திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-2—

சம்சாரத்தோடு பொருந்தாத படி தன் பக்கலிலே மிகவும் ஆபி முக்கியத்தை பிறப்பித்த படியை அனுசந்தித்து தரித்த ஆழ்வார்
-இவ்வவசானத்திலும் அவன் வந்து விஷயீ கரியாது ஒழிகைக்கு காரணம் சம்சாரத்தில் சங்கம் நிச் சேஷமாக போகாமை என்று பார்த்து
-நாம் அறியாமே எம்பெருமான் அறிய ஏதேனும் சம்சாரத்தில் பற்று உண்டாகிலும் அத்தை விட வேணும் என்று அத்யவசித்து –
அதில் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்
-எம்பெருமானோடே விஸ்லேஷித்து மிகவும் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி -அவனைப் பெறாமைக்கு காரணம்
தோழிமார் தொடக்கமான பரிகரங்களில் உண்டான சங்கலேசமாக வேணும் என்று பார்த்து -அவற்றில் நசை யற விட்டு
அவனைக் காணப் பெறாமையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவளைக் கண்டு இவளுடைய தோழிமாரும் தாய்மாரும் மிகவும் விஷண்னைகளாய்-
உனக்கு ஓடுகிற வியஸனம் என் -என்று கேட்க -என்னுடைய தசை பேச நிலம் அன்று -நீங்கள் என்னை அலைத்து உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்று சொல்லி
குலத்திலும் பந்துக்கள் பக்கலிலும் ஸ்வ சரீரத்திலும் தன்னுடைய அபிமானாதிகளிலும் மற்றும் தன்னுடைய பரிகரங்களிலும் உண்டான நசை ஆற்றேன் –
அதுக்கு அடியாக அவனாலே அபஹ்ருத சிந்தையும் ஆனேன் -என்று அவர்களைக் குறித்து சொல்லுகிறாள்
-இவள் தானே எம்பெருமானை அபிசரித்து அபேக்ஷிதம் பெறாதே நோவு படுகிறாள் ஒருத்தி –

—————————————————————–

எம்பெருமானை ஆசைப்பட்டு அவன் உகந்து அருளின இடங்களிலே சென்றும் அபேக்ஷிதம் பெறாமையாலே மிகவும் அவசன்னையாய் இருக்கிற இப்பிராட்டியை தோழிமாரானவர்கள்-யுகாவாதார் எதிர் அன்றோ லஜ்ஜிக்க வேண்டுவது -எங்களுக்கு லஜ்ஜிக்க வேணுமோ -உனக்கு ஓடுகிற தசையைச் சொல்லு -என்ன -அவர்கள் எதிர் லஜ்ஜித்து சொல்லாதே உங்களுக்கு சொல்லாமல் வார்த்தை பார்த்த இடத்திலும் ஒன்றும் காண்கிறிலேன்-என்கிறார் –

நங்கள் வரி  வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

வரி வளை யாயங்கள்-தோழிமார் / ஏதலர்-சத்ருக்கள் /
பிரதிகூலருக்கு பயங்கரமான த்ருஷ்ட்டியை யுடைய பெரிய திருவடி மேலே ஏறி யருளி வந்து என்னை அடிமை கொண்ட திருவேங்கடமுடையானை காண ஆசைப்பட்டு -அவன் இருந்த இடத்தில் போய் அபேக்ஷிதம் பெறாமை மிகவும் நோவுபட்டு வளைகள் கழன்றன -ஒளி இழந்தேன் -பூர்ணமான முலைகளும் விரஹ வியசனத்தாலே விவர்ணமாய் நானும் தளர்ந்தேன் -வியஸனம் உங்களுக்கு சொல்ல வேண்டா -என் வடிவிலே தெரியும் என்று கருத்து -அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்றால் போலே -அநவாப்தியாலே –வெங்கட் பறவை -என்கிறாள் காணும் –

—————————————————————-

உனக்கு அத்யந்தம் அந்தரங்கைகளாய் இருக்கிற எங்களுக்கு உன்னுடைய நோவு சொல்லலாகாததும் உண்டோ -என்ன -என் துக்கத்தின் மிகுதியாலே உங்களுக்குச் சொல்லும் பாசுரம் அறிகிலேன் என்கிறாள் –

வேண்டிச்  சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

ஏதேனும் ஓன்று என்னை வந்து அர்த்தித்தாலும் அது பெறும் வரிசையை யுடைய தோழிமாரான உங்களுக்கு காகிலும்-சென்று -என்றது வந்து என்றவாறு –
படுகிற துக்கத்தை உங்களுக்கு சொல்ல வேண்டாத படி நோவாட்டியான நான் இப்போது இது சொல்லும் படி அறிகிறிலேன் -எப்போதும் காண வேண்டும்படி ஸ்ப்ருஹணீயமான திருக் கண்களைக் காட்டி என்னுடைய ஆத்மாத்மீயங்களை  அபகரித்து -அயர்வறும் அமரர்களை அடிமை கொண்டால் போலே நம்மை அடிமை கொண்டவனை கண்டிடில் அவன் பக்கலிலே திரண்ட வளையும் நிறைவும் கொள்கைக்காக எத்தனை காலம் துக்கப் படக் கடவேன்-

——————————————————————-

நாங்கள் சொல்ல விட்டிலையே யாகிலும் நீயே இளைத்து விடுகிறாய் இ றே -என்ன நித்ய கால தத்வம் முடியிலும் நான் அவனைக் கண்டு அல்லது விடேன் -என்கிறாள் –

காலம்  இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

உனக்கு லஜ்ஜை இல்லையோ -என்று தோழிமார் சொல்ல -நெடும் காலம் சம்ச்லேஷ அர்த்தமாக சென்றாகிலும் –நீலமாய் -விகசியாய் நின்றுள்ள மிக்க ஒளி சூழ்ந்து பெருத்த முகில்  நிறத்தை யுடைய கிருஷ்ணன் இவ் வழகைக் காட்டி அபஹரித்துக் கொண்ட அழகிய வளையும் மாமையும் கொள்ளுகைக்காக ஜகத்தெல்லாம் அறியும் படி பழி சுமந்தேன் -இனி லஜ்ஜித்து என்ன பிரயோஜனம் உண்டு –

————————————————————————–

உன் துணிவு இதுவாக எல்லாவற்றையும் இழக்கிறாய் இ றே -என்று தோழிமார் சொல்ல பண்டே எல்லாம் இழந்தோம் இ றே என்று யதா மநோ ரதம் சம்ச்லேஷிக்கப் பெறாமையாலே சொல்லுகிறாள் –

கூடச்  சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

இப்பாட்டுக்கு -நல்ல மாடங்களையும் கொடியோடு கூடின மதிள்களையும் உடைய தெற்குத் திக்கில் யுண்டான திருக் குளந்தையில்-விலக்ஷணமான மேல் பார்ஸ்வத்திலே நின்று அருளுவதும் செய்து -சர்வேஸ்வர வாஹனம் என்னும் ஹர்ஷத்தாலே ஆடா நின்றுள்ள பெரிய திருவடியால் வஹிக்கப் படுவதும் செய்து -போரிலே வெல்லும் திரு வாழியை  வளத்திலே யுடைய நாயக் கூத்தனை ஆதரித்து சம்ச்லேஷிக்கச் சென்று என் அழகிதான வளை நெஞ்சு தொடக்கமாக எல்லா வற்றையும் நிச்சேஷமாக இழந்து -அவனையும் குண ஹானி சொல்லக் கடவ ஸ்த்ரீகள் எதிரே என்னுடைய ஸ்த்ரீத்வ பிரகாரமான குணாதிகளை இழந்தேன் -இனி எத்தைக் கொடுப்பேன் –

————————————————————–

அறியவும் எட்டவும் அரிதான நிலத்தை ஆசைப் பட்டு அதுக்கு துக்கப் படுகிறாய் என்று தோழிமார் சொல்ல -அவன் எத்தனையேனும் விசஜாதீயனாய் துர்ஜ்ஜேயனாய் இருந்தானே யாகிலும் -அவனை ஆஸ்ரயிக்கையும் அவனாலே விஷயீ கரிக்கப் படுகையும்  இம்மரியாதை தான் தோற்றி யுண்டாயிற்றோ -இது அநாதி அன்றோ என்கிறாள் –

ஆழி  வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

தோழியர்காள்-சர்வேஸ்வரனை நாம் ஆதரிக்கையும் அவன் நம்மை விஷயீ கரிக்கையும் இவை எல்லாம் நம் அளவதோ –அர்த்த ஸ்திதி ஏதேனுமாய் இருக்க இங்கே இருந்து தோற்றிற்று சொல்லா நிற்கை தான் அரிதோ –
அவன் படியை அனுசந்திக்கப் புகில் அர்த்த ஸ்திதி அழகிதாக அறிய நல்லவர்களுக்கும் கால தத்வம் உள்ளதனையும் கூடினாலும் இப்படிப்பட்டவன் என்று நிலையிட ஒண்ணாதானுமாய் தப்பாமே யகப்படுத்திக் கொள்ளும் விரகுகளை யுடைய தேஜஸ் ப்ரப்ருத்தி அசங்க்யேய கல்யாண குணங்களை யுடையனாய் நிருபாதிகமுமாய் விசஜாதியுமான அழகை யுடைய ஜகத் காரண பூதன் –

—————————————————————

நீ சொல்லுகிறபடி எளியன் அல்லன் -எட்டாதான் ஒருவன் -என்று தோழிமார் சொல்ல -துர்லபனாகிலும் ஸூலபனாகிலும் நம்மை இப்படி நோவு படுத்தினவன் வாசலிலே கூப்பிடாதே நம்மோடு சம்பந்தம் இல்லாதாரையோ  இன்னாதாவது -என்கிறாள் –

தொல்லை  யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

அவனுடைய வை லக்ஷண்யம் பேச்சின் அளவன்று -அதிசயித ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் மிகவும் துர்ஜ்ஜேயமாய் இருக்கும் வை லக்ஷண்யத்தை யுடையனாய் இருந்து வைத்து தன்னுடைய ஸுந்தரியாதிகளை காட்டி என்னை ஈடுபடுத்தினான்-
என்னை இப்படி நோவு படுத்தி வைத்த தான் வந்து சம்ஸலேஷியா விட்டால் -தன்னோடு ஸ்பர்சம் உள்ளவற்றை தந்தாகிலும் என்னை உஜ்ஜீவிப்பிகிறிலன்-என்னை இப்படி நலிந்த இவனைக் கூப்பிடாதே யாருக்கு கூப்பிடுவோம் சொல்லி கோளே -பூம் கொடி படர்ந்த சோலைகளும் வளவிதான வயலும் சூழ்ந்த திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்
குடந்தை-கூப்பீடு கேட்க்கும் படி சந்நிஹிதன் என்று கருத்து –

——————————————————————–

அவனை கண்டு முடிகை அரிது -இத்தை விட வல்லையே -என்று உறவு முறையார் அலைக்க -அவனுடைய ஸுந்தரியாதிகளிலே அகப்பட்ட நான் காலம் எல்லாம் கூடவாகிலும் அவனைக் கண்டு அல்லது விடேன் -தத் விரோதிகளான உங்களோட்டை சம்பந்தம் எனக்கு வேண்டா என்கிறாள் –

மாலரி  கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மாலரி  கேசவன் நாரணன்-சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு-ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்-ஆஸ்ரித விஷயத்தில் மிகவும் வியாமுக்தன் -அவர்களுடைய பிரதிகூலங்களை போக்குமவன் -அவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் விட ஒண்ணாத படி அழகிய திருக் குழலை யுடையவன் -ஆஸ்ரித வத்சலன் -இக்குணங்களுக்கு எல்லாம் அடியாம்படி நீர்மையுடைய பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த பவ்யன் -இங்கனம் இருக்கிற இவன் அத்யந்தம் பரி பூர்ணனான ஸ்ரீ வைகுண்ட நாதன் என்று நிரந்தரமாக கூப்பிடும்படி சமைத்து எனை அசேதனங்களை பொகடுமா போலே பொகட்டுத் தன்னையும் காட்டுகிறிலன்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !-பண்டு போல் நீங்கள் தரித்து இருக்க நான் காண வல்லனே என்று கருத்து -ஆணை -அவன் ஆணை -என்றவாறு-

———————————————————————-

கிளிகள் பூவைகள் தொடக்கமான பரிகரங்களில் தனக்கு உண்டான நைரபேஷ்யத்தை சொல்லுகிறாள் –

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–4-2-8-

இடையில்லை-என் பக்கல் அவகாசம் இல்லை / நம்முடைய மாமை தொடக்கமான பரிகரங்களை நிச்சேஷமாக கொண்டவன் சேரும் பரமபதம் -திருப் பாற் கடல் -திரு மலை -இவ்விடங்களில் செல்லுகையில் ஓர் அருமை இல்லை -இப்போது நமக்கு அரிதாவது என் என்னில் -பாஹ்ய ருசிகள் நிச்சேஷமாக போனால் அல்லது அவற்றைக் காட்டான் –

—————————————————————-

இதுவே துணிவாகில் உன்னையும் உனக்கு உள்ளனவையும் இழக்கிறாய் இறே என்று சொன்ன தாய்மாரைக் குறித்து பண்டே நிறையும் லஜ்ஜையும் இழந்தேன் -இனி எத்தை இழப்பது என்கிறாள் –

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

ஸ்வ யத்னத்தாலே காணப் புகில் எத்தனையேனும் அளவுடையார்க்கும் தன்னைக் காட்டும் ஸ்வபாவன் அல்லன் -மஹா பலியை வஞ்சிக்கைக்காக க்ருத்ரிமமான குறள் வடிவைக் காட்டி  ஸமஸ்த லோகமும் விம்மும் படி வளருவதும் செய்து நீண்டு ஒளியையுடைத்தான பல தோள்களையும் யுடையனாய்  தேவர்களுக்கு  உபகாரகன் ஆவது – கை செயப் பாலது – வேணும் என்று உயிர் பெற பண்ணினால் போலே இருக்கை என்றுமாம் -என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்-இத்துக்கம் அறியாமையால் அழகை யுடையராய் பூரணை களாய் தனக்கு ஹிதம் சொல்லுகிற படியை சொல்லி சம்போதிக்கிறாள்-

——————————————————————-

இங்கனம் செய்யலாமோ -தரித்து இருக்க வேண்டாவோ என்று தோழிமார் சொல்ல -என் நெஞ்சானது என்னை விட்டு போய் எம்பெருமான் அழகிலே ஈடுபட்டது -இனி என்னால் செய்யலாகாது இல்லை என்கிறாள் –

என்னுடை  நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

எனக்கு உறவு  முறையாரான  நிர்துக்கைகளான நங்கைமீர்காள் -இப்படி அவசன்னையான நான் இனி எத்தைச் செய்வேன் -என் நெஞ்சு என்னை எனக்கு அடைவில்லை என்று அகன்று திரு வாழி யையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்  இரண்டு கையிலும் ஏந்திக் கொண்டு பலவாய் தூரமாகச் சென்று – எங்கும் வியாபியா நின்றுள்ள ஒளியை யுடைய ஆதித்யனோடே பேர் ஒளியையும் யுடைய சந்திரனையும் ஏந்தி அழகியதாய் -நீலமாய் -மிகவும் நெடிதாய் -இருபத்தொரு மலை நடந்து வருமா போலே இருக்கிறவனுடைய நாட்பூ போலே இருக்கிற திருவடிகளை சேர்ந்தது –

———————————————————————–

நிகமத்தில் இத்திருவாய்மொழி வல்லார் அவித்யா கர்மாதி சகல  தோஷங்கள் நீங்கி இஹலோக பர லோகங்களில் தாங்களே க்ருத்யக்ருத்யர்  -ப்ரதானர் -ஆவர் என்கிறார் –

பாதமடை வதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

எம்பெருமான் திருவடிகளில் பெறுகையில் யுண்டான ஆசையால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை எல்லாம் விட்டு
தன் திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு புறம்பு உண்டான சங்கங்களை அறுக்க வல்லவனான கல்யாண குணங்களை யுடைய கிருஷ்ணன் திருவடிகளிலே ஆழ்வார் அருளிச் செய்த –
பகவத் குணங்களை ஒழிய கதாந்தர பிரசங்கம் ஆகிற பொல்லாங்கு இல்லாத ஆயிரம் திருவாய் மொழிகளிலும் இத்திருவாய் மொழி வல்லார் –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: