திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–1–

எம்பெருமான் பாகவத சேஷத்வ பர்யந்தமான நிரதிசய புருஷார்த்தத்தைக் காட்டிக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார்
இப்படி உபகாரகனானவனே ஆத்மாவுக்கு நிருபாதிக பந்துவும் -ப்ராப்ய ப்ராபகங்கள் எல்லாம் -மற்று ஒருவரும் இல்லை -என்று
தமக்குப் பிறந்த ப்ரீத்யதிசயத்தாலே ஸமஸ்த சேதனரையும் குறித்து சோபாதிக பந்துக்களான புத்ர மித்ராதிகளை விட்டு
நிருபாதிக பந்துவான எம்பெருமானையே பற்றுங்கோள் -என்று உபதேசிக்கிறார்
ஸர்வேஷாம் ஏவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ –பூதா நாம் யோ அவ்யயபிதா -என்று இத்யாதிகளாலே நிருபாதிக பந்து அவனே இ றே
மாதாபிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மாஸ்திரம் தொடுத்துக் கொடு நிற்கிற தாமே இ றே புகலானார் -ச பித்ராச பரித்யக்த –
பிதா எதிரியாக அவனிலும் அண்ணிய யுறவாய் உதவினான் இ றே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு –
த்வாம்து திக் குல பாம்சனம் -என்று ஹிதம் சொன்ன ஸ்ரீ விபீஷண ஆழ்வானைத் தள்ளிவிட்டான் ராவணன் –
நத்யஜேயம் -என்று அவனை ஒழியச் செல்லாதாயிற்று பெருமாளுக்கு –
மஹா ராஜர் ஜ்யேஷ்டானால் நோவு பட நிருபாதிக பந்துவாய் சென்று உதவினார் –
திரௌபதியை பரர் பரிபவிக்க -பர்த்தாக்கள் தர்ம பிரதானராய் கவிழ்ந்து இருந்து தரையைக் கீற-அவ்வளவில் உதவின பின்பும்
கோவிந்தேதி யாதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நம் -என்று புண் பட்டது அவன் திரு உள்ளம் இ றே
உபாயாந்தரங்களைக் குறித்து சோகித்த அர்ஜுனனைக் குறித்து -அவற்றை அடங்க என்னையே பற்று –
உன்னை நான் ரக்ஷிக்கிறேன் -சோகியாதே கொள் என்றான் இ றே
இப்படி நிருபாதிக பந்து அவனே -புறம்பு உள்ளார் அடங்க சோபாதிக பந்துக்கள் -என்று அனுசந்தித்து -அத்தால் வந்த ப்ரீதியாலே
எல்லாரும் சோபாதிக பந்துக்களை விட்டு அவனையே பற்றுங்கோள் என்று பரோபதேச ப்ரவ்ருத்தர் ஆகிறார் –

—————————————————————

எல்லாருடைய பந்துத்வமும் சோபாதிகம் ஆகையால் -ஆபத் சகனும் நிருபாதிக பந்துவான எம்பெருமானையே பற்றி உஜ்ஜீவிக்க வேணும் -என்கிறார்

கொண்ட  பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

கொண்ட பெண்டிர்--தான் தன் ஹிருதயத்தில் பந்துக்களாக நினைத்து இருக்கும் பார்யாதிகள் -என்னுதல் -பார்யைக்கே விசேஷணமாய் அர்த்தாத் யுபாதி விசேஷத்தாலே கொண்ட ஸ்த்ரீ என்னுதல் -மாதா பித்ரு ப்ரப்ருதிகளை காற்கடைக் கொண்டு எல்லாருமாக நினைத்து இருக்கும் ஸ்த்ரீ என்னுதல் –மக்கள்-அப்படிப் பட்ட அவளையடைய யவ்வனத்தை அழிய மாறி பெறும் பிரஜைகள் –
உற்றார் -தனக்கு சத்ருச விஷயம் என்று ஆதரித்த சம்பந்திகள் –
சுற்றத்தவர்-அவர்கள் மதிக்கும் படியான இத்தலையில் ஞாதிகள்
பிறரும் -அந்நியரும்–முன்பு சொன்னவர்களும் -இவர்களில் காட்டில் வாசி பெரிது அன்று என்கை –
கண்டதோடு பட்டது அல்லால்-சந்நிதியில் ஸ்நேஹிக்கும் அது ஒழிய -என்னுதல் -கையிலே த்ரவ்யம் கண்ட போது அத்தைப் பற்றி ஸ்நேஹிக்குமது ஒழிய -என்னுதல் –
காதல் மற்று யாதும் இல்லை-காணாத போது மெய்யான ஸ்நேஹம் ஒன்றும் இல்லை -என்னுதல் -ஸ்நேஹமும் அதிர்க்கு எதிர் தலையான துவேஷமும் இல்லை என்னுதல் -ஸ்நேஹமும் அதுக்கு அடியான பந்தமும் இல்லை என்னுதல்
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-பத்துத் திக்கிலும் உண்டான சகல சேதனரையும் பிரிகதிர் படாமல் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவன்-இவற்றின் பக்கல் ஒன்றும் இல்லாத அன்று ரக்ஷிக்குமவன் -பிரளய ஆபத்தில் ரஷிக்கைக்கு ஒரு கை முதலும் இல்லை -அர்த்தித்தவமும் இல்லை இ றே –ரஷிக்கைக்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமுமே இ றே வேண்டுவது -அப்போது விலக்குகைக்கு பரிகரமும் இல்லையே –பிரான் -உபகார சீலனானவன் –
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–அடியோமாய் உஜ்ஜீவிக்கை ஒழிய நம்மதாய் அவனுக்கு கொடுக்க வேண்டுவது ஒன்றும் இல்லை -சேஷத்வத்தை இசையும் அத்தனை -சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையால் அத்தை அறிகை உஜ்ஜீவனம் -சேஷத்வத்தை இழக்கை இ றே நாசமும்
இல்லை கண்டீர் துணையே -வேறே துணை உண்டாய் இருக்க இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன் -இவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் -இல்லையாகில் இல்லையாம் அத்தனை -அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –

——————————————————————

உபகாரகரைப் போலே இருந்து ஸ்வ பிரயோஜனங்களையே தலைக் கட்ட நினைக்குமவர்களை ஒழிய -நிர்ஹேதுகமாக ஆபத்சகனைப் பற்றுங்கோள் -என்கிறார்

துணையும்  சார்வும் ஆகுவார் போல்
சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல்
அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த
எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

துணையும் சார்வும் -துணை யாகை யாவது -ஏகம் துக்கம் ஸூ கஞ்சநவ் -என்று ஸூ க துக்கங்களை ஓக்க அனுபவிக்கை –சார்வாகை யாவது -போக்கடி அற்ற தசையில் தாங்களே புகலாகை-பாண்டவர்களுடைய வனவாசத்தில் தனிமையிலே முகம் காட்டியும் -திரௌபதியை மீட்டுக் கொண்டு போகிற போது தங்கின பணிக் கொட்டிலில் சென்று முகம் காட்டிக் கூடக் கதறியும் துணை யானால் போலேயும் –பகதத்தன் விட்ட சக்தியை அர்ஜுனனைத் தள்ளி தன் மார்பிலே ஏற்ற கிருஷ்ணனைப் போலேயும் -இருக்கை –
ஆகுவார் போல்-தாங்கள் அபந்துக்கள் ஆனபடியே கடக்க நிற்பதும் செய்யாதே – ரக்ஷகர் என்று பிரமிக்கும் படி வர்த்திப்பர்கள் –
சுற்றத்தவர் பிறரும்-பந்துக்களோடு வாசி இன்றிக்கே –
அணையவந்த வாக்கம் உண்டேல்-கைக்கு எட்டின சம்பத்து உண்டாகில் -இவன் பக்கலிலே ஒரு பிரயோஜனம் தங்களுக்கு உண்டாம் என்று தோற்றி இருக்கில் என்னுதல் -தங்கள் பக்கலிலே இவனுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்று தோற்றி இருக்கில் என்னுதல் –
அட்டைகள் போல் சுவைப்பர்-ரக்த ஸ்பர்சம் அற வாங்கா-நிற்க -ஹிதம் செய்ததாக இ றே இருப்பதே -அது போலே உபகாரம் கொண்டாராய் கொள்ளாதே -ஹிதம் செய்தார்களாக உப ஜீவிப்பர் -உன் கையில் கனக்க கிடந்தால் அபஹரிப்பர்கள்-என் கையில் புகட்டு வை -என்று ஹிதம் செய்கிறார்களாக இ றே உபஜீவிப்பது
கணை யொன்றாலே -ஏகேந மஹே ஷூ ணா -என்று கைக்கு எட்டிற்று ஓர் அம்பால் –
யேழ் மராமும் எய்த-ஓன்று இரண்டாலே மஹா ராஜர் அதி சங்கை போவதாய் இருக்க ஏழு மரா மரத்தையும் எய்த –எம் கார் முகிலை-வாலியாலே துரப்புண்டு வெறுவிபரான தசையில் யுதவப் புக -ரக்ஷணத்திலே அதி சங்கை பண்ணினவனுக்கு மழு ஏந்திக் கொடுத்து -அவன் விரோதியைப் போக்கி -ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நவ் -என்று ஆஸ்ரிதரைச் சொல்லுதல் -ஆத்ம நி பஹு வசனமாய் அவருக்கு செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இருக்கும் படியால் யாதல்
புணை என்று உய்யப் போகல் அல்லால்-அவன் பக்கல் ந்யஸ்த பரனாய் உஜ்ஜீவித்து போமது ஒழிய -என் கார்யம் உனக்கே பரமாக வேணும் -என்று ஒரு வார்த்தையையே அவனுக்கு செய்ய வேண்டுவது –
இல்லை கண்டீர் பொருளே-–புறம்பு ஒருவரைப் பற்றினால் -ஒரு பிரயோஜனம் இல்லை -புறம்பு ஆஸ்ரயிக்கையிலே க்லேஸிக்க சிலர் உண்டு இத்தனை -பிரயோஜன ரூபம் ஆவது ஒன்றும் இல்லை –

———————————————————-

எம்பெருமானை ஒழிய மற்று உள்ளார் எல்லாம் பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி -இவனுக்கு ஆபத்து வந்தால் பார்ப்பாரும் இல்லை -ஆனபின்பு நிருபாதிகமாக எல்லாருக்கும் ஆபத் சகனாய் இருக்க கிருஷ்ணனையே பஜியுங்கோள் -அவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லாது -என்கிறார் –

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்
என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் அரணே-9-1-3-

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்–ஒருவன் கையில் அர்த்தம் யுண்டாய் பரிமாறக் காணில் –
போற்றி என்று-பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனர் சொல்லும் வார்த்தையைச் சொல்லுவார் -இன்னம் அர்த்தம் அநேகம் உனக்கு உண்டாக வேணும் என்பார்கள் -நம் ஸம்ருத்தியே தனக்கு பிரயோஜனமாய் இருப்பான் ஒருவன் உண்டாவதே என்று குளிர பார்த்து -கண்ணற மாட்டான் என்று அறிந்த வாறே
ஏற்றி எழுவர்-இடலாகாதோ போக என்று எழுந்து இருப்பார்கள் –
இருள் கொள் துன்பத்தின்மை காணில்-அஞ்ஞானத்தையும் துக்கத்தையும் விளைக்கக் கடவதான தாரித்ரியத்தைக் காணில்
என்னே என்பாருமில்லை-ஐயோ என்ன கடவாரும் இல்லை -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளை திரு நறையூர் அரையர் அர்த்தித்தவனுக்கு இட்டே தரித்ரனாய் -இவனுடைய சர்வஸ்வத்தையும் கொண்டு சம்ருத்தரானவர்கள் –என் என்ற மாத்திரத்திலே இவனுடைய பந்து என்று ஜீவிக்கலாய் இருக்குமாகில் அதிலும் லோபிகளாய் ஓர் இன் சொல்லுச் சொல் சொல்லார் -என்பர் –
மருள் கொள் செய்கை யசுரர் மங்கவடமதுரைப் பிறந்தார்க்கு-வெறுமையே பற்றாசாக ரஷிப்பான் ஒருவன் உளன் -அவனைப் பற்றுங்கோள் என்கிறார் –
மருள் கொள் செய்கை யசுரர் மங்க–சேதன ஹ்ருதயங்களிலே அறிவுக்கேடு குடி கொள்ளும் படியான ப்ரவ்ருத்திகளை யுடைய அஸூரர்கள் மங்கும் படி -பண்ணும் ப்ரவ்ருத்திகளிலே சேதனர் கலங்கும் படி இ றே ஆசூரா பிரகிருதிகள் உடைய குரூரம் இருப்பது –
-வடமதுரைப் பிறந்தார்க்கு–ஆஸ்ரிதருடைய ஆபத்தை போக்குகைக்கு அகர்ம வஸ்யனான தான் கர்ம வஸ்யர் நடுவே வந்து தத் சஜாதீயனாய் அவதரித்து உதவுமவனுக்கு –
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால்-அவனுடைய கிருபைக்கு பாத்திரமான அடியராய் உஜ்ஜீவிக்குமது ஒழிய -அவன் கிருபையை விலக்காது ஒழியுமதுவே இவனுக்கு இட வேண்டும் பச்சை -தன் அருள் கொள்வாரை உதாரா -என்று இ றே அவன் சொல்லுவது –
இல்லை கண்டீர் அரணே-–வேறு ரக்ஷகமாக வல்லது ஒன்றும் இல்லை –ஆதரேண யதாஸ் தவ்தி தனவந்தம் தநேச்சயா ததாசே த்விஸ்வகர்த்தாராம் கோ நமுச்யதே பந்த நாத் –

——————————————————————

சிலரை ஆபத்சரென்றே அர்க்காதிகளாலே நெடு நாள் ஆஸ்ரயித்து வைத்தால் -ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேக்ஷிப்பர் -நிர்ஹேதுகமாக அவன் வந்து அவதரித்து ஆபத்சகானான வனே ஆஸ்ரயணீயன் என்கிறார் –

அரணம்  ஆவர் அற்ற காலைக்கு
என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்
இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு–என்று என்று அமைக்கப் பட்டார்–கைமுதல் அற்ற அன்றைக்கு ரக்ஷகனாவான் ஒருவன் வேணும் என்று இயற்றி உள்ள காலத்திலே பச்சை இட்டு ஆஸ்ரயித்து -தனக்கு அபாஸ்ரயமாக சமைத்து வைத்தவர்கள் -அவர்கள் ஆபத்துக்கு உதவும்படி என் என்னில் –
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்-முன்பு பச்சை கொண்டதுவும் கடவிய தனம் கொண்டாராய் -ஆபத்து வந்தவாறே உபேக்ஷித்து க்ருதக்நராயப் போவார்கள் –
தெப்பர் ஆவர்-நம்மத்தை நாம் கொண்டோம் -என்று இருக்கும் புல்லியராவர்-
இன்றி இட்டாலும் அக்தே-பச்சை இட்டு ஆஸ்ரயியா விட்டாலும் ஆபத்து வந்தால் கை விடுவாரை கிடைக்கும் –ஆபத்து வந்தால் -பொகட்டுப் போகைக்கு பச்சை இட வேண்டாவே -அவர்கள் தாங்கள் நடுவே முடிந்து இவர்களுக்கு உதவாதே போனாலும் பலம் அதுவே என்றுமாம் –
வருணித்து என்னே-வ்யர்த்த கதையை பரக்க சொல்லுகிறதுக்கு என்ன பிரயோஜனம் உண்டு -க்ருதக்நரான சம்சாரிகள் படியை அனுசந்தித்து என்ன பலம் உண்டு
வடமதுரைப் பிறந்தவன் -நாம் ஆஸ்ரயியாது இருக்க நமக்கு உதவுகையே தன் பேறாக வந்து பிறந்தவன் –
வண் புகழே-கல்யாண குணங்களே /
சரண்-சரணம் ரக்ஷகம் /
என்று உய்யப் போகல் அல்லால்-அவன் குணங்களையே ரக்ஷகம் என்று உஜ்ஜீவிக்குமது ஒழிய
இல்லை கண்டீர் சதிரே–-அல்ப யத்னத்தாலே பஹு பலம் பெறுமது -சதிர் -பஹு யத்னத்தை பண்ணி பல வேளையில் ஒன்றும் இன்றிக்கே ஒழிகை -இளிம்பு —

—————————————————————

தங்களை பெறா விடில் தரிக்க மாட்டாத படி ஸ்நிக்த்தை களான ஸ்த்ரீகளாலே ஆபத்துக்கள் வந்தால் இகழப்  படுவர் -ஆனபின்பு என்றும் ஏக பிரகாரமாக ஸ்நிக்தனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

சதிரமென்று  தம்மைத் தாமே
சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே
வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

சதிரமென்று-சதிராக வாழா நின்றோம் என்று -இருந்ததே குடியாக -எல்லாரும் தம்மை இப்படி இ றே நினைத்து இருப்பது –
தம்மைத் தாமே-சம்மதித்து -தங்களை தாங்களே இசைந்து -இயற்றி யுடையனானவன் -நம்மை சதிரன் என்று அங்கே நினைப்பிடு -என்னும் -இவ்வசதஸ்ய ப்ரவ்ருத்திக்கு வேறு சஹகரிப்பார் இல்லாமையால் தாமே மேல் எழுத்து இட்டுக் கொடு வர வேணும் –
இன்மொழியார்-இனிய பேச்சை யுடையவர்களுடைய –அகவாய் மயிர்க்கத்தியாய் இருக்க பேச்சில் இனிமையாலே வசீகரிப்பர்கள் –
மதுரபோகம் துற்றவரே-மதுரமான போகங்களை அவர்களைக் கொண்டு நெருங்க புஜித்தவர்களே
வைகி மற்றொன்றுறுவர்-போக யோக்யதை போனவாறே அவர்களால் த்யஜிக்கப் படுவார்கள் -போக யோக்யதையான யவ்வனமும் கை தொடுமானமான அர்த்தமும் மாண்டாலும் இவனுக்கு ச்ரத்தை மாறாது இ றே -இவன் மேல் விழ அவர்கள் நிஷேதிக்க இவன் படும் எளிமைகளை வாயாலே அருளிச் செய்ய மாட்டாமையாலே மற்று ஓன்று -என்கிறார்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க-சேதனர் அதிரும் படியான ப்ரவ்ருத்திகளை யுடைய அசுரர் மங்கும் படியாக
வடமதுரைப் பிறந்தார்க்குஎதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்-அவனுக்கு செய்ய வேண்டுவது என் என்னில் -ஸ்வாகாதிகளைப் பண்ணி எதிர் கொள்ளும் இத்தனை -அவன் மேல் விழா நின்றால் விமுகர் ஆகாது ஒழியும் இத்தனையே வேண்டுவது -ஆபி முக்கியம் பண்ணும் அடியராய் உஜ்ஜீவிக்கும் அது ஒழிய
இல்லை கண்டீர் இன்பமே–ஆத்மாவுக்கு வேறு ஸூ கம் இல்லை -உயிர் கழுவிலே இருந்து பிபாஸை வர்த்தித்தவனுக்கு தாஹ அம்சத்துக்கு பிறக்கும் ஸூகம் போலே இ றே -சம்சாரத்தில் பிறக்கும் ஸூ கம் -பகவத் விஷயத்தை விட்டு அநர்த்தப் படுகைக்கு வேண்டுவது உண்டு அத்தனை –

—————————————————————

நிரதிசய புருஷார்த்தத்தை உணராதே முன்பு உள்ளார் அநேகர் முடிந்து போனார் -அங்கனம் நசியாதே ஆஸ்ரிதர்க்காக அவதரித்து ரக்ஷிக்குமவனையே ஆஸ்ரயிக்குமல்லது  ஆத்மாவுக்கு ஹிதம் இல்லை என்கிறார் –

இல்லை  கண்டீர் இன்பம் அந்தோ
உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர்
தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால்
மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ-சம்சாரத்தில் ஸூ கம் இல்லை கிடி கோள் -அந்தோ -போக்தாக்களுக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே -ப்ரத்யக்ஷம் அகிஞ்சித் கரமாய் இருக்க உபதேசிக்கிறார் இ றே
உள்ளது நினையாதே-உண்டான புருஷார்த்தத்தை நினையாதே -உண்டான இல்லாமையை நிலையாமை -என்றுமாம் –
தொல்லையார்கள் எத்தனைவர்—தோன்றிக் கழிந்து ஒழிந்தார்–பழையராய் இருப்பார் எத்தனையவர் உத்பத்தி விநாசமேயாய் -நடுவு இருந்த நாள் புருஷார்த்தத்துக்கு உடல் இன்றிக்கே முடிந்து போனார் —எத்தனைவர் -என்கிறது அநேகர் என்றபடி –
மல்லை மூதூர்-வடமதுரைப் பிறந்தவன் –-அதி சம்ருத்தமாய் அவனுக்கு பழையதாய் வருகிற வூர் -சித்தாஸ்ரமாய் ஸ்ரீ வாமனன் நெடு நாள் தபஸ் ஸூ பண்ணியும் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் படை வீடு செய்தும் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்ததும் -இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
வண் புகழே- சொல்லி யுப்பப் போக வல்லால்-அவனுடைய கல்யாண குணங்களையே -யுக்தி மாத்திரத்தாலே உஜ்ஜீவித்து போமது ஒழிய
மற்று ஓன்று இல்லை சுருக்கே–-சுருங்கச் சொல்லலாம் ஹிதம் வேறு ஒன்றும் இல்லை –காடு கைக்கலாவது உண்டு -திரளச் சொல்லலாவது இதுவே –

——————————————————————

பகவத் ஸமாச்ரயணீயத்தின் உடைய எளிமையையும் இனிமையையும் அருளிச் செய்கிறார் –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல்
வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

மற்று ஓன்று இல்லை -இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவது இல்லை -என்னுதல் -இப்போது இத்தைச் சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றை சொல்லுகிறான் என்று இருக்க வேண்டா என்னுதல் –
சுருங்கச் சொன்னோம்-இது தன்னையும் பரப்பு அறச் சொன்னோம் -பிரதிபத்திக்கு அவிஷயமாம் படி அன்றியே ஸூ க்ரஹமாகச் சொன்னோம்
மா நிலத்து -இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –
எவ் உயிர் க்கும்-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –
சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை –
சிந்திப்பே அமையும்கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் –
அந்தோ-இவ்விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –
குற்றம் அன்று-ஒரு நன்மை இல்லை யானாலும் ஓர் அநர்த்தத்தை விளையாதே -ப்ராதர்த்தே வேதி கிருஷ்ணேதி-இவ்வுபாயத்துக்கு பலம் இல்லை யானாலும் தானே பிரயோஜனம் போரும் என்கை –
எங்கள் பெற்றத் தாயன்-வடமதுரைப் பிறந்தான்–ஆஸ்ரிதர்க்காக பசு மேய்க்கும் ஆயன் ஆனவனாக வடமதுரைப் பிறந்தவன் -என்னுதல் –
குற்றமில் சீர் கற்று -ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களை அப்யஸித்து என்னுதல் -பிறப்பிலும் சேஷ்டிதங்களிலும் புரை யற்று இருக்கை என்னுதல் -அஹம் வோ பாந்தவோ ஜாத –
வைகல்-வாழ்தல் கண்டீர் குணமே–கற்பது ஒரு கால் –வாழ்ச்சி நித்தியமாய் இருக்கும் -வாழ்தல் கண்டீர் குணமே–வாழ்தல் கிடீர் இவ்வாத்மாவுக்கு யுக்தம் -அல்லாதவை எல்லாம் அப்ராப்தம் என்கை –

—————————————————————-

அவதாரத்துக்கு நிதானத்தை சொல்லி -அவனையே ரக்ஷகனாகப் பற்றுமது ஒழிய வேறு விலக்ஷணமாய் இருபத்தொரு அபாஸ்ரயம் இல்லை என்கிறார் –

வாழ்தல்  கண்டீர் குணம் இது அந்தோ
மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும்
புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே–9-1-8-

வாழ்தல் கண்டீர் குணம் இது -அவன் குணங்களை அனுசந்தித்து -வாழுமதே கிடி கோள் யுக்தம் –
அந்தோ-கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே இவர்களை அபேக்ஷிக்க வேண்டுவதே எனக்கு –
மாயவன் அடி பரவி-போழ்து போக வுள்ள கிற்கும்-புன்மை யிலாதவர்க்கு-வாழ் துணையா–ஆச்சர்யமான ஸுந்தர்ய சீலாதிகளை யுடைய வனுடைய திருவடிகளை ப்ரீதியாலே அக்ரமமாக ஏத்தி அத்தாலே கால ஷேபம் பண்ண வேணும் என்று அத்யசிக்க வல்லரான அநந்ய பிரயோஜனர்க்கு / -புன்மை யிலாதவர்கள்–சீரியவர்கள் – / வுள்ள கிற்கை-உள்ள வல்லராகை –அத்யவசிக்க வல்லராகை –
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் –கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்காக -அஹம் வோ பாந்தவோ ஜாத -என்கிறபடி துணையாக வந்து பிறந்தவன் -பரித்ராணாய ஸாதூ நாம் -என்று இ றே அவதாரத்துக்கு பிரயோஜனம் இருப்பது –
வண் புகழே-வீழ் துணையாப் போமிதனில்–கல்யாண குணங்களையே ஆசைப்படும் துணையாக பற்றும் இது போக்கி –/ வீழ் துணை-ஆசைப்படும் துணை -தாம் வீழ்வார் -என்ன காட்டுவதே ஆசா யுக்தரை –
யாதுமில்லை மிக்கதே–இதில் காட்டில் மேல் பட்டது வேறு ஒன்றும் இல்லை –

————————————————————————

எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று ரக்ஷகம் உண்டு என்று பற்றினவர்கள் -பண்டு நின்ற நிலையும் கெட்டு அநர்த்தப் பட்டு போவார்கள் -ஆனபின்பு இவன் போக்கி சரணம் இல்லை என்கிறார் –

யாதும்  இல்லை மிக்கதனில்
என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து
கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட
வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே–9-1-9-

யாதும் இல்லை மிக்கதனில்-என்று என்று அது கருதி-பகவத் வ்யதி ரிக்தமாய் இருப்பது ஒன்றைப் பற்றி இது ஒழிய வேறு ரக்ஷகமாய் இருபத்தொரு ஒன்றும் இல்லை என்று சொல்லி அத்தை ரக்ஷகமாகப் பற்றி -சமர்த்தோ த்ருச்யதே கச்சித -என்கிற பிரதிபத்தியை அதிலே வேணும் என்று பண்ணி இருக்கை –
காது செய்வான் கூதை செய்து-காது பெருக்கப் புக்கு பண்டு உள்ள யோக்கியதையும் கெடுத்து கூதை யாக்கினால் போலே
கடை முறை வாழ்க்கையும் போம்-தண்ணிய முறையான வாழ்க்கையும் அழியும் -ஆபத்தில் அது ரக்ஷகம் ஆகாது –அதின் பக்கலிலே ந்யஸ்த பரனாகையாலே தான் செய்து கொள்ளும் அத்தையும் இழக்கும் –
மாதுகிலின் கொடிக் கொள் மாட-வடமதுரைப் பிறந்த-கம்சன் வாழ்கிறானாய் படை வீட்டைக் கொடி கட்ட இவர் அத்தை கிருஷ்ணனுடைய அவதாரத்துக்கு உடலாக்குகிறார் -சிசுபாலன் விவாஹத்துக்குச் செய்த சடங்குகளை தனக்கு உடலாக்கிக் கொண்டது போலே
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்-வைஜயந்தி உள்ளிட்ட தோள் மாலைகளால் அலங்க்ருதமான கிருஷ்ணனை ஒழிய வேறு பிரயோஜனம் வேண்டாம் என்கை
இல்லை கண்டீர் சரணே-புறம்பு ரக்ஷகம் இல்லை கிடி கோள் –
அதாவா
இப்பாட்டு கைவல்ய நிந்தை என்றுமாம் -ஆத்ம அனுபவ ஸூ கத்தில் காட்டில் மிக்க ஒரு புருஷார்த்தம் இல்லை என்றே புத்தி பண்ணி –கடை முறை வாழ்க்கையும் போம்-பகவத் ஸமாச்ரயணத்துக்கு யோக்கியமான சம்சாரத்திலே சப் தாதி விஷயங்களை அனுபவித்து இருக்கும் அத்தையும் இழக்கும் -ஆனபின்பு சர்வாதிகனாய் ஸூ லபனான கிருஷ்ணனே பரம ப்ராப்யன் -என்கை –

————————————————————————-

தானே எல்லார்க்கும் சரண் என்னும் இவ்வர்த்தத்தை பிரதிஷ்டைக்காக வந்து திருவவதாரம் பண்ணி யருளின கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

கண்ணன்  அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல்
அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் – உண்டேல்-என்கிறது ஸ்வ பஷத்தால் இல்லை -அவர்களுடைய அந்யதா பிரதிபத்தியாலே வந்தன உண்டாகில் என்கை –
எண்ண வேண்டா-அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்
அதாவா
உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –

—————————————————————–

நிகமத்தில் -அதயேஷ்ய தேச ய இமம் -என்று தொடங்கி எம்பெருமான் அருளிச் செய்தால் போலே இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லார் எனக்கு ப்ரியகரர் என்கிறார் –

ஆதும்  இல்லை மற்று அவனில்
என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை
ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

ஆதும் இல்லை மற்று அவனில்-என்று அதுவே துணிந்து-அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் இல்லை என்று அத்யவசித்து
தாது சேர் தோள் கண்ணனை -இவருக்கு இவ்வத்ய வஸ்யத்தை பிறப்பித்தார் யார் என்னில் -தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி யாயிற்று இவருக்கு இவ்வத்யா வஸ்யத்தை பிறப்பித்தது
குருகூர்ச்-சடகோபன் சொன்ன-தீதிலாத ஒண் தமிழ்கள் இவை-கதாந்தர ப்ரஸ்தாவம் இன்றிக்கே இருக்கையும் -ஸ்வ அர்த்தங்களை தானே வெளியிட வற்றாகையும்/ நிரதோஷமாய் பஹு குணமானவை என்றுமாம் –
ஆயிரத்துள் இப்பத்தும்-ஓத வல்ல பிராக்கள்-இப்பத்தை அப்யஸிக்க வல்ல உபகாரகர் –சம்சாரத்தின் தண்மையும்-ஈஸ்வரனே ப்ராப்ய ப்ராபகங்கள் என்றும் இ றே இதில் சொல்லிற்று -இத்தை அப்யஸித்து நல்வழியே போமிது இ றே உபகாரகராகை யாவது
நம்மை ஆளுடையார்கள் பண்டே–அத்தை அப்யசிக்கைக்கு ஹேதுவான சரீர பரிக்ரஹம் பண்ணின காலமே பிடித்து நாதர் என்கிறார் –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: