்டாற்றிலே எம்பெருமானுக்கு –

——————————————————————

அத்யந்த பரி பூர்ணனான தான் இகழ்வின்றிக்கே  என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியாது இரா நின்றான் -ஒருவனுடைய வ்யாமோஹமே -என்று ப்ரீதர் ஆகிறார் –

திகழ்கின்ற  திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

விளங்கா நின்ற திரு மார்விலே இருக்கிற பெரிய பிராட்டியாரோடும் கூட விளங்கா நின்றுள்ள திரு மாலார் சேரும் ஸ்தானம் -ஸ்ரமஹரமான திருவட்டாறு -புகழுக்கு எல்லாம் ஸ்தானமான பெரிய திருவடியை தனக்கு வாஹனமாக யுடையானுமாய் -பேறு மிடுக்கரான ராக்ஷஸ குலத்தை கெடுத்தவன் –

——————————————————————-

மஹாத்மாக்கள் சிலரை விஷயீ கரிக்கப் புக்கால் ஒருவருக்கும் கிடையாத சீரிய பொருளை -அவர்கள் அளவும் பாராதே கொடுப்பர் -என்னும் இவ்வர்த்த ஸ்திதியை  -வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் -என் பக்கல் காட்டி அருளினான் -என்கிறார் –

பிரியாது  ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-

எனக்காக ஹிரணியனுடைய ஹ்ருதயத்தை பிளந்தான் அன்று –இன்று எனக்கே ஆட் செய் என்று ஏம்மா வீட்டிலே நான் பிரார்த்தித்த படியே என்னை அடிமை கொண்டான் —
வாள்--ஓளி / உபய விபூதியிலும் தம்மை ஒழிய திருவாய் மொழி பாடப் பெற்றார் இல்லை -என்று இவருக்கு கருத்து –

————————————————————–

நிகமத்தில் அயர்வறும் அமரர்கள் இத்திருவாய் மொழியைக் கேட்டால் வித்ருஷ்ணர் ஆவர் என்கிறார் -அனுபவிக்க உரியர் நித்ய ஸூரிகள் என்கிறார் –

காட்டித்  தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

தன் திருவடிகளைக் காட்டித் தன்னைக் காணப் பெறாதே நான் பட்ட மஹா துக்கத்தைப் போக்கின திரு வாட்டாற்று எம்பெருமானை -சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய இசையோடு கூடின தமிழ்த் தொடையான ஆயிரம் திருவாய் மொழியிலும் செவிக்கு இனிதாய் செவ்விய சொல்லான இத்திருவாய் மொழியை —

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: