திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–2 –

கீழில் திருவாய் மொழியிலே தமக்கு வழி கொடு போகைக்கு துணை பெற்ற ஆழ்வார் -நமக்கு ப்ராப்ய தேசம் ஏதோ -என்று ஆராய்ந்து
-திருவனந்த புரமே ப்ராப்யம் என்று அறுதியிட்டாராய் -சர்வேஸ்வரன் தான் வந்து விரும்பி வர்த்திக்கும் படியான போக்யத்தையாலும்
-அவன் நித்ய வாஸம் பண்ணுகையாலே சாம்சாரிக துக்கம் தட்டாமையாலும் -நித்ய ஸூ ரிகளும் இங்கே வருகையால்
அடியார்கள் குழாங்களும் இங்கே யுண்டாய் அத் திரளில் சென்று புகலாம் படி இருக்கையாலும் –
-வழி போம் இடத்தில் -ஹார்த்தா அநுக்ருஹீதா-என்னும் படியால் ஆதி வாஹிகரில் தலைவனாய்
தன் பேறாக கொண்டு போவான் ஒருவன் ஆகையாலும்-அங்கு போனால் பெறக் கடவ அடிமையை
-கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாம்-என்று இங்கேயே பெறலாய் இருக்கையாலும்
-திருவனந்த புரமே ப்ராப்யம் என்று அறுதியிட்டு -அங்கே போய் புகுகைக்கு அனுகூல ஜனங்களோடு
கூடப் போகைக்கு உத்யோக்கிறார்-உகந்து அருளின நிலங்களில் காட்டிலும் திருவனந்த புரத்தை ப்ராப்யம் என்கைக்கு அடி
-கடைத்தலை சீய்க்கப் பெற்றால் -என்று அடிமை செய்யலாய் இருக்கையாலும் –
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வர் விண்ணோர் -என்று நித்ய ஸூ ரிகளும் இங்கே வருகையாலும் –
இவர் ஒன்றை ஆதரித்தால் அதற்குத் தக்க பாசுரமிட்டுச் சொல்லும் அத்தனை இ றே –

————————————————————–

ப்ரீதியாலே திரு நாமத்தைச் சொல்ல -திருவனந்த புரத்துக்கு போவார்க்கு பிரதிபந்தகங்கள் எல்லாம் கெடும் -அங்கே போய்ப் புக வாருங்கோள் என்று என்று அனுகூலரை அழைக்கிறார் –

கெடும்  இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

கெடும் இடராய வெல்லாம் –இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் -பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –
கேசவா வென்ன -ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –கேசவ கிலேச நாசன – என்கிறபடியே சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தநாக்நி –என்னக் கடவது இறே /என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா -யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –
நாளும்-கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்-நாள் தோறும் குரூரமான வ்ருத்தியைப் பண்ணும் யமபடரும் கிட்ட மாட்டார் -ஸ்வ புருஷம் –இத்யாதி -தாஸ் யஞ்ஞ வராஹஸ்ய –இத்யாதி / கில்லார் -சக்தர் அல்லர் – எரிகிற நெருப்பில் ஏறச் சக்தர் யுண்டோ –
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் -இனி மேல் ப்ராப்யத்தைச் சொல்லுகிறது -/ விடமுடை-விரோதி வர்க்கத்துக்கு கிட்ட ஒண்ணாத படி இருக்கை -/ அரவு -ஜாதி ப்ரத்யுக்தமான மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைத்தாய் இருக்கை / பள்ளி விரும்பினான் -பரியங்க வித்யையில் சொல்லுகிற படியே யாய்த்து அங்கே கண் வளருவது -பாதே நாத்யாரோஹதி –என்னலாம் படி யாய்த்து இருப்பது
சுரும்பலற்றும்–ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று முக்தர் களித்து வர்த்திக்குமா போலே யாய்த்து அவ் வூரில் திர்யக்குகளும் வர்த்திக்கிற படி
தடமுடை வயல் -சாம்சாரிகமான தாபத்தை போக்கும் விரஜாதி களை போலே ஸ்ரமஹரமாய் யாய்த்து தடாகங்கள் இருப்பது –
அனந்த புரநகர்-கலங்கா பெரு நகர் போல் அன்றியே இவ்வுடம்போடே கிட்டி அனுபவிக்கலாம் தேசம் –
புகுதும் இன்றே-க்ரமத்தே புகுகிறோம் என்று ஆறி இருக்குமது அன்று -இச்சை பிறந்த இன்றே போய்ப் புக் வாருங்கோள் –

—————————————————————

பிரதிபந்தகங்கள் போகைக்கு -சொன்ன திரு நாமங்களில் -ஒரு திரு நாமம் சொல்ல அமையும் -அது ஒன்றுமே ஆயிரம் பிரகாரத்தாலே ரக்ஷகமாம் -என்கிறார் –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

இன்று போய்ப் புகுதிராகில்-போவோம் என்று இச்சை பிறந்த இன்றே போய்த் திருவனந்த புரத்தே சென்று புகுவீராகில் -இதர விஷய விரக்தி வேண்டாவோ -இச்சா மாத்திரமே அமையுமோ என்னில் -யதஹரேவ விரஜேத் ததஹ ரேவ ப்ரவ்ரஜேத் -என்ன வேண்டுவது -அதிக்ருதாதிகாரமானவற்றுக்கு–
சர்வாதிகாரமுமாய் பிராப்தமுமாய் முன்பே இவனை இச்சித்து இவன் இச்சை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு -இச்சா மாத்திரமே வேண்டுவது –
அப்ராப்த விஷயத்துக்கு இ றே அதிகாரி சம்பத்து வேண்டுவது –
எழுமையும் ஏதம் சாரா-கால தத்வம் உள்ளதனையும் ஒரு வ்யஸனம் வாராது /சாரா -அவன் திரு முகம் கொண்டு தவிர்க்க வேண்டா -இவ்வ்வாஸ்ரயம் நமக்கு இருப்பு அன்று என்று சர்வ துக்கமும் கழலும்-
ஏதத்தை விளைத்தாலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது மேல் –
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை-மன்றலர் பொழில் –குன்றோடே ஒத்த மாடங்கள் -மலைகளை சேர வைத்தால் போலே யாயிற்று மாடங்கள் இருப்பது -அதன் அருகே அம் மாடங்களுக்கு நிழலாம் படி யாய்த்து குருந்தம் இருப்பது -அதனோடே சேர்ந்த செருந்தி புன்னை என்னுதல் -அந்யோன்யம் சேர்ந்தவை என்னுதல் -ஊர்ச் சுற்றிலே அலர்ந்து கிடக்கும் படியான பொழிலை யுடைய ஊர் -இத்தால் உகந்து அருளின நிலங்களில் ஸ்தாவரங்களும் ஞானாதிகரோ பாதி உத்தேச்யம் என்கை-அனந்த புர நகர் மாயன் -நித்ய ஸூ ரிகள் ஓலக்கம் கொடுக்க மேன்மையோடே இருக்கும் வைகுண்ட மா நகர் போல் அன்றியே -தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கும் சீலாத்திகன் வர்த்திக்குமூர் –/ மாயன் -தன் மேன்மை பாராதே -சம்சாரிகள் சிறுமை பாராதே முகம் கொடுக்கும் ஆச்சர்ய பூதன் –
நாமம்-ஒன்றும் ஓர் ஆயிரமாம் -ஒரு நாமமே அநேகமாம் படி ரக்ஷகமாம் –உலகு ஏழு அளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன்-என்கிறபடியே
உள்ளுவார்க்கும் உம்பரூரே–இந்நீர்மையையும் ப்ரயோஜனத்தையும் அனுசந்திப்பார்க்கு இது தானே பரம பதம் என்னுதல் -அவர்களுக்கு அநந்தரம் ப்ராப்யம் பரம பதம் என்னுதல் / அவன் நித்ய வாஸம் பண்ணுகையாலே இ றே பரம பதம் உத்தேச்யம் என்கிறது —

———————————————————————–

பிரதிபந்தகங்கள் போகைக்கு தேச ப்ராப்தியே அமையும் -ஆயிரம் திரு நாமத்திலும் ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கோள் என்கிறார்

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

ஊரும்  புள் –வாஹனமானது பெரிய திருவடி /கொடியும் அக்தே -இது நித்ய ஸூ ரிகளுக்கும் உப லக்ஷணம் -இது நித்ய ஸூ ரிகளுக்கு கொடுத்து வைக்கும் நாநா ரஸ அனுபவத்தை -இன்று செல்லுமவனுக்கும் கொடுக்கும் என்னுமிதுக்காக சொல்கிறது
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்-பிரளய ஆபத்தில் -ஆபத்தே முதலாக வரையாதே திரு வயிற்றிலே வைத்து உள்ளிருந்து நோவு படாத படி வெளிநாடு காண உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம்-இப்படி உபய விபூதியையும் நிர்வஹிக்கிறவன் ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷணார்த்தமாக தன் செல்லாமையாலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நிரதிசய போக்யமான திருவனந்த புரத்தை
சிக்கெனப் புகுதிராகில்-நாசா புனராவர்த்ததே-என்கிறபடியே மீட்சி இல்லாத ருசியோடே போய் ப் புகுவுதி கோள் ஆகில் –
தீரும் நோய் வினைகள் எல்லாம் -துக்கங்களும் துக்க ஹேதுக்களான பாபங்களும் போம் –
திண்ணம் நாம் அறியச் சொன்னோம்-அனுபவித்து கை வந்த நாங்கள் -ஒருத்தருக்கும் தெரியாத ரகஸ்யத்தை வியக்தமாக அறியும் படி சொன்னோம் -இது யுண்டாய்க் கழிந்தார் வார்த்தை யாகையாலே ஆப்தம் -என்கை -பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை -துக்க நிவ்ருத்திக்கு தேச ப்ராப்தியே அமையும் –
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே--குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் ஆயிரத்திலும் ஒரு திரு நாமத்தைச் சொல்லி அனுபவியுங்கோள்-

————————————————————

ஆஸ்ரியிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக -திருவனந்த புரத்தில் எம்பெருமானுக்கு அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்கிறவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ -என்கிறார் -அவர்கள் பாக்யம் பண்ணின படியைப் பேசுங்கோள் என்றுமாம் –

பேசுமின்  கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

பேசுமின் கூசமின்றிப்-உங்கள் அயோக்யதை பார்த்து கூசாதே -அத்தலையில் நீர்மையையும் ப்ராப்தியையும் பார்த்து பேசுங்கோள் -வளவேழ் உலகில் தமக்குப் பிறந்த இறாய்ப்பு இவர்களுக்கும் ஒக்கும் என்று இருப்பவர் இ றே
பெரிய நீர் வேலை சூழ்ந்துவாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்–பெரிய நீரை யுடைத்தான கடல் சூழ்ந்து இருப்பதாய் நிரந்தரமான பரிமளத்தை யுடைய சோலையோடே கூடின வயலாலே அலங்க்ருதமான திருவனந்த புரம் –சோலையின் பரிமளம் புறப்படாத படி மதிள் இட்டால் போலே யாய்த்து கடல் இருப்பது –கடலில் நாற்றம் மேலிடாத படி யாய்த்து பரிமளம் விஞ்சி இருப்பது –
நேசம் செய்து உறைகின்றானை-பரம பதத்தில் காட்டில் வியாவ்ருத்தி -அதிகம் புரவா சாச்சா -என்கிறபடியே –ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு உடலான தேசம் என்று ஸ்நேஹித்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை –அத்தேசத்துக்கு ஆர்த்தர் இல்லாத குறை யுண்டு இ றே -ஆர்த்தர் இல்லாத இடமும் ஒரு வாசஸ் ஸ்தானமோ என்று அத்தேசத்தை வசை பாடி யாய்த்து இருப்பது —நேசம் செய்து உறைகின்றானை –பேசுமின் கூசமின்றி —என்னுதல் —புண்ணியம் செய்த வாற்றை –பேசுமின் கூசமின்றி -என்னுதல் –
நெறிமையால் மலர்கள் தூவிபூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–அநந்ய ப்ரயோஜனராய் -சூட்டு நன் மாலைப் படியே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு அக்ரமமாக பிரயோகித்து அடிமை செய்பவர்கள் நித்ய ஸூ ரிகளில் காட்டில் பாக்யாதிகர் -சம்சாரத்தில் நித்ய ஸூ ரிகள் பரிமாற்றத்தை யுடையவர்கள் பாக்யாதிகர் அன்றோ -அப்போது புண்ணியம் செய்த வாறே -என்று ஆச்சர்யம் -இவர்கள் படியைப் பேசும் போது சர்வேஸ்வரனை பேசுமத்தில் காட்டிலும் கூச்சம் அறப் பேசலாம் இறே–

——————————————————————

திருவனந்த புரத்தில் ஆஸ்ரயிக்கும் அவர்கள் அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்று கொண்டாடி -அப்படியே நீங்களும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

புண்ணியம்  செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

புண்ணியம் செய்து--ஸ்நேஹத்தைப் பண்ணி –வர்ணாஸ்ரம தர்மாதி கர்த்தவ்ய தாகமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை நினைக்கிறது -மத் பக்தோ மன்ம நாபவ -என்னக் கடவது இ றே
நல்ல புனலொடு மலர்கள் தூவி-நல்ல புனலோடே கூடின மலர்களை பரிமாறி –அர்ச்சா நாதிகளைச் சொல்லுகிறது -மத்யாஜீ மாம் நமஸ்குரு -என்னக் கடவது இ றே
எண்ணுமின் எந்தை நாமம்-என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்த யந்தே–என்னக் கடவது இறே
இப்பிறப்பு அறுக்கும்-பிறவியினுடைய தோஷ பிராஸுர்யம் ப்ரத்யக்ஷ சித்தம் இ றே
அப்பால்–அமரர் ஆவார்—செறி பொழில் அனந்த புரத்து-அண்ணலார் கமலபாதம் அணுகுவார் –செறிந்த பொழிலை யுடைய திருவனந்த  புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் -இப் பிறப்பு அறுக்க வேணும் -என்ன வேண்டாத நித்ய ஸூ ரிகளானவர்கள் –இத்தால் விரோதியை போக்கும் அளவன்றியே-உத்தேச்யத்தை பெறுகைக்கும் திருவனந்த புரமே ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறது –
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் –வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

———————————————————————

அயர்வறும் அமரர்களும் வந்து -அடிமை செய்கிறது திருவனந்த புரத்திலே யாதலால் திரு நாட்டில் காட்டில் பரம ப்ராப்யம் திருவனந்த புரம்-நாமும் இங்கே அடிமை செய்ய வேணும் -என்கிறார் –

அமரராய்த்  திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

அமரராய்த் திரிகின்றார்கட்கு -மனுஷ்யாதிகளில் காட்டில் -சில நாள் ஏற இருக்கிற இத்தைக் கொண்டு தங்களை நித்யர் என்று அபிமானித்து இருக்கிறவர்களுக்கு / திரிகின்றார்கட்கு–மனுஷ்யாதிகளில் காட்டில் பந்தனம் கனத்து இருக்கச் செய்தேயும் நிர்ப்பயராய் திரியா நிற்பார்கள் -மநுஷ்யர்களுடைய விரக்திக்கு அவர்கள் பரிஹரித்த அளவு இ றே த்யஜிக்க வேண்டுவது -ப்ரஹ்மாவுக்கு சதுர்த்தசி புவனமும் த்யஜிக்க வேணுமே
ஆதிசேர் அனந்த புரத்து–காரண புதன் வர்த்திக்கிற தேசத்திலே –
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்–ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் அடிமை செய்யும் இடத்தில் கை நீட்டுவார் நித்ய ஸூ ரிகள்–
நமர்களோ சொல்லக் கேண்மின்–நம்மோடு குடல் துவக்கு உள்ள நீங்கள் சொல்ல க் கேளுங்கோள் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிற நம் நினைவே நினைவாய் யுள்ளார் கேளுங்கோள் –
நாமும் போய் நணுக வேண்டும்-அந்த நித்ய ஸூ ரிகள் திரளில் அடிமையிலே ருசியை யுடைய நாமும் சென்று கிட்ட வேணும் -இங்கே இருந்து மநோ ரதிக்கும் அளவு போறாது -அத்திரளிலே சடக்கென புக வேணும் -அவர்கள் நடுவே சம்சாரிகளான நமக்கு கிட்ட ஒண்ணுமோ எண்ணில்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-–தேவ சேனாதிபதியாய் -பிரபலனான ஸூ ப்ரஹ்மணியனுக்கும் கூட ஜனகன் ஆனவனுக்கு பாதகத்தால் வந்த துக்கத்தைப் போக்கின கிருஷ்ணனை -வாணனுக்கு துணையாய் இருக்கிற ருத்ராதிகள் துக்க நிவ்ருத்திக்கு ஹேதுவாய் இருக்கிறவன் நம் துக்கத்தை போக்கச் சொல்ல வேணுமோ -ருத்ராதிகளுக்கு துக்க நிவர்த்தகனாய் இருக்கும் -பசுக்களுக்கும் இடையாருக்கும் எளியனாய் இருக்கும் –

———————————————————————–

சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளுகிற திருவனந்த புரத்திலே சென்று அடிமை செய்ய பெறில்-ஒரு தேச விசேஷத்திலே சென்று அடிமை செய்யப் பெற்றிலோம் -என்னும் துக்கம் போம் -என்கிறார் –

துடைத்த  கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

துடைத்த கோவிந்தனாரே –துடைக்கை -சம்ஹரிக்கை -அப்யய பூர்விகை யாய் இ றே ஸ்ருஷ்ட்டி இருப்பது -கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் —
உலகு உயிர் தேவு மற்றும்-படைத்த –லோகத்தையும் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான ஆத்மாக்களையும் யுண்டாக்கினவன் -இவை அதிப்ரவ்ருத்த மான வன்று சம்ஹரித்து -பின்பு புருஷார்த்த உபயோகியான கரணங்களைக் கொடுத்து ரஷித்த
வெம் பரம மூர்த்தி-ஆச்ரித பவ்யனான சர்வேஸ்வரன் –
பாம்பணைப் பள்ளி கொண்டான்–ஸ்ருஷ்டமான ஜகத்திலே ரக்ஷண அர்த்தமாக திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவனுடைய –
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்–ஜல ஸம்ருத்தியாலே மடைத் தலைகளில் களித்து வாளை பாயா நின்றுள்ள வயலாலே அலங்க்ருதமான தேசத்திலே -சாம கானத்தாலே முக்தர் களித்து வர்த்திக்குமா போலே யாயத்து அத்தேசத்தில் திரையாக்குகளும் களித்து வர்த்திக்கும் படி
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் –திரு வாசலிலே திரு வலகு திருப் பணி செய்யப் பெற்றால் –
கடு வினை களையலாமே–அடிமை செய்யப் பெறாமையால் யுண்டான கிலேசம் எல்லாம் போம் -சேஷத்வ ஞானம் பிறந்தால் -ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி பெறாமையால் வரும் கிலேசம் பிராயச் சித்தத்தால் போக்குமது அன்று இ றே —

————————————————————

திருவனந்த புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் காணப் போருங்கோள் -என்று  ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார் –

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

கடுவினை களையலாகும்-அனுபவ விரோதியாய் போக்க வரிதான பாபம் போம் —
காமனைப் பயந்த காளை-இது நான் உபதேசிக்க வேண்டுவது அவனை ப்ரத்யஷிக்கும் தனையும் இ றே –நாட்டை அடங்கத் தன் அழகாலே பிச்சேற்றித் திரியும் காமனுக்கும் உத்பாதகனானவன் –/ காளை–யவ்வனம் பிரஸவாந்தமாய் இருக்க பருவத்தால் அவனிலும் இளகிப் பதித்து இருக்கும்
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்-அழகாலே அலங்க்ருதமான திருவனந்த புரத்தை வாஸஸ் ஸ்தானமாக கொண்டது என்று விசேஷஞ்ஞர் வாய் புலற்றா நிற்பர் –பத்ம நாபம் விதுர்ப்புதா –
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண-ஸ்வ ஸ்பர்சத்தாலே விஸ்திருத பணனான திருவனந்த ஆழ்வான் மேலே நிரந்தரமாக கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைக் காண -/ பயின்ற-என்று வீசு வில்லிட்டு எழுப்பிலும் எழுப்ப ஒண்ணாத படி இ றே படுக்கை வாய்ப்பு இருப்பது
நடமினோ நமர்கள் உள்ளீர்-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்
நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம் -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –

——————————————————————

சரீர அவசானம் அணித்து யாயத்து -ஈண்டெனத் திரு வனந்த புரத்திலே புக்கு அடிமை செய்ய -தாஸ்ய விரோதியான கர்மம் போம் -என்கிறார் –

நாமும்  உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான--நாளேல் அறியேன் –என்றும் -மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து -தஸ்மிந் நஸ்தமிதே பீஷ் மே-என்று அவன் தான் சொன்ன வார்த்தையை இவர் சொல்லுகிறார் –
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்–சம்சார பயத்துக்கு மிகவும் ரக்ஷகமாய் போக்யமான தேசம் –போக்யமான தேசம் தானே பய சாந்திக்கு ஹேதுவாகப் பெற்றது -/ நன்குடைத்து–மிகவும் யுடைத்து –
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு–புஷ்பாதி உபகரணங்களை விலக்ஷணம் ஆக்கிக் கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளன் ஆனவனை-அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயிக்க அடிமைக்கு பிரதிபந்தகங்கள் தானே நசிக்கும்-

————————————————————————

திருவனந்த புரத்தில் எம்பெருமானுக்கு அடிமை செய்யுமவர்களுடைய மஹாத்ம்யம் பேச நிலம் அன்று -என்கிறார் –

மாய்ந்து  அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

மாய்ந்து  அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்–மாதா பிதாக்கள் சேர்த்தியைச் சொல்ல அநாதி கால ஆர்ஜிதமான துக்கங்கள் தானே போம் –
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்றுசாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல–ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் -அங்குத்தைக்கு தகுதியான
மதிலை யுடைய திருவனந்த புரத்திலே வர்த்திக்கிற என் ஸ்வாமிக்கு என்று புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க வல்லார்
அந்தமில் புகழினாரே–அமரர் ஆவார் என்கிற அளவன்றிக்கே -விண்ணுளாரிலும் சீரியர் ஆவார் –

———————————————————————-

நிகமத்தில் – இத்திருவாய் மொழி வல்லார் -திரு நாட்டில் உள்ளார்க்கு போக்யர் ஆவார் -என்கிறார் –

அந்தமில்  புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை–திருவனந்த புரத்திலே நிரவதிக குணகனாய்-ஜகத் காரண பூதனானவனை -பரம பதத்தில் குணம் சாவதி போலே காணும் —
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்--நித்ய வசந்தமான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த –
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்-ரத்தினங்களை முகம் அறிந்து சேர்த்து சேர்த்திகளை கொண்டாடுமா போலே ஐ ஐந்தாக வாய்த்து அனுபவிக்கிறது
அணைவர் போய் அமர் உலகில்-பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–பரம பதத்தில் சதம் மாலா ஹஸ்தா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அப்சரஸ் ஸூ க்களுடைய கொண்டாட்டத்துக்கு விஷய பூதராவார் –முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள –என்றத்தோடு — வேய் மரு தோள் இணையை அணைவர்-என்கிற இத்தோடு வாசி இல்லை மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்னக் கடவது இ றே-

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: