திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-3–

இப்படி அவசன்னையான பிராட்டி பெரிய பெருமாளுடைய அசரண்ய சரண்யதையை தொடக்கமான -கல்யாண குண கண ஸுந்தரியாதிகளை
-தாம் வாய் வெருவியும்-அத்தை திருத் தாயார் அனுபாஷித்தும் -ஆக இப்படி ப்ராசங்கிகமாக ப்ரவ்ருத்தமான திரு நாம த்வனி செவி வழியே புக
-அது சிசிர உபசாரமாக தரித்து -சர்வ ஐஸ்வர்ய சம்பூர்ணனாய்க் கொண்டு தன்னுடைய விடாய்க்கு இடம் படி அணித்தாக தென் திருப் பேரெயிலிலே
வந்து வீற்று இருந்து அருளின மகர நெடும் குழைக் காதனுடைய ஸ்மித வீஷீதாதிகளிலே அபஹ்ருத சித்தை யாகையாலே
அவனை ஒழிய தரிக்க மாட்டாதே பதற இவளை நீ என் பட்டாய் என்று தாய்மாரும் தோழிமாரும் மற்றும் உள்ள உறவு முறையார்களும் வினவ
-அவர்களைக் குறித்து -நான் மகர நெடும் குழைக் காதனிலே அபஹ்ருத சிந்தை யானேன் -அவன் எழுந்து அருளி இருந்து அருளின
திருப் பேரெயிலிலே புக்கு அல்லது தரிக்க மாட்டேன் -என்னை அங்கே கொண்டு போய் விடுங்கோள் என்ன-அவர்கள்
இது நம்முடைய ஸ்த்ரீத்வாதிகளுக்கு ஈடு அன்று என்று நிஷேதிப்பாரும் பொடிவாருமாக-நீங்கள் கொடு போய் வீட்டிலி கோள் ஆகில்
நான் போய் புகத் தவிரேன் -என்கிறாள் -விஸ்லேஷம் அவ்யுத்பன்னம் என்னும் படி சம்ச்லேஷம் பிறந்து
சர்வ காம ஸம்ருத்தி நியாய் கொண்டு இப்படி அநேக காலம் சென்று இனி விஸ்லேஷியா விடில் பொறுக்க ஒண்ணாத தசையில்
ம்ருகபாதி வியாஜ்ஜியத்தாலே யாகிலும் விஸ்லேஷிக்க வேணும் என்று பார்த்து -போய் வருகிறோம் என்ன தன் மவ்க்யத்தாலே
சம்ச்லேஷத்திலே ஒரு பிரகாரம் இ றே விஸ்லேஷம் என்று பார்த்து போக லாகாதோ -என்ன அவனும் விஸ்லே ஷிக்க
-அனந்தரத்திலே இப்பிராட்டியும் பொறுக்க மாட்டாதே மிகவும் அவசன்னையாய் -பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் தென் திருப்பேரெயிலே வந்து வீற்று இருந்து அருளினான் -நான் அங்கே போவேன் என்ன தாய்மாரும் தோழிமாரும்
-அவன் தானே வரக் காண வேணும் என்று நிஷேதிக்க -அது கேளாதே நானே போனேன் ஆகாமே
நீங்களே என்னை தென் திருப்பேரியிலிலே கொண்டு போய் விடுங்கோள் என்கிறாள் –

———————————————————-

இப்பிராட்டி வாசா மகோசரமாம் படி தனக்கு வர்த்திக்கிற வ்யசனத்தாலே தென் திருப்பேரெயிலிலே போக வேணும் என்று தனக்குப் பிறந்த தசையை வினவுகிற தாய் மார்க்குச் சொல்லுகிறாள் –

வெள்ளைச்  சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

சுரிசங்கொடு-சரிந்து இருக்கிற சங்கு
ஊடே-உள்ளே
கடாவுகை -நடத்துகை
காணீர் -காண்கிறிலீர்
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்-உனக்கு ஓடுகிற தசையை நாங்கள் அறிகிறி லோம்-நீயே சொல்லிக் காண் என்று தாய்மார் கேட்க நான் படுகிற வ்யஸனம் சொல்லுகைக்கு பாசுரம் காண்கிறிலேன் -என்கிறாள்
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த-வேத ஒலியும் விழாவொலியும்-பிள்ளைக் குழா விளையாட்டொலியும்-அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே-
நீங்களே என்னைக் கொடு போய் விட்டு கோள் ஆகில் தன்னை விஸ்லேஷித்த பின்பும் சம்ச்லேஷ ஜெனித ப்ரீதி மாறாதே நிரதிசய ஸூ கத்தோடே அவன் வீற்று இருப்பதும் செய்து வேத த்வனியும் திருநாவில் வாத்யகீதாதி கோலாஹலமும் -பாலா அபீக்ரீடமா நா -என்னும் கணைக்கால் அவனுடைய ஸுந்தரியாதிகளாலே ஜிதரான பிள்ளைக் குழாங்கள் உடைய விளையாடுகிற கோஷமும் நிரந்தரமாக செல்லுகிற தென் திருப்பேரெயிலிலே நான் போய்ப் புகுவேன்-

————————————————————–

இங்கனம் பதறலாமோ -நெஞ்சை சிக்கென பிடித்துக் கொண்டு தரித்துக் கொண்டு இருக்க வேண்டாவோ -என்று தோழிமார் தொடக்கமானார் சொல்ல -தென் திருப்பேரெயிலிலே எழுந்து அருளி இருந்து அருளுகிற எம்பெருமானுடைய திருப் பவளத்தில் மிகவும் பிரவணமான என்னுடைய ஹ்ருதயம் என் அதீனம் அன்று என்கிறாள் –

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-

நானம் -கந்தம்- / இவள் திண்மைக்காக தோழிமார் தரித்துக் காட்டின படி / அயற் சேரியீர் காள்!–இவளுடைய விரஹ வியஸனம் பிரசித்தமான படியைச் சொல்லுகிறது / தனி நெஞ்சம்-ஸ்வ தந்திரமான நெஞ்சம் / தேன் மொய்த்த பூம்பொழில்-இத்யாதி -வண்டுகள் மொய்த்த பூம் பொழிலை யுடைய அழகிய நீர் நிலம் சூழ்ந்த தென் திருப்பேரெயிலிலே வீற்று இருந்து அருளுவதும் செய்து வேண்டற்பாட்டையும் அழகையும் குணத்தையும் உடையவனாய் உள்ள வனுடைய திருப் பவளத்தில் அழகிலே படிந்தது –

————————————————————————-

இங்கனம் செய்கை நம்முடைய லஜ்ஜைக்கும் மேன்மைக்கும் போருமோ என்று தோழிமார் சொல்ல -அவனுடைய அழகிலே அகப்பட்டு என்னுடைய ஹ்ருதயம் அவற்றை எல்லாம் ஒழிந்தது என்கிறாள் –

செங்கனி  வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

திருக் கண்களுக்கு அநந்யார்ஹ சேஷமாயும்
என்றும் ஓக்க திவ்ய உத்சவமாய் செல்லுகிற தென் திருப்பேரெயிலிலே நமக்கு அணித்தாக வந்து வீற்று இருந்து அருளின மஹா உபகாரகனுக்கு-

—————————————————————-

ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருந்தி யாகிலும் போது போக்காதே இங்கனம் செய்யலாமோ -என்று பொடிகிற தாய்மாரைக் குறித்து -என் நெஞ்சம் அவனாலே அபஹ்ருதம் ஆயிற்று -நான் எத்தைக் கொண்டு போது போக்குவது -என்கிறாள் –

இழந்த  எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-

இழந்த என்னுடைய நிறத்தை மீட்க வேணும் என்று போன என் நெஞ்சம் பெரிய ராஜ குலமும் தானுமாய் என்னை மறந்து அங்கே நின்று விட்டது -இனி வருந்தி ஆரைக் கொண்டு எத்தை சொல்லி போது போக்குவேன் –
வேத த்வனி போலே எப்போதும் முழங்கா நின்ற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலே அலங்க்ருதமான திருக்கையை உடைய அவ் வழகிலே நிமக்னை யானேன்-

—————————————————————-

இங்கனம் விரைகை ஸ்த்ரீத்வத்துக்கு போராது காண் -என்று தாய்மார் அலைக்க-அது பண்டே போயிற்று -பிரயோஜனம் இல்லாத தசையில் கொண்டு போக நில்லாதே ஒக்கவே கொண்டு போய் தென் திருப்பேரெயிலிலே என்னை விடுங்கோள் என்கிறாள்-

முனிந்து  சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-

முனிந்து– யசோதை பிராட்டி முலை தாழ்த்த வாறே சீறி / கண் வளர்ந்து அருளுகைக்கு விரோதமாம் படி யூரப் புக்க வாறே சீறி -என்றுமாம்
மாயப்பேய்-வஞ்சகமான பேய் / கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்-மஹா உபகாரகனான கிருஷ்ணனுக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் / முன்னி-முற்கோலி-

—————————————————————–

நீங்கள் கொண்டு போவோமோ அல்லோமோ என்று விசாரிக்கும் தசை அன்றிக்கே -எனக்கு அபி நிவேசமானது அற மிக்கது -எனக்கு இங்கு தரிப்பு அரிது — ஈண்டென என்னை தென் திருப்பேரெயிலிலே கொண்டு போய்க் காட்டுங்கோள் -என்கிறாள் –

காலம்  பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-

நீல முகில் வண்ணத்து எம்பெருமான்–நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்-உரு வெளிப்பட்டால் நலிகிற படியைச் சொல்லுகிறது
சம்சாரத்தில் அவன் வந்து தன்னுடைய ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும் படி இருந்து அருளுவதும் செய்து அவனுக்கு வைதிகர் பண்ணும் சமாராதனங்கள் நிரந்தரமாக செல்லா நிற்பதும் செய்து கவரி வீசினால் போலே மநோ ஹராமாம் படி செந்நெற்கள் அலைவதும் செய்து சுற்றும் சேர்ந்து இருந்துள்ள புனலை யுடைத்தான தென் திருப்பேரெயிலிலே
கூடு புனல்-ஊற்று நீரும் மழை நீரும் ஆற்று நீரும் கூடின புனல் என்றுமாம்-

——————————————————————-

பெருமாள் இளைய பெருமாளுக்கு விடை கொடுத்து அருளின பின்பு  அவன் போன இடத்தில் போவேன் என்று துணிந்தால் போலே இப்பிராட்டியும் என் நெஞ்சு தரிக்கைக்கு விரகு பார்த்து தென் திருப்பேரெயிலிலே புக்கால் போலே நானும் அங்கே போய்ப் புகும் அத்தனை என்று தோழியைக் குறித்து சொல்லுகிறாள் –

பேரெயில்  சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங் குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-

பெரிய மதிலையும் அதுக்கு அழகாக சூழ்ந்து இருக்கிற கடலையும் யுடைத்தான இலங்கையை அழிக்கை யாகிற மஹா உபகாரத்தை பண்ணின தசாரதாத்மஜன் வந்து தன்னுடைய ஐஸ்வர்யம் தோற்ற எழுந்து அருளி இருக்கும் திருப்பேரெயிலிலே சென்று புக்கு என் நெஞ்சம் தேடி மீண்டு வரக் காண்கிறிலேன் –
நெஞ்சு போன பின்பு இனி இவ்விடத்தில் துணையாக வல்லார் ஆரும் இல்லை -இனி யாரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது –

——————————————————————–

எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபி நிவேசம் கடலில் பெரிது என்னும் அளவு அன்றிக்கே அற மிக்கது -ஆனபின்பு நீங்களாக இசையி கோள் ஆகில் -ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் தன் வேண்டற்பாடு தோற்ற எழுந்து அருளி இருக்கிற தென் திருப்பேரெயிலிலே நான் போய்ப் புகுவேன் என்கிறாள் –

கண்டதுவே  கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8-

தோழீ நான் அவன் குண கீர்த்த நாதிகளை பண்ணைக் கண்டதே பற்றாசாகக் கொண்டு -அவன் அழகிலே இவள் அகப்பட்டாள் என்று எல்லாரும் பழி தூற்றின அத்தை முதலாகக் கொண்டு ப்ரவ்ருத்தமான என்னுடைய ஸ்நேஹத்தின் படி சொல்லப் புகில் –

———————————————————————-

நீங்கள் என்னைத் தேற்றி பிரயோஜனம் இல்லை -தென் திருப் பேரெயிலிலே சென்று சேரக்  கடவேன் என்கிறாள் –

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-

எனக்கு ஓடுகிற தசைக்கு நீங்கள் சொல்லுகிற வார்த்தையோடு என்ன சங்கதி உண்டு
நிறைவுடையார் இங்கனம் பண்ணைக் கடவதோ -நெஞ்சை வருத்தி பிடித்து தரிக்க வேண்டாவோ என்ன அவையும் எனக்கு இங்கு இல்லை -அவன் பக்கலினா
பரம உதாரனாய் ஆபத்சகானான கிருஷ்ணன் வந்து இருந்து அருளின ஏரின் மிகுதியை யுடைய அழகிய கழனிகளோடு கூடின பழனங்களை யுடைய தென் திருப் பேரெயில் என்கிற மஹா நகரம் –

———————————————————-

இருந்ததே குடியாக உன்னைப் பழி சொல்லாரோ -என்று தோழிமார் சொல்ல அவர்களை யன்றோ நான் தேடித் திரிகிறது என்கிறாள் –

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்-பிறவும் -மற்றும் உள்ளளவும்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!-தோழி மார் ஸ்த்ரீத்வத்துக்கு ஏகாந்தமான லஜ்ஜாதிகளுக்கு போருமோ என்று சொல்ல எனக்கு லஜ்ஜா தத்வம் பண்டே அற போயிற்று காணுங்கோள் என்கிறாள்
சிகர மணி நெடு மாட நீடு-இத்யாதி -பர்வத சிகரம் போலே நெடிதாய் மணி மாடங்களை யுடைத்தாய் பெரிதான தென் திருப் பேரெயிலிலே வீற்று இருப்பதும் செய்து ஆச்சர்யமான குண சேஷ்டிதாதி களை யுடையனுமாய் துரியோதனாதிகளை நிஸ் சேஷமாம் படி மங்கும் படி மந்திரித்த ஒப்பு இல்லாத மேகம் போலே இருக்கிற திரு நிறத்தையும் திரு வாழி யையும் யுடையனான மகர நெடும் குழை காதன் என் நெஞ்சம் கவர்ந்து எத்தனை காலத்தான்-

——————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்பார் அடிமையை மிகவும் அவஹாகித்து பிரவணர்  ஆவார் என்கிறார் –

ஊழிதோறு  ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-

யுகம்தோறும் ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஈடான ரூப நாம சேஷ்டைகளை வெவ்வேறாக யுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்கும் ஸ்வபாவனாய் கடல் போலே சிரமஹரமான திரு நிறத்தை யுடையனாய் ஆஸ்ரிதரை ஒரு நாளும் விடாத்தன்மை யுடைய எம்பெருமானை –
கேழில் அந் தாதி -ஒப்பு இல்லாத அந்தாதி

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: