திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-9-

நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே -அவனுடைய ஸுந்தர்ய ஸுசீல்யாதி அனுபவ பூர்வகமாக
ஸ்வ சேஷத்வத்தை அனுசந்தித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார் -ஸ்வ தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
திருப் புலியூரில் எம்பெருமானோடே இயற்கையிலே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி அவனாலே அபஹ்ருத சிந்தையாய்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப்படில் வாழ கில்லேன் -என்று இருக்கிற தன்மையை அறியாத பித்ராதிகள் இவளுடைய ஸ்வயம் வரத்துக்கு
ராஜபுத்திரர்கள் வருவது என்று நகரத்திலே பறை அறிவிக்க -கேட்ட இவளுடைய தோழி யானவள் -ஸ்ரீ பரத ஆழ்வானை ராஜாவாக்கிப் பண்ணின
தூர்ய கோஷாதிகள் அவனுக்கு மிகவும் அஸஹ்யமாய் தரிப்பு அரிதானால் போலே ராஜ புத்ரியும் இதை அறியில் ஜீவியாள்-என்று பார்த்து
இவர் அறிவதற்கு முன்பே இத்தை விளக்க வேணும் என்று துணிந்து இந்த சம்ச்லேஷத்தை நான் அறிந்தமை அறிவிக்கில்
என் காவல் சோர்வு என்று கொள்வர் -நான் அறியாதேனாய் இருக்கில் இவளைக் கிடையாது
போம் வழி என் என்று பார்த்து இவளுடைய உறவு முறையார்க்கு திருப் புலியூரில் எம்பெருமானுடைய குண சேஷ்டிதாதிகளில் அபஹ்ருத சிந்தையாய்
மிகவும் ஈடுபட்டு அவற்றையே வாய் புலற்றா காணா நின்றோம் -ஆனபின்பு திருப் புலியூரில் எம்பெருமானுக்கு அல்லது
வேறு சிலர்க்கு உரியள் அல்லள் -என்று அவர்கள் உபக்ரமித்த மணத்தை விலக்கி-இவளுடைய உறவுமுறையாரும்-
புறம்பு ஓர் இடத்துக்கு உரியள் அல்லள் ஆகில் -திருப்புலியூரில் எம்பெருமானுக்கு இவளுக்குத் தக்க –
அழகும் ஒப்பனையும் ஆண் பிள்ளைத் தனமும் குணவத்தையும் ஐஸ்வர்யமும் உதார குணமும் பிரணயித்தவமும்
சமாசாரமும் வேதார்த்த தத்வஞானமும் இன்னம் இப்புடையில் உண்டான சத்வ குணங்களும் உண்டோ என்று கேட்க
தோழியும் நீங்கள் சொல்லுகிற அளவு அல்ல -அத்யாச்சர்ய பூதன் -அவனோடே சம்ச்லேஷத்தமைக்கு இவள் வடிவிலே
வ்யக்தமான அடையாளங்களும் உள-ஆனபின்பு அவனுக்கே இவளைக் கொடுங்கோள்-என்கிறாள்
இத்திருவாய் மொழியால் பகவத் சேஷத்வமே புருஷார்த்தம் என்றும்
அந்நிய சேஷத்வமும் ஸ்வஸ்வா தந்தர்யமும் அபுருஷார்த்தம் என்றும் சொல்லப் பட்டது –

———————————————————————

எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸுந்தர்யத்தைக் கண்டு அவ் வழகு  அல்லது மற்று ஓன்று அறியாதபடி ஈடுபட்டாள் என்கிறாள் –

கருமாணிக்க  மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

கருமாணிக்க மலை-கறுத்தே இருள் நீக்குவது ஒரு மாணிக்க மலை / மணித் தடம் –தெளிந்த பொய்கையில்
திரு மார்வுக்குச் சிவப்பு -பிராட்டி சந்நிதானத்தாலே -இவளுக்கு இப்படி விலக்ஷனான இவனை பெற்ற பிரியத்தால் பிரான் என்றும் எம்மான் என்றும் சொல்லுகிறாள்
முன்பு சொன்ன அழகோடு மேன்மையை யுடையனாய் அழகிய நீர் வாய்ப்பை யுடைத்தான வயலையுடைய குட்ட நாட்டுத் திருப் புலியூரில் -பெறுதற்கு அரியனாய் -அத்யாச்சர்யமான படியை யுடையனானவன் பேர் அன்றி வேறு பேசுகிறிள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ-அவர்கள் தம் வார்த்தையை விசுவசிக்கைக்காக-தானும் அவர்களோடு ஓக்க அறியாதாளாய்-இதற்கு என் செய்கேன் -என்கிறாள் –

—————————————————————–

எம்பெருமானுடைய ஆபரண சோபையிலே அகப்பட்டாள்   என்கிறாள் –

அன்னைமீரிதற்  கென் செய்கேன்
அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும்
அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம்
பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ்
திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2-

அத்யந்த விலக்ஷணமான மேருவில் உலாவா நிற்பதுவும் செய்து காண்கிற அளவன்றிக்கே நிரந்தரமாக சூழப் பட்ட தேஜஸ் ஸை யுடைய விலக்ஷணனான ஆதித்யனும் மற்றும் அப்படி இருக்கும் நக்ஷத்ராதிகளையும் போலே –எம்பெருமான் –ப்ரீத்யுக்தி-

—————————————————————-

திருப் புலியிரிலே எம்பெருமானுடைய ஆண் பிள்ளைத் தனத்திலே இவள் அகப்பட்டு அவனுடைய ஸுர்யாதி களுக்கு வாசகமான திரு நாமங்களை பெரும் கிளர்த்தியோடே பேசா நின்றாள் என்கிறாள் –

புகழும்  இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப் புலியூர் வளமே–8-9-3-

இவள் -வீரப்பாடுகள் அறிந்து ஈடுபடும் பருவம் அன்றிக்கே இருக்கிற இவள் –
அலை எறியா நின்றுள்ள கடல் நெருப்பு கொளுத்தி பரப்பு மாறின அத்யுஜ்ஜ்வலமான எரியோடே கூட நடந்து செல்லுமா போலே -மிக்க ஒளியை யுடைத்தாய் சத்ருக்களும் புகழும் படியான திரு வாழி முதலான பொருகைக்கு சாதனமான திவ்யாயுதங்களை ஏந்தி —பொன்றுவிகை –முடிக்கை / வளம்-அழகு –

———————————————————

திருப் புலியூரில் எம்பெருமானுடைய குணவத்தையிலே இவள் ஈடு பட்டாள் என்கிறாள் –

ஊர்  வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே–8-9-4-

ஊர் வளம் கிளர் சோலை-தன்னைக் காணவே வூரில் ஸம்ருத்தி எல்லாம் தோற்றும்படியான சோலை
மிக்கு இருந்துள்ள ஏரியினுடைய சஞ்சாரத்தை யுடைத்தான அழகிய நீர் நிலத்தை யுடைய குட்ட நாட்டுத் திருப் புலியூரில் ஸமஸ்த லோகங்களையும் உண்பது உமிழ்வது அத்தாலே தன்னுடைய கல்யாண குணங்கள் மிகவும் நிறம் பெறும் படி யாவதும் செய்து அயர்வறும் அமரர்கள் அதிபதியானவனுடைய சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் பலவற்றை கிளர்ந்து பேசும் இத்தனை போக்கி மற்று ஒன்றும் பேசுகிறிலள் / இப் புனை இழை-இவ் விலக்ஷணையான பெண் பிள்ளை –

———————————————————-

அவனுடைய ஸுந்தரியாதிகளை நாமும் பேசுகிறிலோமோ  -இவளும் அவ்வோபாதி பேசினாளானால் ஆகாதோ என்ன -இவள் வடிவு இருக்கிறபடி கண்டோமுக்கு அவன் ஐஸ்வர்ய குணத்தில் ஈடுபட்டு அவனோடே சம்ஸ்லேஷித்தாள்   என்கிறாள் –

புனையிழைகள்  அணிவும்
ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்
தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி
அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

பூணக் கடவ ஆபரணங்கள் பூண்டு இருக்கிற படியும் கூறையுடையும்-இவள் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பும் இவளுக்குப் பிறந்த இவ் வழகுகள் ஆராய ஒண்ணாவாகிலும் மிகவும் ஆராய்ந்து பார்க்கில் –
திருப் புலியூருக்கு பிரதானனாய் அதுக்கு மேலே ஸமஸ்த லோகங்களையும் ஆளக் கடவ சர்வேஸ்வரனுடைய ப்ரசாதத்திலே முழுகினாள்-அப்பன் என்று தோழி தன் பிரியத்தால் சொல்கிறாள் -முழுகினள் என்று கடல் கொண்டால் போல் நமக்கு உதவாள் என்றவாறு-

——————————————————————

இவளுடைய வடிவில் வேறுபாடு -லீலா விநோதத்தாலும் இவள் பருவத்தாலும் பிறவாதோ என்னில் -எம்பெருமானுடைய உதார குணத்தில் அகப்பட்ட அவனோடே சம்ச்லேஷித்தமைக்கு அடையாளம்  வ்யக்தமாக உண்டு என்கிறாள் –

திருவருள்  மூழ்கி வைகலும்
செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்
தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

சிரமஹரமான திரு நிறத்தை யுடையனாய் உபகார சீலனான கிருஷ்ணனுடைய ப்ரசாதத்திலே முழுகி நாடோறும் அவனுடைய விஷயீ காரங்களை பெற்றமைக்கு அடையாளங்கள் வ்யக்தமாக உள –
குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லாரையும் விஷயீ கரிக்கைக்காக அவன் தானே சென்று சேரும் படியாய் ஒரு காரியப்பாடு வேண்டாதே தானே நிரதிசய போக்யமாய் இருந்த திருப்புலியூரிலே அவனுடைய பிரசாதத்தாலே வளருகின்ற கமுகினுடைய செவ்விப் பழம் போலே இரா நின்றது -ம்ருது ஸ்வபாவையான இவளுடைய அதரம்-

—————————————————————-

தன் பக்கல் அடங்காமல் அவ் வூரில் ஸ்தாவரங்களும் கூட  வெள்ளம் கோத்து அவையும் கூட பரஸ்பர சம்ச்லேஷ ஏக தாரகமாய் இருக்கிற  படியே பெருகுகிற இவனுடைய பிரணயித்தவ வெள்ளத்திலே மூழ்கினாள் என்கிறாள்  –

மெல்லிலைச்  செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே–8-9-7-

மிருதுவான இலையை யுடைத்தாய் சிரத்தையோடு கூடி தன்னைக் கொடுக்கும் ஸ்வ பாவமான கொடி தழுவ அத்தால் வளர்ந்து கொண்டு இளகா நின்றுள்ள தாளை யுடைய கமுகோடே கூடின பெரிய இலையையும் மடலையும் யுடைய வாழை ஈன்ற பழுத்த குழாய்கள் சூழ்ந்து அத்தாலே வெள்ளமிடா நின்றுள்ள பரிமளத்தை யுடைத்தாய்
செறிவின் மிகுதியாலே நேரிதான இலையை யுடைய தெங்கின் உள்ளே போக்கடி யற்று சஞ்சரியா நிற்பதும் செய்து இப்படி நிரதிசய போக்யமான திருப் புலியூரில் மிக்கு இருந்துள்ள சம்பத்தை யுடைய கிருஷ்ணன் திருவடிகளை அடைந்தாள் முக்தையான பெண் பிள்ளை / புல்லிலைத் தெங்கு-என்றது சோலையைத் தழுவி தழைத்து இருந்த தெங்கு -என்றுமாம் –

————————————————————–

திருப் புலியூரில் எம்பெருமானுடைய வ்ருத்தவத்தையால் இவள் வசீக்ருதை யானாள்-என்கிறாள் –

மடவரல்  அன்னை மீர்கட்கு
என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர்
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே–8-9-8-

மடவரல்-மடவந்தபடி -பற்றிற்று கை விடாமையும் -/ மிக்கு இருந்துள்ள ஸ்ரீ யை யுடையராய் சம்ஸ்க்ருத பாஷையும் வேதங்களும் தாங்கள் இட்ட வழக்கான  ப்ராஹ்மணருடைய பகவத் ஸமாராதன ஸ்வ ரூபமான யாகங்களில் ஹோமம் பண்ணின  நெய்கள் பட்ட அக்னிகளில் நின்றும் புறப்பட நின்றுள்ள மிக்கு இருந்துள்ள புகை வ்யவஸ்த்தித ஸ்வபாவமான ஆகாசத்தில் தேவ லோகத்தை மறைக்கும் நிரதிசய போக்யமான திருப் புலியூரில் தன்னோட்டை ஸ்பர்சத்தாலே பணம் விரிந்து இருந்துள்ள திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனுடைய  திருநாமம் அல்லது சொல்லுகிறிலள் -சம்ச்லேஷ தசையில் படுக்கை அழகை நினைத்து சொல்லா நின்றாள் என்று கருத்து –

——————————————————————–

சாம வேத  ப்ரப்ருத்ய சேஷ வேதார்த்த தத்வ ஞானத்தை யுமுடையனாய் இருக்கும் படியை எப்போதும் பரவா நின்றாள் என்கிறாள் –

பரவாள் இவள்  நின்று இராப்பகல்
பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-

பனி நீர் நிறக் கண்ணபிரான்-குளிர்ந்த நீர் போலே இருக்கிற நிறத்தையும் அந்நிறம் போலே சிரமஹரமான ஸ்வ பாவத்தையும் யுடையனான -நிரதிசய போக்யமான த்வனியை யுடைய சாமவேதிகளுடைய அத்யயன கோஷமானது கடல் போலே கோஷியா நிற்க –விரவார்-என்ற பாடமான போது -விரவி எழுகிற நாலு வேதங்களினுடைய த்வனியும் வேதார்த்தத்தை மீமாம்சிக்கிறவர்களுடைய த்வனியும் என்னும் பொருள் -பொய்கை கள் தோறும் தாமரை நிலை விளக்கு எரியுமா போலே மலரா நிற்பதும் செய்து தலைத்தரமான கழனி களையும் உடைத்தாய் இருக்கிற திருப் புலியூரில் புகழ் அன்றி மற்று ஓன்று – / –கயம் -பெருமை –/ ஆவது -திரள் / கரவு -முதலை –

———————————————————–

நாம் பேசும் அளவோ அவனுடைய படி -அத்யாச்சர்யம் என்று சொல்லி அவனோடே சம்ச்லேஷித்தமைக்கு இவர்களும் இசையை வேண்டும் படியான அடையாளம் சொல்லுகிறாள் –

அன்றி  மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே–8-9-10-

வேறு மற்று உபாயம் உண்டோ -இவள் அழகியதாய் குளிர்ந்த திருத் துழாய் நாறுகைக்கு -மலை போலே மஹார்க்கமான ரத்னங்களாலே செய்த அழகிய மாடங்களினுடைய திரளாலே நெருங்கி தெற்கில் திக்குக்கு திலகம் போலே இருக்கிற குட்ட நாட்டுத் திருப் புலியூரில் நின்று அருளின ஆச்சர்ய பூதனான அவனுடைய பிரசாத்துக்கு பாத்திரம் ஆனாள் யாக வேணும்-

—————————————————————

நிகமத்தில் இப்பத்தையும் கற்றவர்கள் -இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுரூபமான  நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை பண்ணப் பெறுவார் -என்கிறார் –

நேர்பட்ட  நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

இப்பாட்டுக்கு -எம்பெருமான் இஜ் ஜகத்துக்கு ஸ்வாமி யாய் நேர் பட்டாப் போலே -அடிமைக்கு நேர்படுவதும் செய்து -தாஸ்ய பர்யவசமான பூமியிலே நின்ற ஆழ்வாருடைய உக்தியான  வாய்த்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி  நேர்பட்டவர்கள்-சர்வேஸ்வரனுக்கு  அடிமை செய்ய நேர்பட்டார் –

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: