திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–8–

இப்படி தம்முடைய ஆர்த்தியை அறிவிக்கச் செய்தேயும் எம்பெருமான் அப்போதே வரக் காணாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்
தூத ப்ரேஷணத்தாலும் அவனுடைய குண அனுசந்தானத்தால் வந்த மன ப்ரசாதங்களாலும் -அவன் நம்மை விஷயீ கரித்து
திரு நாவாயிலே கொண்டு போகை நிச்சிதம் என்று அத்யவசித்து –
க்ரமத்திலே கொண்டு போகப் பற்றாமையாலே பதறி -திரு நாவாயிலே புக வேணும் என்று பதறி
-அங்கே புக வல்லேனே என்றும் -புகும் நாள் என்றோ என்றும்
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே என்றும் தொடங்கி அநேக மநோ ரதங்களைப் பண்ணுகிறார் –
இலங்கையில் வந்து திருவடி தன்னை திருவடி தொழுது போன பின்பு பிராட்டி
பெருமாளைக் காண்பது எப்போதோ -என்று மநோ ரதித்தது போலே இவருக்கு செல்லுகிறது
-உபாய உபேயங்கள் ஈஸ்வரனே என்று அத்யவசித்தார்க்கு ப்ராப்ய ருசியில் கண் அழிவு அற்றால் விளம்ப ஹேது இல்லாமையால்
ப்ராப்ய சித்தி அளவும் மநோ ரதம் செல்லா நிற்கும் இ றே-அதவா
போக விட்ட தூதர் வர பற்றாமை -நான் அவன் இருந்த இடத்தே போவோம் -என்று மநோ ரதிக்கிறார் -என்றுமாம்
-ப்ராப்ய சித்தியால் யுண்டான த்வரையாலே பெரிய முதலியார் எப்போதும் இந்த திருவாய் மொழியை அனுசந்தித்து அருளுவார் என்று
-பெரிய முதலியார் திருவாய் மொழி -என்றாய்த்து இத்தைச் சொல்லுவது –

———————————————————————-

எனக்கு திரு நாவாய் குறுகைக்கு யுபாயம் யுண்டோ -என்கிறார் –

அறுக்கும்  வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அறுக்கும் வினையாயின-வினை என்று பேர் பெற்றவற்றை யடங்கலும் போக்கும் -ருசி விரோதி –உபாய – விரோதி -பிராப்தி விரோதி -சரீரத்தளவில் பர்யவசிக்க ஒட்டாதே ப்ராரப்தமாய் வருமவை -அவற்றை அடைய ஒருகால் போக்கும் -க்ரமத்தால் போக்க வேண்டுவது தானே போக்கிக் கொள்ளும் அன்று இ றே -அவன் போக்கும் அன்று -சர்வ பாப்மான ப்ரதூயந்தே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற படியாகக் கடவது இ றே -இப்படிச் செய்வது ஆர்க்கு என்னில் –
ஆகத்து அவனை-நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-அவனை ஹிருதயத்திலே நிறுத்த வேணும் என்னும் அத்யாவசாயத்திலே ஒருமைப் பட்ட மநோ ரதத்தை யுடையவர்க்கு –
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-வினையை வர்த்திப்பிக்கிலும் புக்கு கொடு நிற்க வேண்டும் படி யாய்த்து தேசம் இருப்பது -பரிமளத்தை யுடைத்தாய் -ஸ்ரமஹரமாய -நித்ய வசந்தமான சோலைகளாலே சூழப் பட்ட திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ-குறுகப் பண்ணும் விரகு ஏதோ என்னுதல் / குறுகும் விரகு ஏதோ என்னுதல் / குறுக்கும் -என்று அத்தேச பாஷை -அந்த பாஷையாலே அருளிச் செய்வதே என்று வித்தராய் அருளினார் எம்பெருமானார் –
கொடியேற்கே –-ஆஸாலேசம் யுடையார்க்கு புகலாம் தேசமாய் இருக்க -புகப் பேறாதே நோவு படுகைக்கு அடியான பாபத்தைப் பண்ணின எனக்கு –
கொடியேற்க்கு – ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு–வினையாயின -அறுக்கும் -திரு நாவாய்-குறுக்கும் வகை உண்டு கொலோ—-என்று அந்வயம் —

———————————————————————-

திரு நாவாயிலே புகும் நாள் என்றோ -என்கிறார் –

கொடி  ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்–கொடி போலே அழகிய இடையை யுடையளாய் -புஷ்ப்பத்தில் பரிமளம் உபாதானமாகப் பிறந்த பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் -ந கச்சின் நா பராத்யதி -என்பாரும் அருகே இருக்க -இழக்கவோ என்கிறார் –
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்–கூரிய வேல் போலே ஓராளும் ஓர் நோக்கும் நேராய் -போக்தாவின் அளவில்லாத போக்யதையை யுடைத்தான திருக் கண்களை யுடையளாய் -ஆத்ம குணோபேதையான நப்பின்னை பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் –தன் கண்ணாலே அவனை யொடியெறிந்து நமக்கு அங்கித் தருமவள் இ றே நப்பின்னை பிராட்டி
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்-இவ்வளவு இன்றிக்கே மஹிஷீ பரிஜநங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்குமவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –அவனுக்கும் அவன் பரிகரத்துக்கும் குறைவற வர்த்திக்கலாம் சோலை பரப்பை யுடைத்தான தேசம் –
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–அடிமை செய்கைக்கு இட்டுப் பிறந்த நான் வந்து கிட்டப் பெரும் நாள் என்றோ –

—————————————————————–

திரு நாவாயில் திரு ஓலக்கத்தில் புகும் நாள் என்று என்று அறிகிறிலேன் என்று அவசன்னராகிறார் –

எவைகோல்  அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று -நான் வந்து கிட்டப் பெறும் நாள் எவை என்று
எப்போதும்-ஒரு கால் இத்தைச் சொல்லி அல்லாத போது அந்நிய பரதை பண்ணுகிறேனோ –
கவை யில் மனம் இன்றி -அது தன்னிலும் இதுவும் முகாந்தரமுமாய்ச் செல்லுகிறதோ -இரு தலைத்த நெஞ்சு இன்றியே –
கண்ணீர்கள் கலுழ்வன்-கண்ணீர்கள் வெள்ளமிட விருப்பன்
நவை இல் திரு நாரணன் சேர் -துர்லபத்வாதி தோஷம் இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ மானான நாராயணன் -ஸுலப்யத்துக்கு ஊற்றான பிராட்டியோடே கூட த் திருநாவாயிலே வந்து ஸூலபனானவன்
திருநாவாய்-அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–திரு நாவாயிலே பேரோலக்கமாய் இருக்க அத்திரளிலே சென்று கூடப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன் –அவை -சபை / நவை -குற்றம் / அடியார்கள்  குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ–என்று இருக்குமவராகையாலே அந்நாளை யாசைப்படுகிறார் –

—————————————————————

ஆத்மாந்த தாஸ்யம் பண்ணும் படி விஷயீ க்ருதனான நான் நப்பின்னை பிராட்டியோடே கூட இருக்கிற இருப்பில் அடிமை செய்யப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன் -என்கிறார் –

நாளேல்  அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -பெறக் கடவ நாள் என்று என்று அறிகிறிலேன் -என்னுதல் / பிரிந்து இருக்கக் கடவ நாள் எத்தனை என்று அறிகிறிலேன் என்னுதல் / -பேறு சித்தமான பின்பு பதறுகிறது என் என்னில் –
நானும்-மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்–நித்ய ஸூ ரிகள் பண்ணும் ஆத்மாந்த தாஸ்யத்தில் அன்றோ நானும் அதிகரித்தது -ஒரு பிரயோஜனத்தை கொள்ளக் கிட்டினவனாய் ஆறி இருக்கிறேனோ -தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்--ஓங்கிப் பரப்பு மாறப் பூத்த சோலைகளை யுடைத்தான தேசம் -அடிமை செய்கைக்கு புஷ்பாத் யுபகரணங்களால் குறைவற்ற தேசம் என்னுதல் -/ நப்பின்னைப் பிராட்டியும் தானுமாக புஷ்பாபசயம் பண்ணலாம் தேசம் என்னுதல் /
வாளேய் தடம் கண்–ஒளியை யுடைத்தான பரந்த கண் -என்னுதல் /வாள் போலே கண்டாரை அழிக்க வல்ல பரந்த கண் என்னுதல் / அவனை அநந்யார்ஹன் ஆக்கும் படி வல்ல கண் அழகை யுடையவள் என்கை –
மடப்பின்னை மணாளா –அழகே அன்றிக்கே ஆத்ம குணங்களாலும் துவக்க வல்லவளுக்கு வல்லபன் ஆனவனே -தேசாந்தரம் போன பிரஜை ஊர் அணித்த வாறே தாய்மாரை பலகாலும் நினைக்குமா போலே -ப்ராப்ய தேசம் அணித்த வாறே திரளாவும் தனித் தனியாகவும் பிராட்டிமாரை அனுசந்திக்கிறார் –

————————————————————————–

திரு நாவாயை என் கண்ணின் விடாய் தீரக் கண்டு உகந்து -க்ருதார்த்தன் ஆவது என்றோ என்கிறார் –

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்--பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் -புருஷகாரமாவாரும்-பொறைக்கு உவாத்தாவாரும் யுண்டாய் இருக்க இழக்கக் கடவேனோ –
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்-லோகத்தில் மநுஷ்யர்கள் என்ன -தேவர்கள் என்ன எல்லார்க்கும் நிர்வாஹகன் ஆனவனே -அவர்கள் படுக்கைப் பற்று நோக்குகிற படி
விண்ணாளன் -பிராட்டிமாரும் தானும் தனக்குத் தகுதியான பரம பதத்தில் திவ்ய பர்யங்கத்திலே இருந்து நித்ய ஸூ ரிகளை நிர்வஹிக்கிறவன்
விரும்பி உறையும் திருநாவாய்-உபய விபூதி நாதன் பெறாப் பேறாக ஆதரித்து வர்த்திக்கிற தேசம் –அவன் விரும்புகிற தேசம் அல்லது ப்ராப்யம் இல்லை இ றே
கண்ணாரக் -காண்கையிலே விடாய்ப் பட்ட கண்கள் வயிறு நிறைய
களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–அஹம் அன்னம் என்று ஒரு தேச விசேஷத்திலே களிக்கை ஒழிய இங்கே களிக்கப் பெறுவது என்றோ
கண்டே -காண்கை நிச்சிதம் -என்னும் விஸ்வாசத்தால் களிக்கை அன்றிக்கே கண்டே களிப்பது என்றோ –

—————————————————————

ஊரை அன்றிக்கே அங்கே நிற்கிற உன்னைக் கண்டு கண் களிப்பது என்றோ என்கிறார்

கண்டே  களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்-நான் செய்த படி செய்ய -கண்களின் விடாய் தீருவது என்றோ -ஒரு நாளிலே காண்கை நிச்சிதம் ஆனபின்பு இந்நிர்பந்தத்துக்கு பலம் என் என்ன –
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி-அந்நிய பரதை இன்றிக்கே உன் திருவடிகளிலே அதி சபலன் ஆனேன் -அரை க்ஷணம் இழக்க மாட்டாத படியாய் யன்றோ என் சாபலம் இருக்கிறது –துரிசாகிறது -மனசுக்கு ஹேயவிஷய ஸ்பர்சம்
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்-பரிமளத்தோ பாதி வண்டுகளும் படிந்தது கிடக்கும் படி புஷ்பிதமான சோலைகளை உடைத்தான தேசம் -நச புனராவர்த்ததே -என்கிறபடியே புக்காரை மீள ஒட்டாத நிரதிசய போக்யமான தேசம்
கொண்டே உறைகின்ற –ஆஸ்ரிதரோடே அனுபவிக்கலாம் -தேசம் என்று திரு உள்ளத்திலே கொண்டு நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
எம் கோவலர் கோவே–-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து இடையாருக்கு ஸூ லபன் ஆனால் போலே திரு நாவாயிலே வந்து எனக்கு ஸூ லபன் ஆனவனே-

————————————————————-

திரு நாவாயிலே ஆஸ்ரித அர்த்தமாக  நித்ய வாஸம் பண்ணுகிற நாரண நம்பீ -ஐயோ -இவன் அநந்ய கதி என்று என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் என்கிறார் –

கோவாகிய  மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்-ஈஸ்வரன் இந்திரனை த்ரைலோக்யாதிபதியாக வைத்தான் -மஹா பலி அவனைத் தள்ளி அபத்தத்தை தான் ஏறட்டுக் கொண்டான் -பாதகனானவன் ஸ்வ பலத்தால் ஏறட்டுக் கொண்ட படியால் -நாடு நோவு படும் என்று -ரக்ஷகனான இந்திரனுக்கு கொடுக்கைக்காக -அவன் பக்கலில் நின்றும் விபூதியை வாங்கினான் யாய்த்து -ஆஸ்ரிதருடைய அபேக்ஷித சித்திக்கு தன்னை அழிய மாறும் ஸ்வபாவன் என்கை
தேவா சுரம் செற்றவனே-தேவா ஸூர சங்க்ராமத்திலே பரஸ்பர வதமேயாய்ச் சென்ற வாறே -அனுகூலரான தேவர்களுக்காக அஸூரர்களை அழியச் செய்தவனே -மஹா பலி பக்கல் குண லேசத்தாலே தன்னை அழிய மாறினான் –அங்கு அங்கனம் ஓன்று இல்லாமையால் அவர்களை அழியச் செய்த படி
திருமாலே-ஆஸ்ரிதரை ரஷிக்கைக்கும் -தத் பிரதிகூலரை நிரசிக்கைக்கும் அடி ஸ்ரீ யபதி யாகையாலே
நாவாய் உறைகின்ற -ரக்ஷகனானவன் தூரஸ்தனாகை யன்றிக்கே ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனே –
என் நாரண நம்பீ-அதுக்கு உறுப்பாக -ஆஸ்ரித வத்சலனாய் -அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமே -என்று அத்தாலே பூர்ணனானவனே -ஆஸ்ரித ரக்ஷணத்தை நினைத்து சர்வ அந்தர்யாமி யானவன் என்றுமாம் –
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–-அநந்ய கதியான இவன் ஐயோ நோவு படுவதே -என்று கிருபை பண்ணி யருள வேணும் -ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ்நச சாமர்த்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரஸீத மே -இவன் நமக்கு அசாதாரணன் என்று சம்பந்தத்தைப் பார்த்து கிருபை பண்ணி அருள வேணும் -என்றுமாம் –

—————————————————————–

அபிலஷித்த படி அப்போதே பெறாமையாலே திரு உள்ளம் கலங்கின ஆழ்வார் -அருளிலும் அருள் -தவிரிலும் தவிர் – அஞ்ஞான கந்தம் இல்லாத படி உன்னை என்ப நெஞ்சிலே இருத்தும்ண்ணி தெளிவை தந்து அருள வேணும் –என்று அர்த்திக்கிறார்

அருளாது  ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

அருளாது  ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்-பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-இவன் செய்த படி செய்கிறான் என்று கிருபை பண்ணாதே இருக்கிலும் இரு -என் துர்க்கதியைக் கண்டு கிருபை பண்ணி நிரதிசய போக்யமான உன் திருவடிகளின் கீழே அநந்ய கதியான என்னை வைத்துக் கொள்ளிலும் கொள்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்-தெருளே தரு -மயர்வற மதி நலம் அருளின படியே அஞ்ஞான கந்தம் இல்லாத படியே உன்னை எப்போதும் என் மனசிலே வைத்துக் கொள்ளும் படி -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்கிற தெளிவைத் தர வேணும் –
தென் திரு நாவாய் என் தேவே –திரு நாவாயிலே நின்று அருளின நீயே ஆஸ்ரயணீயன் -என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவனே –

————————————————————

தான் இப்படிச் சொன்ன அநந்தரம் அவன் பக்கல் ஒரு வாசி காணாமையாலே -நதே மனுஷ்யா தேவா ஸ் தே -என்று சக்கரவர்த்தி சொன்னால் போலே -திரு நாவாய் காணப் பெறாதே நான் முடியா நின்றேன் -இனி வேறு -திரு நாவாய் அனுபவிக்கும் பாக்கியவான்கள் யாரோ -என்கிறார் –

தேவர்  முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்-ஸ்வ யத்னத்தாலே காண்போம் -என்னும் ப்ரஹ்மாதிகளுக்கும் சனகாதிகளுக்கும் காண அரியனாய் இருக்கும் –
மூவர் முதல்வன் –ப்ரஹ்ம ருத்ராதிகள் நடுவே வந்து அவதரித்து அவர்களுக்கு நிர்வாஹகன் என்னுதல் -/ ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகன் என்னுதல் /
ஒரு மூ உலகு ஆளி-– மேலும் கீழும் நடுவில் உள்ள சர்வ லோகத்துக்கும் அத்விதீயனான நிர்வாஹகன் –
தேவன்-சர்வ விஸஜாதீயன்
விரும்பி உறையும் திரு நாவாய்-இப்படி சர்வேஸ்வரனாய் இருக்க -ஒரு குடி இருப்பு இல்லாதாரைப் போலே -ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு பாங்கான இடம் -என்று அத்யாதரம் பண்ணி வர்த்திக்கும் தேசத்தை
யாவர் அணுகப் பெறுவார் இனி -நான் முடியா நின்றேன் -இனி இப் பேறு பெற இருக்கிறார் யாரோ -நதே மனுஷ்யா -என்கிறபடியே மனுஷ்யர்க்கு கூட்டு அல்லர்
அந்தோ –உடைமையான எனக்கு உள்ளது உடையவனுக்கு இன்றிக்கே ஒழி வதே –

——————————————————————

உன்னை ஆசைப் பட்டு பெறாது ஒழிந்தாலும் -விட மாட்டாதே சிந்தை கலங்கி -திருமாலே -என்று அழைப்பன் -என்கிறார் –

அந்தோ  அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்–சொல்லத் தொடங்கினது தலைக் கட்ட மாட்டாத பல ஹானியாலே அந்தோ -என்கிறார் -அணுகப் பெறு நாள் யாவை என்ன வேண்டி இருக்க -அது மாட்டாது ஒழி கிறார் இ றே -ஒரு கால் சொல்லி பல ஹானியாலே விடுகை அன்றிக்கே -சர்வ காலமும் ஹிருதயம் கலங்கி -மாதா பிதாக்களைக் கூப்பிடுமா போலே திருமால் என்று அழையா நிற்பன் -பிதா மாதா ச மாதவ –
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-கொத்து மிக்க மலரை யுடைத்தான சோலைகளாலே சூழப் பட்டு இருந்துள்ள திரு நாவாயிலே -நித்ய வசந்தமான சோலைகளை யுடைத்தாகையாலே -நிரதிசய போக்யமான தேசம் என்கை –
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–ஒரு தேசத்திலே சென்றே காணக் கடவதான வடிவைக் கொண்டு -ஆஸ்ரித அர்த்தமாக வந்து -நித்ய வாஸம் பண்ணுகிறவனே -அவ்வடிவை எனக்கு கட்டாத வன்று உன் வரவு அஸத் சமம் அன்றோ -என்கை –

——————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றார் ஐஹிக ஆமுஷ்மிக போகங்களையும் புஜிக்கப் பெறுவார் என்கிறார் –

வண்ணம்  மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்–நாநா வர்ணங்களான ரத்னங்களாலே செய்யப்பட மாடங்களை யுடைத்தாய் -நிரதிசய போக்யமான திரு நாவாயிலே நின்று அருளினவனை
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்-பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-திண்ணிதான மதிலை யுடைத்தான திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த–திரு நாவாய்க்கு ரக்ஷை திரு நகரியிலே போலே –ஆழ்வார் பரியவே அவ்வூருக்கு ரக்ஷை என்னுதல் / ஈஸ்வரனுக்கு தனம் ஆழ்வார் ஆகையால் தனம் கிடந்த இடத்திலே இ றே மதில் இடுவது என்னுதல் / பண்ணார் தமிழ்-பண் மிகுந்த தமிழ் /
மண் ஆண்டு –இஹ லோகத்தில் வைஷ்ணவ ஸ்ரீ யால்-சம்பன்னராய் / மணம் கமழ்வர் மல்லிகையே--மல்லிகை மணம் கமழ்வர் -சர்வ கந்தணம் என்ற விஷயத்தோடு சாம்யாபன்னர் ஆவார் / மல்லிகை மணம் என்று சர்வ கந்தத்துக்கும் உப லக்ஷணம் –

——————————————————————

கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: