திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-3–

கீழில் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டிலே -ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஓப்பான் -என்று
எம்பெருமானுடைய திரு அழகை மிகவும் அனுசந்தித்த ஆழ்வார் -தாம் பட்ட கிலேசத்தை மறந்து
-யாரேனும் அர்த்தித்ததுவே வ்யாஜமாகக் கொண்டு தம்தாம் பிரயோஜனங்கள் அல்லது அறியாது இருப்பாரும்
-மத்யஸ்தரும் -சத்ருக்களுமேயாய் -தன் பக்கல் பரிவுடையார் ஒருவரும் இன்றிக்கே இருக்கிற சம்சாரத்திலே
அத்யந்த ஸூ குமாரனான தான் தன்னில் காட்டிலும் ஸூ குமாரமான பரிகரங்களில் காட்டிலும்
பலகாலும் சம்சார சஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி –அவ்வவ காலங்களில் அர்த்திகளுடைய
அர்த்தி தங்களை பூரிக்கைக்காக தனியே உலாவி நிற்பது -அவ்வளவு அன்றிக்கே கோயில்கள் தோறும்
க்ருஹங்களிலும் நித்ய சந்நிஹிதன் ஆவது -தான் இப்படி தனிமைப் படா நிற்க இவனுடைய ஸுகுமார்யம் அறிந்து
பரியக் கடவார் ஒருவரும் இல்லை – நான் உதவப் பெருகிறிலேன் என்று -இவர் பீதராக -தனக்கு
-முமுஷுக்களும் முக்தரும் நித்ய சித்தரும் நமக்கு பரிகையே யாத்திரையாக இருப்பவர்கள் அன்றோ
-நமக்கு தான் சிலர் பரிய வேண்டி இருக்கிறதோ என்று சர்வேஸ்வரன் தன் சக்திகளைக் காட்டி
சமாதானம் பண்ண ஸமாஹிதராய் ஹ்ருஷ்டர் ஆகிறார் –சர்வேஸ்வரனுக்கு பரிகைக்கு தமக்கு கூட்டாவார் இல்லை என்று
தம் தனிமைக்கு வெறுக்கிறார் என்றும் சொல்லுவர்கள் -நித்ய ஸூ ரிகள் பகவத் அனுபவத்தில் அந்நிய பரர்-சம்சாரிகள்
சப்தாதி விஷயங்களில் அந்நிய பரர் ஆதல் தங்களுக்காக அவனை அம்புக்கு இலக்காக்குதல் செய்வார்கள் ஆதல்
-ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இன்றிக்கே இருக்கிற தனிமைக்கு வெறுக்கிறார்
-சேஷ வஸ்துவுக்கு சேஷியே ரக்ஷகன் என்னும் வெளிச் சிறப்பு அறிவுக்கு முதல் அடி -சேஷ வஸ்துவாகில் சேஷிக்கு-அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமதாகையாலே-அவன் ரஷ்யன் நாம் ரக்ஷகர் என்னும் அளவும் செல்ல அறிகை -உள்ளபடி ஸ்வரூபத்தை யுணருகை யாவது –

——————————————————————

அவன் ஸுகுமார்யத்தை அனுசந்தித்து பரிகை இன்றிக்கே அவனை தங்களுக்கு இஷ்ட பிராப்தி சாதனம் என்று ஐஸ்வர் யாதிகளை  ஷேபிக்கிறார்-

அங்கும்  இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அங்கும் இங்கும் -மேல் லோகங்களிலும் பூமியிலும் -எங்கும் -அனுக்தமான பாதாள லோகங்களிலும் -/ வானவர் -அநுகூலர்கள் /தானவர் -பிரதிகூலரான அஸூரர்கள் / யாவரும்-இரண்டு வகையான மநுஷ்யாதிகளும்
இனையை யென்றுன்னை -உன்னை இனைய என்று -சர்வ சேஷியான உன்னை இப்படிப்பட்டவன் என்று -நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று -இவர் திரு உள்ளத்திலே அவன் ஸுகுமார்யமே உறைத்தாயிற்று இருப்பது -கருமுகை மாலையைப் போலே இ றே இவர் நினைத்து இருப்பது
அறியகிலாது -அறியாதே –பரிவதற்கு அறியாமைக்கு -அனுகூலரான தேவர்களோடு -பிரதிகூலரான அஸூரர்களோடு-இரண்டும் கலசின மனுஷ்யரோடு -வாசியில்லை -அவனைப் பரிய -கண்டவர்கள் எல்லாரும் என்று -இருக்கிறார் யாயிற்று இவர்
அலற்றி-யஸ் சர்வஞ்ஞா –பரா அஸ்ய சக்தி –என்று உன்னுடைய ரக்ஷகத்வத்துக்கு உடலான வசனங்களை கதறா நிற்பார்கள் -உன்னை ரஷ்யன் என்று அறியா அறியார்கள்
இதுக்கு மேல் ஸுகுமார்யத்தையும் அழகையும் சொல்லுகிறது –
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்–பூ மகள் மண் மகளாய் மகள்-அங்கம் சேரும்-அவனை ஆஸ்ரியைக்காக புருஷகாரமாக பிராட்டிமார் உண்டு என்பார்கள் -நகச்சின் ந அபராத்யதி -என்பாரும் -குற்றத்தை உணருகிறது என் பொறுக்கும் அத்தனை அன்றோ என்பாரும் -முதலிலே குற்றம் காண ஒண்ணாத படி ஸ்வ போக்யதையை முன்னிடுவாரும் அங்கே உண்டு என்பார்கள் -வடிவாய் உன் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –என்று அச்சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணுவார் இல்லை –
சங்கு சக்கரக் கையவன் —கையும் திருவாழி யுமான அழகை அனுபவிக்க இழிவார் இல்லை -நம் விரோதிகளை துணிக்கைக்கு கையிலே திவ்யாயுதங்களை யுடையவன் என்பர் -வடிவார் சோதி வலத்து உறையும்-என்று அச்சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ண வேண்டி இ றே இருப்பது –
என்பர் சரணமே-அபிமத சாதனம் என்பார்கள் -அபிமதம் என்று அறிவார் இல்லை -ஸூ குமாரமான விஷயம் என்று அறிவார் இல்லை -முந்தானை ஏற்றல் -எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்குதல் செய்யும் அத்தனை –

———————————————————-

அஸ்திரத்வாதி தோஷ யுக்தமான ஐஸ்வர்யத்தை விட்டு -நித்யாத்ம அனுபவ காமரான கைவல்ய நிஷ்டரை இகழ்கிறார்-

சரணமாகிய  நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
த்ரை குண்யா விஷயா வேதா -என்கிறபடியாலே ஐஸ்வர்ய தத் சாதனங்களை பிரதிபாதிக்கிற பூர்வ பாகத்தில் இழியாதே மோக்ஷத்தை உபதேசிக்கிற -வேதாந்த பாகத்தில் புகுர நின்று -சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து -சரீர சம்பந்தத்தை மாய்த்தோம்-அத்தனை அன்றோ நாமும் செய்தது -என்று ஷேபிக்கிறது –
சரணமாகிய-ஐஸ்வர்ய தத் சாதன விஷய ஞான சாதனமான / நான்மறை நூல்களும்-சதுர்வேதம் ஆகிற சாஸ்திரங்கள் -வேதசாஸ்திர விரோதி நா -என்ன கடவது இ றே /மரணம் தோற்றம் -ஜென்ம மரணங்கள் /
வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்-பிரபல வியாதி ஜரை தொடக்கமான ஷட் பாவ விகாரங்களை மறுவலிடாத படி கழித்து கொண்ட அத்தனை இ றே நாமும் செய்தது –பூஜா வசனம் ஷேபத்தாலே
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி-உபகரணங்களை யுடைய பலவகைப்பட்ட சத்ரு சேனை நிச்சேஷமாக ஓடும்படி ஜ்வலியா நின்ற திரு வாழி என்னுதல் -கரண க்ராமம் விஷயங்களின் நின்றும் நிச்சேஷமாக பற்று அற ஓடும்படி கனலா நின்றுள்ள திரு வாழி என்னுதல்
அரணத்திண் படை ஆஸ்ரிதர்க்கு அரணாய் சத்ருக்களுக்கு பேதிக்கு ஒண்ணாதாய் இருக்கை / திண் படை -ஈஸ்வரன் விடிலும் ஆஸ்ரிதரை விடாதே என்றுமாம்
ஏந்திய ஈசற்கு –திரு வாழி யை ஏந்துகையாலே சர்வேஸ்வரன் ஆனவனுக்கு / –ஆளாகாயே -இவர்கள் ஆளாகையாவது என் என்னில் -பகவத் பிராப்தி காமனோ பாதி பகவத் பஜனமும் அந்திம ஸ்ம்ருதியும் உண்டாகையாலே சொல்லுகிறது –ஆளாயே —மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்–

——————————————————————-

அவர்களை விட்டுத் தம்முடைய பக்தியில் இழிகிறார்-பிரயோஜ நான்தர பரருக்காக தன் வாசி அறியாதே எதிரிட வல்ல சம்சாரத்திலே தனியே வர்த்தியா நிற்கும் -அங்குத்தைக்கு ரக்ஷையாக நான் உதவப் பெறுகிறி லேன் என்கிறார் –

ஆளுமாளார்  ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

ஆளுமாளார் -உபய விபூதியிலும் பரிகைக்கு ஓர் ஆளில்லை -தனியே ஒருத்தரை ஆள வேணும் என்று இருக்கிறார் -நித்ய ஸூ ரிகள் பகவத் அனுபவத்தில் அந்நிய பரர் -சம்சாரிகள் சப்தாதி விஷய பரர்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது
தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ -நிரூபகங்கள் ஆனவை சுமையோ என்ன -அது தானே செய்கிறது –
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ –
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-என்கிறது பரிவரான நீர் இவற்றுக்கு ஆள் அன்றோ என்று தம்மை ஏவுகைக்காக –
தாளும் தோளும்-நடக்கும் போதும் நடைச் சக்கரவத்து பிடிக்க வேண்டும்படி யாயிற்று மாறிவிடும் திருவடிகள் இருப்பது –அக்ரத பிரயயவ் ராம -என்ன கடவது இ றே -அத்தையும் வீசும் தோள்களையும்
கைகளை யாரத் -தன்னைப் பிரிந்து உறாவிக் கிடக்கிற கைகளை -ஆர -வயிறு ஆர உண்ண -என்பாரைப் போலே
தொழக் காணேன்-தொழ காணப் பெறுகிறிலேன் -தொழுகை என்றும் பரிகை என்றும் பர்யாயமாயிற்று இவர்க்கு -நமஸ் -சப்தத்தால் எனக்கு அன்று -அவனுக்கே என்று இ றே சொல்லுகிறது -தொழுகையும் நம என்கையும் பர்யாயம் இ றே
நாளும் நாளும் நாடுவன்-அவன் தனிமையை அனுசந்தித்து -அவனுக்கு என் வருகிறதோ –என்று நாள் தோறும் ஆராயா நிற்பான் -/ நாளும் நாளும் -சம்பந்தம் நித்யமானால் தத் கார்யமான பரிவும் நித்யமாகக் கடவது இ றே
அடியேன்-ஸ்வரூப ஞானம் உடைய நான் -சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷ வஸ்துவுக்கு ஸ்வரூபம் என்று அறிந்த நான்
ஞாலத்தே–பரம பதத்தில் இருந்து அஸ்த்தானே பய சங்கை பண்ணுகிறேனோ -அஸ்திர பிரயோகம் பண்ணுவார் -நாகபாசத்தை இட்டுக் கட்டுவார்-அழைத்து வைத்து மல்லரை இட்டு வஞ்சிக்க தேடுவார் -பொய்யாசனம் இடுவாராகிற தேசத்திலே இ றே வர்த்திக்கிறது –

—————————————————————-

ஞாலத்தே நாளும் நாளும் நாடுவன் என்றார் -அந்த சம்சாரத்திலே வடதள சயனத்தில் பிறந்த ப்ரமாத சயனத்தை அனுசந்தித்து பீதராகிறார் -நீர் இங்கனம் கிலேசப் படுகிறது என் பிரளய ஆபத்தில் சர்வ ரக்ஷகன் ஆனவன் அன்றோ நான் -என்ன -சர்வ ரக்ஷக வஸ்துவோ பிரளயத்தில் அகப்பட்டது என்று பீதராகிறார் என்றுமாம் –

ஞாலம்  போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-

ஞாலம் போனகம் பற்றி -பரப்பை யுடைத்தான பூமியை திரு வயிற்றிலே வைத்து -சாத்மிக்கும் சாத்மியாது -என்று அறியாதே இத்தை செய்வதே -வெண்ணெயும் சாத்மியாது என்று இருக்குமவர் இ றே
ஓர் முற்றா வுருவாகி-அதுக்கு அடி இவனுடைய சைஸவம் என்கிறார் -வெண்ணெய் அமுது செய்து அருளுகைக்கும் கீழே இ றே இந்நிலை -யசோதா ஸ்தாநந்த்யத்துக்கும் கீழே இ றே இருப்பது இந்த முக்த்த்யம்-பிரளய ஆபத்தில் வரையாதே ரஷித்த சர்வ ரக்ஷகத்வமும் அக்கடிதகடனா சாமர்த்தியமும் இவர் நெஞ்சில் பட்டது இல்லை -ஸுகுமார்யமே யாயிற்று இவருக்கு தோற்றி இருப்பது -அங்கு ஒரு தொட்டிலிலே கிடைக்கப் பெற்றது -இங்கு ஒரு பவனான ஆலிலையில் யாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது
ஆலம் பேரிலை -ஆலிலை என்று பேர் மாத்திரம் ஆனதில் என்னுதல் -விபரீத லக்ஷணை யாய் -சிற்றிலை என்னுதல்
அன்ன வசம் செய்யும் -உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளும் -கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -என்கிறபடியே பண்ணும் வியாபாரம் அடைய இதிலே பண்ணா நின்றான் -தனக்கு சாத்மி யாத பூமியை அமுது செய்கையும் -சாத்மி யாது என்று அறியாதே முக்தனாகையும்-பிரளயத்தில் அல்ப அவகாசமான ஆலிலையில் கண் வளர்ந்து அருளுகையும் -அதிலே வ்யாபரிக்கையும் -இது எல்லாம் பயஸ்தானமாய் யாயிற்று இருக்கிறது இவருக்கு
அம்மானே-சர்வ ரக்ஷகன் ஆனவனே -ஒரு கா புருஷனுக்கு வந்தது அன்றிக்கே சர்வ ரக்ஷகன் ஆனவனுக்கு வந்த பிரமாதம் என்று இதுவும் பயஸ்தானம் ஆகிறது இவர்க்கு
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் -உன் தனிமையை அனுசந்திக்க ஒரு க்ஷணத்தில் நின்றும் க்ஷணாந்தரத்திலே பேரும் சந்தி மாத்திரம் மஹா அந்தகாரமான கல்பமாய்க் கொண்டு நெடுகா நின்றது எனக்கு
உன்-கோலம் காரெழில் -உன்னுடைய கறுத்த எழிலான கோலம் என்னுதல் -மேகத்தினுடைய எழில் போலே இருந்துள்ள அழகு என்னுதல்
காணலுற்று ஆழும் கொடியேற்கே–மங்களா சாசனம் பண்ணுகைக்கு உன்னுடைய வடிவு அழகைக் காண ஆசைப் பட்டு பெறாதே மிகவும் நோவு படுகிற மஹா பாபியான எனக்கு -ஒரு காலத்திலே முடியாதே நித்தியமாய் இருபத்தொரு பயம் அனுவர்த்திக்கும் படியான பாபத்தை பண்ணினேன் -சம்சார பயம் அவன் காலிலே குனியத் தீரும் -ரக்ஷகனுக்கு என் வருகிறதோ என்கிற பயத்துக்கு முடிவில்லை –

——————————————————————-

பிரளய ஆர்ணவத்தில் தனியே கண் வளர்ந்து அருளின இடத்திலே பயம் தீர நிர் பயமாய் பரிவர் உண்டான திருக் கோளூர் திருப்புளிங்குடி தொடக்கமான இடங்களிலே கண் வளர்ந்து அருளுகிற படியை இவர் பய நிவ்ருத்திக்காக காட்டிக் கொடுக்க -அது தானும் பய ஹேது என்கிறார் –

கொடியார்  மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

கொடியார் மாடக் கோளூரகத்தும்-கொடி மிக்க மாடங்களை யுடைய திருக் கோளூரிலும் சத்ருக்கள் கிடந்த இடம் அறிந்து அபசரிக்கும் படி கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேணுமோ -கம்ச பயத்தால் பிறர் அறியாதபடி வளர்ந்தால் போலே இருக்கலாகாதோ-
புளிங்குடியும்-இதுவும் ஒரு பய ஹேது -பல இடங்களிலே படுக்கை படுகிறது சிரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்
மடியாது -இடம் வலம் கொள்ளாதே பாடோடும்படியாக என்னுதல் –மாடி என்று சோம்பாய்-சோம்பாதே என்னுதல் -அதாகிறது அவன் நமக்காக கிடக்கிறான் என்று அறிந்து பரிகைக்கு ஒருத்தரை பெற்றிலோம் என்று கிடை இளகாது ஒழிகை -/இன்னே -கிடந்ததோர் கிடக்கை என்னும் அத்தனை ஒழிய பாசுரம் இடப போகாது இருக்கை
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்-அவிகாரியாய் இருக்கிற நீ ஒருபடியே கண் வளர்ந்து அருளி -அத்தாலே இனியையாகைக்கு ஹேது என் -இவன் முகத்தில் தெளிவுக்கு அடி முன்னே ஒரு சிரமம் உண்டாகை இ றே -சிரமம் உண்டாய் இருப்பார்க்கு உறங்க உறங்க முகம் தெளிவுறக் காண்கையாலே -இங்கும் இத்தெளிவுக்கு அடி சிரமம் என்கிறார் –
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ -திருவடிகளில் சரணம் புகுந்த இந்த்ராதிகளுக்காக ராவணாதிகளை அழிய செய்து அவர்கள் துக்கங்களை கெடுத்த இளைப்போ
அன்றேலிப்-படி தான் நீண்டு தாவிய வசவோ –அன்றிக்கே -அன்றே பிறந்து அன்றே வளர்ந்து ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு காடுமோடையும் அளந்து கொள்ளுகையாலே திருவடிகள் நொந்தோ
பணியாய் -தோள் நொந்தோ-திருவடிகள் நொந்தோ அருளிச் செய்யாய் -தோள் நொந்தது எனில் தோளை பிடிக்கவும் திருவடிகள் நொந்தது எனில் திருவடிகளை பிடிக்கவும் அருளிச் செய்யாய் -பாவஞ்ஞராய் அகவாயில் ஓடுகிறது அறிந்து அது செய்கையை அன்றியே பணியாய் என்கிறது என் என்னில் -சொல்லும் போதை ஸ்வர சாதம் கொண்டு ஓடுகிற தசை அறிந்து பரிஹரிப்பாராக -உகந்து அருளின நிலங்களிலும் செய்ய முடியாதது இல்லை -சொல்ல முடியாமை இருக்கிறான் அத்தனையோ என்று இருப்பார் இ றே –

——————————————————————

ரக்ஷகனைக் குறித்து இப்படி அஞ்சக் கடவீரோ -என்ன நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் தசையிலும் அஸ்த்தானே பய சங்கை பண்ணி பரிய விருக்கும் அவன் அவ்வடிவோடே சம்சாரத்திலே வந்து உலவா நின்றால் அஞ்சாதே செய்வது என் -என்கிறார் –

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

பணியாவமரர் -வேறே சிலரை பணிய சம்பாவனை இல்லாத நித்ய ஸூ ரிகள் -முன்பு அஸேவ்யர் காலிலே குனிந்து ஒரு நாளிலே அனுகூலித்து-அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று அனுதபித்து -பின்பு அவன் காலிலே குனிந்தவர்கள் அல்லர் –
பணிவும் பண்பும் தாமேயாம்-அவர்கள் பணிவுக்கும் ஞானாதி குணங்களுக்கும் தாமே விஷயமாய் இருக்குமவர்
அணியாராழியும் சங்கமுமேந்தும் -சர்வ ஆபரணமும் தானேயாகப் போரும் படியான திவ்யாயுதங்களை தரித்து நித்ய ஸூ ரிகளுக்கு காட்சி கொடுத்தால் அவர்களுக்கும் அஸ்த்தானே பய சங்கை பண்ண வேண்டும்படி இ றே இருப்பது -அவர்களுக்கும் நான் பட்டது பட வேண்டி இருக்கும்
அவர் காண்மின்-அவர் கிடீர் பய ஸ்தானத்தில் வருகிறார் -தமக்கு ஒரு பிரயோஜனத்துக்குத் தான் வருகிறாரோ
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான்-உலகில் தணியா வெந்நோய் தவிர்க்கைக்காக –தணியா வெந்நோய் -ஒரு நாளும் தணியாதே தாபத்ரயாதிகள்
திரு நீல-மணியார் மேனியோடு -நீல மணி போலே சிரமஹரமாய் ஸூ குமாரமான வடிவோடே -இங்கே வர வேண்டினால் அவ்வடிவைக் கொண்டு வர வேணுமோ
என் மனம்-அந்த ஸூ குமாரமான வடிவோடே சம்சாரத்தில் உலவா நின்றான் என்று அறிந்த என் மனசானது
சூழ வருவாரே--சுழன்று வரும் படி வருகிறவர் –தணியா வெந்நோய் –தவிர்ப்பான் -உலகில் -வருவார் என்றுமாம் –

——————————————————————–

இங்கே வந்து திருப் பரிசரத்திலே எழுந்து அருளி இருக்க நான் உதவப் பெறாதே அவசன்னன் ஆனால் ஓர் அடியானும் உளன் என்று அவனுக்கு அறிவிப்பாரையும் பெறுகிறி லோம் என்கிறார் –

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

வருவார் செல்வார் –திரு நகரியில் நின்றும் திருப் பரிசாரத்திலே மஹா பாதகமாய் இசங்கா நிற்கும் -ஸ்வ காரியத்தால் த்வரித்து போவாரை நம் தசையை அங்கே அறிவிக்க போகிறார் என்றும் -அங்கு நின்று இங்கே வருவாரே நம்மை அழைக்க வருகிறார் என்றும் இருப்பர் -இயக்கம் அற்று இருக்கிறதன்று கிடீர்
வண் பரிசாரத்து இருந்த -திருப் பரிசாரத்தில் இருப்புக்கு மங்களா சாசனம் பண்ண வேணும்
என்-திரு வாழ் மார்வற்கு-அதுக்கு மேலே பிராட்டியோட்டை சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ண வேணும் -பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்ற இளைய பெருமாளை போலே தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் படி யாயிற்று இங்குத்தை இருப்பு
என் திறம் சொல்லார் -என் இடையாட்டம் ஒருவரும் சொல்லுகிறிலர்கள்
என்-திரு வாழ் மார்வற்கு-என் ஸ்வாமி நி சந்நிதி யாகையாலே சொன்ன வார்த்தை விலை செல்லும் கிடீர்
செய்வதென்-இதற்கு என்னால் செய்யலாவது என் –அங்கு சென்றால் சொல்லும் பாசுரம் என் என்னில்
உருவார் சக்கரம் சங்கு சுமந்து-அழகு மிக்கு இருந்துள்ள ஆழ்வார்களை சாதரமாக தரித்து என்னுதல் -திரு மேனிக்கு எல்லாம் வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமாக போரும்படியான ஆழ்வார்கள் என்னுதல் -இங்கு -ஒரு நாடாக பரியும் தேசம் இ றே அது -பரிவாரும் இன்றிக்கே இருக்கும் தேசத்திலே
உம்மோடு-ஒருபாடு உழல்வான்-இடைவிடாதே ஒரு பார்ஸ்வத்தை பற்றி திரிவான் -ஒரு பார்ஸவத்துக்கு இளைய பெருமாள் உளர் இ றே
ஓரடியானும் உளன் என்றே–அநந்ய பரனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -ச மஹாத்மா ஸூ துர் லப-என்று கை வாங்கி இருப்பர் –ஒருவன் உளன் என்று என் திறம் சொல்லார் -செய்வது என் –

——————————————————————-

பிறரை விடீர்-உன் திருவடிக் கீழ் பரிகைக்கு நிலையாளாக என்னை கொள்வது என்று என்று அவன் தன்னையே கேட்க்கிறார் –

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

என்றே -உம்முடைய கார்யம் செய்கிறோம் என்ன -அது தான் என்று -என்கிறார்
என்னை -உனக்கு பரிந்து அன்றி உளனாகாது இருக்கிற என்னை
உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்-உன் அழகு மிக்க ஒப்பனை திருந்தின திருவடிகளின் கீழே -மங்களா சாசனம் பண்ணி அல்லது நிற்க ஒண்ணாத திருவடிகள் என்கை –
நின்றே ஆட்செய்ய -தேஹிமே தாதாமித-என்று பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே -விடாதே நின்று அடிமை செய்ய
நீ கொண்டருள-நான் கிடந்தானை கண்டு ஏறுகை அன்றிக்கே அடிமை செய்வான் என்று திரு உள்ளத்திலே கொண்டு அருளி
நினைப்பது தான்-நின்றே ஆடச்செய்ய -நினைப்பது தான் -அவன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -அபி நிவேசம் அப்ரயோஜம் என்று இருக்கிறார்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்-நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே–
வண் பரிசாரத்து இருந்த என்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு தனக்கே பரிய வேண்டி இருக்க -அதி மானுஷமான செயல்களை செய்தால் மங்களா சாசனம் பண்ணியே நிற்க வேண்டாவோ -சப்த குல பர்வதம் என்ன -சப்த த்வீபம் என்ன -அவற்றைச் சூழ்ந்த சப்த சமுத்திரம் என்ன இப்படி ஏழு வகைப் பட்ட பூமியை அடைய நின்ற நிலையிலே நின்று அளந்து கொள்ளும் படி நீண்ட திருவடிகளை உடையையாய் கையும் திரு வாழி யுமான ஸ்ரீ யபதியே-சங்க சக்ராதி திவ்யாயுத தரனாய் -ஸ்ரீயப்பதியாய் வைத்து காடுமோடையுமான பூமியை ஸூ குமாரமான  திருவடிகளைக் கொண்டு அளந்துள்ள சிரமம் தீர சிசிரோபசாரம் பண்ணப் பெறுவது என்று காண் -என்கை -அரியன செய்ய வல்ல நீ நான் உன் திருவடிகளைக் கிட்டி அடிமை செய்யும் படி  நினைத்து அருள வேண்டும் என்றுமாம் –

———————————————————————

நமக்கு பரிய ப்ரஹ்மாதிகள் உண்டாய் இருக்க நீர் இங்கனம் அஞ்சுகிறது என் -என்ன -அவர்கள் உன் ஸுகுமார்யம் அறிவார்களா என்கிறார் –

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

திருமால் -திருமாலே -என்று சம்போதிக்கிறார் -நீயும் பிராட்டியுமான சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ண வல்லவர்களோ அவர்கள் –
நான்முகன் -ஸ்ருஷ்டிக்கு உறுப்பான பல முகங்களை யுடையனாய் -அதிலே அந்நிய பரனானவன்-
செஞ்சடையான் -சாதக வேஷம் தோற்ற நிற்கிற ருத்ரன் -தன் அபிமத லாபத்தில் அந்நிய பரன் –
என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை -சர்வேஸ்வரனான உன்னுடைய ஸுகுமார்யத்தை
யார் அறிகிற்பார்-யார் அறிகிறவர்-அந்நிய பரராய் இருக்கிறவர்கள் உன் ஸுகுமார்யத்தை அறிவார்களா –அநந்ய பரரானால் தான் தேவருடைய ஸுகுமார்யம் சிலருக்கு அறிய நிலமோ
பேசியென்-சொல்லி என்ன பிரயோஜனம் உண்டு -அவர்களை பரிவர் ஆக்கவோ -உன் ஸுகுமார்யத்தை பரிச்சின்னம் ஆக்கவோ –பரிகைக்கு நீர் உண்டே என்ன -நானும் செய்வது இவ்வளவு அன்றோ -என்கிறார்
ஒரு மா முதல்வா -வி லக்ஷணமான பரம காரணம் ஆனவனே
ஊழிப் பிரான் -கால உபலஷித சகல பதார்த்தங்களும் ஸ்வாமி யானவனே
என்னை யாளுடை-கருமா மேனியன் -புறம்பே அந்நிய பரனான என்னை அநந்ய பரனாம் படி பண்ணின வடிவு அழகை உடையவனே
என்பன் -இவ்வளவு இ றே என்னளவு -சர்வ நிர்வாஹகனாய் -வடிவு அழகாலே என்னை சேர்த்துக் கொண்ட இது இ றே என்னை கலங்கப் பண்ணிற்று –
காதல் கலக்கவே—என் ப்ரேமமானது நான் அஞ்சும் படி கலங்கப் பண்ணி -உன் வடிவு அழகிலும் மேன்மையிலும் கலங்கிச் சொன்னேன் இத்தனை போக்கி உன் ஸுகுமார்யத்தின் எல்லை கண்டு சொன்னேன் அல்லேன் -ப்ரேமாந்தரனாய் சொன்னேன் இத்தனை போக்கி நெஞ்சு ஒழிந்து சொன்னேன் அல்லேன் -பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகள் பரிவும் உனக்கு சத்ருசம் அன்று -ப்ரேமாந்தனான என்னுடைய பரிவும் உனக்கு சத்ருசம் அன்று என்றதாயிற்று-

—————————————————————-

நம் ஸுகுமாரியாதிகளை அனுசந்தித்து பரிவராய் நமக்கு ரக்ஷகராய் இருப்பார் அநேகர் உளர் -ஒருவர் பரிய வேண்டாத படி நான் பெரு மிடுக்கன் என்று அவன் அருளிச் செய்ய -அத்தை அனுசந்தித்து பயம் கெட்டு ஹ்ருஷ்டர் ஆகிறார் –

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

கலக்கமில்லா நல் தவ முனிவர் -தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்
கரை கண்டோர்-முக்தர் –
துளக்கமில்லா வானவர்-முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூ ரிகள் /-துளக்கம் –சலனம் -அதாகிறது -சங்கோசம் -/
எல்லாம் தொழுவார்கள்-முமுஷுக்களும் -முக்தரும் -நித்யசித்தருமான இவர்கள் எல்லாம் அடிமை செய்கிறவர்கள் -அடிமை செய்கையாவது ஸ்வாமிக்கு அதிசயத்தை பண்ணுமது ஆகையால் மங்களா சாசனம் இ றே –
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை-மஹா தத்துவமான கடலை ஷூபிதமாம் படி கடைந்த பெரு மிடுக்கனை -பரியுமவர்கள் தாங்களும் குழை சரக்காம் படி பெரு மிடுக்கன் -என்கை –
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–அவன் படியை நேராக அறியாத நாம் பரிவிலே இழிந்து முடிய பேசப் புக்கது என் செய் தோம் ஆனோம் -சொல்லி கோளே -முன்பு தன் மிடுக்கை காட்டின இடங்களிலே அத்தை பிரதிபத்தி பண்ணாதே அது தன்னை சொல்ல இப்போது ஸமாஹிதர் ஆயிற்று -இப்பிரபந்தம் தலைக்கட்ட கடவதாகையாலே யாதல் -ஈஸ்வரனுடைய ஜீவநாத்ருஷ்டத்தால்-

——————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி வல்லார் எம்பெருமானுடைய தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்திலே பிறவார் என்கிறார் –

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

உரையா வெந்நோய் -வாசா மகோசரமாய் அதி குரூரமான நோய் -தம்மளவில் சாத்மிக்கை அன்றிக்கே-உபய விபூதி யுக்தனுக்கு என் வருகிறதோ -என்று அஞ்சின நோய் இ றே
தவிர அருள் -இது போம்படிக்கு ஈடாக அருளும் ஸ்வ பாவனான உபய விபூதி நாதனை –
நீண் முடியானை--இவ் வாழ்வார் உடைய பயம் தீர்ந்த பின்பாயிற்று உபய விபூதிக்கும் ரக்ஷகனாய் சூடின முடி நிலை நின்றதாயிற்று
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்உரையேய் சொல் தொடை ஓராயிரத் துள்-இவர் பயம் நிவ்ருத்தம் ஆனவாறே சம்ருத்தமுமாய் ஸ்திரமுமாய் யாயிற்று திரு நகரியும்-உக்தியாய் சேர்ந்த சொல் தொடையை யுடைத்தாய் வி லக்ஷணமான ஆயிரம்
இப்பத்தும்-நிரையே வல்லார்-இப்பத்தை அடைவு தப்பாமல் அப்யஸிக்க வல்லார் -தமக்கு பிறந்த கலக்கத்தாலே இதில் இழிவாருக்கும் அடைவு பட அனுசந்திக்க ஒண்ணாது என்று இருக்கிறார்
நீடுலகத்தப் பிறவாரே–பூமிப் பரப்படைய அநுஸந்தித்தால் -பரப்பேயாய் -சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடையாதே இத்தேசத்திலே பிறவார்கள்-ஒரு நாடாக மங்களா சாசனம் பண்ணுகிற தேசத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: