திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–6- –

பக்தி ஸ்வரூபத்தை உபதேசித்து அருளி-கை ஒழிந்த அநந்தரம்-அவன் பக்கலிலே இவர் விடாய் பெருகி வருகிறபடியைக் கண்டு-
இதுக்காகத் திரு வாட்டாற்றிலே சந்நிஹிதனாய் – நஜீவேயம் க்ஷணம் அபி -என்கிறபடியே-
-இவரை ஒழிய ஒரு க்ஷண மாத்ரமும் செல்லாத படி யுடையனாய் –
இவரோடே ஆத்மாந்தமாக பண்ண வேணும் -அது செய்யும் இடத்து விச்சேதன சங்கை இல்லாத படி
பரமபதத்தில் கொடு போவோம் -என்று -பதறா நிற்கச் செய்தே-
-இவர் பர தந்த்ரர் -நம்மை நியமிக்க மாட்டார் -என்று அறியாதே -இவர்க்குத் தான் பர தந்திரனாய்
இவர் நியமிக்க கொடு போக வேணும் -என்று அவசர ப்ரதீஷனாய் இருக்கிறவனுடைய -வியாமோஹ அதிசயத்தை கண்டு
சர்வாதிகனானவன் நம்மைக் குறித்து பர தந்த்ரன் ஆவதே -என்று விஸ்மிதராய் -இதுக்கு உஸாத் துணை யாவார் ஆர் என்று பார்த்த இடத்தில்
சம்சாரிகள் சப்தாதி விஷய ப்ரவணர் ஆகையாலும்-நித்ய ஸூ ரிகள் விப்ரக்ருஷ்டர் ஆகையாலும் -இனித் தமக்கு
உடன் கேடான நெஞ்சும் தாமும் ஆனவாறே -அத்தைக்கு குறித்து நாம் பெற்ற பேறு கண்டாயே -என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –
இதுக்கு முன்பு எல்லாம் இவனுக்கு ஸ்வா தந்தர்யமே ஸ்வரூபம் என்று போந்தார் –
இப்போது ஆஸ்ரித பார தந்தர்யமே ஸ்வரூபம் என்கிறார் –
இருந்தும் வியந்தில் காட்டில் இதுக்கு ஏற்றம் என் -என்னில் -அடியார் தம் அடியனேன்-என்ற ஹேதுவோடே அனுபவிக்கிறார் –

———————————————————-

நம்மை  விஷயீ கரிக்கையிலே ஒருப்படா நின்று கொண்டு -அது தானும் நான் விதித்த படியே செய்வானாய் இரா நின்றான் என்கிறார் –

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அருள் பெறுவார் அடியார் –சர்வேஸ்வரன் அளவிறந்த பிரசாதத்தை பண்ண அதுக்கு -விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு -ராஜாக்கள் மகிஷிகளுக்கு விபூதிகளையும் தங்களையும் அவர்கள் அதீனமாக்கி வைப்பாரைப் போலே -ஈஸ்வரன் தன்னை முற்றூட்டாக கொடுத்து அனுபவிக்குமவர்கள் –
தன் அடியனேற்கு -நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எங்கோக்கள் -என்று இ றே தம் ஸ்வரூபத்தை நினைத்து இருப்பது –
ஆழியான்–திரு வாழி யாழ்வானை விஷயீ கரித்தாலே போலே விஷயீ கரிக்க நினையா நின்றான் -விடலில் சக்கரம் இ றே -ஆஸ்ரிதரை நிரூபகமாக யுடையவன் -என்றுமாம் –
அருள் தருவான் அமைகின்றான் -ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இ றே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய  பாக்யாதி குணம் இ றே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது -நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத்தலையில் இச்சை பார்த்து இருக்கும் இ றே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது -தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே –இதுக்கு நான் செய்யப் பார்த்தது என் என்ன –
இருள் தரும் மா ஞாலத்துள் –-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இ றே –
இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —
மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ –
மட நெஞ்சே–சாது நெஞ்சே –பவ்யமான நெஞ்சே —மடமை -அறிவின்மை
வாட்டாற்றான் அடி வணங்கே–திரு வாட்டாற்றிலே வந்து நிற்கிறவன் நினைவிலே போகப் பார் –அடி வணங்குகை யாவது -ஈரரசு தவிருகை –அவன் கருத்தில் போகை –

——————————————————————–

விதி வகையே என்று -நம் இசைவு பார்த்து இருக்கிறான் என்கிறது என் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை  -என்று அடியிலே அபேக்ஷித்திலோமோ என்ன -அபேக்ஷித்த அளவோ நாம் பெற்றது -என்கிறார் –

வாட்டாற்றான்  அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்-–மா ஞாலம் பிறப்பு அறுப்பான்- -வாட்டாற்றான் அடி வணங்கி—தன்னை அனுபவிக்கைக்கு விரோதியான மஹா ப்ருதிவியிலே ஜன்மத்தைப் போக்க வேணும் -என்று அன்றோ நாம் அர்த்தித்தது-
கேசவன் எம்பெருமானை–கேசியை நிரசித்தால் போலே நம் சேஷத்வ விரோதியைப் போக்கி முறையிலே நிறுத்தின படியைக் கண்டாயே –அவ்வளவேயோ-
பாட்டாயே பல பாடி–விரோதியைப் போக்கினை படி கிடக்கச் செய்தே–வாசிகமான அடிமை யைக் கொண்ட படி கண்டாயே -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படி யன்றோ கவி பாடுவித்துக் கொண்ட படி — கேசவன் எம்பெருமானை -பாட்டாயே பல பாடி-பிரசஸ்த கேசனாய் இருக்கிற அழகைக் காட்டித் தோற்பித்து கவி பாடுவித்துக் கொண்டான் -என்றுமாம் –
பழ வினைகள் பற்று அறுத்து–நாம் அடிமை செய்ய -பிராப்தி பிரதிபந்தகமாய் அநாதி கால ஆர்ஜிதமான அவித்யாதிகள் எல்லாம் போகப் பெற்ற படி கண்டாயே -நாம் அநாதி காலம் கூட ஆர்ஜித்த வற்றை ஒரு சர்வ சக்தி அல்ப காலத்திலேயே போக்கினை படி கண்டாயே –
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து –அஹங்கார மமக வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே -இவை என்ன உலகு இயற்கை –கொடு உலகம் காட்டேல்-என்னப் பண்ணின படி கண்டாயே –
நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக்க கிட்டப் பெற்றோம் –கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் –

————————————————————-

எம்பெருமான் நம்மை விஷயீ கரிக்க வல்லனே என்று யாம் இருக்க -அவ்வளவு அன்றிக்கே அத்யபி நிவிஷ்டனாய்-நாம் விதித்த படி செய்வானாய் இரா நின்றான் -நெஞ்சே -எண்ணின அளவன்றிக்கே கருமங்கள் விழும்படி என் என்கிறார் –

நண்ணினம்  நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-–நாராயணனை நாமங்கள் பல சொல்லி–நண்ணினம்–கிட்டி அனுபவிக்கப் பெற்றோம் -விண்ணுலகம் என்கிற பேற்றுக்குச் சொல்லில் -மோக்ஷத்தில் விநியோகமான -திரு மந்திரமே அமையும் -ஸர்வார்த்த சாதக -என்கிறபடியே பிரயோஜனாந்தரங்களுக்கும் அதுவே அமையும் –ப்ரீதி ப்ரேரிக்க-அனுபவத்துக்காக சொல்லுகையாலே -எல்லாத் திரு நாமங்களும் வேணும் –
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று--பரம பதத்தில் காட்டில் ஸம்ருத்தி மிக்கு இருந்துள்ள திரு வாட்டாற்றை நிரூபகமாக யுடையவன் / வளம் –சம்பத்து / ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு -/ வந்து –நாம் செல்ல வேண்டும் தேசம் அடங்க தானே வந்து -/ இன்று -நம் பக்கல் இதுக்கு அடியாக இருப்பது ஓன்று நென்னேற்று இல்லை -இன்று இங்கனே விடியக் கண்டது அத்தனை –
விண்ணுலகம் தருவானாய்–பரம பதத்திலே செல்லப் பெறுகை யன்றிக்கே -ஆண்மின்கள் வணக்கம் -என்ற பொதுவும் இன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் நமக்கே தருவானாய் இரா நின்றான் –
விரைகின்றான் –சா பேஷாரான நாம் ஆறி இருக்க -நிரபேஷனானவன்-பதறா நின்றான் –முன்பு இவர் விரைந்த போது ஒரு கார்யார்த்தமாக வைத்தானாய் -அது தலைக் கட்டின வாறே -விசத்ருசமான விபூதி இவருக்குத் தரம் அன்று என்று பதறா நின்றான் –தொடங்கின அப்போதே தலைக் கட்ட வல்ல சர்வ சக்திக்கு பதற வேண்டுகிறது என் என்னில்
விதி வகையே--நாம் விதிக்கத் தருவானாக வேண்டி இரா நின்றான் –
எண்ணினவாறு ஆகா-நாம் இவனை விரைய வேணும் என்று எண்ணினோமோ –
இக் கருமங்கள் -பகவத் விஷயத்தில் பலிக்கும் படி –புறம்பு ஒருவனை ஓன்று ஆர்த்தித்தால் பேற்று அளவும் இவன் தானே அர்த்திக்க வேணும் –இவ்விஷயத்தில் இவன் ஒருகால் அர்த்தித்து விட்டால் பின்பு தன் பேறாக தானே அர்த்தித்துக் கொடுக்கும் –என் நெஞ்சே –இஸ் ஸம்ருத்தி எல்லாம் நீ என் வழியே போருகையாலே இ றே சித்தித்தது –

—————————————————————–

சர்வேஸ்வரன் தான் நாம் விதித்த இது செய்வதாகச் சொன்ன இது சம்பவிக்குமோ வென்னில்-அவனுடைய ஆஸ்ரித வாத்சல்யத்தை அனுசந்தித்தால் கூடாது இல்லை -என்கிறார் –

என்  நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

என் நெஞ்சத்து –-சம்சாரத்திலே விஷயாந்தர ப்ரவணமான நெஞ்சு என்று இவர் இறாயா நின்றார் -இவர் என்னது என்ற இதுவே ஹேதுவாக அவன் மேல் விழா நின்றான் –இவர் அயோக்யம் என்று அகல -அதுவே ஹேதுவாக அவன் புகுர நில்லா நின்றான் –
உள்-கார்யார்த்தமாக இருக்கை அன்றிக்கே தன் விடாய் தோற்ற உள்ளே புகுந்தான் –
இருந்து -புறம்பு ஒரு விபூதி உண்டு என்று நினையாதே ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இரா நின்றான் –
இங்கு -பரம பதத்தில் பரிமாற்றத்தை சம்சாரத்திலே உண்டாக்கினான் –
இருந்தமிழ் -விலக்ஷணமான தமிழ் –
நூல்-பின்பு லக்ஷணம் கட்டுவார்க்கும் இதுவே கொண்டு செய்ய வேண்டும் படி இருக்கை –இவர் ஆற்றாமையால் சொன்ன இத்தை -லக்ஷனோ பேதமாக்கினான் யாய்த்து-
இவை -தமக்கும் கொண்டாட வேண்டி இருக்கும் இவை –
மொழிந்து-பாடினான் அவனாய் தாம் கற்றுச் சொன்னாரோ பாதி யாக நினைத்து இருக்கிறார் –
வன்னெஞ்சத்து -பகவத் விஷயம் என்றால் அஸஹ்யமான நெஞ்சு
இரணியனை மார்வு இடந்த-துர்மானம் கிடந்த இடத்தை குட்டமிட்டு அழிக்கை-முன்பு தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவினவன் நமக்கு உதவானோ என்று கருத்து –
வாட்டாற்றான்-பிற்பாடார்க்கு உதவுகைக்காக திரு வாட்டாற்றிலே வர்த்திக்கிறவன் –
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்–சிம்ஹத்தைக் கண்ட நரி போலே பீஷ்மாதி ராஜ லோகங்கள் அஞ்ச -பாரத ஸமரத்திலே கிருஷ்ணாச்ரய கிருஷ்ண பலா-என்கிறவர்களுக்கு கையாளாய் / படை தொட்டான்-படை எடுத்தான் -படை விட்டான் -என்னப் பெற்றது இல்லை -சங்கல்பத்தை குலைந்த அத்தனை -கார்யம் கொள்ளப் பெற்றிலன் -சத்ய ஸங்கல்பன் என்கிறது -ஆஸ்ரிதரை ஒழிந்த இடத்திலே இ றே -விடா விட்டது என் என்னில் -அர்ஜுனன் தான் நீ ஆயுதம் விடில் எனக்கு அவத்யம் என்கையாலே
நன்னெஞ்சே-ஆஸ்ரித பக்ஷபாதத்தைக் கேட்டால் உகக்கும் நெஞ்சே –
நம் பெருமான் -நமக்கு ஸ்வாமி யானவன் –
நமக்கு அருள் தான் செய்வானே–நமக்கு அவ் வருளைப் பண்ணியே விடும் –விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்ற பேற்றை பண்ணியே விடும் -இது நிச்சிதம் –இசைவுக்கு நீ யுண்டு –இசைவைக் கொண்டு கார்யம் செய்கைக்கு அவனோடு சம்பந்தம் யுண்டு -நம் பேற்றுக்கு குறை யுண்டோ –

——————————————————————-

அவன் பரம பதத்துக்கு போக ஆஸ்ரிதற்கு வைத்த அர்ச்சிராதி கதியாலே போகப் பெறா நின்றேன் -நித்ய ஆஸ்ரிதரைப் போலே என்னை விஷயீ கரிக்கவும் பெற்றேன் -என்கிறார் –

வான்  ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-

வான் ஏற வழி தந்த -அபு நராவ்ருத்த லக்ஷணமான பரமபதத்தில் ஏறுகைக்கு அர்ச்சிராதி கதியைத் தந்த -பரம பாத லாபத்தாலும் -அவ்வருகே ஒரு லாபம் என்னலாம் படி இ றே அர்ச்சிராதி கத்தி ஸித்தி –
வாட்டாற்றான் -இப்பேற்றுக்கு கிருஷி பண்ணின தேசம் –
பணி வகையே-சொன்ன படியே -மாமேகம் சரணம் வ்ரஜ -என்னும் படி -பண்டே பரமன் பணித்த பணி வகை -என்றார் இ றே -மரணமானால் -என்று சொன்ன படியே என்னவுமாம் –நான் ஏறப் பெறுகின்றேன் -நான் செல்லப் பெறா நின்றேன் –
நரகத்தை நகு நெஞ்சே-சம்சாரத்தைப் பார்த்து உன்னை வென்றேன் -என்று சிரித்து போகப் பார் -உன்னை நெடுநாள் குடிமை கொண்டது என்று பார்த்து உன் வெற்றி தோன்ற போ -விஸ்லேஷம் ஆகிற நரகத்தை நகு என்றுமாம் -இச் செருக்குக்கு அடி என் என்ன
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன்-நாள் செல்ல நாள் செல்ல தேன் மிக்கு வாரா நின்றுள்ள மலரை யுடைய திருத் துழாய் விளங்கா நின்றுள்ள திருவடிகளை யுடையவன் -திருத் துழாயாலே அலங்க்ருதமான திருவடிகள் -என்றுமாம் –செழும் பறவை-இவனோட்டை சம்ச்லேஷத்தாலே தர்ச நீயமான வடிவை யுடையவன் –
தான் ஏறித் திரிவான தாளிணை -அவனுக்காகவும் அன்றிக்கே -அவனுடைய ஸூக ஸ்பர்சத்துக்காக தான் ஏறி சஞ்சரிக்குமவனுடைய திருவடிகள் –
என் தலை மேலே-–அவன் தோளில் இருக்கை தவிர்ந்து என் தலை மேலே இரா நின்றான் –

——————————————————————-

திரு வாட்டாற்றிலே சந்நிதி பண்ணி என்னை சர்வதோமுகமாக விட மாட்டாதவனுடைய திருவடிகளைக் குறுகப் பெற்றோம் -என்கிறார் –

தலை  மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

தலை மேலே தாளிணைகள்-திருவடிகளாலே என் தலையை அலங்கரியா நின்றான் –
தாமரைக் கண் என் அம்மான்–என் முன்னே நின்று கண் அழகைக் காட்டி ஜிதம் எண்ணப் பண்ணா நின்றான்
நிலை பேரான் என் நெஞ்சத்து -ஹிருதயத்தின் நின்றும் கால் வாங்கு கிறிலன்
எப்பொழுதும்-சர்வ காலமும் இப்படி செய்யா நின்றான் -தன்னை அனுபவிப்பார் நாநா வித சரீரத்தாலே அனுபவிக்குமா போலே -என்னை அனுபவிக்கைக்கு அநேக விக்ரகங்களை கொள்ளா நின்றான் –
எம்பெருமான்-உடமை உடையவனைப் பெற்றால் இருக்கும் அளவு அன்று இ றே உடைமையைப் பெற்றால் உடையவனுக்கு இருப்பது –
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் –மலைகளை சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்களை யுடைத்தான திரு வாட்டாற்றிலே திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் -பரியங்க வித்யையில் சொல்லுகிற படியே உத்தேச்ய வஸ்துவுக்கு குறை வெற்று இருக்கிற படி —
மதம் மிக்க-கொலையானை மருப்பு ஒசித்தான்--அனுபவ விரோதியை குவலயா பீடத்தைத் தள்ளினால் போலே தள்ளிப் பாகட்டான்
குரை கழல்கள் குறுகினமே–இப்படி போக்யமான திருவடிகளைக் கிட்டப் பெற்றோம் —குரை--ஆபரண த்வனி -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்னும் விடாய் தீரும் படி கிட்டப் பெற்றோம் –

——————————————————————–

எம்பெருமான் சபரிகரமாக வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -அத்தாலே என் உடம்பு நிரந்தரமாக த் திருத் துழாய் நாறா நின்றது -என்கிறார் –

குரை  கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

குரை கழல்கள் குறுகினம் –ஆபரண த்வனியோடே அவன் வந்து மேல் விழக் கிட்டப் பெற்றோம்
நம் கோவிந்தன் குடி கொண்டான்–ஆஸ்ரித வத்சலனான கிருஷ்ணன் அகம்படி வந்து புகுந்து -என்கிற படி வந்து புகுந்தான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன–திரை மிக்கு இருந்துள்ள கடல் அருகே சூழப் பட்டு இருப்பதாய் -தென்னாட்டுக்குத் திலகம் போலேயாய் –
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்-மலைகளை நெருங்க வைத்தால் போலே இருக்கிற மணி மயமான மாடங்களை யுடைத்தான திரு வாட்டாற்றிலே நின்று அருளினவனுடைய திருவடிகளின் மேல்
விரை குழுவு நறுந்துளவம் –பரிமளம் மிக்க திருத் துழாய் –/ விரை -பரிமளம் -/மெய்ந்நின்று கமழுமே–சரீரம் நிரந்தரமாக நாறா நின்றது –குரை கழல்கள் குறுகினம்-என்று நான் சொன்ன வார்த்தை மெய் என்னும் இடம் என் உடம்பே சொல்லா நின்றது -என்கை –அன்று மற்று ஒரு உபாயம் என் -என்று தோழி சொல்லியும் -வெறி கொல் துழாய் மலர் நாறும் -என்று தாயார் சொல்லியும் போந்த இத்தைத் தம் வாயாலே சொல்லும் படியுமாய்த்து –

———————————————————————-

அத்யந்த விலஷணனான திரு வாட்டாற்றிலே எம்பெருமான் என் ஹிருதயத்திலே  ஸூலபனாய்  புகுந்து உஜ்ஜவலன் ஆகைக்கு நான் என்ன நன்மை செய்தென் -என்கிறார்  –

மெய்ந்நின்ற  கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை–திரு மேனியில் கமழா நின்றுள்ள திருத் துழாயின் பரிமளம் –
ஏறு திரு முடியன்--அப் பரிமளம் மிகா நின்றுள்ள திரு முடியை யுடையனாய் -கடலில் நீர் ஸஹ்யத்திலே ஏறுமா போலே திரு முடியில் வெள்ளம் இடா நின்றது –
கைந்நின்ற சக்கரத்தன்கருதுமிடம் பொருது–நினைத்த இடத்தே சென்று யுத்தம் பண்ணி எதிரிகளை அழித்து மீண்டு திருக் கையிலே வர்த்திக்கும் திரு வாழி யுடையனாய் –பாவஞ்ஞனாய் அடிமை செய்து -ஸ்வ தூணீம் புநரா விசத்–என்றும் ராம பார்ஸ்வம் ஜகாம -என்றும் சொல்லுகிற படியே திருக் கையிலே வர்த்திக்குமாய்த்து -அத ஹரி வர நாத —
புனல்-மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு–புனல் போலேயும் மை போலேயும் நின்ற வரை போலேயும் என்னுதல் / –மைந்நின்ற வரை— மை மாறாத வரை –அஞ்சன கிரி -என்னுதல் -/ வாட்டாற்றாற்கு-என்று பூஜா வாசி அல்ல -வாட்டாற்றானுக்கு என்றபடி
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–என்ன நன்மை செய்தெனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனியிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —

————————————————————–

அத்யந்த பரி பூர்ணனான தான் இகழ்வின்றிக்கே  என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியாது இரா நின்றான் -ஒருவனுடைய வ்யாமோஹமே -என்று ப்ரீதர் ஆகிறார் –

திகழ்கின்ற  திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்-திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு–வெறும் புறத்திலே விளங்கா நிற்கிற திரு மார்விலே இருக்கிற பிராட்டி யோட்டை சேர்த்தி அழகாலும் விளங்கா நின்றுள்ள ஸ்ரீ யபதியானவன் சேரும் ஸ்தானம் ஸ்ரமஹரமான வாட்டாறு –ஸ்ரீ யபதியான ஏற்றத்தோ பாதி போருமாய்த்து திரு வாட்டாற்றை கலவிருக்கையாக யுடையவனாகையும் –
புகழ்கின்ற புள்ளூர்தி –இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–புகழுக்கு எல்லாம் ஸ்தானமான பெரிய திருவடியை வாஹனமாக யுடையவன் -புகழ் அடங்கலும் பெரிய திருவடி பக்கலிலேயாய் –அவனை யுடையவன் என்னும் புகழே யாய்த்து இவனுக்கு உள்ளது —
போர் அரக்கர் குலம் கெடுத்தான்–செவ்வைப் பூசலில் ராக்ஷஸ வர்க்கத்தை குலமாக முடித்தான் –சம்சாரி என்று இகழாதே சர்வ காலமும் விடுகிறிலன் –

—————————————————————–

மஹாத்மாக்கள் சிலரை விஷயீ கரிக்கப் புக்கால் ஒருவருக்கும் கிடையாத சீரிய பொருளை -அவர்கள் அளவும் பாராதே தங்கள் தரத்தை  கொடுப்பர் -என்னும் இவ்வர்த்த ஸ்திதியை  -வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் -என் பக்கல் காட்டி அருளினான் -என்கிறார்-

பிரியாது  ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்–நமக்குத் பிரியாதே அடிமை செய் என்று அருளிச் செய்து –விரோதியையும் போக்கி –நித்ய கைங்கர்யத்தையும் கொண்டான் –எனக்கே ஆட் செய் என்ன வேண்டும் என்று எம்மா வீட்டிலே நான் பிரார்த்தித்தையும் செய்தான் -பொய் நின்ற ஞானத்தில் அபேக்ஷித்தத்தையும் செய்தான் -தனக்கே யாக என்றத்தையும் நமக்குச் செய்தான் –
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று-தன்னை அழிய மாறி ஹிரண்யனுடைய முருட்டுடலை அநாயாசேன கிழித்தான் –அன்று -அச்செயலும் ப்ரஹ்லாதனுக்காக அன்று -எனக்காகச் செய்தான் என்கிறார் –
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு-வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-இன்று க்ரியதாமிதி –என்கிறபடியே என் விரோதியைப் போக்கி நித்ய கைங்கர்யத்தையும் கொண்டான் -மஹா புருஷர்களை ஆஸ்ரயித்ததால் ஸூ துர்லபமான பிரயோஜனத்தை பெறுவர்கள் என்னும் அர்த்தத்தை -வரியையும் ஒளியையும் வாயையும் யுடைய திருவனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிற திரு வாட்டாற்றில் நாயனார் என் பக்கலிலே காட்டினார் -என் சிறுமை பாராதே தன் தரத்தில் செய்து அருளினார் -உபய விபூதியிலும் தம்மைப் போலே திருவாய் மொழி பாடப் பெற்றார் இல்லை என்று இருக்கிறார் –

———————————————————–

நிகமத்தில் அயர்வறும் அமரர்கள் இத்திருவாய் மொழியைக் கேட்டால் வித்ருஷ்ணர் ஆவர் என்கிறார் -அனுபவிக்க உரியர் நித்ய ஸூரிகள் என்கிறார் –

காட்டித்  தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த—தன் கனை கழல்கள்-காட்டி -கடு நரகம் புகல் ஒழித்த–ஸ்வரூப குணங்களை பிரகாசிப்பிக்கிற வடிவைக் காட்டி சம்சார சம்பந்தத்தைத் தவிர்த்த -என்னுதல் /தன்னைக் காணப் பெறாத துக்கத்தைப் போக்கினவன் என்னுதல் /
வாட்டாற்று எம் பெருமானை–திரு வாட்டாற்றிலே என் நாதனை
வளம் குருகூர்ச் சடகோபன்வளம் -ஸம்ருத்தி
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்-கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூ ரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது -ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்
செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -ஏன்னா செந்தமிழ் பத்தும் என்றார் இ றே –

——————————————————————–

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: