திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-1–

பெரிய பிராட்டியார் தொடக்கமான மகிஷிகளோடும் தனக்கு நித்ய பரிசாரகரான அயர்வறும் அமரர்களோடும் கூடின
நித்ய விபூதி உக்தனாய் -என்றும் தனக்கு ரஷ்யமான ஜகத் விபூதியையும் யுடையவனாய் -தன் விபூதியில் உள்ளார்
எல்லாருக்கும் எல்லாப் படியாலும் ரக்ஷகனாய் -இப்படுத்திகளாலே அத்யந்தம் வி லஷணனுமாய் -பிரிந்தார்க்கு தரிக்க ஒண்ணாத படி
ஸுந்தர்ய உதார குணங்களாலே நிரதிசய போக்யனுமாய் இருந்துள்ள எம்பெருமானை திருவாறன் விளையிலே கண்டு
அடிமை செய்ய வேணும் என்று ஆசைப்பட்டு -அப்போதே தம் அபேக்ஷிதம் பெறாமையாலே மிகவும் நோவு பட்டு –
-தமக்கு பிறந்த தசா விபாகத்தாலே -அவன் ஆஸ்ரிதற்கு அத்யந்த பவ்யன் என்றும் -எல்லார்க்கும் ஈஸ்வரனுமாய் ரக்ஷகனாய்
இருப்பான் ஒருவன் என்றும் இருக்கும் தமக்கு உஜ்ஜீவன ஹேதுவான இந்த ஞானங்கள் பொய்யோ என்று சங்கித்து
அத்தால் மிகவும் அவசன்னரான ஆழ்வாரை எம்பெருமான் -உம்மை சப் தாதி விஷய ப்ராவண்யத்தை தவிர்த்து
-இப்படி நம்மால் அல்லது செல்லாத படி பண்ணினோம் இனி உமக்கு செய்யாதது உண்டோ என்ன
-அத்தை அனுசந்தித்து அதி சங்கையும் தவிர்ந்து தரித்து முடிக்கிறார் –

—————————————————————–

பிரியில் தரிக்க ஒண்ணாத படி நிரதிசய போக்யனான நான் உன்னை நான் காணும் படி க்ருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –

தேவிமார்  ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-
மற்று ஏவ அடிமை செய்யக் கடவார்-அயர்வறும் அமரர்கள் -உன்னுடைய ஆஞ்ஞா அநுபாலனம் பண்ணக் கடவதான பத்தரும் முக்தரும் நித்யருமான -த்ரிவித சேதனரும் ஆளக் கடவ விபூதி –உனக்கு விபூதி என்றால் தகுதியான மூன்று லோகமும் என்றுமாம்
வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்-ஜகத் ரக்ஷணத்துக்கு வேண்டின வேண்டின வடிவு உன் வடிவு –
இங்கனம் ஸூலபனான உன்னை இழக்கைக்கு ஈடான பாபத்தை பண்ணின என்னை நோவு படுத்தா நின்றுள்ள அழகிய திருக் கண்களையும் வி லக்ஷணமான திருப் பவளத்தையும் உடையையாய் -ஒரு காலும் விட ஒண்ணாத பேர் அழகையும் யுடையையாய் -எனக்கு தாரகனான ப்ராணனுமாய் -நிரதிசய போக்யனுமாய் -அபேக்ஷித்தார் அபேக்ஷிதங்களை கடலைக் கடைந்து ஆகிலும் கொடுக்கும் உபகாரகனும் ஆனவனே-

—————————————————————–

என்றும் காண வேணும் என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்போ-என் திறத்து செய்து அருள பார்த்திற்று -ஐயோ இங்கனம் படாமே உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –

காணுமாறு  அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

காணுமாறு அருளாய் என்று நிரந்தரமாக சொல்லா நின்று கொண்டு அந்த தாருண த்வனி வழியே ஹ்ருதயம் கலங்கி -கலங்கின ஹ்ருதயத்துக்கு போக்கு விட்டால் போலே மிகவும் கண்ண நீர் வரும்படி உன்னைக் காணாதே இப்படி துக்கப் படுகைக்கு ஈடான பாபத்தை பண்ணின நான் தேடும் படி எல்லாம் தேடி உன்னைப் பெறாத வ்யசனத்தால் உன்னுடைய திரு நாமங்களை பிதற்றும் படியான இதுவோ நீ எனக்கு பண்ணும் கிருபை
அர்த்திகளுடைய சர்வ அபேக்ஷிதமும் கிடைக்கும் காகுத்ஸத்த குல வம்சத்தில் பிறந்து அருளி -அதுக்கு மேலே அங்கு பெறாதனவும் பெறலாம் படி கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி சபலனான எனக்கு அத்யத்ன சித்த போக்யன் ஆனவனே –
உன்னை ஆசைப்பட்டார்க்கு நிரதிசய போக்யனாய் உன்னை ஆசைப்படுதல்-தன் ஆபத்தை உனக்கு அறிவித்தல் -செய்ய மாட்டாதே இருந்த ஜகத்தை பிரளய ஆர்ணவத்தின் நின்றும் வெறும் உன் கிருபையால் எடுத்த பெரியோனே –

————————————————————-

ஆஸ்ரித ஸூ லபனாய் இருக்கிற நீ இன்று வந்து என் ஆபரத்தை நீக்காது ஒழி யில் -உன் குணமே ஜீவனமாய் இருக்கும் உன்னுடையார் எங்கனம் தரிக்கும் படி என்கிறார் –

எடுத்த  பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

நிதி எடுத்தால் போலே உன்னை எடுத்துக் கொண்ட பாக்யாதிகரான ஸ்ரீ நந்த கோபருடைய நற்சீவனான சிறுவனே –
யசோதை பிராட்டிக்கு வருத்தம் இன்றிக்கே கிட்டவும் செய்து அவர்களுக்கு பேர் இன்பத்தை விளைக்கும் ஸ்வபாவனாய் இடைக் குலத்துக்கு ஆனைக் கன்று போலே சிலாக்யன் ஆனவனே
அடியனேன் பெரிய வம்மானே !-எனக்கு ஓட்ட ஒண்ணாத ஈஸ்வரன் ஆனவனே
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்காக அப்போதைக்கு போக்யமான வடிவை கொண்டு யுத்த கண்டூதியை யுடைய ஹ்ரண்யன் உடைய உடல் இரு பிளவாம் படி -கையுகிர் ஆண்ட அபரிச்சேத்யமான வடிவை யுடைய நீ எனக்கு இப்படிப் பட்ட ஆபத்து வர்த்திக்கும் இன்று எனக்கு துக்கம் தீர வந்து தோற்று கிறி லை-

—————————————————————

ஆஸ்ரிதர் உகந்த ரூப சேஷ்டிதாதிகளையே நீ உகப்புதி–ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி வைப்புதி – என்னும் இவ்வறிவு ஒன்றாலுமே தரிக்கிற நான் அவ்வறிவு பொய்யோ என்று சங்கியா நின்றேன் என்கிறார் –

உமர் உகந்த  உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

பாண்டவர்களுக்காக மஹா யுத்தத்தை பண்ணி மஹா பிருத்வி எல்லாம் வியாபித்து நலிகிற சேனையை முடித்த பெரியோனே -இச் செயலாலே தேவர்களுக்கு இனிமையாய் அஸூரர்களுக்கு நஞ்சாய் எனக்கு தாரகன் ஆனவனேயோ –

——————————————————————

காண்கைக்கு ஈடான சாதன அனுஷ்டானத்தை பண்ணி என்னை வந்து காணீர் என்னில்-நான் யத்னம் பண்ணி வந்து காண்கை என்று ஒரு பொருள் இல்லை -சர்வ நிர்வாஹகானான நீ உன்னை எனக்கு காட்ட வேணும் என்கிறார் –

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

ஆருயிரேயோ -எனக்கு தாரகன் ஆனவனே -கேவல கிருபையால் ஜகத்தின் உடைய ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணின பெரியோனே -ஜல ஸம்ருத்தியைப் பண்ணி அங்கு சய நாதிகளைப் பண்ணிய சீரியோனே -ஐஸ்வர்ய பரி சரணத நாதிகளால் மனுஷ்யரில் காட்டிலும்  தேவர்கள் விலக்ஷணமாய் இருக்குமா போலே அவற்றால் தேவர்களுக்கும் விலக்ஷணமானவனே –

———————————————————————-

கீழில் பாட்டில் சொன்ன பொருளை விஸ்தரிக்கிறார் –

எங்கு  வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

என்னை யாள்வானே-என்னை ஆளுகிறவனே -சர்வ லோகமும் நீ இட்ட வழக்காய் இருந்தவனே -அந்த லோகங்களில் உள்ளார்க்கு சமைந்த தைவமும் அவற்றினுடைய ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களும் அவற்றுக்கு புறம்பு விஸ்திருதமான மஹதாதிகளும் நீ இட்ட வழக்கு –
யின்னே யானால்-இங்கனம் ஆனால் –மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே-கார்ய ஆகாரம் அழிந்து காரண அவஸ்த்தமான ஸூ ஷ்ம பிரக்ருதியும் -அத்தையும் கூட வியாபிக்க வல்ல புருஷனும் நீ இட்ட வழக்கு -பத்த ஜீவ சமஷ்டியும் -முக்தாத்மாக்களும் -என்றுமாம் –

————————————————————–

ஜகத்தடைய உனக்கு சேஷமாய் -அதுக்கு நீயே நிர்வாஹகனாய் இருத்தி என்னும் இவ் வறிவு ஒன்றுமே கொண்டு தரித்து இருக்கிற நான் கர்மத்தால் இதுவும் பொய்யோ என்று சங்கியா நின்றேன் என்கிறார் –

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

காலத்ரய வர்த்தி பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு -இங்கனம் ஆகில் சேஷியாய் இருக்கிற உனக்கு சேஷம் சகல பதார்த்தங்களும்
பால் தொடக்கமாக ஒன்றுக்கு ஓன்று விலக்ஷணமான பதார்த்தங்களை அவனுடைய போக்யதைக்கு சத்ருசமாக சொல்லி -அவன் படிக்கு அவையும் போராமையாலே அது தன்னையே சொல்லுகிறார் –
கறந்த பால்-கறந்த போதை ரசத்தை நினைக்கிறது / சுவையது பயனே-ரஸ அனுபவத்தால் வந்த ஸூகம்
இங்குப் பேசின போக்யதா பிரகர்ஷம் உண்டாய் இருக்க இவருக்கு அப்போதே கிடையாமை அதி சங்கா ஹேது என்று கருத்து –

——————————————————————

ஏதேனும் செய்தாலும்  நீரே யத்னம் பண்ண வேண்டாவோ என்னில் ஆத்மாத்மீயங்கள் அடைய உன்னதாய் எனக்கு என்ன ஒரு உபகரணம் இல்லாமையால் என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை -ரக்ஷிக்க வல்லையுமாய்-ரக்ஷண ஸ்வ பாவனுமான நீயே வந்து என்னை விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார் –

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

அத்யபி நிவிஷ்டனாய்   கொண்டு நப்பின்னை பிராட்டியுடைய திருத் தோள்களை அணைந்த பேராயனே -ஓன்று ஒழியாமே எல்லாரும் என்னை ஈரும்படியான குணங்களை யுடையவனே -இப்போது காணப் பெறாத இன்னாப்பாலே –வல் வினையேன் -என்கிறார் -அசுரர் வங்கியர் கூற்றமே-வன்கையரான அஸூரர்களுக்கு ம்ருத்யுவானவனே –கொடிய புள்ளுயர்த்தாய் !-கண்ட திசையிலே பிரதிபக்ஷத்தை மாய்க்க வல்ல பெரிய திருவடியை கொடியாக யுடையவனே -உன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான ஆயிரம் பணங்களையும் கண் வளர போரும் படி விஸ்தீர்ணமான உடம்பையுடைய திருவனந்த ஆழ்வானை படுக்கையாகக் கொண்டு ரஷ்ய ஜந்துக்களுக்கு அணித்தாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே

——————————————————————–

சகல பதார்த்தங்களும் உனக்கு சேஷமான பின்பும் இந்த ஞானத்தோடு சம்சாரத்திலே இருந்ததோடு வாசி இல்லை யாகிலும் சேஷத்வ ஞான விரோதியான சம்சாரத்திலே இருக்க அஞ்சா நின்றேன் -இதுக்கு அனுகூலமான திரு நாட்டிலே என்னைக் கொடு போக வேணும் என்கிறார் –

யானும்  நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

யானும் நீ தானே யாவதோ மெய்யே-நானும் உனக்கே சேஷம் என்னும் இடம் சத்யம் -/ அரு நரகவையும் நீ -மற்றும் சம்சாரத்தில் உண்டான சேதன அசேதன பதார்த்தங்கள் எல்லாம் உனக்கே சேஷம் -ஆனபின்பு சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருந்ததோடு ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்தில் இருந்ததோடு வாசி என் என்று இப் பொருள் உண்டே யாகிலும் -சகல பதார்த்தங்களும்  உனக்கு சேஷம்  ஆகையால் நானும் உனக்கு சேஷம் என்று உணரும் தோறும் சம்சாரத்தில்  இருப்பை மிகவும் அஞ்சா நின்றேன் -இந்த ஞானம் பரிமாறக் கடவதான திரு நாட்டிலே நிரதிசய ஆனந்தியாய்க் கொண்டு வேறுபட இருந்து அருளின நீ அங்கே எனக்கு உன் திருவடிகளை தந்து அருள வேணும் –

————————————————————-

நான் ஆசைப்பட்ட படியே திருவடிகளை எனக்குத் தந்து அருளின மஹா உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக என்னஆத்மாவை உனக்குத் தந்தேன் என்கிறார் –

தாள்களை  எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

நான் பெற்ற படி பேறு பெற்றார் இல்லை என்னும்படி மிகவும் பரிபூர்ணமாம் படி திருவடிகளை எனக்குத் தந்த மஹா உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக உனக்குத் தரப் புகுகிறது என்று மிகவும் கொண்டாடி என்னாத்மாவை உனக்கே ஸ்வம்மாகத் தந்தேன்
சோதீ-தம்மோட்டை சம்ச்லேஷத்தாலே எம்பெருமானுக்குப் பிறந்த உஜ்ஜ்வல்யம்
தம்மைத் தரிப்பிக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த புஷ்கல்யத்தை பேசி -உன்படி இருந்த படி என் என்று கொண்டாடுகிறார் –
தமியனேன் பெரிய வப்பனே -உன்னைப் பிரிந்து தனிமைப் பட்டு நோவு படுகிற எனக்கு உன்னைக் காட்டி அருளி உன்னுடைய குணங்களிலே அதிசங்கை பண்ண -அவ்வதிசங்கையை போக்கின மஹா உபகாரகனே –

————————————————————–

நிகமத்தில் இத்திருவாய்மொழியில் சொன்ன அர்த்தத்தை எல்லாம் சங்க்ரஹேண சொல்லி இத்திருவாய்மொழி கற்றார்க்கு எம்பெருமானை பெற்று உய்யலாம் என்கிறார்

பெரிய  வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே -முனிவர்க்கு உரிய அப்பனாகை யாவது கேவலம் ப்ரஹ்ம பாவனையே யானவர்களுக்கு தன்னோடு உண்டான அணுமை சொல்கிறது
உலகுக்குகோர் தனியப்பனை தன்னை-என்கிறது லோகத்துக்கு எல்லாம் தனியே நிர்வாஹகன் ஆனவனை /பேணின ஆயிரம் -எம்பெருமானை தான் ஆசைப்பட்டுச் சொன்ன ஆயிரம் – / உரிய சொல் -பகவத் விஷயங்களுக்கு நேரே ப்ரதிபாதிதம் ஆகை-

———————————————————————-

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: