திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-5–

கீழில் திருவாய் மொழியில் அவனை சாஷாத்கரித்து ப்ரீதராய் பாஹ்ய சம்ச்லேஷத்தில் பிரவ்ருத்தராய் அப்போதே
கண்ணாலே காணுதல் அணைத்தல் வார்த்தை சொல்லக் கேட்டல் செய்யப் பெறாமையாலே அவசன்னராய்
-லௌகிக பதார்த்த அனுசந்தானத்தாலே ஹிருதயத்தை அந்நிய பரமாக்கித் தரிக்க வேணும் என்று அவற்றை அனுசந்திக்கப் புக
-அவையும் அவனுக்கு ஸ்மாரகமாக-அவற்றால் நோவு பட்டவர் தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்றவர் தம் பிராண ரக்ஷணத்துக்கு ஒரு திர்யக்க்கின் காலிலே விழுகிறார் இ றே
அடியேன் உய்ந்தவாறே என்றவர் ஸ்மாரகங்கள் கையிலே நோவு படுவாராய் விழுந்தது இ றே –
கலந்து பிரிந்து நோவு படுவாள் ஒரு பிராட்டி அவன் வரக் காணாமையாலே லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
போது போக்கைக்காக தன்னுடைய உத்யாநவநத்திலே புக்கு போக ப்ரவணமாய் மிதுனமாய் இருக்கிற பக்ஷிகளினுடைய
வடிவுகளையும் ப்ரவ்ருத்திகளையும் பேச்சுக்களையும் கண்டு இவை அவனோட்டை கலவிக்கும் வடிவுக்கும் பேச்சுக்கும் ஸ்மாரகமாய் நலிய
இவற்றோடு நம்மோடு பகை பெரிதன்று -அவன் வரவிட்டவை யாக வேணும் -அவன் தான் நம்மை முடிக்கைக்கு உபாயம்
விஸ்லேஷம் என்று பார்த்து -அது தான் சம்ச்லேஷம் ஒழிய க் கூடாமையாலே அதுக்காக கலந்து பிரிந்தான்
நாம் அவ்வளவிலும் முடியாமையாலே சென்றற்ற சமயத்திலே ஸ்மாரகங்களை முன்னிட இவள் முடியும் என்று பார்த்து
அவன் வரக் காட்ட வந்தன என்று கொண்டு -என்னை முடிக்கைக்கு -முசல் வேட்டைக்கு அரணைப் பண்ணினால் போலே
இத்தனை பாரிப்பு வேணுமோ என்று நொந்து –
கத் யந்தரம் இல்லாமையால் அவன் குணங்களையே அனுசந்தித்து தரித்தாளாய் தலைக் கட்டுகிறது –
நம்மைப் பார்த்தாலே இழவேயாய் இருந்ததே யாகிலும் அவனைப் பார்த்தால் இழக்க வேண்டாத படி இறே அவன் குணங்கள் இருப்பது -எம்பெருமானார் உகந்த திருவாய்மொழி என்பர் –

——————————————————————–

சில குயில் பேடைகளைக் குறித்து என்னை முடிக்கைக்கு இத்தனை பாரிப்பு வேணுமோ என்கிறாள் –

இன்னுயிர்ச்  சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1-

விரஹ வியஸனம் அறிந்து இருக்கிற குயில் பேடைகாள்-உங்களுக்கு நற்சீவனான   சேவல்களும் அவற்றுக்கு அபிமதைகளான நீங்களும் பரஸ்பர சம்ச்லேஷ அர்த்தமாக அழைத்துக் கொண்டு -விஸ்லேஷ த்தாலே தளர்ந்து இருக்கிற இருக்கிற என் உயிர் நோவ மிகவும் கூஜிதத்தை பண்ணாதே கொள்ளுங்கோள்-காதுகரைச் சொல்லுமா போலே எங்களை இங்கனம் சொல்லுவான் என் -என்றனவாகக் கொண்டு தாரகனான கிருஷ்ணனை வரக் கூவு கிறிலி கோள்-ஆனபின்பு என்னை முடிப்பார்க்கு  இத்தனை பாரிப்பு வேணுமோ –

————————————————————————–

உங்கள் சேவலும் நீங்களுமாய் கொண்டு ப்ரணய கூஜிதங்களாலே என்னை நலியாதே கொள்ளுங்கோள்-என்று சில அன்றில் பேடைகளை தய நீயமாக இரக்கிறாள்  –

இத்தனை  வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2-

அன்றில் பேடைகாள்-– பெண் பிறந்தீர் அல்லீரோ / எத்தனை நீரும் உன் சேவலும்–கரைந்து ஏங்குதீர்--நாங்கள் என் செய்த்தோம் என்ன மிகவும் கரைந்து நின்றி கோள் / வித்தகன் கோவிந்தன் மெய்யன்-அல்லன் ஒருவர்க்கும்–உன்னோடுள்ள கலவியே தாரகமாய் இருக்கிற அவன் ஒரு க்ஷணமும் பிரியும் அளவில் அங்கனம் எங்களை இட்டு நலிவிக்கிறனவாகக் கொடுமை சொல்ல வேணுமோ -அவன் தானே வருகிறான் இ றே -என்ன -அவன் அங்கனம் ப்ரணய ஸ்வபாவரைப் போலே இருக்குமத்தனை -/ ஒருவருக்கும் மெய்யன் அல்லன் –உங்களுக்கும் இத்தனையே பலிப்பது / அத்தனை ஆம் இனி என் உயிர்-அவன் கையதே–இப்படிச் சொல்லவும் அவை விடாதே கூவப் புக்க வாறே முடிந்தேன் ஆகாதே -என்கிறாள் –

——————————————————————-

அற நோவு பட்ட என்னை நலியாதே கொள்ளுங்கோள்என்று அன்றில் பேடைகளை திரியவும் மீளவும் இரக்கிறாள்-

அவன்  கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

அன்றில் பேடைகாள் என்னுடைய பிராணன் அவன் கையிலேயாய் இருக்கச் செய்தே என்னை முடிக்க வேணும் என்று எனக்கு துஸ் சஹமாம் படி ப்ரணய தசையில் உள்ளன சில யுக்திகளை பண்ணிக் கொண்டு ஒன்றிலே ஓன்று அவகாஹித்து சஞ்சரியா நின்றி கோள்-உங்களுக்கு நலியலாம் படி ப்ராணனைத்
தருகைக்கு ஈடான பாக்யத்தை பண்ணாது இருக்கிற என்னுடைய பிராணன் என் பக்கலில் உண்டோ / தவம் செய்தில்லா வினையாட்டியேன்-என்கிறது விஸ்லேஷித்தாலும் அவனைப் போலே தரித்து இருக்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலேன் -என்றுமாம்
பிரணய பரவசமாய் கொண்டு ப்ரவ்ருத்தமான உங்களுடைய த்வனியைக் கேட்டு எத்தைச் சொல்லி தரிப்போம் –

————————————————————————-

சில கோழிகளைக் குறித்து நீங்கள் உச்சமாக கூவி என்னை நலியாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –

கூக்குரல்  கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

உங்களுடைய கூக்குரலைக் கேட்டு வைத்தும் ஆச்சர்ய சீலனாக ப்ரசித்தனான கிருஷ்ணன் இவள் பிழையாள் என்று பார்த்து தோற்றி அருளுகிறிலன் -கோழிகாள் உங்களுடைய சேவல்களும் நீங்களும் உங்களுடைய ஜாதியுசித்தமாக ப்ரணய ப்ரவ்ருத்தமான உச்ச சப்தத்தைப் பண்ணாதே கொள்ளுங்கோள் -உன்னுடைய சர்வ கரணங்களையும் அபஹரித்து உன்னை என்று வந்த நாங்கள் கூவாது இருப்போமோ -என்றனவாகக் கொண்டு என்னுடைய சர்வ கரணமும் பண்டே அவன் பக்கலின — இனி என் செய்ய வருந்துகிறிகோள் -என்ன ஆகில் -இப்பேச்சும் இச் சேஷ்டிதமும் கூடின படி எங்கனம் என்னில் -அவை போகச் செய்தே வ்யஸன வாசனையால் தேஹமும் பிராணனும் நடுவே நின்று துக்கப் படுகின்றன வித்தனை –

———————————————————————

தன்னினவாய் இருந்து நலிகிற பூவைகளைக் குறித்து -அவன் தான் என்னை முடிக்கைக்கு அழகிதான நல்  விரகு பார்த்தான் -உங்களுக்கு இங்கே விஷயம் இல்லை -என்கிறாள் –

அந்தரம்  நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

நலிகைக்கு ஒரு காரணம் இன்றிக்கே இருக்கச் செய்தே-என்னை நலிந்து கொண்டு  சஞ்சரிக்கிற  என்னுடைய பூவைகாள் -உங்களுடைய பாரிப்புக்கு என் பக்கல் அவகாசம் இல்லை -குழறாதே கொள்ளுங்கோள்  -பிரணயித்தவ ப்ரஸித்தியை யுடையனாய் இருந்துள்ள எம்பெருமான் பண்டு இந்த லோகத்தை தனக்காக்கிக் கொள்ளுகைக்குச் சில பொய் செய்தால் போலே என்னோடே கலந்து பரிமாறுகிறானாகத் தோற்றும் படி சில பொய்களை சொல்லி விஸ்லேஷிக்கை என்னை முடிக்கைக்கு உபாயம் என்று அவன் தானே நல்ல விரகு பார்த்தான் -என்னை முடிக்கப் பார்த்த பார்வை -அழகிதாகப் பார்த்தான் என்று தன்னிலே நொந்து சொல்லுகிறாள் என்றுமாம் –

——————————————————————–

தன் தசையை அறியாதே திரு நாமத்தை சொல்லுகிற கிளியைக்  குறித்து நான் ஸ்வஸ த்தையாய் இருந்த போது எனக்கு இனிதாக திரு நாமத்தை சொல்லக் கேட்க்கைக்கு அன்றோ உன்னை நான் வளர்த்தது –எனக்கு அசாதாம்யமான தசையில் திரு நாமத்தை சொல்லாதே கொள் என்று அத்தை  நிவர்த்திப்பிக்கிறாள் –

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

உன்னுடைய சிவந்த வாயும் கண்ணும் கையும் காலும் போலே இருக்கிற திருப்பவளம் தொடக்கமான திவ்ய யவயவங்களை யுடையவனுமாய் உன்னுடைய குளிர்ந்த ஸ்யாமமாய் இருந்துள்ள திரு நிறத்தை யுடையனாய் எனக்கு நல்லுயிராய் இருக்கிற காகுத்ஸத்தன் இனி என்னோடே சம்ச்லேஷித்து என் பிரக்ருதியை அறிந்து வைத்தே பிரிந்தான் –

———————————————————————

அவன் வடிவுக்கு போலியான மேக மாலையைக் கண்டு உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –

கூட்டுண்டு  நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

என்னோடே கலந்து பிரிகையாலே அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களையும் சிவந்த திருப் பவளத்தையும் -எனக்கு மறக்க ஒண்ணாத படி சிலாக்யமான கறுத்த திரு  நிறத்தையும் யுடையனாய் அத்யாச்சர்யமான வடிவு அழகையும் யுடையவனாய் என்னைப் பிரிந்து ஒரு வட்டமும் இன்றிக்கே இருக்கிற கிருஷ்ணனைப் போலே -வளைந்த வில்லோடு கூட மின்னா நின்றுள்ள மேக சமூகங்காள்-உங்கள் வடிவைக் காட்டாதே கொள்ளுங்கோள் -என் செய்ய என்னில் -என்னுடைய பிராணனுக்கு அது ம்ருத்யு –அது -என்று மேகங்களுடைய வடிவைக் காண மாட்டாமை ப்ராங் முகியாய் இருந்து சொல்லுகிறாள் –

————————————————————-

சில குயில்களைக் குறித்து -வேண்டா என்று இரந்து பிரார்த்திக்க மேன்மேல் திரு நாமத்தைச் சொல்லி நலிந்து கோள்-உங்களை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் இ றே என்று இன்னாதாகிறாள் –

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

குயில் பிள்ளைகாள் -அவனுடைய திரு நாமங்களை நீங்கள் சொல்லில் நான் முடிவன் -அவற்றைச் சொல்லாது ஒழிய வேணும் -என்று உங்களை இரந்த எனக்கு -கிருஷ்ணனுடைய திரு நாமங்களையே சொல்லி என்னைக் கொன்றி கோளே –காலங்கள் தோறும் உங்களுக்கு அபேக்ஷிதம் ஆனவற்றையே தேடி யிட்டு உங்களை சொல்லி அப்யசித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள் -சாலத் தக்கராய் இருந்தி கோள்-

—————————————————————

மதுபான மத்தமாய்க் கொண்டு பாடுகின்றன சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து உங்களுடைய த்வனிகள் துஸ் சஹமாய் இருந்தன -நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –

பண்புடை  வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-

நீர்மையை யுடைய வண்டோடே கூடின தும்பிகாள் -பண் மிழற்றாதே கொள்ளுங்கோள் –பண்புரை -என்ற பாடமான போது -பண்ணை முரலா நின்றுள்ள வண்டோடே கூடியது –
புண்ணின் விவரத்திலே வேலைக் கொடு குத்தாப் போலே இரா நின்றது உங்களுடைய இனிய த்வனிகள் -குளிர்ந்த நீர் வெள்ளத்திலே பெரிய தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் -அவ்வளவு அன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன் அவ்வழ கைக்காட்டி என்னை மாய்த்துப் பிரிந்து போனான் -குளிர்ந்த நீர் வெள்ளத்தை யுடைய தடாகம் தாமரைப் பூ பூத்தால் போலே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன் என்றுமாம்

—————————————————————-

திரள இருக்கிற நாரைக் குழாங்கள் தன்னை முடிக்க மந்திரிக்கின்றனவாகக் கொண்டு -நான் முடிந்தேன் -இனி நீங்கள் திரண்டு பிரயோஜனம் என் -என்கிறாள் –

எழ நண்ணி  நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-

இங்கே இருந்து அவனை புஜிக்கும் ஆசையைத் தவிர்ந்து -அவன் கருத்தின் படியே நானும் முடிந்தேன் -பழனங்களில் இருப்பதும் செய்து நீங்கள் கோலின படியே முடிக்க வல்ல நாரைக் குழாங்கள் காள் –திரண்டு இனி என் –இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது--விலக்ஷணமான சரீரமும் க்ரமேண பசை அற்றது –தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே--இப்படி தளர்ந்து முடியப் புகுகிறவள்  எம்பெருமானுடைய விபூதி சம்ருத்தமாக என்கிறாள் —நான் பட்ட துக்கம்  ஒருவரும் படாது ஒழிய வேணும் என்று தன்னுடைய நோவின் மிகுதியாலே  சொல்லுகிறாள் என்றுமாம் –நான் போக லோகம் எல்லாம் அடைய என்னார்த்தி காணாதே பிழைக்கும் ஆகாதே -என்றுமாம் –

——————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழியினுடைய நீர்மை ஹ்ருதயத்தில் படில் ஆரேனுமாகில் தரியார் -என்கிறார் –

இன்பம்  தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-

லோகம் எல்லாம் வெள்ளமிட்ட நிரதிசய ப்ரீதியை யுடையராய்க் கொண்டு கால தத்வம் உள்ளதனையும் தன் புகழை ஏத்தும் படி தனக்கு அருள் செய்த ஆச்சர்ய பூதனை -ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -ஒன்பது பாட்டில் உண்டான -வியஸனம் -ஸூ கம் என்னும் படி வியஸனம் மிக்கு இருக்கிற பத்தாம் பாட்டு ஒன்றையும் யுடைய -இத்திருவாய் மொழி கேட்டால் -விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –

——————————————————————–

கந்தாடை     அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: