திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-5–

பக்தி யோகத்தை நியமித்த பின்பு -பக்தி யோகப் பிரகாரம் எங்கனே என்று அறிய வேண்டி இருப்பார் இழக்க ஒண்ணாது என்று பார்த்து அருளி
அதுக்கு ஆலம்பமான திரு நாமத்தை உபதேசித்து -இத்தை அனுசந்தித்து -அதில் சொல்லுகிறபடியே மநோ வாக் காயங்களை –
ஸ்ரீ யபதி பக்கலிலே பிரவணம் ஆக்கி -ப்ரீதி பூர்வகமாக புஷ்பாத் உபகரணங்களைக் கொண்டு நிரந்தர சமாராதானம் பண்ண
அதுக்கு உண்டான விக்னங்கள் எல்லாம் தானே போக்கி அருளி இவனையிட்டு ஆராதிப்பித்துக் கொள்ளும் -என்று கீழ் பல இடத்திலும்
ப்ரஸ்துதமான பக்தி யோக ஸ்வரூபத்தை அருளிச் செய்து -எம்பெருமான் தம்மை திரு நாட்டுக்கு கொடு போக முடுகிறமையை அனுசந்தித்து
பின்னை அவசரம் இல்லை -என்று இத்தோடே பரோபதேசத்தைத் தலைக் கட்டுகிறார் –

———————————————————–

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

கிருஷ்ணன் திருவடிகளை சேர்க்கைக்கு இச்சை யுடைய நீங்கள் அநுஸந்திக்கும் திரு நாமம் நாரணன் என்னும் இதுவே -இது நிச்சிதம் -மந்த்ரம் என்னாதே நாமம் என்கிறது -நியமங்கள் வேண்டா என்னுமத்தை ஸூசிப்பிக்கிறது -நாரணன் என்கிற பதத்தில் சதுர்த்தியையும் நமஸ் ஸை யும் தவிர்ந்து -இல்லாத மகாரத்தைக் கூட்டிக் கொள்ளுகையாலே -புறம்பில் மந்திரங்களில் தப்பானவை இம் மந்திரத்தின் பிரபாவத்தாலே தப்பாகாது -என்று கருத்து –

—————————————————————–

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

நாராயணானவன் -எனக்கு ஸ்வாமி யுமாய்-ஸ்ரீ பூமிப பிராட்டிக்கு நாயகனுமாய் -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் -சர்வ காரணமான கிருஷ்ணன் —எம்மான் -என்கிறது சம்சார விபூதிக்கு உப லக்ஷணம் –பாரணங்கு ஆளன்-என்கிறது நித்ய விபூதிக்கு உப லக்ஷணம் –வாரணம் தொலைத்த காரணன்-என்கிறது திரு அவதாரங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் –

————————————————————————–

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

எல்லா லோகங்களினுடைய ஸ்ருஷ்டியாதிகளையும் தானே பண்ணி -தானே அவற்றை ஆள்கையாலே அந்த லோகங்கள் ஆகிறான் தானே –ஆக இரண்டாம் பட்டாலும் மூன்றாம் பட்டாலும் திரு மந்த்ரார்த்தத்தைச் சொல்லிற்று –

—————————————————————

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-

ஆபோ நாரா –என்கிற வழி யாலே திருமந்த்ரார்த்தை நிர்வசியா   நின்று கொண்டு -எம்பெருமான் திருவடிகளிலே இத்திரு மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு -நல்ல செவ்வித் பூவை பணிமாறி நாள் தோறும் ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் —கோள்வாய் –-பிரதி கூலர்க்கு ம்ருத்யுவாய் இருந்துள்ள வாய் –

——————————————————————-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

நாள் தோறும் செவ்வித் பூவைக் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அவன் திரு நாமத்தை ப்ரீதி பூர்வகமாகச் சொல்ல அவன் திருவடிகளை பெறுகை நிச்சிதம் -என்கிறார் –

————————————————————————-

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

ஆஸ்ரயணீயனாகச் சொல்லுகிற எம்பெருமானைக் கண்டால் அன்றோ ஆஸ்ரயிக்கலாவது என்னில் –ஆஸ்ரிதற்காக கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருளி பிரதிகூல நிரசன ஸ்வ பாவனாய்  ஸ்ரமஹரமான திரு நிறத்தையும் யுடையனான ஸ்ரீ யபதியானவன்–ஆஸ்ரயிப்பார்க்காக எளிதாகத் திருமலையில் வந்து நின்று அருளினவன் -அவனை ஆஸ்ரயுங்கோள் -என்கிறாள் –

————————————————————-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

பக்தி யோகம் பூர்ணமாக அனுஷ்டிக்கவும் இனிமையோடு திரு நாமம் சொல்லவும் மாட்டி கோளாகில்-பெற்றதே உடலாகக் கொண்டு அனுக்ரஹம் பண்ணும் ஸ்வ பாவையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவனுடைய மாதவன் என்னும் திரு நாமத்தைப் பர பிரேரிதராய்க் கொண்டாகிலும் நிரந்தரமாக உச்சரிக்க வல்லி கோளாகில் பண்டு பண்ணின பாபங்கள் நசிக்கும்–மேல் செய்யும் பாபங்கள் உங்களோடு சம்பவியா வென்கிறார் –

——————————————————————

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-

நீராலே பூர்ணமான மேகம் போலே இருந்த திரு நிறத்தை யுடைய எம்பெருமானுடைய திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் யாவர் சிலர் -அவர்கள் ஏதேனும் -தண்ணிய ஜென்ம வ்ருத்தங்களை யுடையரே யாகிலும் -அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்கள் என்று ஆஸ்ரயிப்பார்க்கு ருசி உத்பாதன அர்த்தமாக அவர்களுடைய சிலாக்யதையை யருளிச் செய்கிறார் –

——————————————————————-

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

பிரயோஜனாந்தர பரர்க்கு–துர்லபனாய் -அநந்ய பிரயோஜனர்க்கு ஸூ லபனாய் இருக்கிறவனை -அநந்ய பிரயோஜனரைத் தொழ -ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் தானே போம் -என்கிறார் –

—————————————————————–

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

பகவத் கைங்கர்ய பிரதிபந்தகங்களாய் மிக்கு இருந்துள்ள அஞ்ஞான அவச நாதிகள் பீதமாய் தானே போம் –ஆஸ்ரித விஷயத்தில் எல்லா உபகாரங்களையும் பண்ணினாலும் -ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கும் ஸ்வ பாவனானவனை -அழகிய செவ்வித் பூக்களைத் திருவடிகளிலே பணிமாறி நினையுங்கோள் -என்கிறார் –

—————————————————————-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

நிகமத்தில் -சர்வேஸ்வரனுடைய அருளுக்கு எல்லாம் பாத்ரபூதராகையே ஸ்வ பாவமான ஆழ்வாருடைய உக்தியான
ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியானது அப்யசித்தவர்களை பகவத் விஷயீ கார பாத்ரமாக்கும் -என்கிறார் –

——————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: