திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-4–

எம்பெருமானுடைய ஸுசீல்யத்தையும் அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும் அனுசந்திக்கையாலே
-அப்போதே இந்திரியங்களும் தாமும் -அவனைக் காண வேணும் என்று ஆசைப் பட்ட படி பெறாமையாலே மிகவும் நோவு பட்ட
ஆழ்வார் தூணிலே வந்து தோற்றி -ஹிரண்யனால் வந்த நலிவை ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு தீர்த்து அருளினால் போலே
தம்முடைய ஆர்த்தியை தீர்த்து அருளின படியை அனுசந்தித்து ப்ரீதராய் முடிக்கிறார் –

————————————————————–

ஸ்ரீ யபதியான எம்பெருமானைக் காண வேணும் என்று தம்முடைய சஷூர் இந்த்ரியத்துக்கு பிறந்த சாபல்யத்தை அருளிச் செய்கிறார் –

மையார்  கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

மேகத்திலே மின் சேர்ந்தால் போலே மையார்ந்து கறுத்த திருக் கண்களை யுடையளாய் -பரம போக்யமாய் சிவந்த நிறத்தை யுடைய பெரிய பிராட்டியார் சேரும் திரு மார்வை  யுடையையாய் அவள் பக்கல் அத்யந்தம் வியாமுக்தன் ஆனவனே -மிகவும் வெவ்விதான தேஜஸ் ஸை யுடைய திரு வாழி கண்ணுக்கு இலக்காம் படி சூரியை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இவரை ஏந்தும் திருக் கையை யுடையவனே -இப்படி ஸ்ப்ருஹநீயனான உன்னைக் காண ஆசைப்படா நின்றது என்னுடைய கண் –

————————————————————

தமக்கும் தம்முடைய ஹ்ருதயத்துக்கு உண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார் –

கண்ணே  உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

எனக்கு த்ருஷ்டியானவனே -உன்னைக் காண ஆசைப்பட்டு பஹு மநோ ரதங்களைப் பண்ணி என்னுடைய ஹ்ருதயம் கூப்பிடா நிற்கும் -ப்ரஹ்மாதிகளுக்கும்  சனகாதிகளுக்கும் கூட அரியையாய் இருக்கச் செய்தே-என்னுடைய சாபலத்தாலே நான் உன்னைப் பெற்று முடிவன் என்று கூப்பிடா நின்றேன் –  நண்ணாது ஒழியேன்–உன்னைப் பெறா விடில் தரியேன் -என்றுமாம் –

——————————————————————-

எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிட்டு மிகவும் அவசன்னராகச் செய்தே-அவன் வரக் காணாமையாலே  -நிஸ்ஸாதனராய்-ஆர்த்தராய் இருந்தவர்களை தானே கைக் கொண்டு ரஷிக்கக் கடவதான இக்குணத்துக்கு புறம்பு ஆனேனோ என்று நோவுபடுகிறார் –

அழைக்கின்ற  அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

அயோக்யனுமாய் அதி  ஷூத்ரனுமாய் இருந்து வைத்து ஆர்த்தனாய் கூப்பிடுகிற என்னுடைய ஹ்ருதயமானது நாய் தன்னுடைய கூழை வாலாலே பிறருக்குத் தெரியாதபடி ஸ்வ அபேக்ஷித ஸூ சகமான சேஷ்டைகளைப் பண்ணுமா போலே ஒருவருக்கும் அறிய நிலம் இல்லாத படி நோவு படா நின்றது -நிஸ்ஸாதனாய் வைத்து ஆசைப்படா நின்றேன் என்றுமாம் -பசுக்களும் இடையரும் நோவு படும் படி இந்திரன் வர்ஷித்த வர்ஷத்துக்கு மலையை எடுத்து பரிஹரித்து  அருளின உன்னுடைய குணத்துக்கு புறம்பாகா நின்றேன் -என்று நோவு படா நின்றேன் –

——————————————————————-

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அரியையாய் இருக்கக் காண்கையாலே நெஞ்சு லங்கா நின்றது என்கிறார் –

உறுவது  இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

இது பரம பிரயோஜனம் என்று அடிமை புகுந்து  உன் பக்கல் அடிமை செய்யப் பெற்றேனோ என்று மிகவும் முக்தமான என்னுடைய ஹிருதயமானது கலங்கா நின்றது -தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் என்றும் ஓக்க அறிய ஒண்ணாத நரஸிம்ஹமான   ஸர்வேஸ்வரனே –

———————————————————-

சர்வேஸ்வரனாய் வைத்து ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனானவன் கழல் காணக் கருதும் என்   நெஞ்சம் -என்கிறார் –

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

அபரிச்சேத்யனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து -ஜகத் ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக ப்ரஹ்மாவை முதலிலே உண்டாக்குவதும் செய்து -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் ஆஸ்ரித சம்ச்லேஷ என ஸ் வ பாவனாய் -நிரதிசய ஸூந்தரனானவன் திருவடிகளைக் காண வேணும் என்று நினையா நின்றது என் கருத்து –

—————————————————————–

தாம் காண ஆசைப்படும் அளவிலே எம்பெருமான் தம்முடைய திரு உள்ளத்திலே வந்து புகுந்து அருளினவாறே நெஞ்சு உகந்து அனுபவிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

கருத்தே  உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

எனக்கு மிடுக்கானவனே -உன்னைக் காண வேணும் என்று அல்பம் மநோ ரதித்தேன் -இனி ஒரு காலும் போகாத படியாக என் நெஞ்சிலே இருத்தினேன் என்றுமாம் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வி லக்ஷண தேஜோ ரூபமாய் உச்சாரீதமான திரு நாட்டிலே எழுந்து அருளி இருந்த அத்விதீயனானவனே –

——————————————————————

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுடைய ஆர்த்தியைத் தீர்த்து அருளினால் போலே தம்முடைய ஆர்த்தியை எம்பெருமான் தீர்த்து அருளின படியை அனுசந்தித்து ப்ரீதராய் அவனை ஏத்துகிறார் –

உகந்தே  யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

ப்ரீதியோடே உன்னை அனுபவியா நின்றுள்ள ஹிருதயத்தினுடைய உள்ளுக்கு உள்ளே நிர்மலனாய் வைத்து நிர்ஹேதுகமாக அத்யபி நிவேசத்தைப் பண்ணி வர்த்தித்து அருளுகிறவனே -கிளர்ந்து இருந்துள்ள ஹிரண்யனுடைய அகன்ற மார்வை இரண்டு கூறாம் படி பண்ண வல்ல திரு நகத்தை யுடையவுமாய் -ஆர்த்தருடைய ஆர்த்தியைத் தீர்க்கும் நரசிம்ம ரூபி யானவனே -நகத்தாயே-நகந்தாய் என்று மெல்கிக்  கிடக்கிறது –

——————————————————————-

எம்பெருமானைக்-கிருஷ்ணனைக் – காணப் பெற்றேன் என்று இனியராகிறார் –

உருவாகிய  ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

ஆபாத ப்ரதீதியிலே -இவையும் சில தர்சனமோ என்று தோற்றுகிற பாஹ்யமான ஆறு -ஷட் -சமயங்களாலும் அவிஸால்யமான படியை யுடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும் அந்தராத்மாவாய் பிரதானனுமானவனே -ப்ரஹ்மாதிகளுக்கும் கூட காரண பூதனானவனே –

—————————————————————-

தன்னை அனுபவிக்கவும் பெற்று அதுக்கும் மேலே  ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாம் படி திருவாய் மொழி பாடவும் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

கண்டு  கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

என்னுடைய சகல இந்திரியங்களும் க்ருதார்த்தராம் படி கண்டு கொண்டு -நானும் களித்து -காண்பதுக்கு முன்பு பட்ட துக்கத்தை நிச்சேஷமாகப் போக்கி –நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –

————————————————————————

எம்பெருமானைப் பெற்று க்ருதார்த்தன் ஆனேன் என்கிறார் –

அடியான்  இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

அடியான் என்ற ஒரு வ்யாஜத்தாலே நிர்ஹேதுகமாக தன்னளவில் எனக்கு பிரசாதத்தைப் பண்ணும் சர்வேஸ்வரனை -ஸுர்ய வீர்யாதி குண பிரதையை யுடைய பெரிய திருவடியை தன்னுடைய நிர்ஹேதுக ரக்ஷணத்துக்கு கொடியாக எடுப்பதும் செய்து –குணா குணம் நிரூபணம் பண்ணாதே ஜகத்தை எல்லாம் அந்தரப்படாத படி அளந்து கொண்டு ரக்ஷிக்கும் ஸ்வபாவனானவனைப் பெற்று நான் க்ருதார்த்தன் ஆனபடி என் -பெரிய திருவடியை விஷயீகரித்தால் போலே என்னை விஷயீ கரித்தது என் பக்கல் என்ன நன்மையைக் கண்டு என்னில் –திரு உலகு அளந்து அருளினால் போலே நிர்ஹேதுகமாக என்றுமாம் –

——————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி தன்னுடைய ரஸ்யதையாலே  அயர்வறும் அமரர்களுடைய ஹ்ருதயத்தை நோவு படுத்தும் என்கிறார் –

ஆறா  மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

குவலயா பீடத்தை முறித்தால் போலே நம்முடைய துரிதத்தை போக்கினவனை -பிரதிபக்ஷம் போனவாறே சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வார் பாரத ராமாயணாதிகளில் கண்ட பார்வதி பேதம் போலே தரிப்பார்க்கு எளிதாம் படி நூறு நூறாக அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வானவர் தம் இந்த உயிர்க்கு ஏறானவனை தரும் என்றும் சொல்லுவார் –

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: