திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-4-

அறக் கொடிய வியசனங்கள் வந்த இடத்திலும் தன்னை விடாதே புறம்புள்ள பற்று எல்லாம் விட்டு தன்னைக் காணப் பெறாமையாலே
மிகவும் அவசன்னரான இவர்க்கு விரஹத்தாலே வந்த தளர்த்தி தீர்ந்து மிடுக்கு உண்டாம் படியாக
-எல்லா பீதியையும் போக்கவற்றாய் எல்லா விஸ்மயத்தையும் பண்ண வற்றாயும் உள்ள தன்னுடைய விஜயங்களை
எம்பெருமான் காட்டி அருளக் கண்டு தரித்த ஆழ்வார் -திரு உலகு அளந்து அருளுகை தொடக்கமான அவனுடைய விஜயங்கள் எல்லாம்
அவ்வவ காலத்திலே ஓக்க அனுபவித்து எம்பெருமானை ஏத்தி இனியராகிறார் –

———————————————————-

திரு உலகு அளந்து அருளின படியை  – அபதானத்தை –அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

ஆழி  எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை-வாழி எழத் தண்டும் வாளும் எழ –தான் வளர்ந்து அருள புக்கவாறே திரு வாழி தொடக்கமான திவ்யாயுதங்கள் தன்னில் காட்டில் வளர இவ் வழகைக் கண்டு அனுபவிக்கிறவர்களுடைய மங்கள வாதங்கள் திக்குத் தோறும் எழ
அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன்-ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–தன்னுடைய வளர்த்திக்கு அண்டாந்தராளம் இடம் போராமையாலே விம்மி அண்ட புத்தி பிளந்து ஆவரண ஜலம் உள்ளே வந்து புகுரும்படியும்-முடியும் பாதமும் -ஓக்க எழும்படியாகவும் -தைத்யர்களாலே உபத்ரவப் பட்ட காலம் போய் நல்ல காலமாகவும் எம்பெருமான் உலகை அளந்து கொண்டு அருளின படி –

——————————————————

சமுத்திர மதன ப்ரக்ரியையை அனுபவிக்கிறார் –

ஆறு  மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

ஆரு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி– கடைந்து அருளுகிற போது மலைகளில் காட்டில் கடல் உசருகையாலே ஆறு மலையை நோக்கி ஓடுகிற ஓசையும்
-அர-வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி-பாம்பின் உடம்பைச் சுற்றி மலையைத் தேய்க்கிற த்வனியும் –
கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –பர்வதத்தை வலித்த போது கடல் இடமும் வலமுமாக எதிராக சூழ்ந்து கோஷிக்கிற கோஷமும்
அப்பன்-சாறு பட அமுதம் கொண்ட நான்றே-என் அப்பன் நீர் கோதாம் படி பசைப்படக் கடைந்து அம்ருதம் வாங்கின நாள் இவை எல்லாம் உளவாயின-

——————————————————————-

மஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் –

நான்றில  ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-

தானத்த-ஸ்வ ஸ்தானஸ்த்தம் ஆயின / ஊன்றி-மாறுபாடு உருவக்குத்தி –

——————————————————————

பிரளய காலத்தில் பூத பவ்திகங்களோடு கூடின ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்த படியை சொல்லுகிறார்  –

நாளும்  எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-

நாளும் எழ– கால வ்யவஸ்தை பெறும் படி –எழ என்கிறவை எல்லாம் -பெற என்கிறது –கோளும் சுடரும் ஆகின்றன -க்ரஹ நக்ஷத்திரங்கள் / ஊளி எழ -லோகத்தை திரு வயிற்றிலே வைக்கிற போது எழுந்த ஓசை -உறிஞ்சின ஓசை என்றுமாம் –

—————————————————————–

பூ பார நிரஹரண  அர்த்தமாக பாரத சமர வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

ஊணுடை  மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-

ஊணுடை  மல்லர் தகர்த்த ஒலி–யுத்தார்த்தமாக பஷ்ய போஜ்யாதிகளை மிகவும் புஜித்து மலை போலே இருக்கிற மல்லர் நெரிந்த ஒலி –
ஆணுடைச் சேனை– ஆண் பிள்ளைத் தனைத்தை உடைய சேனை / ஏணுடைத் தேவர் –எண்ணப்படும் தேவர்கள்
அப்பன்-காணுடைப் பாரதம் கையறை போழ்தே-அப்பன் கண்டு நிற்க வேணும் படி பாரத சமரம் தொடங்கின போது-

——————————————————————-

ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது வான ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அனுபவித்து  அருளிச் செய்கிறார் –

போழ்து  மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-

போது போய்ச் செவ்வானம் இட்ட தசையில் ஆகாசமும் திக்குகளும் போய் ருதிர ஜலமாக -ஸந்த்யா ராகத்தில் காட்டிலும் அவனுடைய ஹ்ருதயத்தில் நின்றும் புறப்பட்ட ரக்தமானது ஆகாசத்தையும் திக்குகளையும் மிகவும் சிவப்பிக்க என்றுமாம் –
ஒரு மலை இட்டு கீழே இட்டு இருந்து அம்மலையைக் கீண்ட ஸிம்ஹம் போலே இருந்தது -தன் சீற்றத்தைக் காட்டி மிகவும் துக்கப் படுத்தி அசூரனைக் கொன்றபடி-

———————————————————————

ராவண வத வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

மாறு  நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-

சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நின்றுள்ள சர ஸமூஹத்தாலே அநேகம் பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க –
கடல் ரக்தத்தாலே நிரம்பி ஆற்றிலே வர எதிர்க்க பஸ்மாமாம் படி இலங்கையை அப்பன் செற்றதொரு நேர் பாடே
நேரே என்றது ஐசுவரமான பிரபாவத்தாலே அன்றிக்கே மெய்யான ஆண் பிள்ளைத் தனத்தால் என்றுமாம்-

———————————————————–

பாண விஜயத்தை அனுசந்திக்கிறார் –

நேர்  சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-

நேர் சரிந்தான் -என்கிற பாட்டுக்கு எல்லாம் –நேர் சரிந்தான் -என்று சொல்லுகிறவற்றுக்கு எல்லாம் பொருள் -தோற்றத்தில் சரிந்தான் -என்று -முதுகிட்டு பிழைத்து போனான் என்றுமாம்
கொடிக் கோழி கொண்டான்-ஸூ ப்ரஹ்மண்யன் / திண் தோள் -ருத்ர வர பலத்தால் திண்ணிய தோள்-

—————————————————————

பாணனை தமித்த -ஜெயித்த -அன்று தொடங்கி ஜகத் உண்டாயிற்று என்கிறார் -ஆதி ஸ்ருஷ்ட்டி ஆகவுமாம் –

அன்று  மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-

பூத பஞ்சகங்களையும் அன்று உண்டாக்கினான் / -சந்த்ர ஸூ ரியர்களும் மற்றும் உள்ளளவும் உண்டாயிற்று / வர்ஷத்தையும் அத்தாலே ஜீவிக்க கடவதான பிராணிகளையும் மற்றும் உண்டான  தேவதைகளையும் மற்றும் உண்டாக்கினான் / அப்பன் அன்று தொடங்கி இந்த லோகத்தையும் உண்டாக்கிற்று –

————————————————————-

கோவர்த்தன உத்தாரணம் பண்ணிச் செய்து அருளின -ரக்ஷையை -விஜயத்தை -அனுபவிக்கிறார் –

மேய்  நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொ ரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-

மேய்க்கிற நிரை வாயில் புல்லோடு கீழே புகவும் -அங்கு உண்டான யானை தொடக்கமான திர்யக்குகள் கீழே புரண்டு விழவும் -சுனைகள் வாய் அளவும் நிறைந்த நீரை ஓசைப் படச் சொரியவும்-அதி சம்ருத்தமான திருவாய்ப்பாடி அங்கே ஒடுங்கவும்
மேய் நிரை கீழ் புக என்று மலையை எடுத்த கடுப்பைச் சொல்லிற்று –
அப்பன் மலையை எடுத்து நாசகரமான மழையைக் காத்தான் -எல்லாப் பாட்டிலும் அப்பன் என்று உகந்து கொண்டாடினார் –

——————————————————————-

குன்றம்  எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

நிகமத்தில் எம்பெருமானுடைய விஜயங்களைத் தொடுத்த இத்திருவாய் மொழியை சஹ்ருதயமாக கற்பார்க்கு இது தானே விஜயங்களைக் கொடுக்கும் என்கிறார் –

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: