திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-3–

பெரிய பெருமாளுடைய அசரண்ய சரண்யதையை தொடக்கமான -கல்யாண குண கண ஸுந்தரியாதிகளை -தாம் வாய் வெருவியும்
-அத்தை திருத் தாயார் அனுபாஷித்தும் -ஆக இப்படி ப்ராசங்கிகமாக ப்ரவ்ருத்தமான திரு நாம த்வனி செவி வழியே புக
-அது சிசிர உபசாரமாக தரித்து -அநந்தரம் சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து பெறாமையாலே அவசன்னையாய் தன் விடாய்க்கு ஈடாக
தென் திருப்பேரெயிலிலே வந்து சர்வ ஐஸ்வர் யத்தோடே வீற்று இருந்து அருளின மகர நெடும் குழை காதனுடைய ஸ்மித வீக்ஷணாதிகளிலே
அபஹ்ருத சிந்தையாய் -அவனை ஒழிய தரிக்க மாட்டாதே பதற -தோழிமாரும் தாய்மாரும் பந்துக்களும் இவள் தசையைக் கண்டு
-உனக்கு ஓடுகிறது என் என்று வினவ -என் நெஞ்சு மகர நெடும் குழை காதன் பக்கலிலே அபஹ்ருதயம் ஆயிற்று
-நானும் அங்கு புக்கு அல்லது தரியேன் -என்ன -அவர்களும் இது உன் வம்சத்துக்கும் உன் ஸ்த்ரீத்வத்துக்கும் போராது என்ன
-வம்சத்தை நோக்கப் பார்த்து -இல்லையாகில் நான் போகத் தவிரேன் -என்று தனக்கு பிறந்த துணிவை சொல்லுகிறாள்
அதவா-
கீழ் பட்ட கிலேசம் அவ்யுத்பன்னம் என்னும் படி பெரிய பெருமாளோடே சம்ச்லேஷம் உன்மஸ்த கரசமாம் படி வ்ருத்தமாய்
-விஸ்லேஷியா விடில் தர்மி அழியும் அளவானவாறே ம்ருக்யாதி வ்யாஜத்தாலே விஸ்லேஷிப்போம் என்று பார்த்து பிரிவை பிரசங்கிக்க
-பிரிவு புதியது உண்ணாத தன் மவ்க்யத்தாலே-இதுவும் கலவியில் ஒரு வகையோ -என்று அனுமதி பண்ணி திரு வணுக்கன்
திரு வாசல் அளவும் ஒருப்படுத்தி விட்டு -அநந்தரம் விரஹத்தை பொறுக்க மாட்டாமையாலே நடுக்கடலில் புக்காரைப் போலே
நோவு படுகிற தசையில் தாய்மாரும் தோழிமாரும் பந்துக்களும் -உனக்கு ஓடுகிறது என் என்ன -நாயகன் ம்ருக்யாதி வியாஜ்ஜியத்தாலே
தென் திருப்பேரெயிலிலே இருந்தான் -நானும் அங்கு புக்கு அல்லது அரியேன் என்ன -அவன் தானும் வரக் காணும் அது ஒழிய
பதறுகை இவ்வம்சத்துக்கு போராது காண் என்ன -ஆகில் நீங்கள் கொடு போய் விடாய் பாருங்கோள்
-இல்லை யாகில் நான் போகை தவிரேன் என்று தனக்கு பிரிந்த துணிவை சொல்லுகிறாள் என்றுமாம்
குண ஞானத்தாலே தரித்த நான் அவன் இருந்த ஊரிலே போய் புக வேணும் என்கிறாள் ஆதல்
சம்ச்லேஷம் வ்ருத்தமான பின்பு பிரிவு விளைந்து அவன் இருந்த தேசத்திலே போய்ப் புக்கு அல்லது தரியேன் என்கிறாள் ஆதல் என்றுமாம்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்று திருப்பதிகள் பெருமாளுக்கு பகல் இருக்கை யாதலால் தென் திருப்பேரெயிலிலே போனான் என்று அங்கே போகத் தேடுகிறாள் –
இதில் சொல்லிற்றாய் விட்டது விஷய ப்ரவணனை சாஸ்திரத்தாலே மீட்க ஒண்ணாதா போலே
பகவத் விஷயத்தில் பிரவணர் ஆனாரை தேசிகராலும் மீட்க ஒண்ணாத அதி ப்ராவண்யத்தை சொல்லுகிறது –

—————————————————————-

தனக்கு ஓடுகிற வியசனத்தாலே தென் திருப்பேரெயிலிலே போக வேணும் என்று பிறந்த துணிவை வினவுகிற தாயமார்க்கு சொல்லுகிறாள் –

வெள்ளைச்  சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரிசங்கொடு-ஆழி ஏந்தித்-தாமரைக் கண்ணன் -ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி -ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை
என் நெஞ்சினூடே-நாங்கள் காண்கிறி லோமீ என்ன -உட் கண் விழியாத உங்களுக்கு தெரியுமோ
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!-பெரிய திருவடியை நடத்துகிற படியை -இவளுடைய தசையைக் கண்டு பெரிய திருவடி பிற்காலிக்க பிற்காலிக்க வடிம்பிலே தாக்கிக் கொண்டு போன படி -கலவியாலும் பிரிவாலுமாக நெஞ்சின் ஊடு என்னும் படியாக ஆயிற்று -நெஞ்சு இடம் பெற்ற படி -பரமபதத்தில் அழகு செண்டு ஏறுமா போலே ஆயிற்று நெஞ்சிலே அழகு செண்டு ஏறுகிற படி -காணீர் -தன் நெஞ்சில் பிரகாசம் பாஹ்ய இந்திரியங்களுக்கும் விஷயமாம் என்று இருக்கிறாள் -காணீர் -காண்கிறிலீர்-கண்ட நீ சொல்லிக் காண் என்ன –
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!-என்னுடைய அனுபவத்துக்கு என்ன பாசுரத்தை சொல்லி நான் உங்களுக்கு சொல்லுவது -இவ்வனுபவத்தில் வ்யுத்பத்தி இல்லாத உங்களுக்கு எத்தைச் சொல்லுவது –அன்னைமீர்காள் -இவ்வனுபவத்துக்கு தூரஸ்த்தைகளாய் ஹிதம் சொல்லி மீட்க்கிற உங்களுக்கு நான் சொல்லுவது என் -சமான துக்கர்க்குச் சொல்லுவதை உங்களுக்கு சொல்வதோ -ஒரு சம்பந்தம் அமையுமோ சொல்லுகைக்கு -எங்களுக்கு சொல்ல ஒண்ணாதாகில் நீ செய்யப் பார்த்தது என் என்ன அவன் இருந்த தேசத்தில் நான் போய்ப் புகப் பார்த்தேன் -என்கிறாள் –
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த-ஸூ க வெள்ளத்தை யுடையவன் -விஸ்லேஷ தசையிலும் சம்ச்லேஷ ஜெனிதமான நிரதிசய ஸூ கம் மாறாதவன் -பிரிந்து போகிற போது விஸ்லேஷ தசையிலும் சம்ச்லேஷ தசையிலும் ப்ரீதி மாறாத படி ஆயிற்று விளை நீர் அடைத்துக் கொண்டு போவது -வீற்று இருந்து -இத்தலை தோற்பித்த ஏற்றத்தாலே வந்த வேறுபாடு தோற்ற ஓலக்கம் கொடுத்து இருக்கை -வீற்று இருந்த திருப்பேரை என்று அந்வயம்
வேத ஒலியும் -இவளை தனக்காக ஆக்குகையாலே -கர்த்தவ்யதந்த்ரம் இல்லை என்று பழம் புணர்ப்பு கேட்க்கா நின்றான்
விழாவொலியும்-திரு நாளில் வாத்ய கீதாதி கோலாஹலமும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்-பிள்ளைகள் திரண்டு ஸுந்தரியாதிகளாலே ஜிதராய் விளையாடுகிற கோஷமும் -இற்றைப் புறப்பாடே -உலாவின படியே -முறுவலும் தோளும் தோள் மாலையே -என்று கொண்டு விளையாடுகை
பாலா-அபி கிரீட மா நா க்ருஹ த்வாரேஷூ சங்கச ராமாபிஷ்ட ச ஸம்யுக்தாச் சக்ருரேவ மித கதா -என்ன கடவது இ றே -இவை நிரந்தரமாக செல்லுகிற தேசம் –அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே-நிஷேதிக்கிற நீங்கள் இருந்த தேசத்தில் நின்றும் பகவத் ப்ராவண்யமே யாத்திரையாக செல்லுகிற தேசத்திலே புக்க கட வேன் –

————————————————————–

இங்கனம் பதறுகிறது என்  -நெஞ்சை சிக்கென பிடித்துக் கொண்டு தரித்துக் கொண்டு இருக்க வேண்டாவோ –என்ன – மகர நெடும் குழை காதன் பக்கலிலே என் மனஸூ அபஹ்ருதயம் ஆயிற்று என்கிறாள்-

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!-நானம் என்று கந்தம் -இவள் தளராமைக்காக தோழிமார் தரித்து காட்டின படி
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்-தோழிமாரோடு-தாயமாரோடு -அந்நியரோடு வாசி அற ஹிதம் சொல்லத் தொடங்கினார்கள் -ஏக கண்டைகளான தோழிமாரோடு அந்நியரோடு வாசி அற இவள் ஆற்றாமை பிரசித்தமான படி -பகவத் ப்ராவண்யத்தாலே உங்களில் வ்யாவருத்தையான என்னைக் காட்டில் ப்ரவணம் ஆகையால் ஸ்வ தந்திரமான நெஞ்சை நோக்க மாட்டேன் -உனக்கு சேஷம் அன்றோ நெஞ்சம் என்ன
என் வசம் அன்று இது-நான் உங்களுக்கு சேஷம் அன்றோ -சேஷ பூதர் என்னா பவ்யர் ஆவாரோ
இராப்பகல் போய்த்-ஹிதம் சொல்ல்லுகிற உங்களுக்கு சந்நிஹிதை நான் -அதுவும் இல்லை என் நெஞ்சுக்கு – இராப்பகல் போய்த்-ஒரு போது போய் மற்றைப் போது முகம் காட்டில் அன்றோ ஹிதம் சொல்லலாவது
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்தென் திருப் பேரெயில் -தேன் என்று வந்து -அத்தாலே நெருங்கப் பட்ட பூம் பொழிலை யுடைத்தாய் குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப் பட்ட தேசத்திலே -புக்கார்க்கு மீளலாம் தேசம் அன்றே என்கை
வீற்றிருந்த-பரமபதத்தில் போலே தன் வேறுபாடு எல்லாம் தோற்ற இருந்த
வானப் பிரான்-மேன்மை இருந்த படி
மணி வண்ணன் -அம்மதிப்பு இல்லை யாகிலும் விட ஒண்ணாத அழகு
கண்ணன்-இரண்டும் இல்லை யாகிலும் விட ஒண்ணாத பவ்யதை
செங்கனி வாயின் திறத்ததுவே.–-இவை மூன்றிலும் போக ஒட்டாத ஸ்மிதத்திலே படிந்தது-பிரிவை பிரசங்கித்து தாழ்வு தோற்ற வார்த்தை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே ஸ் மிதம் பண்ணி நின்ற படி-

————————————————————-

ஏதேனும் செய்தாலும் ஸ்த்ரீத்வ பிரயுக்தமான லஜ்ஜையையும் மடப்பத்தையும் நோக்க வேண்டாவோ என்று தோழி சொல்ல -அவனுடைய அழகிலே அகப்பட்ட என் நெஞ்சம் அவற்றை இழந்தது என்கிறாள்-

செங்கனி  வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

செங்கனி வாயின் திறத்ததாயும்–செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்-பிரிகிற போது தன் ஆற்றாமையும் வரவ தாழாமையும் தொடக்கமான -தாழ்வு சொல்லுகிற திருவதரத்தில் பழுப்பிலே யாயிற்று நெஞ்சு தோற்றது -அப்போதை தாழ்வுகள் ஒரு மஹா பாரதத்துக்கு போரும் என்கை -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியை காட்டி யாயிற்று -என்னை எழுதிக் கொண்டது -தன் சேஷித்வத்தின் எல்லையைக் காட்டி யாயிற்று சேஷத்வத்தில் நிறுத்திற்று –
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்–ஆயுதமும் ஆபரணமு மாய் இருக்கிற ஆழ்வார்களுடைய சேர்த்தியைக் கண்டு உகந்தும்-
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்
திங்களும் நாளும் விழா வறாத-தென் திருப் பேரெயில் வீற்றிருந்த-விழா ஒலி-என்று பொதுவாக கீழே சொல்லிற்றே -அத்தை விசேஷிக்கிறதே -மாஸத் திரு நாளும் விசேஷ திவசங்களான திரு நாள் உச்சி வீடு விடாதே செல்லுமூர்
நங்கள் பிரானுக்கு-பர வ்யூஹ விபவங்கள் போலே அன்றிக்கே உகந்து அருளின தேசம் -அவற்றுக்கு பிற்பாடார் ஆகையால் நமக்கு உபகரிக்கைக்காக என்கை –
என் நெஞ்சம் -அவ்விருப்பில் பிராப்தியையும் சுவட்டையும் அறிந்த என் நெஞ்சம்
தோழீ!-நாணும் நிறையும் இழந்ததுவே.–முதல் உறவு பண்ணுகிற போது நாணையும் மடப்பத்தையும் தவிர்த்துப் பொருந்த விட்டவன் அல்லையோ -அப்போது அவை தவிர்க்கைக்கு படும் பாடு அறிவுதியே-இப்போது நெஞ்சுக்கு நீயும் வேண்டிற்று இல்லை-

————————————————————-

ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருந்தி யாகிலும் போது போக்காதே இங்கனம் செய்யலாமோ -என்று நியமிக்கிற தாய்மாரைக் குறித்து -என் நெஞ்சம் அவனாலே அபஹ்ருதம் ஆயிற்று -நான் எத்தைக் கொண்டு போது போக்குவது -என்கிறாள் –

இழந்த  எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-

இழந்த எம்மாமைத் திறத்துப் போன–என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்-–நிறம் தானே போயிற்றே -அவனை நிறம் கொள்ள வேணும் என்று கோலி இருந்த என்னுடைய நிறத்தை இ றே இழந்தது -அந்நிறத்தை மீட்டுக் கொண்டு வருகிறேன் என்று போன என் மனசாகிறதும் என்னை மறந்து அங்கே அடி யுற்றது
அவன் இழவாளனாய் நாம் இழவு பரிஹரிக்கை யன்றிக்கே நாம் இழவாளர் ஆவதே -என்று அபிமானித்து போன நெஞ்சை வினைத் தலையிலே படை யறுத்து கொள்வாரை போலே படை யறுத்துக் கொண்டான் -லங்கையை அரண் அழிக்கைக்கு ஸ்ரீ விபீஷணனை பெற்றால் போலே -என்னுடைய ஸ்த்ரீத்வம் ஆகிற அரண் அழிக்கைக்கு உள் ஆள் பெற்றோம் என்று நெஞ்சை படை யறுத்துக் கொண்டான் -இலங்கையின் அளவன்றிக்கே ஸ்த்ரீத்வ அபிமானத்துக்கு அவன் அஞ்சி இருப்பது –
நெஞ்சினார் -அங்குத்தை ராஜ குலத்தாலே என்னை மறந்தார் -பெற்றாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும் தரிக்க வேண்டாவோ என்ன
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!-உழந்து -வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது
ஓதக் கடல் ஓலி போல எங்கும்-திரைக் கிளர்த்தி யுடைய கடல் போலே
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு-வேத த்வனி வந்து செவிப்படா நிற்க வேறு போது போக்க போமோ -எங்கும் எழுந்த -சார்வதரிகமாக பரவா நிற்கை -இது நடையாடாதோர் இடம் பெற்றால் இ றே போது போக்கி தரிக்கலாவது –நல் வேதத்து ஒலி -சாம வேத த்வனி -வேதா நாம் சாம வேதோஸ் மி –நின்று ஓங்கு -இடைவிடாதே மிக்கு நிற்கை
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த-முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-வேத த்வனி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்திலே ப்ரத்வனிக்க -அதில் ப்ரதித்வனியும் வேத கோஷமுமாய் இரட்டித்து செல்லா நிற்கை -அவனுடைய ஸ்மித வீக்ஷணாதிகளிலே மீள ஒண்ணாத படி அகப்பட்டேன் –
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–தாய்மார் என்கிற முறையைக் கொண்டு முனைந்தால் என்ன பிரயோஜனம் உண்டு -பிராப்தியும் மூப்பையும் கொண்டு முனிய அமையுமோ -பிரயோஜனம் வேண்டாவோ -அழகிலே ஈடுபட்டாரை ஹிதம் சொல்லி மீட்கவோ-

——————————————————————

இங்கனம் விரைகை ஸ்த்ரீத்வத்துக்கு போராது காண் -என்று தாய்மார் அலைக்க-அது பண்டே போயிற்று -பிரயோஜனம் இல்லாத தசையில் கொண்டு போக நில்லாதே ஏற்கவே கொண்டு போய் தென் திருப்பேரெயிலிலே என்னை விடுங்கோள் என்கிறாள்-

முனிந்து  சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-

முனிந்து சகடம் உதைத்து மாயப்-பேய் முலை உண்டு மருதிடை போய்க்-கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த-
ஸ்தந்யார்த்தியாய் சீற -அதுக்கு இலக்காய் சகடாசூரன் முடிந்து போனான் -ஸ்தந்யார்த்தியாய் சீற அதிலே நசித்தான் -சகடம் மேலிடப் புக்க வாறே சீறி என்றுமாம் -தாய் வடிவு கொண்டு வந்த பூதனையை-பிராண ஸஹிதம் பப்வகோப சமன்வித -என்கிறபடியே முடித்து -செறிந்து நின்ற மருதின் நடுவே வலி கண்டு போய் -பழுத்த விளவாய் நின்ற அசூரனை கன்றாய் வந்த அசூரனாலே ஊட்டி யாக மாய்த்த உபகாரகனான
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்-கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்
முனிந்து இனி -அவன் அவ்வபதானம் செய்வதற்கு முன்பே மீட்கப் பார்க்க வேண்டாவோ
என்செ ய்தீர் அன்னைமீர்காள்!-எனக்கு அநுகூலர்கள் ஆனீர் அல்லீர் -மீட்க்கத் தொடங்கிற்று தலைக் கட்டிற்று அன்று -பொடிகைக்கு முறை அமையுமோ -பலம் வேண்டாவோ
முன்னி அவன் வந்து வீற்றிருந்த-அவன் முறை கூறிக் கொண்டு வந்து -இத்தலையை அழிக்கைக்கு வேண்டும் பரிகரத்தால் குறை அற்று இருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே-ஸர்வதா பக்குவ பலமாய் இருக்கும் பொழில்
காலம் பெற என்னைக் காட்டுமினே.–கதே ஜலே சேது பந்தனம் ஆகாத படி ஏற்கவே அவ் வூரில் கொடு புகுங்கோள் –என்னை -என்னை கண்டி கோள் -உங்களுக்கு க்ரமத்திலே செய்கிறோம் என்னலாய் இருந்ததோ –

——————————————————————-

நீங்கள் ஆறி இருக்கும் அளவில்லாத படி எனக்கு அபி நிவேசம் மிகா நின்றது -சடக்கென அங்கே கொண்டு போய் விடுங்கோள்-என்கிறாள் –

காலம்  பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்-ஒரு க்ஷணம் ஆகிலும் முற்பட செய்யப் பாருங்கோள் -என்னை -எனக்கு ஸ்வபாவம் என்று செய்யப் பார்த்திலி கோள் ஆகிலும் -என்னை விசேஷித்து கொண்டு போகப் பாருங்கோள் -உனக்கு வாசி என் என்ன –
காதல் கடலின் மிகப் பெரிதால்-காதல் கடல் புரைய விளைவித்த என்ற அளவு அன்று -மடலூரப் புக்க போது விலக்கினவர்கள் தாங்களே கொண்டு போய் காட்ட வேண்டும் தசை இ றே இது -அதுக்கு ஹேது என் என்ன
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்-நிற்கு முன்னே வந்து -சிரமஹரமான வடிவை காட்டி யாயிற்று ஆசையை வளர்த்தது -அவன் காதலுக்கு கிருஷி பண்ணா நிற்க என்னால் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கப் போமோ -முன்னே வந்து நிற்கை பொல்லாதோ என்ன
வந்தென் கைக்கும் எய்தான்-உரு வெளிப்பாடு அன்றிக்கே கையாலே அணைக்க எட்டினால் அன்றோ அழகிது -வார்த்தை சொல்லாமை அன்றிக்கே அணைக்கைக்கும் எட்டுகிறிலன் -தான் மேல் விழுந்து அணையாமை அன்றிக்கே நான் மேல் விழுந்து அணைக்கைக்கும் எட்டு கிறிலன்-ஆனால் செய்யப் படுவது என் என்ன -அவன் வந்து இருக்கிற ஊரிலே கொண்டு போய் விடாய் பாருங்கோள்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த-நீல முகில் வண்ணத்தை உடையவன் பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரம் என்று உபேக்ஷியாதே லங்கா பெரு நகரிலே இருக்குமா போலே குறைவற்று இருக்கிற தேசம்
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்-கோலச் செந்நெற்கள் கவரி வீசும்-வேதார்த்த வித்துக்களும் சரமாரனத்திலே நிரந்தரமாக பிரவ்ருத்தர் ஆனார்கள் –செந்நெற்களும் மநோ ஹராமாம் படி கவரி வீசினால் போலே அசைந்து வாரா நின்றது -சூட்டு நன் மாலை படியே இங்குள்ள சேதனரோடு அங்குள்ள சேதனரோடு வாசி அற அனுகூலமாய் இருக்கிற படி
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–ஆற்று நீரும் ஊற்று நீரும் வர்ஷ ஜலமும் -அவனும் நானும் ஜலக்ரீடை பண்ணலாம் தேசத்தே கொடு போய் விடப் பாருங்கோள் -சுற்றும் சேர்ந்த புனல் என்றுமாம் –

———————————————————–

லஷ்மணே நகதாம் கதிம் -என்று இளைய பெருமாள் போன இடத்தில் நானும் போவேன் என்று பெருமாள் துணிந்தால் போலே என் நெஞ்சு தரிக்கைக்கு அங்கே போய்ப் புக்கது -நானும் அவ் வூரிலே போய்ப் புகும் அத்தனை என்று தோழியை குறித்து சொல்லுகிறாள்

பேரெயில்  சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங் குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-

பெரிய மதிலாலே சூழப் பட்டு அதுக்கு அகழாகப் போரும் படி அத்தை சூழ்ந்த கடலை யுடைத்தான இலங்கையை அழியச் செய்த மஹா உபகாரகன் -அந்த சிரமம் தீர வந்து தன் பூர்த்தி தோற்ற இருக்கிற தேசம் -அவ் வூரிலே என் நெஞ்சு புக்குத் தேடி மீண்டு வரக் காண்கிறி லேன் -இலங்கையில் புக்காரும் மீண்டார்கள் -என் நெஞ்சு மீள காண் கிறிலேன் –
பிடித்தாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிக்க வேண்டாவோ என்ன -நீ என் தசையைக் கண்டு சிதிலை ஆகா நின்றாய் -தாய்மார் ஹிதம் சொல்லி மீட்க்கத் தேடா நின்றார்கள் -இனி பழி சொல்லுவாரை கொண்டு போது போக்கும் அத்தனை இ றே -போது போக்குகைக்கு என் நெஞ்சை அழைத்து தருவாரும் இல்லை -அத்தை அழைத்து தரும் போது நெஞ்சிலும் அண்ணியராக வேணும் இ றே -இனி யாரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -நெஞ்சு மீளாதே வ்ருத்த கீர்த்தனத்துக்கும் ஆள் இன்றிக்கே ஒழிந்தது ஆகில் நீ செய்யப் பார்க்கிறது என் என்ன
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே-என் நெஞ்சு யாது ஓர் இடத்தே போய்த் தரித்தது -நானும் அங்கே போய்ப் புகும் அத்தனை -என் நெஞ்சு மீளாத பின்பு எனக்கும் அது அல்லது புகல் உண்டோ -அத்யைவாஹம் கமிஷ்யாமி லஷ்மணே நகதாம் கதிம்-

—————————————————————-

எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபி நிவேசம் கடலில் பெரிது என்னும் அளவு அன்றிக்கே இருகையாலும் நான் தென் திருப்பேரெயிலிலே பொய்ப்புக்காக கட வேன்  என்கிறாள் –

கண்டதுவே  கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8-

கண்டதுவே கொண்டு -தலையில் வணங்கவுமாம் கொலோ என்று அவன் குணங்களை சொல்லியும் புறம்பு கண்ட மாத்திரம் கொண்டு இ றே பழி சொல்ல இழிந்து -என் அகவாய் இருந்தபடி கண்டார்கள் ஆகில் என் படக் கடவர்கள்
எல்லாரும் கூடிக்-அந்யோன்யம் விரோதித்து வர்த்திக்குமவர்களும் பழி சொல்லுவதில் வந்த வாறே ஏக கண்டர்கள் ஆனார்கள்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக் கொண்டு -என் வை வர்ணயத்தைக் கண்டு -இவள் நிறத்தை இழக்கும் போது அந்நிறத்தை உடையனுக்கு ஆக வேணும் என்று கொண்டார்கள் -அவன் அழகிலே இவள் அகப்பட்டாள் என்கை
அலர் தூற்றிற்றது-பழி தூற்றினார்கள்
அது முதலாக்-கொண்ட என் காதல் -அது அடியாக -அதுவே எருவாக -இடம் கொண்ட -ஊரவர் கவ்வை எருவிட்டு -என்ன கடவது இ றே
என் காதல் உரைக்கில் தோழீ!-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற பகவத் ஆனந்தத்துக்கு அவதி உண்டாகிலும் இக்காதலுக்கு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது -தோழீ -அவன் காதலின் பெருமை சொல்லி அது அடியாக என் காதலுக்கு கிருஷி பண்ணின நீ படும் பாடு அறிவுதியே
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்-நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;-உரைக்கில் என்கிறது என் -காதல் கடலில் மிகப் பெரிதால் என்றில்லையோ என்ன -அது முகப்பில் வார்த்தை -பெரியத்தில் எல்லா வற்றிலும் பெரியது என்னும் இத்தனை -மண்ணாலே நெருங்கின பூமி -கடினையான பூமி என்கிறபடி -அத்தையும் சூழ்ந்த கடல் ஏழும் -அவற்றுக்கு எல்லாம் அவகாசமான ஆகாசமும் இவை இத்தனைக்கும் அவ்வருகு பட்டு இருக்கை -இப்படி காதல் கரை புரண்டதாகில் செய்யப் பார்த்தது என் என்ன
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த-தென் திருப் பேரெயில் சேர்வன் -இக்காதலுக்கு விஷயம் சந்நிஹிதம் இல்லாமையால் வந்த வெக்காயம் தீர சிரமஹரமாய் அவன் குறைவற்று இருக்கிற தேசத்திலே போய்ப் புக்க கட வேன்
சென்றே.–சேர்வன் -இனி எதிரே அவன் வரிலும் மீளேன் -அவனைச் சேருகை அன்று உத்தேச்யம் -அங்கே சென்று கிட்டுகை –

————————————————

இப்படி அதி சாஹசத்திலே துணியுமது ஸ்த்ரீத்வத்துக்கு போராது -செய்து தலைக் கட்டவும் போகாது என்ன நீங்கள் தேற்றினால் பிரயோஜனம் இல்லை -அங்கே போய்ப் புகக் கடவேன் -என்கிறாள் –

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!அன்னையர்காள்!-அங்கே போய்ப் புகுகை தவிரேன் -என் வழியே ஒழுகுவாரோடு தம் தாம் வழியே என்னை போகாத தேடுவாரோடு வாசி அற ஒருவரும் எனக்கு வார்த்தை சொல்ல வேண்டா –
என்னைத் தேற்ற வேண்டா;-கலங்கினாரோ தெளிந்தார்க்கு உபதேசிப்பார் -அஞ்ஞரோ வ்யவஸ்திதரை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார் -விஷயாதீனமாய் வருகிறத்தை சாதனத்தில் செலவு எழுத்துவார்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார் -இவள் தன்னை மறந்து அவனையே பார்த்து சொல்லுகிறாள் -அவர்கள் அவனை மறந்து தம் தம்மையே பார்த்து மீட்க்கத் தேடுகிறார்கள்
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?-எனக்கு ஓடுகிற தசைக்கு உங்கள் வார்த்தையோடு என்ன சங்கதி உண்டு -நீங்கள் சொல்லுகிற வார்த்தை எது -நான் நிற்கிற நிலை எது -நிறைவுடையார் இங்கனம் படக் கடவரோ -நெஞ்சை வருத்தி பிடித்து தரிக்க வேண்டாவோ என்ன –
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;-மனசும் அடக்கமும் எனக்கு இங்கே இல்லை -அவன் பக்கலினா -அங்கே போய்ச் சொல்லப் பாருங்கோள் –
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட-கண்ண பிரான் -ஸ்த்ரீத்வத்தையும் மனசையும் அபஹரித்த பரிஹரம் இருக்கிற படி -ஒன்றை ஆராயாதபடி பண்ணிற்றும் ஸ்த்ரீத்வத்தை அழித்ததும் வடிவு அழகை காட்டி யாயிற்று -வடிவு அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாத ஆபத் ஸகத்வம் -உபகார சீலனான கிருஷ்ணன்
வந்து வீற்றிருந்த-தன் ஐஸ்வர்யத்தோடே காணலாம் படி இருந்த -அவன் கிட்ட இருந்தால் எனக்கு புகாது ஒழிய போமோ
ஏர்வள ஒண் கழனிப் பழனத்-தென் திருப் பேரெயில் மாநகரே.–ஏரினுடைய மிகுதியை யுடைத்தாய் அழகிதான வயலையும் அத்தோடு சேர்ந்த நீர் நிலங்களையும் யுடைய தென் திருப் பேரெயில் ஆகிற மஹா நகரத்திலே சென்று சேர்க்கை தவிரேன் -என்னை தேற்ற வேண்டா –வளம் என்று மிகுதிக்கு பெயர் –

——————————————————————-

இருந்ததே குடியாக உன்னைப் பழி சொல்லாரோ -என்று தோழிமார் சொல்ல அவர்களை யன்றோ நான் தேடித் திரிகிறது என்கிறாள் –

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்-படை வீட்டிலும் நாட்டிலும் பத்த நாதிகளிலும் பழி சொல்லுவாரைத் தேடுவேன் –பிறவும் -மற்று உள்ளளவும் -தேர்வேன் -நிரூபிப்பேன் என்கிறத்தை விட்டு தேடுவேன் என்கிறது அவனோ வாரானாகில் -நீங்கள் போக ஓட்டி கோள் ஆகில் -அவனையும் என்னையும் சேர்த்து பழி சொல்லுவார் தேட்டம் என்கை -நகரங்களோடு நாடுகளோடு பத்த நங்க ளோடு வாசி அற திரண்டார் திரண்ட இடம் எல்லாம் உன்னை பழி சொல்லுகை பணி போரும்படி இருக்கிற இருப்பு உனக்கு தேட்டமாகை ஸ்த்ரீத்ய ப்ரயுக்தமான லஜ்ஜைக்கு போருமோ என்ன
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!-லஜ்ஜை முதலில் இல்லை -இங்கு இல்லை என்றதுவும் வார்த்தை அன்று அங்கும் இல்லை -ஸூ க துக்கங்கள் ஓக்க அனுபவிக்க முறையாய் இருக்க லஜ்ஜை போனமை என் வாயாலே கேட்க இருப்பதே நீங்கள் -மாம்பழ யுண்ணி போலே பேரைப் பெற்று இருந்து கோள் அத்தனை
சிகர மணி நெடு மாட நீடு-தென் திருப் பேரெயில் வீற்றிருந்த-பர்வத சிகரம் போலே நெடிதாய் மணிமயமான மாடங்களை யுடைத்தாய் பெரிதான தேசம்
மகர நெடுங்குழைக் காதன் -தான் அகப்பட்ட துறையைச் சொல்லுகிறாள்
மாயன்-மற்றும் அகப்படுத்திக் கொள்ள வல்ல ஆச்சர்யமான ஸ் மித வீக்ஷணாதிகள்
நூற்று வரை யன்று மங்க நூற்ற-துரியோதனாதிகளை முதல் அற அழிய செய்தவன் சிலரை அழிக்க நினைத்தாள் முதல் அற அழிக்கும் அவன் -ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்ன மந்திரத்தால் அழிய செய் கை
நிகரில் முகில் வண்ணன் -என்னை அழிக்கைக்கு மந்த்ரமும் வேண்டிற்று இல்லை வடிவே அமைந்தது
நேமியான்-பகலை இரவாக்க பரிகரம் உடையவன்
என்-நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–வடிவு அழகையும் ஆயுத சேர்த்தியும் காட்டி என் நெஞ்சை அபஹரித்து போய் எத்தனை காலத்தான் -மாசறு சோதி அக்காலமே போயிற்றே -ஆனபின்பு நாண் எனக்கு இல்லை -பழி சொல்லுவார் தேட்டம் எனக்கு –

———————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்பார் அடிமையை மிகவும் அவஹாகித்து பிரவணர்  ஆவார் என்கிறார் –

ஊழிதோறு  ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்-செய்கையும் வேறவன் வையம் காக்கும்-யுகம் தோறும் ரக்ஷணத்துக்கு ஈடான ரூப நாம சேஷ்டிதங்களை வெவ்வேறாக யுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்கும் -பாலினீர்மை செம்பொனீர்மை-என்கிறபடியே ருஸ்யனுகுணமாக ரூப நாமாதிகளை யுடையனாயிற்று ஜகத் ரக்ஷணம் பண்ணுவது –
ஆழி நீர் வண்ணனை -நிலை நின்ற வடிவு -கடல் போலே சிரமஹரமான வடிவு -முழு நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -என்ன கடவது இ றே –
அச்சுதனை-சதைகரூபமான வடிவு என்னுதல் -அவ்வடிவைப் பற்றினாரை நழுவ விடாதவன் என்னுதல் -எவ்வஸ்தையிலும் ஆஸ்ரித ரக்ஷணம் நழுவ விடாதவன் என்னுதல்
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன-ஆபரணமான திரு நகரி
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்-ஒப்பு இல்லாத அந்தாதி
இவை திருப் பேரெயில் மேய பத்தும்-ஆழி அம் கையனை ஏத்த வல்லார்-கையும் திருவாழியுமான அழகை ஏத்த வல்லார் -இவருக்கு கையும் திருவாழியுமான அழகு யாயிற்று எங்கும் அனுவர்த்தித்தப் போருவது-
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–அடிமை இடையாட்டத்தில் அவகாஹித்து பெறுவார் -அதி ப்ராவண்யம் ஆகாது என்று மீட்கப் பார்க்க ஒண்ணாத படி பிரவணர் ஆவார் –ஆழியாரே-ஆலையின் தன்மையை யுடையராவார் -என்றுமாம் -கை கழலா நேமியான் என்கிறபடியே பிரியாதே அடிமை செய்யப் பெறுவார் –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: