திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9-10–

அறுக்கும் வினையில் அவனைப் பெற வேணும் என்றும் பெறும் நாள் என்று -என்றும் மநோ ரதித்தார்-
மநோ ரதித்த அநந்தரம் வரக் காணாமையாலே மல்லிகை கமழ் தென்றலில் மிகவும் நோவு பட்ட இவர்க்கு
இவர் துக்கம் எல்லாம் நீங்கும் படி திருக் கண்ண புரத்திலே நின்று அருளின படியைக் காட்டி அருளி உம்மைப் பெறுகைக்கு
மநோ ரதமும் இழவும் நம்மது அன்றோ -என்று சமாதானம் பண்ண -என் அபேக்ஷிதம் சித்திக்கும் நாள் என்று என்று இவர் கேட்க
சரீர அவசானத்திலே பேறாகக் கடவது -என்று அருளிச் செய்ய -நமக்கு இனி பேற்றுக்குத் தட்டில்லை என்று ஹ்ருஷ்டராய்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே சர்வ ஸமாச்ரயணீயனாய் கொண்டு திருக் கண்ண புரத்திலே எழுந்து அருளி நின்றான் –
அவனை ஆச்ரயிக்கப் பாருங்கோள் என்று பரோபதேச ப்ரவ்ருத்தர் ஆகிறார் –
ஆஸ்ரயிக்கும் இடத்திலும் அவன் திருவடிகளிலே பக்தியைப் பண்ணுங்கோள்
-அதுக்கு பரிகாரம் இல்லாதார் பிரபத்தி பண்ணுவது
-அதுக்குத் தக்க -வியவசாயம் இல்லாதார் யுக்தி மாத்ரத்தை யாகிலும் பண்ணுவது
-அவ்வளவு யுண்டாகவே அவன் விடான் -ஆனபின்பு அவனையே ஆச்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார் –
இவர் தாம் இழந்து நோவு படுதல்–சிறிது ஆச்வாஸம் பெற்றார் ஆகில் பர ஹிதத்தில் ப்ரவ்ருத்தராதல் செய்யுமித்தனை –
வேதாந்தங்களில் பிராரப்த கர்ம அவசானம் பகவத் ப்ராப்திக்கு காலமாக சொல்லா நிற்க இச் சரீர அவசானத்தை
காலமாக அருளிச் செய்த இது அவற்றோடு விரோதியாதோ என்னில்
-உபாசகரான பக்தி யோக நிஷ்டர்க்கு -சாதன சமாப்தியிலே பெற வேண்டுகையாலே கர்ம அவசானமாகக் கடவது –
பிரபன்னனுக்கு கேவல பகவத் பிரசாதத்தாலே பேறாய் கால விளம்பம் வேண்டாமையாலே சரீர அவசானமாகக் கடவது –
இத்திருவாய் மொழி தன்னிலும் பக்தியை விதித்து அதில் அசக்தர்க்கு ப்ரபத்தியை விதித்தது இ றே
தஸ்ய தாவதேவ சிரம் யாவத் நவிமோஷயே-என்கிற வாக்கியம் -நியாய அபேக்ஷம் ஆகையாலே-இந்நியாயம் அதிலும் சஞ்சரிக்கும் –
பிரபன்னனுக்கு அவன் பக்கல் பர ந்யாஸம் பண்ணினவன் ஆகையால் தன் பக்கல் விளம்ப ஹேது இல்லை –
அவன் சர்வ சக்தி யாகையாலே அவன் பக்கல் விளம்ப ஹேது இல்லை -ஆனபின்பு பிரபத்தி பண்ணின அநந்தரம் பெறாது ஒழிகிறது ஏன் என்னில்
பிரபத்ய அநந்தரத்திலே சரீரத்தை விடில் -மரண பயத்தால் இஜ் ஞானத்துக்கு ஆள் கிடையாது என்றும்
ஞான ப்ரவர்த்த நார்த்தமாக இவன் இருக்க வேண்டுகையாலும்
சரம தேஹத்தை ஈஸ்வரன் தானே விரும்புகையாலும் சரீர அவசானத்து அளவும் பொறுக்கிறான்
பகவந்தம் ப்ரபந்நா சா -என்று பெரிய பெருமாள் திருவடிகளிலே ப்ரபந்தனை யான மாதவி
ருசியினுடைய தீவிர சம்வேகத்தாலே அநந்தரம் முக்தை யானாள் இ றே –
ஆனாள் இவன் நிர்த்துக்கனாய் இராதே கர்மத்தால் இருக்கிறான் என்று தோற்றும்படி சாம்சாரிகமான வ்யாத்யாதிகளோடே
இருப்பான் ஏன் என்னில் -இதில் உபேக்ஷை பிறந்து தன்னையே ஆசைப்படுகைக்காக –
ஸூ கோத்தரனாக வைக்கில் இது தன்னிலே சபலனாய் தன்னை விஸ் மரிக்கும் என்று –
ஆக இப்படி வைக்கிறதும் அனுக்ரஹ கார்யம் ஆகையால் ஒரு தட்டில்லை –
பிரபதன காலத்தில் இவ்வதிகாரிக்குத் தான் சரீர சமனந்தரம் நரக பிரவேசம் பண்ணுதல் கர்ப்ப வாஸம் பண்ணுதல் செய்யாதே
பகவல் லாபம் யுண்டாக வேணும் இவ்வளவே இவனுக்கு சம்பவிப்பது
ஆகையாலே தத் க்ரது நியாயத்தாலே அவ்வளவில் பலமாகக் கடவது -என்னவுமாம் –

———————————————————————-

உங்களுடைய சகல துக்கங்களும் போம்படி திருக் கண்ண புரத்திலே நின்று அருளின  எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் -என்று இத் திருவாய் மொழியில்  சொல்லுகிற ஆச்ரயணத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

மாலை  நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ–சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் / மால் -என்று ஸ்நேஹ கார்யமான வியாமோஹமாய்-மாலையுற்று -என்னவுமாம் –பக்தி உக்தராய் -என்றபடி –தொழுது எழு என்கிற தம்முடைய வாசனையால் –தொழுது எழுமினோ என்கிறார் –
வினை கெடக்--பகவத் பிராப்தி விரோதியான கர்மம் என்னுதல் / மல்லிகை கமழ் தென்றலில் விரஹ கிலேசம் தீரும் படி என்னுதல் —
காலை மாலை -ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –
கமல மலர் இட்டு–சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை –
நீர்-அதிகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும் –
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து–சமுத்திரம் அணித்தாகையாலே -திரைகள் வந்து மோதா நின்றுள்ள மதிலாலே சூழப் பட்ட திருக் கண்ண புரத்திலே -ஸ்ரமஹரமான தேசம்-என்கை –
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினவன் -உங்கள் விரோதி நிரசனங்கள் துர்க்கடன்களே யாகிலும் கடிப்பிக்க வல்லன் என்கை —அவன் இணை அடிகளையே இறைஞ்சுமின் –

———————————————————————-

இவ்விஷயத்துக்கு என் வருகிறதோ என்று அஞ்சும்படி சாபலமுடையார் ஸூ ரஷிதமான தேசம் என்று நிர்ப்பரராய்  நித்தியமாக ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

கள்  அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்–செவ்விப் பூவைக் கொண்டு -ஆஸ்ரயிங்கோள் –இவன் பிரேமத்தால் செவ்வியை யுடைத்தாய் விலக்ஷணமான
புஷபங்கள் தேடக் கடவன் -கள்ளர் துழாயும் கணவலரும்-என்கிறபடியே புஷ்ப்ப ஜாதி மாத்திரமே அமையும் இ றே -அவன் படியைப் பார்த்தால்-
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை–நள்ளி -என்று பெண் வண்டு / நீர் மாறாத நிலங்களிலே யாய்த்து இவை வர்த்திப்பது –ஜல ஸம்ருத்தியை யுடைத்தான வயலாலே சூழப் பட்ட அகழின் அருகே -/ கிடங்கு -அகழ்
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்–நக்ஷத்ர பதத்து அளவும் ஓங்கின மதிள் என்னுதல் / வெள்ளியால் செய்யப் பட்ட மதிள் -என்னுதல் / வெள்ளியால் செய்த மதிள் என்று நாம் ப்ரத்யஷீக்கிறிலோம் ஆகிலும் -ப்ரேம அதிசயத்தாலே இவர்க்கு அது வி லக்ஷணமாய் தோற்றக் கடவது இ றே
திருக் கண்ணபுரம்– உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–ஷேமத்தால் நிர்ப்பயமான தேசம் என்று அனுசந்தித்து இவ்விஷயத்தில் சபலராய் இருப்பார் நித்தியமாய் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-அபர்வணி கடல் தீண்டலாவது -என்னுமா போலே இவ்விஷயத்தில் கால நியதி இல்லை –

————————————————————————

சாபலமுடைய நீங்கள் துக்கம் கெட உபய விபூதி உக்தனாய் திருக் கண்ண புரத்திலே நின்று அருளினவனை அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயிங்கோள் என்கிறார்

தொண்டீர்  நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-

தொண்டீர் -ஆசாலேசமுடைய நீங்கள் என்னுதல் / அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கும் நீங்கள் என்னுதல்
நும் தம் துயர் போக -துயரும் வ்ருத்தமாய் இ றே இருப்பது -/ விஷய ப்ராவண்யத்தால் வந்த துக்கம் என்னுதல் / இறைஞ்சப் பெறாத தன்னுடைய விரஹத்தால் வந்த துக்கம் என்னுதல்
நீர் ஏகமாய்-நீங்கள் அநந்ய பிரயோஜனராய் -என்னுதல் -நீங்கள் எல்லாம் ஒரு மிடறாய் என்னுதல் /தொண்டர் என்கையாலே எல்லாரும் ஒரு மிடறு ஆகலாம் இ றே
விண்டு வாடா மலர் ரிட்டு நீர் இறைஞ்சுமின்—அலரத் தொடங்கின அளவாய் கழிய அலர்ந்து வாடாத பூ -செவ்விப் பூவைக் கொண்டு ஆஸ்ரயிங்கோள்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து–வண்டுகள் மது பான மத்தமாய்க் கொண்டு படா நின்றுள்ள சோலை சூழ்ந்த தேசம் -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்கிறபடியே நிரதிசய போக்யமான தேசம் என்கை –
திருக் கண்ணபுரத்து– அண்ட வாணன் அமரர் பெருமானையே–திருக் கண்ண புரத்திலே வந்து எளியனாய் இருக்கிறவன் -உபய விபூதி நாதனாயத்து-பரமபத நிலையனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் என்னுதல் -லீலா விபூதிக்கு நிர்வாஹகனுமாய்-நித்ய ஸூ ரிகளுக்கும் நிர்வாஹகன் என்னுதல் -இங்கே ஆஸ்ரயித்து விரோதியைப் போக்கி பூர்ண அனுபவம் பண்ண ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டா -நித்ய ஸூரிகளும் இங்கே வந்து அனுபவிக்கும்-

——————————————————————–

திருக் கண்ண புரத்திலே எம்பருமானை நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயிங்கோள் -அவன் உங்களுக்கு ரக்ஷகனாம் – – என்கிறார் –

மானை  நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்-மானானது நையும் படியான நோக்கை யுடையவள் -மான் நோற்று நாணும் படி யாய்த்து நோக்கு இருப்பது -ஸ்த்ரீத்வம் முதலான ஆத்ம குணங்களை யுடைய நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் ஆனவனை-
தேனை -நிரதிசய போக்யமானவனை -இது இ றே நான் உங்களுக்குச் சொல்லுகிற வேப்பங்குடி நீர் –
வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்-செவ்விப் பூவையிட்டு ஆஸ்ரயிங்கோள் -தேனையையும் செவ்விப் பூவையையும் சேர்க்கை போலே காணும் ஆஸ்ரயணம் ஆவது –வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்-ஆகாசத்தோடே ஸ்பர்சத்தைப் பண்ணி அத்தை தள்ளுமா போலே இருக்கிற மதிலாலே சூழப் பட்ட வூர் -துஷ் ப்ரக்ருதிகளுக்கு கிட்ட ஒண்ணாத படி ஸூ ரஷிதமான வூர் என்கை –
தான் நயந்த பெருமான் -ஆஸ்ரித சம்ச்லேஷத்துக்கு பாங்கான தேசம் என்று தான் அத்தை விரும்பி வர்த்திக்கிற சர்வேஸ்வரனானவன்
சரண் ஆகுமே–உங்களுக்கு ரக்ஷகனாகும் -மதில் அவனுக்கு அரணாமா போலே உங்களுக்கு அவன் மத்திலாம்-

———————————————————————–

இப்படி பக்தி யோகத்தால் அவனை ஆஸ்ரயிக்க ஷமர் இன்றிக்கே தன் திருவடிகளே உபாயமாகப் பற்றினார் திறத்து செய்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –

சரணமாகும்  தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்-ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது -மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்–நித்ய ஸூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து நின்றால் என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி இருக்கை –
தரணி யாளன்-பூமிக்கு நிர்வாஹகன் -சம்சாரிகளுக்கு ரக்ஷகன் -என்கை –
தனது அன்பர்க்கு அன்பாகுமே-தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்கள் பக்கல் அதி பிரவணானாம் –அன்பாகுமே–அன்புடையன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

———————————————————————

திருக் கண்ணபுரத்தில் எம்பெருமான் ஆஸ்ரயிப்பாருடைய பிரதிபந்தகங்களைப் போக்கி அவர்களுக்கு மிகவும் ஸ்நேஹியாம் -என்கிறார்-

அன்பன்  ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்–தன் திருவடிகளே உபாயம் என்று பற்றினார்க்கு -சரணாகத வத்சல -என்கிறபடியே அவர்கள் தோஷம் தோன்றாத படி வ்யாமுக்தனாய் இருக்கும் – தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –இவர்களுடைய விரோதி செய்வது என் என்னில்
செம்ன் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்-ப்ரஹ்லாதனது விரோதி பட்டது படும் -ஹிரண்யன் ஆகிற அசூரனுடைய சரீரத்தை அநாயாசேன கிழித்தவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் –நல்ல பொன்னாலே செய்யப்பட மதிள் -ஸ்ப்ருஹணீயமான மதிள் -என்கை –
திருக் கண்ணபுரத்து-அன்பன்- ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு உறுப்பான தேசம் -என்று அவன் விரும்பி வர்த்திக்கிற வூர் –
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே– தன் மெய்யர்க்கு –நாளும்– மெய்யனே–தன் பக்கல் அநந்ய பிரயோஜனராய் இருப்பார்க்கு என்றும் ஓக்கத் தான் அநந்ய அநந்ய பிரயோஜனனாய் இருக்கும் -தன் பக்கல் மித்ர பாவம் யுடையாருக்கு -நத்யஜேயம் -என்று இருக்கும் அவள் –

——————————————————————

அநந்ய பிரயோஜனர்க்கு தான் ஸூ லபனாய் -பிரயோஜனாந்தர பரர்க்கு அவர்களுடைய அபேக்ஷித்ங்களையே கொடுத்து தன்னை அகற்றும் -என்கிறார் –

மெய்யனாகும்  விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்-அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயிக்கும் அவர்கள் யாரேனும் ஆகிலும் அவர்கள் அபேக்ஷிதத்தை முடிய நடத்தும்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்–பிரயோஜனங்களைப் பற்ற ஆஸ்ரயிப்பார்க்கு பந்தகமான அந்தப் பதார்த்தங்களை ஆதரித்து கொடுத்தானாய் தன்னைக் கொண்டு அகலும் –
கிருஷ்ணாச்ரய கிருஷ்ண பலா -என்று இருக்கும் பாண்டவர்களுக்கு மெய்யானாய் இருக்கும் -படைத்துணை வேண்டி வந்த துரியோதனனுக்கு நாராயண கோபாலர்களை அடையாக கொடுத்தானாய் -தான் பாண்டவர்களுக்காய் நின்று அத்தலையை அழியச் செய்கையாலே பொய்யனாகும் –
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து-ஐயன் –செய்கள்களில்-மத்ஸ்யமானது உகளித்து வர்த்திக்கிற திருக் கண்ண புரத்திலே வர்த்திக்கிற பரம பந்து -திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும் படி போக பூமி -என்கை
ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-–தன்னை ஹிருதயத்திலே வைப்பார்க்கு கையாளாய் இருக்கும் –அநந்ய பிரயோஜனர்க்கு கிங்கரவ் சமூபஸ்திதவ் -என்று இருக்கும் –

——————————————————————

சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் –உங்களுடைய துக்கத்தையும் துக்க ஹேதுவான சம்சாரத்தையும் போக்கி அருளும் என்கிறார் –

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்–தன் திருவடிகளை ஆஸ்ரயித்தார் பக்கல் வரையாதே ஸூ லபனாம் -இன்று ஆஸ்ரயித்த தொரு திர்யக்க்கைக் குறித்து -கிம் கார்யம் சீதயா மம -என்றான் இ றே –
பிணியும் சாரா -உங்களுடைய சகல துக்கங்களும் போகும்
பிறவி கெடுத்து ஆளும்-அந்த துக்க ஹேதுவான ஜென்மத்தை போக்கி அடிமை கொள்ளும் –
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்-மணியாலும் பொன்னாலும் -செய்த மதிள் சூழ்ந்த திருக் கண்ண புரத்தில் என்று சப்தமி யாவது
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–பரம பதத்தில் இருக்கும் படியில் ஒன்றும் குறையாத படி யாய்த்து இங்கு இருப்பது -அவன் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பண்ணுங்கோள் -அங்கு நித்ய ஸூரிகள் பணிய இருக்குமவன் இங்கே வந்த பின்பு நீங்களும் அவன் திருவடிகளிலே பணியப் பாருங்கோள்-

—————————————————————–

உபதேச நிரபேஷமாக நான் முன்னம் எம்பெருமானை ஆஸ்ரயித்து ஸூகியாகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

பாதம்  நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி--அவன் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே அநாதி கால ஆர்ஜிதமான பூர்வாகம் நசிக்கும் –இனியத்தைச் செய்யவே விரோதியான பாபம் போம் என்கை –
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை-உத்தராகமானது சேஷியாது –அவன் திருவடிகளிலே தலை சாய்க்க என்னுடைய சகல துரிதங்களும் போவதான பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ –
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து–வேதார்த்த வித்துக்கள் விரும்பும் திருக் கண்ண புரத்தில் ஸந்நிஹிதனான ஜகத் காரண பூதனை –வேத நாவர் என்கிறது -திருமங்கை ஆழ்வார் போல்வாரை -விரும்புகை யாவது -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்கை –
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–பிரமாணம் விதமாய் -பிரமேயம் ஜகத் காரணமாய் இ றே இருப்பது -காரணம் து த்யேய-என்று ஜகத் காரண வஸ்து வி றே -த்யேயம் – தாய் மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசம் இல்லை என்னும் இடம் ஸூ நிச்சிதம்-

—————————————————————-

ப்ரீதி அதிசயத்தாலே மீளவும் ஸ்வலாபத்தைச் சொல்லி பக்தி -பிரபத்யாதி   அனுஷ்டானங்களுக்கு ஷமர் அல்லர் ஆகில்   திருக் கண்ண புரம் என்று வாயாலே சொல்ல-உக்தியாலேயே – ஸமஸ்த துக்கங்களும் போம் -என்கிறார் –

இல்லை  அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை-சகல துக்கங்களும் போம் -இனி எனக்கு என்ன குறை யுண்டு -பகவத் அனுபவ விரோதி துரிதங்கள் போன பின்பு -எனக்கு அனுபவிக்கைக்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்ததோ -என்னால் வருவது போவதான பின்பு அவனால் வருவதற்கு ஒரு குறை யுண்டோ –
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்-பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகிற திரு மார்வை யுடையவன் -ஆஸ்ரயணத்தில் குறைவு பார்த்து அவன் அநாதரியாத படி -ந கச்சின் நாபராத்யதி -என்பாரும் அருகே உண்டே
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்-சொல்ல நாளும் துயர் பாடு சாராவே-திண்ணிதான மதிலை யுடைய திருக் கண்ண புரத்தை – –வாயாலே சொல்லவே -பக்தியில் இழிகைக்கு பரிகரமும் இன்றிக்கே -ப்ரபத்திக்கும் வியவசாயம் இல்லாதார் -திருக் கண்ண புரம் என்று வாயாலே சொல்ல -ஸமஸ்த துக்கங்களும் போம் –

——————————————————————

நிகமத்தில் பிரதிபந்தகங்கள் சவாசனமாக போக வேண்டி இருக்கில் இத்திருவாய் மொழியை ப்ரீதி பூர்வகமாகக் கொண்டு அவன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பாடு சாரா  வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்--வினையானது உங்கள் பார்ஸ்வத்திலே வந்து கிட்டாத படி வாசனையோடு போக வேண்டி இருந்தி கோளாகில் -நித்தியமான மாடங்களை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த –ஆப்தர் உபதேசமாகையாலே திருவாய் மொழியில் பிறந்தவற்றில் அர்த்தவாதம் இல்லை –
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்-பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–அநாப்தர் சொல்லிலும் விட ஒண்ணாத போக்யத்தை யுடைத்தான இப்பத்து -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே இசையோடக் கூடப் பாடின தமிழ் –ப்ரீதி பூர்வகமாகப் பாடி -இருந்த இடத்திலே இருக்க ஒட்டாதே ஆடி ப்ரீதி பிரேரித்தராய்க் கொண்டு அவன் திருவடிகளிலே விழுங்கோள் -இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர் –

———————————————————————-

கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: