திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-2–

கீழில் திருவாய்மொழியில் அவனுடைய நிருபாதிக பாந்தவத்தை அறிவித்த ஆழ்வார் -இப்படி பரம பந்துவானவன் கண் வளர்ந்து அருளுகிற
திருப் புளிங்குடியிலே -அவனோடே எல்லா பரிமாற்றமும் பரிமாற வேணும் என்று ஆசைப்பட்டுச் சென்றும் பெறாமையாலே விஷண்ணராய்
தம் பக்கலிலே விசேஷ கடாக்ஷம் பண்ணாது இருந்ததுக்கு மேலே ஒரு சேஷ்டைகள் பண்ணாதே ஏக ரூபமாய் கண் வளர்ந்து அருளுகையாலே
திருமேனி அலசுகிறது என்று அதி பீதருமாய் -என்னை உன் அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும்
-திருவடிகளை தலையிலே வைத்து அருள வேணும் -திருப் பள்ளி யுணர்ந்து பிராட்டியோடே கூட இருந்து அருள வேணும்
-எழுந்திருந்து என் எதிரே வந்து அருள வேணும் -என்று தொடங்கி தம்முடைய மநோ ரதங்களை அடைய அபேக்ஷிக்கிறார் –

———————————————————————-

அநந்ய கதிகளான அடியோங்களைக் குறித்து ஒரு வார்த்தை யருளிச் செய்து -விடாய் கெடும்படி திருக் கண்களாலே குளிர  நோக்கி அருள வேணும் என்கிறார் –

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

பழையதாக உன் கடாக்ஷத்தையும் -அதுக்கு அடியான பெரிய பிராட்டியாருடைய கடாக்ஷத்தையும் பெற்று -குடி முறையே சாஸ்திர உசிதமான வழி தப்பாதே கோயில்களில் அசாதாரண பரிசர்யா ரூபமான அடிமை செய்கிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி -தெளிந்த திரையை யுடைய திருப் பொருநலோடு கூடின அழகிய நீர் நிலம் சூழ்ந்த திருப் புளிங்குடியிலே வந்து சந்நிஹிதனாய் கண் வளர்ந்து அருளினவனே-

——————————————————

சர்வ ஸூ லபமான உன்  திருவடிகளை என் தழை மேலே வைத்து அருள வேணும் -என்கிறார் –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

குடிக்கு ஈடாக வர்த்தித்து -பண்டு இல்லாத நன்மைகளையும் யுண்டாக்கி -தன்னுடைய ரஸ்யத்தையாலே-இதர புருஷார்த்தங்களிலே நசை யறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை பண்ணி உன் திருவடிகள் அல்லது அறியாத பரம்பரையாய் வருகிற அடியோமுக்கு கிருபை பண்ணி -/ படிக்களவாக-போமிக்கு அளவாக –

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

திரு உடம்பு அசைய ஒரு படியே கண் வளர்ந்து அருளாதே உன் அடியோமுக்காக திருக் கண்களை விழித்து -நீ எழுந்து இருந்து -உன் தாமரை மங்கையும் நீயும் -இந்த லோகம் எல்லாம் வாழும் படி இருந்து அருளாய் -என்கிறார் –
இது இப்போதைக்கு அடுப்பது என்று உணர்த்தி அடிமை செய்து ஆத்மாவுக்கு ஸ்வபாவமாய் வருகிற அடிமை நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபையைப் பண்ணி –
இம் மூன்று பாட்டாலும் தம்மைக் கொண்டாடுகிறார் அல்லர் -ஓர் இடத்துக்கே கடவாரை வேறு நோக்குவார் உண்டோ என்று தம்முடைய அநந்ய கதித்வம் சொல்லுகிறார் –
தடம் கொள் தாமரை-தடத்தை விழுங்கின தாமரை -/ இடம் கொள்-இடமுடைத்தாகை-

————————————————————-

திருப் புளிங்குடி தொடக்கமான திவ்ய ஸ்தானங்களில் சந்நிஹிதனாய் என்னை இவ்வளவு ஆக்கினால் போலே மேலும் என் அபேக்ஷிதங்கள் செய்து அருள வேணும் -என்கிறார் –

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே-என்னை ஆள்வாய்-அயோக்கியன் என்று அகலாத படி கண்கள் சிவந்திலே என் ஹிருதயம் தெளிந்த வாறே அங்கே வந்து புகுந்து நிரந்தரமாக இருந்து அருளி என்னை ஆளுகிறவனே –
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப-என்று இந்த கல்யாண குணத்தை கண்டு லோகம் எல்லாம் விஸ்மயப் படும் படி
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்-சிவப்ப நீ காண வாராயே-அறத் தெளிந்த நீரை முகக்கை யாலே நிறம் அழகிதான மேகத்திலே யுண்டான பவளம் போலே அழகிய திருப் பவளத்திலே சிவப்போடே காணலாம் படி நீ வர வேணும் –

——————————————————-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினால் போலே வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

நின் பல் நிலா முத்தம்–தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்-தாமரை தயங்க நின்று அருளாய்-பல்லாக்கிற ஒளியையுடைய முத்து கதிர் புறப்பட முறுவல் செய்து திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்கா நின்று அருளாய்
நல்ல பவள படரின் கீழே சங்குகள் நிர்ப்பாதமாய் வர்த்திக்கிற திருப் பெருநலை யுடைத்தாய் சிரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே
மத்தமான பெரிய யானையினுடைய விடாய் கெடுகைக்காக அகப்பட்டு நின்ற பொய்கையை யிலே பிரதிபக்ஷத்தைக் காயும் சினத்தை யுடைய பெரிய திருவடியை நடத்திக் கொண்டு தோற்றினவனே –

———————————————————————

உன்னுடைய அபி லஷிதங்கள் செய்ய ஒண்ணாத படி பிரதிபந்தகங்கள் உண்டு என்னில் –ஆஸ்ரிதருடைய ஆபத்து போக்குகைக்காக திவ்ய ஆயுதங்கள் ஏந்தி இருக்கிற நீ மாலி ப்ரப்ருதிகளான ராக்ஷஸரை முடித்தாள் போலே என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் -என்கிறார் –

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-

மேரு சிகரத்தில் ஏறி மேகம் படிந்தால் போலே பிரதிபக்ஷத்தை காயும் சினத்தை யுடைய பெரிய திருவடியை நடத்திக் கொண்டு வந்து பெரிய சினத்தை யுடையரான மாலி மால்யவான் தொடக்கமான அஸூரர்கள் அங்கே முடியும் படி சீறி அவர்கள் முன்பே  நின்ற காயும் சினத்தை யுடைய  வேந்தே –கலி வயல் திருப் புளிங்குடியாய்-அது பண்டு இ றே என்ன ஒண்ணாதபடி சம்ருத்தமான திருப் புளிங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே -இப்பாட்டில் கிரியை மேலில் பாட்டில் –

—————————————————————–

துர்பலரோடு பிரபலரோடு வாசி இன்றிக்கே -ரக்ஷகனான நீ நாங்கள் வாழும் படி எங்கள் கண் எதிரே ஒரு நாள் இருந்திடாய் நின்றார்  –

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

சாம்சாரிக சகல துக்கங்களையும் போக்கி இங்கே என்னை ஆளுகிறவனே -எத்தனையேனும் அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அங்கு அப்படி நிர்வாஹகன்  ஆனவனே -சம்ருத்தமான பழனங்களை யுடைத்தாய் ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே –திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுடைய ஸம்ப்ரமத்தைக் கண்டு நாங்கள் களித்து மிகவும் ப்ரீதராக இந்த லோகத்தில் உள்ள சாதுக்கள் காணும் படி –

————————————————————————

திருநாட்டிலே யன்றோ நீர் அபேக்ஷிக்கிற படியே செய்யலாவது என்னில் -சகல லோகங்களும் கொண்டாடும் படி எங்கள் கண் எதிரே இஸ் சம்சாரத்திலே திருப் புளிங்குடியிலே உன்னுடைய வேண்டற்பாடு தோற்ற ஒரு நாள் இருந்து அருள வேணும் -என்கிறார்-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

-எங்கள் கண் எதிரே லௌகீகர் எல்லாம் உன் திருவடிகள் இரண்டையும் நிரந்தரமாக தொழுது க்ருதார்த்தராய் தங்களுடைய ஸ்நேஹ அநு குணமாக தங்களுடைய சக்த்யநு ரூபமான சொற்களாலே மிகவும் மேல் விழுந்து கொண்டாட -சந்த்ர பதத்தளவும் உயர்ந்த மாடங்களை யுடைய திருப் புளிங்குடியிலே சந்நிஹிதன் ஆனவனே -அவ்வளவன்றி  -ஸ்ரீ வைகுண்டத்தில் வந்து நின்று அருளி மிகவும் விளங்கா நின்றுள்ளவனே –

——————————————————————-

இவ்விருப்பில் வீறு அறியாத சம்சாரத்திலே இருக்கிறது என் -என்னில் -ஆசையுடைய நாங்கள் நிரந்தரமாக கண்டு வாழுகைக்கு -என்கிறார் –

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

உன்னைக் கொண்டு காரியம் இன்றிக்கே செல்லுகிற விஸ்மய நீயமான சம்சாரத்திலே உன்னுடைய வேண்டற்பாடு தோற்றும்படி ஒரு நாள் இருந்து அருள வேணும் -இதில் உமக்கு பிரயோஜனம் என் என்னில் -அநந்ய பிரயோஜனரான நாங்கள் கண்களின் விடாய் கெடும்படி செவ்விப் பூ போலே இருக்கிற திரு மேனியை வாழ்த்தி நிரந்தரமாக அனுபவிக்கும் படி -செந்நெலின் நடுவே சேற்றிலே இள வாளைகள் களித்து துள்ளா நின்றுள்ள அழகிய நீர் நிலத்தை யுடைய திருப் புளிங்குடியிலே சந்நிஹிதன் ஆனவனே -ம்ருத்யு போலே அஸூரருடைய குலங்களை போக்க வல்லையாய் -அதுக்கு உபாயமாக கொடிய பிரவ்ருத்திகளை யுடைய திவ்யாயுதங்கள் கை வந்து இருக்குமவனே –இது பண்டு தம்முடைய பிரதிபந்தகங்களை போக்கின படிக்கு த்ருஷ்டாந்தம் –

——————————————————————-

மிகவும் நிரதிசய  போக்யமான உன் திருவடிகளிலே நானும் வந்து அடிமை செய்யும் படி என்னை அங்கே அழைத்துக் கொள்ளுதல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -என்கிறார் –

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

உனக்கு சேஷமாய் வைத்தே உன்னோடு பிரதிகூலித்த சேதனர் பக்கல் -நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறி ஆயுதம் எடுக்க வல்லையாய் -தேவர்களுடைய சர்வ துக்கங்களும் போம்படி அஸுரர்க்கு துஸ் ஸஹமான துக்கத்தை விளைக்கும் படியான ப்ரத்ய ஒளஷதம் இல்லாத நஞ்சாய் எனக்கு நிரதிசய போக்யனாய் திருப் புளியங்குடியில்   வந்து சந்நிஹிதன்  ஆனவனே -வடிவு அழகுக்கு ஒப்பு இல்லாத பெரிய பிராட்டியாரும் அப்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் கூசி ஸ்பர்சிக்க வேண்டும்  படி ஸூ குமாரமான திருவடிகளை அதில் போக்யதையை அறிந்து வைத்து இழைக்கைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நானும் பிடிக்கும் படி –

—————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றார் எம்பெருமானை நிரந்தரமாக புஜிக்க -அனுபவிக்க பெறுவார் என்கிறார் –

கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர்வாரே–9-2-11-

பிரயோஜனாந்தர பரரான தேவர்களுடைய அபேக்ஷிதம் பூரிக்கைக்காக கடலைக் கடைந்து அருளின -எம்பெருமானை -இத்தன்மையை யுடையையான நீ என்னை அங்கே அழைத்தல் இங்கே வருதல் செய்து என் அபேக்ஷிதத்தை பூரித்து அருள வேணும் என்று அர்த்தித்து -அப்படியே பூர்ணமாகப் பெறுகையாலே ஸூ த்ருடமான திரு வழுதி நாட்டை யுடைய ஆழ்வாருடைய அநாயாசமான வாக் ப்ரவ்ருத்தியை யுடைய ஆயிரம் திருவாயமொழியிலும் விலக்ஷண மான இத்திருவாய் மொழி வல்லார்கள் -ஆஸ்ரித ஸூ லபனான எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரமாக ஹிருதயத்திலே அனுபவிக்கப் பெறுவார் –
ஆராவமுதிலே ஆர்த்தருடைய ஆர்த்தி தீர்க்கும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து என்னுடைய ஆர்த்தி தீர்த்திலன் என்று இன்னாதானார் –
இங்கு பரம பந்துவாய் வைத்து என்னை அங்கீ கரித்திலன் என்றும் -ஏக ரூபமாய் கண் வளர்ந்து அருளினால் திரு உடம்பு அசலாதோ என்றும் இன்னாதாகிறார் –

—————————————————————–

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: