திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-2–

கீழில் திருவாய்மொழி ப்ராபக பிரதானம் -இது ப்ராப்ய பிரதானமாய் இருக்கிறது
-கீழே அவன் குணங்களிலும் ஸ்வரூபத்திலும் அதிசங்கை பண்ணித் தெளிந்து
வணங்குமாறு அறியேன் -என்று தன் தலையில் சாதன யோக்கியதையை தவிர்ந்து
-யானும் நீ தானே யாவதோ மெய்யே -என்று அவன் பக்கல் ந்யஸ்த பரதையை சொல்லி
-இப்படி ப்ராசங்கிகமாக அவனே ப்ராபகம் என்னும் இடத்தை நிஷ்கர்ஷித்தார்-
அவனே ப்ராபகன் என்னும் இடத்தில் பேற்றுக்கு விளம்ப ஹேது இல்லையாய் இருக்க –
அவன் வந்து முகம் காட்டாது ஒழிகைக்கு காரணம் அவன் அறிய சம்சாரத்தில் சங்கம் நிச்சேஷமாக போகாமை என்று பார்த்து –
நாம் அறியாமே அவன் அறிய ஏதேனும் சம்சாரத்திலே பற்று உண்டாகிலும் அத்தை விட வேணும் என்று அத்யவசித்து
சம்சாரத்தில் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் -எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி
அவன் தானே வரக் கண்டு இருக்குமது ஒழிய தன் ஆற்றாமையாலே
தலைமகன் இருந்த தேசத்து ஏறப் போம் இத்தனை என்று அபிசாரிகையாய் புறப்பட்டு போரப் புக தோழிமார் தொடக்கமான பந்துக்கள்
அவன் தானே வரக் கண்டு இருக்குமது ஒழிய
நீ புறப்பட்டு போகை போராது -என்று ஹிதம் சொல்லி நிஷேதிக்க
நமக்கு இவர்கள் பக்கல் உண்டான பற்றாலே நம் பக்கல் அவன் நெகிழ்ந்து இருந்தானாக வேணும் என்று நினைத்து -தனக்கு
தோழிமார் பக்கலிலும் -தாய்மார் பக்கலிலும் -மற்றும் உள்ள பந்துக்கள் பக்கலிலும் -குலத்திலும் ஸ்வ சரீரத்திலும் -ஸ்த்ரீத்வ மரியாதையில்
சங்கம் அற்று இருக்கிற படியை தோழிமாருக்கு அறிவிக்கிற பாசுரத்தாலே
தமக்கு ப்ராப்ய விரோதிகளில் ருசி அற்று இருக்கிற படியை சர்வேஸ்வரனுக்கு அறிவிக்கிறார் –

—————————————————————-

தோழிமாரானவர்கள்-யுகாவாதார் எதிர் அன்றோ லஜ்ஜிக்க வேண்டுவது -எங்களுக்கு லஜ்ஜிக்க வேணுமோ -உனக்கு ஓடுகிற தசையைச் சொல்லு -என்ன -அவர்கள் எதிர் லஜ்ஜித்து சொல்லாதே உங்களுக்கு சொல்லாமல் வார்த்தை பார்த்த இடத்திலும் ஒன்றும் காண்கிறிலேன்-என்கிறார் –

நங்கள்  வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரி வளை -முன்பு உங்களோடு என்னோடு வாசி அற எல்லார்க்கும் உண்டான வளை -ஏகம் துக்கம் ஸூகஞ்சநவ் -என்று ஸூ க துக்கங்கள் ஒன்றாக சொல்லிப் போந்த நீங்கள் அனுஷ்டானத்திலே வந்தவாறே பேதிப்பதே –இப்போது அனுஷ்டானத்தில் பேதம் என் என்னில் -நான் சங்கம் சரிந்தேன் –நீங்கள் வளை கழலாது இருந்திகோள்-வரி வளை-வரியை யுடைத்தான வளை என்கை -இவள் கையில் வளை தொங்காது இருக்க அவர்கள் வளை தரிப்பர்களோ -என்னில் -பிராட்டியை பிரிந்த இடத்தில் பெருமாளின் காட்டில் தம்முடைய காவல் சோர்வாலே வந்தது என்று வியஸனம் இரட்டித்து இருக்கச் செய்தேயும் பெருமாள் தளருவர் என்று தம்முடைய தளர்த்தி தோற்றாத படி இளைய பெருமாள் தரித்து இருக்குமா போலே இவளை தரிப்பிக்கைக்காக வளை தரிப்பர்கள்-
யாயங்களோ-தோழிமாரிலும் தரம் உண்டாய் இருக்க இதில் எல்லாரும் ஒருபடிப் பட்டு இருக்கிறார்கள் —ஆயங்கள் -தோழிமார் -ஓ -விஷாத அதிசய ஸூ சகம் -அவர்களை சம்போதித்து வார்த்தை சொல்லுவதற்கு முன்னே விஷணனை யாகிறாள் -இவ்விஷாத ஹேதுவை புறம்பு உள்ளார்க்கு மறைத்தாலும் எங்களுக்கு சொல்ல வேண்டாவோ –உனக்கு ஓடுகிற தசையை சொல்லாய் என்ன –
நம்முடை ஏதலர் முன்பு நாணிநுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்- நோக்குகின்றேன்-– தோழிமார் ஹிதம் சொல்லி இப்போது மீட்கப் பார்க்கிறார்கள் ஆகிலும் பேறும் இழவும் விழுக்காட்டில் ஒத்து இருக்கையாலே -நம்முடைய ஏதலர் -என்கிறாள் -ஏதலர் -சத்ருக்கள் -இவர்களுக்கு சத்ருக்கள் இல்லை இ றே -ஹிதம் சொல்லி மீட்கப் புகுகிற தாய்மார் யாயிற்று சத்ருக்கள் -ஏதலர் முன்பு நாணி -சத்ருக்கள் முன்பு லஜ்ஜித்து
நுங்கட்கு-தோழிமாரான உங்களுக்கு நான் ஒரு வார்த்தை சொல்ல வேணும் என்று ஆராய்ந்து பாரா நின்றேன் –
எங்கும் காண மாட்டேன்-இதுக்கு ஒரு பாசுரம் இட்டு சொல்ல வேணும் என்று பார்த்த இடத்து ஒருபடியாலும் க்ஷமை ஆகிறி லேன் -மாட்டேன் என்கிறது என் -சிலர்க்கு மறைத்து ஆபத்திற்கு சொல்லத் தட்டு என் என்ன –
சங்கம் சரிந்தன-இத்தை யாருக்கு மறைத்து ஆர்க்கு வெளியிடுவேன் –சங்கம் சரிந்தன-ஜகத் அஸ்தமிதம் -என்றால் போலே இருக்கிறதாயிற்று -அதாவது இவள் கையும் வளையுமாய் இராத அன்று நாயகன் உளனாக மாட்டான் -இருவருமான சேர்த்தியிலே யுண்டாக கடவ உபய விபூதியும் அழியும் -இவன் கையும் வளையுமா இருக்க நாயகன் உளனாம் -இருவருமான சேர்த்தியிலே உபய விபூதியும் உஜ்ஜீவிக்கும் –
சாய் இழந்தேன்-அவனோடே கலந்து பெற்றதாய் அவன் வரும் அளவும் தரிக்கைக்கு கை முதலான எழிலையும் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்-அவன் வந்தாலும் -பிரயோஜனம் இல்லாத படி அவன் கைம்முதலான எழிலையும் இழந்தேன் –
தடமுலை -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாத பரப்பை உடைத்தாகை-
பொன்னிறமாய்த்-விவர்ணமாய் -ஸூ க்ஷேத்ரம் மணலீடாய் போமா போலே –
தளர்ந்தேன்-இழந்தவை வந்தாலும் தொங்குகைக்கு ஆஸ்ரயம் இல்லை –
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்-இழந்த இழவுக்கு ஹேது சொல்லுகிறது –வெங்கண் பறவை-வெவ்விய கண்ணை யுடைய பெரிய திருவடி வரும் இடத்தில் பிரபல பிரதிபந்தகங்களை போக்கி கொடு வர வல்லவன் என்னுதல் -சம்ச்லேஷ தசையில் கண்ணற்று கொடு போமவன் என்னுதல் -அக்ரூர க்ரூர ஹ்ருதய
பறவையின் பாகன் எங்கோன்-பெரிய திருவடி முதுகில் இருப்பைக் காட்டி யாயிற்று என்னை அநந்யார்ஹை ஆக்கிற்று
வேங்கட வாணனை -பரமபதத்தில் இருப்பை ஆசைப் பட்டேன் அல்லேன் -நமக்கு காட்சி தருகைக்கு வர நின்ற இடத்திலே
வேண்டிச் சென்றே–நம்மை ஆசைப்பட்டு நிற்கிறவனை காண ஆசைப்பட்டுச் சென்று -அவன் தான் வரக் கண்டு இருக்கை அன்றிக்கே -அவன் இருந்த தேசத்தளவும் சென்று -அபேக்ஷிதம் பெறாமையாலே சங்கம் சரிந்தன -சென்று -பால் சென்றால் போலே சென்று என்றுமாம் –

——————————————————————

இப்படியானாலும்  அந்தரங்கைகளாய் இருக்கிற எங்களுக்கு உன்னுடைய நோவு சொல்லலாகாததும் உண்டோ -சொல்லாய் –என்ன -என் துக்க அனுபவத்தால் வந்த  இளைப்பின் மிகுதியாலே   உங்களுக்குச் சொல்லலாம்  பாசுரம் அறிகிலேன் என்கிறாள்

வேண்டிச்  சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்-என் பக்கலிலே வந்து ஒன்றை அபேக்ஷித்து பெறுமவர்களில் தலையான வரிசையுடைய தோழிமாரான உங்களுக்கு யாகிலும் –
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்-நிருபாதிக ஸுஹார்த்தம் உடைய தோழிமார் -உயிர்த் தோழியர் –சென்று என்றது -வந்து என்றபடி -அங்கனம் இன்றிக்கே அவனை ஒன்றை அபேக்ஷித்து சென்றாரில் ஓர் அபேக்ஷிதம் பெற்று அறிவார் இல்லை -சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு என்கிறது -யுக்தி மாத்திரமே என்று ஒரு தமிழன் நிர்வஹித்தான்
ஈண்டு-இப்போது முன்பு எல்லாம் சொல்லிப் போந்தேன் ஆகிலும் இப்போது சொல்லலாவது காண்கிறிலேன்
இது -எல்லாவற்றிலும் பாசுரம் இட்டுச் சொல்லிப் போந்தேன் ஆகிலும் இது சொல்லுகைக்கு பாசுரம் காண்கிறிலேன்
உரைக்கும்படியை -நெஞ்சிலே விஷமூர்ந்தால் போலே ஊரா நின்றது -பாசுரம் இட்டுச் சொல்லலாவது இல்லை –
அந்தோகாண்கின்றிலேன்-எனக்கு ஓடுகிற தசையை உங்களுக்கு சொல்லி அகஞ்சுரிப் படுத்தி தரிக்க -கெடுக்கிற யுங்களிலும் எனக்கு தேட்டமாய் இருக்க -பாசுரம் காண்கிறிலேன் -ப்ரலாபை ரேவ தார்யதே
இடராட்டியேன் நான்-என் இடருக்கு அன்றிக்கே -சொல்லு சொல்லு என்று அலைக்கிற யுங்களுக்கு அன்றியே துக்கப் படுகிற நான் –
காண் தகு தாமரைக் கண்ணன்-காணத்தக்கு இருந்துள்ள கண்களை யுடையவன் -சதா தர்சன யோக்கியமான கண்கள் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் பங்கஜ சத்ருசமாய் இருக்கை –
கள்வன்-நானும் என் உடைமையும் உன்னதன்றோ என்று ஒரு கால் தன் செல்லாமையை ஆவிஷ்கரித்து ஆத்மாத்மீயங்களை அபஹரித்தவன்-
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் -நித்ய ஸூரிகளைப் போலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன் -ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை கிடீர் என்னை ஒருத்தியையும் படுத்திற்று –
கண்டால்-காணப் பெற்றால் –
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்-அவன் பக்கலிலே திரண்ட வேலையையும் அடக்கத்தையும் அவன் பக்கலிலே கொள்ளுகைக்காக -தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கும் –
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?-இவ்வாசையோடே எத்தனை காலம் யுண்டு இளைத்து போருகிறது-

————————————————————-

பகவத் விஷயத்தில் பிராவண்யம் தண்ணிது என்கிறோம் அல்லோம் -நாங்கள் சொல்ல மீண்டிலையே யாகிலும் எட்ட ஒண்ணாத விஷயம் ஆகையால் நாள் சென்றவாறே நீயே மீளுவுதி-எங்கள் வார்த்தைக்கு மீண்டாயாக அமையாதோ -என்ன கால தத்வம் முடியிலும் அவனைக் கண்டால் அல்லது விடேன் என்கிறாள் –

காலம்  இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்-இளைக்கின்றிலன்-அநாதிர் பகவான் காலோ நாந்தோஸ்ஸ்ய-என்கிற காலம் முடியும் அத்தனை அல்லது நான் இளைத்து மீளுகிறேன் அல்லேன்
நான்-இளைக்கின்றிலன்–நகாலஸ் தத்ர வை பிரபு -என்று காலத்துக்கும் அவ்வருகான விஷயத்தை விளாக்குலை கொண்ட அபி நிவேசத்தை யுடைய நான் மீளுவேனோ-
வினையேன் நான்–துர்லபம் என்றாலும் விட ஒண்ணாத விஷயத்தில் கை வைக்கும் படி பாபத்தை பண்ணினேன் என்னுதல் -நீங்கள் சொல்லும் வார்த்தை நெஞ்சில் படாத படியான பாபத்தை பண்ணினேன் என்னுதல் –
கண்டு கொண்மின்-சொல்லும் அத்தனை போக்கி முடியாது காண் என்ன -ப்ரத்யஷிக்கப் புகு கிற வர்த்தத்துக்கு வேறு ஓன்று வேணுமோ -இப்படிப் புகுந்தால் லோகம் அடைய பழி சொல்லாதோ என்ன
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் -நாடும் இரைக்கவே–யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ -ஆனாலும் ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான லஜ்ஜையை விடாதே நோக்க வேண்டாவோ என்ன –
நன்னுதலீர் !இனி நாணித் தான் என் ?-ஜகத்து எல்லாம் அடைய பழி சுமந்த பின்பு லஜ்ஜித்து என்ன பிரயோஜனம் உண்டு -நன்னுதலீர்-நுதல் -நெற்றி -உங்கள் முகத்தில் எழில் அழியாது இருக்க என் முகத்தில் எழில் குடி போன படி கண்டி கோளே -இந்த நெடுவாசியை பார்த்து அன்றோ வார்த்தை சொல்லுவது –
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த-நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட–நீலமாய் -விஸ்திருதமாய் அபரிச்சேத்யமான தேஜஸ் ஸூ சூழ்ந்த அபரிச்சேத்யமான காள மேகத்தின் நிறம் போலே இருக்கிற நிறத்தை யுடைய ஆஸ்ரித பவ்யன் இவ் வழகைக்காட்டி அபஹரித்துக் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்-அவன் தன் கையிலே இட்டுக் கொண்டு கொண்டாடும் வளை யாகையாலே அழகிய வளை என்கிறாள் -மாமை -அவன் கொண்டாடுகிற நிறம்-கொள்வான் -வளையோடு கூடின நிறத்தை மீட்டுக் கொள்ளுகைக்காக
எத்தனை காலமும் கூடச் சென்றே–நெடும் காலம் சம்ச்லேஷ அர்த்தமாக சென்றாகிலும் என்னுதல் -காலம் எல்லாம் கூடியாகிலும் சென்று என்னுதல் –
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த-நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட-கோல வளை யோடு மாமை -எத்தனை காலமும் கூடச் சென்றே–கொள்வன்-ஞாலம் அறியப் பழி சுமந்தேன் -நன்னுதலீர் !-இனி நாணித் தான் என் ?-காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்-இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்-என்று வாக்ய பேதம் பண்ணி அந்வயிக்கை முக்கியம் –

——————————————————————-

உன் துணிவு இதுவாக இன்னம் எல்லாவற்றையும் இழக்கிறாய் என்ன -இனி எத்தை இழப்பது -எல்லாம் இழந்து இலேனோ என்கிறாள் –

கூடச்  சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

கூடச் சென்றேன்-சம்ச்லேஷ அர்த்தமாக சென்றேன் -ஸ்வரூபத்தை அழிய மாறி யன்றோ நான் சென்றது
இனி என் கொடுக்ககேன்-பண்டே எல்லாம் இழந்த பின்பு இனி எத்தை இழப்பது –
கோல் வளை -அழகிய வளை –
நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்-பாடற்று ஒழிய இழந்து
நெஞ்சம் தொடக்கமானவை எல்லாம் -அவன் விபூதியோபாதி போரும் இவளுடைய பரிகரத்தின் பரப்பும் -பாடற்று ஒழிய இழந்து-என் பக்கல் சவாசனமாக சம்பந்தம் அற்று போம்படி இழந்து
வைகல்-பல்வளையார் முன்பு -என்றும் ஓக்க பலவகைப் பட்ட வளையை யுடைய ஸ்த்ரீகள் முன்பே –அவனையும் என்னையும் குண ஹானி சொல்லக் கடவ ஸ்த்ரீகள் எதிரே
பரிசு இழந்தேன்-பரிசு -பிரகாரம் -என்னுடைய பிரகாரம் -ஸ்த்ரீத்வ பிரகாரம் -அத்தை இழந்தேன் -கழற்றி பூணுமவற்றை அவர்கள் தரித்து இருக்க கழற்ற ஒண்ணாத படி ஆபரணமாய் இருக்கிற லஜ்ஜாதிகளை இழந்தேன் –
மாடக் கொடி மதிள் தென் குளந்தை-மாடங்களையும் கொடியோடு கூடின மதிள்களையும் யுடைத்தாய் -தெற்குத் திக்குக்கு சிலாக்யமான திருக் குளந்தையில்
வண் குடபால் நின்ற-அழகிதான மேற்கு பார்ஸ்வத்திலே நின்ற -மேலைத் திக்கில் நிற்கிற இதுவும் ஒரு வை லக்ஷண்ய ஹேது
மாயக் கூத்தன்-ஆச்சர்ய சேஷ்டிதன்
ஆடற் பறவை யுயர்த்த -சர்வேஸ்வர வாஹனம் என்னும் ஹர்ஷத்தாலே மது பானம் பண்ணினால் போலே களித்து ஆடா நின்றுள்ள பெரிய திருவடியால் வஹிக்கப் பட்டவனை -பெரிய திருவடி திருத் தோளில் இருப்பதும் ஒரு வை லக்ஷண்ய ஹேது
வெல் போர்-ஆழி வலவனை யாதரித்தே–யுத்தத்தில் வெற்றியோடு அல்லது மீளாத திரு வாழி யை வலவருகே யுடையவனை ஆதரித்து –
மாடக் கொடி மதிள் தென் குளந்தை-வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்-ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்-ஆழி வலவனை யாதரித்தே–கூடச் சென்றேன்-கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்-பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்-இனி என் கொடுக்ககேன்-என்று அந்வயம் –

———————————————————–

அறியவும் எட்டவும் அரிதான விஷயத்திலே அதி பிரவணையாய் அதுக்கு துக்கப் படுகிறாய் என்று தோழிமார் சொல்ல –அவனை ஆஸ்ரயிக்கையும் அவனாலே விஷயீ கரிக்கப் படுகையும் இம்மரியாதை தான் தோற்றி யுண்டாயிற்றோ -இது அநாதி அன்றோ என்கிறாள் –

ஆழி  வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

ஆழி வலவனை ஆதரிப்பும்-கையும் திரு வாழி யுமான சர்வேஸ்வரனை நாம் ஆஸ்ரயிக்கையும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்-அங்கு -ஆஸ்ரயண தசையில் –அவன் –மேன்மையோ பாதி நீர்மையும் யுடையவன் –நம்மில் வரவும்எல்லாம் -ஆஸ்ரயித்த நாம் இருந்த பிரதேசங்களில் வந்து விஷயீ கரிக்கையும் -இவை எல்லாம் –
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?-என்னோபாதி இவ்விஷயத்தில் அவஹாகித்தவர்கள் அல்லி கோளோ-நம் அளவதோ –அவனை ஆஸ்ரயிக்கையும் -அவன் அபேக்ஷிதம் செயகையுமாய்ப் போருகிற இது நம்மளவில் உண்டாயிற்றாது ஒரு மரியாதையோ –
சொல்லுவதோ ?இங்கரியது தான்-அர்த்த ஸ்திதி ஏதேனுமாய் இருக்க தோற்றிற்று சொல்லாது இருக்கை தான் அரிதோ -நிவாரகர் இல்லை என்னா பிரதிபன்னங்களை சொல்லக் கடவதோ -அவன் கிட்ட அரியவன் என்று பிரதிபன்னங்களை சொல்லக் கடவதோ -அவன் கிட்ட அரியனாய் இருக்கிறமை இல்லையோ என்ன -அது தானும் என் வாயாலே கேளுங்கோள்
ஊழி தோறூழி யொருவனாக-நன்கு உணர்வார்க்கும் உணரலாகா—நன்கு உணர்வார்க்கும் -யொருவனாக-ஊழி தோறூழி-உணரலாகா-அர்த்த ஸ் திதி உள்ளபடி அறிய வல்லவர்களுக்கும்-ஏவம் விசிஷ்டன் என்று -காலம் எல்லாம் கூடினாலும் நிலையிட ஒண்ணாது –
சூழலுடைய சுடர் கொளாதித்-தன் பக்கலிலே தப்பாதே அகப்படுத்திக் கொள்ளும் விரகுகளை யுடையனாய் இருக்கும் -தேஜோ பிரப்ருத்ய அசங்க்யேய கல்யாண குணகனான ஜகத் காரண பூதன்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-ஸ்வா பாவிகமாய்-நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை யுடையவனை -அவன் பெருமையை ஆராயப் புகில் —
நினைக்கும் காலே-நன்கு உணர்வார்க்கும் -யொருவனாக-ஊழி தோறூழி-உணரலாகா-சூழலுடைய சுடர் கொளாதித்-தொல்லை யஞ்சோதி-ஆழி வலவனை ஆதரிப்பும்-என்று அந்வயம் –
துர்ஜ்ஜேயன் என்றதால் வை லக்ஷண்யம் சொல்லிற்று -விலக்ஷண விஷயமே ஸூலபனானால் மேல் விழுந்து பற்ற வன்றோ அடுப்பது என்கை –

——————————————————————

நீ சொல்லுகிறபடி எளியன் அல்லன் -எட்டாதான் ஒருவன் -என்று தோழிமார் சொல்ல -துர்லபனாகிலும் ஸூலபனாகிலும் தன்னை ஒழிய செல்லாத படி நம்மை புகுர நிறுத்தி இப்படி நோவு படுத்தினவன் வாசலிலே கூப்பிடாதே நம்மோடு சம்பந்தம் இல்லாதாரையோ இன்னாதாவது -என்கிறாள் –

தொல்லை  யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்-ஆராயப் புக்கால் இதர விஸஜாதீயமான விக்ரஹத்தை யுடையவன் –
என் சொல்லளவன்று -அவன் வை லக்ஷண்யம் என்னுடைய பேச்சின் அளவு அன்று -நான் ஒரு அபலை இருந்து சொல்லும் அளவேயோ அவன் பெருமை
இமையோர் தமக்கும்-எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்-அதிசயித ஞானாதிகரான ப்ரஹ்மாதிகளுக்கும் அளவிறந்த சம்சயங்களைப் பண்ணும் –யந்நாயம் பகவான் ப்ரஹ்மா ஞானாதி பரமம் பதம் -நக்ராஹ்ய கே நசீத் க்வசித் -/ இமையோர் என்று நித்ய ஸூ ரிகளாய் அவர்கள் சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தி நிற்க -ஈட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போரும் என்றுமாம் –
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்-அம் மேன்மையும் கிடைக்கச் செய்தே-தன் ஸுந்தரியாதிகளைக் காட்டி என் நிறத்தைக் கொண்டான் – என்னோடு இட்டீடு கொண்டு அல்லது தரியாதானாய் -நம்முடைய நிறத்தை கொண்டது அந்த வை லக்ஷண்யத்தை பாராதே என்கிறாள் –
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்-இப்படி நோவு படுத்தினவன் தான் தன்னோடு ஸ்பர்சம் உள்ளவற்றை தந்து ஆகிலும் என்னை உஜ்ஜீவிப்பிக்கிறிலன் -அபிமதம் கிட்டாது ஒழிந்தால் சத்தையை நோக்க வேண்டாவோ –
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-நலிந்த இவனுக்கு கூப்பிடாதே யாருக்கு கூப்பிடுவோம் சொல்லி கோளே -சம்பந்தம் இல்லாதார் வாசலிலே சென்று கூப்பிடவோ
வல்லி வள வயல் சூழ் குடந்தை-பூம் கொடி பரந்த சோலைகளும் வளவிதான வயல்களும் சூழ்ந்த திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் –வளம் -அழகு –
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே--ப்ராப்தனானவன் மலர்ந்த தாமரை பூ போலே இருக்கிற கண்கள் என்னளவில் அலரக் காண்கிறிலேன் -விசேஷ கடாக்ஷம் பண்ணக் காண்கிறிலேன் என்கை -கூக்குரல் கேட்க்கிறதுக்கு சந்நிஹிதன் என்கை –
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்–என்று தொடங்கி –ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-என்று அந்வயம் –

————————————————————————

அவனை கண்டு முடிகை அரிது -இத்தை விட வல்லையே -என்று உறவு முறையார் அலைக்க -அவனுடைய குணங்களிலும் ஸுந்தரியாதிகளிலும் அகப்பட்ட நான் காலம் எல்லாம் கூடவாகிலும் அவனைக் கண்டு அல்லது விடேன் -தத் விரோதிகளான உங்களோட்டை சம்பந்தம் எனக்கு வேண்டா என்கிறாள் –

மாலரி  கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மால் –ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹமே வடிவாக யுடையவன் -பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர கூப்பிடப் பண்ணிய வ்யாமோஹம் –
அரி -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன்
கேசவன் -நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் விட ஒண்ணாத ப்ரசஸ்த கேசவன்
நாரணன்-ஆஸ்ரிதர் பக்கல் குணாகுண நிரூபணம் பண்ணாத வாத்சல்யத்தை யுடையவன்
சீ மாதவன்-இக்குணங்களுக்கு எல்லாம் அடியான நீர்மையை யுடைய பிராட்டிக்கு வல்லபன்
கோவிந்தன் -ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தால் ஆஸ்ரிதர்க்கு கையாளாக இருக்குமவன் –
வைகுந்தன்-இப்படி இருக்கிறவன் அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ வைகுண்ட நாதன்
என்று என்று-ஒரு கால் சொல்லுகை அன்றிக்கே நிரந்தரமாக
ஓலமிட -காரியப்பாடு அறக் கூப்பிடும்படி
வென்னைப் பண்ணி-ஸ்ருஷ்டஸ்துவம் வந வாசாய -என்கிறபடியே இதுவே யாத்ரையாகப் பண்ணி
விட்டிட்டு-விட்டு -என்னை தன் பக்கலில் நின்றும் பிரித்து / இட்டு -அசேதனத்தை பொகடுமா போலே பொகட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்-தன் வடிவைக் காட்டு கிறிலன் -தான் இருந்த இடத்துக்கு ஓர் அடையாளமும் காட்டு கிறிலன் -தாஸாம் ஆவிர்பூத் -ஏறபடியே வடிவைக் காட்டுதல் -ராமாஸ்ரமத்தில்-ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு பரதோ யத்ர தூமாக்ரம் தத்ர த்ருஷ்டம் சமாததே என்கிறபடியே தூமாதிகள் அடையாளமானால் போலே இருந்த இடத்துக்கு ஸூசகம் காட்டுதல் செய்கிறிலன்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் -நீங்கள் பண்டு இருக்க கண்டால் போலே இருக்க காண வல்லனே என்கிறாள் -ஏலம் போலே கமழுகிற நறு நாற்றத்தை யுடைய மலர் -நான் இப்பாடு பட ஒப்பனையில் குறி அழியாது இருக்குமவர்கள் அன்றோ நீங்கள்
என்னுடையத் தோழியர்காள் -உங்களுக்கு ஹிதம் சொல்லி மீட்க்குமது இல்லை -என் பிரியம் இ றே உங்களுக்கு உத்தேச்யம்
என் செய்கேன் ?-தன் வடிவைக் காட்டுதல் -இருந்த இடத்துக்கு ஒரு சுவடு தெரிவித்தல் செய்கிறிலன் -மேல் நான் செய்ய எடுப்பது என் -என்ன எங்களைக் கேட்க்கில் விட்டுப் பற்ற அடுக்கும் என்ன
காலம் பல சென்றும் காண்பதாணை-காலம் எல்லாம் கூடாவாகிலும் கண்டு அல்லது மீளேன் -சொல்லலாம் இத்தனை அல்லது செய்யப் போமோ -என்ன –ஆணை –அவனுடைய ஆணை -விடுகிறவர்களோடு சம்பந்தம் இல்லாமையால் அவர்கள் ஆணை இடாளே-இப்படி இவள் ஆணை இடைச் செய்தேயும் தங்கள் சாபலத்தாலே சில சொல்லப் புக
உங்களோடும் எங்களிடை இல்லையே–உங்களோடு எனக்கு ஒரு சம்பந்தம் இல்லை -நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டா -என்கிறாள் –

——————————————————————–

கிளி தொடக்கமான லீலா பரிகரங்களில் தமக்கு உண்டான அநாதரத்தை சொல்லுகிறாள் –

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–4-2-8-

இடையில்லை -உங்களுக்கு என் பக்கல் ஓர் அவகாசம் இல்லை
யான் வளர்த்த கிளிகாள்!-பழைமை கொண்டு பின்னாட்டு கிறி கோள் அன்றோ நீங்களும்
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !-முன்பு இவள் ஆதரித்தவை அவனுடைய லீலா உபகரங்களிலும் குவால் இ றே -அவை எல்லா வற்றிலும் நசை அற்ற படி
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்-ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்-அடையும் வைகுந்தமும்-
எல்லாவற்றிலும் நசை அற்ற படிக்கு ஹேது சொல்லுகிறாள் -நம்முடையன் நிறமும் வளையும் நெஞ்சும் பாஹ்யங்களோடு ஆந்தரங்களோடு வாசி அற நம் பக்கல் ஒன்றும் சேஷியாத படி கைகொண்டவன் சேரும் பரமபதமும் -இத்தலையில் உள்ளது எல்லாம் நேராகக் கொண்டு எட்ட ஒண்ணாத நிலத்திலே போய் பாரித்து வெற்றி கொண்டாடி இருந்தான் என்கை –
பாற் கடலும்-அத்தோடு தோள் தீண்டியான திருப் பாற் கடலும்
அஞ்சன வெற்பும் -திருமலையும் பரமபதத்தோடு ஓக்க சொல்லலாய் இருக்கிறதாயிற்று
அவை நணிய-ப்ராப்ய பூமியானவை நமக்கு கிட்டிற்றன -ஆனால் புக்கு அனுபவிக்க தட்டு என்ன -அவன் ஆகிறான் சுணை யுடையானாய் இருப்பான் ஒருவன் -புறம்பே ஒரு விஷயத்தில் நசை கிடக்க ஸ்வ அனுபவத்தை காட்டிக் கொடான்
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றிஅவனவை காண் கொடானே-பின்னாட்டாத படி நிச்சேஷமாக பாஹ்ய ருசி போனால் அல்லது போக ஸ்தானங்களைக் காட்டிக் கொடான் –
கீழே வணங்குமாறு அறியேன் -என்று ப்ராபக ஆபாசங்களை விட்டாராய் -இங்கே ப்ராப்ய ஆபாசங்களை விட்டேன் என்கிறார் –

————————————————————————-

இதுவே துணிவாகில் ஆத்மாத்மீயங்களை நேராக இழக்கிறாய் இ றே என்ற உறவு முறையாரைக் குறித்து முன்பு அடைய இழந்திலேனோ-இனி எத்தை இழப்பேன் -என்கிறாள் –

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்-எத்தனையேனும் அதிசய ஞானர்க்கும் ஸ்வ யத்னத்தால் அறிய புகில் தன் படிகளைக் காட்டிக் கொடாத ஸ்வபாவன்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்-மாண் குறள் கோல வடிவு காட்டி-க்ரித்ரிமத்தாலே -உபய விபூதி உக்தனான நான் -ஒன்றும் இல்லாதானாய் வருகையும் –ஸ்ரீ யபதியான தன்னை ஆர்த்தியாக்குகையும் -சிறு காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொள்ளுகையும்
கை செயப் பாலதன கோல வடிவு -கை செய்கைக்கு அப்பாலதான அழகை யுடைய வடிவு –கை செய்கையை -கை செய் -என்று குறைத்துக் கிடக்கிறது அகர்தரிமமான அழகை யுடைய வடிவு என்னுதல் –கை செய்ய என்கையாலே உயிர் பெற எழுதினால் போலே எழுதின கோல வடிவு என்றுமாம்
மாண் குறள் கோல வடிவு -இரப்பிலே தகண் ஏறி அபரிச்சேத்யனான தான் வாமன வேஷனாய்
காட்டி -மஹா பலியை வஞ்சிக்கைக்காக அக்ரித்ரிமமான குறள் வடிவைக் காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த-கையிலே நீர் விழுந்த சமனந்தரம் ஸமஸ்த லோகங்களும் விம்ம வளர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த-நீண்ட ஒளியை யுடைத்தாய் கற்பக தரு பணைத்தால் போலே பல தோள்களை யுடையவன்
தேவ பிராற்கு-இந்திரன் இழந்த ராஜ்யத்தை கொடுத்து தேவர்களுக்கு உபகாரகன் ஆனவனுக்கு
என் நிறைவினோடு-நாண் கொடுத்தேன் -இந்திரன் ராஜ்யம் பெற்றான் -மஹா பலி உதார குணம் காட்டிப் போந்தான் நான் எனக்கு சர்வ ஸ்வம்மான அடக்கைத்தையும் லஜ்ஜையையும் இழந்தேன்
இனி என் கொடுக்கேன்-இனி எத்தை கொடுப்பேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–இத் துக்கம் அறியாமையால் அழகிலும் குறைவற்று பூரணைகளாய் எனக்கு ஹிதம் சொல்லலாம் இ றே உங்களுக்கு –கீழே நாலாம் பாட்டில் இனி என் கொடுக்கேன் என்று சொல்லிற்று -இதுக்கும் அதுக்கும் வாசி என் என்னில் -பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் கையும் திரு வாழி யுமான சேர்த்தியிலும் தோற்று நாயக் கூத்தனை யாதரித்து கலக்கச் சென்று கிட்டாமையாலே வந்த இழவு அதில் -ஸ்ரீ வாமனனுடைய அழகிலும் சேலத்திலும் தோற்று மஹா பலியைப் போலே சர்வஸ்வத்தையும் இழந்தேன் என்கிறது இதில்-

—————————————————————-

எல்லாம் செய்தாலும் ஹிதைஷிகளாய் பந்துக்களான நாங்கள் சொல்லிற்று கேட்க வேணும் காண் என்ன -நீங்கள் சொன்ன வார்த்தை கேட்க்கைக்கு நெஞ்சு வேணுமே -அது அவன் பக்கலிலே போயிற்று என்கிறாள் –

என்னுடை  நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்-எனக்கு உறவு முறையாரான நீங்கள் வடிவு அழகிலும் ஸ்த்ரீத்வத்திலும் குறைவற்று இருக்கையாலே நிர் துக்கைகளாய் இருந்தி கோள்
யான்-எல்லாம் இழந்து அவசன்னையாய் இருந்தேன்
இனிச் செய்வதென் -இப்படியான பின்பு எத்தைச் செய்வேன் -இவற்றை மீட்க்கவோ -அவனை நியமிக்கவோ -எல்லா அளவிலும் தரித்து இருக்க வேண்டாவோ -என்கிறாள் –
என்னெஞ்சு -எல்லா அவஸ்தையிலும் இதுக்கு முன்பு எனக்கு பவ்யமாய்ப் போந்த என் நெஞ்சு
என்னை-தன்னைக் கொண்டு ஜீவித்து இருக்கிற என்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி-உன்னோடு எனக்கு அடைவில்லை என்று அகன்று -இதயுக்த்வாபருஷம் பண்ணிப் போயிற்று -பிராப்தி சொல்லி மீட்க ஒண்ணாத படி ஸந்நயஸ்தம் மயா என்று போயிற்று -உங்களுக்கு நான் நிற்கிற நிலையிலே இ றே என் நெஞ்சு எனக்கு அவ்வருகே போனபடி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டுபன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு-பால் மதி ஏந்தி யோர் கோல நீல-நன்னெடும் குன்றம் வருவதொப்பான்-பின் தொடர ஒண்ணாத படி கடலிலே யாயிற்று புக்கது -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி இருக்கிற இரண்டு கையிலும் ஆழ்வார்களைத் தரித்து -பலவாய் தூரப் போய் எங்கும் வ்யாபிப்பனவான ஒளிகளை யுடைய ஆதித்யனோடே கூட அவனோடே ஒத்த தேஜஸ் ஸை யும் வெண்மையையும் உடைய சந்திரனை ஏந்தி அத் தேஜஸ் ஸூ க்களுக்கு பரபகமாய் இதர விஸஜாதீயமாய்-தர்ச நீயமாய் -கண்டார் கண் குளிரும்படி நீலமாய் மற்றும் அனுக்தமான அழகுகளை யுடைத்தாய் -அபரிச்சேதயமாய் இருபத்தொரு மலை நடந்து வருமா போலே யாயிற்று ஆழ்வார்களைக் கொண்டு உலாவும் படி
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே--செவ்விப் பூவிலே வண்டு படிந்தால் போலே திருவடிகளிலே சேர்ந்தது -யான் இனி செய்வது என் –

—————————————————————-

நிகமத்தில் இத்திருவாய்மொழி வல்லார் அவித்யா கர்மாதி சகல  தோஷங்கள் நீங்கி இஹலோக பர லோகங்களில் தாங்களே க்ருத்யக்ருத்யர் ஆவர் என்கிறார் –

பாதமடை வதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

பாதமடைவதன் பாசத்தாலே-மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு-திருவடிகளில் கிட்டுகையில் உண்டான சங்கத்தால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை நிச்சேஷமாக விட்டார் -இதுவாயிற்று இத்திருவாய் மொழியிலே சொல்லிற்று யாயிற்று -புறம்புள்ள பற்று அற்று திருவடிகளிலே ஆசைப்பட்டவர் அல்லர் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே திருவடிகளிலே சங்கத்தால் உபாதிகமான பாஹ்ய சங்கத்தை தவிர்ந்தவர்
கோதில் புகழ்க்-திருவடிகளிலே சங்கத்துக்கு முதல் அவனுடைய கல்யாண குணங்கள் -இக் குணங்களுக்கு கோதாவது தன்னை ஒழிய புறம்பேயும் நசை பண்ணும் படி இருக்கை
கண்ணன் தன்னடி மேல்-இப்புகழை யுடைய கிருஷ்ணனுடைய திருவடிகளிலே யாயிற்று சொல்லிற்று -எல்லாம் கண்ணன் -என்று இ றே தொடங்கிற்று
வண் குருகூர் சடகோபன் சொன்ன-பரம உதாரரான அருளிச் செய்த
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்-பிரபந்தத்துக்கு தீதாவது -கதான்தர ப்ரஸ்தாவம்-ராம வ்ருத்தாந்தத்தை சொல்லப் புக்கு ஸூ ப்ரஹ்மண்ய உத்பத்தி -புஷ்ப்பக வர்ணன் இவற்றிலே இழிகையும்-நாராயண கதாமிமாம் என்று சொல்லி விட்டு விட்டார் விட்ட அம்பு எண்ணுகையும் இவை –
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்-அத்விதீயமான திருவாய் மொழியில் இப்பத்தை ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே செல்லுமவர்கள்
ஆதுமோர் தீதிலராகி-அவித்யாதி தோஷங்களும் நீங்கும் -புறம்புள்ள நசை அற்று இருக்கச் செய்தே-பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக இருக்குமதுவும் அவர்களுக்கு இல்லை
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–இஹ லோகத்தோடே பர லோகத்தோடே வாசி அறக் குறைவற்று இருப்பவர்கள் -இஹ லோகத்தில் க்ருதக்ருத்யா பிரதீ ஷந்தே-என்கிறபடி சமைந்து இருப்பர்கள் -பர லோகத்தில் அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று குறைவற்று இருப்பர்கள் –தாமே -ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா -உபய விபூதியிலும் தாங்களே ப்ரதானர் ஆவர்கள்


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: