திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-10-

எம்பெருமான் தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட இவ்வுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே
-இனி ஆத்மாந்தமாக அடிமை செய்யும் இத்தனையே செய்யக் கடவோம் என்று பார்த்து லோகம் எல்லாம் வாழும் படி
பெரிய பிராட்டியாரோடே கூட திருவாறன் விளையிலே பரியங்க வித்யையிலே சொல்லுகிறபடியே
திருவனந்த ஆழ்வான் மேலே திருவாய் மொழி கேட்டு அருளுகைக்கு இடம் படி அணித்தாக
-ஸ்ரீ ராமாயணம் கேட்டு அருளுகைக்காக பேர் ஓலக்கமாக எழுந்து அருளி இருந்தால் போலே இருந்து அருளுவதும் செய்து
-தமக்கு உபகாரகனான சர்வேஸ்வரனைக் கண்ணாலே கண்டு எல்லா அடிமையும் செய்ய வேணும் என்று துணிந்த ஆழ்வார்
-அடிமை செய்யும் இடத்தில் திரு நாட்டிலே போய் அடிமை செய்யவும் இச்சை இல்லை –
-திருவாறன் விளையிலே போய் அடிமை செய்ய வேணும் -என்று அடிமை செய்யும் படிகளை மநோ ரதிக்கிறார் –

———————————————————

திருவாறன் விளையிலே புக்கு -மிகவும் ஹ்ருஷ்டராய் கொண்டு அடிமை செய்யும் காலம் ஆகவற்றே -என்று மநோ ரதிக்கிறார்

இன்பம்  பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

எழிலை யுடைய பெரிய பிராட்டியாரோடு கூட வீற்று இருந்து அருளுகையாலே -தனக்கு நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாகவும் -இவ் உலகங்களுக்கு ஸூ கம் பிறக்கையாலே தனக்கு இனிமை பிறக்கும் படியாகவும் -இவ் வுலகங்களை ஆளா நிற்பதுவும் செய்து -இங்கனம் இருக்கிற மஹா சம்பந்தத்தை காட்டி எங்களை திரு வாயமொழி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகன் –
ஸ்நே ஹித்து அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு நிரந்தரமாக வர்த்திக்கிற அழகிய பொழில் சூழ்ந்த திருவாறன் விளையை நாமும் அப்படியே அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஸ்நேஹித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே ப்ரதக்ஷிணம் பண்ணி அடிமை செய்யும் நாள்களும் ஆகவற்றே –

——————————————————-

திருவாறன் விளையில் விலக்ஷண  நிரதிசய கந்த யுக்தமான திரு நீரைக் கொண்டு திரு நீர் இட்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கையாலே தொழவும் கூடவற்றே என்கிறார் –

ஆகுங்கொல்  ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-

அகலிடம் முற்றவும் -பூமி எல்லாம் -சர்வ லோகங்களுக்கும் உப லக்ஷணம் / மாகம் -ஆகாசம்

——————————————————–

திருவாறன் விளையில் எம்பெருமான் திருவடி மேலே நீ ஏறி அருளி இங்கே எழுந்து அருளக் கண்டாலும் அதனைத் தவிர்ந்து நாள் தோறும் திருவாறன் விளையை தொழக் கூட வற்றே என்கிறார் –

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

ஆஸ்ரித ஸூ லபனாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனாய் பிரதிகூலர்க்கு முகம் கொள்ள முடியாதே இருந்துள்ள எம்பெருமானை –
அவனுடைய பெறும் புகழை பாடா நின்றுள்ள ஷட் அங்க ஸஹிதமான நாலு வேதத்தையும் பஞ்ச மஹா யஜ்ஜத்தையும் பயின்றவர்கள் –

—————————————————————-

திருவாறன் விளையிலே செல்லப் பெறோம் ஆகில் -அங்கு நின்று அருளின எம்பெருமான் திரு வடிகளை -அங்கே சென்று புக்கு அனுபவிக்கும் படியை -இங்கேயே இருந்தாகிலும் என்றும் நிரந்தரமாக நினைக்க கூடவற்றே -என்கிறார் –

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

சம்ருத்தமான கரும்பும் பெரிய செந்நெல்லையும் யுடைத்தான வயல் சூழ்ந்த திருவாறன் விளையிலே எழுந்து அருளி இருக்கையாலே வாய்த்து இருந்துள்ள நீல ரத்னத்தின் நிறத்தை யுடைய அனுக்ரஹ சீலனான கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளையே –

————————————————————-

திருவாறன் விளையினுடைய சம்ருத்தமான புகழை பாட நம்முடைய சகல துக்கங்களும் நீங்கும் என்கிறார் –

மலரடிப்  போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

அயர்வறும் அமரர்கள் இருக்க அவர்கள் முன்னே தன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளையே எப்போதும் என்னுடைய நெஞ்சிலே இருத்தி வணங்கும் படியாக என்னை கிருபை பண்ணி அருளினவன் சபரிகரனாக வந்து அநந்ய பிரயோஜனாய் வர்த்தியா நின்ற -இத்தால் தம்மை திருவாய் மொழி பாடுவித்திக் கொண்ட யுபகாரத்தை யருளிச் செய்கிறார் –
பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்-திருவனந்த ஆழ்வானில் காட்டிலும் விரும்பி வர்த்தியா நின்ற என்றுமாம் –
மலரின் மணிநெடு மாடங்கள்-புஷபங்களோடே கூடின உயரிய மணி மாடங்கள்

————————————————————-

எம்பெருமான் பக்கல் சாபலம் உடையீர் -உங்களுக்கு ஸமஸ்த துக்கங்களும் நீங்கும் படி திருவாறன் விளையை நெஞ்சால் நினைத்து ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

ஒன்றும்  நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

சிசுபாலன் விவாஹ அர்த்தமாக கண்ணாலம் கொடுத்த தசையில் அவனை யுத்த பூமியிலே யுத்தத்தில் சென்று ஸுந்தர்ய சீலாதி கல்யாண குண பூர்ணையான ருக்மிணி பிராட்டியுடைய அழகியதாய் நெடிதான திருத் தோள்களில் சென்று சம்ச்லேஷிப்பதும் செய்து அந்த மணக்கோலத்தோடு என்றும் எப்போதும் என்நெஞ்சம் தன்னை கொண்டாடும்படி என் ஹ்ருதயத்தில் இருக்கிற யுபகாரகன்-

—————————————————————-

நமக்கு ப்ராப்யம் திரு நாடு அன்றோ என்னில் -திருவாறன் விலையே நமக்கு ப்ராப்யம் -அங்குத்தை -அங்கு நின்று அருளும் எம்பெருமானே நமக்கு ப்ராபகன் என்கிறார் –

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

நீணக ரமதுவே-நமக்கு ப்ராப்யமான மஹா நகரம் அதுவே -ஒருவருக்கும் எட்டாத படி அற பெரியனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி -பாண புரத்திலே சென்று புக்கு ஈஸ்வர அபிமானியான ருத்ரன் தொலையும் படி கொடிய யுத்தங்களை பண்ணி பாணனுடைய பாஹு வனச் சேதம் பண்ணி அருளுவதும் செய்து -நிரதிசய போக்யமான திருச் சோலையை யுடைய திருவாறன் விளையிலே இருந்து அருளி ஆஸ்ரித அனுக்ரஹ சீலனானவனே ப்ராபகன் –
அன்றி மற்றொன்று இலமே-ப்ராப்ய ப்ராபகங்கள் யுடையோம் அல்லோம் –

———————————————–

திருவாறன் விளையிலே புக நம்முடைய சகல துக்கங்களும் போம் என்கிறார் –

அன்றி  மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

உன் திருவடிகளை அல்லது வேறு ஒரு பற்றை உடையேன் அல்லேன் -என்று அகன்று ஆழ்ந்து இருக்கிற பொய்கையில் அகப்பட்டு நின்று ஆபன்னர் இருந்த இடத்து அளவும் வரக் கடவதான தன்னுடைய திருவடிகளை ஏத்தின ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய மஹா துக்கத்தை கெடுத்து அருளின அனுக்ரஹ சீலனான எம்பெருமான் –
ஏவம்வித அனுக்ரஹத்துக்கு ஈடாக தானே சென்று இனிமையோடே வர்த்திக்கிற அழகிய பொழில் சூழ்ந்த திருவாறன் விளையை கிட்டி வலம் செய்ய -எம்பெருமான் தனக்கு ப்ராப்யமாகக் கொண்டு இனியனாய் வர்த்திக்கிற திருவாறன் விளை என்றுமாம் –

————————————————————

என்னுடைய ஹ்ருதயமானது ஸ்ரீ வைகுண்டமும் திருவாறன் விளையும் இரண்டும் கிடைப்பதானால் -ஸ்ரீ வைகுண்டத்தில் காட்டிலும் அங்கு உள்ளாரும் வந்து விரும்பும் திருவாறன் விளை யமையும் என்னா நின்றது என்கிறார்-

‘தீ வினை  உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

ஹ்ருதயம் நிஸ் தோஷமாய் சுத்த சத்வமயமாய் எப்போதும் தெளிவைப் பண்ண கடவதான திரு நாட்டில் போக பிராப்தம் ஆனால் -எத்தனையேனும் அளவுடையரான திரு நாட்டில் உள்ளாரும் வந்து மநோ வாக் காயங்களினால் பயின்று ஆஸ்ரயிக்கும் நிரதிசய போக்யமான திருவாறன் விளையை சேர்ந்து பிரதக்ஷிணம் பண்ணி தொழ கூட வற்றே என்னும் என்னுடைய ஹ்ருதயம் –

———————————————————————–

திருவாறன் விளையை பிராப்யம் என்று இருக்க -அவன் திரு நாட்டைத் தரிலோ என்ன அவன் சர்வஞ்ஞான் அல்லனோ அறியானோ என்கிறார் –

சிந்தை  மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

மநோ வாக் காயங்களினால் விண்ணு ளாரிலும் சீரியரான நிலத் தேவருடைய குழாங்கள் வணங்கும் படியாக -நில மிதியாலே புக்காருடைய ஹ்ருதயம் மகிழக் கடவதான திருவாறன் விளையிலே உறையா நிற்பதும் செய்து போக்யத்தையாலே  வேறு ஓர் இடத்துக்கு ஆகாத படி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளும் எம்பெருமானுக்கு அற்ற பின்பு –

———————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களால் ஸ்லாக நீயர் என்கிறார் –

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே-தீர்த்த மனத்தனனாகிச் –தன் திரு அழகைக் கண்டாரை வேறு ஒரு இடத்துக்கு உரித்தாகாத படி பண்ண வல்ல திருவாறன் விளையில் எம்பெருமானுக்கே யாக தாம் அற்ற பின்பு மற்று ஒரு ப்ராப்யம் இல்லை என்று பார்த்து அருளி அவனுக்கே துணிந்த திரு உள்ளத்தை யுடையராய் –
செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன-தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் -சம்ருத்தமான திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த தீர்த்தங்களான ஆயிரம் திருவாய் மொழிகளிலும் இத்திருவாய் மொழி வல்லார்களை –தீர்த்தம் ஆகையாவது -தன் போக்யத்தையாலே மற்று ஒன்றில் போக ஒட்டாத படி பண்ண வற்றதால் -பாவனமாதல் –
தேவர் வைகல்-தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–தேவர்களானவர்கள் சமுத்ராதிகளை போலே ஒரோ காலங்களில் அன்றிக்கே எல்லாக் காலங்களிலும் பவித்ரபூதர் என்று தங்கள் மஹீஷிகளை ஸ்நேஹித்து கொண்டாடி அவர்களுக்கு சர்வஸ்வதானம் பண்ணினாராய் செல்லா நிற்பர் –தேவர்கள் ஆகிறார் -அயர்வறும் அமரர்கள் என்றுமாம் -மற்றைப் ப்ரஹ்மாதிகள் என்றும் சொல்லா நிற்பர் –


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: