திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-9–

அறுக்கும் வினையில் -எம்பெருமானைக் காண வேணும் என்று மநோ ராத்தித்து மிகவும் பதறி அப்போதே காணப் பெறாதே
வியசனத்தாலே மிகவும் நோவு பட்ட ஆழ்வார் -தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
திருவாய்ப்பாடியிலே பெண் பிள்ளைகள் கிருஷ்ணனோடு கலந்து -அவன் பசு மேய்க்கப் போகையாலே
பகல் எல்லாம் அவன் வரவு பார்த்து இருக்க -விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே
எல்லாரையும் போக பிராவண்யத்தாலே சபலராக்கா நின்றுள்ள ஸந்த்யை வர கிருஷ்ணனும் வாரா நின்றான் என்று நிச்சிதமாய் இருக்க
-ஒரு க்ஷணம் காணப் பெறாமையாலே அநேக காலம் விஸ்லேஷத்தால் படும் வியசனத்தைப் படா நிற்க –
அதுக்கு மேலே மல்லிகையின் பரிமளத்தை யுடைய தென்றல் தொடக்கமான ஸந்த்யா காலத்தில் பதார்த்தங்களும்
-அக்காலத்தில் யுண்டான குழல் ஓசைகளும் -அவற்றால் சம்ருத்தமான கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதாதிகளும்-
துஸ் ஸஹமான நிலாவும் சமுத்திர கோஷம் தொடக்கமான பதார்த்தங்கள் எல்லாம் தனித் தனியாகவும் திரளாவும் நலிய
மிகவும் நோவு பட்டு -கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி ஆர்த்தி மிகுதியாலே கூப்பிட்ட பாசுரத்தை ஒருத்தி சொல்கிறாள் –
ஸந்த்யையாவது எம்பெருமான் தம்மை விஷயீ கரிப்பதற்கு முன்பு உண்டான அல்ப காலம் –
அக்காலத்தில் பாதக பதார்த்தங்கள் ஆகிறன-தம்மை விஷயீ கரிக்கைக்கு உத்யோகிக்கிற எம்பெருமானுடைய
சங்க ஸார்ங்காதி கோஷங்களும் -பெரிய திருவடியுடைய திருச் சிறகு ஒலியும்-அவன் வரவுக்கு ஸூ சகமான –
மன ப்ரசாதிகளான நிமித்தங்களும் –
இவை பாதகமாகைக்கு காரணம் -இவை அவன் வரவுக்கு ஸூ சகமாய் இருக்கச் செய்தே அப்போதே அவனைக் காணாமை -மாலைப் பூசல்அன்றோ  இது –

———————————————————————–

ஸந்த்யா காலத்தில் தென்றல் தொடக்கமான பதார்த்தங்கள் தனித் தனியே தனக்கு பாதகம் ஆகிற படியை அருளிச் செய்கிறார் –

மல்லிகை  கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

வெறும் புறத்தில் பொறுக்க ஒண்ணாதே தென்றலானது நஞ்சு ஊட்டினால் போலே மல்லிகையின் பரிமளத்தோடே கூட வந்து ஈரா நின்றது -அழகிய குறிஞ்சியோடே கூடின இசையானது துளையா நின்றது -அஸ்தமியா நின்றுள்ள ஆதித்யனை யுடைய ஸந்த்யையும் வந்து மோஹிப்பியா நின்றது -சிவந்து அழகிய மேகங்கள் சேதித்து பொகடா நின்றன –ஆல்-என்றும் ஓ என்றும் -மிகவும் நோவு பட்டமைக்கு தனித் தனியே ஸூ சகங்கள் -இடைப்பிள்ளைகளை தன்னுடைய ஸுந்தரியாதிகளாலே தோற்பித்தால் போலே தன் திருக் கண்களில் அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டு என்னோடே அத்யாச்சர்யமாம் படி பரிமாறி அத்தாலே மேனாணித்து இருந்தவனாலே புல்கப் பட்ட முலைகளையும் தோள்களையும் கொண்டு தென்றல் முதலான பதார்த்தங்கள் நலியாதபடி புகுகைக்கு இடம் காண்கிறிலோம் -இத்தசையில் இதுக்கு ரக்ஷகன் ஆணவனும் வாராதே தனிப்பட நின்றோம் –

————————————————————–

பாதக பதார்த்தங்கள் தனித் தனியே நலிந்து -அவை பல ஹானி மிக மிக பல கூடி வந்து  நலியா நின்றன -என்கிறாள் –

புகலிடம்  அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

சேக்கள் கழுத்தில் சப்திக்கிற -மணி தென்றல் குழல் இவை எல்லாம் அவற்றுக்கு ஸ்மாரகமாய்க் கொண்டு நலியா நின்றன -ஆச்வாஸ கரமான பகலைப் போக்கின ஸந்த்யை -அழகிய சந்தனம் -பஞ்சமம் -முல்லை என்கிற யாழ்-குளிர்ந்த வாடை -இவை எல்லாம் நலியா நின்றன -இப்பதார்த்தங்கள் அடைய தரிசனத்தால் பிறந்த பீதியாலே அவற்றால் வந்த நலிவு சொல்ல மாட்டாதே பதார்த்தத்தை சொன்னாள்–ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணி இருந்ததே குடியாக ரக்ஷித்து அவ்வளவு அன்றிக்கே அவற்றின் பக்கலிலே  மிகவும் வியாமுக்தனாய்  ஆஸ்ரித விரோதிகளைக்  கொண்டு யுத்த பூமியிலே எதிர் இட்ட அ ஸூ ரர்க்கும் மிருத்யுவானவன்  -அப்படியே இக்காலத்தில் நலிகிறவற்றை நீக்கிக் கொண்டு வந்து தோற்று கிறிலன்-இப்படி ஆபத்சகனானவன் வாராது இருக்க இவற்றின் சந்நிதியில் இருந்து  என் பிராணனை நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ –

——————————————————————-

அவனுடைய திவ்ய அவயவங்கள் ஹ்ருதயத்திலே ஸ்ம்ருதமாய் நின்று நலியா நின்றன -என்கிறாள் –

இனி  இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்-அவனுடைய ஸுந்தர்யமே உள்ளே நின்று நலியா நின்றால் இனி பிராணனைக் காக்க விரகு உண்டோ -என்கிறாள் –
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க-துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து–சம்ச்லேஷ ஸூக அதிசயத்தாலே முலைகள் இரண்டும் குழையவும் -நுண்ணிய இடை நுடங்கும் படியாகவும் -துக்க பலகமான சம்ச்லேஷத்தை பண்ணி -என்னை நீராக்கி என்னுடம்பிலே தோய்ந்து -பொறுக்க ஒண்ணாத படி நிரதிசய ஸூகமாம்படி -கலந்து என்றுமாம் –
-அசேதனங்களைப் பொகடுமா போலே எங்களை பொகட்டு அகலுகையே ஸ்வ பாவனான கிருஷ்ணன் –
கள்வன்-தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்-சம்ச்லேஷ தசையில் சர்வ ஸ் வ அபஹாரிகளான ஆலோக அவலோக நாதிகளை யுடையனாய் -என்னோட்டை கலவியாலே இளகிப் பதித்து மேனாணிப்பதும் செய்து -விஸ்லேஷ தசையில் என் பக்கலிலே அதி சாபலத்தை யுடையவன் வருகிறிலன்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்-பணி இரும் குழல்களும் நான்கு தோளும்-பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–தாமரைப் பூ போலே இருக்கிற கண்ணும் சிவந்த திருப் பவளமும் -கறுத்து குளிர்ந்து இருந்துள்ள பெரிய திருக் குழல்களும் நாலு திருத் தோள்களும் இவ் வழ குகளை அனுபவித்து இழந்தால் மதி கெடாதே நினைத்து நோவு படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னுடைய மனசிலே நிரந்தரமாக நின்று நலியா நின்றன –

———————————————————————

அவனுக்கு ஸ்மாரகமாய் அவ் வழியாலே நலிகை யன்றிக்கே தானே தனித்தனியே அக்னிமயமாய்  தஹியா நின்றன -என்கிறாள் –

பாவியேன்  மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

தண் வாடையான வாடையும் வெவ்வாடை யாகா நின்றது –எல்லாராலும் ஸ்ப்ருஹை  பண்ணப் படும்  குளிர்ந்த சந்திரன் -அக்னிமய சந்திரன் ஆகா நின்றான் -மிருதுவான மலரால் செய்த படுக்கை வெவ்விய பள்ளியாய் நலியா நின்றது -பெரிய திருவடியை யுடைய தெய்வமாகிய வண்டாலே ஆத்தசாரமான என்னுடைய  பெண்மை யாகிற பூ ஏவம் விதமாய் நலிவு படா நின்றது -/ ஆவியின் பரமல்ல வகைகளாலோ--பாதகங்களினுடைய படி இவ்வாத்மாவின் அளவல்ல / பண்டு இவன் புஜித்த படிகளை நினைக்க -அவை பாதிக்கிற படி என்றுமாம் –

——————————————————————

நெஞ்சு துணையாகாத போதும் துணையாகக் கடவ தோழிமாரும் அவனோட்டை சம்ச்லேஷத்தால் எனக்கு வந்த வியஸனத்தை கண்டு எனக்கு முன்னே நோவு படா நின்றார்கள் -அவனுடைய பிரசாதம் பெறுகை அரிதாய்த்து-எனக்கு தரிக்கைக்கு ஒரு விரகு காண்கிறி லேன் -என்கிறாள் –

யாமுடை  நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

என்னோட்டை சம்பந்தத்தாலே எம்பெருமான் துணை யன்றிக்கே ஒழிந்தால் போலே என் நெஞ்சும் துணை யாகிறது இல்லை -பசுக்கள்  வந்து புகுரும் மாலையும் ஆகா நின்றது -சகல பதார்த்தங்களும் ஸ்வ ஸ்வபாவத்தை தவிர்ந்து வேறு ஒரு படி யானால் போலே ம்ருது ஸ் வ பாவனானவனுடைய  நெஞ்சு கல்லாய்த்து -அவனுடைய அழகிய குழல் ஓசையும் ஸ்ம்ருதமாய் ஈரா நின்றது –

அநந்ய பரையான பெரிய பிராட்டியாரோடு அந்நிய பரரான ருத்ராதிகளோடே வாசி இன்றிக்கே எல்லார்க்கும் உடன் கொடுக்கும் ஸூ லபன் ஆனவனுடைய ஸுசீல்யம் என்னாத்மாவை ஈரா நின்றது என்கிறாள் –

அவனுடை  யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

அவனுடைய பிரசாதம் பெறுகைக்கு அரிதாய் இரா நின்றது -அவனுடைய பிரசாதம் போக்கி பந்துக்களுடைய சாந்த்வ நாதிகள் தாரகம் ஆகமாட்டா-அவனுடைய பிரசாதம்  பெறும் தனையும் செல்ல பிராணன் தரிக்கிறது இல்லை / அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்-மேல் வருகிற வியசந பரம்பரைகளைப் ஸூ க கரம் -என்னலாவதும் செய்து  பகலுக்கு  நாசகமான ஸந்த்யையும் -எல்லாக் காலத்திலும் தரிக்கைக்கு  துணையான நெஞ்சையும் காண்கிறிலேன் -பகலை அடுகிற ஸந்த்யையும் வந்தது -நெஞ்சு காண்கின்றிலேன்-என்றுமாம் -அன்னைமீர் காள்-புகும் இடம் எது -எத்தைச் செய்வேன் -ஆருக்கு எத்தைச் சொல்லுகேன் –

———————————————————————

கீழ்ச் சொன்ன பதார்த்தங்கள் எல்லாம் திரள வந்து கண் பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள் –

ஆருக்கு  என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

மிக்கு இருந்துள்ள குளிர்ந்த வாடை -இவ்வாத்மாவோடு போம் அளவல்ல -மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையனாய் -நமக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய -அனுசந்தித்தாரை சர்வ ஸ்வாபஹாரம் பண்ண வல்ல சேஷ்டிதங்களாதியாலே அபஹ்ருதமான ஒப்பில்லாத என்னுடைய நெஞ்சானது அவன் பக்கலதே -அற நல்ல அகில் புகை -யாழோசை –பஞ்சமாகிற பண் -பசுஞ்சாந்து -இவற்றை துணையாகக் கொண்டு பொருகையிலே சமைந்த வாடை ஸ்ரமஹரமான மல்லிகைப் பூவினுடைய புதிய நாற்றத்தை முகந்து கொண்டு எறியா நின்றது –

———————————————————————–

கீழே தனித் தனியும் திரளவும் பாதகமானவை ஒன்றுக்கு ஓன்று முற்கோலி வந்து மேல் விழுந்து நலியா நின்றன -என்கிறாள் –

புது மணம்  முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

என்னை நலியக் கிளர்ந்து இளகிப் பதிக்கிற வாடையானது புது மணத்தை முகந்து கொண்டு எறியா நின்றது -செவ்வானம் மறைகிற தசையுமாய்த்து -அப்படி சம்ச்லேஷித்து விஸ்லேஷித்த கிருஷ்ணனுடைய சேஷ்டிதம் அவன் தன்னிலும் காட்டிலும் பாதகமாகா நின்றது -பின்னை அதுக்கும் மேலே -மதுவையும் மணத்தையும் யுடைய மல்லிகையினுடைய செறிந்த கோவை -அழகிய பசுஞ்சாந்து இவையும் நலியா நின்றன –அதுக்கு மேலே அப்படியே கலந்து பரிமாறுகைக்காக பஞ்சமம் ஆகிற பண்ணிலே வைத்து ஊதுகிற குழலுக்கே தரிக்க மாட்டுக்கிறிலேன் –

——————————————————————–

இடைப்பெண்கள் நடுவு இவன் திருக் குழல் ஊதி அருளுகிற போது நடுவே நடுவே தன் ஆற்றாமையாலே சிலஉக்தி சேஷ்டிதங்களைப் பண்ணா நின்று கொண்டு -பாடுகிற பாட்டை நினைத்து ஒன்றும் தரிக்க மாட்டுகிறிலேன் -என்கிறாள் –

ஊதும்  அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

திருக் குழல் ஊதா நிற்க -நடு நடுவே இடைப் பெண்களுடைய நோக்குகளுக்கும் வடிவு அழகுக்கும் தோற்று பேச நிலம் அல்லாத படியான வார்த்தைகளை சொல்லியும் குழலூதுகையிலே மிகவும் மூண்டு -வாயாலே வார்த்தை சொல்ல அவசரம் அல்லாத போது தன் கருத்தை அவர்களுக்கு அறிவிக்க வல்ல திருக் கண்களாலே வார்த்தை சொல்லியும் -தன் திரு மிடற்றிலே அழகிய பேச்சோடும் கூடின இசைகளாலே அழகிய கண்ணாலே நோக்கி ஈடுபடுத்துமா போலே ஈடுபடுத்தியும் -தன் மிடற்றில் ஓசை தன் செவிக்கு அணித்து ஆகையால் தான் முந்துற மிகவும் ஈடுபட்டு பின்னை பெண்களுடைய நெஞ்சிலே ஊடலை அற மறக்கும் படி படுகிற பாட்டை —/அது ஒழிந்து –என்ற பாட பேதம் -அது தவிர -என்னவுமாம் /
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம–மாலையும் வந்தது மாயன் வாரான்–ஒன்றும் தெரிகிறது இல்லை -அதுக்கு மேலே பயாவஹமாம் படி ராத்திரியும் வந்தது -ஆச்சர்ய பூதனானவனும் வருகிறிலன் / மாயன் -தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும் படி தானே இழவாளனாய் வந்து தோற்றுமவன்-

———————————————————-

வருவதாக  சொன்ன காலமான  ராத்திரியும் வந்து மஹா அவசாதம் வர்த்தியா நிற்க அவனைக் காண்கிறிலோம் -இனி பாதகங்களினுடைய சந்நிதியில்  அவனை ஒழியத் தரிப்பது அரிது என்கிறாள்-

மாலையும்  வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

மாயன் வாரான்-தன்னைக் காணவே  பிரதிகூலங்கள் எல்லாம் அனுகூலமாம் படி தோற்றும் ஆச்சர்ய பூதனானவனும் வருகிறிலன் –கழுத்தில் பூண்ட பெரிய மணிகள் ஓசைப்படும்படி  வலிய ஏறு  அணைகையாலே புதுக் கணித்த நாகுகள் களியா நின்றன –ஊரை அணித்தாக வந்து இடைப்பிள்ளைகள் எல்லாரும் கூட  கேட்ப்பாருக்கு தரிப்பு அரிதாக ஊதுகிற குழல்களும் கூடி த்வனியா நின்றன -மிக்க ஒளியை யுடைத்தாய் கொண்டு  வளர்கிற முல்லை கருமுகைகள் மல்லிகை இவற்றினுள்ளே புக்கு முழுசி வண்டுகள் ஆலியா நின்றன -கடலும் ஆகாசத்தில் கிட்டி கூப்பிடா நின்றது -இவற்றின் நடுவே அவனை ஒழியப் பிழைக்கும் படி எங்கனே –

————————————————————————-

நிகமத்தில் அவன் பக்கல் சாபலமுடையார் இத்திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறாள் –

அவனை  விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

எம்பெருமானை விஸ்லேஷித்து ஆத்ம தாரண ஷாமைகள் இன்றிக்கே இருக்கிற -விலக்ஷணை களான இடைப் பெண்கள் அவன் வரவு தாழ்த்த ஸந்த்யா காலத்திலே கூப்பிட்ட பாசுரத்தை ஆழ்வார் அவனுடைய பிரிவால் நோவு பட்டு எல்லார்க்கும் எல்லாப் படிகளாலும் ரக்ஷகனான அவன் விஷயமாகச் சொன்ன ஆயிரம் திருவாயமொழியிலும் இத்திருவாய் மொழியைக் கொண்டு -அப்படி ரக்ஷகனாகச் சொன்ன எம்பெருமானை அவன் பக்கல் சாபலமுடையார் பூமியிலே நிரந்தரமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறாள் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: