திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-9-

கீழில் திருவாய் மொழியிலே முதல் இரண்டரைப் பாட்டாலே அவன் பிரசாதத்தாலே அவனுடைய ஸுந்தர்ய ஸுசீல்யஅதிகளை அனுபவித்து
அவற்றோபாதி விலஷணமுமாய் அநந்யார்ஹமுமாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தை குறைப் பாட்டுக்களாலே அனுசந்தித்து இனியரானார் –
அந்த சேஷத்வ ரசத்தால் ப்ரீதராய் -ப்ரீதி பாரவஸ்யத்தாலே-தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையை பிராப்தராய் ஸ்வ தசையை
அந்யாபதேசத்தாலே பேசி இனியராகிறார் -ப்ரீதியில் அந்யாபதேசம் உள்ளத்து இத்திரு வாய் மொழியே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –
திருப் புலியூரில் எம்பெருமானோடே இயற்கையிலே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி அவனாலே அபஹ்ருத சிந்தையாய்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப்படில் வாழ கில்லேன் -என்று இருக்கிற இவள் படியை உயிர் தோழியானவள்
இவள் வடிவில் வேறுபட்டாலும் பேச்சில் வேறுபட்டாலும் சம்ச்லேஷம் வ்ருத்தம் என்று அறிந்தாள்
இவை ஒன்றையும் அறியாதே -பதிசம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா -என்கிறபடியே
பிராப்த யவ்வனை என்னும் இவ்வளவே கொண்டு பித்ராதிகள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ புத்திரர்கள் வருவது என்று
நகரத்திலே மண முரசு அறிவிக்க அத்தைக் கேட்ட தோழி யானவள் -ஸ்ரீ பரத ஆழ்வானை நீ ராஜா என்று பண்ணின
தூர்ய கோஷம் செவிப்பட்ட போதே -அவன் பட்டது எல்லாம் பட்டு -இந்த த்வனி பெண் பிள்ளை செவிப்படுமாகில்-
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழாத தன்மை யளாய் இருக்கிற இவளைக் கிடையாது -ஏற்கவே பரிஹரிக்க வேணும்
-அது செய்யும் இடத்தில் -திருப் புலியூர் நாயனாரோடு சம்ச்லேஷம் பிரவ்ருத்தம் யாயிற்று -என்போம் ஆகில்
நம் காவல் சோர்வால் வந்ததாம் -அறிவியாது ஒழியில் இவளை இழக்க வரும் -இனி இவ்வளவில் செய்யலாவது என் என்று பார்த்து
-இவர்கள் தாங்களும் இவளுக்கு வடிவிலே ஒரு வேறுபாடு உண்டு இதுக்கு ஹேது ஏதோ -என்று விசாரியா நின்றார்கள் –
-நாமும் இவர்களோடு நிருபணத்தே இழிந்து -அவ்வழியாலே அறிந்தோமாய் -இத்தை விலக்க வேணும் -என்று நிரூபித்து
-இவள் வடிவு இருந்த படியால் இவளுக்கு திருப் புலியூர் நாயனாரோடு சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்றால் போலே இருந்தது
-அவனுடைய குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள்– நீங்கள் செய்கிறவற்றை தவிருங்கோள் -என்று
அறத்தோடு நிற்கிறாளாய் -இது தர்மம் அல்ல என்ன -ஆனால் நீ சொல்லுகிற திருப்புலியூரில் நாயனாருக்கு இவளுக்கு ஈடான வை லக்ஷண்யம் உண்டாக வேணும் –
அழகும் ஒப்பனையும் ஆண் பிள்ளைத் தனமும் குணவத்தையும் ஐஸ்வர்யமும் உதார குணமும் பிரணயித்தவமும் உண்டாக வேணும்
சமாசாரனாக வேணும் – வேதார்த்த தத்வஞானம் உடையவனாக வேணும் -இவை எல்லாம் உண்டோ என்ன
–அவனைப் பார்த்தால் இவள் அவனுக்கு போராள் என்னும் படி அவன் வை லக்ஷண்யம் -அது கிடக்க அவனோடே சம்ச்லேஷித்தமை இவள் வடிவிலே வியக்தமாம் அடையாளங்களும் உண்டு -ஆனபின்பு அவனுக்கே கொடுக்கப் பாருங்கோள் -என்று அறத்தோடு நின்று அவர்கள் செய்கிறவற்றை -நீங்கள் கேட்க்கிற அளவுள்ள – இவை எல்லாம் குறைவற்ற விஷயம் -இவை ஒன்றுமே இல்லையே யாகிலும்
இவள் தான் அங்கே அநன்யார்ஹை ஆனாள்-நீங்கள் செய்கிற இவற்றை தவிருங்கோள் -என்று -விலக்குகிற தோழி வார்த்தையாய் இருக்கிறது –
-மண விலக்கு-என்பதோர் கிளவித் துறை இது -திருமந்த்ரத்திலே தனக்கும் பிறருக்குமாய் இருக்கும் இருப்பை கழித்து
அநன்யார்ஹா சேஷத்வத்தை சொல்லக் கடவது இ றே -அது இங்குச் சொல்லுகிறது
-கீழில் திருவாய்மொழியில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
இதில் அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வாதந்தர்யமும் அபுருஷார்த்தம் என்கிறது
-ஒரு கன்யகை யானால் ஒருவருக்கேயாய் இருக்கையும் -ஒருவனுக்கே யானால் -பிறர்க்கு உரிய அல்லளாய் இருக்கையும் இ றே ஸ்வரூபம் –

—————————————————————-

எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸுந்தர்யத்தைக் கண்டு அவ் வழகு அல்லது மற்று ஓன்று அறியாதபடி ஈடுபட்டாள் என்கிறாள் -கரு மாணிக்கக் குன்றத்து தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியான் -என்று இருத்தும் வியந்தில் அனுபவித்தத்தை தோழி பேச்சாலே பேசி இனியராகிறார் –

கருமாணிக்க  மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

கருமாணிக்க மலை மேல்-குளிர்ந்து பிரகாசகமாய் -நிரதிசய போக்யமாய் இருக்கும் வடிவு -அனுபவிப்பாருடைய மனஸ் ஸூ க்கு தாப ஹரமாய் -பிரகாசகமுமாய் -அபரிச்சின்ன போக்யமுமாய்-இருக்கை -கறுத்த இருள் நீக்குவதொரு மலை -என்றுமாம் –
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்-தெளிந்த தடாகத்தில் பரப்பு மாற பூத்தால் போலே யாயிற்று -திவ்யயவங்களும் வடிவும் இருப்பது –
திரு மார்பு-திருமார்வுக்குச் சிவப்பு பிராட்டி சந்நிதானத்தாலே
வாய்-அவள் வழி யாலே உறவு பண்ணினார்க்கு அனுகூல பாஷணம் பண்ணும் திருவதரம்
கண் -இன் சொல்லு சொல்லப் புக்கு தடுமாறினால் குறையும் தலைக் கட்டிக் கொடுக்கும் கண் –
கை-அந்த நோக்குக்குத் தோற்றாராய் அணைக்கும் கை
உந்தி-உத்தேச்ய பூமியிலே விழா நின்றால்-நடுவே கால் கட்ட வற்றான யுந்தி –
கா ல் -இவை இத்தனைக்கும் தொற்று விழும் திருவடிகள்
உடை யாடைகள் -அங்கே கிடந்து அனுபவிக்கும் திருப் பீதாம்பரம் -திருக் கமல பாதம் -என்னா -சிவந்தவாடை -என்ன கடவது இ றே –
செய்ய பிரான்-இவ்வவயவ சோபை யுடைய பக்தா நாம் -என்று இருக்குமவன் –
திருமால்-அழகே யன்று -இவளுக்கு ஈடான மேன்மையும் உண்டு -யஸ்ய சா ஜனகாத் மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜ
எம்மான் -இவளுக்கு இவன் போருமோ என்னாத படி வி லஷணனாய் பெற்ற ப்ரீதியாலே என்னாயன் என்கிறார்
செழு நீர் வயல்-குட்ட நாட்டுத் திருப் புலியூர்-அருமாயன்-நீர் வாய்ப்பை யுடைய வயலாலே அலங்க்ருதமான குட்ட நாட்டுத் திருப் புலியூரில் வர்த்திக்கிற பெறுதற்கு அரிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய -திரு அயோத்யையில் உள்ளார்க்கு சக்கரவர்த்தி திரு மகனை போலே யாயிற்று இவனும் –
பேரன்றிப் பேச்சிலள்-பர வ்யூஹ விபவங்களிலே திரு நாமங்களை சொல்லுகிறிலள்-
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–அவர்களோடு ஓக்க தானும் அறியாதாளாய் -தன் வார்த்தையை விசுவசிக்கைக்காக சாதித்து -இதுக்கு என் செய்வேன் -என்கிறாள் -உள்வாய் ப்ரீதிக்கு போக்கு விட்டுச் சொல்கிறாள் –

—————————————————————-

அழகைச்  சொல்லும் காட்டில் சம்ச்லேஷம் வ்ருத்தமாக வேணுமோ -அகம்பன சுக சாரணாதிகளும்-ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபிஷேசித்த-என்றிலர்களோ என்ன -பிராட்டி தான் ஒப்பித்த ஒப்பனைக்குத் தொற்று ப்ரீதியாய் சொல்லுமா போலே யன்றோ இவள் வார்த்தை -என்கிறாள் -அவனுடைய ஆபரண சோபையில் அகப்பட்டாள்  -என்கிறாள் –

அன்னைமீரிதற்  கென் செய்கேன்
அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும்
அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம்
பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ்
திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2-

அன்னைமீரிதற் கென் செய்கேன்-நீங்கள் கற்பித்திலி கோள்-நான் கற்பித்தி லேன் -இதற்கு நான் எத்தைச் செய்வேன் –
அணி மேருவின் மீதுலவும்-துன்னு சூழ் சுடர் நாயிறும்-அழகிதான மேருவின் மேல் சஞ்சரியா நிற்பானுமாய்-காண்கிற அளவன்றிக்கே நெருங்கி சூழ்ந்த தேஜஸ் ஸை யுடைய வி லஷணனான ஆதித்யனும்
அன்றியும் பல் சுடர்களும் போல்-மற்றும் அப்படியே இருக்கிற நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்களும் போலே
மின்னு நீண் முடி-துன்னு சூழ் சுடர் நாயிறு -என்ற திரு அபிஷேகம் –
யாரம்-அஞ்சுடர் மதியம் பூண்டு என்கிறபடியே திருவாரம்
பல்கலன்-அல்லாத திரு ஆபரணங்களும்
தானுடை யெம்பெருமான்-ப்ரீத்யுக்தி – இவ்வம்சம் பொய்யாகாத படி இருந்த என் நாயன் -புன்னை பூம் பொழில் சூழ்-அழகிய புன்னை பொழில் சூழ்ந்த வூர் -அவ் வூரில் சோலை வாய்ப்பை யன்றோ இவள் புகழ்கிறது
திருப் புலியூர் புகழும் இவளே–பிள்ளாய் இவ் வூரில் வாசி எங்கே அறிந்தாள் -அவனுடைய ஆபரண சோபையோ பாதி அவ் வூரில் சோலையும் அவ் வூரிலும் குமிழ் நீருண்டாளாய் தோற்றுகிறது இல்லையோ இவள் வார்த்தையாலே-

—————————————————————–

பர்த்தாரம் பரிஷஸ்வஜே-என்னுமா போலே -அவன் ஆண் பிள்ளைத் தனத்திலே தோற்று-அந்த ஸுர்ய வீர்யாதிகளை பெரும் கிளர்த்தியோடே பேசா நின்றாள் என்கிறாள்  –

புகழும் இவள்  நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப் புலியூர் வளமே–8-9-3-

புகழும் இவள் நின்று இராப்பகல் -நின்று புகழும் வீர வாசி அறிந்து படும் பருவம் அன்றிக்கே இருக்கிற இவள் -கேட்டார் வாய் கேட்டு ஒரு கால் சொல்லி விட்டாளோ -அஹோராத்ரம் நின்று வாய் புலற்றா நின்றாள்
புகழும் -நெஞ்சால் மதித்து விட்ட அளவேயோ -வ்ரீளை குடிபோய் விட்டு புகழ்கிறிலளோ
பொரு நீர்க்-கடல் தீப் பட்டு –திரைக் கிளர்த்தியாலே அலை எறிகிற நீரை யுடைய கடல் நெருப்பு கொழுந்தி
எங்கும்திகழும் எரியோடு செல்வது ஒப்ப
–பரப்பு மாறி கொண்டு ஜ்வலியா நின்ற எரியோடே கூட நடந்து செல்லுமா போலே –
புகழும் பொரு படை யானசெழும் கதிர் ஆழி முதல்- ஏந்தி-ஹேதிபி ஸ்வேத நாவத்பிரு தீரித ஜயஸ்வநம் -என்கிறபடியே திவ்யாயுதங்கள் தான் அவனைப் புகழா நிற்கும் -என்று ஆளவந்தார் நிர்வாஹம் –
சத்ரோ ப்ராக்க்யாத வீர்யஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்கிறபடியே கையும் ஆயுதமும் பொருந்தி இருந்த படி என் -என்று சத்ருக்கள் புகழும் படியை சொல்லுகிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் -பொரு படை -யுத்தோத்யுக்தமான ஆயுதம் – செழும் கதிர் -மிக்க தேஜஸ் ஸை யுடைய திரு வாழி முதலான திவ்யாயுதங்களை ஏந்தி
போர் புக்கு-அசுரரைப் பொன்றுவித்தான்-சாயுதனாய் யுத்தத்தில் புக்கு -துஷ் ப்ரக்ருதிகளை முடித்தான் -பொன்றுவிக்கை -முடிக்கை
திகழும் மணி நெடு மாடம் நீடு-திருப் புலியூர் வளமே–உஜ்ஜவலமான மணிகளை யுடைத்தாய் -ஓங்கின மாடங்களை யுடைத்தாய் -கால்பாவதியான திருப் புலியூரில் அழகைப் புகழும் –வளம் -அழகு -எதிரிகளுக்கு கிட்ட ஒண்ணாமைக்கு அவன் தான் வேண்டா -அவ் வூரே அமையும் என்கை -திரு அயோத்தியை போலேயும் -அயோத்யா அபராஜிதா -என்கிற பரமபதத்தையும் போலே யாயிற்று இவள் இவ் வூரை நினைத்து இருப்பது –

——————————————————————-

வெறும் ஆண் பிள்ளைத் தனமே அன்றிக்கே -குணவானாய் ஆபத்சகனாய் -இருக்கிறவனுடைய குணாதிக்யத்திலே இவள் ஈடுபட்டாள் என்கிறாள் –

ஊர்  வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே–8-9-4-

ஊர் வளம் கிளர் சோலையும்-ஊரில் அழகு எல்லாம் தன்னைக் கண்ட போதே தோற்றும்படியான சோலை -என்னுதல் -ஊருக்குச் சிறப்பாய் சோலைக்கு உள்ளே நன்மைகள் எல்லாம் யுடைய சோலை -என்னுதல் –
கரும்பும்-பெரும் செந்நெலும் சூழ்ந்து-வயல் அடங்க கரும்பும் -அதுக்கு நிழல் செய்யும் செந்நெலும் சூழ்ந்து கிடக்கும் –
ஏர் வளம் கிளர்-ஏரால் யுண்டான அழகை யுடைத்தான -என்னுதல் -ஏரியினுடைய சமுதாயத்தைச் சொல்லுதல் -அதாவது உழுவது நடுவதாய் செல்லா நிற்கை –
தண் பணைக் குட்ட-நாட்டுத் திருப் புலியூர்-மருத நிலம் என்னுதல் -அழகிய நீர் நிலம் என்னுதல் -மருதம் என்றதால் வயலைச் சொன்னபடி
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்-தேவ பிரான்-குணங்களின் நன்மை அடங்கச் செயலில் தெரியும் படி சகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து நோக்கி வெளிநாடு காண உமிழ்ந்த அயர்வறும் அமரர்கள் அதிபதி -தன் மேன்மை பாராதே உபமிக்கிரமிக்குவன் என்கை
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்-திரு நாமத்தின் அழகை சொல்லுதல் /திருநாமங்கள் அடங்க என்னுதல் /குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை பெரிய கிளர்த்தியோடே யன்றோ இவள் சொல்லுகிறது -நாம் திருநாமம் சொல்லுகிறாப் போலேயோ-கடலோதம் கிளர்ந்தால் போலே யன்றோ இவள் சொல்லுகிறது -அப்படி அல்லது வேறு ஒன்றை சொல்ல மாட்டுகிறிலள்
இன்று-இவள் தனக்குத் தான் முன்பு உண்டா
இப் புனை இழையே–திரு நாமத்தை சொல்லக் சொல்ல ஒருபடி பூண்டால் போலே யன்றோ இருக்கிறது –

————————————————————–

கீழில் ஸுந்தர்யம்  ஒப்பனை ஆண் பிள்ளைத்தனம் குணவத்தை இவை  நாமும் பேசுகிறிலோமோ  -இவளும் அவ்வோபாதி பேசினாளானால் ஆகாதோ என்ன -இவள் வடிவு இருக்கிறபடி கண்டோமுக்கு அவன் ஐஸ்வர்ய குணத்தில் ஈடுபட்டு சம்ச்லேஷம் வ்ருத்தமாயிற்று என்கிறாள்-

புனையிழைகள்  அணிவும்
ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்
தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி
அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

புனையிழைகள் அணிவும்-பூணக் கடவ ஆபரணங்களை பூண்டு இருக்கிற படியும் –நாம் பூட்டினவாய் இருக்கச் செய்தே அப்படி குறிக்கோள் உண்டாய் இருந்ததோ
ஆடையுடையும் -கூறை யுடையும் -முகத்தலை பார்த்து -உடுத்தத்தாயோ இருக்கிறது
புது கணிப்பும்-முன்பு உள்ளவற்றுக்கு பிறந்த வாசி இன்றிக்கே இவள் வடிவிலே பிறந்த புதுமைகளும்
நினையும் நீர்மையதன்றுஇவட்கிது நின்று நினைக்கப் புக்கால்–நின்று நினைக்கப் புக்கால்—-நினையும் நீர்மையதன்றுஇவட்கிது-உபக்ரமித்து விடுகை அன்றிக்கே காலம் எல்லாம் ஆராயப் புக்காலும் இவளுக்கு பிறந்த அழகுகள் நினைக்கப் போகாது -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை பரிச்சேதிக்கிலும் இவள் படி பரிச்சேதிக்க நிலம் அன்று -இவை எல்லா வற்றாலும் நீ பரிச்சேதித்த அம்சம் ஏது என்ன -அப்பன் திருவருள் மூழ்கினளே
சுனையினுள் தடந்தாமரை மலரும்-பொய்கை களிலே தாமரை மலரும் -பொய்கை களில் தாமரை கண் செறி இட்டால் போலே பூத்து மலர்ந்து நிற்கும் வூர் -அவ் வூரில் பதார்த்தங்கள் பிறர்க்கு இடம் கூடாது என்கிறாள் –
தண் திருப் புலியூர்-முனைவன் மூவுலகாளி-அவ் வூருக்கு பிரதானம் -அவ்வளவு அன்றிக்கே ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்
அப்பன் -ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய
திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

——————————————————————-

இவளுடைய வடிவில் வேறுபாடு -லீலா விநோதத்தாலும் இவள் பருவத்தாலும் பிறவாதோ என்னில் -எம்பெருமானுடைய உதார குணத்தில் அகப்பட்ட அவனோடே சம்ச்லேஷித்தமைக்கு அடையாளம்  வ்யக்தமாக உண்டு என்கிறாள் –

திருவருள்  மூழ்கி வைகலும்
செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்
தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

திருவருள் மூழ்கி வைகலும்-அநேக காலம் அவன் பிரசாதத்திலே அவகாஹித்து நாம் கண்டத்தை அறியும் இத்தனை அன்றோ -எதிர் சூழல் புக்கு எத்தனை காலம் யுண்டு செல்லுகிறது என்று அறிந்தோமோ –
செழு நீர் கண்ண பிரான்-சிரமஹரமான வடிவையும் சீலத்தையும் யுடையவன் -அவன் தனக்கு சர்வஸ்வம்மான வடிவிலும் குணத்திலும் அகப்பட்டமை தோற்றி அன்றோ இருக்கிறது
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள-அவன் விஷயீ காரங்களையும் பெற்றமைக்கு அடையாளம் வ்யக்தமாக உள -நீ இது என் கொண்டு அறிந்தாய் என்ன –
திருவருள் அருளால் அவன் சென்று-சேர் தண் திருப் புலியூர் திருவருள் கமுகு -குணாகுண நிரூபணம் பண்ணாதே விஷயீ கரிக்கை யாகிற ஸ்வ பாவத்தை உபகரிக்கைக்காக -அவன் தானே சென்று பொருந்தும் சிரமஹரமான வூர் / திருவருள் கமுகு-என்று சில உண்டு -நீரால் வளருமது அன்றிக்கே பிராட்டியும் தானுமாக கடாக்ஷிக்க அதுவே நீராக வளருமவை
ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–ம்ருது ஸ்வ பாவையான இவளுடைய அதரம் செவ்விப் பழம் போலே இரா நின்றது –இவளுடைய அதரம் அவ் வூர்க்காய் யன்றோ இருக்கிறது –

———————————————————

அருள் என்று ப்ரஸ்துதமான உதார குணத்தளவு அன்று -பிரணயித்தவம் பார்த்தாலும் ஸ்த்தாவர பர்யந்தமாக வாசல் காக்கும் என்கிறாள் –
தன் பக்கல் அடங்காமல் அவ் வூரில் ஸ்தாவரங்களும் கூட வெள்ளம் கோத்து அவையும் கூட பரஸ்பர சம்ச்லேஷ ஏக தாரகமாய் இருக்கிற படியே பெருகுகிற இவனுடைய பிரணயித்தவ வெள்ளத்திலே மூழ்கினாள் என்கிறாள்-

மெல்லிலைச்  செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே–8-9-7-

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க-மிருதுவான இலையை யுடைத்தாய் ஸ்ரத்தையோடக் கூடித் தன்னை கமுகுக்கு முற்றூட்டாகக் கொடுக்கும் ஸ்வ பாவமான கொடி தழுவ
வீங்கிளந்தான் கமுகின்-கொடி தழுவ தழுவ வலரா நின்று ஒரு காலைக்கு ஒரு கால் இளகா நின்றுள்ள தாளை யுடைய கமுகு -யஸ்ய ஜா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத்தேஜ -என்னும் நியாயத்தாலே -ததவ் பாஹு லதாம் ஸ்கந்தே கோபீ மது நிகாதின –
கமுகின் மல்லிலை மடல் வாழை-கமுகோடே கூடின பெரிய இலையையும் மடலையும் யுடைய வாழை -வெற்றிலை கொடிக்கும் கமுகுக்கும் வெய்யில் படாமல் நிழல் செய்கிற வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து-வாழைகள் ஈன்ற நெருங்கின பழத் தாறுகளை காற்று விளைவது அறியாமையாலே வந்து புகுந்து பரிமளத்தில் லோபத்தாலே பல கால் சூழ வந்து பரிமளத்தை ஏறட்டு கொண்டு
புல்லிலைத் தெங்கினூடு-காலுலவும் -செறிவின் மிகுதியாலே நெருங்கின இலையை யுடைய தெங்கின் உள்ளே யுலாவா நின்றது -விளைவது அறியாதே புகுந்து பரிமளித்த வாழைச் சோலையிலே நெருக்குப் பட்டு அல்பம் அவகாசம் உள்ள தென்னஞ்சோலையிலே புறப்பட்டு போக்கடி அற்று சஞ்சரியா நின்றது –புல்லிலை -புல்லப்பட்ட இலை -அந்யோன்யம் தழுவப் பட்ட இலை என்றுமாம் -வாழையிலையோடே தழுவின இலையையுடைய தெங்கு என்றுமாம் –
தண் திருப் புலியூர்-தெங்கும் கமுகும் வாழையுமான சோலை நெருக்கத்தாலே சிரமஹரமான திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் -நிரவதிகமாய் அழகிதான சம்பத்தை யுடைய கிருஷ்ணன்
தாள் அடைந்தாள்-பிரணயித்தவ குணத்திலே தோற்றுத் திருவடிகளை பற்றினாள்
இம் மடவரலே–இம் முக்தையான பெண் பிள்ளை -முன்பு எனக்கு பவ்யையான இவள் என்னால் விலக்க ஒண்ணாத தேசத்திலே போய்ப் புக்காள்-

—————————————————————–

திருப் புலியூரில் எம்பெருமானுடைய வ்ருத்தவத்தையால் இவள் வசீக்ருதை யானாள்-என்கிறாள் -கர்மணை வஹி சம்சித்திம் ஆஸ்த்திதா ஜநகாதய -என்று குடிப் பிறப்பாலே வ்ருத்த ருசி யுடையவள் ஆகையால் பிரணயித்தவத்தில் காட்டில் இவள் ஆசாரத்திலே இறே வசீக்ருதையாவது –

மடவரல்  அன்னை மீர்கட்கு
என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர்
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே–8-9-8-

மடவரல் -மட வந்தபடி -இவள் எனக்கு பவ்யை யான படியை -பற்றிற்று விடாதபடியை என்றுமாம் –
அன்னை மீர்கட்கு-என் சொல்லிச் சொல்லுகேன் -என் கையில் காட்டித் தந்த உங்களுக்கு என்ன பாசுரத்தை இட்டுச் சொல்லுவேன் -எனக்கு பவ்யை என்னவோ -நானும் கூட்டு என்னவோ -என்னைக் கடந்தான் என்னவோ –
மல்லைச் செல்வ-மிக்க சம்பத்தை யுடையராய்
வடமொழி மறை வாணர்-வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்-சம்ஸ்க்ருத பாஷையும் வேதங்களும் தாங்கள் இட்ட வழக்காய் வ்யாஸ பாதம் செலுத்த வல்ல ப்ராஹ்மணர் ஸமாராதன ரூபமான யாகங்களில் ஹோமம் பண்ணின நெய்யால் ஜ்வலித்த அக்னிகளினின்றும் புறப்பட்ட மிக்க புகையானது –
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்-வ்யவசத்தித ஸ்வபாவமான ஆகாசத்தில் தேவ லோகத்தை மறைக்கும் -வைமா நிகர்க்கு அப்சரஸ் ஸூ க்களுக்கு முகம் பார்க்க ஒண்ணாத படி மறைக்கும்
தண் திருப் புலியூர்-இப்படி சமாசார ஸ்ரீ யை யுடைய வூர் -சங்கரஸ் யசகர்த்த ஸ் யா முப ஹந்யா மிமா ப்ரஜா–என்று இ றே இவன் தன் படி
படவர வணையான் தன் நாமம் அல்லால்-பரவாள் இவளே–ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசித பணனான திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனுடைய திரு நாமம் அல்லது வாய் புலற்றுகிறிலள் -நான் அருகே இருக்க சம்ச்லேஷ தசையில் படுக்கை அழகையே வாய் புலற்றா நின்றாள் -தோழி என்று சம்போதிக்கில் அன்றோ இவளை என் வசம் ஆக்குவது –இவளே -என்னை ஒழிய வேறு ஒன்றை ப்ரவர்த்திக்க அறியாத இவள்-

———————————————————–

நிஷ்டிதம் சர்வ சாஸ்திரேஷூ  சர்வ வேதேஷூ நிஷ்டிதம் -என்கிற இக்குலத்தில் பிறந்தவளுக்கு சத்ருசமான வேதார்த்த தத்வ ஞானம் யுண்டாக வேண்டாவோ என்ன -சாம வேத பர ப்ரப்ருத்ய சேஷ வேதார்த்த தத்துவ ஞானதையை பரவா நின்றாள் என்கிறாள் –

பரவாள்  இவள் நின்று இராப்பகல்
பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-

பரவாள் இவள் நின்று இராப்பகல்-இவள் அடைவு கெட பேசா நின்றாள் -இராப்பகல் பேசா நின்றாள் -இதுக்கு வேறு பிரமாணம் தேட வேணுமோ -இவள் யுக்தியே அன்றோ பிரமாணம் –
பனி நீர் நிறக் கண்ணபிரான்-குளிர்ந்த நீர் போலே இருக்கிற திரு நிறத்தையும் அப்படியே குளிர்ந்த சீலத்தையும் யுடையவன் –
விரவாரிசை மறை வேதியரொலி-வேலையின் நின்று ஒலிப்பவிரவி -எங்கும் ஓக்க பரம்பி -/ஆர்ந்து -மிக்கு இருந்துள்ள /-ஸ்வரத்தை யுடைத்தான வேதம் என்னுதல் /-விரை என்று போக்யதையாய்/ –வார் என்று அதில் மிகுதியாய்/ –இசை மறை என்று சாம வேதம் -என்னுதல் -/வேதியர் ஒலி-வேத கோஷமும் வேதார்த்த விசாரமும் பண்ணுவாருடைய கோஷமும் / வேலையில் நின்று ஒலிப்ப -சமுத்திர கோஷத்தில் காட்டில் நின்று கோஷிக்க –
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்-தீவிகை நின்றலரும்-முதலை மிக்கு இருந்துள்ள தடாகம் தோறும் —கரவு -முதலை / தாமரைக் கயம் -தாமரை பெருமை –தாமரைத் திரள் -தடவும் கயவும் நளியும் பெருமை -என்ன கடவது இ றே / தீவிகை நின்றலரும்-– நிலை விளக்கு எரியுமா போலே அலரா நின்றன –
புரவார் கழனிகள் சூழ்-புரவார்ந்து இருக்கை யாவது -தலைத்தரப் பெருக்காய் இருக்கை —திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–வேத கோஷமும் வேதார்த்த விசார யுக்தர் கோஷமும் -அலர்ந்த தாமரை பொய்கைகளாலே அலங்க்ருதமான வயலுமான திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் நின்று இராப்பகல்-

—————————————————————-

அவன் பெருமைக்கு இவள் தான் அவன் தரம் அன்று -அது ஒழிய உங்களுக்கும் இசையை வேண்டும்படியான வ்யக்தமான அடையாளங்கள் உண்டு என்கிறாள் –

அன்றி  மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே–8-9-10-

அன்றி மற்றோர் உபாயம் என்-இவள் அம்தண் துழாய் கமழ்தல்-வேறு மற்று உபாயம் உண்டோ -இவள் அழகியதாய் குளிர்ந்து இருக்கிற திருத் துழாய் நாறுகைக்கு -ராஜ புத்ரனை அணையாதார்க்கு மாளிகைச் சாந்து நாறுமோ -என்னுடம்பு திருத் துழாய் நாறா நின்றதோ -ஸ்வாபதேசத்தில் –அம் தண் துழாய் கமழ்தல்-என்கிறது அங்கீ கார ஸூ சகமாய் இருக்கிறது –
குன்ற மா மணி மாட மாளிகைக்-கோலக் குழாங்கள் மல்கி-மலை போலேயாய் -மஹார்க்கமான ரத்னங்களால் செய்த மாடம் என்ன -மாளிகை என்ன -இவற்றினுடைய தர்ச நீயமான திரள்களாலே இடை பாழ் அற நெருங்கி -க்ருஹகாடாமவிசித்ராம் -என்னுமா போலே
தென் திசைத் திலதம் புரை-குட்ட நாட்டுத் திருப் புலியூர்-நின்ற மாயப் பிரான் -தெற்கில் திக்குக்கு திலகம் போலே இருக்கிற குட்ட நாட்டுத் திருப் புலியூரில் நின்று அருளின ஆச்சர்ய பூதன் -அவனுக்கு இவள் போராள் -என்னும் படி குணாதிக்கண் -இவளுக்கு அவன் போரான் என்று அன்றோ நீங்கள் இருக்கிறது -அவனுக்கு இவள் போராள் என்று அன்றோ அவ் வூரார் வார்த்தை –
திருவருளாம்-இவள் நேர் பட்டதே–அவன் பிரசாத்துக்கு சத்ருசமான பாத்ரமானவளாக வேணும் –அன்றி மற்று ஓர் உபாயம் என் -இவள் அம்தண் துழாய் கமழ்தல்

—————————————————————–

நிகமத்தில் இப்பத்தையும் கற்றவர்கள் -இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுரூபமான  நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை பண்ணப் பெறுவார் -என்கிறார் –

நேர்பட்ட  நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்-நாயகன்-குறைவற்ற மூவுலகுக்கும் நேர்பட்ட நாயகன் -த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யான் நாத வத்தரம்-என்று ரஷ்யத்தின் அளவன்றிக்கே இருக்கிற ரக்ஷகத்வ துடிப்பு -இத்தால் நாயகன் படி சொல்லிற்று -மேல் இவர் தம் படி சொல்லுகிறது –
தன்னடிமை-நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்-தொண்டன் சடகோபன்-அவன் சேஷித்வத்துக்கு எல்லை யானால் போலே இவர் சேஷத்வத்துக்கு எல்லை யான படியும் -சொல்-நேர்பட்ட தமிழ் மாலை- ஆயிரத்துள் இவை பத்தும்-நேர்பட்டார்-அவர்-அந்த வாஸ்யத்துக்கு தகுதியான யுக்தி வாய்த்த தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இத் திருவாய் மொழி நேர் பட்டவர்கள் –
நேர்பட்டார்-நெடுமாற்கு அடிமை செய்யவே–சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய நேர் பட்டார் -இவர் பாசுரத்தை சொன்னவர்கள் -இவருடைய வ்ருத்தியிலே அந்வயிக்கப் பெறுவார்கள் -என்கை -சர்வேஸ்வர ஸ்வரூபத்தையும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் -ப்ரதிபாதகமான பிரபந்த வை லக்ஷண்யத்தையும் -இத்தை அப்யசித்தாருடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: