திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-10–

அறுக்கும் வினையில் நான் ஆத்மாந்த தாஸ்யத்திலே அதிகரிக்கும் நாள் என்று -என்று அறிகிறிலேன் என்று பதறுவதும் செய்து –
மல்லிகை கமழ் தென்றலில் தன்னைக் காணப் பெறாதே நோவு பட்ட ஆழ்வாருக்கு இவர் பட்ட துக்கம் எல்லாம் நீங்கும் படி –
திருக் கண்ண புரத்திலே நின்று அருளின படியை காட்டி அருளி –நான் அன்றோ உம்மை இழந்து இருக்கிறேன் –
இச்சரீர அவசான சமயத்திலே நீர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -அத்தாலே மிகவும் ப்ரீதராய் –
ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே -சர்வ ஸமாச்ரயணீயனாய் திருக் கண்ண புரத்திலே நின்று அருளின எம்பெருமானை உங்களுடைய
துக்கம் எல்லாம் நிவ்ருத்தமாம் படி ஆஸ்ரயிங்கோள் என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –
வேதாந்தங்களிலே பிராரப்த கர்மத்தின் முடிவு பகவத் பிராப்தி காலமாய்ச் சொல்லா நிற்க -இச்சரீர அவசான காலமாக எம்பெருமான்
அருளிச் செய்ய கூடினபடி எங்கனே என்னில் -ஸ்வ சாமர்த்தயத்தாலே ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு தங்களுடைய உபாசனங்கள்
முற்றினால் கொண்டு போகைக்காக பிராரப்த கர்ம அவசானத்தை காலமாகச் சொல்லிற்று அங்கு –
இங்கு கேவல பகவத் பிரசாதத்தாலே பெறுமவர்களுக்கு அக்கால விளம்பம் வேண்டாமையாலே சரீர அவசானம் காலமாகச் சொல்லக் கூடும் –
அங்கனே யாகில் இவ்வதிகாரிகள் எம்பெருமானே ரக்ஷகன் என்னும் அறிவு பிறந்து அவன் பக்கலிலே தங்கள் பரத்தை பொகட்ட அநந்தரத்திலே
அவனைப் பெறாது ஒழி கிறது என் என்னில்
-அவனை பிரபன்னனானவன் பிரபத்ய அநந்தரத்திலே இச்சரீரத்தை விடில் மரண பயத்தால் அஞ்சி இஜ் ஞானத்துக்கு ஆல் கிடையாது என்றும்
ஞான ப்ரவர்த்த நார்த்தமாக இவன் இருக்க வேண்டுகையாலும் சரம தேஹத்தை எம்பெருமான் தானே விரும்புகையாலும்-சரீர அவசானத்து அளவும் இருக்கப் பொறுக்கிறான் –
-அங்கனே யாகில் பிரபன்னனான இவன் நிர்த்துக்கனாய் இராதே வ்யாத்யாதி பீடைகளாலே நலிவு படுவான் என் என்னில்-
சம்சாரத்தில் பழகி வந்த இவனுக்கு இங்கே நிர்த்துக்கமாக ஸூ கங்களைக் காட்டில் இவற்றைப் பற்றி தன்னை ஆசைப்படாதே-ஒழியும் என்று பார்த்து துக்கோத்தரமாக வைக்கிறான் —
அதுவும் இவர்கள் பக்கல் யுண்டான அனுக்ரஹ அதிசயமான பின்பு இவ்விடத்தில் ஒரு சங்கடம் இல்லை –

———————————————————————

உங்களுடைய சகல துக்கங்களும் போம்படி திருக் கண்ண புரத்திலே நின்று அருளின  எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் -என்று இத் திருவாய் மொழியில்  சொல்லுகிற ஆச்ரயணத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

மாலை  நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

மாலை நண்ணி -ஸ்நேஹ உக்தராய் / காலை மாலை கமல மலர்-சர்வ காலங்களுக்கும் சர்வ புஷபங்களுக்கும் உப லக்ஷணம் /
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–ஆஸ்ரிதருடைய அபேக்ஷிதங்களை துர்க்கடன்களே யாகிலும் கடிப்பிக்க வல்லவன் திருவடிகளை-

———————————————————————

சாபலம் யுடையார் அவன் திருவடிகளை ஸமாச்ரயிக்கும் இடத்தில் அவனுக்கு என் புகுகிறதோ என்று ஸ்நேஹிகளுக்கு அஞ்ச வேண்டாத படி சேமமுடைத்தான திருக் கண்ண புரத்தை அனுசந்தித்து நிர்ப்பரராய் நீங்கள் நாள் தோறும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார்-

கள்  அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

கள் அவிழும் மலர் -செவ்விப் பூ /  ஜல ஸம்ருத்தியாலே நள்ளி சேரும் வயல் சூழ்ந்த அகழின் அருகே நக்ஷத்ர பதத்து அளவும் உயர்ந்து இருக்கிற மதிள் சூழ்ந்த திருக் கண்ண புரத்தை / வெள்ளியால் செய்யப் பட்ட தகுதி யான மதிள் என்றுமாம் –

——————————————————–

சாபலமுடைய நீங்கள் துக்கம் கெட உபய விபூதி உக்தனாய் திருக் கண்ண புரத்திலே நின்று அருளினவனை அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயிங்கோள் என்கிறார்

தொண்டீர்  நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-

வண்டு பாடும் பொழில் -நிரதிசய போக்யமான திருச் சோலை /  அண்ட வாணன்  –லீலா விபூதியை யுடையான்  /  அமரர் பெருமானையே–நித்ய விபூதியை யுடையான் –

——————————————————————

திருக் கண்ண புரத்திலே எம்பருமானை நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயிங்கோள்  என்கிறார் –

மானை  நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

மான்கள் தோற்கும் படியான நோக்கையும் ஸ்த்ரீத்வத்தையும் யுடைய நப்பின்னை பிராட்டிக்கு நாதனாய் நிரதிசய போக்யனானவனை செவ்விப் பூவையிட்டு நீங்கள் தொழுங்கோள் -மிகவும் உயரின மதிள் சூழ்ந்த திருக் கண்ண புரத்தை ஆதரம் பண்ணின சர்வேஸ்வரனானவன் தானே உங்களுக்கு ரக்ஷகனாம் –

——————————————————————–

இப்படி பக்தி யோகத்தால் அவனை ஆஸ்ரயிக்க ஷமர் இன்றிக்கே தன் திருவடிகளே உபாயமாகப் பற்றினார் திறத்து செய்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –

சரணமாகும்  தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்--தன் திருவடிகளே உபாயமாகப் பற்றினார் ஜென்ம வ்ருத்தாதிகளாலே குறைய நின்றார்களே யாகிலும் அவர்களுக்கு ரக்ஷகனாம் –மேலும் –எல்லாம் -என்றவற்றுக்கும் பொருள் இப்படியே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-பிரபன்னரான பின்பு அவர்களை ஒழியத் தனக்கு செல்லாது இருக்கச் செய்தே-அவர்கள் இசையக் கொண்டு போய் -சரீர அவசானத்திலே மஹா உபகாரத்தைக் கொடுக்கும் மஹா உபகாரகனானவன் -பண்டு வாசிதமான விஷயங்கள் இந்த சரீரத்தோடு போம் -இனி ஒரு சரீரத்தில் பிரவேசித்து விஷயங்களுக்கு நசை பண்ணுவதுக்கு முன்பில் தசையில் மிகவும் போக்யமான தன் அழகைக் காட்டி இவனை இசைவித்து அப்போதே விஷயீ கரிக்கும் என்று கருத்து –
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்–தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே-அரணமாகப் போகும் மதிள் சூழ்ந்த திருக் கண்ண புரத்திலே இருந்து சம்சாரிகளுக்கு ரக்ஷகனானவன் தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்க்கு மிகவும் ஸ்நேஹியாம்-

————————————————————————

திருக் கண்ணபுரத்தில் எம்பெருமான் ஆஸ்ரயிப்பாருடைய பிரதிபந்தகங்களைப் போக்கி அவர்களுக்கு மிகவும் ஸ்நேஹியாம் -என்கிறார்-

அன்பன்  ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

செம்பொன் ஆகத்து அவுணன்–ஹிரண்யன் / ஆஸ்ரித விஷயீ காரத்துக்கு உறுப்பான தேசம் என்று நல்ல பொன்னாலே செய்யப்பட மதிள் சூழ்ந்த திருக் கண்ண புரத்துக்கு ஸ்நேஹியானவன் தன் திறத்து அநந்ய பிரயோஜனராய் இருப்பார்க்கு தானும் என்றும் அநந்ய பிரயோஜனனாய் இருக்கும் –

———————————————————————–

அநந்ய பிரயோஜனர்க்கு தான் ஸூ லபனாய் -பிரயோஜனாந்தர பரர்க்கு அவர்களுடைய அபேக்ஷித்ங்களையே கொடுத்து தன்னை அகற்றும் -என்கிறார் –

மெய்யனாகும்  விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-

அதி சம்ருத்தமான திருக் கண்ண புரத்திலே எழுந்து அருளி இருக்கிற பரம பந்துவானவன் அநந்ய பிரயோஜனரானவர்க்கு ஸூலபனாம்–இதில் ஒரு சந்தேகமும் இல்லை –

——————————————————————-

சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் –உங்களுடைய துக்கத்தையும் துக்க ஹேதுவான சம்சாரத்தையும் போக்கி அருளும் என்கிறார் –

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

ஸ்லாக்கியமான மதிள் சூழ்ந்த திருக் கண்ண புரத்திலே திரு நாட்டில் படியே நின்று அருளினவன் திருவடிகளை பனியுங்கோள் –

————————————————————————-

உபதேச நிரபேஷமாக நான் முன்னம் எம்பெருமானை ஆஸ்ரயித்து ஸூகியாகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

பாதம்  நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

நாள் தோறும் அவனை ஆஸ்ரயித்து வர பண்டு பண்ணின பாபங்கள் நசிக்கும் –பண்ணின பாபம் சேஷியாது -எனக்கு என்ன ஒரு குறை இல்லை –வேதார்த்த சித்துக்கள் விரும்பும் திருக் கண்ண புரத்தில் ஸந்நிஹிதனான சர்வேஸ்வரனை அடைந்ததற்கு துக்கங்கள் இல்லையே -இது நிச்சிதம் –

——————————————————————–

ப்ரீதி அதிசயத்தாலே மீளவும் ஸ்வலாபத்தைச் சொல்லி பக்தி -பிரபத்யாதி   அனுஷ்டானங்களுக்கு ஷமர் அல்லர் ஆகில்   திருக் கண்ண புரம் என்று வாயாலே சொல்ல-உக்தியாலேயே – ஸமஸ்த துக்கங்களும் போம் -என்கிறார் –

இல்லை  அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

ஆஸ்ரயிப்பார் யுடைய ஆஸ்ரயணத்தில் குறைவு பாராதே -அவர்களைத் தானே விஷயீ கரிக்கும் படி பண்ணும் ஸ்வபாவையான பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணும் திருமார்வை யுடையவனுடைய சுத்தானமான திருக் கண்ண புரத்தை –

————————————————————-

நிகமத்தில் பிரதிபந்தகங்கள் எல்லாம் பாடு சாராது பற்றற வேண்டி இருக்கும் நீங்கள் இத்திருவாய் மொழியை ப்ரீதி பூர்வகமாகச் சொல்லிக் கொண்டு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பாடு சாரா  வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

—————————————————————-

கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: